நேசத்தூறல் -02

Advertisement

TNWContestWriter039

Active member
Member
தன் கன்னத்தில் பட்டென்று யாரோ அடிப்பது போல் இருக்க அவசரமாய் கண்களை திறந்தவள், தான் எங்கிருக்கிறோம் என்பதை உணர்ந்த பிறகே இவ்வளவு நேரம் வேண்டாததை நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது அவளுக்கு புரிந்தது.

அவசரமாக ஆழப்பெருமூச்செடுத்து. தன்னைசா சமன்படுத்திக் கொண்டவளாய், தன்னை அடித்த பிஞ்சு விரலைப் பற்றி இதழில் ஒத்தி எடுத்தாள்.

“தங்கம் எனக்கு முன்னாடி எந்திரிச்சிட்டீங்களா சாமி..” என்றிட,

அந்த நாலு வயது சிறுவனும், “நான் முன்னமே எந்திரிச்சுட்டேன் மம்மி. ஆனா நீங்க தான் என்னென்னமோ உளறிட்டு இருந்தீங்க, அதனால தான் உங்களை எழுப்பினேன்..” என்றான் மழலை குரலில்.

தான் உறக்கத்தில் ஏதோ புலம்பி இருக்கிறோம் போல, அதனால் தான் மகன் விழித்திருப்பான் போல என்று நினைத்தவளுக்கு மகனின் இருண்ட முகம் வேறு அவன் வெகுவாக பயந்திருப்பதை உணர்த்திட, பிள்ளையைத் தூக்கிக்கொண்டு கீழே இறங்கியவள் அவன் கண்ண கதுப்புகளில் முத்தச்சாரலை தூவி விட்டு காலைக் கடன்களை முடிக்க வைத்து, குளிக்கவைத்து, உடைமாற்றி வெளியில் அனுப்பியவள், “மாமாட்ட போ, அம்மா குளிச்சிட்டு வந்துடுறேன்..” என்ற சொல்லோடு அவனை அனுப்பி வைத்துவிட்டு இவளும் குளித்து முடித்து தயாராகி கீழே வந்தபோது அவளது அண்ணன் மிதுன்ராஜ் சமைத்த உணவுகளை டேபிளில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

பிள்ளையோடு அமர்ந்தவள் முதலில் குழந்தைக்கு ஊட்டி விட்டு தானும் சாப்பிட,
“வேந்தா...” என்றதும் சிறுவன் நிமிர்ந்து மாமனைப் பார்த்தான்.
“சொல்லு மாமா..”

“இன்னைக்கு ஒரு நாள் மட்டும் உங்க அம்மாவ கடைக்கு போக வேண்டாம்னு சொல்லு. வீட்டுலையே இருக்கச் சொல்லு..” என்றதும் திரும்பி தான் தாயைப் பார்த்தான் சிறுவன்.

“ம்மா.. நீ கடைக்கு போவ வேணாமாம், மாமா சொல்லுச்சு..”

“கடைக்கெல்லாம் போகாம இருக்க முடியாது. அம்மா போவேன்னு நீ சொல்லு..” என்று இவளும் மகனிடமே பேச்சை வளர்க்க,

“இன்னிக்கு உங்க அம்மாவ பொண்ணு பாக்க வர்றாங்க. எங்கேயும் போகக்கூடாது, வீட்டுல இருக்க சொல்லு. என்னை மீறி கடைக்கு போனா நான் மனுசனாவே இருக்க மாட்டேன்..” என்று பெரும் கோபத்தோடு சொன்ன தன் அண்ணனை நிமிர்ந்து பார்த்து முறைத்தவள்,

