Skip to content
Post Views: 2,946
மலரின் மௌனங்களையும், மௌனங்களின் வேதங்களையும்,
எனக்குள்ளே சுமந்துக்கொண்டு அலைபாயும் மேகமாய் நான்!
சில நிமிடங்கள் கழித்து கையில் இரண்டு காபி கோப்பைகளுடன் என்னதிரில் வந்து நின்றான் ஷ்யாம். அவன் முகத்தில் அழகானதொரு மலர்ச்சி. என்னுடன் பழகிய பழைய ஷ்யாமை பார்த்தது போன்றதொரு மகிழ்ச்சி எனக்குள்ளே.
நான் என்ன சாப்பிட வேண்டும் எதை சாப்பிடக்கூடாது என ஆயிரத்தெட்டு விதிமுறைகளை திணித்துத்தான் அனுப்பியிருந்தாள் சித்தாரா. நல்ல வேளையாக ஒரு நாளைக்கு ஒரு கோப்பை காபிக்கு தடையில்லை.
Advertisement
“ப்ளீஸ்..” என்றபடியே காபியை என்னை நோக்கி நீட்டினான் அவன்.
அவனது புன்னகை எனது இதழ்களிலும் ஒட்டிக்கொள்ள வாங்கிக்கொண்டேன் காபி கோப்பையை.
“நாம முதல் நாள் மீட் பண்ணது உனக்கு ஞாபகம் இருக்கா பாப்பா? நான் இப்படித்தானே உனக்கு காபி போட்டு கொடுத்தேன்?”
Advertisement
அவன் கேட்க ஒரு சின்ன சிரிப்புடன் தலையசைத்த எனக்குள்ளே சரிந்த காபியின் சுவையினூடே ஏதேதோ நினைவலைகள்.
Advertisement
அன்று அவனை முதன்முதலில் சந்தித்த தினத்தில் அவனது கைப்பேசியில் எனது குரலைக் கேட்டு திகைத்து நின்றிருந்தேன் நான்.
“இது எப்படி சாத்தியம்? என் மனம் சில நொடிகள் குழம்பித் தெளிந்தது.
“இது சித்தாராவின் வேலைதானா? நான் பாடிக்கொண்டிருப்பதை கைப்பேசியில் பதித்துக்கொள்வது அவள் பழக்கம்தானே? அவள்தான் இதை ஷ்யாமிடம் கொடுத்துவிட்டாளா என்ன?”
Advertisement
முகமெங்கும் அதிர்வலை ரேகைகள் ஓட நான் அவள் பக்கம் திரும்பி பார்க்க, என் எண்ண ஓட்டங்களை புரிந்துக்கொண்டவளாக ஒரு வித ரகசிய சிரிப்புடன் தனது பார்வையை வேறு பக்கத்துக்கு திருப்பிக்கொண்டாள் அவள்.
“என்னை போன்ற சாதாரண பெண்ணின் குரலை அவன் தனது கைப்பேசியின் அழைப்பு ஒலியாக எப்படி பொருத்தி வைத்திருக்கிறான் என்பதே எனது மனதின் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது.
இந்த நொடி வரை அவன் எங்களை கவனிக்கவில்லை. கைப்பேசியை எடுத்துக் காதுக்கு கொடுத்து
“ஷ்யாம்!” என்று தனது பெயரை மிக அழகாக உச்சரித்தபடியே முழு உயரத்துக்கு எழுந்து திரும்பினான் எனது இசை மன்னன். அவனது இசை வடிவத்தையே இதுவரை ரசித்தவள் நான். இப்போது அவனது உயிர் வடிவத்தை என்னையும் அறியாமல் ரசிக்கலானேன்.
இளம் பச்சை நிற டீ ஷர்ட்டும் கருப்பு நிற பேன்ட்டும் அணிந்திருந்தான். இடுப்பில் ஒற்றை கையை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தவனின் பார்வை இப்போதுதான் எங்களை தொட்டு நின்றது.
சித்தாராவை பார்த்து “வா” வென வரவேற்கும் முறையில் தலையசைத்தவன், என் பக்கம் திரும்ப வியப்பில் விரிந்து இறங்கின அவனது புருவங்கள்..
