சிதறாத முத்தங்கள் - 4

Advertisement

Sastika

Active member
Member
1774342186806.jpeg

‘விரும்பிய இரு மனங்கள் கனவிலும் உறுதியோடு, அவர்பற்றிய நினைவில் நகர்தல்’

ஒருதலை உள்ளுதல் – 4


வெண்மேகத்தையும், பசுமையான நிறத்தையும் கேரளப் பிரதேசம் குத்தகைக்கு எடுத்திருந்தது. மூன்று பக்கங்களும் தேயிலை முகடுகள் பரவிக் கிடக்க, அதன் கீழே பள்ளத்தாக்கில் விரிந்த ஏரி அவ்விடத்தின் குளிர்ச்சியை அதிகப்படுத்தியிருந்தது.


ஏரிக்கு பக்கவாட்டில் பல அடி உயரத்தில் இருக்கும் வில்லாவை பார்க்க அத்தனை பிரமிப்பாக இருந்தது. வில்லாவின் பெயரோ தெய்வ கடாட்சத்தை பிரதிபலித்தது, ‘அமரலிங்கிம்’ என்று..!


வீட்டின் நுழைவாயின் எதிரே பெரிய மரத்தின் அடியில் சிறிய லிங்கம் வீற்றிருந்தது. கங்கை தீர்த்தம் ஈசனுக்கு மேலே ஒர் குவளையில் அடைப்பட்டு நித்தமும் அபிஷேகம் நடந்தேறியது.


வீட்டிற்குள் நீள்விருக்கையில், படிக்கட்டுகள் இல்லாவிட்டாலும் உடற்பயிற்சியால் மெருகேறிய அவனின் தேகத்தில் டீ-சர்ட் மற்றும் முக்கால் பேண்ட்டும் அணிந்து படுத்திருந்தான் அமர்நாத். இயற்கை சூழலில் வளர்ந்திருந்த அவனின் தோற்றமோ வசீகரத்தை அள்ளித் தெளித்திருந்தது. அவன் முன் மேஜையில் கண்ணாடி மூடியிட்டு பல உணவுகள் குவிந்து கிடந்தது இவனின் உதாசினத்தில்...


“என்ன மோனே…? டேபிள் முழுவதும் சாப்பாட்ட குமிச்சு வச்சிருக்க?” கை பையை ஓரமாக வைத்துவிட்டு வந்து அவனின் அருகில் அமர்ந்தார் திரிபுர சுந்தரி.


அன்னையைப் பார்த்து குறுநகை தந்தபடியே, “மெய்ட் கால் பண்ணாங்களா மா..?” என்றான் அமர்நாத்.


“கால் பண்ணனும்னுதான இத்தனை அழிச்சாட்டியம் பண்ணி வச்சிருக்க?” மகனை சரியாகக் கணித்துக் கூறினார்.


எழுந்து அமர்ந்தவன், “அப்படி என்ன பெருசா பண்ணிட்டேன்? நம்ம வீட்டுல இருக்க ஒரு குக்குக்கு கூட ஒழுங்கா சமைக்கத் தெரியல..”


“அப்படியா? இங்க இருக்க புட்ல ஒன்னு கூடவா டேஸ்டா இல்ல..?” சந்தேகம் எழும்ப கேட்டார்.


“எஸ் மா.. இந்த புட்ல உப்பு இல்ல, அந்த வெஜிடபிள் ஓவர் குக்டு, இதுல காரம் கம்மியா இருந்துச்சு, அது பிளேட்டிங் சரியில்ல.. இப்படி இருந்தா எப்படிமா சாப்பிடறது..?” தன் முன் பரவிக் கிடந்த உணவு பதார்த்தங்களின் குறை பட்டியல் வாசித்தான்.


“டேய் அமர்.. டேஸ்ட் இல்லனா, எது கம்மியா இருக்கோ அத ஆட் பண்ணிக்கோ. இதோ சால்ட், பெப்பர் இருக்கே.. அப்புறம் பிளேட்டிங் பண்ணி ஒவ்வொரு தடவையும் சாப்பாட்டை எதிர் பார்க்கிறது இட்ஸ் டூ பேட்..” தாயாக கண்டித்தார்.


“நாம வாழ்றதே குட்டி லைப். அதுல எதுக்கு மா.. நாம அட்ஜஸ்ட் பண்ணி வாழணும். எதுவா இருந்தாலும் கண்ணுக்குப் பிடிச்சு, மனசுக்கு நிறைவா இருக்குற வாழ்க்கையை ரசிக்கத் தெரிஞ்சு வாழணும், இது என்னோட பாலிசினு உங்களுக்குத் தெரியாதா மா..” விரயமாகும் உணவைவிட தனது ரசிப்புத் திறனே அதீத முக்கியம் என்பது போல் வாழ்பவன் அமர்நாத்.


“நல்லாத் தெரியுமே..! அதுக்காக ஆபீஸ்ல இருக்க என்னை வரவைக்கிறது, ரொம்ப தப்பு மோனே..” மகனின் இந்த குணத்தை மாற்ற இயலாமல் குறைபடித்தார்.


“என்னையவிட உனக்கு ஆபீஸ் முக்கியமா போயிருச்சுல மா..?”


“மோனே.. வீட்ல பொழுத ஓட்டிக்கிட்டு இருந்தவள, உனக்குன்னு இன்டிவிஜூவாலிட்டி வேணும்னு சொல்லி இல்லாத வேலையை உருவாக்கி என்னைய அங்க உட்கார வச்சிட்டு, இப்படி பண்றது தப்பு மோனே..”


“எக்ஸாக்ட்லி, என்னோட அம்மாவுக்கு தனித்துவமா வாழத் தெரியனும்னு ஆசைப்பட்டேன். அதுக்காக மகனோட பசி முக்கியம் இல்லாம போயிருமா? நெவர்.. என்னோட திரிபுக்கு.. எனக்கு அப்புறம் தான் எதுவும்..” தாயைத் தோளோடு அணைத்துக் கொண்டான்.


“காலாகாலத்துல உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணிருந்தா இப்படி பேசுமா இந்த வாய்? ஒரு பொண்ண பார்த்து லவ்வாச்சும் பண்ணு மோனே...” இன்றைய நாகரீக அன்னையாக பேசினார்.


“அச்சோ.. இந்த சாப்பாட்டை சகிச்சிட்டு சாப்பிட சொல்லு மா, கேக்குறேன். ஆனா லவ் மட்டும் என்னோட லைப்ல வேண்டாம்” பயந்தவனாக சொல்ல,


“இந்த பயம்? லவ் மேலயா, இல்ல பொண்ணுங்க மேலயா அமரா..?” சந்தேகம் எழுப்பினார்.


“பயம் இல்ல.. அது டார்ச்சர். காலையில எழுந்தவுடனே ஆரம்பிக்கிற குட்மார்னிங்கல தொடங்கி நைட் வரைக்கும் என்னோட அப்டேட் சொல்லி அவங்களோட அப்டேட்டையும் கேக்கணும், சப்போஸ் இதுல எதையாவது மறந்துட்டேன்னா, அடுத்த ஒரு வாரத்துக்கு சண்டையும் சமாதானமுமா போகனும்... தேவையா இது?


அப்புறம் ஆணா பிறந்த பாவத்துக்காக அவங்களுக்கு செக்யூர்ட்-ஆ ஒரு பீல் கொடுக்கணும், பொண்ணுங்க எமோஷனலா இருக்கப்ப ஒரு நண்பனா கைட் பண்ணனும், பேரண்ட்ஸ் விட அதிகமா சப்போர்ட்டிவா இருக்கணும். இது எல்லாத்தையும்விட நிறைய காதல விதவிதமா லைப் லாங் காட்டிக்கிட்டே இருக்கணும்.. அவங்க மூட் ஸ்விங் ஆகுறது தெரிஞ்சா பொலைட்டா போகணுமாம்.. இவ்வளவு இருக்கு..!” என்று காதலுக்கு விளக்கவுரை வாசித்தான்.


“உனக்குதான் எல்லாமே தெரியுதேடா, அப்புறம் என்ன? இதெல்லாம் தெரியாம போய்தான் நிறைய பேரு மாட்டிக்கிறாங்க.. நீதான் இவ்வளவு டீடைலா தெரிஞ்சு வச்சிருக்கயே.. நீ தயங்காம லவ் பண்ணலாமே..”


“ஏன்மா.. ஏன்? எதுக்கு என்மேல இத்தனை காண்டு உங்களுக்கு.. தெரிஞ்சே எதுக்கு சிக்கி சின்னா பின்னமா ஆகுறதுக்கா இந்த லவ்வு..! ஐம் நாட் ரெடி” தோள்களை தூக்கி துச்சமாக சொன்னான்.


ஆனால் இதே காதலுக்காக தன் மனம் கவர்ந்தவளைக் கவர வேண்டி, இல்லாத சித்து விளையாட்டை எல்லாம் விளையாட எந்த எல்லைக்கும் செல்லவும் செய்வான்.


அப்போது வீட்டிற்குள் ஓடி வந்த சிறுவன் திரிபுர சுந்தரியைத் தாவி அணைத்துக் கொண்டான். அந்த சிறுவனைப் பார்க்க அமர்நாத்தின் சிறு வயது தோற்றத்தை ஒத்திருந்தான்.


“டேய் லிங்கா.. இங்கேயே இருக்க உனக்கு எதுக்கு இந்த பீலிங்னு கேக்குறேன், கடல் கடந்து போயிட்டு மூணு மாசத்துக்கு ஒரு தடவ வர்ற எனக்கே இல்லாத பீலிங்கு, உனக்கு என்ன வேண்டிக் கிடக்கு..” தம்பியை தலையில் தட்டிக் கேலி செய்தான்.


“நீ எப்பாச்சும் வந்து பாசத்த காட்டிட்டு போயிருவ, அம்மா கூட எப்பவும் நான்தானே இருக்கேன்.” லிங்கேஷன் சொல்ல,


“அப்பா எப்ப வாராரு மா..?” தந்தையின் அரவணைப்பை நாடிய பாலகன் கேட்டான்.


“இந்த தடவ போன வேலை கொஞ்சம் டிலே ஆகுது, அகமதாபாத்துல காட்டன் தொழிலாளிகள் ஏதோ கோரிக்கை வைத்து போராட்டம் நடக்குதாம். அதனால அங்க இருக்க பிஸினஸ்மேனோட மீட்டிங் முடிச்சு வர டிலே ஆகுது, மே பி ஓரு வாரத்துல வந்துருவாரு..” மனைவியாக தனது பொறுப்பை நடத்தி, தாயாக கடமையை தவறாது கடைப்பிடிப்பவர் திரிபுர சுந்தரி.


அந்த தாயின் மிகப் பெரிய கவலையே தன் மூத்த மகனுக்கு கல்யாண வயதை நெருங்கியும், அவனை மணக் கோலத்தில் காண இயலாதது தான்.


திரிபுர சுந்தரியின் கணவர் ஜெயமோகன் கார்மெண்ட்ஸ் அண்ட் டெக்ஸ்டைல்ஸ் கடந்த இருபது வருடமாக கொச்சினில் நடத்தி வருகிறார். இருபது வருடங்களுக்கு முன்பே தமிழ் நாட்டில் பல கிளைகளை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டவர். ஜெ.எம் கார்மெண்ட்ஸ் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் என்றால் அதீத பிரபலம அவரின் தாய் மண்ணில். அவரின் கண்காணிப்பில் இன்றும் திறம்பட நடந்து கொண்டு இருக்கிறது.


சில காரணங்களால் தனது இருப்பிடத்தை கேரளாவுக்கு மாற்றியிருந்தார். அவரின் மூத்த மகன் அமர்நாத் மாலத்தீவில் சிறு தீவை விலைக்கு வாங்கி நண்பர்களுடன் சேர்ந்து ரெசார்ட் அமைத்து நடத்தி வருகிறான். வருடம் முழுவதும் அங்கேயே தனது ஜாகையை வைத்துக் கொள்பவன், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சில நாட்கள் வந்து செல்வான்.

“மா.. உங்க கையால பழம் பொறியும், கட்டன் சாயாவும் செஞ்சு தாங்க..”


