Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை!-13

Advertisement

praveenraj

Well-known member
Member
அன்றைக்கு காலில் இருந்த முள்ளை எடுத்ததும் இந்திரனிடமிருந்து கோவித்துக்கொண்டு அழுதபடியே வேகமாய் வெளியேறியவள் அவளின் வீட்டிற்குச் சென்று தன் அறையில் தஞ்சம் புகுந்தாள்.
இங்கே இந்திரனும் அவள் பேசிய வார்த்தைகளை மீண்டும் மீண்டும் அசைப்போட்டான். அவள் பேசியதும் அவள் அழுதது உட்பட எல்லாமும் அவனை என்னவோ செய்தது. அந்த நாட்களை நினைக்கையில் அவனுக்கு அவன் மேலே வெறுப்பும் கோவமும் வந்தது. தன் கையில் கிடைத்த வைரத்தைக் கீறி தூக்கி எறிந்த பிறகு அதன் மதிப்பை உணர்ந்து எடுத்து பூஜையறையில் வைத்தால் மட்டும் என்ன ப்ரயோஜனம்? அந்தக் கீறல்கள் தான் மறைந்துவிடுமா? இந்திரனுக்கு இப்போது அழுகை கோவத்தைக் காட்டிலும் அவன் மீதே அவனுக்கு அளவுகடந்த வெறுப்பு தோன்றியது.
அப்போது அவனுக்கு கதிரவனிடமிருந்து அழைப்பு வந்தது. இன்னும் நான்கு நாட்களில் அவனுக்கு பெல்ஜியத்தில் ரேஸ் இருக்கிறது. வழக்கமாக எப்போதும் கார் ரேஸில் மட்டும் பங்குபெறுபவன் இம்முறை ஏனோ மோட்டோ ஜிபியில்(பைக்) பங்கு பெற விரும்பி அதற்காகவே தன்னைத் தயார் படுத்திக்கொண்டிருந்தான்.
"ஹலோ..."
"என்ன மச்சான் வாய்சே வரல?"
"சொல்லு டா என்ன விஷயம்?"
"என்ன விஷயமா? சார் இன்னும் நாலு நாளுல ரேஸ் இருக்கு. மறந்துட்டையா?"
அவன் மனம் அதிகமாகக் குழம்பியது. "ஆம், ஞாபகம் இருக்கு..." என்று பட்டும்படாமல் பேசினான்.
"அப்போ கிளம்பி வாங்க மிஸ்டர் இந்திரன். ஸ்ரீயைப் பார்த்திடக் கூடாதே? உடனே ரொமான்ஸ் மூடுக்கு போயிடுவீங்களே? வாங்க சார்..." என்று வழக்கம் போல் இந்திரனிடம் வம்பிழுத்தான் கதிரவன்.
ஏனோ இயலாமையில் இந்திரன் ஒரு உச் கொட்ட,
"என்ன டா ஆச்சு? இந்திரா?"
"ஒன்னும் இல்ல மச்சான். காலையில கிளம்பிடுறேன்..."
"டேய் அம்மா கிட்ட?"
"தயவு செஞ்சு வாயை மூடு டா கதிரா. நான் கார் ரேஸ்ல கலந்துக்குறதே அம்மாக்கு விருப்பமில்லை. இதுல பைக் ரேசும் சொன்னா அவ்வளவு தான்..."
"இருந்தாலும் இது..."
"கதிரா ஒரே டைம் டா. முதலும் கடைசியுமா ஒரு முயற்சி. நான் ஜெயிக்க எல்லாம் மாட்டேன். எனக்கே அது தெரியும். இருந்தும் ஒரு ஆசைக்கு..."
"சரி சரி. இது சிந்துக்குத் தெரியுமா?"
"எப்பா சாமி அதுக்கு அம்மாவே மேல். குட்டிம்மாக்குத் தெரிஞ்சது அவ்வளவு தான் விடவே மாட்டா. உன் வாயை வெச்சிக்கிட்டு கொஞ்சம் சும்மா இருந்தாலே போதும்..."
"ஹா ஹா தி கிரேட் இந்திரன் சிந்து பேரச் சொன்னாலே பயப்படுற?"