நிலவை மறைக்கும் மேகங்கள் சற்றே விலகி நகரும் போது வானில் கொஞ்சம் கொஞ்சமாக பரவுமே ஒரு வெளிச்சம் அது போல் அவன் முகத்தில் மெல்ல மெல்ல பரவியது ஒரு மலர்ச்சி.
யாரோ ஒரு இயக்குனரிடம் பேசிக்கொண்டிருக்கிறான் என்று புரிந்தது அவர் இவனை இசையமைக்க அழைத்திருக்கக் கூடும்.
“ஒகே சார் டன். இந்தப் படம் பண்றேன் விடுங்க” என்றான் ஒரு வித உறுதியுடன்.
அவனுக்கு என்னை முன்பே தெரிந்திருக்ககூடும் என்பதை பறைசாற்றியது அவனது பார்வை. அதுவும் கண்டிப்பாக சித்துவின் வேலைதானோ என்று தோன்றியது. அவள் எனது புகைப்படத்தை அவனுக்கு காட்டியிருக்கக் கூடும். அவனிடம் என்னை பற்றியும் நிறைய பேசியிருக்கக் கூடும்..
என்னையே பார்த்தபடி கைப்பேசியில் அளவளாவிக் கொண்டிருந்தான் ஷ்யாம்.
எனக்குள் படபடப்புத் தாளம் ஒலித்துக்கொண்டே இருக்க பேசி முடிக்கும் வரை அவனும் பார்வையை என்னை விட்டு விலக்கவேயில்லை. பேசி முடித்துவிட்டு நாங்கள் இருவரும் அமர்ந்திருந்த அந்த சோபாவின் அருகில் வந்து நின்றான்.
“ஹாய்.. சித்து. இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போகலையா? ஆண்டவன் இன்னைக்கு உன்கிட்டேர்ந்து நிறைய பேரை காப்பாத்திட்டான் போல” என்றபடியே அவள் தலையில் ஒரு குட்டு வைத்து சிரித்தவன் எங்கள் அருகே இருந்த ஒற்றை சோபாவில் வந்து அமர்ந்தான்.
வியந்து போய் அவனை பார்த்தாள் சித்தாரா.
“சந்தியா ரைட்?” என்றான் என் பக்கம் திரும்பி .என்னை தீர்கமாக பார்த்தபடியே. “பாட்டு மட்டுமே பாடத்தெரிஞ்ச ‘குட்டிப் பாப்பா’ன்னு நீ அடிக்கடி சொல்வியே சித்து அந்த பொண்ணுதானே” என்றான் அழகான சின்ன சிரிப்புடன்.
அவன் என்னை பார்த்துக்கொண்டே சொன்ன விதத்தில் எனக்குள்ளே தொற்றிக்கொண்ட ஒரு வித வெட்க படபடப்புடன் சித்தாராவை பார்த்து முறைத்து வைத்தேன்.
“ஹேய்.. என்னை போட்டு விட்டியா அவகிட்டே?” அவள் அவனை பார்த்து முறைக்க
“ஒகே ஒகே நோ டென்ஷன். காஃபி?” எழுந்தவன் உள்ளே செல்ல, நான் சித்துவின் பக்கம் திரும்ப, அந்த கூடத்து சுவற்றில் பேட்டரியின்றி நின்று போயிருந்த கடிகாரத்துக்கு இணையாக அவன் சென்ற திசையை பார்த்தபடியே அவளும் அசைவற்று அமர்ந்திருந்தாள்.
“ஹேய் என்னாச்சு?” கிள்ளினேன் அவளை.
“சும்மா இரு நானே ஷாக்லே இருக்கேன். அவன் இப்படி சிரிச்சு பேசி, காபி போட்டு எத்தனை நாள் ஆச்சு தெரியுமா? என்ன மேஜிக் இருக்கு உன்கிட்டே தெரியலையே” என்றாள் ஆச்சரியமே உருவாக இருந்த குரலில்.
“நீ அவர்கிட்டே என்னை பத்தி என்ன சொல்லிவெச்சே?”
“நான் பெருசா எதுவும் சொல்லலை. எனக்குத் தெரிஞ்சு அவன் உன் பாட்டை ரொம்ப ரசிச்சு கேட்கிறான். உன் குரல் மேஜிக்தான் இதுன்னு நினைக்கிறேன்” சொன்னாள் சித்தாரா.
சில நிமிடங்களில் சூடான காபியுடன் வந்தமர்ந்தான்.
“ப்ளீஸ்..” என்றபடியே காபியை என்னை நோக்கி நீட்டினான் ஷ்யாம்.
அவனது புன்னகை எனது இதழ்களிலும் தொற்றிக்கொள்ள அவனது அருகாமையில் விட்டு விட்டு கிடைத்த சுவாசத்தை தேடி இழுத்து பிடித்து சுவாசித்துக்கொண்டே காபி கோப்பையை கையில் வாங்கிக்கொண்டேன் நான். அவன் பார்வை என் முகம் விட்டு விலகவில்லை.
“முன்னாடியெல்லாம் அவன் வீட்டுக்கு யார் வந்தாலும் அவங்களுக்கு அவன் கையாலேயே சூடா ஸ்ட்ராங்கா காபி போட்டுக் கொடுப்பான். அதிலே கிடைக்குற ஒரு ரிலாக்ஸ்சேஷன் வேறே எதிலேயும் இருக்காது”
முன்பு சித்தாரா சொன்னது உண்மை. அந்த காபியின் சூட்டிலும் சுவையிலும் உடலிலும் உள்ளத்திலும் நிறையவே அமைதி.
‘நான் வந்த விஷயத்தை சொல்லிடறேன்பா” ஆரம்பித்தாள் சித்தாரா. “இவ கிணத்திலே குதிப்பேன்னு ஒரே அழுகை. அதான் இங்கே கூட்டிட்டு வந்தேன்” என்றாள் பட்டென.
“என்னது?” அவன் அதிர்ந்து போய் கேட்க நான் அவளை முறைத்து விட்டு திரும்ப, அதற்குள் எங்கிருந்து பொங்கியதோ அவனுக்கு அப்படியொரு கோபம்.
“அவ என்ன கிணத்திலே குதிக்கறது? நானே அவளை வெட்டி போட்டுட்டு ஜெயிலுக்கு போறேன்” என்னை அடிக்க என்னை நோக்கி கையை உயர்த்திக்கொண்டு வந்தே விட்டிருந்தான் ஷ்யாம்.
கொதிக்கும் வெந்நீர் துளிகள் என் மேல் பொழிந்தது போன்றதொரு அதிர்ச்சியில் நான் எழுந்துக்கொள்ள அதற்குள் எங்களுக்கு நடுவில் வந்துவிட்டிருந்தாள் சித்தரா
“அய்யோ சாரி ஷ்யாம். அவ சாதரணமாதான் சொன்னா. நான்தான் விளையாட்டுக்கு..”
“என்ன விளையாட்டு மண்ணாங்கட்டி. உயிர் அப்படிங்கிறது உங்களுக்கு எல்லாம் அத்தனை விளையாட்டா இருக்கில்ல? முதலிலே அவளை இங்கிருந்து போகச்சொல்லு”” இன்னுமாக வெடித்தான் அவன்.
அவனது இடிக்குரலில் நான் அரண்டு போய் நின்றிருந்தேன். என் முகம் பார்க்காமல் திரும்பி நின்று கொண்டான் ஷ்யாம்.
“ப்ளீஸ் ஷ்யாம். தப்பு என்னோடது” சித்தாரா அவனிடம் மன்றாட
தலையை இடம் வலமாக அசைத்துக் கொண்டவன் மறுபடியும் பியானோவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான். அவனக்குள் நெருப்பு பிழம்பு ஒன்று சுழல்வது போல் இருந்தது அவனது உடல் மொழி.
விரல்கள் அதன் போக்கில் பியானோவில் விளையாட ஒரு வாராக தன்னை கட்டுக்குள் கொண்டு வந்து கொண்டவனின் கண்கள் மெல்ல மூடிக்கொள்ள அவன் விரல்கள் மறுபடியும் அந்த பியானோவை இதமாக கொஞ்ச ஆரம்பித்தன.
நாங்களும் பேசாமல் அமர்ந்தோம். கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் அந்த அறையில் அவனது மெல்லிசையின் அரசாட்சி. புயலடித்து ஓய்ந்த நிம்மதி அங்கே.
