காட்சி –1
‘முருகா.. முருகா.. இப்படி இந்த கழிசடைங்க கூட காலங்காத்தால மல்லுக்கட்ட விடுறியே..! ஒழுங்கா தியானம் பண்ணவிடுதுகளா பாரு?’ என்று மனம் புலம்பினாலும், தோழிகளின் வாக்குவாதத்திற்கிடையிலும் இதழ்கள் இளநகையையே உதிர்த்தது.
யோகா விரிப்பை சுருட்டி ஓரம் வைத்தவள், பால்கனியில் மணம் தர மாட்டேன் என அடமாயிருந்த வாடமல்லி செடியை வருடி, இருவரும் ஒரே பிறவி என அவளை பூவுடன் இணைத்துத் தோழமை பாராட்டினாள்.
பால்கனி கடந்து ஓர் பெரிய கூடம், இரண்டு படுக்கையறை இருந்தாலும் மூவரும் ஒரே அறையில் தங்கள் ஓய்வை வைத்துக் கொள்வார்கள். சிறிய மாடர்ன் கிட்சன், இவர்களின் வயிற்று தேவை பெரும்பாலும் இங்கேயே முடிந்துவிடும். இதர பெட்ரூமில் இவர்கள் மூவரும் வாங்கி குமிக்கும் ஆன்லைன் பொருட்களில் இருந்து ஷாப்பிங் செய்த துணி மணிகள் என அறையை உடைக்காத உண்டியலாக சேமித்து வைத்திருந்தனர்.
தேவைக்காகவும் அந்த அறையை திறப்பது இல்லை. யோகா முடித்து வந்த ஸ்ரேயா, கிச்சனில் நுழைந்து தனக்கு வேண்டிய காபியை தயாரித்து குடித்தவாறே தோழிகளின் சண்டையை அங்கு இருந்த இருக்கையில் மென்னகை தாங்கி ரசித்தாள்.
“இங்க பாரு ரே.. லாஸ்ட் வீக் நான் வாங்குன டிரஸ, இந்த மாளு எடுத்து வச்சிட்டு தரமாட்டேங்குறா..” புகார் பட்டியல் படித்தாள் ஐ.டி.யில் வேலை பார்க்கும் ஹரிதா.
“ஒய்.. அதுக்குப் பணம் நான்தான் பே பண்ணேன். என்னமோ நீ கொடுத்த மாதிரி சொல்ற..” ஹரிதாவின் தோளை தன்பக்கமாக திருப்பிக் கேட்டாள் மாளவிகா.
வாயில் கையை அடைத்து, “அவ்வா.. அந்த காசை நான்தான் உன்கிட்ட திருப்பி கொடுத்துட்டேனே..!” வாங்கிய பணத்தை இல்லையென மறுக்கிறாளே என சிணுங்கலாக மருகினாள்.
“ஆனா.. க்யூ ஆர் கோட் ஒர்க் பண்ணலங்கவும், என் கையால கேஷ் கொடுத்து வாங்குனது நான்தான.. அப்ப இது எனக்கு சொந்தமானது தானே..!” கையில் இருந்த துணியை உதறி தூக்கிப் போட்டு பிடித்தாள்.
“மால்ல நீ கொடுத்ததுக்கு, அடுத்த நாளே அந்த காசை திருப்பி நான் கொடுத்துட்டேனே..!” மாளவிகா கையில் பிடிபட்டிருந்த துணியைப் பிடுங்கி சோபாவில் எறிந்துவிட்டு மல்லுக்கு வந்தாள் ஹரிதா.
“ம்ம்.. கொடுத்த.. இல்லைன்னு சொல்லலியே, நான் உனக்குக் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்த பட், இந்த டிரஸ் வாங்கும் போது என்னோட காசை கொடுத்து தான வாங்குனேன்.. அப்ப இது எனக்குதான..” பேங்கில் பி.ஓ.வாக வேலை பார்க்கும் மாளவிகா சொல்ல,
“இந்த மாதிரி பொய் வட்டி கணக்கு காட்டிதான் பொது ஜனங்களை ஏமாத்துறியாடி? உன்கிட்ட நம் நாட்டோட நிதியமைச்சரே தோத்துப் போவாங்க பாவி..! எப்படி ஏமாத்துறா..!!” என இருவருக்கும் இடையே கோழிச் சண்டை நடந்தது.
