
‘தலைவனும், தலைவியும் தற்செயலாக சந்தித்து அன்பினால் மனம் ஒன்றி காதல் வயப்படுவது’
இயற்கை புணர்ச்சி–2
இதமான சூழலில் மெல்ல பதமாக மேனியை வருடிய குளிர்ந்த காற்று பருவப் பெண்களைக் களவாடி பால்கனியில் அமரவைத்திருந்தது. ஸ்ரேயா சுவற்றில் சாய்ந்து கால்களை நீட்டி அமர்ந்திருக்க, ஒரு பக்கம் ஹரிதாவும், மற்றொரு காலில் மாளவிகாவும் அவள் மடியில் தலைசாய்த்துப் படுத்திருக்க ஸ்ரேயாவின் விரல்கள் தன்னிச்சையாய் அவர்களின் தலையை கோதிவிட்டபடியே இருந்தது.
“அடுத்த வீடு மாறும்போது இன்னும் கொஞ்சம் பெரிய பால்கனியா இருக்க மாதிரி பார்க்கணும். இது டன்ஜனா இருக்கு..” கால்களை ஒய்யாரமாக நீட்ட முடியாமல், சுற்று கம்பியின் மீது மிச்ச கால்களை தூக்கி வைத்தாள் மாளவிகா.
“ஏன்.. நீ காலை மடக்கி படுக்கமாட்டியோ..? இங்க இருந்துதான் நீ பேங்க் போயிட்டு வர பக்கமா இருக்கும். சோ... நீ காலை ஒடுக்கிப் படு.. வேற வீட்டுக்கு போற நினைப்பையும் விட்டுரு..” கண்டிக்கும் தோரணையில் கருத்து சொன்னாள் ஹரிதா.
“அப்படி பார்த்தா உனக்கு ஆபீஸ் போக தூரமாதான இருக்கு..” தோழிகளிடம் காட்டும் அக்கறையைக் கூட வாய் யுத்தமாக வெளிக்காட்டினர்.
“நான் ஒர்க் ப்ரம் ஹோம்ல தான இருக்கேன். எப்பவாச்சும் போயிட்டு வரதுக்கும், டெய்லி போறதுக்கும் வித்தியாசம் இருக்கு.. உன்னையவிட வயசுல பெரியவ.. அதோடு புத்திசாலியும் கூட, சோ நான் சொன்னா கேட்கனும்..!” வார்த்தைகளில் இருந்த கட்டளை குரலில் இல்லாமல் போனது.
“யாரு.. நீ.. புத்திசாலி..! போடி அங்கிட்டு. ஐ.டி.யில வேலை பார்க்கிறேன்னு சொல்லிட்டு லேப்டாப்புல கேம் விளையாடுற நீயெல்லாம்.. புத்திசாலியாம்..!”
“இருக்கட்டும்.. ஒர்க்குக்கு நடுவில் எப்படி ஓ.பி அடிக்கனும்னு தெரிஞ்சு வச்சுருக்க நான்.. புத்திசாலி இல்லையா..? நீ போடீ..” அதற்கும் வம்பு பேசினார்கள்.
இருவரின் பேச்சும் காதில் விழுந்தாலும் கருத்தில் பதியவில்லை என்பது போல் கண்களை மூடி பின்பக்கம் சுவற்றில் சாய்ந்து இருந்தாள் ஸ்ரேயா.
அவளின் அமைதி பிடிக்காமல் போக, “நாம ஏன்? கண்ணாவ நம்ம கூடவே வச்சுக்க கூடாது” என்று ஹரிதா சொல்ல,
“ஏய்.. ஆமால்ல.. அவனும் நம்ம கூடயிருந்தா நல்லா இருக்கும்.. அதோட மூணு பேர் இருக்கோம், டெய்லி மாத்தி மாத்தி பார்த்துக்கலாம்..” மாளவிகா யோசனை தந்தாள்.
“ஏதாச்சும் சொல்லு ரே.. நாங்க பேசிக்கிட்டு இருக்கோம்..” என உசுப்பினாள் மாளவிகா.
“எதுக்கு உங்களுக்குள்ள சண்டை போட்டு போர் அடிச்சா என் மகன இழுத்து வச்சு மல்லுக்கட்டுறதுக்கா..?” அவர்கள் மனதின் இருப்பை கணித்தே கூறினாள்.
“இப்படி நாங்க மனசுல நினைக்கிறதை எல்லாம் நீ கேட்ச் பண்ண, உன்கூட காலம் தள்ளுறது கஷ்டம்டா சாமி..” சிரித்தபடி ஹரிதா சொல்லி கொண்டே, ஸ்ரேயா முகம் பார்த்து ஒருசாய்த்து படுத்தாள்.
“ரே.. கண்ணா உன்கூட இருந்தா, நீ அவனை மிஸ் பண்ணமாட்ட.. அவனுக்கும் அம்மாவா உன்னோட அரவணைப்பு கிடைக்கும்ல..” இவளின் புத்திர பிரிவை நித்தமும் காணுகிறார்களே.
“போன வருஷம் வரைக்கும் என்கூட தானே இருந்தான். அம்மாவோட சடன் டெத் என்ன பண்ணனு தெரியல.. அந்த டைம் ஸ்ருதி அழைச்சுட்டுப் போய் பார்த்துகிட்டா.. அடுத்த வருஷம் பார்ப்போம். இப்ப அவனுக்கு ஓர் நல்ல பேமிலி பேக் கிராவுண்ட் கிடைச்சுருக்கு அதை ஏன் கெடுக்கணும்..” தன் துயரை விட மகனின் ஆசுவாசம் பெரிதாகவே தெரிந்தது.
“எத்தனை பேர் குழந்தையை சுத்தி இருந்தாலும் அம்மா பக்கத்துல இருந்து பார்த்துக்கிற மாதிரி இருக்காது.. அதை அனுபவிச்ச எனக்குத் தெரியும்..” என மாளவிகா சன்னமான குரலில் கதற,
“ஹரிமா நைட் சாப்பிட்ட பருப்பு வேகவே இல்ல.. அடுத்து குக் பண்றப்ப இரண்டு விசில் சேர்த்து வை..” என சமையல் ஆலோசனை தந்தாள் ஸ்ரேயா. இவர்களின் திசை திருப்பலான பேச்சில் எழுந்து அமர்ந்து பெரு மூச்சுகளை எடுத்து விட்டாள் மாளவிகா.
“ஒருத்தி வருத்தப்பட்டு பேசினா.. அவளைக் கட்டிப் பிடிச்சு நான் இருக்கேன்னு ஆறுதலா பேசனும், அதை விட்டுட்டு.. ஏன்டி இப்படி என்னோட சோக கீதத்தை வச்சு செய்றீங்க..” அவளின் கதறலையும் மதிக்காமல் இருந்தனர்.
மாளவிகா சிறு வயதில் பெற்றோர்களை இழந்து தாத்தா, பாட்டி அரவணைப்பில் வளர்ந்தாள். அடுத்து பாட்டியும் தன்னைவிட்டு போய்விட்டதில், வயதான தாத்தா தனியாக பெண் பிள்ளையை வைத்து சமாளிக்க அரும்பாடுபட்டவரை புரிந்து கொண்டு ஹாஸ்டல் வாசத்திற்கு தன்னை புகுத்திக் கொண்டாள். இவர்களுடன் பழகிய பின்பே குடும்ப சூழல் இவளை வசியம் செய்து இருந்தது.
பச்சாதாபம்படும் நபருக்கு ஆறுதல் வார்த்தைகள் ஓர் சிலிர்ப்பைத் தரும் என்றால், அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லையென அதிலிருந்து கடத்தி, அவர்களின் காயங்களை நகைபேச்சு வழியாக ஆற்றுவதும் பெரிய வரமே.