அவனது கோபம் ஒன்றும் நானறியாத புது விஷயம் இல்லைதான். அதுவும், அதற்கான காரணமும் ஊரறிந்த உண்மை.
பியானோ இசையில் ஒலித்த பாடல் முடிய அவன் மனம் அடங்க எங்களுக்கு எதிரில் வந்து அமர்ந்தான் அவன் கோபப்பட்டதற்கு மட்டும் அவன் மன்னிப்பு கேட்கவேயில்லை.
“கிணத்திலே குதிக்குற அளவுக்கு என்ன பிரச்சனை மேடமுக்கு?” என்றான் சற்றே அழுத்தமாக. நான் பதில் பேசாமல் கண்களை கூட நிமிர்த்தாமல் அமர்ந்திருந்தேன்.
“பார்த்திட்டு இருந்த வேலையை விட்டுட்டா. அந்த வேலையோட டென்ஷன் தாங்க முடியலை அவளாலே. அதான் விட்டுட்டா. இப்போ வேலை இல்லை. அம்மாவுக்கு அவ மேலே கோபம். இதுதான் அவ பிரச்சனை” சொன்னவள் சித்தாரா.
“சரி அப்போ என்னோட பாடறியா நீ?” என்றான் சற்றே தணிந்த தொனியில். சடக்கென நிமிர்ந்த என் விழிகளில் நீரேற்றம்.
இப்படி திடீரென கேட்பான் என நான் நினைக்கவேயில்லை. இதை விட பெரிய வரம் எனக்கு இந்தப் பிறவியில் கிடைக்குமா என்பதும் தெரியவில்லை. அவனிடம் பேச வார்த்தைகளே எழவில்லை.
“என்னாச்சு?” என்றான் எனது விழிகளுக்குள் மாறி மாறி பார்த்தபடியே.
“யூ நோ சந்தியா? உன்னோட வாய்ஸ் ரொம்ப டிவைன் வாய்ஸ். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. அதைக் கேட்கும் போது எனக்குள்ளே அப்படியே வருடிக்கொடுக்கும்” கொஞ்சம் நெகிழ்ந்த குரலில் சொன்னவன் “நீ என் கூட பாடறே அவ்வளவுதான்” ஆணையாக முடித்தான்
“என்ன பேசிக் கொண்டிருக்கிறான் அவன்? என்ன கேட்டுக் கொண்டிருக்கிறேன் நான்? நான் அவனிடம் சொல்ல வேண்டுமென சற்று முன் ஒத்திகை பார்த்ததை அவன் அப்படியே எனக்கு சொல்லிக்கொண்டிருக்கிறானே?” பேச்சிழந்து அவனையே பார்த்திருந்தேன் நான்.
‘இந்த கோபக்காரனுக்கு இப்படி ஒரு பக்கம் இருக்கிறதா?’
“ஹேய்.. ஏன் அப்படி பார்க்கிற?” அவன் கலைக்க
“நான் உங்களை பார்த்து சொல்ல வேண்டிய வார்த்தையெல்லாம் நீங்க என்னை பார்த்து சொல்றீங்க. உங்க பாட்டுதான், உங்க குரல்தான் எனக்கு எப்பவும் பெரிய நிம்மதி. என் டென்ஷனுக்கு எல்லாம் மருந்து” நெகிழ்ந்து வந்தன என் வார்த்தைகள்.
“ஆஹான்… அப்படியா?” இப்போது கொஞ்சம் புன்னகை ஏறியது அவன் இதழ்களில். “அப்போ மேடம் என் கூட பாடுறது கன்ஃபர்மா?”,
“இல்ல நான் இன்னும் அதை முடிவு பண்ணலை” என்றேன் நான். இப்போது அழுத்தமாக மாறியிருந்தது என் குரல்.
“ஏன்? ஏன்?” அப்படி ஒரு அவசர தாளம் அவனது குரலில்.
“அது என்ன எதிரிலே நிக்கறது ஆம்பிளையா, பொம்பளையா யாரு என்னன்னு கூட பார்க்காம கை ஓங்குற பழக்கம் உங்களுக்கு?” அவன் முகம் பார்த்து நேரடியாக வீசினேன் அந்த கேள்வி அம்பை.
