Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 05(A)

Advertisement

lekha_1

Active member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

ரொம்ப நாள் காணாமல் போயிட்டேன்... சாரி... வரலாற்றுக் கதைகள் படித்து, அதனுள் மூழ்கிவிட்டேன்...

இதோ அடுத்த பதிவு.


காதல் 05(A)

1010

சமீபகாலமாக கடுப்போடு சுற்றிக்கொண்டிருந்தாள் ஆதினி. அவளை சக்தி படுத்தும் பாடு அப்படி.

கடந்த சில மாதங்களாக அவளை பின்தொடர்வதே சக்தியின் வேலையாக இருந்தது. அதில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்வதே அவளுக்கு பெரும் தலைவலியாக இருந்தது.

அவள் வேலைக்கு செல்வதே தன் தாயை நன்கு பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான். தன்னை கஷ்டப்பட்டு வளர்த்தவரை எந்த துன்பமும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே அவள் விருப்பம்.

ஆனால், அவரும் சில நேரம் வருத்தத்தோடு அமர்ந்திருப்பார். அவர் பெண் தான் வரும் சம்பந்தத்தை எல்லாம் ஓட ஓட விரட்டிக்கொண்டிருந்தாளே!

ஆம்! ஆதினிக்கு தாயை தன்னோடு வைத்துக்கொள்ள விருப்பம். அவள் எண்ணம் போல் தனக்கு வரப்போகும் மாமியாரை தன்னுடன் வைத்துக்கொள்ள இதுவரை யாரும் இசையவில்லை. எனவே, எல்லாமே தட்டிப்போக, அதனால் தாய்க்கும் மகளுக்கும் சில நேரம் முட்டிக்கொள்ளும்.

ஆனால், சென்ற வாரம் அவளை காண வந்திருந்தவனை ஓட ஓட விரட்டும் வேலையை சக்தி எடுத்துக்கொண்டு திறம்பட செய்து முடித்திருந்தான்.

இதனை கண்ட அவள் தோழி அவளிடம் தனியாக சொல்லிவிட்டு சென்றிருக்க, அவனை என்ன செய்வது என்று புரியாமல் இருந்தாள் அவள்.

‘இந்த கூறுகெட்டவன் ஏன் இப்படி செய்யுறான்னு தெரியலியே! இது மட்டும் ஆத்தாளுக்கு தெரிஞ்சுது, அடுத்து வாற வரனுக்கு என்ன கழுத்த நீட்ட சொல்லீருமே, என்ற பேரு கெட்டு போயிடும்னு. எப்படியும் இந்த ஒதவாக்கரைக்கு என்ன கண்ணாலம் கட்டிக் கொடுக்காது. அது இவனுக்கு புரியனுமே!’ என அவள் யோசித்துக்கொண்டிருக்க,

‘ஏண்டி, அப்போ உன்ற ஆத்தாளுக்கு சரின்னா, உனக்கு பிரச்சினையில்லையா?’ என்று அவள் மனம் கேட்க, ஒரு முறை அவனையும் அவன் அலப்பறைகளையும் நினைத்துப் பார்த்தவள், ‘சே சே! அவன மாதிரி ஒரு ஊக்காலி எனக்கு வேண்டவே வேண்டாம்’ என்று தலையை குலுக்கிக்கொண்டாள்.


*******

ஒரு வாரம் கடந்திருக்க, பள்ளியில் இருந்து ஊருக்கு வரும் பேருந்தில் அவள் ஜன்னலோரத்தில் அமர்ந்திருக்க, அதற்கு பின்னே ஃபுட்போர்டில் தொங்கியவாறு அவளை யாரும் அறியாதவாறு பார்த்திருந்தான் சக்தி.

‘வந்துட்டான் என்ற நிம்மதிய கெடுக்க… ஏ! ஆனமல ஆத்தா! ஒன்ன நடந்தே வந்து பாத்து நூத்தி எட்டு ரூவா உண்டியல்ல போடறேன்… இவங்கிட்ட இருந்து என்ன காப்பாத்து… இவனோட சடவு எடுக்க முடியல என்னால’ என்று அவள் அவர்கள் வழிப்படும் மாசாணியம்மனிடம் வேண்ட, அவரோ மறுபரிசீலனை கூட இல்லாமல் நிராகரித்தார்.

