
‘காதலனும், காதலியும் பிறர் என்ன நினைப்பார்களோ என்கிற சமூகப் பிரக்ஞையை இழந்து, கிளர்ந்து நிற்றல்’
நாணுவரையிறத்தல் – 7
“திமிர் பிடிக்காபெட்டு, நின்கல வளரே திறக்கால்லானு..” (திமிர் பிடிச்சவனே, ரொம்ப பண்றடா..) முணுமுணுத்தும் வசைபாடிக் கொண்டும் இருந்தார் திரிபுர சுந்தரி.
“எதுக்கு எடுத்து வைக்க சொல்லணும், அப்புறம் வேண்டாம்னு எதுக்கு தூக்கி போடணும்.. என்னைய பார்த்தா எப்படி தெரியுது..?” மறுபடியும் மகனின் துணிகளை டிராவல் பேக்கில் எடுத்து வைத்தார்.
“எப்பவும் இப்படி சாயம் போன டிரஸ்ச போடறதுக்கு, எதுக்கு கபோர்ட் முழுக்க விதவிதமா துணிகளை வாங்கிக் குமிக்கணும்..? வெட்டி வேலையா! என்னய வேற எதுக்கு எடுத்து வைக்க சொல்லணும்..!?” தாயின் ஆதங்கக் குரலில் அன்பே தென்பட்டது.
அமரன் லீவு முடிந்து மாலத்தீவுக்கு கிளம்ப வேண்டிய ஆயத்தங்களை தன் அன்னையிடம் ஒப்படைத்தான். அவரோ புது ஆடைகளையும், நியூ டிரண்டில் அவர் வாங்கி வைத்திருக்கும் உடைகளையும் போட்டு அழகு பார்க்க நினைத்து எடுத்து வைத்தார். அவர் ஆசையாக எடுத்து வைத்த உடைகளை ஓரம் கட்டிவிட்டு, பழைய சாயம் போன துணிகளை பேக் செய்ய துவங்கினான்.
அமரனின் தோள்களைப் பிடித்து நகற்றியவர், “தள்ளி போ.. இந்த இத்துப்போன டிரஸ் தான எடுத்து வைக்கணும். அவ்வளவுதான..! நானே செய்யுறேன்..” அன்னையின் செய்கையில் குறுநகை தந்தபடி அவர் கொண்டு வந்து வைத்த ஜீசை அங்கேயே அமர்ந்தபடி எடுத்து பருகினான்.
சிறிது நேரத்தில் பேக்கிங்கை முடித்தவர், “அவ்வளவுதான டா.. எல்லாம் எடுத்து வச்சுட்டேன். அப்புறம் அந்த குட்டி பேக்ல பருப்பு பொடி, சில வீட்டு மசாலாவும் எடுத்து வச்சுருக்கேன்.. குட்டி பவுச்ல பாஸ்போர்ட், விசா, ரெசார்ட்டோட டாக்குமெண்ட்ஸோட காப்பி எல்லாம் பென்டிரைவ்ல இருக்கு, பார்த்துக்கோ..” என பேக்கிங்கை முடித்து கிளம்பியவர். அந்த ரூமின் சாளரம் அருகே கால்களை குறுக்கி லிங்கேஸ்வரன் முகத்தை சுருக்கி அமர்ந்து இருப்பதைக் கண்டார்.
“நீ ஏன்டா.. இப்படி உட்கார்ந்து இருக்க? உங்க அண்ணா ஊருக்கு போறான்னு பீல் பண்றியா?” லிங்கன் அருகே சென்று கேட்க,
“நோ மா.. முதல் வேலையா உன் மகன கிளம்ப சொல்லு.. பிக் பிரதரா இருந்துட்டு செய்யுறது எல்லாம் சகுனி வேலை..” தாயிடம் ஆரம்பித்து அமரை பார்த்து முடித்தான்.
தம்பியைப் பார்த்து குறும்பு சிரிப்பைத் தந்தான். அதில் இன்னும் கடுப்பாக, “அம்மே.. இனி எப்பலாம் இவன் வாரானோ.. அப்பெல்லாம் என்னைய ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுரு.. இனி எப்ப இவன் வந்தாலும் நான் வீட்டுல இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்..” கறாராக சொல்வதாக நினைத்து அன்னையிடம் கொஞ்சலாக முடித்தான்.
