Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தூது செ(சொ) ல்லாயோ மெல்லிசையே

தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 04_02

அடுத்த சில நிமிடங்களில் அவன் அறிவிக்க பலத்த கரகோஷம் எழ, அம்மா அதிர்ந்து  போய் என்னைப் பார்க்க, உடல் முழுவதும் பரவிய ஒருவித நடுக்கத்துடன், மெல்ல மேடையேறினேன் நான்.

அரங்கத்தில் இருந்த அனைவரின் பார்வையும் என் மீதிருக்க, நடங்கும் கரங்களால் எல்லோரையும் கரம் கூப்பி வணங்கினேன் நான். அம்மா ஒரு வித கோபத்துடன் என்னை பார்ப்பது எனக்கு நன்றாகவே புரிந்தது.

வெகு இயல்பாக என்னை நோக்கி கை நீட்டினான் ‘வெல்கம் சந்தியா” என்று மைக்கில் சொல்லியபடியே என்னுடன் கரம் குலுக்கியவன் நடுங்கும் எனது கரத்தை மெல்ல அழுத்திக்கொடுத்தான். அவனது பார்வை எல்லாம் சரியாக நடக்கும் என என்னை நிதானப்படுத்தியது.

“சரி நாம இந்த மலரோட மௌனத்தை ரசிப்போமா?” என்று அவன் மைக்கில் கேட்க ஒலிக்க ஆரம்பித்தது பின்னணி இசை.



Advertisement

முதலில் பாடத் துவங்கியவன் அவன் பல முறை கேட்ட அவனது குரல் இன்று ஏனோ புத்தம் புதிதாய் தோன்றியது எனக்கு. அப்படியே என்னையும் இசைக்குள் இழுத்து சேர்த்துக்கொண்டான் அவன்.

மேடை, கீழே அமர்ந்திருந்த கூட்டம், எங்களை நோக்கி பாய்ந்துக்கொண்டிருந்த கேமரா வெளிச்சம் என அனைத்தையும் மறந்து எங்கேயோ பறந்து கொண்டிருந்தேன் நான். எனக்குள்ளிருந்து அவனுக்காக அருவியாய் பொழிந்து  கொண்டிருந்தது இசை.

“பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ”

Advertisement

வேறு ஏதோ ஒரு உலகத்துக்குள் நாங்கள் நுழைந்து விட்டதைப்போல் பாடிக்கொண்டிருந்தான் அவன். தேனில் வழுக்கி விழும் பலாச்சுளையாய் அவன் இசைக்குள் நான் வழுக்கிக் கொண்டிருந்தேன் நான்.

Advertisement

“மார்போடு கண்கள் மூ…ட…வா?

ஒரு சின்ன சிரிப்புடன் அவன் பாட என்னை மறந்திருந்தேன் நான்.

பாடல் முடிந்து பலத்த கரகோஷங்கள் எழுந்த பிறகுதான் தரை இறங்கினோம் நாங்கள் இருவரும்.

Advertisement

“ஒன்ஸ் மோர்” கீழிருந்து உற்சாக கூக்குரல்கள் நிறுத்தாமல் ஒலிக்க மறுபடியும் பாடினோம் நாங்கள். அதன் பிறகு எப்படி பாடினேன் என நான்  அறியாமலே என்னை மூன்று நான்கு பாடல்களை பாட வைத்திருந்தான். கரகோஷத்தில் அரங்கம் அதிர்ந்துக் கொண்டிருந்தது.

நிகழ்ச்சி முடிந்ததும் நிறைய பாராட்டுக்கள் என்னை சூழ்ந்தன. எல்லாம் முடிந்த பிறகு நான் அம்மாவின் அருகில் வர, அவனும் என்னை பின் தொடர்ந்து வந்தான்.

“என்ன நடந்தாலும் உன்னை அவனோட பாட விட மாட்டேன்” என்று கத்திக்கொண்டிருந்தவர் அவர். அவரிடமிருந்து மிகப்பெரிய சுனாமியை எதிர்ப்பார்த்திருந்த எனக்கு அவரது கனிவான புன்னகை மிகப்பெரிய ஆச்சரியம்.

அவனது இசை அவரையும் கரைத்துப் போட்டிருந்தது நிஜம். பேச்சற்றுப் போய் அவனையே பார்த்திருந்தார் அம்மா. அதற்கு மேல் நாங்கள் இருவரும் பாடிய பாடலுக்கு கிடைத்த வரவேற்பு அம்மாவை இன்னமுமாக அசைத்திருந்தது.

“எப்படி பாடறா உங்க பொண்ணு?” அம்மாவை நேருக்கு நேராக பார்த்துக் கேட்டான் ஷ்யாம்.

சிறு புன்னகையுடன் மெல்ல அசைந்தது அம்மாவின் தலை.

“எவ்வளவு பாராட்டு பார்த்தீங்களா? அவளுக்கு வர வாய்ப்பை தடுத்திடாதீங்க.” சொன்னான் ஷ்யாம்.   மறுக்க முடியவில்லை அவரால்.

அவன் நகரப்போன நேரத்தில் “தம்பி” அம்மா அழைத்தார் அவனை “நீங்க ரொம்ப நல்லா பாடறீங்க”

மெலிதாக ஒரு புன்னகை சேர்ந்தது அவனது இதழ்களில்.

“ரொம்ப சந்தோஷம்” கரம் கூப்பினான் அம்மாவை நோக்கி.

“எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு. நான் ஆயிரம் திட்டினாலும் அவதான் எனக்கு உயிர். என் பொண்ணை பத்திரமா பார்த்துக்கோங்க தம்பி” கெஞ்சலாக மாறியது அவர் குரல்

“உங்க கை நீட்டுங்க” சட்டென சொன்னான் ஷ்யாம்.

அவர் அவனை நோக்கி கை நீட்ட “கண்டிப்பா. உங்க பொண்ணுக்கு தப்பா எதுவும் நடக்காது. அவ கண்ணிலே எப்பவும் தண்ணி வராது. அதுக்கு நான் பொறுப்பு. தைரியமா இருங்க”  அவர் கை மீது கை வைத்திருந்தான் ஷ்யாம்.

தனது இசையை வைத்தே அவரை ஜெயித்திருந்தான் அவன். இசையால் இணைந்தோம் நானும் ஷ்யாமும். இணைந்து இசைத்தோம் நாங்கள் இருவரும்.

எனக்கு எந்த குழப்பம் என்றாலும் அதற்கு அழகாய் ஒரு தீர்வு சொல்லும் ஒரு நல்ல நண்பனாய், இசையின் பல நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து, பாடல்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு எனது ஞானத்தை உயர்த்தி விட்ட ஆசானாய் வலம் வந்தான் அவன்.

அவனுடைய சந்தியா எனும் அழைப்பு மெல்ல மெல்ல பாப்பாவாக மாறியிருந்து.

பணமும் புகழும் என்னைத் தேடி வர ஆரம்பித்திருந்தன. அம்மாவின் அழுத்தங்களும் குறைய ஆரம்பித்திருந்தன. ஷ்யாம் மீதும் அவருக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது போலத்தான் தோன்றியது எனக்கு.

நானும் அம்மாவுக்கு தெரியாமல் ஒரு துரும்பைக் கூட அசைப்பதில்லை என்பதை உறுதியாகக்கிக் கொண்டேன். ஷ்யாம் வீட்டுக்கு செல்வது என்றாலும் கூட அவரிடம் அனுமதி பெற்றுக் கொண்டே செல்வேன்.

இருவரும் சேர்ந்து இசையைமத்த பாடல்கள், பாடிய பாடல்கள் பெரிய அளவில் வெற்றிப் பெற்றன. அதே அளவுக்கு பிரபலம் நாங்கள் இருவரும் சேர்ந்து பாடும் மலரே மௌனமா பாடல்.

அடுத்து வந்த சில நாட்களுக்கு சமூக வலைத்தளங்கள் பலவற்றில் எங்களது இந்தப் பாடல் மறுபடி மறுபடி ஒலித்தது. அதன் பிறகு நாங்கள் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் இந்த பாடலை பாடச்சொல்லி வறுப்புறுத்தி பாட வைப்பார்கள் ரசிகர்கள்.

அப்படியே இந்தப் பாடல் எங்கள் வாழ்கையின் ஒரு அங்கம் போல் ஆனது ஒன்றரை வருடங்கள் இப்படியே இணைந்து வளர்ந்தோம் இசையோடு. இப்படியே அழகழகாய் கடந்துக்கொண்டிருந்தன எங்கள் நாட்கள்.

அன்றைய தினம் என்னால் மறக்க முடியாத தினம்.

நான் இசையமைத்து கிடைத்த சம்பாத்தியத்தில் அம்மாவுக்கென நான்கு தங்க வளையல்கள் வாங்கி வந்த தினம். வாங்கிக்கொண்டு சென்று அதை என் கையாலே அணிவித்தேன். அந்த இரவு முழுவதும் அம்மாவின் மடியில் படுத்துக் கிடந்தேன்.

ஏதேதோ பேசினோம் நாங்கள் இருவரும். விடிய விடிய பேசினோம். கடைசியில் அம்மா சொன்னாள்

“அம்மாக்குனு யாருமில்லைடா தங்கம். அம்மாவை விட்டு எங்கேயும் போயிடாதே தங்கம். கடைசி வரைக்கும் அம்மா கூடவே இருடா தங்கம்”

“ஏம்மா இப்படியெல்லாம் பேசறே. உன்னை விட்டு எங்கேம்மா போகப்போறேன். எப்பவும் உன் கூடவே இருப்பேன். கண்ணீருடன் சொன்னேன் நான்.”

“சந்தியாம்மா எனக்கு ஒரு ஆசை” திடீரென கேட்டாள் அம்மா.

“சொல்லும்மா.”

“உனக்கு பாட்டெல்லாம் நல்லா வருது. நீ முன்னாடி வீணை வாசிக்குறப்போ எல்லாம் உன்னை நான் திட்டி இருக்கேன் ஆனா இப்போ நீ சினிமாலே பாடினது எல்லாம் தினமும் ஆசையா கேட்கிறேன். ஏதாவது ஒரு படத்திலே நீ இந்த கர்நாடக சங்கீதம் மாதிரி வருமே அது மாதிரி பாட்டெலாம் பாடணும். அதுக்கு அவார்டு எல்லாம் கிடைக்கும்” ஏக்கமும் ஆசையுமாக சொன்னாள் அம்மா.

“செய்றேன் மா கண்டிப்பா செய்யறேன்” சொன்னேன் நான்.

பழைய நினைவுகளின் தோரணங்களுடனே நான் அவன் கரம் பிடித்துக்கொண்டு விமானத்துக்குள் நுழைந்தேன். விமான பணிப் பெண்களின் புன்னகைகள் எங்களை அடையாளம் கண்டு கொண்டு இன்னமும் அதிகமாக விரிந்தன.

இருவரும். இருக்கையை அடைவதற்குள் எங்கள் இருவரையும் அடையாளம் கண்டு கொண்டனர் பல பயணிகள். நட்பான புன்னகைகளும், கை குலுக்கல்களும் தொடர்ந்தன.

அப்போது திடீரென “எப்போ சார் ரெண்டு பேருக்கும் கல்யாணம்?” கேட்டவர் எங்களுக்கு பரிச்சியமான ஒரு திரைப்பட இயக்குனர்.

“கல்யாணமா? எங்க ரெண்டு பேருக்கா?” கேட்டவன் கலகலவென  சிரித்தான் “நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்ன்னு உங்களுக்கு எப்போ சொன்னோம்?”

“தனியா சொல்லணுமா என்ன? அதான் மலரே மௌனமா உங்களோட மட்டும்தான் பாடுவேன்னு மேடம் மேடை போட்டு சொன்னாங்களே?” விடவில்லை அவர். மெல்ல மெல்ல மாற்றம் கொண்டது அவன் முகம்.

அவருக்கு இவன் மீது என்ன பொறாமையோ. அவனை கீறிப்பார்ப்பதில் அவருக்கு என்னதான் ஆனந்தமோ?.

மற்ற பயணிகள் சிலர் எங்களையே பார்த்துக் கொண்டிருக்க அடுத்து அவர் உதிர்த்த வார்த்தைகள் அவனுக்குள் கோபத்தையும். வலியையும் ஒரு சேர தோற்றுவித்திருக்க வேண்டும்.

நியாயமாக, அவன் பழைய ஷ்யாமாக இருந்திருந்தால் அவரை கை நீட்டி அடித்திருப்பான். போட்டு புரட்டி எடுத்திருப்பான்.

செய்யவில்லை அவன். என்னை ஒரு முறை திரும்பி பார்த்தவன் எல்லாவற்றையும் தனக்குள்ளே தள்ளிக்கொண்டு இறுகிய முகத்துடன் பதில் பேசாமல் இருக்கையில் வந்து அமர்ந்தான்

அவன் வாழ்கையும் அவன் உணர்வுகளும் எனக்கு மனப்பாடம். இப்போது அவனுக்குள் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை என்னால் அட்சரம் பிசகாமல் சொல்ல முடியும்.

தனது உணர்வுகளை அவன் வெளிப்படையாக காட்டிகொண்டது மிக சில தருணங்களில்தான்.

சீட்டின் முன்னால் சற்றே சாய்ந்துக்கொண்டு முகத்தை கைகளுக்குள் புதைத்துக்கொண்டு மறுபடி மறுபடி பொங்கும் உணர்வுகளை அடக்க அவன் பெரும்பாடு பட்டுக் கொண்டிருப்பது எனக்கு நன்றாக புரிந்தது.

“ஷ்யாம்” மெதுவாக அழைத்தேன் நான். பதிலில்லை அவனிடத்தில்.

“ஷ்யாம் எனக்கு ஒரு டவுட்” குரலால் உலுக்கினேன் அவனை.

“ஊஃப்…. நிம்மதியா விட மாட்டியா என்னை?  என்ன வேணும் இப்போ?”

“இல்ல…கண்ணாமூச்சி ஏனடா என்ன ராகம்?” கேட்டேன் மெதுவாக. நான் எதை நோக்கி போகிறேன் என்பது அவனுக்கு புரிந்திருக்க வேண்டும். என் முகத்தை ஆழமாக பார்த்தவன்

“சஹானா” என்றான் வேண்டுமென்றே.

“அப்படியா என்ன?” யோசிக்கும் பாவனையில் கேட்டுவிட்டு “கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா?” மெலிதான குரலில் சில வரிகள் பாடினேன் நான். தளர்ந்தது அவனது இறுக்கம். சீட்டில் சாய்ந்து கொண்டான் ஆயாசமாக.

“இப்போ சொல்லுங்க என்ன ராகம்?”

‘சஹானாதான்” கண்களை மூடிக்கொண்டான் அவன்.

‘உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா’ பாடினேன் நான். “இதுக்கு அப்புறம் ஒரு ஆலாபனை வரும் தெரியுமா? அதுதான் சஹானா”.

என் ஆலாபனையில் அவன் உடலில் ஒரு சின்ன சிலிர்ப்பு. மூடிக்கிடந்த அவன் கண்களின் ஓரம் கண்ணீர் துளி சேர்ந்ததோ என்று கூட தோன்றியது எனக்கு. அவன் கண்களை திறக்கவில்லை.

“இதுதான் சஹானா” இருக்கையில்  எனது கைக்கு அருகில் இருந்த அவனது கரத்தை ஆதரவாக அழுத்திக்கொடுத்தேன். சில வரிகள் தொடர்ந்து பாடினேன். சில நொடிகள் அப்படியே அமர்ந்திருந்தவன் பின்னர் தனது கரத்தை மெல்ல விலக்கிக்கொண்டான்.

விமானம் வானத்தில் ஏறி பறக்க ஆரம்பித்திருந்தது. விமானத்தில் இருந்த விளக்குகள் அணைக்கப்பட வெளியே வானத்தில் இருந்த வெண்ணிலவு என்னை பார்த்து சிரித்தது. நான் சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டேன். உறக்கம் அருகில் வரவில்லை.

அவன் மனம் ஆறிப்போய்விட்டிருக்க வேண்டுமோ? மெல்ல மெல்ல  உறக்கத்துக்குள் சரிந்திருந்தான் அவன். சில நிமிடங்கள் கழித்து அவனும் அறியாமல் இருக்கையின் கைப்படியிலிருந்து என் பக்கமாக சரிந்த அவனது கரம் எனது வயிற்றின் மீது  மெல்ல உரசியது.

சிலிர்த்து, மகிழ்ந்து, மலர்ந்து நிமிர்ந்தேன் நான்.

அந்த திடீர் ஸ்பரிசத்தை நான் எதிர்ப்பார்க்கவேயில்லை. அப்படி ஒரு ஆனந்த பிரவாகம் எனக்குள்ளே. இத்தனை நாள் நான் ஏங்கிக்கிடந்த ஏதோ ஒன்று எனக்கு கிடைத்ததை போன்ற சந்தோஷம் எனக்கு.

அவசரமாக அவன் முகம் பார்த்தேன். அவனது முகத்தில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா எனத் தேடினேன். ஏதுமறியா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் அவன்.

சற்று முன் அந்த இயக்குனர் எப்படிப்பட்ட ஒரு வார்த்தையை அவன் மீது பிரயோகித்தார். “என்ன இருந்தாலும் நீங்க கிரேட்தான் சார். ஒரு பொண்ணை கொலை பண்ணிட்டு எப்படி இப்படி  தைரியமா வெளியே வரீங்களோ”

                           தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!