Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 15

Advertisement

என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 15

அத்தியாயம் 15

கௌதமைப் பற்றிய தாராவின் கணிப்பு சரியாகவே இருந்தது! ஸோ அவன் தன் மனைவியைத் தேடி டில்லி சென்றுள்ளான். அப்படி என்றால் அவனுக்கு முன்னால் நானும் அவன் அம்மாவும் டில்லியில் இருக்க வேண்டும்.

தாரா, தானும் கற்பகமும் உடனே டில்லி செல்வதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்த அதே நேரம், அந்தச் சிக்குப்புக்கு ரயிலின் சுகமான தாலாட்டில், அந்த இரண்டாம் வகுப்பு, இரண்டடுக்கு ஏசி கோச்சிலிருந்த பலர் சுகமான நித்திரையில் ஆழ்ந்து போயிருந்தார்கள். தன் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டுக் கண்விழித்த கௌதம், விழித்தவுடன், தன் கைவளைக்குள் உறங்கிக் கொண்டிருந்த பவியைத் தன்னிடமிருந்து மெல்லப் பிரித்து சீட்டில் கிடத்தியவன், எதிர் புறத்தில் தன் கையிலிருந்த புத்தகத்தோடு போராடிக் கொண்டிருந்த தாமரையைப் பார்த்தான்!

அவளும் இவன் விழித்துவிட்டான் என்பதைப் புரிந்து கொண்டு, அந்தப் புத்தகத்தை மடக்கி மடியில் போட்டுக் கொண்டவள்,

‘அப்பர் பெர்த் இப்ப ஓகேவா?’ என்ற சைகையோடு தன் நேற்றிப்பொட்டை விரலால் சுற்றிவிட்டுக் கேட்க,

“அது என்ன புக் தாமரை?!” என்று அவன் புத்தகத்தின் மேல் தன் கவனத்தை திசை திருப்பினான்.

“சேட்டன் பகத்தின், ‘பாதி சிநேகிதி’ என்றாள் சிரித்துக் கொண்டே! சிறிது நேரம் விழித்தவன் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான்!

“அது என்னப்பா ‘ஹாஃப் கெர்ள் ஃப்ரென்ட்’ என்றவன், “ஒருவேளை நம்மைப்போல் அரைகுறை ரயில் சிநேகிதர்களாயிருக்கலாம்!” என்றவன் “அந்தப் புத்தகத்தின் தமிழ் தலைப்பு என்ன தெரியுமா தாமரை?” என்று சிரித்தவன்

‘சினேகிதியா? காதலியா!?’ என்னைக் கேட்டா எந்தத் தளைகளும் இல்லாத; எந்த எதிர்பார்ப்புகளுமில்லாத இந்த நட்புத்தான் உலகத்திலேயே மிகச் சிறந்த, அன்புப் பரிமாற்றாம்னு நான் சொல்வேன்!”

“நம்ம நட்பை குறைச்சு மதிப்பிடாதிங்க கௌதம், நம்ம ரெண்டு பேருக்குமான பழக்கம் வெறும் ஒரு இரவு, ஒரு பகல்தான் இருக்கும், ஆனால் நமக்கிடையில் நடந்துள்ள இந்தப்பகிர்வு ஒரு முழுமையான நட்பின் திறவுகோல்! நம் வாழ்க்கையின் வடிநிலங்களை ஒரு முழுவட்டம் சுற்றி வந்துள்ளோம்!”

“மிக அழகான வர்ணனை தாமரை!” என்றவன்,

ஆனால் எனக்கு ஒண்ணு மட்டும் புரியலை, நான் படிச்ச கதைகள், கதை மாந்தர்கள், எனக்குத் தெரிந்த மொழிகள், நான் செய்த வேலைகள், இன்னும் எத்தனை எத்தனையோ செயல்களை என் மனசு மறக்கலை! ஆனால் சிந்து பற்றிய நினைவுகள் மட்டுமே வற்றிய குளம் போல் வரண்டுவிட்டது!!!

