Skip to content
Post Views: 2,338

அகம் 17
விக்னவியை சேர்த்திருந்த மருத்துவமனை நகரத்தை தாண்டி இருந்ததால் இவர்கள் அங்கு சென்றடையவே இரவு மணி பத்து ஆகிவிட்டது. இப்போதோ விடிந்து மணி 5 என்று காட்டியது. அன்று காலை பொழுது கை நரம்பை அறுத்து அதில் அதிக இரத்தம் போனபின்பு தான் விக்னவியை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். அப்போதைக்கு இரத்த போக்கை நிறுத்தி உயிருக்கு எந்த ஆபத்துமில்லாமல் உடனே சிகிச்சை செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆனால் இன்னும் அவளுக்கு மயக்கம் தெளியவில்லை. நயந்தினி விக்னவியின் அருகிலேயே அமர்ந்திருக்க, நிகர்வேலன் வெளியில் வந்து அமர்ந்து கொண்டான்.
அங்கு சென்றதுமே விக்கி என்ற நபர் ஒரு பெண் என்று தெரிந்து நிகர்வேலன் மனம் ஆசுவாசமடைந்தாலும், அவர்கள் திருமண செய்தி கேட்டு விக்னவி தற்கொலை முயற்சி செய்ததை நிகரால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதை எப்படி எடுத்துக் கொள்வது என்றும் அவனுக்கு தெரியவில்லை. நயந்தினி சொன்னது மட்டுமில்லாமல், நயந்தினி அலைபேசியில் இருந்த குறுஞ்செய்தியை அவனும் பார்த்தான். தோழிக்கு திருமணம் என்ற செய்தி அறிந்து அவள் ஏன் தற்கொலைக்கு முயற்சிக்க வேண்டும்? ஒன்றும் புரிந்து கொள்ள முடியாத ஒருமாதிரி குழப்பமான மனநிலை தான் அவனுக்கு,
Advertisement
காலை ஆகியும் விக்னவி கண் விழிக்கவில்லையே என்ற கவலையில் நயந்தினி அழுதபடி இருந்தாள். அவளை தேற்றக் கூட தோன்றாமல் அவனும் அமைதியாக விக்னவி கண் விழிக்கட்டுமென்று காத்திருந்தான். அப்போது விக்னவியை மருத்துவமனையில் அனுமதித்த பெண்மணி அங்கு வந்தார்.
நயந்தினியை பார்த்ததும், “ஒரு அவசரத்துக்கு போன் செய்தா உன் போன் என்ன ஸ்விட்ச் ஆஃப்னு வருது, சரி விக்கியோட சித்திக்கு போட்டா அவங்க நம்பரை மாத்திட்டாங்க போல, நம்பர் மாத்தினா அதை தர வேண்டாமா? இப்படி ஒரு விஷயம் ஆகியதும் உனக்கும் சொல்ல முடியல, அவளோட சித்திக்கும் சொல்ல முடியல, மத்த பிள்ளைங்களுக்கு போன் செய்தா விக்கியும் நயனும் மட்டும் தான் ரொம்ப நெருக்கம். எங்களுக்கு விக்கி அத்தனை நெருக்கம் கிடையாதுன்னு சொல்லுதுங்க,
எப்போதோ காலேஜ் முடிஞ்சுது, இந்த பொண்ணு பெட்டிப் படுக்கையை கட்டிக்கிட்டு கிளம்பாம வெளிநாட்டுக்கு படிக்கப் போறேன். அதுவரை இங்க தங்கிக்கிறேன்னு கெஞ்சி கேட்டதால தான், நானும் கொஞ்ச நாளுக்குன்னு ஒத்துக்கிட்டேன். இப்போ இப்படி ஒரு காரியத்தை செய்து வச்சிருக்கு, போலீஸ் வேற தோண்டி துருவி என்னென்னமோ கேட்கிறாங்க, ஹாஸ்டல் மேலேயும் என் மேலேயும் சந்தேகப்பட்றாங்க, பாவப்பட்டு தங்க வச்சதுக்கு இதெல்லாம் எனக்கு தேவையா? காலேஜ் நிர்வாகத்துக்கு தெரிஞ்சுது என்னை வேலையை விட்டே நீக்கிடுவாங்க, இந்த சம்பளம் வச்சு தான் என் குடும்பமே ஓடுது.” என்று அந்த பெண்மணியின் புலம்பலே அவர் நயந்தினியும் விக்னவியும் படித்த கல்லூரி விடுதியின் மேற்பார்வையாளர் என்பது நிகர்வேலனுக்கு புரிந்தது.
