நீள்மதியின் யெளவனமே - 5

Advertisement

அத்தியாயம் 5


பூம்பொழில் கிராமத்தில் கார்முகிலனின் வரவுக்காக வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்த செந்தாமரையின் மனம் சொல்ல முடியாத பயத்திலும் பதற்றத்திலும் தவித்துக் கொண்டிருந்தது.

அவரது முகத்தில் இருந்த கவலையை பார்த்த காவேரி, கையில் காபி டம்ளருடன் அவரருகே வந்து நின்றார்.

“அண்ணே... இந்த காபியைக் கொஞ்சம் குடிங்க.” என்று அவர் கையில் திணித்தார்.

ஆனால் அதை குடிக்காமல் சிந்தனையில் மூழ்கியபடி அமர்ந்திருந்த செந்தாமரையை பார்த்த காவேரி கவலையுடன் கேட்டார்.

“என்ன அண்ணே, இப்படி இடிஞ்சி போய் உட்கார்ந்து இருக்கீங்க? என்ன ஆச்சு? நேத்துதான் கார்முகிலன் கல்யாணத்தைப் பற்றி பேசினீங்க. அதுக்குள்ள இவ்வளவு அவசரமா நேரிலேயே வந்திருக்கீங்க. உங்க முகமே சரியில்லையே. ஏதாவது பெரிய பிரச்சனையா அண்ணே?”

செந்தாமரையால் எதுவும் சொல்ல முடியவில்லை.

அவர் மெதுவாக தலையை மட்டும் அசைத்தார்.

அந்த நேரத்தில் வெளியே கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

இருவரும் திரும்பிப் பார்த்தனர்.

அங்கு கார்முகிலன் உள்ளே வந்துகொண்டிருந்தான்.

கால்களைக் கழுவிக்கொண்டு வீட்டிற்குள் வந்தவன் செந்தாமரையை பார்த்ததும் புன்னகையுடன்,

“வாங்க மாமா... எப்போ வந்தீங்க?” என்று கேட்டான்.

செந்தாமரையும் தன்னை இயல்பாக காட்ட முயன்று,

“இப்போதான் மாப்பிள்ளை. நீ எப்படி இருக்க? வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?” என்று கேட்டார்.

“ஹ்ம்ம்... நல்லா போயிட்டு இருக்கு மாமா.” என்று கூறியவன் அவரது முகத்தை கவனித்தான்.

“சொல்லுங்க மாமா, என்ன திடீர்னு ஊர் பக்கம்? அரசியலுக்குப் போன பிறகு இங்க வரதே இல்லையே. சொந்த ஊரையே மறந்துட்டீங்களா? இப்போதான் எங்கள ஞாபகம் வந்துச்சா?” என்று சிறிய கிண்டலுடன் கேட்டான்.

கார்முகிலனின் கேள்வியில் செந்தாமரையின் முகம் ஒரு நொடி மாறியது.

ஆனால் உடனே தன்னை சமாளித்துக் கொண்டவர்,

“இல்ல மாப்பிள்ளை. எப்பவும் வரணும்னுதான் நினைப்பேன். அதுவும் தங்கச்சிக்கிட்ட மீனாட்சி அடிக்கடி பேசுவா. என்னாலதான் சரியா பேச முடியல. கட்சி மீட்டிங், வேலைன்னு ரொம்ப பிஸியா போயிடுச்சு.” என்று மழுப்பலாக கூறினார்.

அதை கவனித்த கார்முகிலன்,

“வேலைன்னா எல்லாருக்கும் தான் மாமா. ஆனா உறவு, ஊரு, பாசம் இதையெல்லாம் மொத்தமா விட்டுட்டு போக முடியாதுல.” என்றான்.

அந்த வார்த்தையில் இருந்த அர்த்தத்தை புரிந்துகொண்ட செந்தாமரை,


அதான் மாப்பிள்ளை... அந்த உறவை விட முடியாமத்தான் நான் இங்க வந்திருக்கேன்.” என்றார்.

“ஓ... அதுக்குத்தான் இவ்வளவு சீக்கிரமா வந்தீங்களா?” என்று கார்முகிலன் மீண்டும் கிண்டலாக கேட்டான்.

அதில் இருந்த கிண்டல் புரிந்தாலும் செந்தாமரை எதையும் காட்டிக்கொள்ளவில்லை.

“ஆமா மாப்பிள்ளை. அது மட்டும் இல்ல. நேத்து போன்ல தங்கச்சிக்கிட்ட உன் கல்யாணத்தைப் பற்றி பேசினேன். உன்கிட்ட சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.”


ஹ்ம்ம்... சொன்னாங்க மாமா.”

“நீ என்ன சொல்ற மாப்பிள்ளை? உனக்கு விருப்பமா?” என்று ஆர்வத்துடன் செந்தாமரை கேட்டார்.

கார்முகிலன் பதில் சொல்ல வருவதற்கு முன்பே காவேரி முந்திக்கொண்டு,

“அவன் என்ன அண்ணே சொல்லப் போறான்? நம்ம விருப்பம்தான் அவன் விருப்பம். மதி மாதிரி ஒரு பொண்ணு கிடைக்குறது பாக்கியம்.” என்றார்.

அதைக் கேட்ட கார்முகிலன் எரிச்சலுடன், “ம்மா! என்று அழைத்தான்.

“நேத்தே என்னோட முடிவு தான்னு சொல்லிட்டல ? அப்புறம் ஏன் என்கிட்ட கேட்கணும்மானு சொல்றீங்க? நீங்களா கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க? நான் தானே? அப்போ நான் தானே விருப்பம்மா இல்லையான்னு சொல்லணும்? " என்றான்.

அவனது குரலில் இருந்த கடுமை காவேரியை ஒரு நொடி அமைதியாக்கியது.

“அது இல்ல ராசா. நம்ம மதி ஆச்சே. நல்ல பொண்ணு. நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு. உனக்கும் பிடிக்கும் நினைச்சுதான் கேட்டேன்.” என்று தயக்கத்துடன் கூறினார்.

சில நொடிகள் அமைதியாக நின்ற கார்முகிலன், உறுதியான குரலில்,

“இல்லம்மா. எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்ல.” என்றான்.

அதுவரை அமைதியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த செந்தாமரை மெதுவாக எழுந்து நின்றார்.

ஏற்கனவே நீள்மதியை பற்றிய பயமும் கவலையும் அவரது மனதை அழுத்திக்கொண்டிருந்த நிலையில், கார்முகிலனின் மறுப்பு அவரை மேலும் உடைத்தது.

அதை பார்த்த காவேரி பதறியபடி,

“அண்ணே... அவன் ஏதோ யோசிக்காம சொல்றான். நீங்க வேதனைப்படாதீங்க. நான் பேசுறேன் அவன்கிட்ட.” என்றார்.

ஆனால் கார்முகிலன் உடனே மறுத்தான்.

“இல்லம்மா. நீ எத்தனை தடவை கேட்டாலும் என் முடிவு மாறாது. மதி நல்ல பொண்ணுதான். அவளை நான் குறை சொல்லல.”

சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் தொடர்ந்து,

“சின்ன வயசுல இருந்து என் கூடவே சுத்திட்டு இருந்த மாமா பொண்ணு அவள். அவள் மேல பாசம் இருக்கு. ஆனா அதுக்காக அவளை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை எனக்கு வரல.”

அந்த வார்த்தையை கேட்ட காவேரியின் பொறுமை உடைந்தது.

“ஏன்டா இப்படி பிடிவாதம் பிடிக்கிற? இன்னும் எவ்வளவு நாள் அந்த ராசி கெட்ட சிறுக்கிய நினைச்சிட்டு இருக்கப் போற?”என்று கோபமாக கேட்டார்.

“எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா? எல்லாமே எனக்கு தெரியும். கட்டின ரெண்டே நாளில் தாலி அறுத்து வந்தவளை பார்த்ததும் இன்னும் அவளுக்காக நீ உருகுறது எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா?” அவரது வார்த்தைகள் கடுமையாக வெளிவந்தன.

“அதுக்காகத்தான் உன்னோட கல்யாணத்தை இவ்வளவு நாள் தள்ளிப் போட்டுட்டு இருக்கியா? நான் உயிரோட இருக்கிற வரைக்கும் அந்த பொண்ணு இந்த வீட்டின் வாசலை மிதிக்க விட மாட்டேன்.” என்று ஆக்ரோஷமாக கூறினார்.

அந்த வார்த்தைகள் கார்முகிலனின் கோபத்தை தூண்டின.

அவன் திடீரென்று எழுந்து நின்றான்.

“ம்மா!” என்ற அவனது கர்ஜனையில் அந்த வீடே ஒரு நொடி அமைதியானது.

“என்ன பேச்சு பேசுறீங்க? அதுவும் ஒரு பெண்ணைப் பற்றி இப்படி பேசுவீங்களா?”

அவனது கண்கள் கோபத்தில் சிவந்திருந்தன.

"இனிமேல் ஒரு வார்த்தை கூட அவளைப் பற்றி தப்பாக பேசுனீங்க... அவ்வளோதான்.”

என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கூறியவன், மேலும் ஒரு நொடி கூட அங்கு நிற்க விரும்பாமல் வேகமாக படிகளை ஏறி தனது அறைக்குச் சென்றுவிட்டான்.

அவன் சென்ற திசையையே அதிர்ச்சியுடன் பார்த்தபடி நின்றார் காவேரி.

ஏனெனில் அவர் இதுவரை பார்த்த கார்முகிலன், ஒரு நாளும் தன்னிடம் இப்படி குரலை உயர்த்தி பேசியதில்லை.

அவன் கண்களில் தெரிந்த அந்த கோபம் வெறும் பிடிவாதம் அல்ல; பல வருடங்களாக மனதுக்குள் புதைத்து வைத்திருந்த வலி, காதல் மற்றும் ஏமாற்றத்தின் வெளிப்பாடாக இருந்தது.

ஆனால் அமைதியாக நின்ற செந்தாமரையின் மனதில் வேறொரு போராட்டம் நடந்துகொண்டிருந்தது.

கார்முகிலனின் மறுப்பு ஒருபுறம் இருந்தாலும், இப்போது அவரை அதிகமாக பயமுறுத்தியது நீள்மதியின் வாழ்க்கையை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்த புயல்தான்.

அந்த உண்மை இன்னும் அங்கு இருந்த யாருக்கும் தெரியவில்லை.

************************************

சென்னையில்....

ஸ்கார்பியோ பூம்பொழிலை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்தது.

காரின் உள்ளே நிலவிய அமைதி நீள்மதிக்கு இன்னும் அதிகமான அழுத்தத்தை கொடுத்தது.

தனபால் எதுவும் பேசவில்லை.

நீள்மதியும் எதுவும் கேட்கவில்லை.

ஏனெனில் தன் கேள்விகளுக்கு இப்போது பதில் கிடைக்காது என்பதை அவள் உணர்ந்திருந்தாள்.

ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்த நீள்மதியின் மனம் முழுவதும் கேள்விகளால் நிரம்பியிருந்தது.

"ரிஷவ் பற்றி அப்பாவுக்கு என்ன தெரியும்?" என்ற கேள்வியே அவளை விடாமல் துரத்தியது.

அந்த நேரம் அவளது கைப்பேசி ஒலித்தது.

திரையில் தெரிந்த ' ரிஷவ் ' என்ற பெயரை பார்த்ததும் அவளது இதயம் ஒரு நொடி துடித்தது.

ஆனால், அவளது விரல்கள் அழைப்பை ஏற்க தயங்கின. அப்பாவை சந்தித்த பிறகு எல்லாவற்றையும் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தவள், அழைப்பை துண்டித்தாள்.

அதே நேரம் மறுபக்கம்...

ரிஷவன் தனது கைபேசியை பார்த்துக்கொண்டே நின்றான்.

அவள் அழைப்பை துண்டித்ததை உணர்ந்த அவனது முகம் இறுகியது.

உடனே ஒரு எண்ணை அழைத்தான்.

“சார்... அவங்க பூம்பொழில் கிராமத்துக்கு போயிட்டு இருக்காங்க.” மறுமுனையில் இருந்தவன் கூறினான்.

ரிஷவனின் கண்கள் கோபத்தில் இருண்டன.

“நீள்மதி... நீ இப்படி பண்ணி இருக்கக்கூடாது.”என்று பற்களைக் கடித்தபடி கூறியவன், வேகமாக தனது காரில் ஏறினான்.

சில நிமிடங்களில்...

தனபால் சென்றுகொண்டிருந்த காரின் முன் கருப்பு நிற ஜாகுவார் குறுக்கே வந்து நின்றது.

திடீரென பிரேக் அடிக்கப்பட்டது.

“என்னாச்சு?” என்று தனபால் பதற்றமாக கேட்டார்.

கார் கதவு திறந்தது.

அதிலிருந்து இறங்கியவனை பார்த்த அடுத்த நொடி...

நீள்மதியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

“ரிஷவ்...?”

ஆனால் ரிஷவனின் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

“மதி... கீழே இறங்கு.” அவன் கட்டளையாக கூறினான்.

“ரிஷவ், நீங்க எப்படி இங்க? இப்போ நான் அப்பாவைப் பார்க்கத்தான் போயிட்டு இருக்கேன். போயிட்டு வந்து உங்ககிட்ட பேசுறேன்.” என்று பதற்றமாக கூறினாள்.