இப்பத் தூங்கி கண்விழிக்கும் முன்னால் ஒரு துளி மழையாக அவள் என் சிந்தையில் ஓடினாள். அதுவும் என் அத்தை பெண் தர்ஷியின் நினைவுகளோடு கை கோர்த்துக் கொண்டு வந்தாள்!

நீங்க உங்க மூளையைப் போட்டு அதிகம் தேய்க்காதீங்க கௌதம், நம்ம டச் ஃபோன் தொடுதிரை மாதிரி அதிக அழுத்தத்தில் மூளையே முழுசா ஒரு வெற்றுத்தாளாய் மாறிவிடலாம். ஒவ்வொரு சொட்டு நீராய் சேர்ந்தாலும், காய்ந்த குளத்தில் நீர் நிறைவது போல, தானாகவே நினைவுகள் உங்க மூளையில் தேங்கத் தொடங்கிவிடும்! கையில் அள்ளிக் குடிக்கும் அளவுக்கு நீர் சேர்ந்தவுடன் நீங்க அள்ளிப் பருகலாம்! எனக்கும் கொஞ்சம் குடிக்கக் கொடுக்கலாம்!

“தாமரை, இன்னும் நீ என்னிடம் ஷேர் பண்ணாத உன்னோட வாழ்க்கையின் இருண்ட பகுதிகளோ, சுகமான பகுதிகளோ இருக்கலாம் இல்லையா? என்னை மாதிரி நினைவுகளை நீ இழக்கலயே! மறுபடியும் கௌதம் அவளுடைய மீதிக் கதையைக் கேட்க விரும்புகிறான் என்பது அவனுடைய பேச்சின் மூலம் அவளுக்குப் புரிந்த்து”

“சுருக்கமா என் வாழ்க்கை சரித்திரத்தைக் கேட்கிறீங்க இல்லையா!?”

“இவ்வளவு அழகான மெல்லியளாலுக்கு ஒரு காதலன் இருக்கணுமே!” முதலில் இல்லை என்று கூறப் போனவள் பின்னர் ஆமென்று தலையாட்ட,

“இவ்வளவு தயக்கம் ஏன் தாமரை உன் ரயில் ஸ்நேகிதனை நீ நம்பலையா!” என்றான் அவன்.

“Ssssss,,,என்றவள், அவன் என்னோட முன்னால் காதலன், ஒரு பத்து நாளைக்கு முன்னால ப்ரேக் அப் ஆயிருச்சு!

‘ஏன்?’ என்பதுபோல் அவன் தன் இரு விழிகளையும் சுழற்றிக் கேட்க,

“நான் என் அக்கா மாப்பிள்ளையை அதுதான் என் மாமாவைக் கல்யாணம் பண்ணிக்க ஊருக்குப் போறேன்னு சொன்னேன்! அவ்வளவுதான் அவன் என்னிடம் ‘என்ன? ஏன்? வாட்? ஒய்? ஹௌ’ னு எதுவுமே கேட்காம இஸ்லாமியக் கணவன்மார் தங்கள் மனைவியரிடம் தலாக், தலாக், தலாக்னு மூணுதடவை சொன்னவுடன் அவர்களின் திருமணம் உடைஞ்சு போற மாதிரி, ஆன் த ஸ்பாட் ‘ப்ரேக் அப்’னு சொல்லிவிட்டுப் போய்விட்டான்!”

“காதல் உடைஞ்சு போனதை இவ்வளவு சர்வசாதாரணமா சொல்ற!?”

“இதுக்கெல்லாம் தாடி வளர்த்து, லொக்கு லொக்குனு இருமி, இலக்கில்லாமல் ஊரைச் சுத்தி வந்து “என்னடி மினாட்சி? நீ சொன்னது என்னாச்சுனு” பாடி அழவா முடியும்?”