இந்த வாக்குவாதத்துக்கு இடையே ஸ்ரேயா காபியை குடித்து முடித்து குளித்துவிட்டு எந்த டிர்ஸ்க்கு சண்டை நடந்ததோ, அந்த உடையை இவளே அணிந்து வந்து நின்றாள்.
மற்ற இரு தோழிகளும் ஸ்ரேயா அணிந்து வந்த உடையைப் பார்த்து அரண்டு நின்று விட்டனர். அவர்களின் மிரட்சியைக் கண்டு குறுநகையை தந்தவள், “ஆக்சுவலி இந்த டிரஸ் எனக்குதான் பிட்டா இருக்கு, சோ இதை நானே எடுத்துக்குறேன்..” என்றதோடு நில்லாமல் அவர்கள் கையில் ஆளுக்கு ஒரு நெகிழி பையைக் கொடுக்க, அதை திறந்து பார்த்தவர்கள் பிரமித்து தங்கள் தோழியைப் பார்த்தனர்.
“பிடிச்சிருக்கா..?” ஸ்ரேயா கேட்க,
“பிடிச்சிருக்காவா.. அட செம்மையா இருக்கு ரே..!” மாளவிகா மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தாள்.
“ஏய்.. எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு பா.. உன்னோட டிசைனா..?” ஹரிதா வினவினாள்.
ஸ்ரேயா பி.டெக் டெக்ஸ்டைல் இஞ்சினியரிங் முடித்துவிட்டு, காஸ்டியூம் டிசைனராக பணி புரிந்து வந்தாள். இப்போது சுயமாக கார்மெண்ட்ஸ் நிறுவனம் துவங்குவதற்கு பேங்க் லோன் கேட்டு ஒரு சில மாதங்களாக உதிர்ந்து கொண்டிருக்கிறாள்.
“பின்ன.. இவளோட மேக்கிங் தான். லாஸ்ட் மந்த் அந்த ஹீரோயினுக்கு நீ ரெடி பண்ண டிசைன் தான இது..?” என அவர்களுக்குள்ளேயே மாற்றி மாற்றி கேட்டுக் கொண்டனர்.
அந்த இரு தோழிகளின் சண்டை ஓய்ந்து இருவரும் அவரவர் துணியைப் பற்றி விவாதித்தனர். இதில் இவர்கள் அறியாத ஒன்றென்றால் தோழிகள் கையில் கொடுக்கப்பட்ட டிரஸ் இரண்டுமே அவர்கள் ஏற்கனவே ஷாப்பிங் செய்து அறையில் குமித்து வைத்திருந்ததில் இருந்து ஸ்ரேயா உருவிக் கொடுத்ததேயாகும். வாங்கியதை மறந்துவிட்ட இரு தோழிகளும் ஸ்ரேயா தங்களுக்காக தயாரித்து தந்திருக்கிறாள் என மெச்சிக் கொண்டார்கள்.
அவர்களை சிறு சிரிப்புடன் ஏறிட்ட ஸ்ரேயா, “நான் கிளம்புறேன், நீங்களும் பார்த்து வேகமாக ஆபிஸ் கிளம்புங்க..”
“நீ சாப்பிட்டு போ ரே..” ஹரிதா அக்கறைக் காட்டினாள்.
“இல்லபா.. டைம் ஆச்சு, நான் வெளியே பார்த்துக்குறேன்..” ஸ்ரேயா விடைபெறுவதற்கு ஆயத்தமாக,
“இங்க பாரு.. இன்னைக்கு உன்னோட டர்ன், நீ சமைக்காம இருக்க போய்தான் அவ சாப்பிடாம கிளம்புறா..!” மாளவிகா குறைப்பட்டாள்.
“ஹேய்.. இரண்டு பெரும் மறுபடியும் ஆரம்பிச்சிடாதீங்க, இருக்கட்டும் நான் கிளம்பிட்டேன்.. பை..” கையசைத்துக் கிளம்பி விட்டாள் ஸ்ரேயா.
நண்பகல் வெயிலின் தீவிரத்தில் வாடி வதங்கி வந்தாள் ஸ்ரேயா. அவள் வீட்டினுள் நுழைய ஹாலில் மடிக்கணினியுடன் அமர்ந்திருந்தாள் ஹரிதா.
“ஹேய்.. ஹரிமா.. என்ன வீட்டுல இருக்க, ஆபிஸ் போகலையா?” கேட்டபடி சோர்வாக சாய்விருக்கையில் அமர்ந்தாள்.
“ஆமா.. எங்க புது எச்.ஆர் எங்க டீம கொஞ்சம் கம்போர்ட்டபிளா வச்சுருக்கார்பா, வீட்டிலிருந்து ஆபீஸ் கொஞ்சம் லாங்கா இருக்கிறத தெரிஞ்சுக்கிட்டு ஒர்க் ப்ரம் ஹோம் கொடுத்துட்டாங்க. வீக்லி ஒன்ஸ் ஆர் டுவைஸ் வந்து நெக்ஸ்ட் ஓர்க் அசைன் பண்ணிக்க சொல்லி இருக்காரு..” என சொல்லியவாரே கிட்சன் சென்று ப்ளேட்டில் தால் கிச்சடியும், பஞ்சாபி பப்பட்டையும் வைத்திருந்தாள்.
கண்களை மூடி சாய்விருக்கையில் புகுத்திருந்தவள், ஹரிதா பேசுவதை கேட்டபின், “ஒ.. சீனியர் சிட்டிசனா எச்.ஆர்..?”
“இல்லபா.. யங்ஸ்டர் தான்...” பதில் மெல்லிய குரலில் வர, ஸ்ரேயா மடி மீது ஜில்லென்ற எவர் சில்வர் ப்ளேட் வைக்கப்பட்டது.
அதை குனிந்து பார்த்தவள், “வேண்டாம் ஹரி.. அப்புறமா சாப்பிடுறேன்” என சாப்பாட்டை மறுத்தாள் ஸ்ரேயா.
“என்ன அப்புறம்..? கண்டிப்பா காலையில சாப்பிட்டு இருக்க மாட்ட, காபி குடிச்சதோட அலைஞ்சு திரிஞ்சு வந்திருக்க, சாப்பிடு ரே..” என மென்னகை முரல்களில் மின்ன, “ஒக்க்கே.. ரெப்ரஷ் ஆயிட்டாச்சு வந்து சாப்பிடுறேன்..” முதல் வார்த்தையில் அழுத்தம் கூட்டியே சொன்னாள்.
“ஒண்ணும் தேவையில்ல.. ஸ்பூன் வச்சுருக்கேன், அதில எடுத்து சாப்பிடு” மிரட்டியே சாப்பிட வைத்தாள்.
ஸ்ரேயா சாப்பிட்டு எழவும், “அப்படியே போய் படுத்துடாத.. கை, கால கழுவிட்டு போய் படு..” பேசிக்கொண்டே தோழியின் பிளேட்டை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள் ஹரிதா.
“வர.. வர.. சின்னப் பிள்ளய டிரீட் பண்ற மாதிரி இரண்டு பேரும் பண்றீங்க..” சத்தமாக உரைத்தாள்.
“எல்லாம் உன்கிட்ட இருந்து கத்துக்கிட்டதுதான் ரே..” கிட்சனில் நின்று மெல்ல ஹரிதாவும் பினாத்தினாள்.
வெயிலில் வெற்று வயிற்றோடு அலைந்தது உடல் சோர்வைத் தர, படுத்தவள் மாலை ஆறு மணிக்கு மேலே முழித்தாள் ஸ்ரேயா.
ஹாலில் மாளவிகாவும், ஹரிதாவும் சிறு பிள்ளையுடன் உரையாடியது காதில் விழ, மந்தகாசப் புன்னகை இதழ்களில் தவழத் தொடங்கியது. எழுந்து முகத்தை கழுவிக் கொண்டு தன் தோழியின் கையில் சிக்கி இருக்கும் தனது கைப்பேசியை பறித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தாள்.
விடியோ காலில் தெரிந்த தன் தாயின் முகத்தை பார்த்த அந்த சிறுவன், “அம்மா... உம்மா.. உம்மா..” முத்தங்களை வாரி இறைத்தான்.
“என் தங்கம்.. உம்மா.. உம்..மாஅ..” முத்தங்கள் வாயிலாக அன்பை இருவரும் பரிமாறினார்கள்.
“ஏன் மா, டயர்ட்டா இருக்கீங்க?” சிறு கைப்பேசியில் தன் தாயின் முகத்தை கண்டு கொண்டது குழந்தை.
“அதலாம் ஒண்ணும் இல்லடா.. இப்பதான் அம்மா தூங்கி எழுந்தேன்.. இன்னைக்கு என் பட்டு ஸ்கூல்ல என்ன பண்ணிங்க..?” ப்ளே ஸ்கூல் செல்லும் சிறுவனிடம் நித்தமும் கேட்கும் கேள்வியை இன்றும் கேட்டாள்.
“டேஸ்ட் யுவர் புட் சொல்லிக் குடுத்தாங்க, அதுக்கு ஸ்ருதி அம்மா.. குக் பண்ணி தந்தாங்களா.. எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. அப்புறம் அகி அப்பா குக் பண்ணி தந்தாங்களா அந்த புட் ரொம்ப ஸ்பைசியா இருந்துச்சு, அதுக்கு ஸ்ருதி அம்மாவ சில்லி சாஸ்னு திட்டினாங்களா.. ஸ்ருதி மா கோவிச்சுக்கிட்டாங்க.. அப்புறம் ஸ்ருதி அம்மாவை சிரிக்க வைக்க எல்லாருக்கும் அகிப்பா ஐஸ்கீர்ம் வாங்கி கொடுத்தாங்க, நானும் சாப்பிட்டேன்.. நீங்க இங்க வரப்ப உங்களுக்கும் வாங்கி தாரேன்..” அன்று நடந்தது முழுதும் சொல்லி முடித்து கண்கள் சிமிட்டி சிரித்தது அந்த நான்கு வயது குழந்தை.
ஸ்ரேயா வீடியோ காலில் பேசிக் கொண்டு இருக்க, அவளது தோளில் மாளவிகா சாய்ந்தாள். அதைக் கண்ட சிறுவன் கோபத்தில் புருவத்தை சுருக்கி, கண்களால் மிரட்டும் பாவனையில், “அம்மா.. அந்த மாளுவ எழுந்திருக்க சொல்லுங்க, தட்ஸ் மை பிளேஸ், வேற யாருக்கும் கிடையாது..” அதிகாரமாக சொன்னான்.
அங்க வந்த ஹரிதா, “ஆமா.. இது கண்ணா பிளேஸ், எழுந்திரு..” என மாளவிகாவை எழுப்பிவிட்டு அவள் ஸ்ரேயா மடியில் படுத்துக் கொண்டாள்.
அதைக் கண்டவன், “அ.ம்..மா.. அது.. உன்னோட பட்டுக்குட்டிக்கு மட்டும்தான..? அவங்க இரண்டு பேரையும் கீழ தள்ளிவிடுமா.. நானு.. மட்டும் தான் படுப்பேன்...” என் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண துவங்கி விட்டான்.
“ஒகே கண்ணா.. இங்க பாரு..” இரு தோழிகளின் தலையில் நங்கென்று கொட்டு வைத்த பின்னரே, கண்ணாவுக்கு முகம் மலர்ந்தது.
“அது என்னடா..? உங்க அம்மா வர்றவரைக்கும் ஒழுங்கா பேசிக்கிட்டு இருந்தவன், அவ வரவும் ரொம்ப பண்ற.. எங்களுக்கு கொட்டு வேற வாங்கிக் கொடுத்துட்டல.. இரு அங்க வந்து உன்னோட சாக்லேட்ட எல்லாம் நாங்களே தூக்கிட்டு வந்துறோம்..”
“தூக்கிக்கோங்க.. ஐ டோன்ட் கேர்..” தோள்களை தூக்கி அசால்டாக கூறினான்.
