Skip to content
Post Views: 7,610
பகுதி 26
‘ஒருவரின் வாழ்க்கையில்.. தன் துணையின் நம்பிக்கை துரோகம், எத்தனை பேரை பாதித்திருக்கிறது..’ என நினைத்த போதே பெரும் மலைப்பு அனைவருக்கும்.
Advertisement
தனத்தின் பார்வை.. அமிழ்தினியாளையும், ரியானையும் மட்டுமே மாறி மாறி பார்த்த வண்ணம் இருந்தது.
சிறிது நேரத்தில் அந்த பார்வையை உணர்ந்து கொண்ட ரியான் கேள்வியாய் அவரை பார்க்க..
Advertisement
Advertisement
அவரோ இனியாளையும், வெண்பாவையும் பார்த்துவிட்டு முகுந்தையும் பார்க்க.. பெறா விட்டாலும் ஒரு தாயாய் அவரின் கேள்வி அவனுக்கு நன்றாகவே புரிந்தது.
‘இப்போது, முகுந்தோடு சேர்த்து இந்த இருவரின் பொறுப்பும் உன்னுடையது தானே..?’ என்றது அவர் பார்வை.
Advertisement
‘வயது காரணமாக தவறி போக இருந்த போதும், சரியான நேரத்தில் சுதாரித்து.. தனித்து என்றாலும் நிம்மதியாக ஒரு வாழ்க்கையை வாழ வேண்டிய பெண்ணை,
தன் சுயநலத்திற்காக இப்படிபட்ட நிலைக்கு கொண்டு வந்து விட.. நேரடி காரணம் அவன் இல்லை தான்..!
இது அவனின் கருத்திற்கே வராமல் நடந்து விட்ட பிழை தான்..!
ஆனால் இப்போது தெரிந்தோ.. தெரியாமலோ.. அவனின் இரு பிள்ளைகளின் தாய் அவள்.
சிறிது நேரம் பழகிய முகுந்தே அவளை தேடும் போது, அவளோடே இத்தனை வருடம் இருந்த தன் மகளை அவளை விட்டு எப்படி விலக்கி தான் எடுத்து கொள்ள முடியும்..?
அந்த மகளுக்காக தானே.. அன்று அத்தனை கஷ்டத்தையும் தாங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பினாள்..
அதுக்கு ஒரு நீதி வேண்டாமா..?’ என அந்த தாயின் பார்வைக்கு பின் இருக்கும் அதே காரணங்கள் அவனையும் வதைக்கவே செய்தது.
ஆனால் அதற்கு தீர்வாக இருக்கும் ஒன்றை சொல்லவும் தடுமாற்றம் தான்.
ஏனெனில் அவள் இதுவரை அவனை பார்த்த பார்வை..
அதில் இருந்த வெறுப்பு..
‘ஏன்..?’ என்ற காரணம் தெரியாமல், ‘எப்படி அந்த தீர்வை எடுக்க முடியும்..?’ என்ற சிந்தனையோடு இனியாளை பார்த்தான் ரியான்.
அவனையே பார்த்திருந்த தனத்திற்கு அவனின் பார்வையில் இருந்த குழப்பமும்.. தீர்வை உணர்ந்த பாவமும்.. பின் யோசனையோடு இனியாள் மீதான பார்வையும்.. அவன் எதையோ தீர்மானித்திருப்பதை காட்ட அவருக்கு மனது கொஞ்சம் லேசானது.
தங்களை சுற்றி நடப்பதை உணராது.. அக்காவும், தங்கையும் இன்னமும் கட்டிக்கொண்டு சமாதான பேச்சு வார்த்தையில் இருக்க,
இப்போதே இதை பேசி விடுவது சிறந்தது என முடிவெடுத்த ரியான்,
“அம்மா.. நான் உங்க பொண்ணுகிட்ட கொஞ்சம் தனியா பேசலாமா..?” என சத்தமாக தனத்திடம் அனுமதி கேட்டான்.