Advertisement
“ஆமாம் இந்த பொண்ணு ஏன் இப்படி செய்துக்கிட்டா? உனக்கு ஏதாவது தெரியுமா? வீட்டு ஆளுங்க மேல கோபப்பட்டுக்கிட்டு ஊருக்குப் போகாம இங்கேயே தங்கி இருந்தா, அவ குடும்ப ஆளுங்க கூட பிரச்சனை போலன்னு போலீஸ்ல சொல்லியிருக்கேன். ஆனாலும் அவங்க நம்பன மாதிரி தெரியல, கண் விழிச்சா ஒழுங்கா உண்மையான காரணத்தை சொல்ல சொல்லு,” என்று தொடர்ந்து பேசிய பெண்மணி.
Advertisement
“ஆமாம், உனக்கு எப்படி விவரம் தெரிஞ்சுது?” என்று கேட்க,
“மொபைல் ஆன் செய்ததும் விக்கியிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது. அதைப்பார்த்து தான் உடனே ஹாஸ்டலுக்கு போன் செய்தேன். அங்க தான் எனக்கு தகவல் சொன்னாங்க, உடனே கிளம்பி வந்தேன்.” என்று நயந்தினி பதில் கூறினாள்.
“காலையில் அட்மிட் செய்ததில் இருந்ததில் நேத்து நைட் வரைக்கும் இங்க தான் இருந்தேன். மறுநாள் தான் கண் விழிப்பாங்கன்னு நர்ஸ் சொன்னதால கிளம்பிப் போனேன். நான் போனதும் நீ வந்திருப்ப, இன்னும் படிச்சிட்டு இருக்க பிள்ளைங்க கூட லீவ்க்கு அவங்கவங்க ஊருக்கு கிளம்பி போயிட்டாங்க, நானும் இந்த சமயம் தான் என் குடும்பத்தோட போய் இருக்க முடியும், இந்த பொண்ணால எனக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா? சரியானதும் பெட்டிப் படுக்கையை எடுத்துக்கிட்டு ஊருக்கு கிளம்ப சொல்லு,” என்றவர்,
Advertisement
“ஆமாம் ராத்திரி நேரம் நீ தனியாகவா வந்த?” என்று அவளிடம் கேட்க,
“இல்லை, இவங்களோட தான் வந்தேன். இவங்க என் ஹஸ்பண்ட்.” என்று இவர்களை பார்த்தப்படி சற்று தள்ளி நின்றிருந்த நிகர்வேலனை காட்டி நயந்தினி சொல்லவும்,
அவள் கழுத்தில் பொன் தாலி சங்கிலி இருந்ததால் அவளுக்கு திருமணம் ஆகியிருந்ததை பற்றி அவரை அறியாததால், “உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா? எப்போ?” என்று அவர் நம்ப முடியாமல் கேட்டார்.
“3 நாள் முன்ன தான், அது திடீர்னு நடந்த கல்யாணம். அதைப்பத்தி விக்கியிடம் கூட சொல்லல, விக்கிக்கா அந்த விஷயம் தெரிஞ்சு தான் இந்த முடிவுக்கு வந்திருக்கா,” என்று நயந்தினி அவரிடம் கூற,
அவளது பேச்சில் இன்னும் அதிர்ச்சியானவருக்கோ, அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டுமென்று தெரியாமல், “இந்த காலத்து பிள்ளைங்களை என்ன சொல்றது? நம்பி படிக்க அனுப்பினா என்னென்ன கூத்தெல்லாமோ நடக்குது?” என்று புலம்பியவர், நிகர்வேலனை பாவமாக ஒரு பார்வையும் பார்த்து வைத்தார். அந்த பார்வையின் அர்த்தம் நிகர்வேலனுக்கும் புரிந்தது.
பின், “நான் ஹாஸ்டலுக்கு கிளம்பறேன். ஏதாவதுன்னா கூப்பிடு, அவ கண் விழிச்சதும், அவளோட சித்தி நம்பர் வாங்கி அவங்களுக்கு தகவல் சொல்லு,” என்று அவளிடம் விடைப்பெற்றுக் கொண்டு அந்த பெண்மணி கிளம்பிவிட்டார்.
அவர் சென்றதும், “அவங்க உன் ஹாஸ்டல் வார்டனா? விக்கி உன்னோட ரூம்மெட்டா?” என்று நிகர்வேலன் அவளிடம் விசாரிக்க,
“ஆமாம், ரூம்மெட் மட்டுமில்ல என்னோட பெஸ்ட்டி, கிளாஸ்மெட் எல்லாமே,” என்று நயந்தினி பதில் கூறினாள்.
“உண்மையாகவே நம்ம கல்யாண விஷயம் கேள்விப்பட்டு தான் விக்கி சூசைட்க்கு முயற்சி செய்தாளா?” என்று அவன் இன்னுமே நம்ப முடியாமல் கேட்க,
“ஆமாம், அவளிடம் இந்த விஷயத்தை எப்படி சொல்றதுன்னு தெரியாம தான் நான் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்து வச்சிருந்தேன். ஆனா நம்ம கல்யாணா வீடியோ வைரலாகியிருக்குப் போல, அது பார்த்து தான் விக்கி இப்படி செய்துட்டா?” என்று சொல்லி நயந்தினி அழுதாள்.