“பின்ன மாமாவோட கல்யாணம்னு ஊருக்குக் கிளம்பினா, உன்னை மடியில் தூக்கி வச்சுக் கொஞ்சி, ‘போய் வா மகளேன்’ னு காதலன் முத்தம் கொடுத்தா அனுப்ப முடியும்???”

“இல்ல கௌதம், காதல்ன்ற உணர்வு நம் அடி மனம் வரை வேர்விட்டு ஆழமா பதியப்படணும். அந்த உணர்வு வெறும் சல்லி வேரில்லை நினைச்சவுடன் பிடுங்கி எறியிறதுக்கு! அது ஆணிவேர்! இதுமாதிரி பிடுங்கி எறியிறதுக்குப் பேரு காதலே இல்லை! அது வெறும் இனக்கவர்ச்சி! அந்த இனக் கவர்ச்சியானது, கவர்ச்சியான கண்களையும், இதழ்களையும் மார்பகங்களையும் சிற்றிடையையும் பார்த்து வருவது! மேகம் திரண்டவுடன், தோகை விரித்தாடும் ஆண்மயில் மேல் மையல் மட்டும் கொண்ட பெண்மயில் போல காதல் இருக்கக் கூடாது!

‘உன் கவர்ச்சியான கண்ணும்; சிரிப்பு நெளியும் உதடுகளும்; ஆண்மை பொறுந்திய உன் உடற்கட்டும்; பார்க்க அழகுதான்னு ஒரு ஆண்கிட்ட நான் வசனம் பேசினா மட்டும் போதாது! ஆனால் அதே அழகும், அன்பின் ஆழமும் என் இதயக் கூட்டுக்குள்ளிருந்து தெறிச்சு விழணும்! அவள் நெஞ்சுக் கூட்டில் துடிக்கும் இதயம் மட்டுமில்லாமல் அவள் உணர்வுகளும் அவன் மார்பில் அவள் சாய்ந்திருக்கும் போது அவனுக்குக் கேட்கணும்!”

“அம்மாடி உன்காதல் சித்தாந்தத்துக்கு முன்னால் என் காதல் சித்தாந்தமெல்லாம் பொடிப் பொடியா சிதறிப் போயிரும்னு நினைக்கிறேன்! சரி உன் கதையைச் சொல்லு! கேட்கவே ரொம்ப ஸ்வாரஸ்யமாயிருக்கு!!!”

“இவ்வளவுக்கும் அவனுக்கு என் அக்கா, மாமாவோட முழுக்கதையும் தெரியும்!!! ஒரு நிமிடம் நின்னு நிதானமா என்கிட்ட என்ன ஏதுன்னு கேட்டிருக்கலாம் இல்லையா!? இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நான் என்ன செய்யணும், இல்லை நான் என்ன செய்யப் போறேன், என்னோட வியூகம் என்ன? எப்படி இதை ஹேன்டில் பண்ணலாம், இப்படி எதுவுமே செய்யாம, ரசாயன கூடத்தில் தூக்கிப் போட்டு உடைக்கிற கண்ணாடி பீக்கர் மாதிரி, கோனிக்கல் ஃப்ளாஸ்க் மாதிரி ‘காதலை’ ஒரே வினாடியில ப்ரேக் அப்னு சொல்லி தூக்கிப் போட்டு உடைக்க முடியுமா? அவன் அதைத்தான் செய்தான் மறுவினாடியே என் காதலைத் தூக்கில் போட்டான். நானும் போடான்னு சொல்லிவிட்டு வந்துட்டேன்.!”

“அவன் உன்னை இழந்திருவோம்கிற அதி தீவிர ஆத்திரத்தில் அப்படி செஞ்சிருக்கலாம்டா! சரி உன் கதையை சொல்லு உடைஞ்ச கண்ணாடி பீக்கரை ஒட்ட வைக்கலாமானு பார்ப்போம்!”

“அவங்க குடும்பம் ரொம்ப காலத்துக்கு முன்னால உத்திரப்ரதேசத்தில் டில்லிக்கு வெகு அருகில் உள்ள ஹாஸியாபாத்தில் செட்டில் ஆனத் தமிழ் குடும்பம். அவனோட அப்பாவை ஒரு ஹோட்டல் அதிபர்னு பெருமையா சொல்லலாம். காஃபி கஃபே வித் ஸ்னாக்ஸ்னு ஒரு அழகான உணவு விடுதி ஹாஸியாபாத்தில் அவங்களுக்கு இருக்கு!

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு எல்லா மொழியிலும் பொளந்து கட்டுவான். அதிபுத்திசாலி, ஆனால் கொஞ்சமும் யோசிக்காமல் கோபப்படுவதில் அடி முட்டாள்.

நான் வேலை பார்க்கும் அதே ஆஃபிசில் அவனுக்கு அட்மினில் வேலை! எனக்கு ஆராய்ச்சி கூடத்தில் ஆராய்ச்சியாளர் வேலை! அங்க பகலில் வேலையை முடிச்சிட்டு மாலையில் தன்னோட ஹோட்டல் கல்லாவில் முதலாளியாப் போய் உட்கார்ந்துக்குவான். ஆள் இல்லைனா வெயிட்டர், ஹோட்டல் சிப்பந்தி, வாயில் காப்போன்னு என்ன வேலைனாலும் யோசிக்காம செய்வான்.

எங்களின் முதல் சந்திப்பே அந்த ஹாசியாபாத் ஹோட்டலில்தான் நடந்தது! நான் வேலையில் சேர்ந்த புதிதில் ஒரு வீக்கென்ட் நொய்டாவிலிருந்து நாங்க நாலு கெர்ல் ஃப்ரென்ட்ஸ் சேர்ந்து டைம் பாஸிங்கிற்காகவும் மற்றும், ஊர் சுற்றிப் பார்க்கவும் காஸியாபாத் சென்றிருந்தோம். அது இரவும் பகலும் கை குலுக்கி விடைபெரும் ஒரு ரம்யமான மாலைப் பொழுது. சூரியன் தன்னுடைய தோழர் சந்திரனைக் கட்டித் தழுவி விடை கொடுக்கும் மந்தகாசமான சந்தியாகாலம்.

பல நாட்கள் அரைகுறையாய் வானத்தில் காணாமல் போகும் சோம்பேறிச் சந்திரனுக்கு, அந்தி வானில் தோன்றும் பொழுது பந்தாவிற்கு மட்டும் எந்தக் குறைவும் இருக்காது. எப்பொழுது வானில் தோன்றினாலும் கண்சிமிட்டும் லட்சக் கணக்கான, கோடிக் கணக்கான நட்சத்திர கேடிப் பெண்கள் புடைசூழத்தான் வானில் தோன்றுவார்! அதே பந்தா அவனிடமும் இருக்கும்.

“இவ்வளவு அழகான கற்பனைப் பேச்சுக்களை எங்கேயிருந்து கத்துக்கிட்ட தாமரை!“

“அந்த ஃப்ராடுக்கிட்டயிருந்துதான் கத்துக்கிட்டேன். தேன் கூட்டிலிருக்கும் லட்சக்கணக்கான தேனீக்கள் ஒரே நேரத்தில் ரீங்காரமிடுற மாதிரி ஹிந்தி மொழியில், கொட கொடன்னு கொட்டினாலும்;

தமிழில் பேசும் போது மட்டும் ரொம்ப நிறுத்தி நிதானமா கவித்துவமா பேசுவான். அவன் நம்ம மொழியில் அழகா பேசுறதைக் கேட்டு நான் மயங்கிப் போனேனுதான் சொல்லனும். பலவருஷமா வடநாட்டில் அதுவும் ஹிந்தி மக்கள் வாழும் இதயப் பகுதியான தலை நகரின் அருகிலிருந்தவனுடைய தூய தமிழைக் கேட்டு நான் அரண்டு போய்விட்டேன்!

