Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ - 38

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம் -38

உமையின் அலைபேசி அடிக்க ..எடுத்து பார்த்தால் சத்யா அத்தை!

இப்போது அத்தை எதற்கு அழைக்கிறார்?
இதுவரை ஒருபோதும் அவர் அழைத்ததில்லை .. இவள் தான் மரியாதை நிமித்தம் அழைத்து இரு நிமிடங்கள் பேசுவாள்.

இப்போது முதல் முறையாக தானே அழைக்கிறார்.

எடுத்து பேசியவளுக்கு விஷயம் உடனே புரிபட்டுவிட்டது. அவர் தான் சுற்றி வளைக்க வில்லையே .. போட்டு உடைத்து விட்டாரே!

கேட்ட இவளுக்குதான் தலை சுற்றியது. இதேதடா புது வம்பு ?

இவள் பேசிக் கொண்டிருக்கையிலேயே அன்னை செகண்ட் காலில் வரவும் ..அவருக்கும் விஷயம் தெரியும் என்று புரிந்தது .

"சரி அத்தை . யோசித்து சொல்றேன் " எனவும் மறுபுறம் பொறுமையிழந்த குரல் "சரி சரி சீக்கிரம் சொல்லு" என்றபடி ..

"பாரேன் ஸ்ரீ .. இவளும் பெரிய லார்டு லபக்கு தாசு மாதிரி யோசிச்சு சொல்றேன்னு சொல்றா . கொழுப்பு ரொம்ப ஏறிப்போச்சு இதுகளுக்கெல்லாம் " என்று படபடத்தபடி தொடர்பை துண்டித்தார்.

உமை , தன் தாயை அழைத்தவள் "சொல்லுங்கம்மா "என்று கூறும்முன்பே தாய் படபடத்தார்.

"உமை.. உங்க அத்தை பேசினாங்கடி. உன்னை ரஞ்சித்திற்கு பெண் கேக்கிறாங்க . என்ன சொல்றதுன்னே தெரியலை."

தாய் தன் அண்ணியாரை பார்த்தாலே பயம் கொள்வார் என்று நன்றாக தெரியும் உமைக்கு .

"என்ன சொன்னீங்கம்மா ?" என்றாள் அம்மா ஏதும் வாக்களித்திருக்க கூடாதே என்ற நினைவுடன்.

"அவங்க குரலை கேட்டாலே எனக்கு நடுக்கம் வந்துரும். சின்ன வயசில இருந்தே அப்படிதான்.இப்போ திடீர்னு உன் பொண்ணை குடு என்றால் என்ன செய்ய ? சரின்னு வாய் வரை வந்துவிட்டதுடி. எப்படியோ தைரியத்தை திரட்டி உன்னை கேட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன்" என்றார் அன்னை பரீட்சை எழுதிவிட்டு வந்த சிறுபிள்ளை போல .

அப்பாடா என்றிருந்தது உமைக்கு.

"ஏம்மா எதுக்கு இப்படி பயந்து சாகரீங்க ? அவங்க உங்க அண்ணி அவ்வளவுதான். பணம் படைத்தவங்கன்றதுக்காக அவங்க சொல்றதெல்லாம் கேக்க முடியாது. என்னை கேக்காமல் ஏதாவது உறுதி குடுத்திட்டீங்களோன்னு பயந்திட்டேன். நீங்க எதுவும் பேச வேண்டாம் . நானே பக்குவமா பேசிக்கிறேன் " என்றவள் வார்த்தைகளே அவளது பதில் என்ன என்று சொல்லாமல் சொல்லின .

அடுத்து அவளது விரல்கள் அழுத்திய எண் வேறு யாராக இருக்க முடியும்? அவளது உயிர் தோழன் ப்ரித்விக்கு தான் அழைத்தாள்.

அவனுக்கோ விஷயம் கேள்விப்பட்டதும் தன் தாயின் திட்டம் தெள்ளென புலப்பட்டுவிட .. அதற்கு பதில் திட்டம் போட்டவன் "நீ சரின்னு சொல்லிடு உமை " என்றான் கூலாக .

"டேய் மச்சான் ..என்னடா சொல்றே ?" என்று பதறியவளிடம் தன் திட்டத்ததை விளக்க சரியென்று ஒத்துக் கொள்ளத்தான் வேண்டியிருந்தது.

"உன் ரஞ்சித் அத்தானுக்காக செய் உமை"

கோகுலம் இல்லம்!

மறுபடியும் அதே ஹால் .

இரு குடும்பத்தினரும் அங்கே கூடியிருக்க ..
சத்யபாமா , ஸ்ரீ இருவர்மட்டுமே மலர்ந்தமுகத்துடன் இருந்தனர் . மற்ற யார் முகமும் தெளிவாக இல்லை .

