Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 09

Advertisement

lekha_1

Active member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

சென்ற பதிவிற்கு ஆதரவளித்தவர்களுக்கு ரொம்ப நன்றி... இதோ, அடுத்த பதிவு... ஒரு பிரச்சனையும் வரப்போகுது, கூடவே சில அப்டேட்ல ஒரு திருமணமும் வரப்போகுது... சோ, எல்லாரும் அதற்கான ஆடை தேர்வை இப்போல இருந்தே ஸ்டார் பண்ணிருங்க...


காதல் 09

1216


‘இவன எல்லாம் திருத்தவே முடியாது… எப்போ ஆரு கெடைப்பான்னே அலைவான் போல…’ என்று சக்தியை வறுத்தெடுத்தவாறே தன் வீட்டினுள் நுழைந்தாள் ஆதினி.

அவள் சக்தியை முகிலின் வீட்டில் வைத்து முறைத்து ஒரு மாதமாகப் போகிறது. இன்று வரை அவனோடு பேசவில்லை. முன்பும் ஒன்றும் கொஞ்சி குளாவிவிட மாட்டாள் தான். ஆனால், இப்போது எல்லாம் அவனைத் திட்டுவதற்காக வாய் திறப்பதை கூட நிறுத்திவிட்டாள்.

‘அவனுக்குத் தான் நா யாரோவாச்சே! ஒரு நாலு நாள் பின்னாடி அலைஞ்சுட்டு பாக்கலைன்னதும் வேற பக்கம் பார்வைய திருப்பிடுவான்…’ என்று அன்று நினைத்தவளுக்கு அதுவரை அவள் கடைக்கண் பார்வை காட்டாமல் இதே உக்கிரப்பார்வை காட்டியும் தன்னை விடவில்லை என்பது மறந்துவிட்டிருந்தது. அவன் விலகிப்போகக் கூடும் என்னும் எண்ணமே சிறிது வலியைக் கொடுக்க, அவள் கொண்ட வீம்பு அவன் புறம் அண்ட விடவில்லை.

அதற்கு ஏற்றாற்போல் ஒரு வாரம் அவளையே தொடர்ந்தவன், அவளது நடவடிக்கையைக் கண்டு இது தேறாது என்று நினைத்தான் போலும். பிற பெண்களிடம் கடலை போட ஆரம்பித்துவிட்டான். அதுவும், ஆதினியின் முன்னாலே!

ஒரு நாள் எப்போதும் காவலுக்கு வருபவன் வராமல் போக, என்னவாயிற்று இவனுக்கு? என்று தவித்தவளுக்குக் கோபம் தான் ஏறியது, வழியில் ஒரு பெண்ணோடு அவன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு. சக்தியைக் காணும் வரை அவனை நினைத்து வருந்தியவள், இவன் திருந்தாத கேஸ் என்று தலையிலடித்தவாறு வந்துவிட்டாள். அதன்பின், பல நாட்கள் இதேபோல் அவளைக் கடுப்பேற்றினான்.

இன்று மாலை பேருந்தில், இவளருகில் அவர்கள் ஊர் பெண் ஒருத்தி அமர்ந்திருக்க, அவளோடு இவன் வழிந்த வழிசலைக் கண்டு ஆதினியின் காதில் புகை வராத குறைதான்.

அந்த எரிச்சலோடு வீட்டு வாசலை மிதித்தவள் காதில் தாயார் யாரோடோ மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருந்தது விழுந்தது. ‘ஆரு வந்திருக்கா?’ என்று நினைத்தவாறே உள்ளே நுழைந்தவளின் முகம் இன்னும் உக்கிரமானது, அன்னையிடம் விடைபெற்றுக்கொண்டிருந்தவரை கண்டு.

இவளைக் கண்டவர், “பாப்பா, அம்மாகோட்ட எல்லாம் சொல்லிருக்கேன். நல்ல முடிவா எடு” என்றுவிட்டு வெளியேறினார்.

ஆதினியைக் கண்ட அவள் தாயார், “வா கண்ணு… குடிக்க எதுனா கொண்டாறவா?” என்று வாஞ்சையோடு கேட்க, அதை எல்லாம் உணரும் மனநிலையில் அவள் இல்லை.

“இப்போ எதுக்கும்மா அவரு வந்துட்டு போறாரு?” என்று கேட்டாள்.

“சொல்றேன் கண்ணு… மொதல்ல செத்த உக்காரு” என்றவர் அவளுக்குக் குடிக்க நீரைக் கொடுத்தார். அதனை வாங்கிக் குடித்தவளும் சிறிது சமநிலை அடைந்தாள். பின் மெதுவாக ஆரம்பித்தார் அவள் தாயார்.

“ஒன்ற எண்ணப்படியே ஒரு வரன் வந்திருக்கு கண்ணு… பையனுக்கு கோயமுத்தூருல உத்தியோகமாம்… அப்பன், ஆத்தா சின்ன வயசுலயே தவறிட்டாங்களாம். அதனால, கூட்டுக்குடும்பமா இருக்க எடமா பாத்து சொல்ல சொன்னாராம். தரகர் நம்மல பத்தி சொல்லவும், நீ ஆத்தாலும் ஒன்ற கூடவே இருக்கனும்னு கேட்டது புடிச்சு போய் மேல பேச சொல்லி அனுப்பி விட்டுருக்காரு… என்ன தாக்கல் (தகவல்) சொல்லி அனுப்பட்டும் கண்ணு?” என்று கேட்டுவிட்டு மகளின் முகம் பார்த்தார்.

“வேண்டாம்னு சொல்லிடு ஆத்தா” என்று அவள் சொல்லி முடிக்கும்முன்,

“அறைஞ்சேன்னா வை, இப்படி ஒன்னத்த எடுத்தவுடனே வேணாம்னு சொல்லி பழகாதன்னு சொல்லிருக்கேன்ல… அதுவும் கலியாண விஷயத்துல இப்படி சொன்னா அந்த எடம் அப்படியே போயிரும்… இருந்திருந்து இப்போதா ஒரு நல்லது ஒனக்கு நடக்கப்போகுதுன்னு நா நெனச்சா… அதுலயும் மண்ண அள்ளி போட்டுருவ போலவே” என்று கோபத்தில் தொடங்கி ஆதங்கத்தில் முடித்தார் அவர்.

அவரும் தான் என்ன செய்வார்? வருடம் ஏற ஏற, அவர் பெண்ணுக்கு வயதும் ஏறுகிறதே! இதனை எண்ணிக் கவலைப்படாமல் எவ்வாறு அவரால் இருக்க இயலும்?

“சரி ஆத்தா! அவங்க அசலூரா இருக்காங்க. அதனால நா யோசிச்சிட்டு சொல்றேன்…” என்றவள், மேலே பேச விருப்பம் இல்லை என்பதுபோல் வீட்டினுள் சென்று மறைந்தாள்.

‘சே! நா ஏன் ஆத்தா வரன் வந்திருக்குன்னு சொன்னதும் சத்திகோட்ட சொல்லோனும்னு நெனச்சேன்?’ என்று எண்ணியவளுக்கு தன் மனம் புரிந்துபோனது.

அக்கணத்தில் ‘இந்த பாலாப்போன காதல் இவன் மேல தானா வரனும் எனக்கு?’ என்று தன்னைத் தானே நொந்துகொண்டவளுக்கு அவனைத் தவிர வேறு யாரையும் தன்னால் நினைத்துப்பார்க்க முடியுமா என நினைக்கையிலேயே மனம் வேண்டாம் என்று முரண்டியது.

அவளுக்கு தங்களைச் சுற்றி நின்று சிலர் சூரியவம்சம் வசனம் சொல்வதுபோல் தோன்றியது, ‘பெத்த அப்பன், ஆத்தா பேச்ச கேக்காத இவன் ஒரு ஒதவாக்கர, இவன நம்பி வந்திருக்க அவ ஒரு ஒதவாக்கர’. சம்பந்தமே இல்லாமல் ஏன் இது இப்போது ஞாபகம் வந்தது என்று தெரியாமல் இருந்தாலும், நினைத்தபொழுதில் சிரிப்பு தான் வந்தது. கனவு யார் வேண்டுமானாலும் காணலாம். ஆனால், அவனிடம் இதற்கான எதிர்வினை எப்படி இருக்கும்?

