Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 05(B)

Advertisement

lekha_1

Active member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

கதையோட அடுத்த பதிவு இதோ... சென்ற பதிவிற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. முகில்-அனிலா பேச்சுவார்த்தை அனைத்தும் ஆங்கிலத்தில் தான். அதனை தமிழில் இங்கே எழுதுகிறேன்... (முன்னேயே சொல்ல வேண்டியது... மறந்துட்டேன்... மன்னிச்சுருங்க...)

காதல் 05(B)

1102

“அய்யோ… போச்சு… மொத்தமா என்ற மானம் போகப்போகுது…” என்று இருந்த பயத்தில் ஆதினி உளறிக்கொண்டிருந்தாலும், அவள் கைகளிரண்டும் அந்த ஆழம் அதிகம் இல்லா கிணற்றில் தன்னிச்சையாக செயற்பட்டு நீச்சலடித்தவாறு இருந்தன.

“இப்போ என்ன ஆச்சு உனக்கு? நல்லாத்தான இருக்க?”

“ஆமாமா… இந்த பாழடைஞ்ச கிணத்துக்குள்ள ஒன்றகோட நல்லாத்தான் இருக்கேன்… ஒன்னோட சேத்து வெச்சு பாத்தா என்ன ஆவும்?” என்று அவள் நொடித்துக்கொள்ள,

“சித்த பேசாம இருக்குறியா? வெளிய போக வழி ஏதாவது பாப்போம்” என்று அவளை வாயடைத்த சக்தி, தன் கைப்பேசியை எடுத்து இயக்க, அந்தோ பரிதாபம்!

தன்னால் முடிந்தளவு தண்ணீரை குடித்து உயிரை விட்டிருந்தது அது.

“என்ற ஃபோன் போச்சு… ஒன்றது எங்க?” என்றவன் கேட்க, அப்போது தான் அவளும் அதனை தேடினாள். கைப்பையோ சாலையிலேயே விழுந்திருந்தது.

அதனை அவள் சொல்ல, “சுத்தம்! இனி யாராவது வந்து நம்ம காப்பாத்துனா தான் உண்டு” என்றான் அவன். என்ன செய்வதென்று தவித்துக்கொண்டிருந்தனர் இருவரும்.

தனியாக கிணற்றில் விழுந்திருந்தால் கூட பரவாயில்லை, இவனோடு இருப்பதைக் கண்டால் என்னவெல்லாம் நடக்குமோ என்ற எண்ணத்தில் அவள் இருக்க, அவனோ முற்றிலும் வேறோர் எண்ணத்தில்.

அப்போது அவ்வழியே வண்டியொன்று செல்லும் ஒலி கேட்க, சட்டென்று எதுவும் யோசிக்காமல் கத்தியிருந்தாள் அவள்.

“காப்பாத்துங்க! காப்பாத்துங்க!” என்று.

இரவு நேரத்தில் குரல் கேட்கவும், முதலில் பேய் பிசாசோ என்று பயந்தவர், அக்குரல் கிணற்றில் இருந்து கேட்கவும், ஓடும் எண்ணத்தை கைவிட்டவர், “யாரது?” என்று கேட்டிருந்தார்.

“சார்! நீங்க யாருன்னு தெரியல! கொஞ்சம் காப்பாத்துங்க சார்! கிணத்துல தவறி விழுந்து…. விழுந்துட்டேன்!” என்றிருந்தாள் ஆதினி, சக்தி தன் காதில் முனுமுனுத்தததைக் கேட்டு சிறு தடுமாற்றத்துடன்.

உடனே அவர் நடந்து வந்து கைப்பேசியின் உதவியுடன் உள்ளே ஒளியைப் பாய்ச்ச, சட்டென்று தண்ணீருள் மூழ்கிவிட்டான் சக்தி.

அவன் செயலை ஆதினி அதிர்ந்து பார்த்துக்கொண்டிருக்க, “டீச்சர் புள்ளையாம்மா?” என்று கேட்டார் அவர்.

அப்போது தான் அந்தக் குரலில் தங்கள் ஊரை சேர்ந்தவர் என்று அறிந்து கொண்டவள், “ஆமாங்கோ! இருட்டுல கால் தவறி கேணிக்குள்ள விழுந்து போட்டேன்… வெளிய எடுத்து விடுங்கய்யா!” என்று கெஞ்ச,

அவரும் உடனே தள்ளி நின்று மற்றவர்களுக்கு அழைத்து உதவிகேட்டார்.

