Skip to content
Post Views: 2,085
அத்தியாயம் – 4
கீர்த்தி சத்யவதியின் உத்தரவால் தந்தையைக் காண கிளம்பினாலும், அன்னையின் கண்களில் கண்ட அந்த வேதனையே மனதில் ஓடியது.
எப்போதுமே கீர்த்தியின் தந்தையின் வருகை என்பது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இருக்கும். அடிக்கடி விடுமுறை எடுக்க முடியாது என்பதால் விடுமுறைகளை பெரும்பாலும் கீர்த்தியின் பிறந்த தினத்தை அனுசரித்தே அமைத்துக் கொள்வார் சந்திரன். அதனால் கீர்த்தியின் அன்னை, தந்தை இருவரின் பிறந்த நாளோ, திருமண நாளோ அவர்களுக்குப் பெரிதாகத் தெரிவதில்லை.
ஸ்ரீகீர்த்தியின் பெற்றோர் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் சட்டப்படிப் பிரிந்து விட்டனர். ஸ்ரீகீர்த்தியின் பொறுப்பை அவளின் வயதைக் கொண்டு சத்யவதியிடமே ஒப்படைத்தது சட்டம். அதற்கு பிறகு வருட விடுமுறை கூட எடுத்துக் கொள்வதில்லை சந்திரன். அவ்வப்போது போனில் மட்டும் பேசுவார்.
Advertisement
கீர்த்தியின் பள்ளிப் படிப்பு வரை சந்திரன் அவளின் பிறந்த நாள் அன்று அவளுக்குத் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவிப்பார். பின் ஏதாவது ஒரு பரிசுப் பொருள் அவள் இல்லத்திற்கு கூரியர் மூலம் அனுப்பி விடுவார்.
கீர்த்தி பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் கல்லூரி சேரும் முன் விடுமுறையில் தன் தந்தையோடு இருந்துவிட்டு வந்தாள். அப்போதுதான் அவர் பிறந்ததேதியைத் தெரிந்துக் கொண்டாள். அதிலிருந்து மூன்று வருடங்கள் முன்பு வரை அவளின் தந்தை சந்திரனுக்குத் தொலைப் பேசியின் மூலம் வாழ்த்துத் தெரிவிப்பாள்.
இந்த கெஸ்ட்ஹவுஸ் கீர்த்தியின் பெயரில் வாங்கியதும், தன் தந்தையை அவரின் பிறந்தநாள் அன்று கீர்த்திதான் அழைத்தாள். முதலில் வேண்டாம் என்றாலும், வருடங்கள் செல்லச் செல்ல தனிமை அவரை சிந்திக்க வைத்தது.
Advertisement
தன் மனைவி திரைத் துறையைத் தேர்ந்தெடுத்தது பிடிக்காமல், சத்யவதியைப் பிரிந்த சந்திரன், கால மாற்றங்களில் நம் உள்ளத்தில் நேர்மை இருக்கும் பட்சத்தில் எந்த துறையிலும் முன்னேற முடியும் என்று உணர ஆரம்பித்தார். அவருக்குப் பிடிக்காவிட்டாலும், தன் மகளும் அதே துறையைத் தன் களமாகத் தேர்ந்தெடுக்க, கீர்த்தியை அவரால் விட்டுவிட இயலாமல் பாசம் தடுத்தது. அதனால் கீரத்தியிடம் மேலோட்டமாக பிடித்தமின்மையைத் தெரிவித்து இருந்தாலும், அவளுடனான பந்தம் தொடர்கின்றது.
Advertisement
மூன்று வருடங்கள் முன் அவரின் பிறந்த நாள் அன்று கீர்த்தி பாசத்துடன் அழைக்கவும், சந்திரன் ஆசையுடனே விருந்தினர் விடுதிக்குச் சென்றார். அன்றைய மாலை வேளையை இருவரும் மகிழ்வுடன் கழிக்கவும், இரவு உணவிற்கும் அங்கேயே ஏற்பாடு செய்து இருந்தாள் கீர்த்தி. தந்தையோடு சற்று நேரம் ஷட்டில், செஸ் என்று விளையாடினாள். பின் இருவரும் இரவு உணவிற்கு வர, அவள் தந்தைக்குப் பிடித்த பதார்த்தங்கள் தான் அதிகம் இருந்தது.
சந்திரன் உணவு வகைகளைப் பார்த்ததும் அனைத்தும் சத்யவதியின் தயாரிப்பு எனப் புரிந்து கொண்டார். அன்றைக்கு அவளிடம் எதுவும் சொல்லவில்லை. மறுவருடம் அதே போல அழைத்தப் போது சாப்பாடு மட்டும் வேண்டாம் என்றார்.
ஏன் எனக் கீர்த்திக் கேட்டபோது, தனக்கு விருப்பமில்லை என்று கூறினார். அந்தக் குரலில் கீர்த்தி என்ன உணர்ந்தாளோ, அதற்கு பின் கேட்பதில்லை. அவரோடு நேரம் செலவழித்து விட்டு, உணவிற்கு வெளியில் சென்று விடுவார்கள். ஸ்ரீகீர்த்தி வெளியில் செல்லும்போது மட்டும் தன் அடையாளம் மறைத்துக் கொள்வாள்.
Advertisement
இன்றைக்கும் அதே போல விருந்தினர் விடுதிக்குச் செல்ல, கீர்த்தியின் தந்தை சந்திரனும் சில நிமிட இடைவெளியில் வந்தார்.
சற்று நேர அமைதிக்குப் பின் சந்திரன் “கீர்த்திமா, இன்னிக்கு அம்மாவோடு இருந்திருக்கலாமே மா. நாம் இன்னொரு நாள் கூட பார்த்துக் கொள்ளலாமே” என்றார்.
“நானும் சொன்னேன்பா. அம்மா தான் நீங்க கவலைப்படுவீங்க. கொஞ்ச நேரம் உங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ணினா, ரிலாக்ஸ் ஆகிடுவீங்கன்னு சொன்னாங்க.”
“என்ன பிரச்சினை கீர்த்தி? சத்யா பெயருக்கேற்றபடி உண்மையாக இருப்பவள். தவறான வழியில் எக்காலமும், யாருக்காகவும் செல்ல மாட்டாள். அதிலும் உன்னை யாரும் பேசும் அளவிற்கு சத்யா விடமாட்டாளே? என்ன தான் நடந்தது?”
இதைக் கேட்டதும் ஸ்ரீகீர்த்திக்கு நிம்மதியாக இருந்தது. தந்தை, தாய் இருவரையும் குறித்து பெருமிதமும் வந்தது. இருவரின் பிரிவிற்கு என்ன காரணமோ, ஆனால் பிரிந்து இத்தனைக் காலம் சென்ற பின்பும் ஒருவரோடு ஒருவர் கொண்டிருந்த அக்கறையும், நம்பிக்கையும் கீர்த்தியை ஆச்சரியப்படுத்தியது. அவர்களின் தனிப்பட்ட விஷயங்களுக்குள் செல்லாமல், பெருமூச்சுடன் சத்யவதி கூறியது அனைத்தையும் கீர்த்தி விளக்கமாகக் கூறினாள்.
அனைத்தும் கேட்டிருந்த சந்திரனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதை எல்லாம் எதிர்பார்த்துத் தான் அவர் இந்த வேலை வேண்டாம் என்று கூறியதே. அப்போது அதை அடக்குமுறையாக எண்ணிய சத்யவதி, சந்திரனைப் பிரியும் முடிவெடுத்தார். அப்போதும் கடைசி முடிவெடுக்கு முன் கூட சந்திரன் பேசித் தான் பார்த்தார். ஆனால் சத்யா பிடி கொடுக்கவில்லை. அதற்கு அவரின் சொந்தங்களின் வார்த்தைகளும் காரணம் தான்.
“வக்கீல் என்ன சொல்றார்?”
“இந்த ஆடியோ எடிட் செய்து வந்திருக்கிறதைப் பார்த்தா, அன்னிக்கு நடந்த சம்பவம் எல்லாமே அவர் கையில் இருக்கணும். அந்த ஃபுல் வீடியோ அல்லது ஆடியோ கிடைச்சா கருணாகரன் மேலே கேஸ் கொடுக்கலாம்ணு சொல்றார். அப்படியில்லை என்றால் கருணாகரனே அதை ஒத்துக்கணும். எப்படி இதைச் செய்யறதுனு நாளைக்கு டிஸ்கஸ் பண்ணலாம்னு சொன்னார்”
சந்திரன் சிறிது நேரம் யோசித்து விட்டு, கீரத்தியோடு சேர்ந்து சில விஷயங்கள் பேசினார்.
“கீர்த்திமா, ஒரு டிடெக்டிவ் கிட்டே பொறுப்பை ஒப்படைச்சு, அந்த ஆடியோ டேப் கருணாகரன் கிட்டேயிருந்து எடுக்கலாம். அதை வச்சு அவன் மேலே கேஸ் போட்டு, உள்ளே தள்ளிடலாம்” என்றார்.
“பா, அது எல்லாம் ஓல்ட் டெக்னிக். அவர் தயாரித்த படத்திலேயே எத்தனை ஸீன் இது மாதிரி பார்த்திருப்பார். இதை கிளவுட், கூகிள் டிரைவ்னு டிஜிட்டலா எங்கியாவது சேவ் பண்ணிருப்பார். அதை ஹாக் பண்ணினா, அதை சைபர் க்ரைம்னு நம்ம மேலே திருப்பி விட வாய்ப்பு இருக்கு” என்றாள் கீர்த்தி.
“அப்போ எப்படி இந்தப் பிரச்சினைய சால்வ் பண்ணறது?”
என சந்திரன் கேட்கவும், கீர்த்தி ஒரு யோசனை கூறினாள். அதில் உள்ள ஆபத்தை உணர்ந்த சந்திரன் கீர்த்தியின் யோசனைகளை நிராகரித்தார். கீர்த்திக்கோ அது மட்டுமே சரியாக வரும் என்று அழுத்தமாகத் தோன்ற ஆரம்பித்து இருந்தது. அவளின் மனதில் உள்ள திட்டத்திற்கு பெற்றோர் இருவருமே சம்மதிக்க மாட்டார்கள் என்று தான் நினைத்தாள்.
மேற்கொண்டு வேறு எதுவும் தந்தையிடம் சொல்லாமல், வெளியிலும் செல்லாமல், விருந்தினர் இல்லத்திற்கே உணவிற்கு ஆர்டர் செய்தாள். இருவருக்கும் சாப்பிடும் எண்ணம் இல்லையென்றாலும், பட்டினியால் எதுவும் சாதிக்க முடியாது என உணர்ந்து இருந்தனர். எப்போதையும் விட சீக்கிரமே இருவரும் அங்கிருந்து கிளம்பி விட்டனர்.
வீட்டிற்குச் சென்ற கீர்த்தி, தன் அன்னையைச் சென்று பார்த்தாள். அவர் படுத்து இருந்தாலும் உறங்கியிருக்கவில்லை. வேலையாட்களிடம் சத்யவதியின் உணவு பற்றிக் கேட்டுக் கொண்டதால், அதைப் பற்றி கேட்காமல் அவர் அருகே வந்து அமர்ந்தாள்.
சத்யவதி, கீர்த்தி அவளின் தந்தையோடு செலவழித்தப் பொழுதுகளைப் பற்றி கேட்க, அவர் சத்யாவைப் பற்றிக் கூறியதைக் கூறினாள். கேட்டதும் சத்யாவின் கண்களில் கண்ணீர் வந்தது. பின் கீர்த்தியை உறங்க அனுப்பி விட்டு, தன் வாழ்க்கையில் நடந்தவற்றை எண்ணிப் பார்க்க ஆரம்பித்தார். அதே நேரம் சந்திரனும் கூட சத்யவதி தன் வாழ்க்கையில் இணைந்ததையும், அதன் பின் ஏற்பட்ட பிரிவையும் நினைத்துக் கொண்டு இருந்தார்.
—
கீர்த்தியின் அன்னை சத்யவதி பின் எழுபதுகளில் பிறந்தவர். பிறந்து வளர்ந்தது அனைத்தும் அப்போதைய மெட்ராஸ் நகரில்தான். சத்யவதியின் தந்தை ஈஸ்வர மூர்த்தி தமிழ் இசைக் கலைஞர். அவரின் முன்னோர்கள் தினமும் கோவில்களில் தேவாரம், திருவாசகம் எனப் பாடி பணி செய்த ஓதுவார் வகையைச் சேர்ந்தவர்கள். கால மாற்றத்தில் ஈஸ்வரன் அதே பணியை இசைக் கச்சேரிகளாகச் செய்து வந்தார். அதனால் அவர்கள் இல்லத்தில் இசை ரீங்காரித்துக் கொண்டே இருக்கும்.
சத்யவதியும் தந்தையிடம் முறையாகச் சங்கீதம் கற்றுக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரு மூத்த சகோதரி வேதவதி மட்டுமே. அவளை உள்ளூரிலேயே திருமணம் செய்து கொடுத்து இருந்தனர். அக்கா கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளர் பொறுப்பில் இருந்தார்.
சத்யவதி படிக்கும் காலத்தில் கல்லூரி விழாவின் போது பாடல்கள் பாட அவரைத் தேர்வு செய்வது வழக்கம். ஒருமுறை நாடகத்தில் நடிக்க வேண்டியப் பெண்ணுக்குத் திடீர் உடல் நலக் குறைவால் கல்லூரி வர முடியவில்லை. அவளுக்குப் பதிலாக யாரைத் தேர்ந்தெடுக்க என்று யோசித்தப் போது அவர்களின் பேராசிரியர் சத்யவதியை செலக்ட் செய்தார். முதலில் தயங்கினாலும், கல்லூரியில் தான் என்பதால் ஒத்துக் கொண்டாள் சத்யவதி.
அந்த விழாவிற்கு பிரபல நாடக இயக்குனர் தலைமை தாங்க வந்திருந்தார். அவருக்கு சத்யவதியின் நடிப்பும், குரலும் மிகவும் பிடிக்கவே வெகுவாகப் பாராட்டிப் பேசினார். அந்த பாராட்டு சத்யவதியின் மனதில் சிறு ஆசையைத் தூண்டியது. ஆனாலும் தன் வீட்டினர் ஒத்துக் கொள்வது எல்லாம் கடினம் என அதைப் பெரிதுபடுத்தவில்லை .
அந்தக் கால கட்டங்களில் ஷேக்ஸ்பியர் நாடங்கள் கல்லூரிகளில் மிகவும் பிரசித்தம். அதற்கு முக்கியத் தேவை நடிப்பு மட்டுமல்ல. அழகான ஆங்கில உச்சரிப்பு. சத்யவதிக்கு இயற்கையாகவே அந்த திறமை இருந்தது. அதே சமயம் இசையை முறையாகக் கற்றுக் கொண்டிருந்ததால் தமிழ் உச்சரிப்பிலும் பிழையில்லாமல் இருக்கும். அதனால் தொடர்ந்து கல்லூரி நாடகக் குழுவில் இடம் பெற்று இருந்தாள்.
சத்யவதி ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற அதே சமயம் அவளின் நடிப்புத் திறமையும் மெருகேறியிருந்தது. அவர்கள் கல்லூரி அந்தக் காலக் கட்டத்தில் புகழ் பெற்ற கல்லூரிகளில் ஒன்று. கலைத் துறையினர் பலர் அங்கே பயின்றதால், அதிகமான அளவில் செலேபிரட்டிஸ் விழாக்களில் கலந்து கொள்வார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பும், புகழும் கண்டு சத்யவதிக்கு கொஞ்சம் கொஞ்சமாக தானும் அதே போல புகழ் பெற வேண்டும் என்ற ஆசை உண்டானது.
சத்யவதி படிப்பின் இறுதி ஆண்டில் அப்போது மிகவும் புகழ் பெற்ற நாடகக் கம்பெனி ஒன்றின் இயக்குனர், அவளிடத்தில் தங்கள் குழுவில் சேர்ந்துக் கொள்ளச் சொல்லி அழைப்பு விடுத்தார். வீட்டில் கேட்டுவிட்டுக் கூறுவதாகச் சொல்லி, அவர்களின் விலாசம் வாங்கி வைத்துக் கொண்டாள் சத்யவதி.
தொண்ணூறு காலக் கட்டங்களில் பெரிய திரையின் ஆதிக்கம் மற்றும் சின்னத் திரையில் தனியார் சேனல்கள் வரவு போன்றவற்றால் மேடை நாடகங்கள் மெல்ல மங்கத் தொடங்கி இருந்தது. ஆனாலும் அந்தக் கலையைப் போற்ற மிகச் சில நாடக கம்பெனிகள் நடந்துக் கொண்டிருந்தது. அவர்கள் சின்னத் திரையிலும் நாடகங்கள் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சின்னத் திரையில் வந்த நாடகங்களும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, குடும்ப உறவுகளுக்கு இடையேயான அன்பை வெளிப்படுத்தும் விதமாகத் தான் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு பிரபலமான இயக்குனர் தான் சத்யவதியை நாடகத்தில் நடிக்க அழைத்தார்.
சத்யவதி தன் வீட்டில் கூற, அவளின் பெற்றோர் திருமணம் பேசப்போகிறோம் என்று கூறி தடுத்து விட்டார்கள். ஆனால் ஏனோ சத்யவதிக்கு அத்தனை எளிதில் திருமணம் அமையவில்லை. அழகோ, படிப்போ, வசதியிலுமோ பெரிய குறை கிடையாது. மிகப்பெரிய பணக்காரர்கள் என்று கூற முடியாவிட்டாலும், நடுத்தரத்திற்கும் சற்று மேல் தான் சத்யவதியின் பெற்றோர். அதிக ஜாதக நம்பிக்கைக் கொண்டவர்கள். பொருத்தமான ஜாதகம் கிடைக்க வேண்டும் என்று காத்து இருந்தனர்.
error: Content is protected !!