Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-60

Advertisement

praveenraj

Well-known member
Member
சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து கதையளந்தவர்கள் மணி மூன்றைக் கடக்க எல்லோரும் அங்கே இருக்கும் பெரிய பஜாருக்குள் சென்றனர். ஜோடிஜோடிகளாகவும் தனித்தனியாகவும் அவரவர் மனம் விரும்பியவர்களுக்கும் அன்புக்குரியவர்களுக்கும் அன்பு பரிசுகளை வாங்கிக்கொண்டிருந்தனர்.எல்லோரும் இரண்டு பெரிய பைகளில் பொருட்களை வாங்கி நிரப்பினர். நிறைய கைவேலைப்பாடு நிறைந்த பொருட்களைத் தேர்ந்தெடுத்தனர். செபா ஜெஸ்ஸிக்கும் துஷி ரேஷுக்கும் துவாரா சருக்கும் யாழ் பிரவினுக்கும் என்று சில சர்ப்ரைஸ் பொருட்களையும் வாங்கினார்கள். அந்தப் பெரிய பஜாரில் இளாவைத் தவறவிடாமலிருக்க ஆரம்பதில் இருந்தே விவான் அவளைத் தன் தோளில் வைத்துக்கொண்டான். நேரம் போனதே தெரியாமல் எல்லோருக்கும் இருக்க அப்போது தான் திவேஷ் விவானை அழைத்தான்
"என்னடா எல்லாம் பார்த்தாச்சா? ரூமுக்கு வந்துடீங்களா?"என்று வினவ,
"இல்ல மச்சி. ஷாப்பிங்ல இருக்கோம்"
"டேய் நீங்க இங்க கௌஹாத்தி வந்து வாங்கலாம் இல்ல? அங்கேயோட இங்க நல்லா இருக்கும்"
"நீ ஏன் ஷாக் ஆகுற? எப்படியும் அங்கேயும் ஒரு ரவுண்டு ஷாப்பிங் பண்ணுவாங்க. கவலையை விடு"
அவன் கூறிய தொனியில் சிரித்த திவேஷை கடிந்தவன்,"டேய் நீயும் சீக்கிரம் குடும்பஸ்தன் ஆகப் போற தானே? அப்போதான் புரியும்"
"ஆக்கிட்டாலும்..." என்று இழுத்தான் திவேஷ்.
"ஏன் என்ன ஆச்சு? அனேஷியா நல்லாதான் பேசுறானு சொன்ன... என்ன ப்ரப்ளேம்?" என்றான்.
"ஏன்டா நீ வேற? நல்லாப் பேசுறாள் தான்.ஆனா என் கேள்விக்கான பதில் மட்டும் இன்னும் கிடைக்கவேயில்லை. நானும் அவளைக் கேட்டு வற்புறுத்த விரும்பவில்லை. ஆனா அம்மாக்கு நான் கொடுத்த பத்து நாள்ல இன்னும் ரெண்டு நாள் தான் பாக்கி இருக்கு. அம்மா வேற கணக்குல ரொம்ப ஸ்ட்ராங்" என்று சிரித்தான்.
"மச்சி, அவ பாயிண்ட்ல இருந்து யோசி. அவ தேடி வந்தது துவாராவை. நீ அவ லிஸ்ட்லே இல்லைடா. இப்போ திடீர்னு நீ சொன்னா அவளுக்கு அதிர்ச்சியாவும் குழப்பமாவும் இருக்காதா என்ன? கொஞ்சம் டைம் கொடு. எப்படியும் அடுத்தடுத்து நம்ம பசங்களோட கல்யாணம் எல்லாம் இருக்கு. கண்டிப்பா எல்லாவற்றுக்கும் அவ வருவா. துஷி-ரேஷா, துவாரா-சருனு எப்படியும் இன்னும் ரெண்டு மூணு மாசத்துல மேரேஜ் இருக்கப் போகுது. பேசிக்கலாம்.மனசை தளரவிடவே கூடாது மச்சான். திரிஷா இல்லைனா நயன்தாரான்னு போயிட்டே இருக்கனும்" என்ற விவானை போனில் நன்கு கழுவி ஊற்றினான் திவேஷ்.