“நம் குடும்பம், பெற்றோர், உற்றார், உறவினர், சுகம், துக்கம், பேச்சு, சிரிப்பு சாப்பாடு அனைத்தையும் துறந்து, ஒரு அன்னிய நாட்டிலிருப்பது போல தோணும் பொழுது யாராவது நம் தாய் மொழியில் அதுவும் மனதை மயங்க வைக்கும் அழகு தமழில் வந்து பேசினால் நீங்க எப்படி ஃபீல் பண்ணுவீங்க கௌதம்? எனக்கு முதலிலெல்லாம் அவன் தமிழில் என்னோடு உரையாடுவதைக் கேட்டால் அப்படியே வானத்தில் பறப்பது போலிருக்கும்!

நாங்க ரெண்டு பேரும் ஒரே கம்பனியில வேலை பார்த்திருந்தாலும் எப்பொழுதோ ஒரு முறை எங்களோட அலுவலக காரிடரில் சந்திச்சிருக்கலாம். எனக்கு அவனை சுத்தமாத் தெரியாது! அன்று வரை எனக்கு அவன் யாரோதான்! ஆனால் அலுவலகத்தில் நான் யாருடனோ சிரித்துப் பேசிச் செல்வதை அவன் கேட்டிருக்கான்.

“பக்கத்தில் ஏதாவது டூரிங்க்ஸ்பாட் இருக்காப்பா?” என்று நான் ஆங்கிலத்தில் என் தோழியிடம் கேட்க, “ஹாஸியாபாத்தில் இஸ்கான் கோவில் இருக்கே!” என்று யாரோ பெண் குரலில் தமிழில் பதில் கூறுவதைக் கேட்ட நான்,

‘வாங்கடி போகலாம் பேரே அழகா இருக்கு’ என்று என்னை மறந்து நிலையில் தமிழில் பதில் கூறிவிட்டுப் பின்னர்தான், ‘ஐயையோ யார் தமிழில் பதில் கூறியது?’ என்று சுற்று முற்றும் தேடி, யாரையும் காணாமல் பைத்தியம் போல் சிரித்து நான் சமாளிக்க, அன்று என் தமிழும், சிரிப்பும், பனிமழையாய் அவன் மனதில் இறங்கியதை பின்னர் ஒருநாள் என்னிடம் கூறினான்.

நானும் என் தோழிகள் மூவரும் அந்த வாரம் ஹாஸியாபாத்திலுள்ள இஸ்க்கான் கோவிலுக்குச் சென்றுவிட்டு அந்த மாலை நேரம் அந்தக் கோவிலுக்கு அருகிலிருந்த காஃபி கஃபேக்கு சென்றோம்…

கடை பளிச்சென்ற கண்ணாடி முகப்போடும்; அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த திரைகளோடும்; சீலிங்கை அலங்கரித்த அலங்கார விளக்குகளோடும்; வெளியிலிருந்து பார்ப்பதற்கு அது ஓர் அற்புதத் தீவு போலிருந்தது. அங்குதான் எங்க வாழ்க்கையின் பெரிய காமடி சீனே ஆரம்பமாகப் போகுதுனு அப்ப எனக்குத் தெரியாது! வாசலில் நின்ற வாயிற் காப்போன் ஒரு மஹாராஜா உடையில், நின்று தலை வணங்கி, எங்களை வரவேற்கத் தொடங்கினான்.

“வாருங்கள் வாருங்கள் ராஜ குமாரிகளே!” என்று மற்ற மூவரையும் ஹிந்தியில் வரவேற்றவன், “இதில் ஒரு தமிழ் இளவரசி இருக்காங்க, அவருக்கும் என் அந்திமாலை வணக்கங்கள்!” என்று கூறி நன்றாகக் குனிந்து எனக்கு ஸ்பெஷல் வணக்கம் வைக்க,,,சடக்கென்று ஒரு யானை குனிந்து தன் தும்பிக்கையால் என்னை வளைத்துத் தூக்கி அதன் அம்பாரியில் அமர்த்தியது போல, நான் முற்றிலுமாக அதிர்ந்து போனேன்.