மகனிடம், “யாரும் எதுக்கும் இங்க வர வேணாம்னு சொல்லு வேந்தா. என் லைஃப்க்கு நீ மட்டும் போதும்னு நான் முடிவு பண்ணி ரொம்ப வருஷம் ஆகுது. மறுபடியும் என் வாழ்க்கையில யாரும் எதுக்காகவும் தலையிடக்கூடாதுன்னு நினைக்கிறேன். இதை உன் மாமனுக்கு புரியிற மாதிரி சொல்லு. என்னை மீறி என் வாழ்க்கையில நடந்த விஷயங்கள் போதும். மறுபடியும் அது போல எதுவும் நடக்க வேண்டாம்னு நினைக்கிறேன். அப்படி எனக்கு தெரியாம ஏதாவது பண்ணனும்னு நெனைச்சா நீயும் நானும் எங்காவது போயிடலாம். அவங்க இஷ்டத்துக்கு அவங்கவங்க வாழ்க்கையை வாழ்ந்துட்டு போகட்டும், என்னமோ பண்ணட்டும்..” என்றவள் ஒழுங்கா சாப்பிடாமல் கூட கையை கழுவிக்கொண்டு பிள்ளையைத் தூக்கிக்கொண்டு கடைக்கு கிளம்பி விட, பல வருடங்களாக தன்னிடம் கூட பேசாமல், ஒதுக்கி வைத்திருக்கும் தங்கையை அறவே வெறுத்தான் மிதுன். அதிலும் முகம் கொடுத்து கூட பேசாமல் தன்னை அறவே ஒதுக்கி வைத்திருக்கும் அவள் மீது ஒரு பக்கம் கோபம் கட்டுக்கடங்காமல் வருகிறது என்றால், வீணாக வீம்புக்கென்று தன் வாழ்வை இப்படி சிக்கலாக்கி கொண்டு வைத்திருக்கிறாளே என்று ஒரு பக்கம் கவலையும் இருக்கத் தான் செய்தது. அவள் வாழ்வை மாற்ற தமையனாய் இவன் நினைத்தால் மட்டும் போதுமா, நினைக்க வேண்டியவள் அல்லவா மனது வைக்க வேண்டும். பாவையவள் மனது வைப்பாளா?

பிள்ளைய தூக்கிக்கொண்டு கடைக்கு வந்திருந்தாள் அவள்... அவள் தான் அபி. முழு பெயர் அபிநிதினி. அபி என்றே அனைவரும் அழைப்பார்கள். கண்ணபிரான், ஆதிலட்சுமி தம்பதியரின் மூத்த பிள்ளை தான் மிதுன்ராஜ், அவர்கள் தவமாய் தவமிருந்து பெற்ற இரண்டாவது பிள்ளை தான் அபிநிதினி. 2 டிகிரி முடித்திருக்கிறாள் ஆனால் அதற்குள்ளாகவே ஏகப்பட்ட கஷ்டத்தையும், அவமானத்தையும், மனவேதனையையும் அடைந்து விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும். இதோ இப்போதும் கூட சிறிது நேரம் ஓய்வு கிடைத்தால் கூட பழைய நினைவுகளை மனம் அசைபோடும் என்பதால் தான் அனைத்து வேலைகளையும் தன் தலையில் இழுத்து போட்டு கொண்டு செய்து கொண்டிருக்கிறாள். மகன் இல்லா நேரங்கள் அவளுக்கு நரகம் தான்.

அவள் கடைக்கு வந்தபோது கடை ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டிருந்தது.

“மணி.. ஏய் மணி நீ தான் இன்னைக்கு கடை தொறந்தியா?” என்று குரல் கொடுக்க,

மணி என்றழைக்கப்படும் மணிமேகலை உள்ளே கூட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.

இவள் குரலில் முன்பக்கம் வந்தவள், “வாங்ககா. நான் தான் தொறந்தேன். இன்னைக்கு கொஞ்சம் வெள்ளுனே எழுந்தேன்கா அதனால தான் வீட்டு வேலை எல்லாம் முடிஞ்சதும் கிளம்பி வந்துட்டேன். நீங்க கேட்டதை தான் நானும் கேட்குறேன் நீங்க என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க. டைம் படி பார்த்தா இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும் நீங்க வீட்ல இருந்து கிளம்பி வர்றதுக்கு. கூடவே குட்டியை வேற கூட்டிட்டு வந்துட்டீங்க. ஏன் சார் இன்னைக்கு பிளே ஸ்கூல் போகலையா?”

“நீ கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ற மூடுல நான் இல்ல மணி. ஆல்ரெடி ரொம்ப டிஸ்டர்பா இருக்கேன். நான் இன்னைக்கு கடையைக் கிளீன் பண்றேன், நீ இவனைக் கூட்டிட்டு போய் பிளே ஸ்கூல்ல விட்டுட்டு வா..”

“ஆனா இன்னும் தொறந்து இருக்க மாட்டாங்களே அக்கா. 10:00 மணிக்கு மேலே ஆகுமே..”

