Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ … 30.1

அடுத்து வந்த நாட்கள் எல்லாம்.. அத்தனை வேகமாய் கரைந்து போனது என்று தான் சொல்ல வேண்டும்.

முகுந்த் தனியாக பள்ளிக்கு இதுவரை செல்லாத போதும், அவன் இருந்த நாட்டின் பயனாய் ஆங்கிலம் அவனுக்கு சரளமாய் வர, 



Advertisement

போதாதற்கு ரியானும் அவனுக்கு கற்று கொடுத்திருக்க.. 

Advertisement

பள்ளியின் இடைப்பட்ட நேரமாயினும்.. அவனுக்கு ப்ரீகேஜியில் சேர்க்க அனுமதி கிடைக்க ஜோடியாக வெண்பாவும், முகுந்தும் பள்ளிக்கு செல்ல துவங்கியிருந்தனர்.

Advertisement

அதனால் பாதி நேரம் கணவன்.. மனைவி.. இருவருக்கும் அவரவர் வேலையில் கவனம் செலுத்த முடிந்தது. 

Advertisement

காலையிலேயே ரியான் இனியாள் இருவரும் சேர்ந்து சமைத்து எடுத்துக்கொண்டு, பிள்ளைகளை பள்ளியில் விட்டுவிட்டு பொட்டிக்கும் ஆஃபிஸூம் சென்றால், 

மதியம் ரியான் வந்து.. பிள்ளைகளோடு இனியாளையும் கூட்டிக்கொண்டு வீடு வந்து மதிய உணவை முடித்துக்கொண்டு வேலைக்கு கிளம்பிவிடுவான்.

குழந்தைகள் விளையாடும் நேரம் உடனிருந்து.. அவர்கள் தூங்கும் நேரத்தில் அவளுக்காக வீட்டிலேயே இருக்கும் தனியறையில் துணிகளை வெட்டி அடுத்த நாள் தைக்க கொடுக்க ஏதுவாக எடுத்து வைத்துவிடுவாள் இனியாள்.

ரியானுக்கும் தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு போனஸ் கொடுக்க, 

அந்த வருடத்தின் மொத்த வரவு செலவு, மற்றும் இன்னும் சில விசயங்களை தங்களின் ஆடிட்டர் மூலமாக செயல்படுத்த வேண்டி இருந்ததால் அவனுக்கும் வேலை நெட்டி தள்ளியது.

இதில் கணவன் மனைவிக்கான தனிமை நேரம் என்பது இல்லாமலேயே போனது.. என்று தான் சொல்ல வேண்டும்.

அதோ இதோவென தீப ஒளித் திருநாள் கோலாகலமாக விடிந்தது. 

தனம் அவர்கள் வீட்டிற்கு அழைப்பு விடுக்கும் முன்னரே, “எங்கள் வீட்டில் தான் கொண்டாட வேண்டும்..” என ரியான் திட்டவட்டமாக சொல்லிவிட, 

வேறு வழியின்றி தனமும், சம்யுக்தாவும் ரியானின் இல்லத்திற்கு வந்திருந்தனர் அதி காலையிலேயே..

தன் குடும்பத்தோடு சேர்த்து, அவர்களுக்கும் புத்தாடை முதல் அவர்களின் தேவைக்கு உண்டான அனைத்தையும் செய்து வைத்திருந்தவர்களை கண்டு பெருமையே தனத்திற்கு.

விடியற்காலையில் எண்ணெய் வைத்து தலை முழுகி, புத்தாடை அணிந்து பெரியவர்களை வணங்கி.. படையலிட்டு.. கோவில் சென்று.. என அனைவரும் பம்பரமாய் சுழல.. 

மதிய உணவிற்கு பின் தான், ‘அப்பாடா..’ என அமர முடிந்தது அனைவருக்கும்.

குழந்தைகள் அவர்களுக்கான விளையாட்டு பொருட்களுடன் ஒதுங்கி இருக்க, 

அவர்களின் மீது ஒரு கண் வைத்தபடி, டீவியில் ஒளிபரப்பு ஆகிக்கொண்டிருந்த நிகழ்ச்சியில் மூழ்கியிருந்த சம்யுக்தாவிடம்,

“பேபி.. உனக்கு நான் எது செஞ்சாலும் அது உன்னோட நல்லதுக்காக தான் இருக்குமுன்னு நம்பற தானே..?” என ரியான் கேட்க,

அக்கா கொடுத்த நொறுக்கு தீனியோடு ஐக்கியமாகியிருந்தவள், 

“எஸ் மாமா.. இப்ப எதுக்கு இந்த தேவையில்லாத சந்தேகம்..?” என்றாள் டீவியை பார்த்தபடியே இயல்பாக.

“உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கேன். 

நீ மறுப்பு சொல்லமாட்டேங்கற நம்பிக்கையில நானும் ஈவினிங் உன்னை பொண்ணு பார்க்க வரச்சொல்லிட்டேன். 