"டேய் நம்ம மேல ஒருத்தன் வெறுப்பைக் காட்டுனா கூட நாம தைரியமா எதிர்க்கலாம். ஆனா பாசத்தையும் அன்பையும் மட்டும் ஒருத்தவங்க காட்டும் போது அவங்களை நாம சும்மா கூட ஹர்ட் பண்ண முடியாது டா. அதையும் மீறி ஹர்ட் பண்ணா கூட அவங்க பதிலுக்கு நம்மளை எதுவும் செஞ்ஜா பரவாயில்ல. ஆனா நம்மள அவங்க ஜஸ்ட் உதாசீனம் செஞ்சாலே அது கொடுக்குற வலி இருக்கே அதை வார்த்தையிலே சொல்ல முடியாது மச்சான்..." என்ற இந்திரன் தன் மொத்த ஆற்றாமையையும் கதிரவனிடம் கொட்ட அவனுக்கும் ஓரளவுக்கு எல்லாம் புரிந்தது.
"ஸ்ரீ ஏதாவது சொன்னாளா மச்சான்?"
"........."
"இந்திரா?"
"ஹ்ம்ம்..."
"என்ன சொன்னா மச்சான்?"
"என்ன சொல்லுவா?"
"புரியில?"
"சின்ன வயசுல தான் அவளை நிறைய அழ வெச்சேன். ஆனா இன்னைக்கு இப்போ திரும்ப அழுதிட்டு போனா டா..." என்று வேதனை நிரம்பிய குரலில் இந்திரன் கூற,
"என்ன டா பண்ணித் தொலைச்ச? நாயே..." என்று பொங்கினான் கதிரவன்.
"நான் எதுவும் பண்ணல டா கதிரா..." என்றவன் நடந்ததைச் சொல்ல,
கதிரவனுக்கும் ஆச்சரியம் பிடிபடவில்லை. இந்திரன் மன்னிப்பு கேட்டானா? அதும் அவள் காலைப் பற்றி? கூடவே அவளிடம் அவன் சொன்னதையெல்லாம் கேட்டவன், அப்போ நிஜமாவே இந்திரன் ஸ்ரீயை விரும்புகிறான் என்று இப்போது தான் உண்மையில் தெளிந்தான்.பின்னே என்னதான் அவன் ஸ்ரீயை விரும்புவது கதிரவனுக்குத் தெரிந்தாலும் அதில் அவனுக்கு ஒரு சந்தேகம் இருந்தது நிஜம். இப்போது அது முழுவதும் அவனுக்கு விலகியது. ஆனால் தன் நண்பனின் நிலை தான் அவனுக்கு கஷ்டமாக இருந்தது.
"மச்சான் எனக்கு ஒரே ஒரு சான்ஸ் கொடுக்கச் சொல்லுடா. நான் நிச்சயமா ஸ்ரீயை பத்திரமா பார்த்துப்பேன். அவ அழுதது ரொம்ப வலிக்குது மச்சான்..."
என்ன சொல்வதென்று புரியாமல் விழித்தவன்,"இந்திரா, இந்திரா, சின்ன பையனாடா நீ? இதுக்கெல்லாம் ஃபீல் பண்ற? ஸ்ரீக்கும் உன்னைப் பிடிக்கும் டா..."
"இல்ல டா. சும்மா சொல்லாத..."
"நிஜமா பிடிக்கும் மச்சான்..."
"எப்படிச் சொல்ற?"
"உன்மேல வெறுப்பு இருந்தா அவ அழுதிருக்க மாட்டா. உன்னைக் கஷ்டப்படுத்திட்டு அவளும் தானே மச்சான் கஷ்டப்படுறா? அப்போ நிச்சயம் அவளுக்கும் உன்மேல ஒரு சாப்ட் கார்னெர் இருக்கு டா..."
"எனக்கு சாப்ட் கார்னெர் எல்லாம் வேணாம் மச்சான். அவ லவ் தான் வேணும்... அது அவ என்னை முழுசா மன்னிச்சு ஏத்துக்கணும்..."
இப்படி சின்ன பையன் போல பேசுபவனிடம் என்ன சொல்வதென்று புரியாமல் அவன் இருக்க, அப்போது தான் சகுந்தலா இந்திரனின் அறைக்கதவைத் திறக்க,
"மச்சான் அம்மா வந்துட்டாங்க, நான் அப்றோம் கூப்பிடுறேன்..."