அந்த சமயத்தில் நீரினுள் இருந்து வெளியே வந்த சக்தி, “இங்க பாரு கண்ணு… இவர பார்த்து பயப்பட வேண்டியதில்ல, உன்னய பத்திரமா ஊட்டுக்கு கொண்டு சேத்துப்போடுவாரு. நானும் இங்க இருக்கேன்னு மட்டும் ஆருகோட்டையும் சொல்லிப்புடாத” என்றான். அவளிடம் முன்பும் அவள் மட்டும் இருக்கிறாள் என்று மட்டும் சொல்லுமாறு கேட்டிருந்தான்.

காதோடு பேசியவனை மறுத்து, “நீயும் வா! அர்த்த ராத்திரில இங்க என்ன இருக்கோ?” என்று அவனையும் விட மனதில்லாமல் அழைத்தாள் அவள்.

“வேண்டாம் புள்ள. நீ மட்டும் அவங்களோட போ. விடிஞ்சதும் எப்படியாச்சும் ஏறிடுறேன்” என்றவன் அதற்கும் மேலே பேசுவதற்குள் ஆட்கள் வரும் ஓசை கேட்க, அத்தோடு முடிந்ததைப் போல் கிணற்றின் மற்றொரு ஓரம் சென்றான்.

‘ம்க்கும்! இந்தாளு கூட நீ அனுப்பியதா இருக்கலாம்… அது ஆருன்னு நா அறியுமுன்ன நீ தண்ணிக்குள்ள மறையல? ஆரு கண்டா? என்னைய கூட்டிட்டு போய் ஊட்டுல விட்டுப்போட்டு வந்து உன்னய தூக்குவாங்களா இருக்கும்… நீ என்னதா செஞ்சாலும் என்ற கிட்ட ஓ பருப்பு வேகாது…’ என்று நொடித்துக்கொண்டவள் மனதில் இருந்த சிறு கரிசனமும் வந்த வேகத்தில் பறந்துவிட்டது.

அதன்பின் அவனை கண்டுகொள்ளாமல் உதவிக்கு வந்தவர்கள் மூலம் ஏறியவள் தன் பையை எடுத்துக்கொண்டு அவர்களுடனே சென்றும்விட்டாள்.

சக்தி அவர்கள் செல்லும் வரை சிறு ஓசை கூட எழுப்பாமல் அமைதியாகவே இருந்தான். அந்த ராத்திரி நேரத்தில் அவர்கள் உபயோகப்படுத்திய டார்ச் வெளிச்சமும் கைப்பேசி வெளிச்சமும் ஆதினி மேள் மட்டுமே விழுமாறு அவர்கள் வைத்திருக்க, சக்தியும் அங்கே இருப்பது யாரும் அறியாமலே போய்விட்டது. அதுவும் சக்தி ஒதுங்கியிருந்த இடம் மேலே இருந்து பார்க்கும்போது சிறிது உள்வாங்கியிருக்க, அதுவே மறைப்பாயிற்று.

ஆதினியும் சக்தி இருப்பதை சொல்லாததால் அவனை யாருமே அறியவில்லை.

வீட்டிற்கு சென்றவளை அவள் தாயார் பிடி பிடியென பிடிக்க, அதை சமாளித்தவள் களைப்பினாள் விரைவில் உறங்கியும் போனாள்.

மறுநாள் காலை வழக்கம்போல் ஆதினி பள்ளிக்கு கிளம்ப, சக்தியின் வீட்டில் இருந்து அழுகை சத்தம் கேட்கவும், என்னவென்று கேட்டவளுக்கு தெரிந்தது, அவன் இன்னும் வீடு வந்து சேரவில்லையென்று.

‘அப்போ அவன் நெசமாலுமேத் தான் சொல்லியிருக்கானா?’ என்றெண்ணியவள் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.

இதே யோசனையோடு பேருந்து நிலையம் வந்தவள் எண்ணத்தைப் படித்தவன் போல எதிரே வந்தான் சக்தியின் தோழன் ஒருவன். முகில் இல்லாதபோது அவனே சக்தியுடன் திரிபவன். அவனை கண்டதும் ஓடிச் சென்று வழியை மறைத்திருந்தாள்.

“என்னம்மா!” என்று ஐயத்தோடு கேட்டான் அவன்.