“இவன் கூட விளையாடு இல்ல கொஞ்சம் தூரம் பார்க் வரைக்குமாவது கூட்டிட்டு போயிட்டு வா. நான் தனியா இருக்கணும், அவன கூட்டிட்டு போ..” என்றதும் சட்டென்று மணியின் முகம் மாறியது.

“நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுங்கக்கா செய்வேன். ஆனா உங்களை தனியா விட்டுட்டு மட்டும் போக மாட்டேன். நான் இங்க வேலைக்கு சேரும் போது இந்த கண்டிஷனை போட்டது நீங்க தான். இப்ப நீங்களே அதை மீற சொல்றீங்க, அது என்னால முடியாது. நான் இங்க தான் இருப்பேன் அதோ அந்த டெஸ்க்ல உட்கார்ந்து நானும் குட்டியும் விளையாடுறோம் நீங்க என்ன பண்ணனும்னு நினைக்கிறீங்களோ செய்யிங்க..” என்றவள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கொண்டு வெளிய வந்தவள் கடைய ஒட்டி போட்டு இருந்த பென்சில் அமர்ந்து குழந்தைக்கு விளையாட்டு கட்டியவாறு, கதை சொல்லியவாறு அமர்ந்திருந்தவள் உள்ளே எட்டி பார்த்தாள்.

கடையை சுத்தம் செய்யும் வேலையை தனதாக்கி கொண்ட அபி பரபரவென்று வேலை செய்து கொண்டிருக்க, மெதுவாக குழந்தையிடம் பேச்சு கொடுத்தாள் மணி.

“அக்கா ஒன்னு கேட்பேன் பதில் சொல்லுவியா குட்டி ..”

“சொல்லுவேன்..” என்ற குழந்தை கையில் இருந்த பொம்மையை ஆட்டி ஆட்டி பார்த்துக் கொண்டிருந்தது.

“வீட்டுல ஏதாவது சண்டையா? மாமா ஏதாவது அம்மாவை சொல்லிட்டாங்களா? அதனால தான் அம்மா இப்படி டென்ஷனா இருக்காங்களா?” என்றதும் குழந்தை காலையில் நடந்ததை யோசித்து பார்த்துவிட்டு,

“மாமா என்னமோ சொல்லுச்சா பதிலுக்கு அம்மாவும் கோவமா ஏதோ சொல்லிட்டு என்னை கூட்டிட்டு வந்துருச்சு..” என்று தத்தக்கா பித்தக்காவென்று தன் மழலைக் குரலில் சொல்லி வைத்திட, இவளுக்கு விஷயம் புரிந்து போனது.

'அந்தண்ணா தான் ஏதாவது சொல்லி இருப்பாரு. அதனால தான் காலையிலையே அக்கா இவ்வளவு டென்ஷனா இருக்காங்க. காலங்காத்தால எந்த பேச்சையும் பேசாதீங்கன்னு சொன்னா கேட்கவே மாட்டேங்குறாரு. எப்ப பாத்தாலும் இது மாதிரி பண்ணி வைக்கிறதே வேலையா போச்சு. இன்னும் செத்த நேரத்துல போன் பண்ணி தங்கச்சி என்ன பண்ணுதுன்னு கேட்பாருல்ல, அப்ப அவரைப் பேசிக்கிறேன்..' என்று மனதுக்குள் நினைத்தவளாய் குழந்தையுடன் பேசியவாறு அமர்ந்திருக்க, அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு வியர்வையைத் துப்பட்டாவின் முனையில் துடைத்துக் கொண்டு வெளிய வந்தாள் அபி.

“கிளீனிங் வேலை முடிஞ்சிடுச்சி மணி நீ போய் மத்த வேலையை பாரு. நான் இவனைக் கொண்டு போய் பிளே ஸ்கூல்ல விட்டுட்டு வர்றேன்..”

“அதுக்குள்ள எனக்கக்கா அவசரம், இப்பவே பிளே ஸ்கூல்ல கொண்டு போய் சேத்து விட்டுருக்கீங்க. அவன் சின்ன பிள்ளைக்கா.."

“விட்டுத்தான் ஆகணும் மணி, விட்டு தான் ஆகணும். படிப்பு எவ்வளவு முக்கியம்னு எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும். இப்ப இருந்தே அவனை பழக்கணும். இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு, எல்கேஜில கொண்டு போய் சேர்க்க போறேன். அதுக்கு மேலே அவன் கண்டிப்பா எல்லாத்தையும் கத்துப்பான். என் புள்ள என்னை மாதிரி மட்டும் இருக்கக்கூடாது. நான் ஒரு எமோஷனல் இடியட், எதையும் கையாள தெரியாத. ஒரு பிரச்சனை வந்தா தெளிவா யோசிக்கத் தெரியாதவ. நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு பிரிச்சு பாக்கத் தெரியாதவ. பட் அவன் அப்படி இருக்கக் கூடாது, அவனுக்கு எல்லாம் தெரியணும், அவன் கத்துக்கிட்டே ஆகணும். அவனைப் பத்தி நீ கவலைப்பட வேண்டாம், அவன் குழந்தை தான் இல்லைங்கல, குழந்தைளுக்கான எல்லாமே அவனுக்கு கிடைக்கும். அதே சமயம் அவன் பொறுப்பாவும் இருக்கணும், இப்ப இருந்தே அதை அவன் கத்துக்கணும். அப்ப தான் நாளைக்கு நான் இல்லன்னா கூட என் பையனால இந்த உலகத்துல சர்வே பண்ண முடியும்..” என்றது திக்கென்றது மணிக்கு .

“என்னக்கா பேச்சு பேசுறீங்க. நீங்க இல்லன்னாவா? என்ன வார்த்தை இதெல்லாம்? நீங்க இல்லாம வேந்தன் ஒரு நாளாவது இருந்திருவானா? அவனுக்கு நாங்க யாரும் இருக்கணும்னு அவசியம் கிடையாது, ஆனா நீங்க இருந்தாகணும். எவ்வளவு நேரம் விளையாண்டாலும் அப்பப்போ உங்கள பாத்துப்பான், உங்க பேஸ் தெரியலன்னா அவன் எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு உங்களுக்கே தெரியும். தெரிஞ்சும் எப்படி உங்களால இப்படி பேச முடியுது. இன்னொரு தடவை இப்படி சொன்னீங்கன்னா நிச்சியம் அண்ணனுக்கு கூப்பிட்டு சொல்லிடுவேன்..” என்றதும் அவளை முறைத்தாள் அபி.

“அவன்கிட்ட சொல்லுவியா? கூப்பிட்டு சொல்லு. எனக்கொன்னும் பயம் இல்ல. நானே அவனை அண்ணன்னு கூப்பிடுறது கிடையாது, அவன்கிட்ட பேசுறது கிடையாது, நீ சொன்னா மட்டும் என்ன மாறிடப்போகுது. உள்ள தங்கச்சியையே அவனால சமாளிக்க முடியல, இப்ப நீ ஒருத்தி புதுசா தங்கச்சியா கிடைச்சிருக்கியோ? எத்தனை தங்கச்சி கெடச்சாலும், எந்த தங்கச்சியையும் அவன் நல்லபடியா பார்த்துக்கப் போறது கிடையாது. என்னைப் பொறுத்த வரைக்கும் அவன் ஒரு சுயநல பிசாசு அவ்வளவு தான். இதோட இந்த டாபிக்கை விட்டுரு, அவனைப் பத்தி பேச ஆரம்பிச்சோம்னா அது எங்கையோ கொண்டு போய் நிறுத்திடும்..” என்று சொன்னவள் மணியை கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு குழந்தையைக் கொண்டு போய் பிளே ஸ்கூலில் விட்டு விட்டு வந்தாள்.

அவள் குழந்தையை விட்டுவிட்டு பாதி தொலைவு கூட வந்திருக்க மாட்டாள், வேகமாகவும் அதே சமயம், அவசரமாகவும் அந்த பிலே ஸ்கூலினுள் நுழைந்தான் அவன். கையில் இருந்த சாக்லேட்டுகளை எல்லாம் அங்கிருந்து குழந்தைகளுக்கு கொடுத்தவன், தன் பின்னே வந்தவரிடம் இருந்த பொம்மைகளை எல்லாம் ஒவ்வொன்றாக எல்லோரிடமும் கொடுத்துவிட்டு கடைசியாக வேந்தனிடம் வந்து நின்றவன், “உனக்கு என்ன பொம்மை வேணும். வேற எதுவும் வேணுமா?” என்று கேட்க,