"டேய் பாப்பா பக்கத்துல தான் இருக்கா. நோ பேட் வேர்ட்ஸ்" என்று சொல்ல அமைதியானான் திவேஷ்.
"சரி அவன் எப்படி இருக்கான்?"
திரும்பிப் பார்த்த விவான் தூரம் யாழ், துஷி, துவா மூவரும் எதையோ பேசிச் சிரித்துக்கொண்டிருப்பதைக் கண்டவன் அநேகமாக யாழும் துவாராவும் துஷியைத் தான் வம்பிழுத்துக்கொண்டு இருக்கக் கூடும் என்பதை யூகித்து திவேஷிடம் சொன்னான்.
"சரி மச்சான் நைட் ஒரு எட்டுக்கு எல்லாம் புறப்படுங்க. அப்போ தான் விடியற்காலையில இங்க வருவீங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு மதியம் எல்லோருக்கும் செம நான் வெஜ் பீஸ்ட் ரெடி பண்ணச் சொல்லியிருக்கேன். சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு ஈவினிங் கிளம்ப சரியா இருக்கும். ஓகேவா?"
"அருமை அருமை கேட்கும் போதே நாக்குல எச்சில் ஊறுது. ஆல்வேஸ் ரெடி" என்றவன் அழைப்பைத் துண்டித்தான். ஆறு மணிவரை யாரும் அந்த பஜாரை காலி செய்யாமல் இருக்க எல்லோரையும் அழைத்தவன் திவேஷ் சொன்னதைச் சொல்ல அப்போது தான் மணியைப் பார்த்தவர்கள் நேரம் அதிவிரைவாகச் செல்கிறது என்பதை உணர்ந்தனர்.
"நேத்து தான் வந்த மாதிரி இருந்தது. பார்த்தா ஆறு நாள் சட்டுனு போயிடுச்சில்ல?" என்றான் இளங்கோ.
"ஆனா இப்போ ரொம்ப சீக்கிரம் போன மாதிரி தெரியலாம். ஆனா ஊருக்குப் போனதுக்கு அப்புறோம் இந்த ஒருவாரத்தோட ஹேங்ஓவர் ரொம்ப நாளுக்கு இருக்கும். ட்ரைன்ல போனது இங்க எல்லோரும் கதையடிச்சிட்டு இருந்தது ஒன்னா சாப்பிட்டதுனு சின்ன சின்ன விஷயங்களும் நல்லா ஞாபகம் வரும். அப்பத் தான் இந்த டூர் கம்ப்ளீட் ஆகும்" என்றாள் இதித்ரி.
"கரெக்ட்டா சொன்ன இதி. இந்த ஒருவாரம் நாம யாரும் தனியாவே இருக்கவில்லை. ஆனா இனி தனியா இருக்கும் போது இந்த ஞாபகங்கள் அடிக்கடி வரும்" என்றாள் நித்யா.
"சரி வாங்க பேசினால் பேசிட்டே இருப்போம். ரூம் போய் எல்லோரும் பேக் பண்ணிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தால் தான் அடுத்து ட்ராவல் பண்ண சரியா இருக்கும்" என்று அழைத்தான் ஹேமா. எல்லோரும் தங்கள் ரிஸார்டுக்குச் சென்றனர்.
ஒவ்வொருவருக்காக அவரவர் வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. சித்தாரா தனியாக ஊருக்குச் சென்றதில் அவள் பெற்றோருக்கும் சரி மாமா அத்தைக்கும் சரி விருப்பமே இல்லை தான். இருந்தும் இந்தத் தனிமை அவளுக்கு அவசியம் என்று எண்ணியே அவளை அனுப்பினார்கள். அவளோ கடந்த காலத்திலிருந்து ஈசியாக வெளியே வந்துவிட்டாள் ஆனால் நிகழ்காலத்திலிருந்தும் விவி தன்னிடம் அன்று பேசியதிலிருந்தும் வெளியே வர முடியவில்லை. விவியனை அவளுக்குப் பிடித்திருக்கிறது தான் ஆனால் காயம் பட்டு அது இன்னும் முழுவதும் ஆறக்கூடவில்லை அதற்குள் இன்னொரு முயற்சி செய்ய அவள் மனம் விரும்பவில்லை. இதை அவளுடைய நெருக்கிய தோழிகளுக்குத் தெரிவிக்க அவர்களும் இப்போது எந்த முடிவும் எடுக்கவேண்டாம் எதுவென்றாலும் ஊருக்கு வந்து நன்கு யோசித்து முடிவெடுக்கலாம் என்று அறிவுறுத்த அதுவே அவளுக்கும் சரியென்று பட்டது.
உண்மையில் சித்தாராவிற்கு இன்னும் இரண்டு நாட்கள் இங்கே தங்க திட்டம் இருக்கிறது. அதாவது அவளுடைய ஹனி மூன் டிக்கெடில் இன்னும் இரண்டு நாள் கழித்து தான் ஊருக்குச் செல்ல முடியும். அவள் அதைப்பற்றி மிருவிடம் சொல்ல அவளோ விவானிடம் சொல்லி தாங்கள் அன்று தங்கிய கெளஹாத்தி ரிஸார்ட்டிலே தங்கிக்கொள்ள திவேஷிடம் பேசி சம்மதம் வாங்கியிருந்தாள்.
அன்றிரவு அனைவரும் ஒன்றாகக் கூடி உணவு உண்டு கதை பேசிக்கொண்டிருந்தனர். இதுவரை எடுத்த புகைப்படங்களை அனைவரும் ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்தனர். பின்னே நாளைக்கு இதெல்லாம் பைய செய்ய முடியதல்லவோ? எடுத்த சில புகைப்படங்களைப் பார்த்தும் ஒருவர் மற்றொருவரை கலாய்த்துக்கொண்டும் இருந்தனர்.
விவான், செபா, யாழ் மூவரும் தான் டிஜிட்டல் கேமரா வைத்திருந்தனர். மற்றவர்கள் எல்லோரும் அவரவர் செல்போனிலே போட்டோஸ் எடுத்திருக்க எல்லாவற்றையும் அவர்களுடைய குரூப் மெயில் ஐடியில் ட்ரைவில் அப்லோட் செய்தனர். அதனுடைய பாஸ்வோர்ட் எல்லோருக்கும் தெரியும் என்பதால் அங்கே சென்று ஈசியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதில் ஏற்கனவே அவர்கள் அனைவரும் கல்லூரியில் ஒன்றாகச் சென்ற ஐவி, டூர், கல்சுரல்ஸ், பேர்வெல் டே, கான்வோகேசன் (பட்டமளிப்பு விழா) , விவான், இளங்கோ திருமணப் புகைப்படங்கள் கூடவே சில கெட்ட்டூகெத்தேர் புகைப்படங்கள் என்று நிறைய இருந்தது. அவற்றில் இந்தப் பயணத்தின் புகைப்படங்களையும் சேர்த்து பதிப்பித்தனர்.
அவர்கள் போட்டத் திட்டத்தின் படியே இரவு எட்டரை வாக்கில் அங்கிருந்து கௌஹாத்தி நோக்கிப் புறப்பட்டனர்.
அந்த வண்டியில் செல்லும் போது ஜிட்டு தான்,"மச்சான் நாம எல்லோரும் ஐவி போகும் போதெல்லாம் இந்த மாதிரி பஸ்ல ட்ராவல் பண்ணா நல்லா பாட்டுக்கு டேன்ஸ் ஆடுவோம்ல? சும்மா வர சத்தத்துல ரோட்டல எதிர்ல போற வர வண்டில இருக்கவங்க எல்லாம் நம்மளை ஒரு மாதிரி பார்த்திட்டுப் போவாங்களே ஞாபகம் இருக்கா?" என்றான்,
"அதை எப்படிடா மறக்க முடியும்? நாம காரைக்கால் ஐவி போறதுக்கு முன்னாடி அதாவது நம்மோட முதல் ஐவி அது. அன்னைக்கு நாம எல்லோரும் கூட்டத்தோட 'எங்கேயும் எப்போதும்' படத்துக்குப் போய்ப் பார்த்துட்டு வந்தா மறுநாள் அதுபோல ஒரு பஸ்ல தான் ட்ராவல் செய்யப்போறோம்னு தெரிஞ்சதும் எல்லோருடைய மனசுளையும் அந்த பயம் ஆனா அதை வெளி காட்டிக்காம இருந்தோமே?" என்றான் விவான்.
"மச்சி, அந்த பஸ் எடுக்கறதுக்கு முன்னாடி நம்ம புகழேந்தி டிரைவர் கிட்டப் போய், "அண்ணா பஸ்ல பிரேக் எல்லாம் கரெக்ட்டா வேலைசெய்யுது தானேனு?" கேட்டானே. அப்போ அந்த டிரைவர் அவனை முறைச்சுப் பார்த்தாரே?" என்றதும் எல்லோரும் விழுந்தடித்துச் சிரித்தனர்.
"எல்லாத்தையும் விட நம்ம காலேஜ் கடைசி ஒர்கிங் டே அதாவது பைனல் செமஸ்டர் மாக் எக்ஸாம் (மாதிரி பரீட்சை) அப்போ நம்ம எஸ்கேவோட 'மான் கராத்தே' படத்துக்கு டிக்கெட் புக் பண்ணச் சொன்னா இந்த நாயி" என்று தியாவைக் காட்டியவர்கள்,"கிட்ட இருக்கும் தியேட்டர்ல புக் பண்ணாம தூரமாகச் செஞ்சிட்டானே? எல்லோரும் பனிரெண்டு மணிக்கு முடியும் எக்ஸாமை பதிரொன்றைக்கே முடிச்சிட்டு கிளம்ப இதோ இவங்க..." என்று இளங்கோவையும் துவாராவையும் காட்டி,"என்னமோ செமஸ்டர் எக்ஸாம் மாதிரி நிறுத்தாம எழுதிட்டே இருந்தானுங்களே?" என்று சொல்ல எல்லோரும் சிரித்தனர்.
"அப்புறோம் அந்தப் படத்தைப் பார்க்க சாப்பிடாம கொள்ளாம விழுந்தடித்து போனதெல்லாம் வேற கதை" என்றான் செபா.
"ஆனா அந்தப் படத்துக்கு அப்படியொரு பில்ட் அப் தந்தீங்க பாரு?" என்றான் ஜிட்டு.
"கல்சுரல்ஸ்ல அவ்வளவு சூப்பரா பெர்பார்ம் பண்ணியும் நாம அந்த பார்ட்டி ஸ்ப்ரே அடிச்சோம்ங்கற காரணதுக்காக நம்மளை டிஸ்குவாளிப்பை செஞ்சாங்களே? இல்லைனா நமக்கு தான் முதல் பரிசு வந்திருக்கும்" என்று அலுத்துக்கொண்டான் இளங்கோ.
"விடு மச்சான் ப்ரைஸா முக்கியம் அன்னைக்கு நம்ம பிரின்ஸியையும் ஹெச்ஓடியையும் கதறவிட்டோமே அதுதான் ஹேப்பி" என்றான் ஜிட்டு.
"அது உண்மையிலே ஒரு கனாக் காலம்டா. கவலைகளில்லை கடமைகளில்லை எதையும் டேக் இட் ஈஸியா ஜாலியா சந்தோஷத்துக்காகச் செஞ்சோம். யோசிச்சுப் பாருங்க நாம வாங்குன மார்க்ஸும் நல்ல பேருமா நமக்கு இப்போ சந்தோசம் தருது? இல்லை. நாம செஞ்ச கலாட்டாங்க தான் இப்போ நமக்கு சந்தோசத்தைத் தருது" என்றான் தியா.