“என்ன சத்தி! இப்போ எல்லாம் இந்த பஸ்ஸுலயே வாராப்புல இருக்கு. என்ன சமாச்சாரம்?” என்று அவர்கள் ஊர் பெரியவர் ஒருவர் கேட்க,

“அது ஒன்னுமில்ல பெருசு! நம்மலும் உருப்படனுமுல்ல… அதா இந்த பஸ்ஸுல டிரைவரா இருக்கவன் என்ற பிரண்டு… அவனாட்ட கத்துக்கலாமுன்னு தா…” என்று அவன் இழுக்க,

“அடப்போடா, உன்ற காட்ட வெச்சு வெள்ளாம பாக்குறத விட்டுப்போட்டு இங்க வந்து நா முச்சூடு கெடந்து அல்லல் படனுமா?” என அவர் கேட்க,

“அதெல்லா பண்ணிக்கலாம் பெருசு… அங்க பாரு… அது உன்ற சொந்தக்காரவுக தான?” என்று அவரை வேறு பக்கம் திருப்பி கோர்த்துவிட்டு தானும் நூல் விடும் வேலையை பார்க்கலானான்.

அவன் பார்வை அவள் முதுகை துளைக்க, திரும்பி முறைக்க கூட முடியாமல் இருக்கும் தன் நிலையை நொந்தவாறு அமர்ந்திருந்தாள் ஆதினி.

ஒரு வழியாக ஊரை நெருங்க, தப்பித்தோம் பிழைத்தோம் என்று இறங்கி வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள் அவள்.


******

சிட்னி, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரம். அதன் துறைமுகமும் மனதை கொள்ளை கொள்ளும் கடற்கரைகளும் மிகப் பிரசித்தம்.

அந்நாட்டின் மிகப்பெரிய மெட்ரோபாலிட்டன் நகரங்களில் ஒன்றான இந்த நகரத்தில் தன் காலைப் பதித்தது இந்திய அணி. அவர்கள் அடுத்து ஆடப்போவது ஆஸ்திரேலியாவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளும் ஐந்து ஒரு நாள் போட்டிகளும்.

அந்நாட்டின் வெவ்வேறு நகரங்களில் போட்டி நடைபெறவிருக்க, முதல் போட்டி சிட்னியில் என்பதால் அங்கே வந்திருந்தார்கள்.

சிட்னியின் புகழ்பெற்ற விடுதியில் அவர்களுக்கான அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அங்கே அழைத்து வரப்பட்டனர் அனைவரும்.

தனதறைக்கு வந்தவன் தவறாமல் தாய் தந்தைக்கு அழைத்து கூறிவிட்டு அனிலாவிற்கு அழைத்தான். அவ்விடம் ஸ்விட்ச் ஆஃப் என்று வர, பொதுவாக ரெக்கார்டிங் செய்யும்போது அவள் இவ்வாறு செய்வது வழக்கம் என்பதால் அவன் குளியலறை நோக்கி சென்றான்.

ஏனோ, ஆஸ்திரேலியாவில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து அவளை பார்க்க வேண்டும் என்றே இருந்தது அவனுக்கு.

அடிலைடிலும் ஒரு மேட்ச் இருக்கிறது அவர்களுக்கு. அதனால், அன்று அவளை காணலாம் என்று நினைத்துக்கொண்டான்.

அவன் வெளிவரவும், அறையின் அழைப்புமணி அடிக்கவும் சரியாக இருந்தது.

‘ரூம் சர்வீஸை அழைக்கவில்லையே! யாராக இருக்கும்?’ என்று எண்ணமிட்டவாறே கதவை திறந்தவன் முன்பு க்ளோஸ் அப் விளம்பர ஆட்-ஐ ஓட்டியபடி நின்றிருந்தாள் அனிலா.

அவளை கண்டவுடன் அவனுள்ளே ஒரு பரவசம் எழ, அவளை காற்றும் புகமுடியாத அளவு கட்டிக்கொள்ளுமாறு அவனுடம்பின் அத்தனை செல்களும் ஏங்க, அதனை செயல்படுத்தக் கூட தோன்றாது அவளையே பார்த்திருந்தான் முகில்.

“ஹே முகி! என் சர்ப்ரைஸ் எப்படி இருக்கு?” என அவள் தன் ஒற்றைப் புருவம் தூக்கி கேட்க, அவள் செய்கையில் வீழ்ந்தவன், தன்னைக் கட்டுப்படுத்த கைகளை பேண்ட் பேக்கட்டினுள் விட்டவன், ஆழ மூச்செடுத்து, “நீ எங்க இங்க?” என்று கேட்டான்.