"சரிடா. ரெடி ஆகிட்டு நாளைக்குக் கிளம்பிடு..."
"ஹ்ம்ம்..." என்றவன் அழைப்பைத் துண்டித்து சகுந்தலாவிடம்,
"வாங்க அம்மா. எப்போ வந்தீங்க?"
இப்போ தான் வரோம். என்னப்பா ஸ்ரீயைக் கோவிலுக்குக் கூட்டி போயிட்டு வந்துட்டியா?"
"ஆம் மா..."
"எங்க அவ?"
"தெரியில, அவ வீட்டுக்குப் போயிருப்பா..."
ஏனோ சகுந்தலாவிற்கும் இது கஷ்டத்தைக் கொடுத்தது. பின்னே இந்திரனுக்கு ஸ்ரீ மீது இருக்கும் ஆசையைத் தெரிந்துகொண்டவர் தானே இவர்? ஸ்ரீகும் இந்திரனைப் பிடிக்கும் தான். ஆனால்? கொஞ்சம் குழப்பம் அவரை ஆட்கொண்டது.
"அம்மா நான் நாளைக்கு ஊருக்குப் போகணும்..."
"எதுக்கு?"
"ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. அதான்..."
அவர் அவனை நம்பாமல் பார்க்க,
"நிஜமா அம்மா..." என்ற மகனிடம்,
"சரி பார்த்து போயிட்டு வரனும். பத்திரம்..." என்றார்.
அப்போது சிந்துவும் அறைக்குள் வர அன்னையும் தமையனும் பேசுவதைக் கண்டு,"அப்பப்பா டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?" என்று கிண்டல் செய்தாள்.
"என்ன டா குட்டிம்மா நீ எங்களுக்கு டிஸ்டர்பா?"
"அம்மாவும் பையனும் கொஞ்சி கொஞ்சி பேசுவீங்க. இதுல நாங்க எதுக்கு வீணா தொந்தரவு செஞ்சிகிட்டு?" என்று புருவம் உயர்த்தினாள் சிந்து.
அப்போது கமலேஷும் உள்ளே வந்தவன் அவர்களைக் கண்டு,"உள்ள வரலாமா?" என்று கேட்டு வார, அவனுக்கு ஹை பை கொடுத்தாள் சிந்து. சகுந்தலா இந்திரன் இருவரும் அவர்களை முறைக்க சரியாக இமையவர்மனும் உள்ளே வந்தார்.
எல்லோரும் அவரைப் பார்க்க,"சகு தப்பான டைம்ல வந்துட்டேனோ? அம்மாவும் பையனும் ஆயிரம் பேசுவீங்க நான்..." என்று இழுக்க இப்போது சிந்து கமலேஷ் இருவரும் தங்கள் தந்தைக்கு ஹை பை கொடுக்க தாயும் மகனும் மூவரையும் முறைத்தனர்.
"என்ன இது விளையாட்டு? பிள்ளைங்க தான் எங்களை கலாய்க்குதுன்னா நீங்களுமா?" என்ற சகுவுக்கு,
"என்ன பண்ண என் பொண்டாட்டிக்கு என்னைவிட அவ பையன் மேல..." என்று முடிக்கும் முன்னே,
"அப்பா மூத்த பையன்..." என்றான் கமலேஷ்.
"கரெக்ட்டா சொன்ன கமலா, அவ மூத்த பையன் மேல பாசம் பொங்கி வழியும். அதான்..." என்று சிரிக்க அந்த ஐவருக்கும் இடையில் ஒரு ரம்மியமான உரையாடல் நடந்தேறியது.
"எப்படி பா இருந்தது மேரேஜ்?" என்ற இந்திரனுக்கு,
"செம டா கண்ணா. சீக்கிரம் இது போல இல்லை இதுக்கும் மேல உனக்கு மேரேஜ் பண்ணனும்..." என்று இமையவர்மன் சொல்ல,
ஏனோ இந்திரனின் முகம் வாடியது. அதை நால்வரும் கண்டும் காணாமல் இருக்க,
"அப்பா நான் காலையில கிளம்பனும்..." என்றான் இந்திரன்.
"என்ன ரே..." என்று அவர் இழுக்க, இந்திரன் அவரைப் பார்க்கவும் புரிந்துகொண்டவர் சகுந்தலாவிற்குத் தெரியாமல் இருக்க வேண்டி அமைதியாக, சிந்து கமலேஷ் இருவரும் புரிந்து விழித்தனர்.