தன் காதலை அவன் ஏற்றுக்கொண்டாலும், திருமணத்திற்கு பின்னும் மற்ற பெண்களிடம் கதையளந்தால் தன்னால் அதனை ஏற்றுக்கொள்ள முடியுமா? இல்லை, அவன் மாறிவிடுவானா? அவளுக்கு நிறைய யோசிக்கவேண்டியிருந்தது.

முதலில் இந்த வரன் விஷயத்தை அவனிடம் சொன்னால் என்ன செய்வான்? முன்பாக இருந்தால், சக்தி எவ்வாறேனும் இதனைத் தடுத்துவிடுவான் என்று நினைக்கலாம். இப்போதும் அவன் அவ்வாறே ஏதேனும் முயல்வானா என்று சந்தேகம் தான். அந்த நினைப்பில் பல்லைக் கடித்தாள் அவள்.

‘நா வேணும்னு நினைக்கும்போதெல்லாம் வேணான்னு தடுப்பான்… இப்போ, வேணான்னு நினைக்கும்போது ஒன்னும் பண்ணாம கைய கட்டிக்கிட்டு நிப்பான் போல இருக்கே’ என நினைத்தவள், நாளை எவ்வாறேனும் அவனிடம் பேசவேண்டும் என்று குறித்துக்கொண்டாள். ஆனால், அவள் எண்ணத்தைப் படித்தவன் போல அடுத்த இரண்டு நாட்களும் அவள் கண்ணிலேயே படவில்லை சக்தி.

முதல் இரண்டு நாட்கள் அவனை வழக்கமான இடத்தில் மட்டும் தேடியவளுக்குப் போக்கு காட்டியவன், அடுத்த இரண்டு நாட்கள் செல்லும் இடமெல்லாம் சல்லடை போட்டும் அகப்படவில்லை.

தினந்தினம் தன்னிடம் சம்மதம் கேட்கும் தாயைச் சமாளிப்பதும், அவர் தூங்கியதும் சிறிது நேரம் தன்னை தவிக்கவிடுவதற்காக அவனையும், அவனைக் காதலிப்பதற்காகத் தன்னையும் திட்டிவிட்டு கண்ணீரோடு உறங்குவதே அவள் வழக்கமாகிவிட்டது.

அந்த வார இறுதியில் தாயைக் கண்டுவிட்டு அவள் வயலில் நடந்து வருகையில் அங்கே இருந்த வைக்கப்போரின் மேலிருந்து கர்ணகொடுரமான ஒரு குரல் ஒலித்தது. அதனைக் கேட்டவுடனே புரிந்துகொண்டாள் யாரென.

‘நா ஒரு வாரமா அவன காணாம தவிக்குறேன்… இவன் இங்க உக்காந்து கச்சேரி பண்ணிட்டு இருக்கானா? இவன… இந்தா வாரேன்’ என நினைத்தவாறு தன் சேலையை எடுத்து இடுப்பில் சொருகியவள், கோபத்தோடு அவனருகே நெருங்கி,

“யோவ்… எந்திரிச்சு கீழ வாய்யா” என்று இரைந்தாள்.

‘எவ அவ? நம்மள இவ்வளவு உரிமையா கூப்பிடுறது?’ என்று எண்ணியவாறு எட்டிப்பார்த்தவன் விழிகளில் விழுந்தாள் அந்த வேல்விழியாள்.

‘அட… நம்மாளு…’ என்றவாறு சறுக்கியே கீழே விழுந்தவன் “என்ன அம்மிணி?” என்று கேட்டான்.

“இப்போ மட்டும் என்ன அம்மிணி… இத்தன நாளா ஆளையே காணல…” என தனக்குள் முனங்கியவள், அவன் சட்டைக் காலரை எட்டிப் பிடித்து, “இந்தா பாருய்யா… என்ற ஆத்தா எனக்கு மாப்புள்ள பாத்துட்டு இருக்கு… நீ ஒழுங்கா ஒன் சொந்த பந்தத்தோட வந்து பரிசம் போடுற… இல்லாட்டி எங்கனயாச்சும் நீ போகும்போது தொரட்டிக் குச்சிய வெச்சு ஒன் கழுத்த கொய்யாக்கா பறிக்கற மாதிரி கொய்துடுவேன் பாத்துக்க…” என்று மிரட்ட, அவளை பே என்று வாயை மூடாது பார்த்திருந்தான் சக்தி.