"கரெக்ட்டா. உண்மையிலே காலேஜோட நம்ம எல்லோருடைய அந்த மகிழ்ச்சியான நாட்கள் முடிஞ்சது. அதுக்காக நாம இப்போ சந்தோசமா இல்லையானு கேட்டா அப்படியில்லை. இன்னைக்கு நம்ம கிட்டப் பணமிருக்கு நல்ல வேலையிருக்கு வீடிருக்கு காரிருக்கு ஆனா ஏதோ ஒன்னு நம்ம கிட்ட இல்ல. என்ன சொல்ல அப்போ இருந்த அந்த அசாத்தியா தைரியம் இல்லை. அந்த இளமை இல்ல. அந்தத் துடிப்பு இல்லை. யா அப்டேர் ஆல் வீ ஆல் க்ரோன் அப் மச்சான் (நாம எல்லோரும் வளர்ந்துட்டோம். பொறுப்புகள், கடமைகள் வந்துவிட்டது) இன்னைக்கு நாம அதைச் செஞ்சா எல்லோரும் என்னமோ நாம செய்யக் கூடாததைச் செஞ்ச மாதிரி பேசுவாங்க. அன்னைக்கு எக்மோர் ஸ்டேஷன்ல நாம கத்தியது, அன்னைக்கு ட்ரைன்ல நாம எல்லோரும் ஓடியதுனு இப்படி எல்லாம் நாம செய்யக் கூடாதாம். காரணம் நாம் வளர்த்துட்டோமாம். அதையும் மீறி செஞ்சா நமக்கு பொறுப்பில்லை, அறிவில்லைனு சொல்லி அட்வைஸ் பண்ண ஒரு கூட்டம் ரெடியா இருக்கும். ஏன் மச்சான் அப்போ நாம வளர்ந்தாலே சிரிக்கக் கூடாதா? ஃபன்(fun) பண்ணக் கூடாதா? கலாய்க்கக் கூடாதா? வளர்ந்துட்டோம்னு நாம எப்பயும் சீரியஸாவே இருக்கணுமா என்ன?" என்றான் விவான்."ஏன் நான் வீட்ல ஷார்ட்ஸ் போட்டுடக் கூடாது. போட்டுட்டா நித்யால இருந்து என் அம்மாவுல இருந்து எல்லோரும், என்ன இன்னும் சின்ன பையன் மாதிரி ட்ரொவுசர் போட்டு இருக்கன்னு கேட்கறாங்கடா?" என்றான் விவான்.
"அதே தான் மச்சி நான் வீட்ல கார்ட்டூன் பாக்கக் கூடாது. பார்த்தாப் போதும், உடனே உன் வயசென்ன தெரியுமான்னு எல்லோரும் கேட்பாங்க" என்றான் ஜிட்டு.
"ஏன் இந்த டூருக்கு நான் உங்க எல்லோருடனும் போறேன்னு தெரிஞ்சதும், என் கொலீக்ஸ் கூட ஏன்டா உன் வயசென்ன? இன்னுமா இப்படி ஊர்ச் சுத்திட்டு இருக்கனு கேட்டாங்கப் பாரு" என்றான் தியா.
"ஏன் எங்களுக்கு மட்டும் என்னவாம்?" என்றாள் மிரு."இவ்வளவு வயசாகி இன்னும் ஏன் பொண்ணை வீட்ல வெச்சியிருக்கீங்கனு ஒரே கேள்வி. இதுல ஒருத்தவங்க ஒருபடி மேல போய் பொண்ணுக்கு என்ன குறைன்னு வேற...?" என்றாள் மிரு.
"கடிவாளம் கட்டின குதிரை மாதிரியே நாம ஓடனும்னு நினைக்கிறாங்க. அதை விட்டு விலகி வந்தா எப்படி இவன் மட்டும் இப்படி இருக்கலாம்னு ஒரு பொறாமை, ஆதங்கம்" என்றான் துவாரா.
"இங்க அவனவன் அவனவன் வேலையை மட்டும் பார்த்தாலே ரொம்ப நல்லா இருக்கும். அதைவிட்டுட்டு அடுத்தவன் என்ன பண்றான்? அவனை எப்படிக் குறைச் சொல்லலாம்னு சுத்துறாங்க மச்சான். ஏன் நமக்குத் தெரியாதா? இப்படி ஒரு வாரம் ஊருக்குவரதுல இருக்கும் சிக்கல் எல்லோரைக்காட்டிலும் நமக்கு தான் முழுசாகத் தெரியும். ஏன்னா நாம தான் கஷ்டப்படணும். ஆனாலும் ஃப்ரீ அட்வைஸ் கொடுக்க மட்டும் எல்லோரும் வந்திடுறாங்க" என்றான் ஜிட்டு. எல்லோரும் அவனை விந்தையாகப் பார்க்க,"மச்சான் கடைசியில என்னையும் சீரியஸா பேச வெச்சிடீங்களேடா?" என்றதும் எல்லோரும் சிரிக்க மனம் சற்று இலகுவானது போல் தோன்றி அனைவரும் கண்ணையர்ந்தனர்.
மறுநாள் விடியற்காலையில் அவர்கள் பயணித்த வண்டி கௌஹாத்தியை வந்தடைந்தது. ஏற்கனவே அவர்கள் தங்கியிருந்த அதே ரிசார்ட்டுக்கு மீண்டும் வந்தனர். நீண்ட நெடிய சாலைப்பயணம் அவர்கள் அனைவருக்கும் தீரா அலுப்பைத் தந்தது என்றால் அது மிகையில்லை. தூக்கக்கலக்கத்திலே அவரவர் தத்தம் அறைக்குள் சென்றனர். அவர்களுக்காக திவேஷும் அங்கேயே தங்கியிருந்தான்.அவனும் அவர்களோடு சென்று உறங்கினான். அனேஷியா அண்ட் டீமும் கிட்டத்தட்ட அவர்களின் வேலையை முடிக்கும் தருவாயில் இருந்தனர். ஆனாலும் போட்டத்திட்டத்தைத் தாண்டி இரண்டு நாட்கள் அதிகமானது. அதனால் அவர்கள் செவ்வாய் இரவு தான் இங்கிருந்து புறப்படப் போகிறார்கள். நேற்றைய இரவின் பயணக் களைப்பு மற்றும் இந்த விடுமுறையின் நிறைவுப்பகுதியை நெருங்கியதால் ஏற்பட்ட அந்தப் பிரிவின் உணர்வுகள் ஆகியவை அவர்கள் அனைவரையும் ஆட்கொண்டிருந்தது. காலையில் வழக்கம் போல் திவேஷ் அவனின் நடைப்பயிற்சிக்காக சீக்கிரமே விழித்துக்கொண்டவன் அந்த ரிஸார்ட்டிலே அவனது ஜாகிங்கை தொடர்ந்தான். வரிசையாக ஒவ்வொருவராய் விழித்தனர்.
இன்று அவர்கள் வருவதை அறிந்திருந்த ஜெஸ்ஸி மற்றும் ரேஷு இருவரும் எழுந்து தங்கள்,'செம்புலம் பெயல் நீர்போல் கலந்த அன்புடைய நெஞ்சங்களைத் தேடி' வந்துவிட்டனர். செபா மற்றும் தியா ஓரறையிலும் துவாரா, துஷி மறு அறையிலும் இருக்க செபா என்று நினைத்து தியா மீது ஜெஸ்ஸி தண்ணீரை ஊற்றிவிட நல்லவேளையாக அங்கே 'காதல்காரி' அவளது காதல்காரனை சரியாகக் கண்டுபிடித்து எழுப்பியிருந்தாள். தண்ணீர் ஊற்றப்பட்டதால் அலறியடித்து விழித்த தியா ஜெஸ்ஸியைப் பார்த்து முறைத்து, அந்தக் கோவத்தை செபாவுக்கு ஒரு உதையில் கடத்தியிருந்தான். அதில் துள்ளியெழுந்த செபாவைப் பார்த்து கிளுக்கெனச் சிரித்தாள் ஜெஸ்ஸி.
"ஒழுங்கா புருஷனும் பொண்டாட்டியும் வெளியப் போய் ரொமான்ஸ் பண்ணுங்க. மனுஷன் நிலைமை தெரியாம வயித்தெரிச்சலைக் கிளப்பிட்டு இருக்கீங்க?" என்று தனது ஆதங்கத்தை வார்த்தையாகச் சொல்லி மீண்டும் நித்திராதேவியைச் சரணடைந்தான்.
"எனக்கொரு போன் பண்ணியிருக்க வேண்டியது தானே ஜெஸ்ஸி?" என்றவனுக்கு முறைப்பையே பதிலாகத் தந்து,"அதுக்கு போன் ஸ்விட்ச் ஆன்ல இருக்கனும்" என்றதும் தன்னுடைய அலைபேசியை எடுத்து உயிர்ப்பித்தவன்,"பைவ் மினிட்ஸ் நான் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்" என்று அவன் நகர அவன் இல்லாளோ அவனுக்காக வெளியே காத்திருந்தாள்.