“அண்ணே! சத்தி ராவுக்கு ஊட்டுக்கு வரலியாம்ன்னே! அவன் ஊருக்கு வெளிய இருக்க கெணத்துக்கோட்ட இருக்கானான்னு வெசயா போய் பாருங்கன்னே! நேத்து அந்தப்பக்கம் தா சுத்திட்டு கெடந்தான்” என்று அவள் சொல்ல,

“இந்த விஷயமெல்லாம் உனக்கெப்படி அம்மிணி தெரியும்?” என்றவன் கேட்க,

“ராத்திரி அந்த வழியா வரப்போ பாத்தேன்… இப்போ அது முக்கியமில்லைங்க… அவனப்போய் பாருங்க மொதல” என்று அவனை துரத்தியபின் தான் அவள் மனம் அமைதியானது.


*******

“எப்படி உன் வீட்டில் இவ்வளவு தூரம் விட்டாங்க?” என்று கேட்டான் முகில். அனிலாவும் அவனும் உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

“அடிக்கடி இவ்வாறு வருவது வழக்கம் தான். அதனால் எனக்கு இங்கே நிறைய ஃப்ரெண்ட்ஸ். அவங்கள பார்த்துட்டு வரேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்” என்று அவள் உரைக்க,

“ஓ… ஆனால், நீ என்னை பார்க்கறேன்னு சொல்லிட்டே வரலாமே! எதற்கு பொய் சொல்லனும்?” என்று அவன் கேட்க,

“அப்புறம், நான் வாங்கி கட்டிக்கவா? உனக்கு எப்படி தெரியும்? எதனால தெரியும்ன்னு அத்தனை கேள்வி கேட்பாங்க” என்றவாறு வேறு பேச்சில் கவனத்தை திருப்பலானாள்.

“இன்னும் ரெண்டு நாள் நான் இங்கே இருப்பேன். உனக்கும் அடுத்த மேட்ச் அங்க தான?”

“ஆமாம்! நானே அங்க உன்னை எங்கேயாவது பார்க்க முடியுமான்னு கேட்க நினைத்தேன். அதற்குள்ளே இங்கேயே வந்துவிட்டாய்” என்றவனுக்கு புன்னகையே பதிலாய் கொடுத்தாள் அவள்.

முகில் அவள் நாட்டிற்கு வருகிறான் என்றதும் அவளே அவனை வரவேற்க நினைத்திருந்தாள். ஆனால், விமான நிலையத்தில் சரியாகப் படாததால் தீபக்கின் உதவியோடு அவன் அறைக்கே வந்திருந்தாள்.

அதன்பின் பேசினார்கள் பேசினார்கள், பொழுது சென்று அந்த உணவகப் பணியாளர், ‘ரொம்ப நேரமா இங்கேயே உக்காந்துட்டு இருக்காங்களே!’ என்று காண்டாகி துரத்தி விட யோசிக்கும் வரை பேசினார்கள்.

அனிலாவை இங்கு பார்த்ததும் தனக்கு தோன்றிய உணர்வு என்னவென்பதை தீவிரமாக ஆராயவேண்டும் என்று எண்ணியிருந்தான் முகில். அது தனக்காக ஒருவர் இவ்வளவு தூரம் மெனக்கெட்டதால் வந்ததா அல்லது அதையும் தாண்டியா? என்று அறியவேண்டியிருந்தது அவனுக்கு. ஆனால், அதற்கு மாறாக அவன் மனதோ, அவள் கண்களையும் செய்கைகளையும் கண்ணத்தில் கை வைத்து அமர்ந்து ரசித்துக்கொண்டிருந்தது. அனிலாவிற்கு அவனிடம் தோன்றிய இந்த மாற்றம் எதுவும் தோன்றவில்லை போல. அவள் சாதாரணமாகவே இருந்தாள்.


பார்த்தால் பார்க்கத் தோன்றும்

பேரை கேட்கத் தோன்றும்

பூப்போல் சிரிக்கும் போது காற்றாய் பறந்திட தோன்றும்

அழகாய் மனதை பறித்துவிட்டாளே!

மாலை மங்கிய பொழுதில் விடை பெற்ற இருவரும், இரவுப் போர்வையில் அனைவரும் துயில் கொள்ளும் பொழுதில் ஃபோன் பேசத் தொடங்கி பேயுடன் டூயட்டும் பாடிவிட்டு கண்ணயர்ந்தார்கள்.

********

“எப்படி மாப்ளே இங்க விழுந்த?” என்று கேட்டான் சக்தியின் நண்பன். ஆதினி கூறியவுடன் தன் நண்பனைத் தேடி வண்டியை கிளப்பியிருந்தான் அவன்.

