காலம் சில நேரங்களில் நதியைப் போல ஓடும், சில நேரங்களில் பாறையைப் போல உறைந்து நிற்கும். அடுத்து வந்த அந்த வாரம் இளமாறனுக்குப் பாறையைப் போல உறைந்து போயிருந்தது.
முதல் நாள் திங்கட்கிழமை மாலை, இளமாறன் வழக்கத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாகவே கடைக்கு வந்தான். அவனது கண்கள் நேராக அந்த மேசையின் வலது ஓரத்தில் நிலைத்தன. அவன் எழுதிய வரி அப்படியே இருந்தது. அதற்குப் பிறகு புதிய கிறுக்கல்கள் எதுவும் இல்லை. செவ்வாய், புதன் என்று நாட்கள் கடந்தன.அவள் வரவில்லை.
'தமிழ் அமுது' புத்தகக் கடையின் அந்தத் தேக்கு மர மேசை இப்போது அவனுக்கு வெறும் மரச்சாமானல்ல; அது ஒரு ரகசியப் பெட்டகமாகமாறியிருந்தது. நிலா வருகைக்காக அவன் காத்திருந்த ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாக நீடித்தது. காத்திருப்பின் தவிப்பை அவன் மனதிற்குள் கவிதையாக்கினான்:
கடிகார முட்கள்
தன்னிலை மறந்து ஓடுகின்றன...
நொடிகள் நிமிடம் ஆகின்றன,
நிமிடங்கள் மணிகளாகி
காலம் எனும் பெருவெளியில்
சத்தமில்லாமல் கரைந்து போகின்றன!
வசந்தங்கள் வருகின்றன,
வாடிய இலைகள் மீண்டும் துளிர்க்கின்றன,
புவிப்பந்து தன் சுழற்சியை
ஒருபோதும் நிறுத்துவதில்லை!
ஆனாலும்...
என்னுள்ளே மட்டும் ஏனோ
உறைந்து போயிருக்கிறது ஒரு கணம்!
சுற்றி நடக்கும் மாற்றங்கள்
என் விழிகளில் படுவதில்லை...
ஆயிரம் காலச்சக்கரங்கள் சுழன்றாலும்
உன் வரவுக்காய் காத்திருக்கும்
என் எதிர்பார்ப்பு மட்டும்,
அன்றைய அதே புள்ளியில்
இன்றும் அசையாமல் நிற்கிறது!
"என்ன மாறா, இன்னைக்குப் பேனா ஓடலையா? வெறும் காகிதத்தையே பார்த்துட்டு இருக்க?" மாணிக்கம் அய்யாவின் குரல் அவனது சிந்தனையைக் கலைத்தது.
இளமாறன் ஒரு போலிச் சிரிப்பை உதிர்த்தான். "இல்ல அய்யா, ஒரு முக்கியமான கட்டுரைக்குத் தலைப்பு யோசிச்சிட்டு இருக்கேன்," என்றான். ஆனால் உண்மையில் அவனது இதயம் வேறொரு தலைப்பைத் தேடிக் கொண்டிருந்தது. அது மாணிக்கம் ஐயாவிற்கும் தெரிந்திருந்தது.
கடையின் வாசலில் இருந்த மணி ஓசை எழுப்பும் போதெல்லாம், இளமாறனின் இதயம் ஒரு துடிப்பு அதிகமாகத் துடித்தது. குடை பிடித்துக்கொண்டு யாராவது உள்ளே நுழையும் போதெல்லாம், அது 'அவளாக' இருக்குமோ என்று அவன் தலையை நிமிர்த்திப் பார்ப்பான். ஒரு வாரமாகியும் அவள் வரவில்லை.
வாசல் கதவை
பார்த்துப் பார்த்தே
தேய்ந்து போனது
என் பார்வைகள்!
அவன் மனதிற்குள் கவிதை தோன்றியது.
அதே நேரம் மறுபுறத்தில், நிலாவிற்கும் அந்த வாரம் ஒரு நரகமாக இருந்தது. கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் ஒருபுறம் அவளை நெருக்குதலுக்கு உள்ளாக்க, அவளது தந்தை சிவராமன் வீட்டு மாடியில் ஏற்பாடு செய்திருந்த பிசினஸ் மீட்டிங்குகள் அவளது நேரத்தை முழுமையாக விழுங்கியிருந்ததால் தமிழ் அமுது புத்தகக் கடைக்குச் செல்ல நேரமில்லை.
தேர்வு அறையில் அமர்ந்து 'ஷேக்ஸ்பியர்' கவிதைகளுக்கு விடை எழுதிக் கொண்டிருக்கும்போது கூட, அவளது கண்கள் ஜன்னலுக்கு வெளியே தெரிந்த மழை மேகங்களையே பார்த்துக் கொண்டிருந்தன. அந்தப் பழைய கடையின் மணம் அவளது நாசியில் வட்டமிட்டது.
"நிலா... கான்சென்ட்ரேட் ஆன் யுவர் பேப்பர்," என்று இன்விஜிலேட்டர் எச்சரித்தபோதுதான் அவள் சுயநினைவுக்கு வந்தாள். அவளது பேனா பேப்பரில் ஓடிக்கொண்டிருந்தாலும், அவளது மனது அந்தப் பழைய மேசையில் அவள் எழுதிய வரியின் கீழே இருந்த அந்தப் பதிலையே அசைபோட்டுக் கொண்டிருந்தது.
'அவன் யாராக இருப்பான்? என் மௌனத்தை இவ்வளவு துல்லியமாக மொழிபெயர்த்த அந்த மனிதன் இப்போது அங்கே எனக்காகக் காத்திருப்பானோ?' - இந்த எண்ணம் அவளைத் தவிக்க வைத்தது.
வருவான் என்று
ஒரு ஏக்கம்...
வருவானா என்று
ஒரு சந்தேகம்...
இடையில் நான்!
வீட்டிற்கு வந்ததும், விக்ரமின் தந்தை தர்மலிங்கமும் மற்ற தொழிலதிபர்களும் அவளது தந்தையுடன் விவாதித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்குக் காபி கொண்டு போகும்போதும், உபசரிக்கும் போதும் நிலாவின் உடல் மட்டுமே அங்கே இருந்தது. அவளது ஆன்மா அந்தப் புத்தகக் கிடங்கிற்குள் தஞ்சம் புகுந்திருந்தது. விக்ரம் அவளிடம் ஏதோ பேச முயன்றபோது, அவள் ஒரு இயந்திரத்தனமான புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டுத் தப்பித்தாள்.
வியாழன் வெள்ளி என்று நாட்கள் கழிந்தன...
இளமாறனின் தவிப்பு இப்போது அவனது எழுத்துக்களில் எதிரொலித்தது. அவன் 'சமூக நீதி' பத்திரிகைக்காக எழுதிக்கொண்டிருந்த புலனாய்வுக் கட்டுரையில் கூட ஒருவிதமான ஏக்கம் கலந்திருந்தது.
"உண்மைகள் வெளிவருவதற்குக்
காத்திருக்கும் நேரம்,
ஒரு காதலனின் காத்திருப்பை விடக் கொடியது"
என்று அவன் அறியாமலேயே ஒரு வரியை அச்சிட்டிருந்தான்.
சதிஷ் அவனைக் கிண்டல் செய்தான். "என்னடா மாறா... இந்த வாரம் உன் கட்டுரையில காரத்தை விடக் காதல் அதிகமா தெரியுது? அந்தப் புத்தகக் கடையில ஏதாச்சும் 'புதிய புத்தகம்' அறிமுகமாகிடுச்சா?"
இளமாறன் பதிலை மறைத்தான். ஆனால் அவனது உள்மனம் 'ஆம்' என்று கத்தியது. அது அச்சிடப்படாத, யாரும் படிக்காத, ஒரு பென்சில் கிறுக்கலில் தொடங்கப்பட்ட விசித்திரமான புத்தகம்.
ஆறாம் நாள் மாலை, மழையின் வேகம் அதிகரித்திருந்தது. இளமாறன் புத்தகக் கடையின் ஜன்னல் ஓரம் அமர்ந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு முறை கார் வந்து நிற்கும் போதும் அவனது கண்கள் மின்னின. ஆனால் ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே மிஞ்சியது. அவன் அந்த மேசையின் மீது தன் விரல்களை மெல்ல வருடினான். அவள் எழுதிய அந்த வரியைத் தொட்டான். அது அவளது கரம் பிடிப்பதற்குச் சமமான ஒரு ஸ்பரிசத்தைத் தந்தது.
'ஏன் வரவில்லை? அவளுக்கு ஏதேனும் ஆபத்தா? அல்லது இது வெறும் தற்செயலான நிகழ்வா?' - ஆயிரம் கேள்விகள் அவனது தலைக்குள் ஓடின.
ஏழாம் நாள். ஞாயிற்றுக்கிழமை மாலை.
நிலா தனது கடைசித் தேர்வை முடித்துவிட்டு வெளியே வந்தாள். தந்தை அவளை அழைத்துச் செல்லக் கார் அனுப்பியிருந்தார். ஆனால் அவள் டிரைவரிடம், "நீங்க வீட்டுக்குப் போங்க, நான் சுவேதா கூட வர்றேன்," என்று பொய் சொல்லிவிட்டு ஒரு ஆட்டோவில் ஏறிப் பறந்தாள்.
மழை பெய்து கொண்டிருந்தது. அவளது உள்ளங்கைகள் வியர்த்திருந்தன. ஒரு வாரம் கடந்துவிட்டது. அந்த மனிதன் இன்னும் அங்கே எழுதியிருப்பானா? அல்லது அவள் வராததால் ஏமாற்றமடைந்து அந்த வரியை அழித்திருப்பானா?
அதே நேரத்தில், இளமாறன் தனது பையை எடுத்துக்கொண்டு கிளம்பத் தயாரானான். "இன்னைக்கும் வரமாட்டாள் போலிருக்கிறது," என்று அவன் மனதுக்குள் நினைத்துக்கொண்டான். அவனது முகம் வாடியிருந்தது. அவன் கடையின் வாசலை நோக்கி நடந்தபோது, மணி ஒலித்தது.
கதவு திறக்கப்பட்டது. மழையில் நனைந்தபடி, கையில் ஒரு கறுப்பு நிறக் குடையுடன், ஒரு தேவதையைப் போல நிலா உள்ளே நுழைந்தாள். அவனைக் கடந்து மேசையை நோக்கி நடந்தாள்.
இளமாறன் அப்படியே சிலையாக நின்றான். அவன் அவளை இதுவரை பார்த்ததில்லை, ஆனால் அவள் உள்ளே நுழைந்த அந்த நொடி, அவனது ஆழ்மனம் சொன்னது - "இவள் தான் அவள்!"