அந்த வேளையில் தான் மிரு மற்றும் யாழ் இருவரும் எழுந்து ரெடி ஆகி அங்கே வந்தனர். அவர்கள் ஜெஸ்ஸியைப் பார்த்து கலாய்த்துக்கொண்டிருக்க ஜெஸ்ஸியோ எம்பேரெசில் நெளிந்தாள்.
காதல் காதல் காதலில் நெஞ்சம் கண்ணாமூச்சி ஆடுதடா
தேடும் கண்ணில் படபடவென்று பட்டாம்பூச்சி ஓடுதடா
காதல் மட்டும் புரிவதில்லை காற்றா நெருப்பா தெரிவதில்லை
காதல் தந்த மூர்ச்சை நிலை நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை

என்று பாடலாகப் பாடி அவளை மேலும் வம்பிழுக்க அப்போது அங்கே பிரவேசித்த அவளின் நாயகன் அவளோடு சற்று நடக்கத் தொடங்கினான். அப்போது தான் மற்றொரு அறையிலிருந்து ரேஷோடு துஷி வெளியேற,"அடுத்த ஆடு சிக்கிடுச்சி" என்ற யாழ் அவர்களை கையசைத்து இங்கே அழைத்தாள்.
"ஆஹா இப்போ எதுக்கு வில்லங்கம் வான்டேடா கூப்பிடுது?" என்று முனகியபடியே துஷி ரேஷாவைப் பார்க்க, இருவரும் யாழை நோக்கிச் சென்றனர்.
"என்னமா எங்களை அதுக்குள்ள மறந்துட்டியா?" என்றாள் யாழ் ரேஷாவைப் பார்த்தபடி.
"ஐயோ அப்படியெல்லாம் இல்லை. நீங்க தூங்கிட்டு..." என்று இழுத்த ரேஷாவைத் தடுத்து,"எனக்கு இந்த வாங்க போங்கங்கற வெட்டி மரியாதை எல்லாம் வேண்டாம். நீ என்னை வா போனு கூப்பிடலாம்"
"இல்ல பரவாயில்லை" என்று ரேஷா மீண்டும் பேசத் தொடங்க,"ஐயோ கண்ணு நீ மரியாதை தரதுக்காக என்கிட்டயேயும் அதை எதிர்பார்க்கக் கூடாது. நான் உன்னை வா போனு தான் கூப்பிடுவேன்" என்றவள் துஷியிடம் திரும்பி,"ஏன்டா எத்தனை நாள் சொல்லியிருப்பேன் காலையில எழுந்து கொஞ்சம் நடன்னு. நான் சொல்லும்போதெல்லாம் இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுட்டு இப்போ?" என்று ரேஷாவைப் பார்க்க அங்கே துஷியோ இருவருக்கும் இடையில் சிக்கிக்கொண்டு,"ஆஹா காலையிலே என்னமோ திட்டம் தீட்டிட்டாப் போலயே? என்னை இப்படி நெருக்கடியில் தள்ளி நான் தத்தளிக்கிறதைப் பார்க்க உனகென்னடி அப்படி ஒரு ஆனந்தம்?" என்று முனகியவன் யாழைப் பார்க்க அப்போது ரட்சகனாய்த் தோன்றிய துவாரா யாழை அழைக்க அந்த கேப்பில் ரேஷை இழுத்துக்கொண்டு ஓடினான் துஷி.
"ஏன்டா இப்படிப் பண்ண? அந்த துஷி பையனைக் கொஞ்சம் கடுப்பேத்தலாம்னு இருந்தேன்" என்று உச் கொட்டியவளின் முக பாவனையில் சிரித்தவன்,"பாவம் யாழ் அவன். அவனை ஏன் எப்போவும் ஒரு டென்ஷன்லயே வெச்சியிருக்க?" என்றான்.
"அவன் இன்னும் மாறவேயில்லை துவாரா. ஒரு முடிவை ஸ்ட்ராங்கா எடுக்கணும். அதுல உறுதியா இருக்கனும். அப்படியில்லாம எல்லோரையும் சமாதானம் செய்யணும் இல்ல எல்லோருக்கும் நல்லவனா இருக்கணும்னே நினைக்கிறான். ஏன் வந்தவன் நான் கொஞ்சம் பேசிட்டு வரேன்னு சொல்லிட்டுப் போக மாட்டானா? எங்க அப்படிச் சொன்னா நான் தப்பா எடுத்துப்பேனோனு தயங்கி எனக்காகவும் பேசமுடியுமா அவளுக்காகவும் பேசமுடியுமா முழிக்கிறான்" என்றாள்.
"புவனா ஒரு கேள்விக்குறி மாதிரி, யாழ் எப்போதும் ஒரு ஆச்சரியக்குறியாவே இருக்கியே எப்படி?" என்றான்.
"சிலருக்கு எப்போதும் ஒரு சேஃப் ஜோனிலே (ஒரு பாதுகாப்பானப் பகுதி) இருக்கப் பிடிக்கும். யா பெரும்பாலானோர் அப்படித் தான் இருக்கோம். ஆனா சேஃப் ஜோன்ல என்ன சுவாரசியம் இருக்குச் சொல்லு? அதொரு ரொட்டின் லைஃப். வாழ்க்கை ஆச்சரிங்களால் நிரம்பப்பட்டவை. அதொரு மேஜிக் பாக்ஸ் போல. உள்ள நிறைய இருக்கு. சிலது சந்தோஷமும் தரலாம் சிலது வருத்தமும் தரலாம். ஏன்னா இந்த உலகம் முழுக்க ஒரு பட்டர்பிலை எபெக்ட் போன்றது (butterfly effect -ஓரிடத்தில் நிகழும் ஒரு சிறிய மாற்றம் கூட மற்றொரு இடத்தில பெரிய மாற்றங்களை ஏற்படுத்தகூடியது.ஒரு தொடர் சங்கிலி போல) எங்கேயோ ரெண்டு தனிப்பட்ட நபர்களுக்குள்ளான ஈகோ (அமெரிக்கா ஜனாதிபதிக்கும் ஈரானின் அதிபருக்கும்) நம்ம நாட்டு பெட்ரோல் விலையை நிர்ணயிக்கிறது போல.அந்த பெட்ரோல் விலை மாற்றங்கள் இதர அத்தியாவிசயப் பொருட்களின் விலையைப் பாதிக்குது. நம்ம நாட்டு ரூபாயின் மதிப்பை நிர்ணயிக்கிறது.அதனால் எங்கேயோ ஒரு மூலையில் பரம ஏழையாக இருப்பவரின் அன்றாடத் தேவையான உணவின் விலை மாற்றமடைகிறது . இப்போ நீ யாரை குறை சொல்லுவ? யாரையும் குறை சொல்ல முடியாது. நீ தான் எல்லா சூழலிலும் வாழ பழகணும். அதுக்கு சேஃப் ஜோன்ல இருந்து வெளிய வரணும். புரியுதா?"
"சும்மா ஒரு கேள்வி தானே கேட்டேன்? அதுக்கெதுக்கு பாலிடிக்ஸ், எக்கனாமிக்ஸ் தத்துவம்னு எங்கெங்கயோ போயிட்ட?" என்றான் துவாரா.
"என்னெமோ பேசணும்னு தோணுச்சு. விவான் நித்யா கூட டைம் ஸ்பென்ட் பண்ண நெனச்சி எடுத்த ஒரு முடிவு இங்க எத்தனை பேரோட வாழ்க்கையை மாற்றியிருக்கு. நீ அனி, துஷி, ஜெஸ்ஸி, தியா, மிரு, ரேஷு, செபானு அது போயிட்டே இருக்கு. இதனால் உன் குடும்பம் அவங்க எல்லோருடைய குடும்பம்னு எத்தனை தொடர்பு? சரி வா" என்று அவனை அழைத்தாள். அப்போது ஒவ்வொருவராய் அங்கே கூடினார்கள். read 60(2)
 
கவலை படாத திவேஷ், அனு உனக்குத்தான் ?
கல்யாண வயசுல கல்யாணம் செய்தால் சீவல் ? செய்யலைன்னா செதறல் ?. Nice update.
 
Top