“போயிட்டு திரும்பி வருவியா?” என்று நக்கலாக கேட்டான்.

“ஆமா கண்டிப்பா. ஏன் இப்படி கேட்குறீங்க?”

“எப்படி உன்னை நம்புறது?”

“ரிஷவ்...?”என்று அதிர்ச்சியாக பார்த்தாள்.

“பின்ன என்ன? வரேன்னு சொல்லிட்டு, சொல்லாம கொள்ளாம இப்படி ஊரை விட்டு போய் வேறொரு கல்யாணம் பண்ணிக்க போற உன்னையா நான் நம்பணும்?”

“என்னது? வேற கல்யாணமா? அதுவும் நானா?” என்ற அவளது முகம் கோபத்தில் மாறியது.

“ரிஷவ், போதும். ரொம்ப அபாண்டமா பேசுறீங்க. உங்களை பார்க்க வரேன்னு சொல்லிட்டு வராம, என்னோட அப்பாவைப் பார்க்கத்தான் போறேன். தப்பு தான். ஆனா வேற எங்கும் நான் போகல. நீங்க சொல்ற மாதிரி கல்யாணம் பண்ணிக்கவும் போகல.” என்று கடுமையாக கூறினாள்.

“ஓ... அப்படியா மிஸ்டர் தனபால் ?” என்று கூறியவன் தனபாலை நோக்கி திரும்பினான்.


அவனை பார்த்தப்படியே "தனபால் அங்கிள், அப்பாவ பார்க்க மட்டும் தானா கூட்டிட்டு போறீங்க?”

“ஆமாம்மா.” என்று தயக்கத்துடன் தலையசைத்தார் தனபால்.

ரிஷவன் கசப்பாக சிரித்தவன் .“அதோட சேர்த்து உன்னோட மாப்பிள்ளையையும் பார்க்க கூட்டிட்டு போறாருன்னு சொல்லவே இல்லையே மிஸ்டர் தனபால்?”

“என்ன சொல்றீங்க ரிஷவ்?” என்று அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள் நீள்மதி.

“அங்கிள், அவர் சொல்றது உண்மையா? சொல்லுங்க.”

தனபால் அமைதியாக நின்றார்.

அந்த அமைதியே நீள்மதியின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

“ஓ... அப்போ நான் சொல்றதை நம்ப மாட்டியா?” என்று ரிஷவன் இறுக்கமாக கேட்டான்.

“இப்போதான் போன்ல கூட என்னை முழுசா நம்புறேன்னு சொன்ன. ஆனா இப்போ ஒரு நொடியிலே மாறிட்டியா மதி? இதுதான் உன்னோட காதலா?” என்று ஏளனமாக கேட்டான்.

“இல்ல ரிஷவ்... அப்படி இல்ல.” என்று கண்கள் கலங்க கூறினாள்.

“உங்களை நம்பாம நான் எப்படி இருப்பேன்? அப்பா இப்படி செய்வாரான்னு அதிர்ச்சியில் தான் கேட்டேன்.”

ரிஷவனின் பார்வை சற்று கூர்மையானது “என்ன நம்புற தானே நீ?”

“ஹ்ம்ம்.” என்று தலையசைத்தாள்.

“அப்போ நான் சொல்றதை செய்.”

“என்ன செய்யணும் ரிஷவ்?”

“இப்போவே என்னோட கிளம்பி வா, மதி.”

அவளது முகம் மாறியது.

“இப்போவா? அதுவும் உங்களோடவா? எப்படி ரிஷவ்? நான் அப்பா கிட்ட பேசிட்டு வரேன். ப்ளீஸ், நான் சொல்றதை கேளுங்க.”

“நோ, மதி. நோ.” என்று அழுத்தமாக கூறினான்.

“உன்னை உங்க அப்பாவை பார்க்க நான் விட மாட்டேன். நீ அங்க போகவே கூடாது.”

“ஏன் இப்படி சொல்றீங்க? அப்பா ஒன்னும் அவ்வளவு மோசமானவர் இல்ல ரிஷவ்.”

அதைக் கேட்டவன் சத்தமாக சிரித்தான். “அப்படியா? உங்க அப்பா நல்லவராவே இருக்கட்டும். ஆனா நான் இப்போ கேட்டவன் மட்டுமில்ல கேடு கெட்டவனும் கூட.. அதனால நீ என்னோட வரணும். இல்லன்னா உன்னை தூக்கிட்டு போயிடுவேன்.”

“ரிஷவ்! திஸ் இஸ் டூ மச்.” அவள் கண்களில் கண்ணீர் தேங்கியது.

“என்ன பிஹேவியர் இது? உங்ககிட்ட நான் இதை எதிர்பார்க்கல. நீங்களும் அப்பாவும் ஒரே மாதிரிதான். என்னை கட்டாயப்படுத்துறீங்க. எனக்குன்னு ஒரு மனசு இருக்கு. அதை புரிஞ்சிக்கவே மாட்டீங்களா?”

அவளது வார்த்தைகள் ரிஷவனின் முகம் மீண்டும் கடினமானது.

“அந்த மனசு எனக்கு சொந்தமானது தானே மதி? இல்லை வேற யாருக்காவது கொடுக்க ஆசைப்படுறியா? அதனால்தான் அந்த ஊருக்கு போக இவ்வளவு ஆர்வமா இருக்கியா?”

அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் கூர்மையான கத்தியாய் அவள் மனதை குத்தியது.

“போதும் ரிஷவ். இனி ஒரு வார்த்தை கூட பேசாதீங்க. நான் யாரோடவும் வர மாட்டேன்.” என்று கூறிவிட்டு வேகமாக சாலையை நோக்கி நடந்தாள்.

அவளை தடுக்க செந்தாமரையின் ஆட்கள் பின்னால் செல்ல முயன்றனர்.

ஆனால் அடுத்த சில நொடிகளில் ரிஷவன் அவர்களை அடித்து கீழே தள்ளிவிட்டான்.

அதை அதிர்ச்சியுடன் பார்த்த நீள்மதி ஏதோ புரியாமல் நின்றாள்.

அடுத்த நொடி அவளை இடையோடு தூக்கி தனது தோளில் போட்டுக்கொண்டான் ரிஷவன்.

“ரிஷவ் விடுங்க! என்னை விடுங்க!”

அவள் அடித்தும் கத்தியும் போராடினாள். ஆனால் அவளது கண்ணீரையும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் காரின் அருகே வந்த ரிஷவன், கதவைத் திறந்து அவளை உள்ளே அமரவைத்தான். அவள் மீண்டும் வெளியே வர முயன்றதும், கதவை இறுக மூடியவன் மறுபுறம் சென்று ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான்.

“ரிஷவன்! இது ரொம்ப தப்பு.” என்று தனபால் முன்னே வந்தார்.

ரிஷவன் அவரை கூர்மையான பார்வையுடன் பார்த்தான்.

“தப்பு யார் செய்தது என்று இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்.”

“என்ன சொல்ற ரிஷவ்?”

“உங்களுக்கு நல்லாவே புரியும்.” என்று கூறிவிட்டு பின்னால் திரும்பி நீள்மதியை பார்த்தான்.

நீள்மதியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“நான் நம்பிய ரிஷவ் இப்படி இல்லை.” அந்த வார்த்தை ஒரு நொடி அவனது இதயத்தை அசைத்தது. ஆனால் அதை வெளியில் காட்டவில்லை.

“நீ நம்பியது யாருன்னு உனக்கு இன்னும் தெரியாது.” என்று குளிர்ந்த குரலில் கூறினான்.

“ரிஷவ்... வேண்டாம். விடுங்க. நான் உங்களோட வர மாட்டேன்.”என்று அழுதபடி கத்தினாள்.

உங்களோடு வரமாட்டேன் என்ற வார்த்தைகள் அவனின் கோவத்தை தூண்ட “கத்தாத.” என்று சீற்றமாக கூறினான்.

அந்த ஒரு வார்த்தையில் கோபம் இல்லை. ஆனால் கட்டளை இருந்தது.

“ஏன் இப்படி பண்ற ரிஷவ்?” அவளது குரல் உடைந்தது.

சில நொடிகள் அமைதியாக அவளை பார்த்தவன்,

"நீயும் உங்க அப்பாவைப் போலவே நம்பிக்கை துரோகிதான். அதனால இனிமேல் உன்னையும் நான் நம்ப மாட்டேன்.” என்று கூறியவனின் கண்களில் கோபத்தை தாண்டி ஒரு ஆழமான வலி மறைந்திருந்தது.

அதை உணர முடியாமல் நீள்மதி கண்ணீரோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

கார் சக்கரங்கள் சாலையை கிழித்துக்கொண்டு முன்னேறின.

அந்த சக்கரங்களின் வேகத்தோடு, நீள்மதியின் வாழ்க்கையும் அவள் நினைக்காத திசையை நோக்கி திரும்பத் தொடங்கியது.


தொடரும்.....
 

Advertisement

Advertisement

Back
Top