அவனையே உறுத்து விழித்துப் பார்த்த அந்த குழந்தையோ, “கண்டவங்க வாங்கி கொடுக்குற பொம்மையை வாங்க கூடாதுன்னு எங்க மம்மி சொல்லி இருக்காங்க. நீங்க கொடுக்கிற பொம்மை எனக்கு வேண்டாம். அது மட்டும் இல்ல தெரிஞ்சவங்க தான் இந்த மாதிரி பொம்மை வாங்கி கொடுக்கணும், தெரியாத நீங்க எதுக்கு வாங்கி தர்றீங்க? அப்ப ஏதோ இதுல இருக்கு..” என்று அவன் கால் முட்டி வரை கூட இல்லாத வாண்டு, அந்த ஆறடி ஆண் மகனைக் கேள்வி கேட்க, எதிரில் இருந்தவன் விழிகளோ. ஆச்சரியத்தில் விரிந்தது..

“இன்னைக்கு அவருக்கு பர்த்தே தம்பி. அதனால தான் இப்படி பொம்மைகள் வாங்கி உன்னை மாதிரி குட்டீஸ்களுக்கு கொண்டு வந்து தர்றாரு..” என்று அவனுடன் வந்தவர். சொல்லும் கூட குழந்தைக்கு மாற்றமில்லை. பிறகு அந்த பிலே ஸ்கூல் டீச்சர் சொன்ன பிறகே யோசனையோடு அந்த பொம்மையை வாங்கிக் கொண்டான் வேந்தன்.

உடன் அனைவருக்கும் ஸ்னாக்ஸ்களும் கொடுக்கப்பட அதையும் கூட சந்தேகத்தோடு வாங்கிய குழந்தையை வைத்து கண்ணாமல் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் பார்ப்பது கூட குழந்தைக்கு சந்தேகத்தை கொடுக்க, “எதுக்கு என்னைய முழுங்குற மாதிரி பாக்குறீங்க..” என்று மழலை குரலில் சற்று அதிகார தோனியில் கேட்டு வைக்க, உடன் வந்தவர் தான் வம்படியாக அவனை வெளியே இழுத்து வரும்படி ஆனது.

கார் நிறுத்துமிடத்திற்கு வந்த பிறகும் கூட அவனுக்கு மனம் தாளவில்லை. இன்னும் சற்று நேரம் அங்கு இருந்திருக்கலாம் என்றே தோன்றியது. ஆனால் உடன் வந்தவரோ, “கொஞ்சமாச்சும் உனக்கு அறிவு இருக்காடா?ஆளை அசரடிக்கிற மாதிரி பாத்தா யாருக்கா இருந்தாலும் டவுட் வர தானே செய்யும். அம்மாவை விட இந்த பையன் ரொம்ப அறிவாளி, ரொம்ப சந்தேகம் வேற. வாய் கூட ஓவரு, என்னா கேள்வி கேட்குறான். சின்ன பிள்ளை மாதிரியா பேசுறான்...” என்று அந்த சிறுவன் சொன்ன வார்த்தைகளை நினைவு கூர்ந்து சொன்னான்.

அதற்கு இவனோ, இதழில் கசிய விட்ட குறுநகையோடு, “அப்பன் புத்தி கொஞ்சமாவது மகனுக்கு இருக்க வேண்டாமா?” என்றான் எதையோ மனதில் நினைத்து கொண்டு.

அருகில் இருந்தவனோ, “அதை நீ சொல்லக்கூடாது அவங்க அப்பா சொல்லணும்..” என்றதும், சுருக்கென்று நெஞ்சோரம் தோன்றிய வலியை மறைத்துக் கொண்டு நண்பனைக் கவலையாகப் பார்த்தான் இவன்.
“மறக்க நினைக்கிறதை ஞாபகப்படுத்தாத வருண். போலாம்..” என்றவன் மீண்டும் அந்த பிலே ஸ்கூலை பாக்க, அதே சமயம் ஜன்னலோரம் நின்று இவனைத் தான். வெறித்துப்
பார்த்துக் கொண்டிருந்தது அந்த சிறுவாண்டு..

- நேசத்தூறல் தொடரும்...
 

Advertisement

Advertisement

Back
Top