“ஏன்டா அப்படி சொல்ற..!” சிறியவன் தலை கோதிவிட்டவாரே கேட்டார். அந்த சுகத்தில் அமர்ந்தவாக்கில் தாயை கட்டித் தழுவிக் கொண்டான்.
“இன்னும் சின்ன பையன் மாதிரி அம்மாவ கட்டி பிடிச்சிட்டு செல்லம் கொஞ்சிக்கிட்டு திரியுற.. உனக்கு இந்த வயசுல லவ் கேக்குது..?” முன்னே மிரட்டியும், பின்னே தம்பியை கேலியும் செய்தான்.
“லவ்வுக்கு ஹெல்ப் தானே கேட்டேன். முடிஞ்சா செஞ்சிருக்கணும், இல்லாட்டி பேசாம போயிருக்க வேண்டியதானா, இப்படி பண்ணி வச்சுட்டான்.. இட்ஸ் நாட் பேர்” வாய்க்குள் கிசுகிசுத்தானே ஒழிய, சத்தம் தரவில்லை. கண்களை மூடி திறந்து தமையனை முறைத்துப் பார்த்தான்.
“மா.. என் ப்ரெண்ட்ஸ்கிட்ட இருந்து பிரிச்சு வேற கிளாஸ் மாத்திவிட வச்சுட்டான்மா..” என்னதான் ஜென்z ஜெனரேஷனா இருந்தாலும், தாயிடம் இளம் வயது காதலை பட்டவர்த்தனமாக்க முயலவில்லை பாதி மறைத்துப் பேசினான் லிங்கா.
“ப்ரெண்ட்ஸ்கிட்ட இருந்தா....! இல்ல கேர்ள் ப்ரெண்டுகிட்ட இருந்தா..?” என புருவம் உயர்த்திக் கேட்டான் அமரன்.
“வாட் எவர்.. இப்படி பண்ணிருக்கக் கூடாது நீ..” சின்னவனின் பேச்சில் சிரித்தவர், அமரனிடம் தனது ஆதங்கத்தை கேட்டார்.
இளையவனை டீலில் விட்டுவிட்டு, மூத்தவனிடம் தனது ஐயத்தை தணிக்க முயன்றார், எங்கு இப்படியே விட்டால் சாமியாராக மாறிவிடுவானோ என்று..!
“உன்னோட லாஜிக்கே புரியல மோனே.. வயசு பசங்கனாலே நீட்டா டிரஸ் போடவும், விதவிதமா மீசை, தாடியும் வைப்பாங்க. நீ ஏன்டா இப்படி இருக்க?” மொழுக் என்று இருந்த முகத்தில் களை பொருந்தி இருந்தாலும், ஆண் பிள்ளைக்கு மீசை கம்பீரமாச்சே..! மீசை, தாடி அனைத்தையும் கிளின் சேவ் செய்திருந்தான்.
“அவன் எப்படி இருந்தா என்னம்மா..? லவ் மட்டும் அவனுக்கு செட்டாகவே செய்யுது.. மார்க் மை வேர்ட்ஸ்” என சிறியவன் சாபம் கொடுத்து ஓடி விட்டான்.
அமரனின் முகவடிவத்திற்கு இந்த மொளமொள வதனம் வசீகரத்தை அள்ளித் தந்தாலும், அம்முகத்திற்கு மீசை வைத்தால், அவனது தந்தையைப் போல தோற்றத்தில் இருப்பவனுக்கு கம்பீரம் இழையோடும் என்பது தாயின் மனதாங்கல். திருமண வயது பொருந்தி இருக்கும் பையன் உடுத்தும் உடையிலும், மேம்போக்கான தோற்றத்திலும் திருப்திப்பட்டு கொள்கிறானே, இவனை எப்படி சரிக்கட்டுவது என தெரியாமல் திண்டாடினார்.
அமரனின் கோட்பாடுகளை தாயிடம் பிரகடனப்படுத்தியும் விட்டான். மீசை வச்சு ஆம்பளையா காட்டிக்கிறதும், டிப்-டாப்பா டிரஸ் பண்ணி ஷோ காண்பிச்சு வாட்டசாட்டமா இருந்தாதான் லவ் வருமா..? வயதிற்கான இளமை கவர்ச்சி மட்டும் போதுமா..? உணர்வுகளின் பிடியில் தன்னை அறியாமல் சிக்கிக் கொள்ளும் மங்கையை இன்னும் அவன் தரிசிக்க வில்லையே!
