Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இமை மீதூறும் துளிகளில் - 8

Advertisement

துமி

Well-known member
Member
அத்தியாயம் 8

நித்யா உட்காருவதற்கு ஏதாவது இடம் கிடைக்குமா என அருகில் தேட, அங்கே அவர்கள் படிக்கும் போது இருந்த கேன்டீனே, சற்று சீரமைக்கப்பட்டு இருந்தது.

"ஹே சுபிக்ஷா இங்க வாயேன்..." என அழைத்தாள் நித்யா.

"அங்க பாரேன் அதே பழைய கேன்டீன்." என்ற நித்யாவிடம் காரணமே இல்லா மகிழ்ச்சி வந்து ஒட்டிக் கொண்டது.

"தகர ஷீட்லாம் எடுத்துட்டு நல்லாவே கட்டிட்டாங்கல!!" என்றாள் சுபி.

"ம்ம்ம் ஆமா..."

"சரி வா போய் பாப்போம்..."

"ம்ம்ம்..."

இருவரும் பழைய கேன்டீனை அடைந்தனர்.

"இது தொறந்திருக்கு..." என்றாள் சுபி.

"ஸ்டாப்ஸ்காக தொறந்துருப்பாங்க..." காரணம் சொன்னாள் நித்யா.

"ஹல்லோ… யாராச்சும் இருக்கிங்களா??" உள்ளே குரல் கொடுத்தாள் சுபி.

கைலியும் அழுக்கு பனியனுமாய், பரட்டை தலையுடன் ஒரு ஆள் வந்து எட்டி பார்த்தான்.

"என்ன டீ வேணுமா??" என அவன் கேட்க, ஆம் என்றனர்.

"உங்களை பாத்த மாதிரியே இல்லையே… புதுசா வேலைக்கு சேந்துருக்கிங்களா??" என கேட்டார் அந்த டீ மாஸ்டர்.

"இல்ல நாங்க ஓல்ட் ஸ்டூடன்ட்ஸ். ஒரு வேலை விசயமாக வந்திருக்கோம்." என்றாள் நித்யா.

"அப்படியா… அப்ப உங்களுக்கு டீ கிடையாது… கிளம்புங்க..." என்றுவிட்டு அந்த டீ மாஸ்டர் உள்ளே நுழைய முற்பட,

"ஏன் எங்களுக்கு டீ கிடையாது??" முன்கோபம் எட்டி பார்க்க கேட்டாள் சுபி.

"ஸ்டாப்புங்களுக்கு மட்டும் தான் டீ தருவோம்." என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டார் அந்த மாஸ்டர்.

"நாங்க எக்ஸ்ட்ரா காசு தரோம்." என நித்யா அவசரமாய் சத்தமாய் சொல்ல, வாயெல்லாம் பல்லாக வந்தார் அந்த டீ மாஸ்டர்.

"இருங்க ஸ்பெசல் டீ போட்டு தரேன்." என‌ சொல்லி விட்டு டீயை ஆற்றி தந்தார் அவர்.

"பழைய கேன்டீன்ல ஆறிப்போன மிளகா பஜ்ஜி, பப்ஸ், காஞ்சிப்போன கேக்கு இதெல்லாம் இருக்கும்ல… எல்லாம் மாறிடுச்சு..." அதையெல்லாம் மிஸ் செய்கிறேன் என சொல்லாமல் சொன்னாள் சுபி.

"ம்ம்ம்…" என்று வாய் சொன்னாலும், மனம் அந்த நாளின் நினைவுகளின் சுவையில் நின்றது நித்யாவிற்கு.

இருவரும் டீயை எடுத்து ஒரு வாய் வைத்து விட்டு, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"அந்த கேவலமான டேஸ்ட் மட்டும் மாறவே இல்லை..." என்றாள் நித்யா.

"உள்ள போனதெல்லாம் வெளிய வந்திடும் போல இருக்கு." என்றாள் சுபி.

"எது மாறினாலும் இந்த கேவலமான டீ மாட்டும் மாறாது போல..." என்றாள் நித்யா.

"ஆமா..." என முகத்தை சுளித்துக் கொண்டே சொன்னாள் சுபி.

"பஜ்ஜி எதுனா சாப்பிடுறிங்களா மேடம்??" என அந்த டீ மாஸ்டர் உள்ளிருந்து கேட்க,

"சரி எடுத்துட்டு வாங்கண்ணா..." என்றாள் நித்யா.

"ஹே இந்த டீயே கொடூரமா இருக்கு… அந்த பஜ்ஜி எப்படி இருக்குமோ!! எதுக்கு எடுத்துட்டு வர சொன்ன??" என நித்யாவிடம் கேட்டாள் சுபி.