“எல்லாம் சரி, ஆனா இந்த விஷயத்துக்கு எதுக்கு இந்த பொண்ணு சூசைட் வரைக்கும் போகணும்?” என்று அவன் கேட்க,
“இந்த விஷயம் தெரிஞ்சு விக்கி எப்படி ரியாக்ட் செய்வாளோன்னு கொஞ்சம் பயம் இருந்தது தான், ஆனா இந்த அளவுக்கு விக்கி போவான்னு நானும் நினைக்கல, நானும் விக்கியும் சேர்ந்து தான் எம்.எஸ் படிக்கணும்னு முடிவு எடுத்திருந்தோம், ஆனா அம்மாக்கு ஏனோ விக்கியை பிடிக்கவே இல்லை. அவளோட ஃப்ரண்ட்ஷிப்பை கட் பண்ணுன்னு அம்மா அடிக்கடி சொல்லிட்டு இருப்பாங்க,
அவளோட நான் படிக்கப் போறதா சொன்னா அதுக்கு தடை சொல்வாங்கன்னு தான் நான் அதைப்பத்தி அவங்களிடம் சொல்லாம இருந்தேன். ஆனா அன்னைக்கு ரோஹனிடம் அதைப்பத்தி பேசறதை கேட்டு தான் அம்மா இந்த கல்யாண முடிவை எடுத்தாங்க,” என்று அவனிடம் உண்மையை கூறிவிட்டாள்.
அதைக்கேட்டவனோ அதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அழுத்தமாக தலையை கோதிக் கொண்டான். இவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே, விக்னவி கண் விழித்துவிட்ட விஷயத்தை நர்ஸ் வந்து கூறவும், நயந்தினி உடனே அவசரமாக செல்ல, நிகர்வேலன் அவள் பின்னால் நிதானமாக சென்றான்.
நயந்தினி உள்ளே போகும்போது விக்னவி எழுந்து அமர்ந்திருந்தாள். மொட்டை அடித்து கொஞ்சம் அடர்த்தியாக முடி வளர்ந்திருந்தாள் எப்படி இருக்கும்? அப்படித்தான் அவள் முடியை வெட்டியிருந்தாள். எங்கேயோ வெறித்துப் பார்த்தப்படி அவள் அமர்ந்திருக்க, நயந்தினியோ, “விக்கி,” என்று அழைத்தப்படி அவள் அருகே போய் அவளை தொட,
விக்னவியோ அவளது கையை தட்டிவிட்டவள், “யார் நீ? எதுக்கு வந்த? என்னையெல்லாம் நீ ஞாபகத்தில் வச்சிருக்கியா?” என்று இவளிடம் பார்வையாய் திருப்பாமல் கேட்கவும்,
“ஏன் விக்கி இப்படியெல்லாம் பேசற, நான் உன்னை மறப்பேனா? நடந்த விஷயத்தை எப்படி உன்னிடம் சொல்றதுன்னு தான் யோசிச்சிட்டு இருந்தேன். அதான் உன்னை அவாய்ட் செய்தேன். அதை நீ தப்பா புரிஞ்கிக்கிட்ட,” என்று நயந்தினி சமாதானம் செய்தாள்.
ஆனால் விக்னவி எந்த சமாதானத்தையும் ஏற்க தயாராக இல்லை. “நடந்த விஷயத்தை என்னிடம் சொல்லணும்னு என்ன இருக்கு? நான் என்ன அவ்வளவு முக்கியமா உனக்கு?” என்று கேட்க,
அவள் பாராமுகம் நயந்தினியால் ஏற்றுக் கொள்ள முடியாமல், “நான் என்னவோ வேணும்னே செய்த மாதிரி பேசிறியே விக்கி, எனக்கு கல்யாணம் நடக்கப் போகுதுன்னு முன்கூட்டியே தெரிஞ்சிக்கிட்டு போன மாதிரி கோபப்பட்ற, அங்க என்ன நடந்ததுன்னு விளக்கமா கேட்க கூட உனக்கு தோனலையா?” என்று கேட்டாள்.
“நடந்த அன்னைக்கே இப்படி நடந்துச்சுன்னு சொன்னா, ஏன் எதனாலன்னு விளக்கம் கேட்கலாம், ஆனா நீ சொல்லாத போதே அந்த அளவுக்கு என்னை முக்கியமா நினைக்கலன்னு தானே அர்த்தம். நான் போக வேண்டாம்னு சொல்லியும் அந்த கல்யாணத்துக்கு நீ போனது ஏன்னு அப்போ தெரியல, ஆனா அந்த வீடியோ பார்த்தேன். அதில் உனக்கு சம்மதமான்னு கேட்டப்போ சம்மதம்னு சொன்னியே, அப்பவே உனக்கு அங்க போக விருப்பம் தான், அங்க போகவே பிடிக்கல என்கிற மாதிரி என்னிடம் நடிச்சிருக்கன்னு எனக்கு இப்போ நல்லாவே புரியுது.” என்றாள் விக்னவி.
