Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 12

Advertisement

lekha_1

Active member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

சென்ற பதிவிற்கு ஆதரவளித்ததற்கு நன்றி... இதோ, அடுத்த பதிவு...


காதல் 12

1241


“யோவ்… ஒழுங்கா கீழ எறங்கி வந்துரு…” என்று கீழிருந்து கத்திக்கொண்டிருந்தாள் ஆதினி. அவள் இவ்வளவு பாசமாக அழைத்தால் வேறு யாராக இருக்கும்? சக்தியே தான்.

இரண்டு நாட்களுக்கு முன் அவள் காதல் கூறியபோது ‘உடனே வந்து பெண் கேட்கிறேன்’ என்றவன் இன்னும் வீட்டில் அதைப் பற்றி பேசக்காணோம். ஆதினியும் பொறுத்துப்பார்த்தவள், அவனைத் தேடி வந்திருக்க, அவனோ, நண்பர்களுக்காக தென்னங்கள் எடுக்க மரமேறி விட்டான்.

வளர்ந்துவரும் தலைமுறைகள் பலருக்கு தற்போது மரம் ஏறும் பழக்கம் இல்லை. ஆனால், சக்தி பனை, தென்னை என அனைத்திலும் ஏறிவிடுவான். மரம் ஏறுவதற்கு கூலியும் அதிகம். அதனால், அனைவருக்கும் இல்லையென்றாலும், வேண்டியவர்கள் கேட்கும்போது அவன் இதனை செய்துதருவான்.

இன்றும் அதேபோல் அவன் ஏறியிருக்க, அவனைத் தேடிவந்தவள், அவள் நண்பர்களை விரட்டிவிட்டு அவனை கீழே இறங்கிவருமாறு கேட்டுக்கொண்டிருக்கிறாள்.

“என்னால கீழ எல்லாம் வரமுடியாது… எதுவா இருந்தாலும் அப்படியே சொல்லு…” என்று அவன் கூற, அருகில் இருந்த கல்லை எடுத்து அவனை நோக்கிக் குறிபார்த்தாள். அது அறிந்து அவன் விலகிக்கொள்ள, அங்கே கட்டியிருந்த ஒரு பானையில் பட்டது அந்தக் கல்.

“அடிப்பாவி… இதோட வேல்யூ தெரியுமா?” என்று அவன் கேட்க, “செய்யுறதே தப்பு… இதுல நியாயம் வேற பேசறியோ? ஒழுங்கா எறங்கி வாய்யா… ஒன்னால நா என்ற ஆத்தா கண்ணுல படாம திரியுறேன்” என்க,

“என்ன கண்ணு சொல்ற? என்னால நீ ஏன் மறைஞ்சு திரியனும்?” என்று கேட்டான், மற்றதை எல்லாம் விடுத்து.

“அது அவங்ககோட்ட என்ன தாக்கல் சொல்றதுன்னு கேட்டுட்டே இருக்கு… அதா நானும் ஒளிஞ்சுட்டு இருக்கேன்… நீயும் ஒன்னும் சொல்ல மாட்டேங்கற. அதனாலயே தூங்குற நேரம் தவிர மத்த நேரமெல்லாம் மதி ஊடே கதியா கெடக்கேன்… ஏதாவது பண்ணுய்யா…” என்று அவள் கேட்க,

உடனே மரத்தில் இருந்து சரேலென இறங்கியவன், “புள்ள… மேக்கால் இருக்க தோப்புல இப்போ ஆளே வரமாட்டாங்க” என்று சம்பந்தமே இல்லாமல் கூறினான்.

“நா என்ன சொல்லிட்டு இருக்கேன்… நீ என்ன சொல்ற?” என்று அவள் எரிச்சலோடு கேட்க, “நீ தான கண்ணு எதனா பண்ண சொல்லி கேட்ட” என்று குரலை பாவமாக வைத்துக்கொண்டு கேட்டவன் கண்களோ சிரித்தது.

“இந்தா பாருய்யா… கண்ணாலத்துக்கு முன்னால இந்த பேச்செல்லாம் இங்க வெச்சுக்கிட்ட, ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்கமாட்டேன்… நெல்லு அறுக்கற கருக்கருவாளை வெச்சு வகுந்துருவேன்” என்று அவள் மிரட்ட,

“அம்மாடியோவ்… நெசமா நீ டீச்சரு தானா? இல்ல, ஸ்கூலுக்கு போறேன்னு எதனா வயல்வேலைக்கு போறியா?” என அவன் கேட்க, “ஏன்ய்யா? வயக்காட்டுக்கு வேலைக்கு போறதுல என்ன கேவலம் இருக்கு?” என்று மறுகேள்வி கேட்டாள் அவள்.

“இப்போ அது கேவலம்னு நானெங்க சொன்னன்? நானே அங்க வேலைபாக்குறவந்தான். அத மறந்துட்டு பேசுறியோ?” என அவன் ஒரு மாதிரியான குரலில் கேட்க, அதை புரிந்தவள் அவனை பாவமாக பார்த்தாள்.

அவள் கல்லூரியில் சேர்ந்த காலத்தில் விவசாயத்தை இளக்காரமாக பார்த்த சோ-கால்ட்-ஹைகிளாஸ் மாணவர்களால் அவள் பட்ட வேதனையின் சாயல் இன்று பேச்சில் வெளிப்பட்டுவிட்டது.

“என்னைய மன்னிச்சிடுய்யா… ஏதோ நினைவுல பேசிட்டேன்…” என அவனிடம் மன்னிப்பை வேண்டியவள், “நீ என்ற ஆத்தாகோட்ட வந்து பேசறியா? இல்ல, நா ஒன்ற ஊட்டுல வந்து பேசவா?” என்று அவள் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கேட்க, “அதுக்கு தேவையே இல்லன்னு நெனைக்கிறேன் கண்ணு…” என்று அவள் பின்னே பார்த்தான் சக்தி.

‘இவென் எங்கன பாக்குறான்?’ என நினைத்து திரும்பியவள், அவள் அன்னை அங்கே நிற்பார் என்பதை எதிர்பார்க்கவில்லை.

இருவரையும் ஒருமுறை பார்த்தவர், ஆதினியை மீண்டும் ஒருமுறை ஆழமாக நோக்கிவிட்டு தன் வீடு நோக்கி நடக்கலானார்.

“ஒன்னால ஒரு காரியம் சரியா செய்ய முடியுதாய்யா… இப்போ பாரு…” என்று சக்தியை கடிந்தவள், தன் தாயின்பின்னே ஓடினாள்.


******

“ஆத்தா…” என்று வீட்டினுள் நுழைந்தவுடனே அழைத்தாள் ஆதினி. அவள் வருவதற்காகவே காத்திருந்தவர் கதவை தாளிட்டுவிட்டு அவள் புறம் வந்தார். அவள் வருவதற்கு முன்னமே அனைத்து சன்னல்களையும் மூடியிருந்தார்.

“ஆத்தா… நா சொல்றத…” என்று அவள் முடிக்கும் முன்னமே, “என்னடி சொல்லப்போற? உன்ற அய்யனும் பொறந்தவனும் போனதும் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒன்னய வளத்து படிக்கவெச்சேன்? நீ ஒன்னத்துக்கும் ஒதவாதவங்கூட கைக்கோர்த்து நின்னுக்கிட்டு இருக்க… அத பாத்துட்டும் எப்படி என்னால ஒன்னும் சொல்லாம இருக்கமுடியும்?” என்று அவர் அழுகையோடு கேட்க,

“ஆத்தா… என்னைய என்ன வேணாலும் பேசு… நா வாங்கிக்கறேன்… அவன ஏதாவது சொன்னன்னா என்னால சும்மா இருக்க முடியாது” என சீறினாள் அவள்.

“அப்படி என்னடி சொக்குப்பொடி போட்டான் அவன்?” என்று ஆற்றாமையோடு கேட்டார் அவர்.

“சொக்குப்பொடி வேற போடனுமாக்கும்? அவென் கொணமே போதும் ஆத்தா… அதுக்கே அள்ளி அள்ளி கொடுக்கலாம்” என்றவள் அன்று அவள் கிணற்றில் விழுந்தபோது நடந்த கதையை கூற, அதில் சற்று நிதானித்தார் அவர். ஆனாலும் அவனுக்கு அவளை கட்டிக்கொடுக்க வேண்டுமா என்று இருந்தது அவருக்கு.

“ஆத்தா… அவன் படிக்கலங்கறதுக்காக மட்டும் யோசிக்காத ஆத்தா… என்னைய இந்த ஒலகத்துலயே நல்லா பாத்துக்க முடியும்னா அது அவென்தா. இன்னைக்கு வேணா நல்ல நிலமைல அவன் இல்லாம இருக்கலாம். ஆனா, கொஞ்ச வருஷம் கழிச்சு அவன எல்லாரும் பாராட்டத்தான் போறாங்க. நல்லா படிச்சு செட்டிலான ஒருத்தன் வீட்டுக்கு போய் வாக்கப்படறதுக்கு, ஒன் கண்ணு முன்னாடியே வளந்த சத்திக்கு என்னய கட்டிக்கொடு ஆத்தா…” என்றவள் அவர் சிந்திக்க சிறிது நேரம் கொடுத்து, “நீ வேண்டான்னு சொன்னாலும் சரி, நா அவனத்தா கட்டுவேன்னு எல்லாம் நிக்க மாட்டேன். ஒன்னோடயே இருந்தர்றேன். அவென் யார வேணாலும் கட்டிக்கட்டும். அதுக்கு நா எந்த தடையும் சொல்லமாட்டேன்” என்றுவிட்டு தனதறைக்குள் புகுந்துகொண்டாள்.

அவளுக்கு தெரியும், தன் தாய் சக்தியை மறுப்பதற்கு தன் மகளை படித்த, நல்ல வேலையில் இருப்பவனுக்கு மணமுடித்து வைக்க நினைப்பது ஒன்று மட்டுமே காரணமாக இருக்க வேண்டும் என்று. அதனால் தான் அவ்வாறு பேசிவிட்டு வந்தாள்.

அதேபோல் தான் அவள் தாயும் சிந்தித்துக்கொண்டிருந்தார். மகள் ஒன்று சொன்னால் எக்காரணம் கொண்டும் அதில் இருந்து இறங்கிவரமாட்டாள் என்று அவருக்கும் நன்கு தெரியும். ஆனாலும், மகள் நன்றாக வாழ்வதை பார்க்கவேண்டும் என அனைத்து பெற்றோருக்கும் இருக்கும் ஆசையே அவருக்கும் இருந்தது. இவள் சொல்வதைப் பார்த்தால், அவன் இல்லையென்றால் வேறு வாழ்வே வேண்டாம் என்கிறாளே! அவர் தன் மகளிடம் கேட்ட கேள்வியை எண்ணும்போதே, பொடி போட்டு மயங்குகிறவளா தன் பெண்? என்ற எண்ணம் வந்து சிரிக்க தோன்றியது.

அதேநேரத்தில், சக்திக்கு என்ன குறை? அனைவரையும் வம்பிழுத்து வாங்கிக்கட்டிக்கொண்டு திரிந்தாலும், உதவி என்று யாராவது வந்து நின்றால் அதனை செய்யாமல் விடமாட்டான். அந்த வாய்த்துடுக்கு மட்டுமே அவனுக்கு எதிராக நிற்கும். மற்றபடி, குணமில்லையா, கட்டிக்கொள்ளும் சொந்தமில்லையா? சில காலமாக தன் தந்தையுடன் அவன் வயலுக்கு செல்வது தெரிந்ததும் மகிழ்ச்சியடைந்தவர்களில் அவரும் ஒருத்தர் தானே! அது தன் பெண்ணால் என்னும்போது, அவனை அவள் மாற்றிவிடுவாள் என்பது அவருக்கு நிச்சயமாக புரிந்தது. ஆனால், அவனுக்கு இருக்கும் வாய் அவர் பெற்று வைத்திருப்பவளுக்கும் இருக்கிறதே! சக்தியின் தாய்-தந்தை நல்ல குணம் என்றாலும், இவளுக்கும் அவன் அம்மாவிற்கும் ஏழாம் பொருத்தமாயிற்றே?

பெண் அவன் தான் தனக்கு வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றதும், அவனைப் பற்றிய அலசலில் இறங்கியது அந்த தாய் மனது. அவனில் ஆரம்பித்து மீண்டும் ஆதினியிடமே வந்து நின்றவருக்கு, ஏதாவது பிரச்சனை வரும்போது தன் வாழ்வை காப்பாற்றிக்கொள்ள அவளுக்கு தெரியும் என்பதில் பாதி மனம் ஆசுவாசப்பட்டது என்றால், சக்தியின் வீட்டில் விஷயம் அறிந்தவுடன் அவன் தாயே நேரில் வந்து அவரிடம் பேசியதில் முழு பாரமும் குறைந்தது.

‘அந்த பையன் என்னென்னவோ சொல்றான். தப்பா இருந்தா மன்னிச்சுக்க. அதுவே உண்மையா இருந்தா, ஒன்ற புள்ளய என் ஊட்டு மருமகளா அனுப்பி வை அண்ணி… சொக்கத்தங்கம் ஒன்ற புள்ள. கண்ணுக்குள்ள வெச்சு பாத்துக்குறேன்” என்று அவரே கேட்க, அதற்குமேல் தாங்கமாட்டாது, ‘இந்தாங்கண்ணி ஒங்க மருமக’ என ஆதினியை பிடித்து அவர் கையில் கொடுத்துவிட்டார் அவர்.

அதன்பின், நடக்க வேண்டியது அனைத்தும் மளமளவென நடக்க, அடுத்த ஆறு மாதம் கழித்து திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு காரணம் ஆதினிதான். பள்ளி விடுமுறையில் வைக்கசொல்லி கேட்டதால் இவ்வளவு நாள் தள்ளிப்போயிற்று. அதற்கு சக்திதான் முகத்தை தூக்கிவைத்து உட்கார்ந்துகொண்டான். அதனை பார்த்து, ‘இப்போவே ஒன்ற பொண்டாட்டி முந்தானைய பிடித்து சுத்தாதடா’ என கேலியாக அலுத்துக்கொண்டார் அவன் தாய்.


உலகெங்கிலும் சுகம் உள்ளது

அதை வாங்கிட பணம் உள்ளது

மனசு மயங்குது எதற்காக?

நமக்கானவர் யார் என்பதை

நம் கண்களால் நாம் தேடனும்

மனசு மயங்குது அதற்காக!

பார்வை சொல்லும் காதல்

பாதை மாறிப் போனால்

அழகு பெண்ணின் வாழ்க்கை

அப்போது என்னாகுமோ?

காதல் கொல்லும் ஆண்கள் தவறு செய்வது இல்லை

கள்ளநெஞ்சத்தில் பெண் காதல் குடிகொள்ளுமோ?

காதல் சுகமான தேடல்

உயிரில் விழுகின்ற சாரல்

துளிகள் கடலென பெருகிட பெருகிட

அலைகள் வீசுதே காதல் காதலே!

*****

அன்றைய நாள் பேசியதற்கு பின்னர் முகிலுக்கும் அனிலாவிற்கும் நடுவில் ஒரு திரை விழுந்துவிட்டது. முன்பு எந்த அளவிற்கு பேசினார்களோ, இப்போது எல்லாம் அதே அளவிற்கு அவர்களிடையே ஒரு சங்கடமான சூழ்நிலை நிலவியது.

முகில் அன்று கூறியது தவறு என்றுவிடுவானோ என்னும் பயத்திலேயே அனிலா எண்ணி எண்ணி பேசினாள் என்றால், எங்கே தான் அன்று பேசியதைப் பற்றி கேட்டுவிடுவாளோ என நினைத்து முகில் முடிந்தளவு சீக்கிரம் அவர்கள் பேச்சினை முடித்துவிடுவான். ஆனால், இருவருக்கும் மற்றவரிடம் அந்த பேச்சினை எடுக்க தைரியம் வரவில்லை. அதனை விட, இருவரும் தங்களுக்கு இடையே இருக்கும் நட்பை இழக்க விரும்பவில்லை என்று கூறுவதே சாலச் சிறந்தது. இந்த கண்ணாமூச்சி ஆட்டம் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு தொடர்ந்தது.

கிரிக்கெட்டை முதலில் டெஸ்ட் போட்டிகளில் இருந்தே ஆரம்பித்தனர். அதன்பின், ஐம்பது ஓவர் போட்டிகள் தொடங்கி, இப்போது டி-20 என்னும் இருபது ஓவரில் வந்து நிற்கின்றனர். தற்போதைய சந்ததிகள் ஐம்பது ஓவர் போட்டிகளை நாள் முழுக்க அமர்ந்து பார்க்க வேண்டுமா என்றே எண்ணும்போது, நான்கு நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளை எங்கேயிருந்து பார்க்க பொறுமை இருக்கும்? ஆனாலும், டெஸ்ட் போட்டிகளும் தங்களுக்கென சிறிய ரசிகர்கள் வட்டத்தை இன்றளவும் கொண்டுள்ளது.

மூன்று டெஸ்ட் போட்டிகளை பெரும்பான்மையான காலி இருக்கைகளை பார்வையாளர்களாக வைத்து நடத்திவிட்டபிறகு, ஐம்பது ஓவர் போட்டிக்கு பார்வையாளர்கள் அதிகமாகவே வந்தனர்.

அன்றுதான் முதல் போட்டி இருக்க, அதில் விளையாடிக்கொண்டிருந்தனர் நம் அணியை சேர்ந்த தீபக்கும் மற்றொருவரும். சந்தோஷும் முகிலும் பெவிலியனில் அமர்ந்திருக்க, நிகழ்ந்தது அந்த சம்பவம்.

போட்டியின்போது ரசிகர்களின் பக்கமும் கேமிரா வருவது வழக்கமல்லவா? அவ்வாறு வரும்போது ஒரு பெண் தன் கைகளில் “முகில், ஐ லவ் யூ” என்னும் விதமாக ஒரு பலகையை வைத்திருந்தாள். அவள் முகத்திலோ மூவர்ணக்கொடியை வரைந்திருந்தாள்.

சொல்ல மறந்துவிட்டேனே, இத்தனை மாதத்தில் அவனுக்கு ரசிகைகள் எத்தனை பேர் கிடைத்தார்களோ தெரியாது! ஆனால், அவன் சிறிது கூச்சத்துடனும் கம்பீரத்துடனும் சிரிக்கும் சிரிப்பிற்க்கு ரசிகைகள் ஏராளம். அதில் ஒருத்தி தான் தற்போது பலகையை ஏந்தியிருக்கிறாள்.

‘கிடைத்துவிட்டதடா ஒரு எண்டர்டெய்ன்மெண்ட்’ என முகிலையும் அந்த பெண்ணையுமே காட்ட, அந்த பெண்ணிற்கோ வெட்கம். இதனை பார்த்ததும் சந்தோஷ் மகிழ்வுடன் முகிலின் கையை உயரப் பிடித்து, ‘இங்க இருக்கான்’ என்னும் விதமாக காட்ட, அந்த பெண் ஒரு பறக்கும் முத்தத்தை அவனை நோக்கி விட்டாள். அதில் அதிர்ந்தவன் முகத்தில் மெலிதாக வெட்கம் படர, ‘ஓ காட்’ என்று முகத்தை மூடிக்கொண்டான். அந்த பெண்ணின் தைரியத்தை வர்ணனையாளர் பாராட்ட, ‘என்னடா நடக்குது இங்க?’ என்னும் விதமாய் பார்த்திருந்தான் நடுமைதானத்தில் பேட்டை வைத்து நின்றிருந்த தீபக்.

சிறிது நேரத்திலேயே இந்த வீடியோ ட்ரெண்டாக, அதனை பார்த்த அனிலா ‘என்னோட இருக்கனும்னு சொல்லிட்டு இங்க இன்னொரு பொண்ணு லவ் யூ சொல்லும்போது வெட்கப்படறியா’ என்று கடுப்பாகி அவனை வாட்ஸ்ஆப், முகநூல், இண்ஸ்டாகிராம் என அனைத்திலும் ப்ளாக்கிட்டுவிட்டாள். (கோபமாக இருக்காங்களாம்!)

இதைப்பற்றி அறியாத முகில் அவளை தொடர்புகொள்ளவே இல்லை. ஏனென்றால், அவனுக்கு ஒரு பழக்கம். போட்டி இருக்கும் நாட்களில் பெரும்பாலும் யாரோடும் பேசமாட்டான். வீட்டிற்கு மட்டும் அழைத்து இரண்டொரு நிமிடம் பேசிவிட்டு வைத்துவிடுவான். தன்னை திசைதிருப்பும் அனைத்தில் இருந்தும் முடிந்தளவு விலகியே இருப்பான். அதனால், அந்த வீடியோ ட்ரெண்டானதை நண்பர்கள் மூலம் அறிந்துகொண்டாலும், அதனால் ஏற்பட்ட எதிர்வினையை அறியாமல் போனான்.
 
Top