“இதோ மோனே ரெண்டு நிமிஷம், லிங்கா நீ போய் ரெப்ரஷ் ஆகிட்டு வா..” என சிறியவனிடம் கட்டளையிட்டுவிட்டு சமையலறை நோக்கிச் சென்றார்.


வீட்டின் நுழைவாயிலில் போடப்பட்டு இருக்கும் லான் ஊஞ்சலில் போய் அமர்ந்தான். பெண்களை வெறுப்பவனல்ல, ஆனால் காதல், கல்யாணத்தில் மட்டும் ஒதுக்கம் உண்டு. அவனது ரிசார்ட்டில் பார்க்கப்படும் கபுல்ஸ் இடையில் நடக்கும் உடன்படிக்கை, சண்டை, சிறு காதல் மட்டுமே இவன் கண்ணில் படுகிறது போலும்..!


அந்த சண்டைக்குப் பின்னே இருக்கும் கூடலை அறியவில்லை, உடன்படிக்கைக்கு பின்னே இருக்கும் நம்பிக்கையும், புரிதலும் விளங்கவில்லை அவனுக்கு. மேலோட்டமாக பார்த்தவனுக்கு காதலின் தீவிரம் புரியவில்லை.


சந்திக்கும் முதல் பார்வையிலேயே மொத்தமாக இவனைச் சாய்க்க காத்திருக்கிறாள் அவள் என்பதை இன்னும் சில நாட்களில் தெரிந்து கொள்வான்.


“பிரதர்.. எனக்கும் ஊஞ்சல்ல இடம் கொடு..” என படுத்திருந்தவனை எழுப்ப முயன்றான் லிங்கேஷ்வரன்.


“ஏன்டா.. உனக்கு உட்கார இடமே இல்லையா..?” அவனைச் சுற்றி போடப்பட்டு இருக்கும் நாற்காலியை சுட்டிக் காட்டி அமர்நாத் கேட்டான்.


“உன்னோட ஊஞ்சல்ல சேர்ந்து ஆடலாம்னு ஆசைப்பட்டேன், நான் உட்காரது பிடிக்கலனா நீயே உட்கார்..” என எழப் போனவனை, நிறுத்தி, “ஓவரா சீன் போடாத.. இங்க வா..” அருகில் நிறுத்தினான்.


“என்னோட ஜி.எ-ப்பும் அப்படிதான் சொல்றா.. நான் பண்றது சீன் போடுற மாதிரியா இருக்கு..?” ஜென்-z வருங்காலம் கேட்டது.


“அது யாருடா ஜி.எப்?” காதலை அறியாதவனுக்கு நாகரீக சுருக்க எழுத்து விளங்கவில்லை.


“மை கேர்ள் பிரெண்ட். அவள எப்படி இம்ப்ரஸ் பண்றதுனு தெரியுல. எப்படி பேசினாலும் அசையவே மாட்டேங்குறா.. எதாச்சும் ஐடியா கொடு பிக் பிரதர்..”


“டேய்.. உன் வயசுக்கு கேர்ள் பிரெண்டே ஓவர், இதுல மொரட்டு சிங்கிள பார்த்து ஐடியா வேற கேக்குற. இவ்வளவு தெரிஞ்ச உனக்கு இத யாருக்கிட்ட கேக்குனும்னு தெரியல பாத்தியா?” தன்னிடம் யோசனை கேட்கும் சிறியவனை எள்ளல் செய்து சிரித்தான்.


கொச்சின் குளிருக்கு சூடான கட்டன் சாயாவும், பழம் பொரியுடன் அமரனுக்குப் பிடித்த சில பலகாரங்ளும் செய்து எடுத்து வந்தார் திரிபுர சுந்தரி.


“வாவ்.. யம்மி, உங்களோட இந்த கைப் பக்குவம் சூப்பர்மா. இந்த டேஸ்ட குக்குகிட்ட எதிர் பார்க்கிறது பெரிய தப்பு..” தாயின் சிற்றுண்டியை உண்டு கொண்டே புகழாரம் பாடினான்.


“ஆல்ரெடி குளிர் அதிகமா இருக்கு, நீ வேற ஏன்.. அம்மா தலையில ஐஸ் தூக்கி வைக்கிற.. ஜஸ்ட் ஹாட் வாட்டர்.. இதுக்கு புகழ்ச்சி அதிகம் தான்..” தன் கையில் இருக்கும் டீ டம்ளரை தூக்கிக் காட்டி கிண்டல் செய்ய, சிறியவனை முறைத்து வைத்தான் அமர்நாத்.


“உன் வயசுக்கு ஜி.எப் அதிகமா தெரியல, ஆனா எங்க அம்மாவ பாராட்டுறது தப்பா போச்சுல்ல..”


“நீ மொரட்டு சிங்கிளா சுத்திகிட்டு இருந்துக்கோ, அதுக்காக தம்பி மேல அக்கறை இல்லாம இருப்பயா அண்ணா.. பிரதர்னா பிரச்சனையை லெப்ட் ஹேண்டில் டீல் பண்ணணும். நீயே பிரச்சனையா வரக்கூடாது.” குழந்தையாக கண்டனம் செய்தான்.


“பிரதர்.. பிரதர்னு இவ்வளவு நாள் பம்மிக்கிட்டு இருந்துட்டு, இப்ப சும்மா உனக்கு ஆளு கிடைச்சதுக்கே இந்த பேச்சு பேசுற.. ஒகே ஆயிருச்சுனா அப்ப என்னல்லாம் பேசுவ..!”


“தம்பியை முகத்துக்கு நேரா புகழாத பிரதர், அதோட என்னைய பார்த்து ஜெலுஸ் ஆகவும் கூடாது சொல்லிட்டேன்” லிங்கேஷாவின் பேச்சைக் கேட்டு அவனை அடிக்கத் துரத்தினான். அவனோ சிட்டாக பறந்துவிட்டான்.


சின்னவன் வீட்டிற்குள் செல்லவும் தாயின் அருகில் வந்து அமர்ந்தான் அமர்நாத். “எப்படி மா.. இவனை தனியா சமாளிக்குறிங்க?”


மெல்ல சிரிப்பை உதிர்த்தாலும் மகனின் கண்களுக்கு அவரின் முகத்தில் இருந்த தயக்கமே பிரதிபலித்தது. அவரின் உள்ளங்கையை எடுத்து தன் கைக்குள் தஞ்சம் அடைய வைத்தான்.


“சொல்லு மா.. என்ன சொல்லணும்? அதுவும் என்கிட்ட?” இதழுக்கடியில் ஒரு சிரிப்பு புரிதலின் பிம்பமாக வெளிபட்டது.


பெருமை பொங்க அமரனைப் பார்த்து, “என்னால இந்த டெக்ஸ்டைல்ஸ் பிசினஸ சரியா பார்த்துக்க முடியல மோனே..”


“ஜஸ்ட் டூ இயர்ஸ் தான் ஆகுதுமா.. இந்த ஷார்ட் டைம்ல லாபத்தை எதிர் பார்க்கக் கூடாது, குறைஞ்ச காலத்துல வாடிக்கையாளர்கள நம்ம கைக்குள்ள தக்கவைக்கிறதே பெரிய சவால், அப்படிப் பார்த்தா அதில நீங்க அல்டிமேட் மா.. நஷ்டம் இல்லாம நடத்திக்கிட்டு, வாடிக்கையாளரையும் அதிகப்படுத்திருக்கீங்க, யூ ஆர் சச்ச கிரேட் மா..” தாயின் தொழில் நேர்த்தியை முழுமனதாக மெச்சினான்.


“அது எல்லாம் சரி, ஆனா ஒர்கர்ஸ்கிட்ட வேலை வாங்க எனக்கு வரல..”


“அன்பை அரைச்சு, பாசத்தைக் கரைச்சு இப்படி பேசினா, நமக்கு கீழ வேலை செய்றவங்கள கன்ட்ரோல் பண்ணவே முடியாது மா.. எத சொல்றதா இருந்தாலும் ஸ்டாரங்கா வாய்ஸ் கொடுங்க..”


“நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா, நானும் என் மருமகளும் சேர்ந்து பிஸினஸ பார்த்துக்குவோம்..” அவரது தயக்கத்துக்கான காரணம் இப்போதே வெளிவந்தது.