அவனின் கணீர் குரலில் அக்கா, தங்கை இருவரும் பேச்சை நிறுத்தி அவனை திருப்பி பார்க்க,
தனமோ, “சம்யுக்தா.. உன்னோட அக்காவ எழுந்து அவரோட போக சொல்லு..” என்றதும்,
திகைத்து போய் தனத்திடம் பார்வையை திரும்பினாள் இனியாள்.
“ம்மா..” என அவள் ஏதோ சொல்ல வரும் போதே அதை தடுத்த தனம்,
“உனக்காக இல்லை. நீ சுமந்து பெத்த ரெண்டு பிள்ளைங்களுக்காக தான் அந்த தம்பி பேச கூப்பிடுது.
நீயும் அதை மனசுல வச்சிட்டு போய் பேசு..” என்றார் தாயாய் கண்டிப்போடு.
அதற்கு மேல் அவரின் வார்த்தையை தட்ட முடியாமல் அவள் எழுந்து நிற்க,
வெண்பாவை தூக்கி கொண்டு அவர்களுக்கருகே வந்தவன், “பேபி, பாப்பாவ பிடி..” என்றவன் பிள்ளையை நீட்ட,
“ப்பா..” என்றாள், ‘எங்கே மீண்டும் அவரை விட்டு செல்ல வேண்டுமோ..?’ என்ற தவிப்போடு.
“பட்டும்மா.. அப்பா மேல ரூமுக்கு போயிட்டு.. இப்போ வந்திடுறேன் சரியா..?” என்றதும் பிள்ளை முகம் லேசாக சுணங்கினாலும்,
‘இங்கே தான் இருப்பார்..’ என்ற நம்பிக்கையில் சம்யுக்தாவிடம் சென்றாள் குழந்தை.
தனம்.. இனியாளிடம் அதை அழுத்தமான பார்வையால் உணர்த்தவும் தவறவில்லை.
தனத்தின் பார்வையின் பொருள் புரியாத அளவு முட்டாளா இனியாள்..!
ஆனால், ‘தான் எப்படி..? தனக்கு என்ன தகுதி இருக்கிறது..?’ என்ற எண்ணத்தோடே ரியானை பின்தொடர்ந்தாள் அமைதியாக.
மேலே இருந்த அறைக்குள் அவளை அழைத்து வந்தவன் அங்கிருந்த ஷோஃபாவை காட்டி, “உட்காருங்க..” என்றான்.
அவள் அமர அவளுக்கு நேர் எதிர் இருக்கையில் அமர்ந்தவனுக்குமே முதலில் தடுமாற்றம் தான்.
ஆனால் பேசி முடிக்க வேண்டியது அவசியம்.. என்பது புரிய,
“எனக்கு ஒரு சின்ன டவுட். அதை பஸ்ட் க்ளியர் பண்ணிக்கலாம்..” என்றவன்,
“எதனால என்னை ஆரம்பம் முதலே உங்களுக்கு பிடிக்கல..?” என்றான் தடாலடியாக.
“அச்சோ..! அப்படி எல்லாம் இல்ல..” என பதறி அவளுரைக்க,
“பொய் சொல்ல ட்ரை பண்ணாதீங்க..!
நீங்க என்னை நேர்ல பார்த்த எல்லா நேரமும்.. உங்க பார்வைக்கான அர்த்தம் புரிஞ்சுக்க முடியாம போக, பச்சபுள்ளையா நானு..?” என்றான் அழுத்தமாக.
“அது.. உங்கள என்னோட அப்பா மாதிரின்னு நினைச்சேன். அதுல, வந்த கோபத்துல தான்..” என தடுமாற்றத்தோடு அவள் சொல்ல,
“புரியல.. கொஞ்சம் தெளிவா சொல்லலாமே..?” என்றான் புருவம் முடுச்சிட.
“என்னோட அப்பா வேலைக்கு, பணத்துக்கு முக்கியத்துவம் தந்து.. என்னை யாரோ ஒருத்தர்கிட்ட ஒப்படைச்சதால நான் பட்ட கஷ்டம்.. அப்போ எனக்காவது ஒன்பது வயசு.. ஆனா.. அவன் குழந்தை.