“நடிச்சேனா, எப்படி அப்படி சொல்ல முடியுது உன்னால, அப்படியே விரும்பி நான் போயிருந்தாலும், நான் போனது என்னோட கல்யாணத்துக்கு இல்லை. ராகவி அக்கா கல்யாணத்துக்கு, அங்க எனக்கு கல்யாணம் நடக்கும்னு நான் கனவா கண்டேன். அந்த சம்மதம் சொன்னது கூட அம்மா கட்டாயப்படுத்தினதுக்காக தான்,” என்று நயந்தினி விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க, அறை வாசலில் நின்று நிகர்வேலன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
இருவரும் நெருங்கிய தோழிகள் என்றால், நடந்த விஷயத்தில் தோழியின் விளக்கத்தைக் கேட்க கூட தயாராகமல் கோபப்படும் விக்னவியை ஏனோ அவனுக்கு பிடிக்கவில்லை. இருவரும் படிப்பு சம்பந்தமாக பேசி வைத்தது நடக்கவில்லை தான், அதற்காக இப்படி நடந்து கொள்ள வேண்டுமா? கோபப்படும் அளவிற்கு இதில் என்ன இருக்கிறது. கட்டாயப்படுத்தி தன் தோழிக்கு பிடிக்காத திருமணத்தை செய்து வைத்திருந்தால், இந்த நேரம் தன் தோழிக்கு இவள் தானே ஆதரவாக இருக்க வேண்டும், அதைவிடுத்து கோபமாக பேசிக் கொண்டிருப்பதும், நயந்தினி அவளை சமாதானப்படுத்துவதும் ஏனோ அவனுக்கு பிடிக்கவில்லை.
இருந்தாலும் அவர்கள் அருகில் சென்று, “எங்க கல்யாணம் எதிர்பாராம நடந்த ஒன்னு, இது தெரியாம நீ நயா மேல கோப்படுவது சரியில்லை ம்மா,” என்று அவன் விக்னவியிடம் கூற,
எங்களுக்கு இடையில் நீ யார்? என்று அவனை முறைத்து பார்த்தவள், “உங்களிடம் நான் விளக்கம் கேட்டேனா? எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை. ப்ளீஸ் இவளை கூட்டிக்கிட்டு இங்க இருந்து கிளம்புங்க, எனக்கு இருந்த ஒரே ஃப்ரண்ட், இனி இல்லைன்னு நினைச்சுக்கிறேன்.” என்றாள் கோபமாக,
“விக்கி, நான் சொல்றதை கொஞ்சம் கேளு டா,” என்று அப்போதும் நயந்தினி சமாதான முயற்சியில் இறங்க,
“இப்போ இங்க இருந்து போறீங்களா? இல்லை எனக்கு எந்த ட்ரீட்மென்ட்டும் வேண்டாம்னு நான் இதெல்லாம் பிடுங்கி எறிஞ்சிட்டு போகட்டுமா?” என்று விக்னவி கோபமாக கத்தியவள், கையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க, அதை பிடுங்க போகவும்,
“அய்யோ வேண்டாம் விக்கி, நான் போயிட்றேன்.” என்று நயந்தினி கூறியவள், அங்கிருந்து வெளியே வந்துவிட, நிகர்வேலனும் விக்னவியை ஒரு பார்வை பார்த்தவன், அவளுடன் பின்னே சென்றான்.
வெளியே வந்ததும், “கல்யாணம் எதிர்பாராம தானே நடந்தது. இதுக்கு எதுக்கு உன்னோட் ஃப்ரண்ட் இவ்வளவு ரியாக்ட் செய்றான்னு தெரியல,” என்று நிகர்வேலன் கூற, நயந்தினி அமைதியாக இருந்தாள்.
“சரி, அடுத்து என்ன செய்யப் போறோம், உன் ஃப்ரண்டோட கோபம் இப்போ குறையாதுன்னு நினைக்கிறேன். அதனால நாம கிளம்புவோம்,” என்று நிகர்வேலன் கூற,
“என்ன சொல்றீங்க, அவளை எப்படி தனியா விட்டுட்டுப் போறது? என்னைப் பார்த்ததும் வார்டனும் கிளம்பி போயிட்டாங்க, அவ சித்திக்கும் இன்னும் தகவல் சொல்லல, நானும் போயிட்டா அவளுக்கு யார் துணை?” என்று நயந்தினி பதிலுக்கு கேட்டாள்.