அதை உணராதவனாக, “நீங்க தனியா சமாளிக்கணும், பழகுற வரைக்கும் கொஞ்சம் டிரபுளா இருக்கும்.. இன்னும் இரண்டு வருஷத்துல உங்களோட பிளேஸ் வேற லெவல்ல இருக்கும்.. டிரஸ்ட் மீ..”


“ம்.. எப்ப கல்யாணம் பண்ணிப்ப, இருபத்தி ஒன்பது வயசும் முடியப் போகுது..” அமரன் பேச்சை எந்த திசையில் திருப்பினாலும், தாயின் சஞ்சலம் மகனின் எதிர் காலத்தை சுற்றியே வட்டமாக சுழன்றது.


“அம்மா.. வருத்தப்படுறிங்களா? எனக்காக இல்லனாலும்.. உங்களுக்காக கல்யாணம் பண்ணிக்கிறேன். பட் இரண்டு வருஷமாச்சு போகட்டும்.. சரியா திரிபு?” என தோள்களை சுற்றி அணைத்துக் கொண்டான். அவரின் முகத்தில் புன்னகை மலரவும் இவனும் ஆசுவாசமானான்.


“வாட எ மொமன்ட்.. வாட் எ பேமிலி.. உங்க பாச மழையில நானும் ஐக்கியமாகலாமா..?” திரிபுவின் மறுபுறம் லிங்கேஷா அமர்ந்தான்.


“பிரதர்.. ஒரு சாங் பிளீஸ்..” தம்பி கேட்டவுடன் பாடத் தொடங்கிவிட்டான் அமரன்.


‘சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள சொர்க்கம் இருக்கு

அட சின்ன சின்ன அன்பில் தானே

ஜீவன் இன்னும் இருக்கு

பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா

எதுக்கு அட பாசம் மட்டும் போதும் கண்ணே

காசு பணம் என்னத்துக்கு

பச்சை கிளிகள் தோளோடு பாட்டுக்

குயிலோ மணியோடு...’ குரலை காற்றாக மாற்றி இனிமை சேர்த்து பாடி முடித்தான்.


“உனக்கு அப்படியே உத்ராவோட வாய்ஸ் மோனே..” என்று திருஷ்டி கழித்தார் திரிபுர சுந்தரி.


“பெரியம்மா.. நிறைய கச்சேரி பாடியிருக்காங்களே, அதுமாதிரி நீங்களும் ஏன் பிரதர் சினிமால டிரை பண்ணக்கூடாது. செம்ம வாய்ஸ் உங்களுக்கு. இப்படி ஸ்வீட் வாய்ஸ் எனக்கு மட்டும் இருந்துச்சுன்னா கேர்ள்ஸ் மத்தில என்னோட இமேஜ் இன்னும் வேற லெவெல்ல இருந்திருக்கும்”


“எங்க சுத்துனாலும் அதிலேயே வந்து நிக்கிற, ஒழுங்கா படிடா. நீதான் அடுத்து நம்ம பிஸினஸ எடுத்து நடத்தணும்..” என அமரன் கண்டித்தான்.


“மச்ச்.. அதெல்லாம் பார்த்துக்கலாம், லெப்ட் ஹேண்டுல டீல் பண்ற மேட்டர் இது.. பட் பொண்ணுங்க அப்படி இல்ல பிரதர்..”


“பாரு மா, இவன.. எத்திசை திருப்பினும், இத்திசையேனு இருக்கான்.” தம்பியை கண்டிக்கும் இவனே இன்னும் சில நாட்களில் அத்திசை.. இத்திசை.. என எட்டு திசைக்கும் சவால் விடும் வகையில் அவனவளுக்கு தித்திப்பாய் மாறுவான், மாற இருக்கிறான்.


“எத்திசைச் செலினும், அத்திசை சோறே..” என்ற பழமொழியை எத்திசை செலினும் அத்திசை தன்னவள் சுவாசமே..!! என கவிதை படைக்க காத்திருக்கிறான்.
 
Last edited:
அருமையான பதிவு 🤩 🤩
ஹீரோக்கு அற்புதமான அம்மா 😍😍😍
கலகலப்பான தம்பி 😍😍
சூப்பர் 😳
 

Advertisement

Advertisement

Back
Top