எந்த பெண்ணிடமும் தோன்றாத உணர்வை வயது கழிகிறது என்பதற்காக.. கண்ட சினிமா காதலையுமா தேடிப் போகமுடியும்.. நெவர்..! காதலிக்கும் ஆசை இப்பவரை அவனிடம் இல்லை, ஒரு பொண்ண பார்த்தா சுவாசிக்க மறந்து, இமை சிமிட்டாத பார்வையை செலுத்த முடியுமா? எந்த பெண்ணிடமும் இதுவரை அவன் ஈர்ப்பு கொள்ளவில்லை. பின் எதை வலியுறுத்தி காதல் செய்ய முடியும்? என்பதே ஆஸ்தான அமரின் மனநிலை.
எந்த திட்டமிடலும் இல்லாமல் கடல் கடந்து செல்பவனின் பயணம் தொடங்கும் முன்பே காதலில் சிக்கி கொள்ளப் போகிறான்.
கோயமுத்தூரில் கிளம்பிய விமானம் கொச்சின் விமான நிலையத்தில் தரையிறங்கி இரண்டு மணி நேரங்கள் கடந்து இருந்தது.
ஸ்ரேயா, “என்னபா சுத்திபாக்க வந்துட்டு, இப்படி ஏர்போர்ட்டுக்குள்ளே உட்கார வச்சு வேடிக்கை காட்டுறிங்க..” சுற்றி பார்க்க அழைத்து வந்துவிட்டு வெட்டியாக உட்கார வைத்தவர்கள் மீது சிடுசிடுப்பைக் கொட்டினாள்.
“முதல்லயே பிளான் சொல்லிருந்தா.. கண்ணாவையும் கூப்பிட்டு வந்திருக்கலாம்.. போங்க பா..” மகனும் உடன் வந்திருந்தால் ஆனந்தம் மிச்சமின்றி கழிந்திருக்குமே என்பது ஸ்ரேயாவின் வருத்தம்.
ஸ்ரேயா புலம்புவதை பார்த்து மற்ற இரு தோழிகளும் மென்னகை தாங்கி இருந்தனர்.
“நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா கண்ணா மட்டும் இல்ல அவனோட சேர்த்து குடும்பமா லாங் டிரிப் போகலாம். ஓகேவா! ஆஹான்.. இன்னொரு விஷயம் நாம கொச்சின் சுத்தி பாக்க வரல, வீ ஆர் கோயிங் டூ மாலத்தீவு..” அவளது கேள்விக்கு பதிலைத் தந்து, அதே சமயம், இப்பயணத்தில் நிச்சயம் ஸ்ரேயாவுக்கு ஓர் வாழ்க்கை துணை அமைந்துவிடும் என நம்பினார்கள்.
“வாட்.. மாலத்தீவா..!! வாவ்.. வாவ்..” ஏற்கனவே கேரளத்து சீதோஷ்ண நிலை குளுகுளுவென்று உணர்வு மனத்தை கவ்வ, தோழிகளின் சர்ப்ரைசில் மேலும் துள்ள ஆரம்பித்திருந்தாள்.
மனத்தோடு உடலும் துள்ளிக் குதிக்க, இத்தனை சந்தோஷப்படுவாள் என்று தோழிகள் அறியவில்லை ஏன்? அவளுமே அறிந்திருக்கவில்லை.
“இது சர்ப்ரைஸ் இல்ல செல்லம்.. வேற சர்ப்பரைஸ் ஒண்ணு இருக்கு..!”
“வேறயா..!! வாட் எவர், ஐம் சோ எக்சைட்டட் திஸ் டைம்.. தேங்கஸ் டியர்ஸ்..”
கடந்து வந்த துயர்களில் இருந்து மீள முயற்சிக்காமல், எதிர்காலத்தின் மீது அச்சம் எழவும், எழுந்து ஓட துவங்கிவிட்டாள் ஸ்ரேயா. அவளின் பருவ வயதில் தவறு இழைத்த பேதையாக கடக்க முடியாத துர்சொப்பனத்தில் உழன்றவளுக்கு, இந்த குளிர் பிரதேசம் ஸ்ரேயாக்கு வெறுமையை விரட்ட பேருயுதவியாக இருந்தது.
