நீள்மதி யௌவனமே 3.1

Advertisement

அத்தியாயம் 3. 1

வெளியே மழை மெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது.

எப்போது வேண்டுமானாலும் கனமழை பெய்யும் என்பதால், வயலில் வரப்பு வெட்டிவிட்டு வந்த கார்முகிலன் வாசலில் நின்றபடி காலில் இருந்த சேற்றைத் தண்ணீரால் கழுவினான்.

“முகிலா… கையைக் கழுவிட்டு வாயா. சாப்பாடு எடுத்து வைக்கிறேன்…” என்று சமையலறையிலிருந்து குரல் கொடுத்தார் காவேரி.

“ஹ்ம்…” என்று சொல்லிவிட்டு கை, முகம் கழுவிக்கொண்டு வந்து மர நாற்காலியில் அமர்ந்தான்.

அவன் முன் சூடாகச் சோறு வைத்து, குழம்பை ஊற்றிக்கொண்டிருந்த காவேரியின் முகத்தில் ஏதோ யோசனை இருந்தது.

அதை கவனித்த கார்முகிலன்,

“என்னம்மா? ஏதாவது சொல்லணுமா?” என்று கேட்டான்.

சில நொடிகள் அமைதியாக இருந்தவர் மெதுவாக,

“இன்னைக்கு செந்தாமரை அண்ணன் போன் பண்ணிருந்தாரு…” என்றார்.

அந்த பெயரைக் கேட்டதும் கார்முகிலனின் புருவம் சுருங்கியது.

செந்தாமரை — அவன் தாயின் சித்தப்பா மகன்.

சென்னை போய் பெரிய தொழிலதிபராகவும், அமைச்சராகவும் உயர்ந்த பிறகு, சொந்த ஊருக்கு வருவதும் குறைந்து போயிருந்தது. ஆரம்பத்தில் குடும்பத் தொடர்பு இருந்தாலும், காலப்போக்கில் எல்லோரும் அவரவர் வாழ்க்கையில் மூழ்கி, பேசுவதும் அரிதாகிவிட்டது.

“அவரா? இத்தனை நாளைக்கு பிறகு என்னவாம்?” என சாதாரணமாகக் கேட்டான்.

காவேரி சற்று தயக்கத்தோடு அவனைப் பார்த்தார்.

“அவரோட பொண்ணை… உனக்குக் கட்டிக்கொடுக்கலாம்னு கேட்டாரு…” என்றார் மெதுவாக.

சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் கை அப்படியே நின்றது.

“என்ன?” என்று அதிர்ச்சியாகத் தன் தாயைப் பார்த்தான்.

ஆமாம் என்பதுபோல் தலையசைத்தவர்,

“நீள்மதி… ஞாபகம் இருக்கா? சின்ன வயசுல சென்னை வந்தப்போ உன்னோட பேசிக்கிட்டு, உன்னையே சுத்திக்கிட்டு இருப்பாளே…” என்றார் ஆசையோடு.

அவன் கண்கள் சற்றே யோசனையில் சுருங்கின. மங்கலான நினைவுகள் மனதில் வந்து சென்றன. இரட்டை ஜடை போட்டுத் துருதுருவென்று ஓடிக்கொண்டிருக்கும் சின்ன பெண் நினைவடுக்கில் ஓடியது.

“அந்த குட்டி வாலா?” என்று அவனுக்கே தெரியாமல் சிரிப்பு வந்தது.

“இப்போ குட்டி இல்லடா… பெரிய பொண்ணாயிட்டா,” என்றார் காவேரி சிரிப்புடன்.

“ஹ்ம்…” என்று மட்டும் சொன்னவன் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தான்.

ஆனால் காவேரியின் பார்வை முழுவதும் அவன் முகத்தில்தான் இருந்தது.

“என்னடா சொல்ற?” என்று மெதுவாகக் கேட்டார்.

சில நொடிகள் அமைதியாக இருந்த கார்முகிலன், தண்ணீர் குடித்துவிட்டு நிதானமாக எழுந்தான்.

“அம்மா… அவ்வளவு பெரிய சென்னை இடத்துல இருந்தவருக்கு திடீர்னு நம்ம ஞாபகம் வந்திருக்குன்னாலே ஏதோ காரணம் இருக்கும்மா…” என்றான் ஆழமான பார்வையுடன்.

அவனது பார்வையிலிருந்த பொருள் காவேரியின் மனதை சற்றே தடுமாறவைத்தது .

உண்மைதான்… செந்தாமரை எப்போதும் ஒவ்வொரு முடிவையும் பலமுறை யோசித்துத்தான் எடுப்பார். அதனால் கார்முகிலன் இப்படி கேட்பதும் தவறில்லை என்று அவருக்குள் தோன்றியது.

ஆனால் அடுத்த நொடியே அதை வெளிக்காட்டாமல்,

“அதெல்லாம் இல்லடா…” என்று மறுப்பாக சொன்னவர் . “அண்ணன் பேசுறப்போ குரலே ஒரு மாதிரி இருந்துச்சு. ஏதோ மனசுக்குள் பெரிய கவலையோட பேசுற மாதிரி எனக்குத் தோணிச்சு…” என்றார்.

அதைக் கேட்ட கார்முகிலன் “பணம் அதிகமா வந்தா நிம்மதி குறையும்மா…” என்றான் மெதுவாக சிரித்தபடி..

“ஏன்? நம்ம கிட்ட பணம் இல்லையா? அப்போ நாம நிம்மதி இல்லாம இருக்கோமா?” என்று உடனே கேட்டார் காவேரி.

“நாம உழைச்சு சம்பாதிச்சவங்க. நேர்மையா வாழ்றவங்க. ஆனா எல்லாரும் அப்படியா இருப்பாங்க?” என்றான் அர்த்தமாக.

“டேய்… இப்படி பேசாத…” என்று மெதுவாக அவனை அதட்டினார்.

பின் சிறிது யோசித்தவர்,

“எப்படியோ… நீள்மதி நல்ல பொண்ணு. படிச்சவ. அழகும் குணமும் இருக்குடா. அது போதாதா?” என்றார்.

“நீ பார்த்தியா?” என்று அவன் புருவம் உயர்த்த,

“போன மாசம் கோவில்ல பார்த்தேன். ஆனா அவளுக்கு என்னை ஞாபகம் இல்ல போல. கார்ல இருந்து இறங்கி நேரா உள்ள போயிட்டா…”

“பின்ன உன்னை இவ்ளோ வருஷம் ஞாபகமே வச்சி இருப்பாங்களோ? அதுவும் சென்னை பொண்ணுங்க அப்படித்தான் இருப்பாங்க…” என்றவன் அலட்சியமாகச் சொல்ல,

“அவ எல்லாரும் மாதிரி இல்லடா,” என்றார் காவேரி உறுதியாக.

அவளது குரலில் இருந்த நம்பிக்கை கார்முகிலனுக்கு சற்றே வியப்பாக இருந்தது.

“அவ்வளவு நல்ல அபிப்பிராயமா?” என்று கேட்டான்.

“சின்ன வயசுல கூட எவ்வளவு பாசமா இருப்பா தெரியுமா? நீ வயலுக்கு போறேன்னா உன் பின்னாடியே ஓடி வருவா. ‘முகிலன் மாமா…’ன்னு உன்னைச் சுத்திக்கிட்டே இருப்பா…”

அதை கேட்டவனுக்கு ஏனென்று தெரியாமலே உடலுக்குள் ஒரு சில்லென்ற உணர்வு ஓடியது.

பல வருடங்களாக மனதில் புதைந்து கிடந்த ஒரு சிறிய நினைவு, மழை வாசனை போல மெதுவாக உயிர் பெற்று எழுந்து உதட்டோரத்தில் சிறு சிரிப்பாக மலர்ந்தது.

“அப்போ அவளுக்கு வாய்தான் அதிகமா இருக்கும்…”

“அது இப்போவும் மாறல போல,” என்று காவேரி சிரித்தார்.

“எப்படிச் சொல்ற?” என்று கார்முகிலன் கேட்க,

“அண்ணன் பேசுறப்போ பின்னாடியே அவ யாருக்கோகிட்டையோ நல்லா வாதம் பண்ணுற சத்தம் கேட்டுச்சு…” என்றார் சிரிப்புடன்.

அதை கேட்டவன் சற்றே சிரித்தான். ஆனால் அடுத்த நொடியே அவன் முகம் மீண்டும் அமைதியாக மாறிவிட்டது.

காவேரி அவனைப் பார்த்தார்.

“நான் எதுவும் உடனே சொல்லல. முதல்ல உன்னிடம் கேட்டுட்டு சொல்றேன்னு சொன்னேன்…” என்றார்.

“சரி… இப்போ நான் என்ன சொல்ல சொல்றீங்க?” என்று நேராக விஷயத்துக்கு வந்தான்.

“சரின்னு சொல்லுடா… நானும் எவ்வளவு நாள்தான் உன்கிட்ட கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லிட்டு இருக்கேன்? நீயும் தள்ளிப் போட்டுட்டே போயிட்டே இருக்க. ஒருவேளை நீள்மதி நம்ம வீட்டுக்கு வரணும்னுதான் உன்னோட கல்யாணம் தள்ளிப்போச்சு போலடா…” என்றார்.

சற்றென்று அவர் சொன்னதை கேட்டவனின் இதயம் ஒருநொடி நின்று துடித்தது.

முகத்தில் வந்து போன உணர்வை அவரிடம் மறைத்தபடி பார்த்தவன்,

“அதான் என்னை கேட்டு சொல்றேன்னு சொன்னிங்களேம்மா… யோசிக்கிறேன்…” என்றுவிட்டு வேகமாக அறைக்குச் சென்றான்.

அறைக்குள் வந்தவனின் முகமோ உணர்வுகளைத் தொலைத்து இறுக்கமாக இருந்தது.

ஜன்னல் வழியாக வெளியே பெய்துக்கொண்டிருந்த மழையை சில நொடிகள் அமைதியாகப் பார்த்தான்.

அவன் மனதில் ஏதோ கணக்குகள் ஓடிக்கொண்டிருந்தன.

செந்தாமரை போன்ற மனிதர் திடீரென உறவைத் தேடி வருவது சாதாரண விஷயம் இல்லை.

ஆனால்…

ஏனோ “நீள்மதி” என்ற பெயர் மட்டும் அவன் மனதில் மெதுவாக ஒலித்துக்கொண்டே இருந்தது.


..................................................................

சென்னையில் மழை பெய்யவில்லை.

ஆனால் நீள்மதியின் மனதில் மட்டும் இடியுடன் கூடிய புயல் கொந்தளித்துக்கொண்டிருந்தது.

அந்த இரவு முழுவதும் அவளால் தூங்க முடியவில்லை.

படுக்கையில் புரண்டு புரண்டு கிடந்தவள், இறுதியில் எழுந்து பால்கனிக்கே வந்து நின்றாள்.

கீழே நகரம் இன்னும் விழித்திருந்தது.

சாலைகளில் வண்டிகள் ஓடிக்கொண்டே இருந்தன.

ஆனால் அவள் மனதில் ஓடியது ஒரே விஷயம் — அப்பா சொன்ன வார்த்தைகள்.

“அவன் நல்லவன் இல்ல…” அதை நினைத்தவளின் கண்கள் கலங்கின.

“ரிஷவன் அப்படிப்பட்டவர் இல்ல…” என்று தனக்குத்தானே மெதுவாக சொல்லிக்கொண்டாள்.

அந்த நேரத்தில் அவளது கைப்பேசி ஒளிர்ந்தது.

திரையில் ரிஷவனின் பெயர் தெரிந்ததும், அவள் உடனே அழைப்பை எடுத்தாள்.

“ஹலோ…”

“தூங்கலையா பேபி?” என்ற அவன் மெதுவான குரல் கேட்டதும், அவளது மனம் கொஞ்சம் அமைதியானது.

“ம்ஹும்…”

“ஏன்? என்னாச்சு?”

சில நொடிகள் அமைதியாக இருந்தவள் மெதுவாக,

“அப்பாவுக்கு நம்ம விஷயம் தெரிஞ்சிருச்சு…” என்றாள்.

அடுத்த நொடி அங்கே அமைதி நிலவியது.

“ரிஷவ்…?”

“ஹ்ம்… என்ன சொன்னாரு?”

“உங்களைப் பற்றி விசாரிச்சிருக்காரு…”

அவன் மெதுவாகச் சிரித்தான்.

“விசாரிக்கட்டும். நான் தப்பே செய்யல.”

அந்த நம்பிக்கையான குரல் அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

“ஆனா அப்பா… நீங்க பணத்துக்காகத்தான் என்னை லவ் பண்றீங்கன்னு சொல்றாரு…”

அந்த வார்த்தையைச் சொல்லும்போதே அவளது குரல் உடைந்தது.

“ஹேய்… நீயும் அப்படித்தான் நினைக்கிறியா?” என்று உடனே கேட்டான் அவன்.

“இல்ல… நான் உங்களை நம்புறேன்,” என்றாள் அவசரமாக.

“அப்போ போதும்,” என்றான் அமைதியாக.

பின், “சரி… அப்போ நாளைக்கு என்கூட வெளியே வருவதானே ?” என்று கேட்டான்.

அவள் சற்று தயங்கினாள்.

“அப்பா இப்போ ரொம்ப கோபமா இருக்காரு…”

“ஒரு அரை மணி நேரம் மட்டும் வா.”

சில நொடிகள் யோசித்தவள் மெதுவாக,

“ஹ்ம்ம் சரி…” என்று அழைப்பு முடித்து, ஆழமாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டாள் .

ஆனால் அவளுக்குத் தெரியவில்லை…

இதுவே அவளின் வாழ்வை தலைகீழாகப் புரட்டிப்போடப்போகும் சந்திப்பு என்று…

அதே வீட்டில் கீழே தனது அறையில் அமர்ந்திருந்த செந்தாமரை, சில புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அதில் ஒன்றில் ரிஷவன் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக நின்றுகொண்டிருந்தான்.

செந்தாமரையின் முகம் இறுகியது.

“என் பொண்ணு வாழ்க்கையில விளையாட நினைச்சிருக்க… உன்னை எப்படி நான் உயிரோட விட்டுவைப்பேன்…” என்று கோபமாக முனுமுனுத்தார்.

அவரின் அருகில் நின்றிருந்தார் தனபால் — செந்தாமரையின் நம்பிக்கைக்குரிய உதவியாளர்.

“சார்… இன்னும் விசாரிக்க வேணுங்களா?”

“வேணும்,” என்றார் கடுமையாக.

“அவனைப் பற்றி ஒரு விஷயம்கூட விடாம கண்டுபிடிங்க.”

“சரி சார்.”

தனபால் வெளியேறியதும், செந்தாமரை நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடினார்.

அவரின் மனதில் ஓடியது வேறு.

காவேரியிடம் பேசிய விஷயம்.

‘கார்முகிலன்.’

அந்த பெயரை நினைத்தவுடன் அவரின் முகத்தில் சிறிய நிம்மதி தோன்றியது.

“அவன் மாதிரி ஒரு ஆள்கிட்டதான் என் பொண்ணு பாதுகாப்பா இருப்பா…” என்று மனதுக்குள் நினைத்தார்.
 
அருமையான பதிவு 🤩 🤩
நீள்மதி...... பெயரில் மட்டும் மதி நீளமாக இருந்தால் போதாது மா 😥😥😥😥
தப்பானவனை தேர்ந்தெடுத்துட்டு அவனுக்காக தூக்கத்தை கெடுத்து உருகிட்ருக்க 😧😧😧😧
 
அருமையான பதிவு 🤩 🤩
நீள்மதி...... பெயரில் மட்டும் மதி நீளமாக இருந்தால் போதாது மா 😥😥😥😥
தப்பானவனை தேர்ந்தெடுத்துட்டு அவனுக்காக தூக்கத்தை கெடுத்து உருகிட்ருக்க 😧😧😧😧
மிக்க நன்றி சிஸ் ♥️😍பார்ப்போம் நீள்மதி தன் மதியை யூஸ் பண்றாளா இல்லையான்னு 😇
 

Advertisement

Advertisement

Back
Top