அவனை பேபிசிட்டர்கிட்ட விட்டு.. அதனால அவன் பட்ட கஷ்டத்தை சம்யுக்தா சொன்னதும் என்னால தாங்கிக்கவே முடியல. அதோட வெளிப்பாடு தான் அந்த கோபம்..” என்று சொல்ல,
“ஓ..!” என்ற தலையசைப்புடன் கூடிய ஒற்றை வார்த்தை மட்டும் அவனிடம்.
“அது மட்டுமில்ல.. நான் உங்கள நேர்ல பார்க்கும் போது.. ஹாஸ்பிட்டல்ல முகுந்த் உங்கள ஏக்கமா பார்க்கறத நீங்க கவனிக்காம நின்னுட்டு இருந்தீங்க..” என்றதும்,
சிறிது யோசித்தவன் அப்போதைய அவன் குற்ற உணர்வை.. அதனால் அவன் நின்றதை சொல்ல,
அதை அமைதியாய் கேட்டுக்கொண்டவள், “அது.. அப்போ எனக்கு தெரியாதே..!
அவனோட அந்த ஏக்கம்.. என்னை அந்த இடத்துல வச்சு பார்க்க வச்சது.
அதனால வந்த வெறுப்பு தான் அப்படி ரியாக்ட் பண்ண வச்சிடுச்சு..” என்றாள் அவனை தவறாக நினைத்து விட்ட குற்றஉணர்வோடு.
“ம்ம்.. இப்பவும் அந்த வெறுப்பு இருக்கா உங்களுக்கு..?
அதனால தான் முகுந்த் உங்க வயத்துல பிறந்த பிள்ளைன்னு என்கிட்ட இருந்து வாங்கிக்க பார்த்தீங்களா..?
அதுலையும் அவன் அழுதா என்ன ஆகுமுன்னு தெருஞ்சும்.. அவனை என்கிட்ட இருந்து பிரிக்க நினைக்கற அளவுக்கு..” என கத்தி முனை கூர்மையாய் அவளை பார்த்து கேட்க,
அதை தாங்க முடியாமல் தலை குனிந்தவள் பின் மெல்லிய குரலில்,
“நிச்சயமா இல்லை. அதுலையும் முகுந்த் அவ்வளவு சீக்கிரம் எழுந்து உங்கள தேடி அழுவான்னு நா நினைக்கல.. அதோட..” எனத்தயங்கியவள்,
“அன்னைக்கு நீங்க போன்ல பேசினதை அரை மயக்கத்துல கேட்காம போயிருந்தா.. மேபி, அந்த மனநிலையில.. அவனுக்கு என்ன ஆனாலும் சரின்னு நான் அவனை தரமுடியாதுன்னு சொல்லியிருப்பேன்.
ஆனா உங்க குரல் எனக்குள்ள பதியலைன்னாலும், உங்க பாசம், அன்பு.. உங்க தவிப்புன்னு எல்லாமே என் காதுல இன்னும் ஒலிச்சுட்டு தான் இருக்கு.
இப்படிப்பட்ட மனுஷனுக்கு இவங்க துரோகம் பண்ணறாங்களேன்னு உங்களுக்காகவும் அப்போ அழுதேன்.
கீழே நான் சொன்னதுல.. உங்க பர்ஷனல் வாழ்க்கை பத்தி கீழ்த்தரமா அவங்க ரெண்டு பேரும் பேசினதை நான் மறச்சிட்டேன்.
அதையும் கேட்ட எனக்கு, உங்களை நேர்ல பார்த்து.. இவங்களோட முகமூடிய கிழிச்சு, எல்லாத்தையும் சொல்லி.. ‘இவ வேணாம்..’ ன்னு சொல்ற அளவு வெறி இருந்தது.
ஆனா என் பொண்ணை காப்பாத்த.. அங்கிருந்து ஓடி வர்றத தவிர என்னால எதுவும் செய்ய முடியல.
நீங்க வாழாத நல்ல வாழ்க்கையை.. திரும்ப உருவாக்கிக்க தடங்கலா குழந்தைங்க இருக்காங்க.