ஏதோ ஓர் இன்னல்களை சுமந்து கொண்டு உருக்குலைந்து அமர்ந்து இருப்போர் ஏராளம். அவர்களுக்கு துணையாக நட்பும், உறவும் கிடைத்தால் வேதனையை சுலபத்தில் கடந்து விடலாம். அதில் மூவரும் ஒருவரை ஒருவர் தாங்கியே இருந்தனர்.
“கண்ணாவ இங்கேயே கூட்டிட்டு வந்துரு ரே.. நாமளே பாத்துக்குவோம்..” கேலிக்கு நடுவில் சோப்பு நுரையாக கரைந்து போன பேச்சு வாதத்தை மீண்டும் ஸ்ரேயாவின் முன்னிருத்தினார்கள்.
தோழிகளின் பேச்சில் பெருமிதமாக உணர்ந்து, “ம்.. பார்த்துக்கலாம்.. எத்தனை நாளைக்கு?”
“இது என்ன கேள்வி? கடைசி வரைக்கும் நம்ம கூடவே இருக்கட்டும்..” என ஹரிதா கூறினாள்.
“அதிகபட்சமா இரண்டு வருஷம்.. இல்ல மூணு பேரும் ஒண்ணா இருக்கலாம், அப்புறம்?” ஸ்ரேயா முடிக்கும் முன்,
“எதுக்கு இப்ப டெட்லைன் சொல்லிகிட்டு இருக்க.. நம்ம மூணு பேரும் எப்பவும் சேர்ந்தே இருப்போம்..” என ஹரிதா எழுந்து அமர்ந்து கொண்டாள். மாளவிகா கண்ணீர் விடவே தொடங்கி இருந்தாள். அவர்களுக்கு இடையே பிரிவு என்ற சொல்லே நெஞ்சை பிசைந்தது.
“ஏய்.. எதுக்கு அழுகுற..?” மாளுவை இழுத்து ஸ்ரேயா கட்டிக் கொள்ள, அதில் ஒட்டுண்ணியாக ஸ்ரேயா முதுகில் ஒட்டினாள் ஹரிதா.
மாளவிகா நிறுத்தாமல் கண்ணீரை விநியோகம் செய்தபடியே இருக்க, அதை பொறுக்க முடியாமல் ஸ்ரேயாவை அணைத்திருந்த கழுத்தில் பற்களால் மெல்ல கடித்து விட்டாள் ஹரிதா.
“அவ்வுச்சு..” என்றதோடு கடிபட்டவள் நிறுத்திக் கொள்ள,
“எதுக்குடீ அவள கடிச்ச..?” அதற்கும் மாளவிகா வம்பு செய்தாள்.
“உன்னைய அழ வெச்சதுக்கெல்லாம் அவள கடிக்கல, ரே கழுத்த பக்கத்துல பார்க்கவும் ஓரு ரொமான்டிக் பீல் வந்துருச்சு..” தோழிகளுக்கு இடையே எவ்வளவு மல்லுக்கட்டு நடந்தாலும் ஒவ்வொருவரின் அன்பும் அலாதியானது. எங்கும், எதற்கும் மூவரும் விட்டுக் கொடுப்பதை காண இயலாது.
வெறுமையான பேச்சும், வதனமும் தெரிந்தது ஸ்ரேயாவிடம், “உங்களுக்கு வீட்டுல ஓர் பையன பார்த்து மேரேஜ் ஆனதுக்குப் பிறகு, எல்லோரும் தனி..தனியா போயிருவோம்ல.. அப்ப கண்ணாவை எப்படி பார்த்துக்க முடியும்..?” அப்போது சொல்ல முடியாது தடைப்பட்ட விவரத்தை இப்போது முடித்திருந்தாள்.
“எங்க இரண்டு பேருக்குமே கல்யாணம் பண்ற ஐடியாவே இல்ல..” என சவடாலாக ஹரிதா சொல்ல,
“சீ.. கருமம், உங்க இரண்டு பேருக்குமா..!” என ஸ்ரேயா குறுநகை தந்து கேட்டாள்.
“போ ரே.. நீ எப்படி கலாய்ச்சாலும் சரி, எங்க லைப்ல மேரேஜ்க்கு இடமே இல்ல.. அத நாங்க ஏற்கனவே முடிவு பண்ணிட்டோம். உன்னைய பார்த்துமா நாங்க அப்படி ஓர் நரகத்தை யோசிப்போம்..” தோழியின் துயரத்தை ஒப்பிட்டு பார்த்து மறுத்தாள் ஹரிதா.
“என்னோட மேரேஜ் லைப் தோத்ததுக்கு காரணம், நானா கூட இருக்கலாமே. அதனால என்னைய வச்சு உங்க வாழ்க்கைய டிசைட் பண்ணாதிங்க..” இந்த நொடி வரை ஸ்ரேயா அதையே நம்பவும் செய்கிறாள்.
“அதுக்கு வாய்ப்பே இல்ல.. உன்னைய மாதிரி ஒரு பொண்ணு அந்த வாழ்க்கைய விட்டு வந்துருக்கானா கண்டிப்பா அந்த ஆளு மேலதான் தப்பு..” என ஆணித்தரமாக சொன்னாள் மாளவிகா.
ஸ்ரேயாவின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி இதுவரை இருவரிடமும் அவள் கலந்து கொண்டது இல்லை. அவர்களும் தன் தோழியிடம் காரணம் கேட்டு நின்றது இல்லை. அங்கே அழகான புரிதல் இழையோடியது.
தாங்கள் கண்டிராத, அறிந்திடாத அந்த அற்ப பதரை கொடுஞ்சொல்லால் சாபமிட்டனர். ஸ்ரேயாவின் இரு மலர்களும் ஒரு வருடமாக தென்படும் ஸ்ரேயாவின் பழக்க வழக்கங்களை மத்தியப்படுத்தி அவளை அறிந்திருந்தனர்.
“இல்ல.. தப்பு என் மேலதான்..! படிக்கிற வயசுல லவ் பண்ணது, அப்புறம் அவன புரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடியே ஒட்டு மொத்த நம்பிக்கையையும் அவன் மேல வச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டது வரை.. என் வாழ்க்கையோட அறிச்சுவடியே தவறா போனதுக்கு மூலகாரணமே நான்தான்..” எங்கோ பார்வை வெறித்து இருக்க, விரக்தியாக சொற்கள் வந்ததே ஒழிய வருத்தமோ, கண்ணீரோ தென்படவில்லை. அதுவே அவளின் மனஉறுதியை எடுத்துக் காட்டியது. கண்ணீரை முன்பே நிறைய விரயம் செய்திருந்ததால், இப்போது அதற்கும் பெரும் தட்டுப்பாடு போல.!
“என் லைஃப வச்சு உங்கள மாதிரிதான் சாஸ்ருதியும் கல்யாணமே வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருந்தா, அப்புறம் அகி மாமாவ பார்த்த பிறகு, அவர விட்டுக் கொடுக்க முடியாம லிவிங் ரிலேஷன் ஷிப் வரைக்கும் போய், அதில பிடிவாதமா இருந்தவ.. இப்ப கல்யாணம், குழந்தைன்னு சந்தோஷமா இருக்கா.”
திருமணம் தீண்டத்தகாத நிகழ்ச்சியல்ல, வாழ்க்கை துணையிடம் இருந்து எதிர்பார்க்கும் பாதுகாப்பும், அளவற்ற காதலும் கிடைத்தால் பெண்ணுள்ளம் ஏன் மணமுறிவைப் பற்றி எண்ணப் போகிறது.
“ஒகே.. அக்செப்ட் பண்ணுறோம் நீ சொல்றத, ஆனா ஒரு கண்டிஷன்.. உனக்குத் தகுந்த, பிடிச்சமாதிரி பையன பார்த்தா மேரேஜ் பண்ணிப்பேன்னு ப்ராமிஸ் பண்ணு..” என தன் உள்ளங்கையை விரித்துக் காட்டினாள் ஹரிதா.
அவளுக்கு ஒத்துப் போகும் விதமாக மாளவிகாவும், “ஆமா.. ஆமா நீ ப்ராமிஸ் பண்ணு..!“ என்று அவளது உள்ளங்கையையும் நீட்டினாள்.
இருவரது உள்ளங்கைளையும் தன்பக்கமாக இழுத்து, “கல்யாணத்தைப் பத்தி எல்லாம் எனக்கு பயம் இல்ல.. ஆனா, இப்ப வரை அடுத்த ஸ்டெப் என் லைப்ல என்னனு எனக்குத் தெரியல.. ஏதோ காலத்தை கடத்தனும்னு நினைச்சு ஓடிக்கிட்டு இருக்கேன். அந்த மாற்றம் கல்யாணத்துல வருதுனா நோ இஸ்யூஸ், கண்டிப்பா பண்ணிக்குவேன்” தன் தோழிகளை தேற்றவே சொல்லிய வார்த்தைகள் அவை, ஆனால் அந்நொடி நிதர்சனத்தை அவள் அறியாமலேயே பிரதிபலித்துவிட்டாள்.
தன்னுடன் மகனை வைத்துக் கொள்வதிலும் அவளுக்கு தர்ம சங்கடமாகவே இருந்தது. இவளது துயரத்தை போக்கும் அரு மருந்தாக இருந்தவன், இப்போதெல்லாம் தந்தையின் அடையாளத்தைத் தேடி அந்த சிறுவனின் கண்கள் சோர்வை தழுவுகிறது. அந்த கண்களை சந்திக்க இயலாமல் தடுமாறுகிறாள். ஸ்ரேயாவின் கவலைகள் தோய்ந்த முகபாவத்தைக் கவனித்து பேச்சுகளை அவளின் இருமலர்களும் வழவழவென தொடர்ந்தார்கள்.
“நம்ம மூணும் பேரும் சென்னையை நல்லா தேய்ச்சாச்சு, வேற எங்கேயாச்சும் ஒரு ட்ரிப் போயிட்டு வருவோமா..?” மாளவிகா தொடங்க,
“ஏய்.. ஆமாபா, எங்க கம்பெனியிலயும் லாங் ட்ரிப் ப்ளான் பண்றாங்க, எனக்கு அவங்களோடயெல்லாம் போக பிடிக்கல தெரியுமா, நம்ம மூணு பேர் மட்டும் தனியா போயிட்டு வருவோமா..?” என்ற பேராவல் ஹரிதாவிடம் வெளிப்பட்டது.
“இந்த வீக் கண்ணாவ பார்க்க ஊருக்குப் போறேன், போயிட்டு வந்து ப்ளான் பண்ணுவோம். இந்த ட்ரிப்புலகூட ஏதாவது எனக்குள்ள மாற்றம் வருதான்னு பார்ப்போம்..” ஸ்ரேயா பணி நிமித்தமான யோசனையில் சொல்ல, மொத்த வாழ்க்கையும் இந்த பயணத்தில் மாற இருக்கிறது என்பதை அறியாமல் அந்த குளு..குளு.. பால்கனி தரையில் அவளது உணர்வற்ற தேகத்தை சரித்திருந்தாள். அவளது இருமலர்களும் அங்கேயே அவளுக்கு அருகில் தஞ்சம் அடைந்திருந்தனர்.
ஸ்ரேயாவின் மனம் ஒரு நிலையில் இல்லை, அவளது மனம் எதையோ எதிர்பார்த்து அள்ளாடுகிறது. எதை நோக்கி தனது வாழ்வு நகர வேண்டும் என இன்னும் சிந்திக்க முடியாமல் தவிக்கிறாள், எதில் இருந்தோ தப்பிக்க முயல்வது போல ஓடிக் கொண்டே இருக்கிறாள்.
Last edited: