Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் - 20

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member

உள்ளே நுழைந்த அஜித்தின்
தோற்றத்தை பார்க்கவே பயமாக இருந்தது கண்மணிக்கு!

இரவு முழுக்க அவன் உறங்கியிருக்கவில்லை என்பதை அவனது சிவந்த விழிகள் சொல்ல கண்மணி, தன்னு, சுவாதி மூவருக்கும் வயிற்றில் புளியை கரைத்தது.

"பெரியப்பா ..அந்த சுரேஷ் தப்பிச்சிட்டான் "என்றான் ஆங்காரமாக.

சுற்றியிருந்த பெண்கள் கூட்டத்தை பார்த்த வேலனின் முகத்திலும் கோபமும் ஏமாற்றமும் தென்பட்டாலும் "அமைதியாயிருப்பா ..பேசுவோம் " என்றவர் அவனை அவரது அறைக்குள் அழைத்து சென்றார் .

"இவனுக்கு என்னல்லாம் தெரியும்னு தெரியலையே ..இப்போ என்ன பண்றது தன்னு? " என்று ஸ்வாதி கேட்க .."இருடி நான் தோட்டத்து பக்கமா போய் பெரியப்பா ரூம் ஜன்னல் வழியா என்ன பேசறாங்கன்னு பாத்துட்டு வரேன் " என்று தன்னு கிளம்ப .."ஒட்டு கேட்க போறேன்னு சொல்லு " என்றாள் ஸ்வாதி .

"ஆமாண்டி ஒட்டு கேட்டாதான் நமக்கு எப்போ சங்குனு தெரியும் ..தயாரா இருக்கலாம்ல "

"ஏண்டி ஏற்கனவே வயித்துக்குள்ள புளிய கரைக்குது ..நீ வேற பருப்பு காய்லாம் போட்டு சாம்பார் வக்கிர "

"ஆமாண்டி அப்படியே சோறு வடிச்சு வைக்கிறேன் ..வந்து சாப்பிட்டு போ ..ஆளை பாரு ..நகருடி " என்றவள் வேலனின் அரை ஜன்னலோரம் சென்று நிற்க ...உள்ளே அஜித் பொரிந்து கொண்டிருந்தான்.

"பெரியப்பா ..யாரோ நம்ம தோப்புக்குள்ள வந்து அந்த சுரேஷ காப்பாத்தி கூப்புட்டுட்டு போயிருக்காங்க ..அதுவும் நாம ஊருக்குள்ள இருக்கப்பவே "

"அந்த முத்து என்னடா செஞ்சிக்கிட்டிருந்தான்?"

"அவன் சரியா அந்நேரம் தான் சாப்பிட போயிருக்கான் ..நேரம் பார்த்து உள்ளர நொழஞ்சி கதவை உடைச்சு அவனை தூக்கிட்டு போயிருக்காங்க .."

"என்னடா சொல்ற ?"

"ஆமா பெரியப்பா ..அவன் இருந்த நிலைமையில அவனால் தானா எல்லாம் தப்பிச்சு போயிருக்கவே முடியாது.யாரோ வந்திருக்காங்க ... பைக் தடம் எல்லாம் நம்ம தோப்பு மண்ணிலே இருக்கு "

"அவன் ஊர் காரங்களுக்கு நம்ம ஊருக்குள்ள அதுவும் என்ற தோப்புக்குள் பூர்ர அளவுக்கு தைரியம் வந்திருச்சா ?"

"தைரியத்துக்கு என்ன குறைச்சல் ? அது தான் இப்போ எல்லாம் படிச்சு வேலைக்கெல்லாம் போறாங்க இல்ல அந்த திமிரு தான்.. இப்போ ஒருத்தன் கலெக்டருக்கு படிக்கிறானாம்.. அவன் தான் கத்து குடுக்கிறான்னு நினக்கிறேன்."
"இருந்தாலும் அவ்வளவு தைரியமா ஊருக்குள்ள வருவார்களா ? வெட்டி வீசிடுவோம்னு தெரியாதா?"

"அவங்களா வந்திருக்க மாட்டாங்க பெரியப்பா ..ஊருக்குள்ள இருந்து யாரோ உதவி செஞ்சிருக்கணும் .. எனக்கென்னவோ புதுசா ஒருத்தன் வந்திருக்கானே வாத்தியார் வீட்டுக்கு அவன் மேல தான் சந்தேகமா இருக்கு .. ராத்திரி ஊர் எல்லையில திரிஞ்சிக்கிட்டு இருந்தான் .என்ன இந்த பக்கம்னு கேட்டா 'வாக்கிங் போறேன்னு' சொல்றான்.. "

"தாமரை சொந்தக்கார பையன் தானே ..அவன் சென்னையில இருந்து தான் வந்திருக்கானு சொன்னாங்க ..அவனுக்கு பக்கத்தூருல இருக்க இவனை எப்படி தெரியும் ?" என்றார் வேலன்.

"இப்போதான் எல்லார் கையிலயும் செல்போன் இருக்கில்ல பெரியப்பா.. அந்த பையன தூக்கிட்டு வந்த அன்னைக்கே வெட்டி போட்டிருந்தா இன்னிக்கு தப்பிச்சு போயிருக்க மாட்டான்ல ? நீங்க தான் வேணாம் கோயில் நோம்பியிருக்கு ..இப்போ ஒன்னும் செய்ய வேணான்னு தடுத்திட்டிங்க ..இல்லன்னா அன்னைக்கே கதையை முடிச்சிருப்பேன் "

"அதுதான் அந்த பொண்ணு போயிருச்சே ..இனி என்ன செஞ்சு என்ன ஆகப்போகுது ..விடு அஜித்து " என்று சமாதானப்படுத்த ..அப்படியும் சமாதானமாகவில்லை அஜித்திற்கு.

"இல்ல பெரியப்பா ..இப்படி விட்டு விட்டு தான் எல்லாரும் தலையெடுத்து ஆடிக்கிட்டிருக்காங்க ..அடுத்த பஞ்சாயத்து தேர்தல்ல நிக்கனும்னு அந்த ஊர்க்காரங்க பேசிக்கிட்டிருக்கானுங்க ..நீங்க தலைவரா இருந்த எடத்துல இன்னொருத்தன எப்படி வைக்க முடியும்? இதெல்லாம் விட்டு குடுக்க முடியாது பெரியப்பா .அவங்க நினைக்கறது நடந்தா வெளியூர்காரன் மட்டுமில்ல நம்மூர் காரனுங்களே மதிக்க மாட்டானுங்க "

அவனது பேச்சில் சற்று தணிந்திருந்த சிங்கார வேலனின் கோபம் மறுபடி கொழுந்து விட்டு எரிய .."ஆமாம்பா ..எப்படியாவது நம்ம கவுரவத்தை காப்பாத்தணும் ..மானம் மரியாதை இழந்தப்புறம் என்ன இருக்கு ..என் உசுரே போனாலும் மானம் போக விட மாட்டேன்பா .."என்று கூறியவரின் சிவந்த விழிகளை பார்க்கவே பயமாக இருந்தது தன்னுவிற்கு .

மெல்ல ஓசைப்படாமல் தங்கள் அறைக்கு வந்தவள் ஸ்வாதியை அலைபேசியில் அழைக்க மற்ற இருவரும் வந்து சேர்ந்தனர் ..

"ஏய் தன்னு? என்ன பேசிக்கிட்டாங்க ?" என்று கேட்ட கண்மணியை நிராசையான பார்வை பார்த்தாள் தன்யஸ்ரீ .

"நீ பாக்கிறதை பாத்தா எனக்கே புரியுது ..என்ன பேசியிருப்பாங்கன்னு . "

"ராத்திரி பூரா தேடியிருக்காங்க ..அவன் சிக்கலை . எப்படியோ தப்பிச்சுட்டான். ஆனா உன் ஆளு மேல தான் சந்தேகப் படுறாங்க. அவர் ஊர் எல்லையில் நிக்கிறதை இந்த சிடுமூஞ்சி பாத்திருக்கான். அவர் தான் திட்டம் போட்டு அந்த பொண்ண லவ் பண்ண வச்ச மாதிரி பேசறான். எனக்கென்னவோ பயமா இருக்கு கண்மணி..உங்கப்பா அவன் சொல்றதெல்லாம் அப்பிடியே நம்புறாரு. உன் காதலுக்கு இவங்கல்லாம் என்னென்ன இடைஞ்சல் குடுப்பாங்கன்னு தெரியலையே .. நீ எப்படி சமாளிக்க போற?"

"சமாளிப்போம் ..எப்படியாவது சமாளிச்சே ஆகணும் " என்றவளின் மனதின் உறுதி மேலும் வலுப்பட்டது.
 
அச்சோ கதிர் மேல சந்தேகம் வந்து விட்டது அவங்களுக்கு
சூப்பர் 😀
 
Top