“சித்தியா? ஏன் விக்கிக்கு அப்பா அம்மா இல்லையா?” என்று நிகர்வேலன் கேட்க,
“அவளோட அப்பா அம்மா ரெண்டுப்பேரும் இறந்துட்டாங்க, அவ அம்மாவோட தங்கை தான் இப்போ அவளுக்கு கார்டியன். ஆனா அவங்க அவளை ஸ்கூல் படிக்கும்போதே போர்டிங்ல விட்டுட்டாங்க, அவ அவங்களோட அந்த அளவுக்கு நெருக்கம் கிடையாது. இப்போ அவங்களை காண்டாக்ட் செய்தாலும் வருவாங்களா தெரியாது. வருவாங்கன்னாலும் எனக்குமே அவங்க நம்பர் தெரியாது. விக்கியிடம் தான் கேட்கணும், அவ என்னிடம் சமாதானம் ஆனதும் தான் அவளிடம் அவ சித்தியோட நம்பர் கேட்க முடியும்,” என்று நயந்தினி விளக்கமாக சொல்லவும்,
“உன்னைப் பார்த்தாலே கோபப்பட்ற பொண்ணு, சீக்கிரம் சமாதானம் ஆகிடுவான்னு சொல்ல முடியாது. இப்போ தான் அவ கண் விழிச்சிட்டாலே, நர்ஸ் யாரையாவது கேட்க சொல்லி, அவங்களுக்கு காண்டாக்ட் செய். அவங்க வரவரைக்கும் இங்க யாரையாவது கவனிச்சிக்க சொல்லலாம், எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கிறோம்னு சொன்னா ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட்டே உன்னோட ஃப்ரண்டை பார்த்துக்க ஆள் போடுவாங்க, நாம இன்னைக்கு ஈவ்னிங் திருநெல்வேலி கிளம்பணும், ஊருக்குப் போயிட்டு வந்ததும் உன் ஃப்ரண்டை பார்க்கலாம், அதுக்குள்ள அந்த பொண்ணும் சமாதானம் ஆகியிருப்பா,” என்று நிகர்வேலனின் பேச்சைக்.கேட்டு,
“இல்லை, என்னால விக்கியை விட்டு எங்கேயும் வர முடியாது. என்னோட ஃப்ரண்ட் இங்க ஆபத்தான கட்டத்தை தாண்டி வந்திருக்கா, அவளை விட்டுட்டு நான் எப்படி திருநெல்வேலி போக முடியும், இப்போ அதுதான் ரொம்ப முக்கியமா?” என்று நயந்தினி கோபமாக கூறினாள்.
“நம்ம கல்யாணத்துக்குப் பின்னான புகுந்த வீட்டு சடங்கு எதுவும் செய்யல, எல்லாம் திருநெல்வேலியில் இருக்கும் வீட்டில் தான் செய்யணும், பெரியவங்க நமக்காக காத்திருப்பாங்க, உனக்கு புரியுதா நயா,” என்று அவன் கேட்க,
“நம்மா கல்யாணம் முறைப்படி பொண்ணுப் பார்த்து நிச்சயம் செய்து எல்லோரையும் கூப்பிட்டா நடந்தது. திடீர்னு நடந்தது தானே, அப்புறம் மத்த சடங்கெல்லாம் முறைப்படி நடக்கணும்னு என்ன அவசியம் இருக்கு?” என்றாள் அவள்,
அவளிடம் இப்படி ஒரு பதில் வருமென்று எதிர்பார்க்காதவனோ, அதற்கு மேல் அவளை வற்புறுத்தவும் நினனைக்கவில்லை. கட்டாயத்தில் அவனை மணந்தவளை அனைத்தையும் கட்டாயப்படுத்தி செய்ய வைக்க முடியாதில்லையா? “சரி நைட்ல இருந்து இங்க இருக்கோம், வீட்டுக்கு போய் ஃப்ரஷ் ஆகிட்டு ஏதாவது சாப்பிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வருவோம்,” என்று கூப்பிட,
“விக்கி சமாதானம் ஆகற வரை என்னால எங்கேயும் வர முடியாது. உங்களுக்கு வேணும்னா போயிட்டு வாங்க,” என்று பதில் கூறினாள்.
அவளுடன் நன்றாக பேசி பழகி ஒருமாதம் கூட முழுமை அடையவில்லை. அவளை மனதார நேசித்திருக்கிறானே தவிர, அவளைப்பற்றி அவனுக்கு முழுமையாக தெரியாது தான், ஆனால் இத்தனை நாட்களில் அவள் இப்படி பேசிப் பார்த்ததில்லை. சொன்னதை உடனே புரிந்து கொண்டு தன்னை மாற்றிக் கொள்வாள். ஆனால் விக்கி விஷயத்தில் அவள் முற்றிலும் மாறுபாடாக இருக்கிறாள் என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது. ஆனால் இது ஆரோக்கியமான விஷயமாகவும் தெரியவில்லை. அவனுக்கு அதை யோசித்தால் குழப்பங்கள் தான் மிஞ்சியது.
அவளிடம் எதுவும் பதில் பேசாமல் அவன் செல்ல, போனால் போகட்டும் என்பதுபோல் அவள் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள். இரவெல்லாம் உறங்காமல் அழுதது அவளுக்கு தலையெல்லாம் வலித்தது. ஒரு காபி குடிக்கலாம் என்பது போல் இருக்க, அவள் முன்னே காபி கோப்பையை நீட்டினான் நிகர்வேலன். காபி வாங்க தான் சென்றான் போல, அவள் நிமிர்ந்து அவனை பார்க்கவும்,
“நைட்ல இருந்து தூங்காம அழுதுட்டே வேற இருந்த, இந்த காபியை குடி, கொஞ்சம் பெட்டரா இருக்கும், நான் வீட்டுக்குப் போய் குளிச்சிட்டு உனக்கு ட்ரஸ் எடுத்துட்டு வரேன். இங்கேயே ஏதாவது ரூம்ல குளிச்சு ட்ரஸ் மாத்திக்க, அடுத்து ஏதாச்சும் சாப்பிடு, உன் ஃப்ரண்டை சமாதானம் படுத்தயாவது உனக்கு தெம்பு வேண்டாமா?” என்று அவன் கூறவும், அவள் காபியை வாங்கி கொண்டாள்.
“சரி நான் போயிட்டு கொஞ்ச நேரத்தில் வந்துட்றேன்.” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
காரில் போகும்போதே சேகரன் அவனை அலைபேசியில் அழைத்தவர், அவன் அழைப்பை ஏற்றதும், “ரெண்டுப்பேரும் மதிய சாப்பாட்டுக்கு அத்தை வீட்டுக்கு வந்துடுங்க நிகர், இங்கேயே சாப்பிட்டு சாயந்தரத்துக்கு மேல அங்க இருந்தே ஊருக்கு கிளம்பிடுவோம், எல்லாம் பேக் செய்துட்டீங்க தானே,” என்று கேட்க,
அவரிடம் எப்படி சொல்வது என்று சில நொடிகள் தயங்கியவன், “அப்பா, நீங்கல்லாம் இப்போ ஊருக்கு போங்க, நானும் நயாவும் ரெண்டு நாளுக்குப் பிறகு வரோம்,” என்றான்.
“என்ன சொல்ற நிகர், இன்னும் கல்யாணத்துக்குப் பின்ன வரும் சடங்குகள் எதுவும் உனக்கு சரியா நடக்கல, அதில்லாம ராகவி கல்யாணம்னு உன் அம்மா வீட்டு பக்கமிருந்து முக்கியமானவங்க தான் வந்தாங்க, மீதி பேருக்கெல்லாம் நடந்ததை சொல்லி நம்ம ஊரில் விருந்துக்கு ஏற்பாடு செய்யணும், நீ வராம எப்படி?” என்று அவர் கேட்க,
“முக்கியமா ஒரு வேலை வந்துடுச்சு ப்பா, நம்ம பிஸ்னஸ் விஷயமா ஒருத்தரை மீட் பண்ண அப்பாயின்மென்ட் கேட்டிருந்தேன். அவர் நாளை மறுநாள் தான் அப்பாயின்மென்ட் தந்திருக்கார். இப்போ அதை மிஸ் செய்தா திரும்ப அவரை எப்போ சந்திக்க முடியும்னு தெரியாது. அதுக்கு தான் ப்பா சொல்றேன்.” என்று அவன் தனக்கு தான் முக்கியமான வேலை என்பதுபோல் சொல்லிக் கொண்டான்.
“அவ்வளவு முக்கியமா நிகர், என்ன சம்பந்தமா அந்த மீட்டிங், வேற யாரையாச்சும் அனுப்ப முடியுமான்னு பார்க்கலாம்,” என்று சேகரன் கேட்க,
“இல்ல ப்பா, நீங்களோ நானோ பார்த்தா தான் ப்பா நல்லா இருக்கும், மீட்டிங் நமக்கு ஃபேவரா முடிஞ்சா விஷயம் என்னன்னு சொல்றேன்.” என்று அவன் ஏதேதோ சமாளித்தான்.
“சரி மீட்டிங் முடிஞ்சதுமே அன்னைக்கே கிளம்பி வாங்க,” என்று கூறியவர், அலைபேசியை அணைக்கவும்,
இரண்டு நாளுக்குப் பிறகு கூட நயந்தினி வருவாளா தெரியவில்லை. இப்போதைக்கு இரண்டு நாள் என்று சொல்லியிருக்கிறான். அதன்பின் தான் விஷயம் தெரியும் என்று நினைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.