அவங்க உங்களை விட்டு வந்துட்டா.. நீங்க இனியாச்சும் நல்ல விதமா ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுப்பீங்கன்னு நினைச்சு தான், இனி அவனை கொடுக்க மாட்டேன்னு சொன்னேன்..” என இனியாள் சொல்லி முடிக்க,
ஷோஃபாவின் பின் தன் தலையை சாய்த்து கண்களை இறுக மூடி கொண்டான் ரியான்.
‘எப்படிப்பட்ட பெண் இவள்..! தன்னை பார்க்காமலேயே தனக்காக அழுது.. தன் வாழ்க்கைக்காக.. பிள்ளை பொறுப்பை இப்போதும் ஏற்க தயாராக இருப்பவளை.. ஏன், நான் ஆரம்பத்திலேயே பார்க்காமல் போனேன்..?’ என்ற எண்ணம் தந்த ஆற்றாமையில் அவன் இருக்க,
அவன் புறமிருந்து எந்த சத்தமும் வராமல் போக, அதுவரை.. தலை குனிந்து அத்தனையையும் பேசிக்கொண்டிருந்தவள்,
இப்போது நிமிர்ந்து அவனை பார்க்க.. அவன் நிலை அவளுக்கும் பாரமாகவே இருந்தது.
அவன் நிலை மாற்றாமலேயே.. “ஏன் அமிழ்தினியாள்.. இதையே நானும் சொல்லலாமே..?
நானாவது குறை வாழ்க்கைன்னு ஒன்னை வாழ்ந்தேன்.
ஆனா நீங்க இன்னும் வாழ்க்கைன்னா என்னன்னே வாழ்ந்து பார்க்காம இருக்கும் போது, என் மகளை என்கிட்ட கொடுத்துட்டு நீங்க ஏன் ஒரு நல்ல வாழ்க்கையை தேர்ந்தெடுக்ககூடாது..?” என்றிட,
தூக்கி வாரி போட்டது இனியாளுக்கு..
‘என்ன..! திருமண வாழ்க்கையா..? அதும் எனக்கா..? அதுக்கு தகுதி உள்ளவளா நான்..?’ என்ற கழிவிரக்கம் தோன்ற,
இதழில் லேசான வளைவோடு, கோணலான இகழ்ச்சி புன்னகையை சிந்திய இனியாள், “அதுக்கெல்லாம் தகுதின்னு ஒண்ணு இருக்கனும்.
பெத்த தாய்.. எவனோ ஒருத்தனோட ஓடிட்டா..
அப்பா.. இன்னொரு குடும்பத்தை உருவாக்கிட்டு ஒதுங்கிட்டார்..
படிப்பை கூட முடிக்காம.. சபலத்துல ஒருத்தனோட ஓடி வந்து, சந்தர்ப்பம் வசத்தால.. ரெண்டு புள்ளைய பெத்த என்னை மாதிரி ஆளுக்கு கல்யாண வாழ்க்கை என்ன.. கௌரவமான வரவேற்பு முதல்ல இந்த சமுதாயம் கொடுக்குமா..?
ஏதோ.. தனம்மா கொடுத்த.. ‘மகள்..’ ங்கற ஸ்தானம் தான் கொஞ்சம் என்னை கௌரவமா வாழ வைக்குது.
இப்பவும் குழந்தைய மட்டும் வச்சிட்டு.. தனியா இருக்கறதை வச்சு, எத்தனை பேரோட தப்பான பார்வையை தினமும் சந்திக்கிறேன்னு எனக்கு தான் தெரியும்.
இப்படிப்பட்ட எனக்கு தாலிய கட்டி மனைவின்னு அந்தஸ்த்தை கொடுக்க யார் தயாரா இருப்பாங்கன்னு நினைக்கறீங்க..?!
அப்படி வந்தாலும் அதுல என் மேலான நேசம் இருக்குமா..?” என்று ஆதங்கத்தோடு ஆரம்பித்து இகழ்ச்சியாய் முடித்தவளை,
சாய்ந்திருந்த நிலை மாறாமல், “நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். உனக்கு சம்மதமா..?” என்று கேட்டு விட்டு நிமிர்ந்து அமர்ந்து அவளின் விழியை அவன் விழியால் ஊடுருவி பார்த்தான்.
error: Content is protected !!