“எங்க அங்கிள் வீடு இங்க இருக்கு. அவர பார்த்துட்டு வரேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். முதன்முதலில் எங்க ஊருக்கு வர்ற. உன்ன வெல்கம் பண்ணனும்னு தோனுச்சு. அதான்” என்று அவள் கூற, அவனுக்கு அவள் வார்த்தைகள் ஐஸ்க்ரீமை இதயத்தில் எடுத்து வைத்ததுபோல் இருக்க,

அப்போதுதான் அவளை தான் வெளியேவே நிற்கவைத்திருப்பது புரிய, “உள்ளே வா” என்றவன் அவளை சோபாவில் அமர வைத்தான்.

“ஒரு நிமிஷம், நான் வந்ததும் கீழே போகலாம்” என்றவன் தன்னறையினுள் சென்று மறைய, சிறிதுநேரத்தில் அவளுக்கும் தன் தாயிடம் இருந்து அழைப்பு வர, அதனை எடுத்து பேசலானாள்.

“கேயன் ஆஹ்யோ அம்மா?”

…..

“மான் டீக் ஆஹியான்”

…..

“சப் டீக் ஆஹே!”

…..

“ஸோமர் ராத்”

….

“டீக் ஆஹே!” என்று அவள் வைத்துவிட, அவளெதிரே நின்றிருந்தான் முகில்.

“நீ இப்போ பேசியது என்ன மொழி? ஹிந்தி மாதிரியும் தெரியுது, அப்படி இல்லைங்கற மாதிரியும் தெரியுது” என அவன் கேட்க,

“சிந்தி. பழைய சமஸ்கிருதம்ல இருந்து வந்த மொழி. சோ, கொஞ்சம் கொஞ்சம் ஹிந்தி மாதிரி இருக்கும்” என்றாள்.

“அட… சிந்தி பொண்ணா நீ? எனக்கு நிறைய சிந்திஸ் தெரியும்!” என்று அவன் சொல்ல, புருவம் உயர்த்தி கேள்வியை தொக்கி நின்றது அவள் முகம்.

“யூ நோ, அத்வானி, தமன்னா, ஹன்சிகா, இவ்வளவு ஏன், எங்க தல அஜீத்தை தெரியாதவங்க தமிழ்நாட்டுல இருக்கவே மாட்டாங்க” என அவன் சொல்ல,

“முகீஈஈஈஈ…” என்று பல்லை கடித்தாள் அவள்.

“ரன்வீர் சிங் கூட தெரியும்மா! ப்ராமிஸ்” என்று அவன் சொல்ல,

“போடா… லிஸ்ட வெச்சுருக்கான் பாரு! இவங்க யாருக்காச்சும் உன்ன தெரியுமா?” என்று வினவினாள்.

“இன்னைக்கு தெரியலைன்னா என்ன? ஒரு நாள் அவங்களோட இருக்க ஃபோட்டோ எடுத்து என் இன்ஸ்டால போடுவேன் பாரு!” என்க,

“கண்டிப்பா நடக்கும் முகி” என்றவள் பின்பு, “ரொம்ப பசிக்குதுடா! நீ எங்கேயும் வெளிய போயிடுவியோன்னு சரியா சாப்பிடக் கூட இல்ல” என்க,

“சரி சரி, வா! சாப்பிடலைன்னா என் தலையை குடைவ” என்றவன், அவளை அழைத்துக்கொண்டு கீழே சென்றான்.


******

‘இந்த பஸ் இன்னைக்கு தான் இப்படி கால வாரனுமா? ஆத்தாக்கு சொன்னதால பரவாயில்ல. ஆனாலும், சீக்கிரமா ஊடு போய் சேரனும்’ என்று நினைத்தவாரே அவள் நடந்துகொண்டிருந்தாள். வெளிச்சம் சிறிது சிறிதாக விடை பெற்றுக்கொண்டிருக்கும் நேரமிது.

சிறிது நேரத்திற்கு முன்பு நடந்ததை அவள் மனம் அசைபோட்டது.

அன்று அவளுக்கு சிறப்பு வகுப்பு இருக்க, அதை முடித்து பேருந்து நிலையத்திற்கு வந்தவள் வெகு நேரம் காத்திருந்தும் பேருந்து வரவில்லை.

பொறுமையாக இருந்தவள் முன் பைக்கில் வந்து நின்றான் சக்தி.

“ஏ புள்ள! ஸ்பெஷல் க்ளாஸ் முடிஞ்சு லேட்டானா எனக்கு சொல்லலாமுல்ல? பஸ் பிரேக்டவுனாமா!” என்று கேட்டான்.