உனக்கு அப்ஜெக்ஷன் எதுவும் இல்லையே..?” என்றதும்,

அதிர்ந்து வாயில் வைத்ததை கூட விழுங்காமல் அலங்கமலங்க விழித்தாள் சிறு பிள்ளையாய்.

தனத்திற்கே இது புது செய்தியாய் இருந்த போதும், 

ரியானின் மீதான நம்பிக்கையில், ‘யார் என..?’ என்று யோசிக்காமல், மகளின் பதிலுக்காக அவளை பார்த்திருந்தார்.

முதலில் ரியான் சொன்னதற்கு அதிர்ந்தாலும், பின் அவளின் மனதில் சட்டென தோன்றி மறைந்த வெங்கடேஷின் உருவம் கண்டு இன்னமும் திகைத்து போனாள் பெண்ணவள்.

‘இப்ப எதுக்கு இந்த மங்கீ ஃபேஸ் எனக்கு தோனனும்..? 

அய்யோ..! இப்போ நா என்ன சொல்லறது..? 

மாமாகிட்ட நோ.. சொல்லவும் முடியாது. 

இடையில இந்த மங்கீ வேற மனசுல வந்து கன்ஃப்யூஸ் பண்றானே..!

ஆண்டவா..! எப்படியாவது என்னை இதுல இருந்து காப்பாத்து..” என மானசீகமாக வேண்டுதலை வைத்தாள்.

அவளின் வேண்டுதல் ஆண்டவனை சென்று சேர்ந்ததா..? இல்லையா..? என ஆராய கூட நேரம் கொடுக்காமல், 

“இனியா.. சம்யுக்தாக்கு எடுத்த அந்த சேரிய கட்டி ரெடி பண்ணு. 

இன்னும் கொஞ்ச நேரத்துல மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திடுவாங்க..” என ரியான் அவசரப்படுத்த,

“அய்யோ..! நா இன்னும் பதிலே சொல்லலையே..?” என மனதிற்குள் மட்டுமே அலறமுடிந்தது சம்யுக்தாவால்..

‘அவளின் பதிலை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை..’ என்பது போல இருந்தது மற்றவர்களின் நடவடிக்கை.

இனியாள் சம்யுக்தாவை அறைக்குள் அழைத்து செல்ல, யோசனையில் அமர்ந்திருந்த தனத்திடம்.. 

மாப்பிள்ளை பற்றியும் அவர் குடும்பத்தை பற்றியும் சொல்ல, தனத்திற்கு திருப்தியாக இருந்த போதிலும், 

திருமணம் என்பது சாதாரண விசயமில்லையே..!

‘படிப்பு முடிந்ததும் சம்யுக்தாவை திருமணம் செய்து வைத்துவிடும் எண்ணம் தனத்திற்கு இருந்த போதும், 

இப்போது ரியான் சொல்லும் மாப்பிள்ளைக்கு நிறைவாய் செய்ய வேண்டும் என்றால் முடியாதே..!’

‘இன்னும் ஒரு வருடம் என்றால், அவளின் தந்தை போட்ட வைப்பு நிதி வந்துவிடும். 

அதோடு சம்யுக்தாவின் சம்பளமும் இருக்க சமாளித்துவிடலாம்.

ஆனால், இப்போதே என்றால்..!’ என‌ யோசித்தவர், 

‘சரி.. வருபவர்களிடம் பேசி கல்யாண நிச்சயத்தை இப்போதும், பிறகு திருமணத்தை வைப்பது பற்றி பேசி முடிவெடுத்து கொள்ளலாம்..’ என நினைத்து அவரும் அமைதியானார்.

சம்யுக்தாவை தயார் செய்தவள், ரியான் வாங்கி வைத்திருந்த நகைகளை போடப்போக, “அக்கா, எதுக்கு இதெல்லாம்..?” என மறுக்க,

“எனக்கு தெரியாது சம்யு. நீ உன் மாமாகிட்ட பேசிக்கோ‌..” என ஒரே வார்த்தையில் முடித்துக்கொள்ள,

சம்யுக்தாவின் முகமோ எல்லையில்லா கவலையில் சோர்ந்து போனது.

அவளின் நிலை கண்டு கவலை வந்த போதும், ரியான் சொன்னால்.. அதில் எதாவது காரணம் இருக்கும் என்பதால் இனியாளும் அமைதியாக அவளை அலங்கரிக்கும் வேலையை தொடர்ந்தாள்.

எல்லாம் முடிந்ததும், “சம்யூ.. நீ இங்கேயே இரு. 

மாப்பிள்ளை வீட்டுல இருந்து வந்ததும் நான் வந்து உன்னை கூட்டிட்டு போறேன்..” எனச்சொல்லி வெளியேற,

சம்யுக்தா பதட்டத்தில் கை விரல் நகங்களை பழி கொடுக்க ஆரம்பித்தாள்.

உடன் வெங்கடேஷை,

“லூசு.. லூசு.. உத்து உத்து பாத்தே என்னை என்னவோ பண்ணிட்டான்..! 

இப்போ, வேற யாரோ முன்னாடி போய் நிற்கனுமுன்னு நினைச்சாலே அருவெறுப்பா இருக்கே..! 

நா என்ன செய்வேன்..? 

மாமா என்கிட்ட முதல்லையே சொல்லியிருந்தா நிச்சயமா தடுத்திருப்பேன். 

கடைசி நேரத்துல சொன்னா என்ன செய்ய முடியும்..? 

எப்பவும் போன போட்டு, ‘சதா.. சதா..’ ன்னு உசுரை வாங்குறவன்.. இன்னைக்குன்னு பார்த்து மெசேஜ்ல விஷ் போட்டுட்டு எஸ்கேப் ஆகிட்டான். 

நம்மளே கூப்பிடுவோமா அவனுக்கு..? 

இப்ப கூப்பிட்டு என்னன்னு சொல்ல..? 

அய்யோ.. புலம்ப விட்டுட்டாங்களே.. என்னைய..

அடேய், வெங்கீ.. மடையா.. வாடா..” என மனதால் அவனை அழைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

அவளின் நிலை உணராத இனியாள், “சம்யூம்மா.. மாப்பிள்ளை வீட்டுல இருந்து வந்துட்டாங்க.. வாம்மா..” என அழைக்க,

‘அய்யோ.. மயக்கம் வர்ற மாதிரி இருக்கு.. ஆனா, வந்து தொலைய மாட்டிங்குதே..!! 

மயக்கம் போட்ட மாதிரி நடிக்கவாச்சும் செய்யலாமுன்னா.. அதுவும் எனக்கு சரிப்பட்டு வராது..’ என மனதில் புலம்பிக்கொண்டே, 

தப்பும் மார்க்கத்தை தேடிய படி தலை நிமிராமல் ஹாலுக்கு சென்றாள்.

“மாப்பிள.. பொண்ணை நல்லா பார்த்துக்கோ.. 

அப்புறம், அது சரியில்ல.. இது சரியில்லன்னு வந்து சொல்லக்கூடாது..” என்ற பரிச்சையமான குரலில் நிமிர்ந்து பார்த்தவள் கண்ணில் சந்தீப் விழ‍,

‘இவரு இருந்தா.. அந்த மங்கியும் வந்திருக்குமே..!’ என பார்வையை சுழற்ற, 

அங்கு சந்தீப்புக்கு எதிர் ஷோஃபாவில் அமர்ந்திருந்தான் வெங்கடேஷ்.

அவனை கண்டதும் பெரும் ஆசுவாசம் பெண்ணுக்கு.. 

அவசரமாக அவனிடம் ஓடிச்சென்றவள் அவன் அருகே இருந்த இடத்தில் அமர்ந்து அவனின் கையை பற்றிக்கொண்டு லேசாக கலங்கிய விழியோடு,

“வெங்கி எனக்கு இதெல்லாம் பிடிக்கலடா.. மாமா சொன்னதுக்கு அப்புறம் தான் ஃபீல் பண்ணேன்.. 

என்னால வேற யாரையும் இப்படி.. இந்த மாதிரி.. யோசிக்கவே முடியல.. 

ப்ளீஸ், நீயே என்னை கட்டிக்கோயேன்.. 

நா, உன்னை இனிமேல் எப்பவுமே மங்கீன்னு சொல்லவே மாட்டேன்.. 

நைட் போன்ல கத சொல்லி டார்ச்சர் பண்ண மாட்டேன்.. மதர் ப்ராமிஸ்..” என சிறுகுழந்தையாய் தன் கழுத்தில் விரல் வைத்து சொல்ல,

அவளின் செய்கையே அவளின் விருப்பத்தை அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைக்க, 

இறுதியாய் அவள் சொன்னதில், அதுவரை அமைதி காத்தவர்களுக்கு சிரிப்பு பொங்கியது.

தன்னை சுற்றி எழுந்த சிரிப்பொலிக்கு அப்புறமே கொஞ்சம் சுதாரித்து.. சுற்றிலும் பார்க்க, 

அங்கே வெங்கடேஷின் தாயாரும், இன்னும் இரு ஜோடிகளும்  இருக்கக் கண்டு புரியாத பார்வை பார்த்தவள், அவர்களை தவிர வேறு யாரும் இல்லாமல் இருப்பதிலேயே விசயம் புரிய,

அதிர்ந்து விழித்தவள்.. பின் அசட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு, வெங்கடேஷின் முதுகுக்கு பின் தன் முகத்தை மறைத்துக்கொண்டாள் வெக்கத்தில்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!