"பழசை என்னைக்குமே மறக்க கூடாது… காலேஜ் படிக்கும் போது இந்த கேவலாமான டீக்கும், ஆறிப்போன பஜ்ஜிக்கும், காஞ்சிப்போன கேக்கும் எப்படி அடிச்சிப்போம்?! இனி இங்க வந்து டெய்லியா இதை சாப்டுட்டு இருக்க போறோம்… இங்க வந்ததுக்கு நியாபகார்த்தமா இதை சாப்பிட்டு போவோம்…" என நித்யா நீண்ட விளக்கம் தர, சுபியும் அதை ஏற்றுக் கொண்டாள்.

காய்ந்து போய், ஆறிப் போய் இருந்த வாழைக்காய் பஜ்ஜி அவர்களின் முன்னே பல்லை இளித்துக் கொண்டு கிடந்தது. நித்யா ஒன்றை எடுக்க போகும் முன், "இரு முதல்ல போட்டோ எடுத்துட்டு அப்பறம் சாப்பிடலாம்…" என்றாள் சுபி.

"இதை கூடவா நீ போட்டோ எடுப்ப??" சலிப்பாய் கேட்டாள் நித்யா.

"அதனால என்ன இப்ப??" என்றவாறே டீ கப்புகளையும் பஜ்ஜியையும் புகைப்படம் எடுத்து மீண்டும் முகநூலிலும், வாட்சப்பிலும், "அன்றும் இன்றும் என்றும், மாறாத அதே பழைய கேன்டீன் டீ, ஆறிப்போன பஜ்ஜி!!" என்ன கேப்சனுடன் பதிவிட்டாள்.

இருவரும் டீயை குடித்து முடிக்கையில் ஸ்ரீதர் இருவரையும் அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தான். அதனால் இருவரும் அங்கே கிளம்பி சென்றனர்.

அந்த கேன்டீனுள் முண்டியடித்து கொண்டிருந்த கூட்டத்தையே பார்த்து கொண்டிருந்தாள் நித்யா. பலகாரத்தை ஈ மொய்ப்பது போல் மாணவர்கள் அனைவரும் அந்த கேன்டீனில் இருந்தனர்.

முதல் நாள் கல்லூரிக்கு வரும் அவசரத்தில், மதிய உணவை மறந்துவிட்டு வந்ததற்கு தன்னை தானே நொந்துக் கொண்டாள். கல்லூரி கேன்டீனில் உணவு கிடைக்கும் அங்கு வாங்கி கொள் என்று சொன்ன மாமன் மகனையும் அர்ச்சிக்க தவறவில்லை.

"ஹேய் இங்க என்ன பண்ணிட்டு இருக்க??" என கேட்டான் ரஹீம்.

ரஹீமும் அவளது வகுப்பினன் தான்.

"லஞ்ச் வாங்கனும் அதான்.." என்றாள் நித்யா.

"வாங்க போகனும்னு சொல்லிட்டு இங்க நின்னுட்டு இருக்க??" என கேட்டான் ரஹீம்.

"இல்ல ரொம்ப கூட்டமா இருக்கு..." என தயங்கிய படியே இழுத்தாள் நித்யா‌.

"காலையில நீ போட்ட போட்டுக்கு இன்னேரம் இந்த காலேஜையை வித்துருப்பனு நினைச்சா, இப்படி லஞ்ச் வாங்க நின்னுட்டு இருக்க... சரி காசு குடு நான் வாங்கிட்டு வந்து தரேன். நீ போய் க்ளாஸ்ல இரு…" என்றான் ரஹீம்.

"ம்ம்ம் சரி..." என்றவள் காசை குடுத்து விட்டு வகுப்பறைக்கு சென்று விட்டாள்.

வகுப்பறையில் மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவினை உண்டுக் கொண்டிருந்தனர்.

"ஓய் ஒட்டகச்சிவிங்கி..." என வாயில் சாதத்தை வைத்துக் கொண்டே கத்தினான் தினேஷ்.

யாரது தன்னை ஒட்டகச்சிவிங்கி என அழைப்பது என கோபத்துடன் திரும்பினாள் நித்யா.

"நான் தான் கூப்பிட்டேன்." என கையை தூக்கினான் தினேஷ்.

இவள் என்ன எனும் விதமாக பார்க்க, "என்ன சாப்படலையா??" என கேட்டான். இவளிடம் கோபப்படும் உத்தேசம் எல்லாம் அவனிடம் இல்லை போலும்.

"இல்ல எடுத்துட்டு வரல..." என்றாள் நித்யா.

"சரி கேன்டீன்ல போய் சாப்டுட்டு வரலாம்ல..." என சஞ்சய் கேட்க,

"இல்ல அங்க கூட்டமா இருக்கு… அதான்..." என்று அவள் முடிக்கும் முன்னே,

"அதான் திரும்பி வந்துட்டியா…" என்றான் தினேஷ்.

"ஆமா… ஆனா ஒருத்தவங்க சாப்பாடு வாங்கிட்டு வந்து தரேன்னு சொன்னாங்க..." என்றாள் நித்யா.

"யாரு??" என கொஞ்சம் சீரியசாகவே கேட்டான் தினேஷ். வரப்போகும் மூன்று வருடங்கள் இனி தங்களுடன் பயிலப்போகுபள் அவள்; அவளிடம் வீண் கோபங்கள் எதற்கு? தோழியாய் அவளை பார்த்தது தினேஷின் மனம்.

"நம்ம க்ளாஸ் மேட் ரஹீம் தான்..." என அவள் சொன்னதும் தினேஷூம் அவனுடன் அமர்ந்திருந்தவர்களும் சிரித்து விட்டனர்.

"ஏன் சிரிக்கறிங்க??" என இவள் சந்தேகமாய் கேட்க,

"நல்ல ஆள் பாத்து காசை குடுத்து போ… இன்னேரம் அது டீயும் போண்டாவுமா எத்தனை பேர் வயித்துக்குள்ள போச்சோ!!" என்றான் ஸ்ரீதர்.

நித்யா எதுவும் புரியாமல் திருதிருவென முழிக்க, "இங்க வா..." என கூப்பிட்டான் தினேஷ். தயக்கமாகவே எழுந்து சென்றாள் நித்யா.

நித்யா அருகில் வந்ததும், தினேஷிற்கு முன் பென்ஞ்ச்சில் இருந்த மாணவர்களை எழுந்து போக சொன்னான். டிபன் பாக்ஸின் மூடியில் அவன் கொண்டு வந்திருந்த சாதத்தை வைத்தவன், அதை அவளிடம் தந்து சாப்பிடுமாறு சொன்னான். நித்யாவிற்கோ தயக்கமாய் இருந்தது.

"தினம்லாம் தரமாட்டேன். ஏதோ பாவம்னு ஒரு நாள் தரேன். இவனுங்க பிடுங்கறதுக்குள்ள சீக்கிரம் சாப்பிடு..." என்றுவிட்டு உணவில் கவனமானான் தினேஷ்.

"தினேஷ் அம்மா செம்மையா சமைப்பாங்க… பயப்படாம சாப்பிடு..." என்றான் சஞ்சய். நித்யா இன்னும் தயங்கி கொண்டு நிற்கவே, மூடியில் இருந்த சாதத்தில் கொஞ்சத்தை எடுத்து உண்ண ஆரம்பித்தான் ஸ்ரீதர்.

"சொன்ன கேளு… உக்காந்து சாப்பிடு…" என சஞ்சய் சொல்ல, இதற்கு மேலும் மறுக்க வழி இல்லாது தினேஷின் உணவினை வாங்கி உண்ண ஆரம்பித்தாள். அப்பொழுது தான் கவனித்தாள் அங்கு இரண்டு டிபன் பாக்ஸ் தான் இருந்தது. ஆனால் இவர்களோ மூவர்; எப்படி உணவு போதும்? இதில் தான் வேறு சிறிது வாங்கிக் கொண்டோமே என நினைத்து நித்யாவின் முகம் சுருங்கி கொண்டே போக, அதற்குள் இன்னொருவன் வந்து அவன் டிபன் பாக்ஸில் இருந்து நித்யாவிற்கு கொஞ்சம் தந்தான். அவள் நிமிர்ந்து அவனை கேள்வியாய் பார்க்க,

"என்ன பாக்குற?? ஸ்ரீ ஹாஸ்டல்… தினேஷும் சஞ்சயும் கொண்டு வர்ற சாப்பாட்டை வழக்கமா மூனு பேரும் ஷேர் பண்ணி சாப்பிடுவாங்க… இன்னைக்கு உனக்கும் கொஞ்சம் கொடுத்திட்டாங்கள்ள… அவங்களுக்கும் பத்தாது உனக்கும் பத்தாது… அதான் கொஞ்சம் சாதம் வச்சேன்." என்றான் விளக்கமாக அவன்.

நித்யாவின் வருகைக்கு பின் தினந்தோறும் அனைவரும் உணவினை பகிர்ந்து சாப்பிடுவது வாடிக்கை ஆகிப்போனது.

"ஹேய் இங்க பாரு..." என தோளை தட்டி உலுக்கினாள் சுபி.

"நீ என்ன‌ எப்ப பாத்தாலும் அவுட் ஆஃப் வோர்ல்ட் போய்ற?? சரி இங்க பாரு..." என்றாள் சுபி.


மாய மரமொன்று
நேச விதைகள்
தெளித்த சிலநாளிகையில்
விருட்சமென நிற்கும்

ஆம் அது தான் நட்பு!!
 
எப்படி ஜி 🤩 இதெல்லாம் படிக்கும்போது நம்மளும் ஒரு காலத்துல அப்படித்தானே இருந்தோம் ...... ஆனா இப்ப கொஞ்சம் பீலிங்கா இருக்கு ஜி...... எத்தனை பேர் டப்பாவை பின்னாடி உட்கார்ந்து அவங்களுக்கே தெரியாம திறந்து சாப்பிட்டு இருப்போம் 🤪அதெல்லாம் யோசிக்கிறப்ப கொஞ்சம் சிரிப்பா இருக்கு😀😀😀😀😀😀😀😀
 
Top