“என்ன பண்றிங்க என் பப்புக்குட்டி..?” மொபைல் திரையில் கண் கொள்ளாமல் வழிகிற சிரிப்பாய் காட்சி தருபவனை லயித்து பார்த்தாள்.
“மா.. டிரா யுவர் பேவரிட் ப்பூ.. இல்ல பிளவர்? ஸ்கூல்ல சொன்னாங்களா, அதான் மம்மிக்கு பிடிச்ச சன் பிளவர் டிரா பண்றேன்..” மழலையாக மொழி பெயர்த்தினான்.
“உன்னோட பேவரிட் பூ வரையனும் தங்கம்.. அதவிட்டுட்டு அம்மாக்கு பிடிச்சதை வரையக் கூடாது டா..”
“அப்டி இல்ல.. வழயலாம். அம்மாக்கு பிடிச்சா எனக்கும் பிடிக்கும்..” அகல விரிந்த இமைகள் வழியே தாயின் ரசனையே தன் விருப்பம் என வழி மொழிந்தான்.
“ஒகே கண்ணா.. இப்ப அம்மா எங்க இருக்கேன்னு சொல்லு பார்க்கலாம்..?”
“வட்டிங் செலிபிரேசன் மா...” அவளின் பின்னே குவிந்து கிடக்கும் மர நாற்காலியும், சில மானிட தலைகளையும் கண்டவன் திருமண மண்டபமாக இருக்குமோ என சிறு மூளை யூகித்து சொல்ல,
பின்னே திரும்பி பார்த்தவள், “அச்சோ.. அம்மா ஏர் போர்ட்ல இருக்கேன். இங்க பாரு..” என்றவள் கண்ணாடி சாளரத்தின் வழி ஒய்வு எடுக்கும் விமானங்களைக் காட்டினாள்.
“ஹா..ஹா.. இட்டு ரொ..ரம்ப பெருசா இருக்கு மா..” முதல் முறையாக ப்ளைட்டை கண்டதில் குதூகலித்தான்.
மகனின் சுட்டித்தனத்தில் சொக்கியவள், “நெக்ஸ்ட் டைம் அம்மா கண்டிப்பா கூப்பிட்டு போறேன்..”
“ம் சரிமா.. அகிப்பாவும் கண்ணாக் கூட வரணும்..” தன்னை சுட்டிக் கைகாட்டி நாணி கோணி நின்றான்.
அகிலன் எப்போதும் உடன் இருக்க வேண்டும் என்கிற குழந்தையின் ஆவலை அறிய முயலாமல், தொடர்ந்தாள், “அப்ப குகன், ஸ்ருதிமா வேண்டாமா..”
“வேணும்.. வேணும்..” என நான்கு பற்களும் மின்னல் தெரித்தது சிறியவனிடம்.
தன் புதல்வனின் அழகில் மயங்கி நின்றவளை, “நீ சேப்ப்பா போய்ட் வா.. அப்புறம் மாளு, ஹரி பத்திரமா பார்த்துக்கோ.. டூ பேரும்.. பாவம்ல..”
“ஏன் தங்கம்.. அவங்கள உனக்கு அவ்வளவு பிடிக்குமா..?”
“கொஞ்சம ப்பிடிக்கும்.. அவங்க சேட்ட பண்றாங்கல, அதான் பூச்சாண்டி வந்து இரண்டு பேரையும் தூக்கிட்டு போயிரும்..”
“ஆமா.. ஆமா.. ரொம்ப சேட்டை ரெண்டு பேரும்..”
*****
“ஏதாச்சு ஓர் டைரக்சன்ல கூப்பிட்டுப் போங்க.. ஜிக்..ஜாக்கா போய்கிட்டு இருக்கு..” கண் இமைகளை மூடி இருந்தவளின் இரண்டு கைகளும் இருமலர்களின் பிடியில் சிக்கியிருக்கு அவர்கள் வழிகாட்டலில் நடந்தாள்.
“இப்பதான் உனக்கான சர்ப்ரைஸ் காத்துக்கிட்டு இருக்கு ரே, கண் மட்டும் திறந்திராத..”