‘யார் இவன்? அந்தக்கால ஏர் இந்தியா மஹாராஜா என்ற நினைப்போடு தலையில் மகுடம் சூட்டியது போல, அழகாக மடிப்பு வைத்து சிவப்பு வண்ணத்தில் ஜரிகை வேலைப்பாடுகளுடன் கூடிய முண்டாசு கட்டி; ஒரு அரசனைப் போல் உடையணிந்து; ஒரு ஆண்டியைப் போல் தன்னுடைய ஒரு கையில் அலங்காரம் செய்யப்பட்ட குச்சியைப் பிடித்துக் கொண்டு (அது அரசனின் செங்கோலாம்) மற்றொரு கரத்தை நெஞ்சில் குறுக்கே வைத்து, அசல் ஒரு சேவகனைப் போல் தலை வணங்கி;

நல்ல வேளையாக தலையும் உடம்பும் தரையில் பட சாஷ்டாங்கம் செய்யவில்லை, அந்த வேடிக்கை வினோதக் காட்சிகள் அனைத்தையும் பார்த்து எனக்கு சிரிப்புப் பொத்துக் கொண்டு வர, சிரிப்பை அடக்கியதில் என் முகம் சிவந்து போனாலும்; இந்த மூஞ்சை எங்கோ பார்த்திருகிறோமே என்ற என் மூளையின் தேடல் பயணத்தை என்னால் நிறுத்த முடியவில்லை.

“கன்னம் சிவந்த தாமரை மலர் ஏன் இப்படித் தள்ளாடுகிறது?” என்று தூய தமிழில் அவன் அழகாய்க் கேட்டவுடன், என் பெயரை அவன் உச்சரித்த அதிர்ச்சியில் நான் வாய் குளறி எனக்குத் தெரிந்த தாய் மொழியாம் தமிழ்மொழி மறந்து அம்மொழி என் உதடுகளுக்கிடையில் சிக்கித் தள்ளாடத் தொடங்கியது!

“ஹே! பபா! ஹூ ஆர் யூ?!” என்று நான் கத்த,

“அமைதி! ஷாந்தம்! புத்தம், சரணம், கச்சாமி!” என்று ஸ்லோகம் போல் ஒப்பித்தவன், நீங்க வேலை பார்க்கும் அதே ஆராய்ச்சி கூடத்தில் நான் அலுவலக கிளையில் உயர் கணக்காளரா வேலை பார்க்கிறேன்!

ஹோட்டல் தொழில் எங்க குலத்தொழில்! மாலைப்பொழுது, ஒரு வாலிப மங்கைபோல மயங்கும் வேளையில் என் தந்தைக்கு கல்லாவிலிருந்து ஓய்வு கொடுப்பதற்காக இங்கே வந்துவிடுவேன். இன்று ஹோலிப் பண்டிகை. வண்ணப் பொடிகள் கொண்டு மங்கையர் மேல் வண்ணங்கள் பூசும் திருவிழா என்பதால் வாயிற்காப்போன் விடுப்பு எடுத்துச் சென்றுள்ளான், பந்தி பரிமாறக் கூட நான்தான் வரணும்!” என்று ஒரே வினாடியில் தலையிலிருந்த மஹாராஜா மகுடத்தை இறக்கி வைத்தவன்,,,

நெய் ரோஸ்ட் வடிவத்தில் ஒரு சாதாரண வெள்ளைக் குல்லாவைத் தலையில் அணிந்து கொண்டு, ஒரே நொடியில் ஒரு சாதாராண வெயிட்டர் உடையில் மாறுவேடப் போட்டியில் பங்கேடுப்பவன் போல ஓடிவந்தான். பின்னர் எங்களை மிகவும் வசதியான இருக்கையில் அமர்த்திவிட்டு என்னைப் பார்த்து ஸ்நேகமாய்ச் சிரிக்கவும்,