அதில் மேலும் கடுப்பானவள், “நா என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன், நீ என்ன இப்படி பாக்குறவன்?” எனக் கேட்டு உலுக்க, அதில் நடப்புக்கு வந்தவன், “நீ என்னைய விரும்பறியா கண்ணு?” என்றான்.

“இல்ல… நீன்னா எனக்குச் சுத்தமா பிடிக்காது, நீ சந்தோசமா இருந்தா அதவிட பிடிக்காது. அதா, ஒன்ற கூட இருந்து கஷ்டப்படுத்தலாம்னு முடிவுக்கு வந்துட்டேன்” என்று உதட்டைச் சுழித்துக்கொண்டு கூற, அவள் பேச்சுகளை ஏதோ விருது வாங்கினாற்போல் ஈஈ என இளித்தவாறு கேட்டுக்கொண்டிருந்தான்.

“யோவ்… உன்ன நா திட்டுறேன்யா…” என்று சொல்ல, அவளை தன்னருகே இழுத்தவன், “எவ்வளவு வேணா திட்டு கண்ணு… நானென்ன சொல்லப்போறேன், நீ இப்படி கூப்பிடுறப்போ” என்று கூற, அதில் வெட்கம்கொண்டு நிலம் பார்த்தாள் அவனவள்.

அதில் அவன் மனம் அலைபாய, தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன், “நீ சொன்னது நெசம் தான?” என்று அவளைக் கேட்க, அதில் கோபம் கொண்டவள், அதற்கு நேர்மாறாக அவன் தோளில் சாய்ந்தாள்.


கத்தரி பூவழகி
கரையா பொட்டழகி
கலரு சுவையாட்டம்
உன்னோட நெனப்பு அடியே
சொட்டாங்கல்லு ஆடையில
புடிக்குது கிறுக்கு

“ஆதி… என்னோட என்ற தெரு கடைசில இருக்க முக்கு ஊட்டுக்கு வரியா?” என்று கேட்க,

“ஏன்யா இப்ப அங்க போக கேட்கற?” என வினவினாள் அவள்.

“அது… அங்க ஒரு கெளவி இருக்குல்ல… அது என்னைய எப்பவும் அண்ணான்னு கூப்பிட்டு, எனக்கு பொண்ணே கெடைக்காதுன்னு கடுப்பேத்தும்… அதுகோட்ட ஒன்னய காட்டனும், எனக்கு எப்படி ஒரு பொண்ணு கெடச்சுருக்குன்னு…” என்று அவன் சொல்ல, அவனைத் தள்ளி விட்டவள் அருகிலிருந்த குச்சியை எடுத்தவாறு,

“அதுவே எப்போவும் அமைதியா பாக்கு இடிச்சிட்டு இருக்கும்… அதையே நீ ஓட்ட வெச்சுருக்கினா, ஒன்னால அது எவ்வளவு கஷ்டப்பட்டுருக்கும்… ஒழுங்கா இனி இந்த வேலையெல்லாம் உட்டுரு… இல்லைன்னா…” என்று அடிக்க ஓங்கினாள்.

“ஏ… அது வேற டிப்பார்ட்மெண்ட்… எத்தன வருசமானாலும் ஒன்ற மாமன் இப்படிதா இருப்பான்… நீ அதுக்கு ஏத்தமாதிரி மாறிக்கோ…” என்றவன் அவளிடம் இருந்து தப்பிக்க ஓடினான்.


வரப்பு மீசைக்காரா
வத்தாத ஆசைக்காரா
உன்ன நான் கட்டிக்குறேன்
ஊரு முன்னால
அட வெக்கப்பட வேணா
என்ன பாரு கண்ணால

சிறிது தூரம் சென்றவன் ஒரு பெரிய மரத்தின் பின்னே ஒளிய, அவனைத் தேடி வந்தவள் அவனைக் காணாமல் அதே இடத்தில் நின்று சுற்றிப் பார்த்தாள். எதிர்பாராத விதமாக அவள் பின்னிருந்து வந்தவன், அவளை இழுத்து மரத்தின் மேல் சாய்க்க, அதில் அவள் பூவிழிகள் விரித்து அவனை நோக்கினாள்.

மையால கண்ணெழுதி
என் வாலிபத்த மயக்குறியே

தன்னையே நேசத்தோடு நோக்கும் அவன் பார்வை தாங்காமல் அவள் தலை குனிய, அது தனக்கு விருப்பமில்லை என்பதை ‘ப்ச்’ என்று வெளிப்படுத்தினான்.

காத்தாடி போல நானும்
உன்ன நிக்காம சுத்துறேனே

அது அவளுக்கும் புரிந்திருந்தாலும், ‘போடா… ஒன்னய பாத்தாலே என்னென்னமோ தோனுது…’ என முறுக்கிக்கொண்டவள், மேலும் குனிந்துகொண்டாள். இது அவனுக்குச் சுவாரசியத்தைக் கொடுக்க, சிறு புன்னகையுடன் பார்த்திருந்தான். தாய்மை மட்டுமல்ல, காதலும் பெண்ணுக்கு அழகு தான் போலும்.

கழுதை போலத்தான்
அழக சுமக்காத
எனக்கு தாயேண்டி
கொஞ்ச வேணும் நானும்

அவன் பார்வையை உணர்ந்துகொண்டவள், தன் கைக்கொண்டு அவனை விலக்கிவிட்டு ஓட, செல்லும் அவளையே சிரிப்புடன் பார்த்திருந்தவன் தன் சிகையைக் கோதிக்கொண்டான்.

அருவா போல நீ
மொறப்பா நடக்குறியே
திருடா மொரடா
இருப்பேன் உன்னோடதான்

(எப்படியோ! சாபம் விட்ட ஒரு 90’S கிட்-க்கு ஆள் கெடைச்சுருச்சு… அடுத்து இருக்குறவரு கதையைப் பார்ப்போம்)

*******

ஒரு பக்கம் கிடார், மற்றொரு பக்கம் டெட்டி என அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தவளை ஹை பிச்சில் கதறி எழுப்பியது அலைபேசி. தூக்கக் கலக்கத்திலேயே அதனை எடுத்தவள், “ஹலோ!” என்க, மறுபுறமிருந்து “தங்கச்சி…” என்று கூவினான் ராக்கி கட்டாமலேயே அவளுக்கு அண்ணனான பாசமலர்.

“அண்ணே!” என்றவள் உடனே எழுந்து அமர்ந்து மணியைக் காண, அது நடுஇரவடி இப்போது என்றது. அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாதவள், “சொல்லுங்கண்ணா… என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.

இருவரது பிணைப்பும் முகில் அங்கிருந்த வரை அவன் மூலம் தொடர, பின்பு தங்கள் அலைப்பேசி வழியாகவே பேசிக்கொண்டனர். முகில் முடிந்தவரை ஆங்கிலத்தில் பேசினாலும், சக்தியிடம் மட்டும் முடிந்தவரைக்கும் தமிழ் தான் அவளுக்கு.

“நீ சொன்ன மாதிரியே செய்தேன்மா… ஒன்ற அண்ணி இன்னைக்கு தானா வந்து பேசுனா… சீக்கிரம் வந்து பரிசம் போட சொல்லிட்டா…” என்று அவன் மகிழ்ச்சியுடன் கூற, மறுபுறம் கேட்டுக்கொண்டிருந்தவளோ, படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தேவிட்டாள்.

ஆதினியின் தரப்பிலிருந்து எந்த முன்னேற்றமும் இல்லை என சக்தி அனிலாவிடம் புலம்ப, பண்டைய காலத்திலிருந்து கடைப்பிடிக்கும் இற்றுப்போன யோசனையை சில நாட்கள் தன் மூளையைக் கசக்கிக் கண்டுபிடித்துச் சொன்னாள் அவள். அதன்பிறகே சக்தி ஆதினியை கண்டுகொள்ளாமல் சுற்றினான்.

“சூப்பர்… எப்போன்னா மேரேஜ்?” என கேட்க,

“அதுக்கு மொதல்ல நா எங்க ரெண்டு பேர் ஊட்டுலயும் பேசோனும்… என்ற ஆத்தா வேற என்ன சொல்லப்போவுதோ!” என்று கவலைப்பட்டவனுக்கு அனைத்தும் நல்லபடியே நடக்கும் என நம்பிக்கை அளித்தவள் மகிழ்வுடனே தன் தூக்கத்தைத் தொடர்ந்தாள், மறுநாள் வரும் செய்தி அவள் நிம்மதியைக் குலைக்கப்போகிறது என்பதை அறியாமல்.

 
Top