இரவெல்லாம் உறங்காதது அவனுக்குமே தலையெல்லாம் வலித்தது. அவளுக்கு காபி வாங்கி கொடுத்தபோது வீட்டில் போய் குடித்துக் கொள்ளலாம் என்று வந்துவிட்டான். ஆனால் பேச்சுக்கு கூட நீங்க குடிக்கலையா? என்று அவள் கேட்காதது அவனுக்கு ஒரு வருத்தத்தை கொடுத்தது. அப்படியே கட்டிலில் சோர்ந்து போய் படுத்துவிட்டான். திடீரென நடந்த திருமணம் என்றாலும் மனதிற்கு பிடித்தவளை திருமணம் செய்து கொண்டோம் என்ற மகிழ்ச்சி இப்போது சுத்தமாக தொலைந்து போயிருந்தது.
படுத்தவன் அப்படியே உறங்கி விட, சில நிமிடங்களிலேயே அடித்துப் பிடித்து எழுந்தான். அங்கே நயா சாப்பிடாமல் இருப்பாள் என்பதை உணர்ந்தவன், எழுந்து குளித்து தாயாராகி அவளுக்கு தேவையான உடைகளை எடுத்துக் கொண்டவன், மருத்துவமனைக்கு கிளம்பினான். போகும் வழியில் அவளுக்கு உணவு வாங்க இறங்கியவனுக்கும் பசி தான், ஆனால் சாப்பிடத் தோன்றவில்லை. அவளுக்கு மட்டும் வாங்கிக் கொண்டு கிளம்பினான்.
மருத்துவமனைக்குள் நுழைந்ததுமே நயந்தினி தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்தவன், அவளை காணச் சென்றான். அவன் போகும்போது அமர்ந்த இடத்திலேயே அமர்ந்திருந்தாள். அவனைப் பார்த்ததும் எழுந்து நின்றாள். “முதலில் வா குளிச்சுட்டு சாப்பிடு,” என்று அவளை அறைக்கு அழைத்து சென்றான்.
அவள் குளித்து முடித்த வந்ததும் அவளுக்கு வாங்கி வந்த உணவை எடுத்து வைக்க, “நீங்க சாப்பிட்டீங்களா?” என்று இந்த முறை கேட்டாள். காலையில் எதிர்பார்த்த கேள்வியை இப்போது அவள் கேட்டது மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
சாப்பிட்டதாக அவளிடம் பொய் கூற தோன்றவில்லை. “நான் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக்கிறேன்.” என்று பதில் கூறினான்.
“அப்போ இன்னும் சாப்பிடலையா? நீங்க சாப்பிட்டு எனக்கு வாங்கிட்டு வந்திருக்கலாமில்ல,” என்று நயந்தினி கேட்க,
“நீ சாப்பிடாம இருக்கும்போது எனக்கு மட்டும் எப்படி சாப்பிட தோன்றும்,” என்றான்.
அதில் நெகிழ்ந்தவள், “நிறையவே இருக்கு, ரெண்டுப்பேரும் ஷேர் செய்து சாப்பிடலாம் வாங்க,” என்று அவனையும் அழைத்தாள்.
“இல்ல நீ சாப்பிடு,” என்று அவன் சொல்லியும்,
“நைட்ல இருந்து நீங்களும் சாப்பிடாம தூங்காம இருக்கீங்க, உங்களை விட்டு நான் மட்டும் எப்படி சாப்பிட்றது? உங்களுக்கு வேண்டாம்னா எனக்கும் வேண்டாம்,” என்றாள்.
அதில் மனம் இன்னும் சமாதானமடைய, அவனும் அவளோடு சேர்ந்து சாப்பிட்டான். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே, கேட்பதா? வேண்டாமா? என்று தயங்கி தயங்கி, “மாமாவிடம் என்ன சொன்னீங்க?” என்று கேட்டாள்.
அவன் வந்தபோது இருந்த மனநிலைக்கு அவள் இந்த கேள்வியை கேட்டிருந்தால், ‘உனக்கு அதைப்பத்தி எதுக்கு கவலை,’ என்று காயப்படுத்தும்படி பேசியிருப்பான்.
ஆனால் இப்போது அவன் மனம் சமன்பட்டு இருந்ததால், “ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு, நீங்கல்லாம் முதலில் போங்க, ரெண்டுநாள் நாங்க கழிச்சு வரோம்னு சொல்லியிருக்கேன்.” என்றான்.
அதற்கு “தேங்க்ஸ்,” என்று பதில் கூறியவளுக்கோ, இரண்டு நாளில் அனைத்தும் சரியாகிவிடுமா? என்று தெரியவில்லை. விக்னவி சமாதானம் ஆகிவிட்டாலும், இரண்டு நாளுக்குள் அவளை டிஸ்சார்ஜ் செய்துவிடுவார்கள். அதன்பின் அவள் விடுதியிலும் இருக்க முடியாது. அவள் சித்தியும் வருவார்களா? என்று தெரியவில்லை. இந்த நிலையில் அவளை தனியே விட்டுவிட்டு எப்படி செல்வது?” என்று அவளுக்கு குழப்பமாக இருந்தது.
அதற்கு தீர்வு போல், “ரெண்டு நாளில் எல்லாம் சரியாகுதா பார்ப்போம், இல்லை திரும்ப ஏதாவது ரீஸன் சொல்லிக்கலாம், நீ அதை பெருசா யோசிக்காத, இப்போதைக்கு உன் ஃப்ரண்டை சமாதானப்படுத்தறது எப்படின்னு யோசி. உங்க ஹாஸ்டல் வார்டன் பேசினதில் திரும்ப விக்கி ரூம்க்கு போக முடியாது. அவ சித்தி வராங்களா பார்க்கலாம், இல்லை ஏதாவது பிஜி மாதிரி பார்த்து தங்க வைக்கலாம்,” என்று அவன் சொல்லவும்,
“நானும் அதைத்தான் யோசிச்சிட்டு இருந்தேன். இதுக்கு சொல்யூஷன் சொன்னதுக்கு தேங்க்ஸ்.” என்றாள்.
“சரி, நான் ஈவ்னிங்க்கு மேல வரேன். ஏதாவது அவசரம்னா கூப்பிடு, இப்போ கொஞ்சநேரம் நல்லா ரெஸ்ட் எடு, அதுக்குப்பிறகு உன் ஃப்ரண்டை போய் பாரு, உன் ஃப்ரண்டை நல்லப்படியா பார்த்துக்க சொல்லி ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட்க்கு சொல்லிட்டேன். அதனால தேவையில்லாம கவலைப்படாத,” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
அவளிடம் சமாதானம் கூறினாலும், இரண்டு நாட்களுக்கு மேல் வீட்டில் உள்ளவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற குழப்பம் இருந்தது. காரில் சென்று கொண்டிருக்கும்போது நளினி அவனை அலைபேசியில் அழைத்தார். அந்தநேரம் ‘இவர் தான் இப்போதைய பிரச்சனைக்கு காரணம் என்ற கோபம் அவர்மீது வரவும், அழைப்பை ஏற்று, “சொல்லுங்க,” என்றான் அதே கோபத்துடன்,
மகள் தன்மீது கோபமாக இருக்கிறாள் என்பதால் தான், நளினி மருமகனுக்கு அழைத்தார், ஆனால் மருமகனும் கோபமாய் பேசுவதுபோல் தோன்றினாலும் அதை பொருட்படுத்தாமல், “இன்னைக்கு நைட் ஊருக்கு கிளம்பறீங்க தானே, அதைப்பத்தி கேட்க தான் போன் செய்தேன்.” என்று அவர் சாதாரணமாக பேச,
“எங்க அத்தை ஊருக்குப் போறது, எங்க கல்யாண விஷயம் தெரிஞ்சு நயாவோட ஃப்ரண்ட் விக்னவி தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கா, இதை எனக்கு எப்படி எடுத்துக்கறதுன்னு கூட தெரியல, நயா இப்போ விக்னவியோட ஹாஸ்பிட்டலில் இருக்கா, அந்த பொண்ணு நயாவை அங்க இருக்கவே வேணாம்னு சொல்றா, இவ விக்கியை தனியா விட்டுட்டு வர மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கா, எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல,
ஏதோ ஒரு காரணம் சொல்லி ரெண்டுநாள் கழிச்சு வருவதா அப்பாவிடம் சொல்லியிருக்கேன். ரெண்டுநாள் கழிச்சு இது சரியாகுமான்னு தெரியல, இந்த விஷயத்தை சாதாரணமா என்னால எடுத்துக்க முடியல, ஏன்னா இதில் ஏதோ பிரச்சனை இருக்கப் போய் தானே கிடைச்ச வாய்ப்பை உபயோகப்படுத்தி எங்க கல்யாணத்தை நடத்தியிருக்கீங்க, அப்போதே விஷயம் ஏதோ சீரியஸ்னு தோனுது, மத்த நேரத்தில் சாதாரணமா இருக்க நயா விக்னவி விஷயத்தில் கொஞ்சம் அதிகப்படியா நடந்துக்கிற மாதிரி தோனுது, என்னதான் அத்தை பிரச்சனை?” என்று நிகர் கோபத்தில் படபடவென்று பேசவும்,
விஷயம் கேட்டு நளினியோ முதலில் அதிர்ச்சியானவர், “நீங்க இங்க வீட்டுக்கு வாங்க நிகர், இதைப்பத்தி பேசுவோம்,” என்று அவர் அவனை அழைக்கவும்,
“இதோ கொஞ்சநேரத்தில் வரேன்.” என்றவன், வண்டியை நேராக நளினி வீட்டுக்கு திருப்பினான்.
அகம் சேர்வான்…
error: Content is protected !!