“ஏய்..ஏய்.. என்ன நீ? அவனை பத்தி நான் நிறைய சொல்லி இருக்கேன்தானே? தெரிஞ்சுகிட்டே நீ கேள்வி கேட்டா என்ன அர்த்தம்” இது சித்தாரா
“ஆயிரம் காரணம் இருந்தாலும் யார் மேலேயும் கை நீட்டுற உரிமை யாருக்கும் கிடையாது. அவர் இனிமே யாரையும் அடிக்க மாட்டேன்னு சொன்னா நான் அவர் கூட பாடறேன்”
இத்தனை வருட வாழ்கையில் யாரிடம் பேசும்போதும் எனது குரல் இத்தனை கடினமாக இருந்ததாக நினைவேயில்லை. எந்த உரிமையில் அவனை பார்த்த சில நிமிடங்களில் அவனிடம் அப்படி ஒரு நிபந்தனையை விதித்தேன் என்பது இன்று வரை புரியவும் இல்லை.
எழுந்து நின்றவனின் கண்களில் கோபம் தாண்டவம் ஆட, நேருக்கு நேராக என் முகம் பார்த்தான்
“அப்படியெல்லாம் உன் கண்டிஷனுக்கு இறங்கி வந்து உன்கிட்டே கெஞ்சிக் கேட்டெல்லாம் உன்னை பாட வைக்க வேண்டிய அவசியம் இல்லை எனக்கு. கெட் லாஸ்ட்” சூடான குரலில் கடைசி வார்த்தைகளுக்கு நிறைய அழுத்தம் கொடுத்து சொன்னவன் ஒரு ஆழ் மூச்சு எடுத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தான்.
தனக்கு முன்னால் இருந்த அந்த அந்த சதுரங்க அட்டையில் காய்களை அடுக்கலானான். இசைக்கு அடுத்ததாக அவனது அழுத்தங்களுக்கு அதுதான் மருந்து போலும்.
நான் கைப்பையை தோளில் போட்டுக்கொண்டு வாசல் வரை வந்துவிட என் பின்னாலேயே ஓடி வந்தாள் சித்தாரா.
“ஏய் நில்லுடி. என்ன பண்ணிட்டிருக்க நீ?”
“இல்ல சித்து. அவர் எல்லார் மேலேயும் கை ஓங்குறது தப்பு”
“அது நான் சரின்னு சொல்லலை. பட் அவனை பத்தி உனக்கு தெரியுமில்ல. ஷ்யாம் பாவம்.”
“காரணம் எதுவா வேணும்னாலும் இருக்கட்டும் ஆனா இப்படி கண் மண் தெரியாத கோபம் தப்பு”
“சரி. சரி. அது எல்லாம் மாறும் சீக்கிரமே. உன் பாட்டுனாலே அவனோட மனசிலே நிறைய நிம்மதி வருது. உன்னை பார்த்ததுமே எப்படி சந்தோஷமா மாறினான் பாரு.” அவள் சொல்ல வியப்பு கலந்த பார்வையால் அவளை அளந்தேன்.
“நிஜமா சந்தியா” தொடர்ந்தாள் அவள்.
“கிட்டத்தட்ட ஒரு வருஷமா அவன் எந்த படத்திலேயும் வொர்க் பண்ணலை. அவங்க அப்பா பிசினஸை பார்த்துக்கிட்டு ஒரு பொம்மை மாதிரி சுத்திட்டு இருந்தான்.. இப்போ உன்னை பார்த்ததும் புது படம் சரின்னு சொல்லி இருக்கான் .ப்ளீஸ் நீ அவன் கூட பாடு. அவனை கொஞ்சம் சந்தோஷமா சிரிக்க வை அப்புறம் எல்லாம் சரியாகும்”
சொன்னவள் என்னை இழுத்துக்கொண்டு வந்து அவன் முன்னால் அமர வைத்தாள். அவன் நிமிரவேயில்லை.
“ரெண்டு பேரும் ஒரு போர்ட் செஸ் விளையாடுறீங்களா?” இதுவும் அவள்தான்.
இப்போதும் நிமிரவேயில்லை அவன். அவன் அனுமதி இல்லாமல் அவன் விளையாடிக்கொண்டிருந்த ஆட்டத்தை கலைத்து மறுபடியும் அடுக்கினாள் காய்களை.