அவனை முறைத்தவள், “நா என்னத்துக்கு ஒனக்கு சொல்லோனும்?” என்று நடக்கத் துவங்க,

அவளை மறித்தவாறு நின்றவன், “என்ன புள்ள? இப்படி சொல்ற? என்ற மனசுல என்ன இருக்குன்னு ஒனக்கு இன்னுமா புரியல?” என்று ஆதங்கத்தோடு கேட்க,

“என்ற வழிய மறைக்காம நகரு! ஆத்தா நா ஊட்டுக்கு இன்னும் வந்து சேரலைன்னு தவிச்சு போயிருக்கும்” என்றாள்.

“அதா ஆத்தா தவிக்குமுன்னு தெரியுதுல்ல, என்ற கூட வாரது? ஒன்னய பத்திரமா ஊருக்கு கூட்டிப்போறன்” என்று சொன்னான் அவன்.

“அடியாத்தி! பொழுது சாஞ்ச நேரத்துல ஒன்னோட நா போய் ஊருக்குள்ள எறங்குனா என்னவாவுறது?” என்று அவள் கேட்க,

“அப்போ பகலுல போய் எறங்குனா பரவாயில்லையா?” என்று கேட்டான் அவன், அதுவே முக்கியம் எனக் கருதி.

“உன்ன!!!” என்று அவனை முறைத்தவள்,

“என்ற பின்னாடி வராத!” என்றவாறு மேலும் வேகமெடுத்து நடந்தாள்.

“சரி புள்ள! நா ஒன்ற பின்னாடி வரல! ஆட்டோ ஏதாவது புடிச்சு தாறேன். அதுலயாவது போ! இப்படி நடக்காத புள்ள! எத்தன தூரம் நடக்கோனும்? காலு வலிக்கும் அம்மிணி!” என்க,

ஆட்டோவில் வைத்து விடுகிறேன் என்ற அவன் கூற்றில் இறங்கி வந்தவள் சிறிது நேரம் நிற்க, வெகு நேரமாகியும் கிடைக்காமலே இருக்க, மீண்டும் அவளிடம் நேரமாவதை உணர்ந்து கேட்க ஆரம்பித்தான் சக்தி.

அதில் கடுப்பானவள் நடக்க ஆரம்பித்திருக்க, அவளை தனியே விட மனமில்லாமல் அவள் பின்னோடே வண்டியை தள்ளியவாறு வருகிறான்.

“நா வேணா ஊருக்கு தள்ளி நிப்பாட்டிர்றேன் கண்ணு! வந்து வண்டில ஏறு” என்று அவன் இறங்கி வந்து அவளருகே நின்று கேட்க,

“நீ எனக்கு எந்த ஒத்தாசையும் செய்யத் தேவையில்ல. ஒன்ற சோலி இங்க ஆவாது. வேற எவகிட்டயாச்சும் இதெல்லாம் வெச்சுக்க” என்றவள் ஒரு அடி எடுத்து வைக்க,

அவள் கையை பிடித்தவன், “நா முன்ன மாதிரி எல்லாம் இல்லம்மா… சொன்னா புரிஞ்சுக்க!” என்று கெஞ்சினான். ஏனோ அவள் அவனை விளையாட்டாகக்கூட மற்றவரோடு இணைத்துப் பேசுவது கசந்தது அவனுக்கு.

“விடு என்ன!” என்றவள் அவன் கையில் இருந்து தன் கையை உறுவி அவனை லேசாக தள்ளிவிட, அதில் ஓரடி பின்னால் நகர்ந்தவன் அங்கே இருக்கும் புதரைத் தாண்டி அது மறைத்துக்கொண்டிருந்த கிணற்றை கவனிக்கவில்லை..

சாலையின் ஓரத்தில் எந்த தடுப்பும் இல்லாமல் இருந்த கிணறின் ஓரத்தில் நின்று இருவரும் பேசிக்கொண்டிருக்க, சக்தியை அவள் பிடித்து தள்ளியதில் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள அவள் கையையே அவன் பிடிக்க, இருவருமே விழுந்தனர் அந்த கிணற்றுக்குள்.



(இப்படி ரோடு பக்கத்துல கிணறு இருக்குமான்னு கேட்கிறவங்களுக்கு: எங்க ஊருக்கு போற வழில இப்படி ஒன்னு இருக்கு, அதுவும் மூன்று சாலைகள் இணையும் இடத்துல. என்ன, அங்க தண்ணி இருக்காது, இங்க நான் தண்ணிய மட்டும் ஃபில் பண்ணிக்கிட்டேன்!)



சிந்தி மொழி என்பது அராபிக் எழுத்து வடிவத்தில் தான் பொதுவாக எழுதுவார்கள். அதனை தேவநகரி வடிவத்தில் தேடிப்பார்த்து கிடைக்காததால் சிற்சில சொற்கள் மட்டுமே இங்கு எழுத முடிந்தது.
 
Top