கொஞ்சம் பேசிவிட்டு வெளியேறும் போது,"இந்திரா அம்மா ஒன்னு கேட்பேன் ஓகே சொல்லணும்?" என்றார் சகுந்தலா.
"என்னம்மா? கேளு..."
"இதோட கடைசியா இருக்கனும்..."
நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து முழிக்க,
"இந்த கார் ரேஸ் போற தானே அதைச் சொல்றேன்..." என்று சொல்லி அவர் வெளியேற முயல,
"பரவாயில்ல உங்க அம்மாவும் கூட ஷார்ப் தான் போல?" என்று இமையவர்மன் பிள்ளைகளிடம் தன் இல்லாளை வார,
"இல்லனா என்னால இத்தனை வருஷம் உங்ககூடவெல்லாம் குப்பைக் கொட்டிருக்க முடியுமா?" என்று பதில் கவுன்ட்டர் கொடுத்து சகுந்தலா வெளியேற,
"அசிங்கப்பட்டார் பிசினஸ்மேன்..." என்று பிள்ளைகள் மூவரும் கோரஸ் பாட, கொஞ்சம் சிரிப்பு சப்தம் இழையோடியது.
மறுநாள் காலையில் எழுந்து ரெடி ஆகி இந்திரன் புறப்பட தயாராக அவன் கண்களோ வாசலிலே இருந்தது.
அதை நால்வரும் உணர்ந்துக்கொண்டாலும் ஏதும் பேசாமல் அமைதியாக இருக்க, அவனுக்கு பிளைட்டுக்கு நேரமாக, சகுவே ஸ்ரீயை அழைத்தார்.
வந்தவள் அங்கே இந்திரன் என்று ஒருவன் இருப்பதையே கண்டுக்கொள்ளவில்லை. சிந்து கமலேஷிடம் பேசிக்கொண்டிருக்க இந்திரன் புறப்பட அப்போது தான் அவன் ரேஸுக்கு கிளம்புகிறான் என்றே அவளுக்குத் தெரிந்தது. ஏனோ அவள் மனம் எல்லாம் படபடவென காரணமின்றி அடித்துக்கொண்டது.
அவளுக்கோ 'போகாதே' என்று அவனிடம் சொல்லவேண்டும் போல் இருக்க திரும்பி தன் அத்தையைப் பார்த்தாள். அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தவர்,"நான் என்னடா பண்ணட்டும்? அப்பா, தம்பி, தங்கைனு எல்லோரும் சப்போர்ட் பண்றங்க..." என்று தன்னுடைய ஆற்றாமையை வெளிப்படுத்தினார்.
காரில் ஏறியவன் ஒருவார்த்தை பேசிவிட மாட்டாளா என்று அவன் காத்திருக்க, அவளோ அவனுக்கு எதுவும் ஆகக் கூடாது என்று பதைபதைப்பில் இருந்தாள். கூடவே அவனின் தற்போதைய செயலை எண்ணி கொஞ்சம் கோபம், நேற்று நடந்ததை எல்லாம் நினைக்கையில் அவளுக்கு ஒரு மாதிரி மிக்சட் பீலிங்ஸ் தர அவன் கண்களையே பார்த்தவள்,"பத்திரமா திரும்ப வா..." என்று அவள் மனதிற்குள் சொல்லிக்கொண்டாள். அவனோ தன்னிடம் அவள் ஒரு கர்டெசிக்கு கூடப் பேசவில்லையே என்று அவள் உணர்த்துவதைப் புரியாமல் புறப்பட்டான்.
பெல்ஜியம் சென்று இறங்கியதிலிருந்து அவனுக்கு மனமே சரியில்லை. ஸ்ரீ அன்று அழுது சென்றது மட்டும் தான் அவனுக்கு மீண்டும் மீண்டும் நினைவில் வந்து சென்றது. அத்துடன் இறுதிவரை அவனிடம் பேசாமல் அவள் தவிர்த்தும் அவனுக்கு வலித்தது. இந்தக் குழப்பங்களில் அவனால் ஒழுங்காக பிராக்டிஸ் கூடச் செய்ய முடியவில்லை. நிறைய சொதப்பினான். கதிரவன் தான் அவனை போட்டியில் இருந்து விலக வைக்க எவ்வளவோ முயற்சித்தான். ஆனால் அவனால் முடியவில்லை.
இன்னும் போட்டி துவங்க சில நிமிடங்களே இருக்க அவன் மனமோ துளியும் இங்கு இல்லை. பைக்கில் ஏறி அமர்ந்து இருந்தாலும் அவன் எண்ணமெல்லாம் ஸ்ரீயின் மீதே இருக்க போட்டி ஆரமிக்கவும் ஏனோ கோவம் இயலாமை எல்லாம் ஒன்று சேர வண்டியை மிக வேகமாய்ச் செலுத்தினான்.
அங்கே போட்டியைக் கண்டுக்கொண்டிருந்த கதிரவனுக்கே இது ஆச்சரியமாக இருந்தது. பின்னே ஐந்தாம் இடத்தில் சென்றுகொண்டிருக்கிறான். ஆனாலும் அவனுக்குள் கொஞ்சம் படபடப்பு இருந்தது. பின்னே ஸ்ரீ தான் காலையிலே அழைத்திருந்தாளே? "அண்ணா அவரைக் கலந்துக்க வேணாம்னு சொல்லுங்க. எனக்கு ஏனோ மனசே சரியில்ல ப்ளீஸ்..." என்று கிட்டத்தட்ட கெஞ்சினாள்.
"நான் என்ன பண்ணட்டும் ஸ்ரீ? நான் நிறைய தடவை அவன்கிட்டச் சொல்லிட்டேன். நீயாவது அவன் கிட்டப் பேசியிருக்கலாம். ஒருவேளை அப்போவாது..." என்று முடிக்கும் முன்னே,
"எனக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சி அண்ணா. அன்னைக்கு அவரு அழுதது எனக்கு ரொம்ப வலிக்குது..." என்றாள்.
"பேசாம நீ உன் காதலை அவன் கிட்டச் சொல்லியிருக்கலாமே?"
".............."
"ஏன்டா அவன் உன்னை உண்மையிலே லவ் பண்றானான்னு உனக்கு..." என்று முடிக்கும் முன்னே,
"ஐயோ அண்ணா அவரு என்னை ரொம்ப லவ் பண்றாருனு எனக்கும் தெரியும்..."
"அப்றோம் என்ன? அப்போ நீ அவனை..."
"அண்ணா..." என்று உச்சசுருதியில் அவள் கத்த,
"சரி. ரெண்டு பேரும் லவ் பண்றீங்க. ஆனா சொல்லிக்க மட்டும் மாட்டேங்கிறீங்க?"
"எனக்கு கொஞ்சம் பயம் இருந்தது உண்மை தான். ஆனா?"
"ஆனா?"
"இப்போ இல்ல. நானே வந்து பேசி சரிசெய்யலாம்ன்னு வந்தா பெரிய இவரு மாதிரி ஊருக்குக் கிளப்பி நிக்கறாரு..."
"நீ மட்டும் அன்னைக்கு ஒரு வார்த்தை பேசியிருந்தா அவன் இங்க வந்தே இருக்க மாட்டான் ஸ்ரீ..."
"எனக்கு... எனக்கு எப்படிப் பேசுறதுனு..." என்று இழுக்க,
"ரெண்டு பேரும் லவ் பண்றீங்க. ஆனா ரெண்டு பேருக்கும் ஈகோ?"
"ஈகோ எல்லாம் இல்ல. இந்த வாட்டி ஊருக்கு வரட்டும். நானே சொல்றேன்..."
"சூப்பர் ஸ்ரீ! வாழ்த்துக்கள்..."
அவள் சிரிக்க, அதை நினைத்து கொண்டிருந்த கதிரவன் கண்முன் நடந்தது கனவா இல்லை நிஜமா என்று சுதாரிப்பதற்குள் அது நடந்து முடிந்திருந்தது. அது இந்திரன் சென்ற பைக் வந்த வேகத்திற்கு நிலையில்லாமல் ஸ்கிட் ஆகி பத்தடி தூரம் தள்ளி வீசியெறியபட்டான் இந்திரன்.
அவன் மனமும் உதடும் ஒன்றை மட்டும் ஜெபித்துகொண்டிருந்தது.'என்னை மன்னிச்சுடு லேக்கு. சாரி...'
************************


இனியும் இங்கு இருக்க வேண்டாம் என்று தீர்க்கமாய் முடிவெடுத்த இமையவர்மன் உடனே நாளையே மும்பை செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தாமோவைச் செய்ய சொன்னார். அவர் எல்லாம் சொல்லிவிட்டு தங்கள் அறைக்குச் சென்று தீர்க்க யோசனையில் ஆழ்ந்திருக்க அப்போது தான் வந்தார் சகுந்தலா. ஏனோ இத்தனை வருடங்களில் தன் மனையாளிடம் இத்தனை கடுமையாக அவர் பேசியதே இல்லை. இயல்பிலே சற்று சாந்த குணம் கொண்டவர் தான் இமையவர்மன். அதனாலோ என்னவோ இவருக்கும் இவர் சகோதரன் சந்திர வர்மனுக்கும் எதிலும் ஒத்து வராது. சந்திர வர்மன் அப்படியே தங்கள் தந்தையைப் போல் இருந்தார். ராஜவர்மன் அந்தக் காலத்திலே அரசக் குடும்பத்தில் பிறந்ததால் சகல வசதிகளுடன் செல்வச் செழிப்புடனும் வளர்ந்தார். அதனால் அவர் கூடவே அதற்கே உண்டான செருக்கும் மிடுக்கும் அவருடனே இணைந்து வளர்ந்தது. அந்த குணம் அப்படியே சந்திரவர்மனிடம் இருந்தது.
அதனாலோ என்னவோ தான் எடுக்கும் முடிவுகளைப் போலவும் தன்னைப் போலே ஒவ்வொரு விஷயத்தையும் எதிர்கொள்ளும் சந்திர வர்மன் மீது ராஜவர்மனுக்கு சிறுவயதிலிருந்தே அதிக பெட். இமைய வர்மன் நாளடைவில் சரியாகிவிடுவான் என்று எண்ணியிருக்க அந்தக் காலத்தில் மேற்படிப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற போது அப்போது நிலவி வந்த அந்த 'சோசியலிச' (பொது நலக்கோட்பாடு) கருத்துக்களின் தாக்கத்தில் தன்னை ஒரு சோசியலிஸ்ட்டாகவே மாற்றிக்கொண்டார் இமையவர்மன். சந்திரவர்மனோ ஒரு அக்மார்க் பிசினஸ் மேனாகவே தன்னை உருவாக்கிக்கொண்டார். இருவரின் இந்த முரண்பட்ட நம்பிக்கைகளைப் பார்த்தப்பின் ஏனோ தனக்குப் பிறகு இந்த நிர்வாகத்தைக் கட்டிக்காக்க சந்திரவர்மனே சரியானவர் என்று முடிவுக்கு வந்தார் ராஜ வர்மன். அதற்கேற்றாற் போல் இமையவர்மனும் என்றுமே தன்னை ஒரு முதலாளியாக பாவித்துக்கொண்டதே இல்லை.
இதற்கிடையில் தான் இருவருக்கும் திருமணம் முடிய சந்திரவர்மனுக்கு பெண் குழந்தை ஒன்றும் சில வருடங்களில் ஆண் குழந்தை ஒன்று என்று அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறக்க இதனால் குடும்பத்தில் நிறைய மனக்கஷ்டங்கள்எழுந்தது. சந்திரவர்மனின் மனைவி கோகிலாவிற்கும் சகுந்தலாவிற்கும் நிறைய மனக்கஷ்டங்கள் வந்தன. இத்தனைக்கும் அவர்கள் இருவரும் சித்தப்பா மகள் பெரியப்பா மகள் தான். ஒரு மாதிரி வெளியில் சொல்லிக்கொள்ளப் படாத போட்டி இருவருக்குள்ளும் நீடித்துகொண்டே இருந்தது. இது பாக்கியலட்சுமி அம்மாளுக்கும்(ராஜவர்மனின் மனைவி) தெரியும். குடும்பத்தில் நிறைய உரசல்கள் வந்துகொண்டே போக அந்த நேரத்தில் தான் ராஜவர்மனுக்கு இருந்த ஆசையும் நிறைவேறுவதற்கான வாய்ப்பு அமைந்தது. அதன்படி சென்னையில் (அன்றைய மெட்றாஸ்) புதிய கிளை ஒன்றை நிறுவினார். கிட்டத்தட்ட புதிய புதிய மெஷினரிக்கள் எல்லாம் இறக்குமதி செய்து பெரிய பெரிய தொழிற்சாலைகளை உருவாக்கினார். அதற்கு தலைமையாக இமையவர்மனையே நியமித்தார். ஆனால் பெரும்பாலான முடிவுகளை ராஜவர்மன் தான் எடுத்தார்.
நாளடைவில் குடும்பம் பிரிந்தது. சென்னைக்கு வந்தவர்களின் வாழ்க்கையில் மாற்றம் வந்தது. இந்திரனும் பிறந்தான். ஏனோ இது ராஜவர்மனுக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்தது. மேலும் சிறுவயதிலிருந்தே அவனின் பழக்கவழக்கங்கள் நடை உடை பாவனை எல்லாமும் தன்னை ஒத்து உள்ளதை அறிந்துகொண்ட ராஜவர்மனுக்கு அவனை இமையவர்மன் வளர்பில் விட மனமில்லை. எங்கே இவனும் இவன் தந்தையைப் போலே வளர்ந்துவிடுவானோ என்று நினைத்து அவனை தன்னோடு மும்பைக்கே அழைத்துச்சென்றார் ராஜவர்மன். கிட்டத்தட்ட தன்னுடைய ஆறு வயது வரை அவன் அங்கேயே தன் தாத்தாவின் வளர்ப்பில் தான் வளர்ந்தான். இதில் இமையவர்மன் சகுந்தலா இருவருக்கும் பெரிய உடன்பாடே இல்லை தான். பின்னே இத்தனை வருடங்கள் கழித்துப் பிறந்த மகனை அவர்களிடமிருந்து பிரித்துச் செல்வதை எந்த பெற்றோர்களுக்குத் தான் பிடிக்கும்? இருந்தும் 'பெரியவர்' எடுத்த முடிவை எதிர்த்துப் பேச யாருக்கும் அங்கே துணிவில்லை. அவனைப் பார்க்கவே அடிக்கடி சகுந்தலா அங்கே சென்றுவருவார். அவனுக்கு மூன்று வருடங்களுக்குப் பிறகு பிறந்தவன் தான் கமலேஷ் அவனை தாங்களே தான் வளர்த்தனர்.
இப்படி தன் பிள்ளைகளைக் காட்டிலும் இந்திரனுக்கு அதிக முக்கியத்துவமும் செல்லமும் தருவது ஏனோ சந்திரவர்மனுக்குப் பிடிக்க வில்லை தான். இருந்தும் தன் தந்தையை எதிர்த்து கேள்வி கேட்க முடியாதே? அதனால் அவர் அமைதியாகவே இருந்தார். அவருடைய மகனை (ஹர்ஷவர்மன்) தன்னைப்போலவே வளர்த்தார். இன்று தன் தந்தை கையில் இருக்கும் அதிகாரம் நாளை எப்படியும் தனக்குத் தான் கிடைக்கும் என்று சந்திரனுக்கும் புரிந்தது. ஆனால் தனக்குப் பின் அது இந்திரனிடம் சென்றுவிடுமோ என்று நினைத்து வருந்தினார். ஏனெனில் இந்திரன் அப்படியே தன் தந்தையின் ஜெராக்ஸாய் இருக்கிறான் என்று அறியாதவரா அவர்?
இப்படியே குடும்பத்துக்குள் வெளிப்படையாக எந்த பிரச்சனையும் இல்லாததைப் போல் தெரிந்தாலும் உள்ளுக்குள் நிறைய புகைச்சல்கள் ஓடிக்கொண்டு இருந்தது. இந்திரன் இங்கே வளர்வது சந்திரவர்மனுக்கும் பிடிக்கவில்லை இமையவர்மனுக்கும் உடன்பாடில்லை.
ஒருகட்டத்தில் ராஜவர்மனுக்கு உடல்நிலை ஒத்துழைக்க வில்லை. எல்லாப் பொறுப்புகளையும் தன் மகன்களிடமே ஒப்படைக்க முடிவெடுத்தார். எப்படியும் மொத்த நிர்வாகமும் தன் கையில் வரும் என்று சந்திரன் நினைக்க அவரோ மும்பையில் இருப்பதெல்லாம் சந்திரவர்மனிடமும் சென்னையில் இருப்பதெல்லாம் இமையவர்மனிடமும் என்று பிரிக்க இருந்தும் மூல நிறுவனத்தின் பொறுப்புகள் தன் வசமே இருப்பதாய் நினைத்து ஒத்துக்கொண்டார் சந்திரவர்மன். ஆனால் அவை ஒரே குழுமமாய் 'வர்மா குரூப்ஸ்' என்ற பெயரில் தான்மொத்தமும் இயங்கியது.
வாழ்க்கையின் இறுதி நாட்களில் தான் ஏனோ ராஜவர்மனுக்கு வாழ்க்கையின் சாராம்சம் நன்கு புரிந்தது. இங்கே ஒரு பிசினெஸ்மேனாக மட்டுமே வாழக் கூடாது என்றும் தன்னிடம் இருப்பதாய் மற்றவர்களுக்கும் கொடுக்கவேண்டும் என்றும் உணர்ந்தவர் 'வர்மா டிரஸ்ட்ஸ்' என்று ஒன்றை ஆரமித்து தன் இறுதி நாட்களில் நிறைய நிறைய நல்லவைகளைச் செய்துகொண்டிருந்தார். அப்போது தான் இதுவரை தான் செய்த தவறும் அவருக்குப் புரிந்தது. இமையவர்மனைத் தான் சமமாக நடத்தவில்லையோ என்ற ஏக்கமும் வந்தது. கூடவே சந்திரவர்மனின் எண்ணங்களும் புரிந்தது. தன்னால் முடிந்த அளவுக்கு சந்திரவர்மனை சரிசெய்ய முயற்சித்தார். கூடவே தன்னைப்போலவே இருக்கும் இந்திரன் மீதும் அவருக்கு பயம் வந்தது. பேசாமல் இவன் அங்கேயே வளர்ந்திருக்க வேண்டுமோ? தான் தவறு செய்துவிட்டோமோ என்றும் அவருக்குப் புரிந்ததும். உடனே அவனை மீண்டும் சென்னை அனுப்பிவிட்டார். மீண்டும் சென்னை வந்தவனுக்குத் தான் அங்கே சிந்து கமலேஷ் மட்டுமே தன் குடும்பம் என்றும் தாங்கள் எல்லோரையும் விட உயர்ந்தவர்கள் என்ற அந்த கர்வமும் எண்ணமும் தழைத்தோங்கி இருந்தது. இதன் காரணமாய் அங்கே தன் வீட்டில் தன் தங்கையைப் போலே வளரும் ஏன் தன் தங்கையைக் காட்டிலும் அதிக முக்கியத்தும் பெரும் ஸ்ரீ என்னும் ஸ்ரீலேகா மீது தீரா வன்மம் வளர்த்துக்கொண்டான் இந்திரன். அவள் இங்கே விளையாட வந்தால் யாரும் பார்க்க வண்ணம் அவளைக் கிள்ளிவிடுவது கீழே தள்ளிவிடுவது என்று சிறுசிறு விஷயங்களைச் செய்துவந்தான். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல் அவனின் சின்ன சின்ன விஷயங்கள் நாளடைவில் வளர்ந்துகொண்டே இருந்தது. இந்திரனின் இந்த குணம் இமையவர்மன் சகுந்தலா இருவருக்கும் பெரும் அச்சத்தையும் கவலையும் கொடுத்தது. அவனைக் கண்டிக்கவும் முடியவில்லை. பின்னே வளர்ந்துவிட்டானே? மீறி ஏதும் கண்டிக்க முனைந்தால் சமயங்களில் அவர்களையும் மதிக்க மாட்டான். எல்லாம் ராஜவர்மனின் வளர்ப்பு! (வானிலை மாறும்!)
 
ரெண்டு பசங்கள அவர மாதிரி வளர்த்து விட்டுட்டு கடைசில பெரியவர் பீல் பண்ணி என்ன பிரயோஜனம் ???
 
ரெண்டு பசங்கள அவர மாதிரி வளர்த்து விட்டுட்டு கடைசில பெரியவர் பீல் பண்ணி என்ன பிரயோஜனம் ???
yes! கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்... என்ன பண்ண வயது கூட கூட தான் ஞானம் அடைகிறோமே?? maturity comes by the age!
 
Top