“விளையாடு ஷ்யாம். உன்னோட செஸ் விளையாடி நானே ஜெயிச்சதில்லை. அவ உன்னை ஜெயிச்சாதான் உன்னோட பாட முடியும். சொல்லிட்டேன்” சொன்னாள் சித்தாரா.
சில நொடிகள் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தவனுக்கு என்ன தோன்றியதோ கண்களை திறந்து என்னை நிமிர்ந்து கூட பார்க்காமல். தனது வெள்ளை குதிரையை என்னை நோக்கி நகர்த்தினான்.
நான் சதுரங்கம் விளையாடி பல நாட்கள் ஆகின்றன. விளையாட வருமென சத்தியமாய் தோன்றவேயில்லை. இருந்தாலும் மனதை ஒரு நிலைப்படுத்திக்கொண்டு விளையாட ஆரம்பித்தேன். யோசித்து யோசித்து நகர்த்திக் கொண்டிருந்தேன் காய்களை.
“அவ ஜெயிச்சாதான் சான்ஸ்.” என்றாள் சித்து உறுதியாக. “அவ ஜெயிக்கலைன்னா அது யாரு? எப்பவும் கூட உன் பாடுவாளே? ஆங்.. சங்கீதா அவதான் இனியும் பாடுவா” என்றாள் அவள் விளையாட்டாக.
நானும் ஷ்யாமும் பேசிக் கொள்ளவேயில்லை. அதே நேரத்தில் எனக்கு அந்த முகம் தெரியாத அந்த சங்கீதாவின் மீது ஏனோ காரணமே இல்லாமல் ஒரு பொறாமை எழும் உணர்வு. ஆனால் எதையும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை நான்.
விளையாட்டையே சுவாரசியமாய் பார்த்துக்கொண்டிருந்த சித்தாரா எங்கள் இருவரிடமும் இருந்த இறுக்கத்தை குறைக்க எண்ணினாளோ?
“மாலையில் யாரோ…. பாட்டு பாடேன் சந்தியா” என்றாள் திடீரென.
“பச் சும்மா இரு” முகம் சுண்டினேன் அவளை பார்த்து.
“ப்ளீஸ் நாலு வரி” அவள் கெஞ்ச, நான் மறுக்க அவன் ஒரு முறை விழிகளை நிமிர்த்தி என் முகம் பார்த்தான். அதில் என்னதான் இருந்ததோ?
“மாலையில் யாரோ மனதோடு பேச ”
அடுத்த நொடி அவனது விழி விசைக்கு கட்டுப்பட்டதைப் போல் அருவியாய் வழிந்து வந்தது எனது குரல். அடுத்த சில நிமிடங்களில் அவனது உடல் மொழியில் மாற்றம். தளர்ந்தது அவனது இறுக்கம்.
“நெஞ்சமே பாட்டெழுது” அந்த பெரிய கூடத்தில் எனது குரல் எதிரொலித்துக்கொண்டிருக்க சதுரங்க அட்டையில் காய்கள் நகர்ந்துக்கொண்டிருக்க மெல்ல மெல்ல ஆட்டம் எளிதாவதை போலவே தோன்ற சட்டென நிமிர்ந்து அவன் முகம் பார்த்தேன்
“விட்டுக் கொடுக்கிறானா என்ன?” நிமிரவேயில்லை அவன். அடுத்த சில நிமிடங்களில் ஜெயித்திருந்தேன் நான்.
“ஹேய் ஃப்ராடு” கூவினாள் சித்து “விட்டுக் கொடுத்திட்டேதானே அவளுக்கு?”
காய்களை தள்ளிவிட்டு அந்த சதுரங்க அட்டையை எடுத்து அவனை ஓங்கி ஓங்கி அடித்தாள் அவள். சிரித்துக்கொண்டே அத்தனை அடிகளையும் வாங்கிக்கொண்டான் என்னவன். நான் சின்ன சிரிப்புடன் அவர்களை பார்த்திருந்தேன்.
பின்னர் என் முகம் பார்த்தவன்
“அவளுக்கு விட்டுக் கொடுக்கலை. அவ குரலுக்கு விட்டுக் கொடுத்தேன். அவ பாட்டுக்காக விட்டுக் கொடுத்தேன்” என்றான் நிதானமாக. “ஜெயிச்சிட்டே போ”
error: Content is protected !!