“இதுக்கு மேல என்னயிருக்கு.. அந்த சர்ப்பரைஸ் இங்க கொண்டு வரலாம்லா..! எங்கையாவது தடுக்கி விழ வச்சிறாதீங்க”
“அப்படியெல்லாம் உன்ன கைவிட்டுற மாட்டோம்..” மாளவிகா நம்பிக்கை தர,
“மாளு இங்கேயே இரண்டு பேரும் வெயிட் பண்ணுங்க.. நான் வந்துடுறேன்..” என அவர்களை ஏர்போர்ட் நுழைவாயில் தாண்டி நிற்க வைத்துவிட்டு ஹரிதா அவர்கள் அலுவல் நண்பர்களுடன் மேடியை ஸ்ரேயாவுக்காக அழைத்து வர சென்று இருந்தாள்.
மாதவனை கண்டு பிரமிப்பாள், இந்த சந்திப்பில் இருவரும் பரஸ்பரமாக பரிமாறி, புரிதலில் அடுத்த கட்டத்தை முன்னோக்கி செல்வார்கள் என்கிற அவர்களின் நம்பிக்கை பாதி பாதை மாறி, மீதி ஸ்ரேயாவின் சரிபாதியில் அடங்கிவிடும்.
“ஏய் ரே.. ஓர் லேடி, டிவின்ஸ் பாப்பா போல, கையில ரெண்டு குழந்தைய வச்சு மேனேஜ் பண்ண முடியமா கஷ்டப்படுறாங்க, நான் போய் கொஞ்சம் சப்போர்ட் பண்ணிட்டு வாரேன். நீ கண்ண மட்டும் திறந்திராத..”
அந்திப்பொழுதை தாண்டி சில நொடிகளே கடந்திருக்க, கார்மேகம் சூழ்ந்து இருள் அப்பி இருந்தது. அந்நேர இளந்தென்றலின் அழகான தீண்டலில் அவளின் மெய்யுடல் சிலிர்த்து நிற்க, சீலீவ்லெஸ் உடையும், இறங்கிய பின்னங்கழுத்தும் குளிர் காற்றுக்கு இசைந்து தேகத்தின் வெப்ப நாணல்களை உசுப்பேற்றியது போதாமல் இரு கைகளாலும் தன்னுடலை அணைத்துக் கொண்டாள்.
விமான நிலையத்தின் நுழைவாயிலின் குறுவழியில் நின்றவளுக்கு அந்நிசப்தத்தில் காலில் ஏதோ உறுத்துவதுப் போல் உணர்வு எழ, பயத்தில் அங்கும் இங்கும் குதிக்க தொடங்கியவள், எதிரில் வருபவனின் மீது மோதி நிலை தடுமாறி விழ இருக்க, அவளின் இடது தோள்களை பிடித்து நிறுத்தினான்.
தன் எதிரில் நின்றவனை கவனிக்காமல், குனிந்து நிலத்தில் பார்வை பதித்து, “சாரிங்க.. அது கால் மேல ஏதோ போன மாதிரி இருந்தது...”
அவனும் அத்திசையில் பார்த்து, “அங்க ஒண்ணும் இல்ல.. பீ சில்..” ஆறுதல் தந்தான்.
“ம்ம்.. தேங்க்ஸ்..” என்றவள் அவனை சந்தித்து மீள இருவரின் பார்வையும் ஒரு சேர சந்தித்தன.
மழை மேகத்தின் வீரியமாய் அலைகளாக மாறி பளிச்சு.. பளிச்சுனு.. சத்தமின்றி மின்னல்கள் தாக்க, ஒளி வெள்ளத்தில் பெண்ணவளின் கண்கள் ஆடவனை கவ்வி இழுக்க, அவனின் பார்வையோ கண்ணோடு கண் கலந்து இணை சேர்ந்த திருப்தியில், மற்ற எந்த எண்ணமும் இல்லாமல் இருவரின் உணர்ச்சிகளும் ஒன்றுபட்டன.
ஒரு வினாடிக்குப் போட்டியாக மின்னலுடன், அவர்களின் பார்வையும் பலமடங்காக மல்லுக்கட்டியது.
******
படிச்சுட்டு உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் நான்...
மலையாளம் ரொம்ப ஈசினு நினைச்சுட்டேன் போல
Last edited: