Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அகம் சேர்ந்தாய் அதிசயனே

ASA 5

அகம் 5

அறை முழுவதும் இருட்டாக இருக்க, “அய்யோ யாரோ ரூம்ல இருக்காங்க போல, அது தெரியாம வந்துட்டோமே,” என்று நயந்தினி மனதின் நினைத்தவள், இன்னுமே தன்னை பிடித்து இழுத்தது யாரென்று தெரியாமல் பயத்தில் கண்களை மூடியபடி இருக்க, அப்போது தான் “நயா நீயா?” என்ற அழைப்பில் கண்களை திறந்தாள். அறையிலும் இப்போது வெளிச்சம் வந்திருக்க, அப்படி அழைத்த ஆடவனின் பிடியில் அதிர்ச்சியோடு இமைக்காமல் அவனை பார்த்தப்படி இருந்தாள். 



Advertisement

ஆனால் இப்போது அவனோ, “ஹேய் யார் நீ?” என்று கேட்டான்.

Advertisement

‘யார் நீயா? முதலில் நயா நீயான்னு தானே கேட்டான். இப்போ இப்படி கேட்கிறான். ஒருவேளை அது என் கற்பனையா? மொழி இங்க வந்த முதல் நாள் கேலி செய்ததால எனக்கு இப்படி தோனுதா?” என்று முதலில் நினைத்தவள்,

Advertisement

‘யார் நீ என்று கேட்கிறான்? அப்போ என்னை இவனுக்கு ஞாபகமே இல்லையா? ஆனா இவனை எனக்கு நல்லா ஞாபகம் இருக்கே, இவன் நிகர்வேலன் தானே, முன்ன விட ஆள் ஹாண்ட்சம்மா ஆகிட்டான். ஆனா நான் நினைச்ச மாதிரி ஓவர் ஆட்டிட்யூட். என்னை யாருன்னு தெரியாத மாதிரி பேசறானே,” என்றும் நினைத்து கடுப்பானாள்.

Advertisement

“ஹலோ நீ யாருன்னு கேட்டா பதில் சொல்லாம கனவுலகத்தில் இருக்கீயா?” என்று நிகர்வேலன் மீண்டும் கேட்டதும் தான், அவள் நிகழ் உலகிற்கு வந்தவள், இன்னும் அவன் பிடியில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து, “விடுங்க என்னை,” என்று அவன் பிடியில் இருந்து விலகப் பார்க்க,

“நீ இன்னும் நான் கேட்டதுக்கு பதில் சொல்லல, யார் நீ? என்னோட ரூம்ல என்ன செய்ற? திருட வந்தீயா? எப்படி நீ இந்த ரெசார்ட்க்குள்ள வந்த?” என்று அவளை விடுவிக்காமல், தன் பிடியில் வைத்தப்படியே, நிகர்வேலன் வரிசையாக அவளிடம் கேள்விகள் கேட்டான்.

அதற்கு நயந்தினியோ, “ஹலோ என்னைப் பார்த்தா திருடி மாதிரியா தெரியுது. நான் பக்கத்து ரூம்ல தான் இருக்கேன். இந்த ரூம்ல யாரும் இல்லைன்னு நினைச்சு இங்க போன் பேசலாம்னு வந்தேன். ஆமா நிஜமாகவே என்னை யாருன்னு உங்களுக்கு தெரியலையா?” என்று அவனிடம் அவள் பதில் கேள்வி கேட்க,

அந்த வார்த்தைகளை நம்பியவன் போல் அவளை விடுவித்தவன், “ஹே அறிவிருக்கா உனக்கு, இந்த ரூம்ல நானா இருக்கவே போச்சு, வேற யாராச்சும் இருந்திருந்தா என்னாகியிருக்கும்?” என்று கேட்கவும்,

“என்னாகியிருக்கும், நல்லா இருந்திருக்கும், உன்னை எனக்கு பார்க்கவே பிடிக்கல,” என்று அவள் வாய்க்குள்ளேயே முனகினாள்.

“என்ன முனகற?” என்று அவன் கேட்கவும், அவள் வாய்க்குள் முனகினதை சத்தமாகவே கூறியவள்,

“உண்மையை சொல்லுங்க, என்னை யாருன்னு உங்களுக்கு தெரியும் தானே,” என்று கேட்க,

“தெரிஞ்சிக்கிற அளவுக்கு நீ என்ன வி.ஐ.பி யா?” என்று கேட்டான்.

அதைக்கேட்டு, ‘தெரியாதா? அதெப்படி தெரியாம போகும்,’ என்று மனதினுள் நினைத்தவள், 

“இவன் சொன்னமாதிரி நான் என்ன வி.ஐ.பி யா? என்னை ஞாபகம் வச்சிக்க,” என்று நினைத்து மனதை சமாதானப்படுத்திக் கொண்டவள்,

“இருந்தாலும் ஓவர் ஆட்டிட்யூட்,” என்று மீண்டும் வாய்விட்டு முனக,

“என்ன சொன்ன?” என்று கேட்டான்.

“தெரியாத வரைக்கும் ரொம்ப சந்தோஷம்னு சொன்னேன்.” என்றவள்,

“உங்களை டிஸ்டர்ப் செய்ததுக்கு சாரி,” என்று சொல்லிவிட்டு, பால்கனி வழியாக செல்லப் போக,

“ஹே இந்தப்பக்கம் எங்கப் போற?” என்று நிகர்வேலன் கேட்க,

என்னோட ரூம்க்கு தான்,” என்று பதில் கூறினாள்.

“நாம இருப்பது 3 வது ஃப்ளோர். தாண்டும்போது கொஞ்சம் மிஸ் ஆனா கூட என்னாகறது? உனக்கு கொஞ்சம் கூட பயமே இல்லையா? ஒழுங்கா வாசல் பக்கமா போ,” என்று அவன் கூறவும்,

“ஏன் என் அம்மாவும் தங்கைகளும் முழிச்சு என்னை கேள்வி கேட்கறதுக்கா? வேற வினையே வேண்டாம், அதான் என்னை தெரியாதுன்னு சொல்லிட்டீங்கல்ல, அப்புறம் என்மேல என்ன அக்கறை,” என்று கேட்டவள், வந்தது போலவே மீண்டும் பால்கனியை தாண்டி போகும் வரை அவன் உயிர் அவனிடம் இல்லை.

பால்கனியை தாண்டியதும் அவனை நயந்தினி திரும்பி கர்வமாக ஒருபார்வை பார்க்கவும், “இதுபோல திரும்ப செய்யாத,” என்றான்.

சத்தம் கேட்டு அன்னையும் தங்கைகளும் விழித்துக் கொள்ள போகிறார்கள் என்று பயந்தவள், “ஷ் ஷு” என்று வாயில் கைவைத்து அவனை அமைதியாக சொன்னவள், பின் அறைக்குள் சென்றுவிட்டாள்.

சத்தமில்லாமல் சென்றவளுக்கு அப்போது தான் விக்கியிடம் பேசிக் கொண்டிருந்ததும், நிகர்வேலன் பிடித்து இழுத்ததும் ஞாபகத்திற்கு வர, விக்கியின் அழைப்பு இன்னும் அணைக்கப்படாமல் இருக்கிறதா? என்று உடனே அலைபேசியை பார்த்தாள். 

அவள் நினைத்தது போல் அழைப்பு அணைக்கப்பாடாமல் இருக்கவும், இங்கு வைத்து திரும்ப விக்கியிடம் பேச முடியாது என்பதால் அழைப்பை அவசரமாக அணைத்துவிட்டு, ‘நாளைக்கு கால் பண்றேன்.” என்ற குறுந்தகவலை விக்கிக்கு அனுப்பிவிட்டு சத்தமில்லாமல் அன்னையின் அருகில் படுத்துக் கொண்டவளுக்கோ, உறக்கம் சீக்கிரத்தில் வரவில்லை. 

‘எப்படி என்னை தெரியவில்லை என்று சொல்லுவான்?’ என்று மனம் நிகர்வேலன் சொன்னதிலேயே சுழன்று கொண்டிருந்தது.

நயந்தினி அழைப்பை அணைத்தது மட்டுமல்லாமல்,  உடனே குறுந்தகவல்கள் அனுப்பியிருந்தாலும் விக்கியின் மனம் சமாதானமாகவில்லை. அங்கே நயந்தினிக்கும் யாரோ ஒருவனுக்கும் நடந்த பேச்சுவார்த்தை தெள்ளத் தெளிவாக விக்கிக்கு கேட்டிருந்தது. “யாரவன்? அவனிடம் என்னை தெரியலையா? தெரியலையா? என்று அத்தனை முறை நயன் கேட்க வேண்டிய அவசியம் என்ன? அவன் ஏன் நயன் பால்கனியை தாண்டறதுக்கு பதறுறான். 

இந்த பத்துநாள் நயன் போய் அங்க இருக்கறதுக்கு ஏன் எனக்கு இப்படி பதறுது. இதுக்கும் நயன் அவளோட வீட்டில் தான் இருக்கா, அப்போல்லாம் எனக்கு எதுவும் பெருசா தெரியல, ஆனா இங்க இருக்க பாண்டிச்சேரி பக்கத்தில் போய் தங்கறது எனக்கு ஏன் நயன் என்னை விட்டு தூரமா போறது போல தெரியுது. என்னவோ சரியில்லை என்பது மாதிரியே தோனுதே,” என்று நினைத்த விக்கிக்கு உறக்கம் என்பதே தொலைந்து போனது.

அவர்கள் இருவருக்கு மட்டும் தான் உறக்கம் வரவில்லையா? இங்கு தனதறையில் நிகர்வேலனும் தான் உறங்காமல் இருந்தான். பெங்களூரில் இன்னுமே முடிக்க வேண்டிய வேலைகள் நிறையவே இருந்தது. அந்த ஷோ ரூம் ராகவிக்கு கொடுக்க வேண்டிய திருமணப் பரிசு என்பதால் திருமணம் முடிந்ததுமே கடை திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், அதற்கான வேலைகள் அதிகமே இருந்தாலும், இந்த திருமண நிகழ்விலும் அவன் கலந்து கொள்வது அவசியம் தானே, நாளை மறுநாள் நிச்சயத்தார்த்ததிற்கு கண்டிப்பாக வந்துவிட வேண்டுமென்று தான் நினைத்திருந்தான். நாளை திருநெல்வேலி சென்று தாத்தா பாட்டியை அழைத்துக் கொண்டு வருவது தான் அவனது திட்டம். ஆனால் அவனது திட்டத்தை மாற்றி அவனை இப்போதே இங்கு வரவைத்தது நயந்தினி தான்,

அவள் இந்த திருமணத்தற்கு கண்டிப்பாக வருவாள் என்று தெரியும், அவள் தான் எப்போதும் ராகவியுடனே சுற்றிக் கொண்டிருப்பாளே, ஆனால் ஆரம்பமே இங்கு வந்து அனைத்து திருமண நிக்ழ்விலும் கலந்துக் கொள்வாள் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை. எதைச்சேயாக ரோஹனின் வாட்ஸ்அப் ஸ்டேடஸை பார்த்தவன் இன்பமாக அதிர்ந்தான்.

அவளை நேரில் பார்த்தது ஒரே ஒருமுறை தான், அப்போது அவன் மனதில் அவள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று சாதாரணமாக தான் இருந்தான். அவளை பள்ளியில் படிக்கும் சிறுமியாக தான் நினைத்தான். ஆனால் அதன்பின் அவள் கோப முகம் அவ்வப்போது அவனை தொந்தரவு செய்து கொண்டிருந்த போதுதான், நயந்தினி அவனுள் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது.

அதற்கேற்றார்போல் அடிக்கடி ராகவியுடன் அவள் இணைந்து எடுத்த புகைப்படத்தை ராகவி வாட்ஸ்அப் ஸ்டேடஸில் வைப்பதை பார்க்கும் வாய்ப்பு அவனுக்கு கிடைத்தது. முதலில் ஆவலாக பார்க்க ஆரம்பித்தவன், அடுத்து அதை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டான். அப்போது அவன் வெளிநாட்டில் இருந்தானே, இல்லையென்றால் அவளை பார்க்கவே எதாவது சாக்கு சொல்லி அடிக்கடி அத்தை வீட்டிற்கு சென்றிருப்பான்.

ஆனால் அலைபேசியில் அவள் புகைப்படத்தை பார்க்கும் அந்த மகிழ்ச்சி கூட அவனுக்கு நிலைக்கவில்லை என்பதுபோல் சாகரி வீடு மாறிவிட்டார். அதன்பின் நயந்தினியை புகைப்படத்திலேயே பார்க்க முடியவில்லை. பின் நேரில் எங்கே பார்ப்பது? நிஜத்தில் அவளை பார்க்கவே முடியாத போதும், அவன் மனதினில் அவள் அழிக்க முடியாத பிம்பமாக மாறிவிட்டிருந்த உண்மை அவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. 

அப்படியிருக்க இன்று அவள் இங்கு இருக்கிறாள் என்று தெரிந்ததும் அவனால் எப்படி அங்கு இருக்க முடியும், எந்த வேலை எப்படி போனால் என்ன என்பதுபோல் அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டு வந்துவிட்டான். இங்கு வரும்போதே மணி பத்தை தாண்டிவிட்டது. எல்லாம் உறங்கும் நேரம் என்பதால் யாரையும் தொந்தரவு செய்யாமல் எப்போதும் இங்கு வந்தால் இங்கு தங்கும் அவனது அறைக்கு வந்தவன், வரும்போதே வழியில் சாப்பிட்டு விட்டு வந்ததால் சின்னதாக ஒரு குளியல் போட்டு இரவு உடைக்கு மாறியவன், விளக்குகளை அணைத்துவிட்டு படுத்தப்படி அலைபேசியை பார்த்திருந்தான்.

நயந்தினி இங்கு தான் இருக்கிறாள் என்று தெரிந்தாலும், அவள் தனது பக்கத்து அறையில் தங்கியிருப்பாள் என்பதெல்லாம் அவனுக்கு தெரியாது. காலையில் தான் அவளை பார்க்க வேண்டும், ராகவி, ரோஹனிடம் கூட வெளிப்படையாக நயந்தினியை பற்றி கேட்க முடியாது. இதுவரை அவன் மனதில் நயந்தினியை நினைத்துக் கொண்டிருப்பதை பற்றி யாரிடமும் பகிர்ந்ததில்லை. சாதாரணமாக கூட நயந்தினியை பற்றி அவர்களிடம் கேட்டு அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் வந்துவிடுமோ என்று கவனமாகவே இருப்பான்.

நாளை நயந்தினியை எப்படி எங்கே பார்ப்போம்? கண்ணில் படுவாளா? இல்லை நாளை மாலை பார்ட்டி ஆரம்பிக்கும் வரை காத்திருக்க வேண்டுமா? என்றெல்லாம் சிந்தித்தப்படி இருக்கும்போது தான் பால்கனியில் மெல்லிய குரலில் பேச்சுக் குரல் கேட்டது. யார் இந்த நேரத்தில் பால்கனியில் நிற்பது? ஏற்கனவே அறையில் இருந்தார்களா? ஆனால் வரும்போதே அறை பூட்டியிருந்ததே? உள்ளே ஆள் இருப்பது தெரியாமல் பூட்டி விட்டார்களா? ஆனால் பால்கனி அறையும் பூட்டியிருக்கிறதே, அப்படியானால் வேறு பக்கமாக தான் பால்கனிக்கு வந்திருக்க வேண்டும் என்று நினைத்தவன், 

இந்த நேரத்தில் பால்கனி பக்கம் யாரோ வந்திருக்கிறார்கள் என்றால் யாரோ திருடனாக தான் இருக்க வேண்டும், கடற்கரையை ஒட்டி இந்த ரெசார்ட் அமைந்திருப்பதால், அந்த பக்கத்திலிருந்து யாராவது வந்திருப்பார்கள் என்ற முடிவிற்கே வந்துவிட்டான். மெல்லிய குரலில் பேச்சுக் குரல் கேட்டதால் அவனுக்கு அது பெண்ணாக இருக்கும் என்றும் தீர்மானமாக தெரியவில்லை. 

விளக்குகளை உயிர்பித்தால் வெளியில் இருப்பவர் உஷார் ஆகிவிடுவர் என்று அலைபேசி வெளிச்சத்தோடு சென்று சத்தமில்லாமல் கதவை திறந்தால், கதவருகிலேயே அதுவும் இலேசாக தெரிந்த நிலா வெளிச்சத்தில் நின்றிருப்பது ஒரு பெண் என்பது நன்றாகவே தெரிந்தது. ஏன் பெண் திருடனாக இருக்கக் கூடாதா? என்று நினைத்தவன், வேகமாக அந்த பெண்ணை பிடித்து அறைக்குள் இழுத்தவன், அங்கேயே விளக்குகள் இருக்கவும் அதை உயிர்பித்து பார்த்தால் அவனுக்கு இன்ப அதிர்ச்சி.

சில நிமிடங்களுக்கு முன்பு தன் நினைவு முழுவதையும் ஆக்கிரமித்திருந்த பெண்ணவள், தன் கைப்பிடியில் இருக்கிறாள் என்பதையே அவனால் நம்ப முடியவில்லை. ஒரு நொடி அது கனவா? என்று கூட நினைத்தான். ஆனால் பயத்தில் கண்களை இறுக மூடியப்படி இருக்கும் நயந்தினியை பார்த்தபோது அது நிஜம் என்பது புரிந்து தன்னிலை மறந்தவன், அவளை மனதில் அழைக்கும் பெயரை வைத்து கூப்பிட்டுவிட்டான். 

அவளோ அந்த அழைப்பில் அதிர்ச்சியாக பார்க்கவும் தான், அவன் அவளை நயா என்று அழைத்ததை உணர்ந்து சுதாரித்துக் கொண்டவன், அவளை தெரியாதது போல காட்டிக் கொண்டான். ஆனாலும் என்னை தெரியவில்லையா? என்று அவள் அத்தனை முறை கேட்டதை உணர்ந்து, 

“ச்சே அவளை தெரியாத  மாதிரி காட்டியிருக்கக் கூடாது. எங்க முதல் சந்திப்பிலேயே அவளை ஹர்ட் செய்ற மாதிரி நடந்துக்கிட்டேன். இப்போதும் அதேபோலவா? அவள் பேசியதை பார்த்தால் அப்போ நடந்தததையே மறக்காத மாதிரி இருக்கு, இதில் இப்போ வேற, நீ யாரு வி.ஐ.பி யான்னுல்லாம் கேட்டுட்டேன். கண்டிப்பா என்னை இப்போதும் தப்பா தான் நினைச்சிருப்பா, இப்படியே போனா என்னாகறது?” என்று வாய்விட்டு புலம்பினான்.

‘ஆனாலும் எவ்வளவு தைரியம் அவளுக்கு, பக்கத்து பால்கனி எகிறி குதிச்சு போன் பேசிட்டு இருக்கா, நாளைக்கு காலையில் அவளைப் பார்த்தா இதைப்பத்தி சொல்லி கண்டிக்கணும்,’ என்று நினைத்துக் கொண்டவன், அவளைப் பற்றிய சிந்தனையிலேயே அந்த இரவை கழித்தவன், எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை.

இரவு உறங்க தாமதமானதால் காலையில் எப்போதும் எழுந்திருக்கும் நேரம் கடந்தும் நயந்தினி உறங்கிக் கொண்டிருக்க, நளினி அவளை தட்டி எழுப்பியவர், “என்ன இவ்வளவு நேரம் தூக்கம், ஏதாச்சும் உடம்பு சரியில்லையா?” என்று காய்ச்சல் ஏதாவது இருக்கிறதா? என்று தொட்டுப் பார்த்தப்படியே கேட்க,

“அதெல்லாம் இல்ல ம்மா, நைட் ரொம்ப நேரம் தூக்கம் வரல, அதான் இப்போ தூங்கிட்டேன் போல,” என்று அவள் பதில் கூறவும்,

“நைட்டெல்லாம் போன் பார்த்துட்டு இருந்தா எங்க தூக்கம் வரும்?” என்று வழக்கமான வசைகளை பாடிவிட்டு, 

“சரி குளிச்சிட்டு பிரேக்ஃபாஸ்ட் வரவழைச்சு சாப்பிட்டு அப்புறம் ராகவியை பார்க்க போ. நானும் சாகரிக்கு ஏதாவது உதவி வேணுமான்னு கேட்டுட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு நளினி கிளம்பிவிட்டார். முன்னமே இரட்டையர்கள் இருவரும் விளையாட சென்றுவிட, இதுதான் சந்தர்ப்பம் என்று அவள் முதலில் விக்கியை அலைபேசியில் அழைத்தாள்.

விக்கி அழைப்பை ஏற்றதுமே, “நேத்து என்ன நடந்துச்சு நயன், யாரவன்? என்னை தெரியலையா? தெரியலையான்னு அவனிடம் அத்தனைமுறை கேட்டுட்டு இருந்த? அவ்வளவு முக்கியமான ஆளா?” என்று அவளை கேட்ட கேள்வியில் அதிகம் பொறாமை கலந்திருந்தது.

“அய்யோ விக்கி, நீ நினைக்கிற அளவுக்கு ஒன்னும் அவன் அவ்வளவு முக்கியம் இல்லை. ராகவி அக்காவோட கஸின். பேரு நிகர்வேலன். நிகர் ஷோரூம் தெரியுமில்ல, அது அவங்களது தான், ஒருமுறை ராகவி அக்கா வீட்டில் வச்சு பார்த்திருக்கேன். பணக்காரனாச்சே, அப்போதே ஓவரா ஆட்டிட்டியூட் காட்டினான். இப்போதும் அதே ஆட்டிட்யூட் காட்றான். என்னை அதுக்குள்ளவா மறந்திருக்கும், ஆனா என்னை ஏன் அவன் ஞாபகம் வச்சிக்கணும்,” என்று நயந்தினி பேசிக் கொண்டே போக,

“விடு நயன், ஆட்டிட்யூட் காட்றான்னு சொல்ற, அப்புறம் எதுக்கு அவனைப்பத்தி பேசணும், என்னைக் கேட்டா இனி அவனைப் பார்த்தா கூட அவாய்ட் பண்ணு,” என்று விக்கி கூறவும்,

“நீ சொல்றது சரிதான் டா, ஆல்ரெடி எனக்கு இந்த கல்யாணத்துக்கு வர இன்ட்ரஸ்ட் இல்லாததுக்கு காரணமே அவன் தான், அவனைப் பார்க்க வேண்டியிருக்குமேன்னு தான், வந்த முதல் நாள் அவன் இல்லன்னு சந்தோஷப்பட்டேன். ஆனா ரெண்டு நாள் தான் அந்த சந்தோஷத்துக்கு நிரந்தரம் போல,” என்றாள்.

“அப்படி அங்க பிடிக்காம எதுக்கு இருக்கணும், பேசாம வந்துடு, வேணும்னா கல்யாணத்துக்கு மட்டும் போ.” என்று விக்கி கூற,

‘விக்கி சொல்வதும் சரிதான், ஆனா அம்மா கண்டிப்பா விட மாட்டாங்க,” என்று நினைத்தவளோ,

“அதான் ரெண்டுநாள் ஓடிப் போச்சே, இன்னும் 8 நாள் தானே, அதுவும் சீக்கிரம் ஓடிப் போயிடும் விக்கி, அதுவரைக்கும் நிகர்க்கிட்ட இருந்து தள்ளி நின்னாப் போச்சு,” என்று சமாதானம் கூறினாள்.

“அப்போ உனக்கே அங்க இருக்கப் பிடிச்சிருக்கு, அப்புறம் என்ன? பதினைந்து நாள் கூட இருந்து ஜாலியா எஞ்சாய் பண்ணிட்டு வா, நான் எப்படியோ போறேன்.” என்று விக்கி சலிப்பாக பதில் கூற,

“அய்யோ அப்படியில்ல விக்கி,” என்று விக்கிக்கு சமாதானம் கூறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

ஒருவழியாக விக்கி அழைப்பை அணைக்கவும், “எல்லாத்தையும் இந்த விக்கி சென்சிட்டிவா எடுத்திக்கிட்டா எப்படி? காலையில் எழுந்ததுமே விக்கிக்கு போன் செய்திருக்கக் கூடாது. என்னோட தப்பு தான் இது, நேத்தே கூட கொஞ்சநேரம் பேசியிருந்தா இன்னைக்கு பேச வேண்டிய அவசியம் இருந்திருக்காது. எல்லாம் நிகரால் வந்தது.” என்று நடந்ததற்கு அவனை குற்றம் சாட்டியவள்,

“போயும் போயும் அந்த ரூம்ல் அவனா இருக்கணும்,” என்று புலம்பினாள்.

‘பின் அவனாக இருக்கவே போயிற்று, வேறு யாராவது இருந்திருந்தால் என்ன பிரச்சனை வேண்டுமானாலும் நடந்திருக்கும், அந்த அளவு எதுவும் நடக்கவிடாமல் விட்டுவிட்டானே, பரவாயில்லை.” என்று நினைத்தும் நிம்மதி கொண்டாள்.

‘ஆனால் என்னை தெரிந்ததால் இப்படி நடந்துக் கொண்டானா? இல்லை அங்கே யாராக இருந்தாலும் அப்படித்தான் நடந்துக் கொண்டிருப்பானா? உண்மையாகவே என்னை மறந்து விட்டானா? ஆனால் நான் மட்டும் ஏன் அவனை ஞாபகம் வைத்திருக்கிறேன்.’ என்று யோசித்தவளுக்கோ, 

அன்று நடந்த அந்த சம்பவத்தை மறக்க முடியாததால் தான் அவன் நினைவிலேயே இருக்கிறானோ என்று நினத்தவளுக்கு, அவர்களின் முதல் சந்திப்பு ஞாபகத்திற்கு வந்தது.

(அவங்க ஃபர்ஸ்ட் மீட்டை நாம அடுத்த எபியில் பார்ப்போம், சின்ன ஃப்ளாஷ்பேக் தான் அதனால அடுத்த எபியிலேயே முடிஞ்சிடும்)

அகம் சேர்வான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!