“அட.. ரொம்ப தோரணை காட்டுறடா நீ..! இருந்தாலும் எங்க கண்ணா அழகு..” என இரு தோழிகளும் அவனை கொஞ்சினார்கள். இது அடிக்கடி மூவருக்கும் இடையில் நடக்கும். ஸ்ரேயா ஊருக்குப் போகும் போது கண்ணாக்கு விளையாட்டு சாமான், டிரஸ் மற்றும் இனிப்பு வகைகள் என வாங்கிக் குமித்தும் விடுவார்கள், இந்த அன்பு தோழிகள்.
ஸ்ரேயா, சாஸ்ருதி இருவரும் இரட்டையர்கள். அதிலும் மிரர் டுவின்ஸ் குரல் உட்பட மாறுபாடின்றி ஒத்தே இருப்பர். குழந்தை பருவம் தொட்டே இவர்களை அடையாளப்படுத்திக்காட்ட சாஸ்ருதிக்கு பாரம்பரிய உடையும், ஸ்ரேயாவுக்கு மாடர்ன் உடையும் பழக்கப்படுத்தி இருந்தார் அவர்களது அன்னை.
சாஸ்ருதி எதையும் துடுக்காக பேசும் இயல்பு உடையவள். இவளுக்கு முரணாக ஸ்ரேயா கல்லூரி காலங்களில் அமைதியின் ஸ்வரூபமாக இருந்தாள். திருமண வாழ்க்கையில் இவளுக்கு ஏற்பட்ட பல கசப்பான சம்பவங்கள் இவளது சுபாவத்தை புரட்டிப் போட்டு இருந்தது.
அதிலிருந்து மீண்டு வர பிரம்ம பிரயத்தனமே செய்தாள். அன்றிலிருந்து இவளது அன்றாட வாழ்க்கையில் நேர்மறையாக சிந்திக்கவும், வாழவும் கற்றுத் தந்த தியானத்தை இன்றும்.. என்றும் கைவிடவில்லை. அதிலேயே இவளது அன்றாடம் துவங்குகிறது.
தனது மகன் கண்ணன் மற்றும் தாயுடன் பெங்களூரில் வசித்து, பேஷன் துறையில் இரண்டு லகரத்தை மாத சம்பளமாக பெற்றுக் கொண்டு இருந்தாள். கடந்த ஆண்டு அவளது தாயின் திடீர் மரணத்தில் மிகவும் தொய்ந்து போயிருந்தாள். அப்போது சாஸ்ருதியும், அவளது கணவன் அகிலன் உடன் இருந்து இவளைத் தேற்றி தங்களுடன் தங்கவைத்து இருந்தனர். திருமண வாழ்வில் இருந்து மீண்டு வந்தவளுக்கு, தாயின் பிரிவில் இருந்து மீளவும் ஆழ்மன தியானமே உதவியது.
தன்னால் சிறு குழந்தையை தனியாக வளர்க்க முடியாது என்கிற பட்சத்தில் ஸ்ருதியின் வேண்டுகளுக்கு இணங்கி கண்ணனை அவர்களிடத்தில் விட்டுவிட்டு பெங்களுர் வேலையைத் துறந்து சென்னையில் பிரபலங்கள் பிரத்யேகமான டிசைனிங் டீமில் பணிபுரிகிறாள். விரைவில் தனியாக கார்மெண்ட்ஸ் கம்பெனி நடத்துவதற்காக சில மாதங்களாக பேங்க் லோனிற்கும் அள்ளாடுகிறாள்.
சென்னைக்கு ஸ்ரேயா வந்த புதிதில் பெண்கள் மூவரும் ஹாஸ்டல் அறையில் ஒன்றாகவே தங்கி இருந்தனர். விடுதி சாப்பாடு இவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை எனவும் அபார்ட்மென்டில் இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டை வாடகைக்கு பிடித்து இங்கு வந்து விட்டனர். சில மாதங்களாக மூவரும் இந்த வீட்டில் தங்கி இருக்கிறார்கள். ஸ்ரேயாவை விட ஒருசில வருடங்களே இளைவர்களாக இருக்கும் பட்சத்தில் பெயர் சொல்லி அழைப்பது பெரும் பொருட்டாக படவில்லை அந்த அன்பு தோழிகளுக்கு.
Last edited:
