Skip to content
Post Views: 6,627
“ஆமா இப்போ அதுதான் முக்கியம்” என்றவள் மனதில் கணவனிடம் உதவி கேட்கலாமா என்ற யோசனையே, செய்வானா? முதலில் அவனிடம் என்னவென்று சொல்லி உதவி கேட்க, எப்படி சொல்லிப் புரியவைக்க, ஒருவேளை அவனின் அண்ணனைப் பற்றித் தவறாகப் பேசுவதாக எண்ணுவானோ முதலில் இதைப் பற்றிப் பேசலாமா என்று பலவாறாக யோசனை செய்தவள்.
Advertisement
அனைவருக்கும் தேநீர் வைத்து முடித்தாள் கணவனுக்குப் புதியதாகவே வைத்து எடுத்துசென்றாள் முன்பு தயாரித்து வைத்தருந்ததை அவளே குடித்துவிட்டாள்.
Advertisement
“எங்க உன் அக்கா காலைல அடுப்படில நுழைஞ்சவ இன்னும் வெளில வரல வந்தவங்க அவளை அங்க வந்து பாக்கணுமா” என்று ராக்காயி முறைத்துக்கொண்டு கேட்க, செவ்வந்தி மெல்ல எழுந்து எப்படியோ வந்து நின்றாள்.
Advertisement
Advertisement
அண்ணியை பார்த்த ராஜகுமாரனின் விழிகள் இடுங்கியது, மற்றவர்கள் இரண்டு பெண்களையும் ஆராய்ச்சியாகப் பார்க்கக் கனகத்திற்கு சுடு நீரை அப்படியே அவர்கள் தலையில் கொட்ட தோன்றியது.
“என்ன பெரியமருமவ முகமே சரியில்ல உடம்புக்கு என்ன” என்றார் ஒருவர்.
ராக்காயியும் அவளை ஊன்றிப் பார்க்க “ஒண்ணுமில்ல அத்த தாளிக்கும்போது எண்ணெய் தெரிஞ்சிருச்சு அதான் கண்ணு எரியுது” என்றாள் செவ்வந்தி மெல்ல.
கனகம் பரிதாபமாகத் தமக்கையை பார்த்திருந்தாள் மருந்து எதுவும் இதுவரை எடுத்துக்கொள்ளவில்லை ஜூரமும் கூடிக்கொண்டேயிருக்கிறது.
“அதுசரி தாளிக்கக்கூட தெரியாதா” என்றார் ஒருவர் கனகத்தின் பொறுமை போகட்டுமா என்று கேட்டுநிற்க “சமையல் ஆயிடுச்சா” என்றார் ராக்காயி.
“முடிஞ்சிடுச்சு” என்றாள் கனகம்.
“எல்லாரையும் சாப்பிட கூப்பிடுங்க” என்றவர் கனகத்திடம் “போ உன் புருஷனுக்கு டீயை குடுத்துட்டு சீக்கிரம் வா” என்க அவள் ராஜகுமாரனின் அறைக்குள் நுழைந்தாள்.
தேநீரை அவள் கொடுக்க அதே ஆறிப்போன… மறுபடியும் சூடுபண்ணின டீதானே என்ற எண்ணத்தோடு குடிக்கத்தொடங்கினான் ஆனால் தொண்டைக்குள் இதமாய் இறங்கியது அந்த இஞ்சி ஏலக்காய் டீ.
“யார் போட்டது” என்றான் அவளிடம்.
“நான்தான்” என்றவள் விழிகள் அறைக்கு வெளியே எட்டி பார்ப்பதும் கணவனைத் தயக்கத்தோடு பார்ப்பதுமாக இருந்தது.
“எனக்கு முன்னாடியே போட்டு வெச்சிருப்பாங்களே அது இல்லையா, இது பிரெஷ்ஷா இருக்கே” என்க.
“சூடு பண்ணினதை குடிச்சா நல்லா இருக்காது அதான் உங்களுக்குப் புதுசா போட்டேன்” என்றவள் விழிகள் மட்டும் மாமியார் மேலே இருந்தது.
“ஒய்…” என்றவன் அதட்டலில் சட்டென்று திரும்பி அவனைப் பார்க்க “என்ன” என்றான் அவளிடம்.
‘ஒன்றுமில்லை’ என்று தலை அசைத்தவள் திரும்பி நடந்தாள்.
“நில்லு” என்றவன் அவளைக் கடந்து சென்று கதைவடைக்க அவளுக்கு நெஞ்சடைத்தது “ஐயோ!! என்ன பண்றீங்க” என்றாள் பதட்டமாக.
“ஏய் உன் புருஷண்டி நான் என்கூடதான இருக்க அதுக்கு ஏன் இப்படி பதறுற” என்க.
வெளியில் ராக்காயின் விழிகளில் கனல், இவ்வளவு பேர் அமர்ந்திருக்க எப்படி இப்படி கதைவடைக்கிறான் அவனுக்குத்தான் தெரியவில்லை பொம்பள இவளுக்கு எங்கே போனது அறிவு என்று.
“கதவைத் திறங்க நான் போகணும்” என்றாள் கனகம்.
“உன்னை ஒன்னும் பண்ணப்போறதில்லை ஒழுங்கா நில்லுடி கொஞ்சம் நேரம்” என்றவன் “நேத்து வீட்டுக்கு வந்தப்போ பாத்தது உன்னை அதுக்கு அப்பறோம் இப்போதான் என் முன்னாடி வந்திருக்க” என்க.
“நான் உங்களுக்கு டீ எடுத்துட்டு மேலே வந்தேன் நீங்க இல்ல” என்றாள்.
“மடையா சான்சை மிஸ் பண்ணிட்டியே” என்று தன்னையே திட்டிக்கொண்டவன் “ஓஹ்” என்றான், பிறகு அவளைப் பார்த்து “சாரி” என்க.
அவள் விழி விரித்து அவனைப் பார்த்தாள் ‘என்ன கட்டியவன் மனைவியிடம் மன்னிப்பை வேண்டுகிறானா அதுவும் தவறேதும் செய்யாமலே!’ அவள் எதற்கென்று புரியாமல் விழிக்க.
“இந்த வீட்ல உனக்கான மரியாதையை முதல் நாளே என்னால குடுக்க முடியல, வேற யாரும்னா அதுவேறமாதிரி இது நாம பொண்ணை கொடுத்த சம்மந்தி எதுவும் சொல்லமுடியல, தப்பு என் மேலதான்” என்றான்.
“ஐயோ… அப்படிலாம் இல்ல உங்க மேல என்ன தப்பு… நான் அப்படிலாம் நினைக்கல, அவங்க பெரியவங்க பரவாயில்ல இருக்கட்டும்” என்றாள்.
புன்னகைத்துக்கொண்டவன் “தெரியும் நீ என்ன சொல்லுவன்னு இந்தச் சாரி என் மனநிம்மதிக்காக” என்றவன் கிளாஸை அவளிடம் நீட்டிக்கொண்டே “அண்ணிக்கு என்னாச்சு ஒருமாதிரி இருக்காங்க” என்க.
கனகத்தின் முகத்தில் அப்படியொரு ஆசுவாசம் விழிகள் கூடக் கலங்க தொடங்கியது தயங்கி தயங்கி சொல்லியே விட்டாள், கேட்டு நின்றவனுக்கு முகத்தை எங்குக் கொண்டு வைத்துக்கொள்ள என்றே தெரியவில்லை.
செவ்வந்தியும் வெகுளியே அந்தரங்கத்தை சொல்லலாமா இல்லையா என்று தெரியவில்லை அவளின் இயலாமை தங்கையிடம் சொல்லிவிட்டாள், கனகத்திற்கு அதைக் கணவனுக்கு எப்படி சொல்லிப் புரியவைக்க என்று தெரியவில்லை.
நாசுக்காகப் பட்டும் படாமல் “அக்காவுக்கு ரொம்ப காச்சல் நிக்கக்கூட முடியல, ராத்திரி ரொம்ப கஷ்டப்பட்…” என்று சொல்லிவந்தவள் அப்படியே நிறுத்திவிட்டு கணவனைப் பயத்தோடு பார்த்தாள்.
இரு கைகளால் தலையை அழுந்தப் பற்றிக்கொண்டவன் முகமே இருண்டுவிட்டது “இல்ல இல்ல அக்காக்கு காச்சல் அவ்ளோதான்” என்றவளுக்கு கைகள் நடுங்க தொடங்கியது.
‘எப்படி எடுத்துக்கொள்வான் நேரே அண்ணனிடம் சென்று கேட்டுவிட்டால் மாமியாருக்கு தெரிந்துவிட்டால் ரூம்ல நடக்குற எல்லாத்தயும் உன் தங்கச்சிக்கு சொல்லிட்டு இருப்பியா என்று ஏதாவது அவர் சொல்லிவிட்டால் அம்மா அப்பாவுக்குத் தெரிந்துவிட்டால்’ என்று சிந்தனை எங்கெங்கோ செல்லத் தலை வலி தொடங்கியது.
“ஒருநிமிஷம்” என்றவன் விழிகள் மூடித் தன்னை நிதானித்தான் “நீ போய் அண்ணி கூட இரு நான் என்ன பண்ணலாம்னு பாக்குறேன்” என்று அவளை அனுப்பிவைத்தான்.
மாமியார் தன்னை எரிப்பதை போலப் பார்ப்பதை உணர்ந்தவள் வேகநடையில் செவ்வந்தியின் அருகில் சென்று நின்றாள்.
“ஒன்னொண்ணையும் சொல்லனுமா நேரம் என்ன ஆவுது எல்லாருக்கும் சாப்பாடு போடு” என்றார் ராக்காயி.
ஒரு பத்து பேர் இருந்தனர் இலை போட்டு அனைவருக்கும் காலை உணவைப் பரிமாறினர், உணவு அருமையாகவே இருந்ததது ராக்காயியை பார்த்து “பரவாயில்ல உன் மருமகளுங்க நல்லாவே சமைச்சிருக்காங்க” என்றனர்.
அவருக்குப் பெருமை பிடிபடவில்லை கர்வமாகப் பார்த்தார் அனைவரையும், இதற்கான தேவையே இல்லை ராஜா சொல்லியிருந்தான் வெளியில் உணவு சொல்லிக்கொள்ளலாம் சமைப்பது கஷ்டம் முதல் நாள் அலைச்சல் மறுநாள் இத்தனை பேருக்குச் சமையல் செய்வது சிரமம் என்று.
அவன் நினைத்தது தாயும் தமக்கையும் செய்வார்கள் என்று இங்கானால் அவர் மருமகள்களை அல்லாவா வாட்டி எடுத்தார், அவனுக்குக் கோபமான கோபம் விருந்தினர்கள் இருக்க அதோடு திருமணம் முடிந்து வந்த புது பெண்களும் இருக்க தாயை அனைவர் முன்பும் விட்டுக்கொடுக்க இயலவில்லை கோபத்தை அடக்கிக்கொண்டான்.
அவர்கள் உண்டுகொண்டிருக்க வீட்டிற்குள் நுழைந்தாள் ரேகா இவர்களின் தூரத்து சொந்தம் யோகன் மற்றும் ராஜாவுக்கு அக்கா முறை, மீன்சுருட்டியில் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாக இருக்கிறாள்.
“வாடி வா வா என்ன காலைலே வந்திருக்க” என்ற ராக்காயி “முதல்ல சாப்பிடு” என்க.
“ஹ்ம்ம் சாப்பிடுறேன் சித்தி, தம்பிங்க பொண்டாட்டிங்கள நேத்து மண்டபத்துல பாத்தது அதான் சும்மா பாத்துட்டு போலாம்னு வந்தேன்” என்றவள் செவ்வந்தியை பார்த்துக்கொண்டே உள்ளே சென்றாள்.
கனகத்திற்கு ஏதோ புரிவதாக இருக்க அவள் செவ்வந்தியிடம் “அக்கா அவங்களுக்கு கொஞ்சம் டீ வெச்சு குடு” என்று உள்ளே அனுப்பினாள்.
சமையல்கட்டுக்கு வந்த செவ்வந்தியை பிடித்துக்கொண்ட ரேகா வேகமாக டெம்ப்ரேச்சர் பார்த்து விட்டு அவளிடம் சில விவரங்கள் கேட்டுக்கொண்டு ஜுரத்திற்கு மாத்திரை கொடுத்தாள், அதோடு ஆயின்மென்ட் ஒன்றையும் அவள் கையில் வைத்தவள்.
“ஒரு இட்லியாவது சாப்பிடுங்க அப்புறமா மாத்திரை போட்டுக்கோங்க வெறும் வயித்துல போடக் கூடாது, ஒன்னும் பயப்பட வேண்டாம் இதெல்லாம் இருக்கும் சரியாயிடும் சரியா, எதுனாலும் எனக்குப் போன் போடுங்க எப்போனாலும்” என்று தன் அலைபேசி எண்ணை ஒரு பேப்பரில் எழுதி அவள் கையில் வைத்தாள்.
பிறகு மற்றவர்களோடு சென்று அமர்ந்துகொண்டு சாப்பிட்டாள், ராக்காயி கவனித்தாலும் அவள் எப்பொழுது வந்தாலும் உரிமையாய் அடுப்படிவரை செல்லுவாள் என்பதால் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
அவசரமாக ஒரு இட்லியை வாயில் போட்டுக்கொண்ட செவ்வந்தி மாத்திரையையும் விழுங்கினாள் அரைமணியில் ஜுரம் கொஞ்சம் குறைந்திருந்தது முகமும் கொஞ்சம் தெளிச்சமடைந்தது.
அதைப் பார்த்ததும் கனகத்திற்கு அப்படியொரு நிம்மதி கணவனை நன்றியோடு பார்த்தாள், புருஷனை ஆசையா பாக்குறாளா பாரு எல்லாம் என் நேரம் என்று நொந்துகொண்டான்.
அடுத்ததாக வீட்டினர் அமர்ந்துகொள்ள ராஜி அப்பொழுதான் வந்தாள் “இவன் ராத்தி பூரா ஒரே அழுகமா தூங்கவேயில்ல நேத்து அலைச்சல் வேற அதான் தூங்கிட்டேன்” என்றாள்.
“அதுக்கென்ன இங்க வந்தா தானே உனக்கும் தூங்க முடியும்” என்றார் ராக்காயி சம்மந்தியை ஓரப்பார்வை பார்த்துக்கொண்டே, அதர்க்கெல்லாம் அசருவாரா அவர் சட்டமாக அமர்ந்து கேசரியை விழுங்கிக்கொண்டிருந்தார்.
யோககுமாரனும் சாப்பிட அமர்ந்திருந்தான் அவன் அருகில் அமர்ந்த ராஜகுமாரன் “அண்ணிக்கு செம ஜுரம் என்ன எதுன்னு விசாரிச்சியா” என்றான் அவனுக்கு மட்டும் கேட்க்கும் விதமாக.
ஒருநொடி நிமிர்ந்து மனைவியைப் பார்த்தவன் அமைதியாகச் சாப்பிட்டான் “உன்கூட சாப்பிடவாது சொல்லு” என்றான் ராஜா.
“அம்மாக்கு அதெல்லாம் பிடிக்காது, என்ன இப்போ அப்புறம் சாப்பிடட்டும்” என்றான் அவன்.
“அட கெரகம் பிடிச்சவனே உனக்கெல்லாம் எதுக்குடா கல்யாணம், இருடா இன்னைக்கு நீ எப்படி உன் ரூம்ல தூங்குறன்னு பாக்குறேன்” என்று அவனை மனதில் வறுத்தெடுத்தவன் “கனகம் அண்ணியும் நீயும் வாங்க சாப்பிடுங்க அதான் எல்லாம் முடிஞ்சுதே” என்றான்.
அவர்கள் தயங்கி நிற்க “அதென்னாடா ஆம்பளைங்க சாப்பிடும்போது அவளுங்க ஒக்கார்றது அப்புறமா சாப்பிடட்டும்” என்றார் ராக்காயி.
ராஜி அவனை நக்கலாகப் பார்க்க, யோகனும் அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் உண்ண தொடங்கினான்.
ஒன்பதரை வரை எப்படியோ சகித்துக்கொண்ட செல்லியம்மா கனகத்தின் அலைபேசிக்கு அழைத்துவிட்டார், செவ்வந்தி கனகம் இருவருக்கும் சேர்த்து ஒரே போன் தான், காலை முதல் அவர்களைப் படுத்திய பாட்டில் அம்மாவின் குரலை எப்பொழுது கேட்போம் என்று தவித்து நின்ற கனகம் “மா…” என்றாள் உற்சாகமாக.
“கனகம் நல்லா இருக்கீங்களா ஒன்னும் பிரச்னையில்லயே” என்றார் “இல்லம்மா நல்லா இருக்கோம்” என்றாள் அவள்.
“அக்கா என்னடி பண்றா அவகிட்ட குடு” என்று மூத்த மகளிடமும் பேசினார்.
“செவ்வந்தி பாத்து நடந்துக்கணும் வேலை கஷ்டமா இருந்தாலும் முகம் காமிக்காம செஞ்சிடுங்க ஆத்தா” என்றார்.
பழனிச்சாமி அருகிலே நின்று மகள்களின் குரலைக் கேட்டிருந்தார் “மா அப்பா எப்படி இருக்கார் மாத்திரை சாப்பிட்டாரா மகேசு என்ன பண்றான்” என்றாள் கனகம்.
“என்னடி… நேத்து தானே இங்க வந்தீங்க அதுக்குள்ள பேச இவ்ளோ விஷயம் என்ன இருக்கு” என்று வந்தார் ராக்காயி “கனகம் சம்மந்திகிட்ட போனை குடு” என்றார் செல்லியம்மா.
“அத்த அம்மா பேசணுமாம்” என்று அவரிடம் அலைபேசியை கொடுத்தாள் கனகம்.
“ஹ்ம்ம் சொல்லுங்க” என்றார் ராக்காயி அதிகாரமாக.
“சம்மந்தி பிள்ளைகளை மறுவீட்டுக்கு அழைச்சுக்க…” என்றவர் முடிக்கும்முன் “இன்னைக்கு வெள்ளி வீட்டு பொம்பளைங்க வெள்ளிக்கிழமை வெளில போக வேண்டாம், நாளைக்கு சனி சரியா வராது ஞாயிறு பக அன்னைக்கு இலை போடாக் கூடாது திங்கக்கிழமை கூப்பிட்டுக்கோங்க” என்றார்.
“சரிங்க” என்றுவிட்டார் செல்லியம்மா.
‘ஆண்டவா திங்கள்கிழமையா அதுவரைக்கும் அம்மா அப்பா மகேசை பாக்கமுடியாதா’ என்று தமக்கைகள் ஒருவரை ஒருவர் வருத்தத்தோடு பார்த்துக்கொண்டனர்.
ரேகா புறப்படுவதற்கு முன் ராஜாவிடம் சொல்லியிருந்தாள் “ஒரு ரெண்டு நாள் அவங்க ரெஸ்ட் எடுக்கணும், சித்திகிட்ட சொன்னா புரிஞ்சுக்க மாட்டாங்க உன் அண்ணன்கிட்ட சொல்றதுக்கு நான் போய்ச் சுவத்துல முட்டிக்கலாம் பாவம் அந்தப் பொண்ணு” என்று சொல்லிச் சென்றிருக்க.
அண்ணனைத் தன்னுடன் மொட்டைமாடியில் நட்சத்திரத்தை எண்ண வைத்துவிட்டான் ராஜகுமாரன் மூன்று நாட்கள்.
error: Content is protected !!