அவன் அப்படி தூய தமிழில் ஓவராய் தமிழ் பேசுவது என்னையே கிண்டல் செய்வது போல எனக்குத் தோன்ற, ஏனோ அவனை கன்னத்தில் பளார் பளாரென்று அறைய வேண்டுமென்று தோன்றியது எனக்கு! அவன் அத்தோடு தன் தூய தமிழை நிறுத்துவதாய் தெரியவில்லை

“உங்களைப் பார்த்தா வெந்நீரைக் காலில் கொட்டிக் கொண்டு குதிப்பது போலிருக்கிறது! பருகுவதற்கு சுடுநீர் தரவா? குளுமையான பனிநீர் தரவா? இல்லை தூய்மையான இளநீர் கூட எங்கள் கடையில் உண்டு!” என்று தன் புருவத்தை உயர்த்தி ஒரு ரசிப்போடும், சிரிப்போடும் என்னை அவன் பார்க்க, அந்த நிமிடமே அவன் சிரிப்பில் நான் குப்புறக் கவிழ்ந்துவிட்டேன்.

“இல்ல மேன்! நீதான் உன் தமிழால் என்னைத் தேளாய் கொட்டுகிறாய்!” என்று நான் பதில் கூறிவிட்டு, அவனை முறைத்துப் பார்க்க, என்னோடு ஜோடி போட்டு வந்திருந்த மற்ற பெண்கள், புரியாத மொழியில் பேசும் எங்கள் இருவரையும் ‘ங்கே’ என்று விழித்து; எரிச்சலோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“இப்பத் தெரியுதா? மொழி தெரியாதவங்க இருக்கிறப்ப அதே வேற்று மொழியில் பேசினா எவ்வளவு எரிச்சல் வரும்னு!” என்று அவர்களைப் பார்த்து அவர்கள் மூவருக்கும் புரியாத தமிழில் கூறியவன்,

“அம்மா தாயே நீ உன் கோபத்தை குறைத்துக் கொண்டு உங்களுக்கு இலை வடி நீர் வேணுமா? இல்லை கொட்டை வடிநீர் வேணுமானு உன் தோழிகளைக் கேட்டுச்சொல். இந்த காஃபி கஃபே, மணமும் சுவையும் நிறைந்த கும்பகோணம் ஃபில்டர் காபிக்கும், ஏலக்காய் மணத்தோடு போடப்படும் சாய்க்கும் பேர் போனது! விரைவில் கூறுங்கள் அம்மா, நான் அடுத்த மேடைக்குச் செல்ல வேண்டும்!” என்று பௌயமாய் என்னிடம் கேட்க, அவன் நடிப்பைப் பார்த்து அடக்க முடியாமல் சிரித்த நான், “ஏன் மேடை ஏறி தையத் தக்கத் தையானு ஆடப் போறியா?”

“நீங்கள் ஒலி பெருக்கியைப் பிடித்து அமுதகானம் இசைப்பதென்றால் நான் ஆடவும் தயார்!” என்றான் அவன்!”

“படவா! இங்க இருந்து ஒடிப் போயிரு! இல்லைனா நீ அடுத்த முறை மஹாராஜா வேஷம் கட்டும்போது வாயிலில் அ,,,,!” நான் முடிப்பதற்குள்ளாக அவன் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான்.

“நீங்க இவ்வளவு சிரிக்கிற அளவுக்கு அப்படி என்ன சார் பெரிய ஜோக்?” என்று சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு நான் கேட்க,

“இல்லை என் உடையை உருவிவிட்டு என்னை வாயிலில் அம்மணமா நிற்க வைப்பேன்னு சொல்ல வர்றீங்க இல்லையா?” என்று அவன் கேட்க,

“ஐயோ ஐயோ!” என்று நான் தலையில் அடித்துக் கொண்டு, “ஏய் வாங்கடி போகலாம் இந்தக் கோட்டான் கடை நமக்கு சரிப்படாது” என்று நான் ஆங்கிலத்தில் கூற, அதே ஆங்கிலத்தில் மிக அழகாகப் பதில் கூறினான் அவன்!

“This day has been created for you younglings to enjoy” என்று ஆங்கிலத்தில் கூறியவன், அந்த வாக்கியத்தை ஹிந்தியிலும் மொழி பெயர்த்துவிட்டு, அப்படியே குரங்கு போல தமிழ் மொழிக்குத் தாவியவன்,

நாங்களே எங்களோட அடுமனையில் தயாரிக்கும், ரொட்டித் துண்டுகளும், இனிப்பு அப்பங்களும், (கேக்கின் தமிழாக்கமாம்) மற்றும் கடாயில் வறுபடும் உணவுப் பொருட்களும் மிகவும் சுவையா இருக்கும்!” என்ன வேணும்னு சொன்னா விரைவில் அடுப்பில் வாட்டி எடுத்து வருவேன்!” என்று என்னைப் பார்த்துக் கேட்க,

“போ போய் தோசைக்கடாயை அடுப்பில் போட்டு சூடேற்றி, முறுகல் தோசை ஊத்தி எடுத்துவா! ஏப்பா சிப்பந்தி, உனக்கு சாதா தமிழ் அதுதான் பேச்சுத் தமிழில் பேசத் தெரியாதா?!” என்று அழ மாட்டாத குறையாய்க் கேட்க,

“இங்க எங்க மாம் பேச்சுத் தமிழ் கத்துக்கிறது! நம்ம ஊருல நீங்க ஹிந்தி ப்ரபோத், பிரவின், ப்ரக்யாவெல்லாம் பாஸ் பண்ணினாலும் யாராவது ஹிந்திகாரரோடு பேசினால்தான் முழுமையான பேசும் ஹிந்தியைக் கத்துக்க முடியும். அது மாதிரித்தான் இங்க தமிழும் வதைபடுது!

எங்க வீட்டுல அம்மாவும் அப்பாவும் தமிழ் பேசுவாங்க! ஆனால் இந்த ஊருலயே ரொம்ப வருஷமா இருக்கிறதால அவங்களுக்கும் ஹிந்திதான் சுலபமா வருது! ஹிந்தித்தமிழ்தான் பேசுவாங்க! ஒரு வரி பேசினால் அதில் நாலு ஹிந்தி வார்த்தையும் ஒரு தமிழ் வார்த்தையும் இருக்கும். எனக்கு இந்த தமிழ் மொழி ரொம்ப பிடிச்சிருக்கு மாம்!

Photo_EKKUM 00010.pngஆனால் எங்க போய் கத்துக்கிறது? அதனாலதான் 30 நாள், 40 நாள், ஒரு வருடத்தில் கற்றுக் கொள்ளலாம்னு வரும் தமிழ் மொழி பெயர்ப்பு புத்தகங்களிலிருந்தெல்லாம் தூய தமிழ் கத்துக்கிறேன்!” அவன் பெசியதைக் கேட்டு நான் அசந்து போனேன். தொடரும்
 
மேம் சிந்துவோட கதை வரும் என்று பார்த்தால், தாமரை கதை போகுது, இப்போ என் தலை என்ன ஆகப் போகுது...??

இலை வடி நீர் - டீ
கொட்டை வடி நீர் - காபியா மேம்
 
மேம் சிந்துவோட கதை வரும் என்று பார்த்தால், தாமரை கதை போகுது, இப்போ என் தலை என்ன ஆகப் போகுது...??

இலை வடி நீர் - டீ
கொட்டை வடி நீர் - காபியா மேம்
ஆமாப்பா ஆமாம். தமிழ் மொழியைத் தூய தமிழில் மொழி பெயர்த்தால் இப்படித்தான் வார்த்தைகள் கிடைக்கும். நன்றிகள் கேரலின், என் கதையை ரசிச்சுப் படிகிறிங்கனு நினைக்கிறேன். உங்கள் பணி தொடரட்டும்.
 
Top