Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதல் ரட்சகா

காதல் ரட்சகா 3

விக்னேஷுக்கு அவள் பதில் சொல்லும் முன்பே அங்கே வந்துவிட்டார் சசிதரன்.

மாயா செய்த காரியத்தை பார்த்து அவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அருகில் வந்து அவளின் கையை விளக்கி விட்டவர் அவளது கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விட்டார்.



Advertisement

“என்னதான் பண்ற நீ? இருக்கிற பிரச்சினை போதாதுன்னு மேலும் மேலும் பிரச்சினைகளை உண்டாக்கணுமா?” என்று கேட்டார்.

கனகவதி இருமியபடி கழுத்தை பற்றினாள். மாயாவி கைவிரல் நகங்கள் குத்தியதில் ஆங்காங்கு ரத்தக்காயமே உண்டாகி இருந்தன. அதையெல்லாம் தடவினாள்.

Advertisement

Advertisement

தன்னை அறைந்த அப்பாவை கோபத்தோடு முறைத்த மாயா “உங்க பெரிய பொண்ணை மனரீதியா டார்ச்சர் பண்ணி தற்கொலைக்கு தூண்டி இருப்பது அவங்க. ஆனா நீங்க என்கிட்ட உங்க வீரத்தை காட்டுறீங்க. இந்த குடும்பம் சரியான கேடுகெட்ட குடும்பமாக இருக்கு. அவ்வளவு சொத்துக்களை வச்சிக்கிட்டு நம்மகிட்ட வரதட்சணைக்கு பில்லு போடுறாங்க. இந்த குடும்பம் வேணாம்ன்னு நான் அப்பவே சொன்னேன். ஆனா மாப்ள ரொம்ப தங்கமான பையன், குடும்பம் பாரம்பரியமிக்க குடும்பம்ன்னு சொல்லி அக்காவை கல்யாணம் பண்ணி வச்சீங்க. ஆனா நம்மகிட்ட காசு இல்லன்னதும் அவங்களோட புத்தியை காட்டிட்டாங்க. இப்பவும் உங்களுக்கு நிலைமை புரியல..” என்று தனது வெறுப்புகளை எல்லாம் வார்த்தைகளாக கொட்டினாள்.

சசிதரன் இந்த வாயாடிக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல் குழம்பினார். இவள் பேசுவது எல்லாம் நாளைக்கு ரதிக்குதான் பிரச்சனையாக வந்து முடியும்.

Advertisement

“இப்பவே நான் இவங்க மேல போலீஸ் கேஸ் கொடுக்கப் போறேன். இவங்க மொத்த குடும்பத்தையும் ஜெயில்ல தள்ள போறேன்..” என்று கோபத்தோடு சொன்னாள் மாயா.

அவள் சொன்னதில் கனகவதிக்கும் கோபம் வந்தது.

“போலீஸ்க்கு போவியா? போடி பார்க்கலாம். பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல. வாய் மட்டும் வானம் வரைக்கும் கிழியுது. நீ போய் கம்ப்ளைன்ட் கொடுத்தா போலீஸ்காரங்க உன்னைதான் செல்லுல தள்ளுவாங்க..” என்றாள் கனகவதி.

விக்னேஷ் அம்மாவையும் மாயாவையும் மாறி மாறி பார்த்தான். அம்மாவின் குணத்திற்கு மாயாதான் சரி. மாயாவின் குணத்திற்கும் அம்மாதான் சரி. ஏன் இவர்கள் இருவரையும் ஒரே முடிச்சில் சிக்க வைக்கக் கூடாது என்று இவன் யோசிக்க, “பார்க்கலாம்டி அதையும். நீதான்டி ஜெயிலுக்கு போவ..” என்று மாயா கத்தி பேசி இவனை யோசனையிலிருந்து வெளியே கொண்டு வந்தாள்.

“என்னையே டீ போடுறியா?” என்ற கனகவதி தன் காலில் இருந்த செருப்பை கழட்ட, “உங்கிட்ட மட்டும்தான் செருப்பு இருக்கா?” எனக்கேட்டு மாயாவும் தனது செருப்பை கையில் எடுத்தாள்.

ஆனால் மாயா அவள் இஷ்டப்படி செய்ய சசிதரன் விடவேண்டுமே! மகளுக்கு மீண்டும் ஒரு அறையை கொடுத்தார். முன்பு தந்த அறையை விட இந்த அறை நான்கு மடங்கு பலமான அறை. ஐ விரல்களும் கன்னத்தில் அச்சு போல் பதிந்து விட்டன.

இதற்கு மேலும் விட்டால் இங்கேயே வெட்டிக்கொண்டு செத்து விடுவார்கள் என்று பயந்து விக்னேஷ் அவசரமாய் மாயாவை நெருங்கி அவளின் கையைப் பிடித்தான்.

“என்னோடு வா..” என்று அவளை இழுத்துக் கொண்டு போனான்.

சசிதரன் கனகவதியிடம் மன்னிப்பு கேட்கும் வேலையை ஆரம்பித்தார்.

“சின்ன பொண்ணு கோபத்துல தெரியாம பண்ணிட்டா..” என்று அவர் இறங்கிய குரலில் பேச, “அவ சின்ன பொண்ணா? பிச்சைக்கார குடும்பத்துக்கு ரோஷ மயிர் எதுக்கு?” என்று கேட்டாள் கனகவதி.

“இன்னும் ரெண்டு நாள்ல மொத்த பணத்தையும் கொண்டு வந்து கொடுக்கறீங்க. இல்லன்னா உங்க பொண்ணு வாழ வெட்டியா உங்க வீட்டுக்கு வருவா..” என்றாள்.

பிரச்சனை கை மீறிப் போய்விட்டதே என்று சசிதரன் உள்ளுக்குள் வருத்தப்பட, மாயாவை தனியே இழுத்து வந்திருந்த விக்னேஷ் “நீ ஏன் எரியுற நெருப்புல எண்ணெய் ஊத்திக்கிட்டு இருக்க? எவ்ளோ பெரிய பிரச்சனை நடந்துட்டு இருக்குன்னு உனக்கும் தெரியுதுதானே?” என கேட்டான்.

கன்னத்தில் அறை விழுந்ததில் அவளுக்கு கண்களும் கலங்கி போயிருந்தன.

“உன் அக்கா மேல உனக்கு கொஞ்சமாவது அக்கறை இருந்திருந்தா அந்த வேலையை விட்டு நீ நின்னுருக்கணும். அட்லீஸ்ட் நான் வந்து உன்கிட்ட இதை பத்தி பேசும்போது உன் அக்காவுக்காக கொஞ்சம் பரிதாபமாவது பட்டு இருக்கணும்.. அதை விட்டுட்டு காரியம் கை மீறி போன பிறகு வெளியே மட்டும் எதுக்கு சீன் போடணும்?” எனக் கேட்டான்.

மாயாவுக்கு இப்போது கண்களில் புது கண்ணீர் துளிர்த்தது. அதன் காரணம் தனது ரோஷமும் பிடிவாதமும் தோற்றுப் போய்க் கொண்டிருக்கிறது என்ற வலியால் வந்த கண்ணீர்.

“அப்படின்னா உங்க அம்மா செய்வது எல்லாமே கரெக்டா? அந்த கைலாஷ் பண்ணது எல்லாமே கரெக்டா? என் அப்பாவுக்கு சுமைகளை மட்டுமே கொடுத்துட்டு இருக்கும் என் அக்கா செய்வது கரெக்ட்டா? உங்க அம்மாவை கேள்வி கேட்க முடியாம ஒரு மூணாவது மனுஷி எங்கிட்ட வந்து உங்களோட நீதி நேர்மையை காட்டுறீங்க. நீங்க செய்வது கரெக்ட்டா?” என்று விரல் நீட்டி கேட்டாள்.

அவளின் கண்ணீரை இவனால் பார்க்க முடியவில்லை.

“தப்புதான் மாயா..” என்றவனுக்கு அந்த மாயா என்ற வார்த்தை மாயாஜாலம் போல் பிடித்து போனது.

“சுத்தி இருக்குற எல்லார் மேலயும்தான் தப்பு. ஆனா நீ நியாயமா நடந்துப்பதால பிரச்சனை தீராது. சில சமயங்கள்ல நாம நம்மோட ரோஷத்தையும் பிடிவாதத்தையும் நம்ம குடும்பத்துக்காக விட்டுதான் ஆகணும்..” என்றான் அவளுக்கு புரிய வைக்கும் பாணியில்.

மாயா இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு அங்கிருந்த மருத்துவமனை இரும்பு பெஞ்ச் ஒன்றில் அமர்ந்தாள்.

“எல்லாரும் என் மேல மட்டும்தான் பழி போடறாங்க. பொண்டாட்டிக்காக என் மாமன் துணை நிற்கல. அவளுக்காக அவர் ஒரு வார்த்தை பேசல. எங்ககிட்ட பணம் இருந்தவரை என் அக்காவை தலை மேல தூக்கி வச்சு ஆடிய அவளோட மாமியார் இப்ப கால்ல போட்டு மிதிக்கிறாங்க. என் அக்கா விஷம் குடிச்சிட்டா. ஆனா என்னோட அப்பா விஷம் கூட குடிக்க முடியாம குடும்ப சூழ்நிலை காரணமா சாகவும் முடியாம தவிக்கிறார். நீ யாருன்னே தெரியாது. நேத்து வரை ஒரு வார்த்தை பேசியதில்லை. இன்னைக்கு எனக்கு மலை மலையா அட்வைஸ் பண்ற..” என்று அழுகை குரலில் புலம்பினாள்.

இவனுக்கு பரிதாபமாக இருந்தது. அவள் அழுவதை பார்க்க முடியவில்லை.

யோசிக்காமல் அவள் முன்னால் தரையோடு மண்டியிட்டான். அந்த பக்கமாக சென்று கொண்டிருந்த சிலர் இவர்களை திரும்பி பார்த்துவிட்டு போனார்கள்.

மாயாவின் முகத்தில் இருந்த கையை விலக்கினான் விக்னேஷ்.

“என் அம்மாகிட்ட நானும் சண்டை போட்டுட்டு இருக்கேன் மாயா. என் அப்பா பிசினஸ் டூர் போயிருக்கார். அவர் வந்தா என் அம்மாவுக்கு கொஞ்சம் புரிய வைப்பார். என் அம்மா அவங்களை விட வயசுல குறைவா இருக்கும் யாரோட பேச்சையும் கேட்கவே மாட்டாங்க. நீ உன் அக்கா மேல நிறைய பாசம் வச்சிருக்க. அதைவிட அதிகமான காதலை என் அண்ணன் அவங்க மேல வச்சிருக்கான்.‌ பேச தெரியல என்பதற்காக அவனோட காதல் மதிப்பிழந்ததா ஆகிடாது. எங்களுக்கு கொஞ்சம் டைம் வேணும். நாங்களும் உன் ‌அக்காவுக்கு துணையாதான் இருக்கோம்.. ப்ளீஸ் அழாத. நீ உன் அப்பாவை கூட்டி போய் சமாதானம் சொல்லு. இந்த பழிவாங்கும் விஷயத்தை விட்டுடு. இது உனக்காக இல்ல. என் அண்ணிக்காக. நான் அந்த கைலாசை பார்த்துக்கிறேன். ப்ளீஸ் என்னை நம்பு. நீ முதல்ல உன் டிப்ரஷனை விட்டு வெளியே வா..” என்று கெஞ்சாத குறையாகச் சொன்னான்.

இவளுக்கு அவன் சொல்வதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை.‌

“ப்ளீஸ்..” கண்களால் கெஞ்சினான்.

தனது முகத்தை துடைத்துக் கொண்டவள் “என் அக்கா ஏன் இப்படி பண்ணினா?” எனக் கேட்டாள்.

கல்லுக்குள் ஈரத்தை பார்க்க நன்றாகதான் இருந்தது. தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்.

மாயா அதை பிரித்துப் பார்த்தாள். விவாகரத்து பத்திரம் அது.

“அண்ணியோட ரைட் ஹேண்ட்ல இது இருந்தது. அம்மாதான் இதுக்கு ஏற்பாடு பண்ணி இருக்காங்க.‌ அண்ணி பயந்து கையை அறுத்துக்கிட்டாங்க..” என்றான்.

மாயா அந்த பேப்பரை கசக்கினாள். அவளுக்கு இந்த உலகத்தையே பிடிக்கவில்லை.

“என் அண்ணனை திட்டாத. உன் அக்காவையும் திட்டாத. ஊமையா இருக்கணும்ன்னு ஆசைப்பட்டு அவங்க பிறக்கல..” என்று சொல்லிவிட்டு எழுந்து அங்கிருந்து நடந்தான்.

மாயா ரெஸ்ட் ரூமுக்கு சென்று முகத்தை கழுவிக்கொண்டு வந்தாள்‌.

மாயா கழுத்தை பற்றி விடவும் கோபம் கொண்ட கனகவதி மருத்துவமனையை விட்டு கிளம்பி போய் விட்டாள்.

மாயா தனது சகோதரிக்கு சிகிச்சை நடக்கும் அறைக்கு வெளியில் அமர்ந்தாள்.

அவளின் அப்பா சம்மந்தியம்மா கேட்ட பணத்தை தயார் செய்வதற்காக கிளம்பிப் போய் விட்டார். பணம் இருந்தால் மட்டும்தான் நம் மகளை வாழ வைக்கவே முடியும் என்பது அவருக்கு தெளிவாய் தெரிந்து விட்டது.

மாயா தன் பக்கத்தில் இருந்த மாமனை பார்த்தாள். அவன் இந்த உலகத்திலேயே இல்லை. அவனின் சிந்தனையை இவள் கலைக்க விரும்பவில்லை.

இவளும் அக்கா எப்போது குணமாகுவாள் என்று யோசித்துக் கொண்டிருக்க அவளின் முன்னால் தேநீர் கப் நீட்டப்பட்டது.

நிமிர்ந்து பார்த்தாள்.

விக்னேஷ் நின்று கொண்டு இருந்தான். அண்ணனுக்கும் சேர்த்து தேநீரை கொண்டு வந்திருந்தான்.

அவனை முகத்தை பார்த்தபடி வாங்கிக் கொண்டாள்.

“அண்ணா டீ..” என்று விக்னேஷ் குரல் கொடுத்ததும் திரும்பிப் பார்த்த தருண் வேண்டாம் என்று தலையாட்டினான்.

“நீ டீ குடிக்காம இருந்தா அண்ணி சீக்கிரம் குணமாகிடுவாங்களா?” என்று நக்கலாக கேட்டான் இவன்.

“என்னாலதான் அவ இப்படி பண்ணிட்டா..” என்று முனகியவன் “எதுக்குமே நான் லாயக்கில்லை. ஆபீஸ்ல வேலை செய்யவோ பொண்டாட்டியை லவ் பண்ணவோ எனக்கு எந்த தகுதியும் இல்ல..” என்று உடைந்த குரலோடு சொன்னான்.

“உங்க அம்மா செய்யும் தப்புக்கு நீங்க ஏன் பீல் பண்றீங்க மாமா?” கோபமாக கேட்டாள் மாயா.

அண்ணனின் மறுபக்கம் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன் விக்னேஷ்.

“அப்பா வந்ததும் நான் பேசுறேன். நீயும் அண்ணியோ தனி குடித்தனம் போயிடுங்க..” என்றான்.

தருணுக்கு அதற்கும் மனம் வரவில்லை.

ரதிக்கு சிகிச்சை அளித்துவிட்டு மருத்துவர் கிளம்பி விட்டார்.

இரவு முழுக்க இவர்கள் மூன்று பேரும் இங்கேயே சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

தருண் அவ்வப்போது மனைவி இருக்கும் அறையை எட்டிப் பார்த்தான். அவள் கண் விழிக்க வேண்டும் என்று ஏங்கினான். அவளுக்காக தன் உயிரையே கொடுப்பான் அவன். ஆனால் என்ன அதை வாய் திறந்து கவிதைகளாக சொல்ல மட்டும்தான் தெரியாது.

சசிதரன் அவர் இதுவரையிலும் கடன் வாங்காத நண்பர்களிடம் கடன் கேட்க சென்றார். ஆனால் போன இடத்தில் எல்லோரும் கையை விரித்தார்கள். பணம் இல்லை என்றார்கள்.

நடு சாலையில் கார் ஓடியது. அவரின் மனமோ தனது இறந்த காலத்தை நினைத்து பார்த்தது.

அழகான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்.‌ பெரிய மகளுக்கு ஊரை கூட்டி திருமணம் செய்தார். அன்று பள்ளத்தில் விழுந்தவர் இன்று வரையிலும் எழ முடியவில்லை.

தனது நிலை இந்த அளவிற்கு மோசமாக மாறும் என்று அவர் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

செல்ல மகளை இனியும் கண் கலங்க விடக்கூடாது என்று முடிவெடுத்தார்.

தனது கண்ணீரை துடைத்துக் கொண்டார். இதுவரையிலும் அவர் போட்டு வைத்திருக்கும் இன்சூரன்ஸை பற்றி நினைத்தார். ஓட்டிக் கொண்டிருந்த காரை எதிரில் இருந்த ஃபிளை ஓவரின் ‌தூண் ஒன்றின் மீது மோத விட்டார்.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!