நவநீத கிருஷ்ணன் வழக்கமான மென்னகையோடு மோகன் தனுஜா இருவரையும் வரவேற்றார். என்ன இருந்தாலும் சம்மந்தி தானே... இப்போது சம்யுவை ப்ரித்வி மணந்திருப்பதால்!.

மரியாதை நிமித்தம் அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிய மோகன் அமைதியாக அமர்ந்துவிட .. அம்ரிதா குனிந்த தலையை நிமிர கூட இல்லை .. தனுஜாவும் யாரிடமும் பேசவில்லை .

சத்யா தான் தொடங்கினார்.

"இதோ பாருங்க .. ரஞ்சித்துக்கும் உங்கள் பெண்ணிற்கும் ஊரறிய நிச்சயம் நடந்திருக்கு. ஆனால் அதுக்கப்புறம் நடந்தது உங்களுக்கே தெரியும். உங்க பொண்ணு என் பையனை வேண்டாம்னு சொல்லி பிரிஞ்சிட்டாள்" என்றதும் மோகன் கோபமாக இடையிட்டவர் " உங்க பையனும் தாங்க வேண்டான்னு சொன்னாரு . அதை மறந்துட்டு பேசறீங்க"

"சரிதான். அவனுக்கு புத்தி தெளிஞ்சிருச்சி. அதுதான் தப்பிச்சிட்டான். இந்த புத்தி முதல்லயே வந்திருந்தால் இவ்வளவு கஷ்டப்பட்டு நிச்சய விழாவையே நடத்தியிருக்க வேண்டாம்" என்றாள் ஸ்ரீஜா.

அதற்குமேல் சம்யுவால் பொறுக்க முடியவில்லை.. அந்த நிச்சயத்திற்கே இவர் செய்த அலப்பறை என்ன? ஏதோ இவர் கஷ்டப்பட்டு எல்லா ஏற்பாடுகளையும் செய்தாற்போல் என்னவொரு பித்தலாட்டம் என்று தான் தோன்றியது.

" நிச்சய விழாவொன்னும் நீங்க நடத்தலையே ! நாங்க தானே நடத்தினோம். அதனால நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம்" என்றாள் நறுக்கென்று.

"வாடி என் இன்ஸ்டன்ட் மருமகளே ! ஒரு கல்யாணத்தை பேசி முடிவு பண்ண முன்னாடி நம்மளால முடியுமான்னு யோசிக்கணும். தகுதிக்கு மீறி ஆசைப்பட்டால் இப்படித்தான். உன்னை அப்புறமா கவனிச்சிக்கிறேன்." என்றார் .

"சத்யா.." என்று இடையிட்ட நவநீ.. "தேவையில்லாததை எல்லாம் பேச வேண்டாம்மா .. எதுக்காக எல்லாரையும் கூப்பிட்ட.. இன்னும் என்கிட்டே கூட நீ சொல்லலை" என்றவரின் குரல் குற்றம் சாட்டியது .

அதையெல்லாம் பொருட்படுத்தினால் அவர் சத்யபாமா அல்லவே!

"ஏன் உங்ககிட்ட சொன்னால் என்ன செய்வீங்க ? மறுபடி உடைஞ்சு போனதை ஓட்ட வைக்க பார்ப்பீங்க . அதனால்தான் சொல்லை" என்றவர் அனைவரையும் மிதப்பாக பார்த்தபடி "அபிஷியலாக இந்த திருமண நிச்சயத்தை ரத்து செய்வதாக அறிவிக்கணும். இப்போ அரசல் புரசலா எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சாலும்.. நம்ம முறையா கல்யாண பேச்சுவார்த்தையை ரத்து செஞ்சிட்டோம்னு எல்லாருக்கும் அறிவிக்கணும். என் பையனுக்கு வேறு ஒரு பெண் பார்த்து முடிவு செஞ்சாச்சு" எனவும் அம்ரு திகைத்துப்போய் ரஞ்சித்தை பார்க்க.. அவனுக்கும் புதிய செய்திதான் . அவன் முகத்திலும் அதிர்ச்சி.

சம்யு குழப்பத்துடன்ப்ரித்வியை பார்க்க..'நான் பார்த்து கொள்கிறேன்' என்பதாக அவன் விழிகள் மூடி திறக்க .. சம்யுவுக்குள் திடம் ஏற்பட்டது. அத்தை என்ன குழப்பம் செய்திருந்தாலும் தன்னவன் சரி செய்துவிடுவான் என்று.

"ஆமாங்க என் நாத்தனார் பெண் உமையை தான் பேசி முடிச்சிருக்கோம் .." என்றதும் ஒவ்வொருவருக்கும் ஒரு நினைவு ஓடியது.

சம்யுவுக்கு உமையை நன்கு தெரியும் என்பதால்.. அதுவும் கோவை சென்று வந்ததில் இருந்து இருவரும் அடிக்கடி பேசிக் கொள்வார்கள்.. அதனால் அவளுக்கு நிம்மதி தான் ஏற்பட்டது .

நவநீக்கோ தன்னிடம் கூட கலந்து கொள்ளாமல் தன் மனைவி தங்கையிடம் பேசியது உதாசீனப்படுத்த பட்ட உணர்வை ஏற்படுத்த.. ரஞ்சித்திற்கோ 'எதற்கு இப்படி தாய் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். உமை எனக்கு மனைவியா ? சிறு வயதில் இருந்து தங்கை போல தானே பார்த்திருக்கிறேன். சொன்னால் அன்னை மனம் வருந்துவாரா ? என்றெல்லாம் யோசிக்க.. அம்ருவோ அதிர்ந்து அமர்ந்திருந்தாள்.. தான் இன்னும் அவனது நினைவை உதற முடியாமல் இருக்க ..இவனோ அடுத்த திருமணத்திற்கு தயாராகிவிட்டானா என்ற கேள்வி அவளை குடைந்தது.

அவன் முகத்தையே உற்று பார்க்க.. அவன் நிமிர்ந்து நோக்கினால் தானே?

"நாளைக்கே இந்த திருமணம் ரத்துன்னு அறிவிக்க போறேன். அதுமட்டுமில்லை.. சீக்கிரமா இன்னொரு கல்யாணத்தையும் ரத்து செய்ய தான் போறேன் .." என்று பூடகமாக சம்யுவை பார்க்க.." மாமியாரே .. முறைப்படி ரெஜிஸ்டர் பண்ணியாச்சு.. நீங்க நெனைச்சாப்புல ரத்துல்லாம் பண்ண முடியாது" என்றாள் நக்கலாய்.

"ஹ்ம் " என்று நொடித்துக் கொண்டவர் " பாப்போம் பாப்போம்" என்றார்.

மோகன் அதுவரை அமைதியாய் இருந்தவர் .. சத்யாவின் சொற்களில் கோபம் கூட "எங்க பொண்ணுக்கும் மாப்பிள்ளை வரிசையா நிப்பாங்க .. உங்க பையன் கல்யாணத்துக்கு முன்னாடி என் பொண்ணு கல்யாணத்தை முடிச்சி காட்டறேன் பாருஙக" என்றார் வீறாப்பாய்.

கணவர் ஏதாவது வார்த்தைகளை விடும் முன்னர் அவரை அங்கிருந்து கிளப்ப பார்த்தார் தனுஜா .

" கிளம்புவோம் வாங்க ." என்று அவர் கைபிடித்து இழுத்து சென்றார்.

சம்யுவும் அம்ரிதாவும் பெற்றோரின் பின் கிளம்ப .. ப்ரித்வி அவர்கள் பின்னோடு வந்தான்.

"அண்ணி " என்று அவன் அம்ருவை அழைக்க ..

"என்னை அப்படி கூப்பிடாதீங்க ப்ரித்வி.. " என்றாள் எங்கோ பார்த்தபடி.

"எனக்கு நீங்க தான் அண்ணி.. ஏன்னா என் அண்ணன் மனசில எப்பவுமே நீங்க தான் இருப்பீங்க " எனவும் வெடித்தாள் அம்ரு.

"உங்க அண்ணன் மனசில நான் இருக்கேனா ?. பாத்தீங்களா.. நாங்க பிரேக்கப் பண்ணி மூணு மாசம் கூட ஆகலை ! அதுக்குள்ள வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்க தயாராயிட்டான். நான் அவன் வாழ்க்கையில இருக்கவே முடியாதுன்னு முடிவு பண்ணிட்டான். நீங்க என்னடானா அவன் மனசுல நான் இருக்கேன்னு கதை விடறீங்க"

"அண்ணி அண்ணன் எப்பவுமே அம்மாவுக்கு செல்ல பிள்ளையா இருந்துட்டான்.. அவங்க பேச்சுக்கு மறுபேச்சு பேச மாட்டான், அவங்க பேச்சை மீறுற தைரியம் அவனுக்கு வர கொஞ்ச நாளாகும். அதுவரை காத்துக்கிட்டு இருந்தால் போதும்."

"எங்கப்பா சொல்றதுக்காக நான் கல்யாணம் பண்ண கூடாது அதுதானே. என்னால உங்கண்ணன் மாதிரி சொடக்கு போடும் நேரத்தில் மனசை மாத்திக்க முடியாது. என்னை நம்பலாம்" என்றவள் திரும்பி நடந்துவிட கதவோரம் நின்று இவர்கள் பேசியதை கேட்ட ரஞ்சித்திற்கு.. தான் ஏன் இத்தனை கோழையாய் இருக்கிறோம். தாயை எதிர்த்து ஏன் பேச முடியவில்லை தன்னால்..என்ற கேள்வியே சுற்றி வர.. போகும் தன்னவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.
 
Last edited:
Top