கிணற்றினுள் எட்டிப்பார்க்க, சக்தி அங்கே ஒரு மரக்கிளையினைப் பிடித்து தொங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. விடிந்ததும் சிறிது சிறிதாக ஏறியவன், கிணற்றினுள் இருந்து வளர்ந்த ஒரு மரத்தின் கிளையைப் பற்றி அதன்மூலம் மேலே ஏற முயற்சிவாறு இருந்தான். பின், அவனுக்கு உதவி வெளியேற உதவிய அவன் நண்பன், தற்போது விவரம் கேட்டுக்கொண்டிருந்தான்.

நடந்தவை அனைத்தையும் கேட்ட ரத்தினம், “ஏன்டா, அந்த புள்ளய நீயும் பல நாளா ஃபோலோ பண்ற. ஒன்னும் வேலைக்காவல. நேத்தே அதோட நீயும் இருக்கன்னு காட்டியிருந்தா ரெண்டு பேத்துக்கும் லவ்ஸுன்னு சொல்லி பொண்ணு கேட்டுருக்கலாமுல்ல... அதுவும் வேற வழியில்லாம ஒத்துக்கிட்டிருந்துருக்கும்” என்று சொல்ல,

“அவள அவமானப்படுத்தி தா எனக்கு அவ கெடைக்கனுமுன்னா அவ எனக்கு வேண்டா மச்சா… மொதல்ல அவள ஏதாவது செய்து அவமானப்படுத்தனுமுன்னு தா அவ பின்னாடி வந்தேன்… ஆனா எனக்கே தெரியாம எனக்குள்ள புகுந்துட்டாடா… நல்ல பொண்ணுடா… தான் விரும்புற பொண்ணுக்கு எந்த களங்கமும் ஏற்படுத்தாம அவள கைபிடிக்குறதுல தா அந்த காதலனுக்கும் காதலுக்கும் அழகு. அவள நா என்னைக்குமே கஷ்டப்படுத்த மாட்டேன் மச்சா…” என்று சக்தி சொல்ல,

‘எப்படி இருந்தவன் இப்படி ஆகிட்டான்!’ என்று வியந்து போய் பார்த்தான் ரத்தினம். இதுவரை சக்தி இவ்வாறு வருத்தத்தோடு பேசி அவன் கண்டதே இல்லை. என்றுமே கலகலப்பாக இருப்பவனை கலங்கடித்து வேடிக்கை பார்க்கிறது காதல். அவன் மாற்றம் ஆச்சரியம் அளித்த அதே சமயம், இவன் அருமை அவளுக்கு புரியவேண்டுமே என்ற ஆதங்கமும் வந்தது அவன் தோழனுக்கு. ஆதினி தான் சக்தியை கண்டுகொள்ளவே மாட்டேன் என்கிறாளே!

பல நாட்களாக ஆதினியை பின்தொடர்ந்து வந்தாலும் அவன் என்றுமே அவளிடம் சென்று பேசியதில்லை. ஆனால், உனக்காக நான் இருக்கிறேன் என்று ஏதேனும் வகையில் உணர்த்திக்கொண்டே இருப்பான். இவற்றை எல்லாம் யாரும் அறியாதவாறு இதுவரை செய்துவந்தான் சக்தி. நேற்று மட்டுமே பேச வேண்டிய கட்டாயமாகி விட்டது. இதற்கு முன்பு எப்போதும் அவன் அனைவரிடமும் வம்பிழுப்பது போலவே அவளிடமும் இழுத்துவிட்டிருக்க, அது வினையையும் கூடவே இழுத்திருந்தது. பல பெண்களிடம் அவன் போட்ட கடலை வேறு அவன் காதலுக்கு எதிரே இமயமலையாய் நிற்கிறது. இவை இரண்டையும் தாண்டி சக்தியின் காதலை என்றேனும் உணர்வாளா ஆதினி?


கல் மனசில் காதல் வந்ததென்ன என்ன

ஊற்றெடுத்து அன்பைத் தேடி போவதென்ன

காலையிலே மாலை வர ஏங்குதடி

மாலை வந்தால் உன்னை மனம் தேடுதடி

பேச்சிலும் மூச்சிலும் நான் காணும் அத்தனையிலும்

கண்மணி நீ தானடி

சின்னக்குயிலே… பைத்தியம் ஆனேனடி!
 
Top