இந்த பெண் குழந்தைகளை ஏன் பிரிந்தால் இந்த ராதை பாவம் இந்த குழந்தைகள்மனைவி - 14
"அதுக்கு அவசியம் இல்லை அண்ணே... நான் உங்களுக்குப் பாரமா வந்து உட்கார மாட்டேன். என் பொண்ணுங்களையும் இனி இங்க பாரமா விடமாட்டேன். எங்க வாழ்க்கையை நாங்களே பார்த்துக்கிறோம். வாழவே முடியலன்னா... ஒரு பாட்டில் விஷம் வாங்கி நானும் என் பொண்ணுங்களும் குடிச்சிட்டுச் செத்துப் போறோம்!"
"ஆஹா... இந்தத் திமிருக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை! உன் பொண்ணுங்களுக்கு இங்க என்ன குறை கண்ட? மூணு வேளையும் நல்லாத்தானே சோறு போடுறேன்? படிக்க வைக்கிறேன், துணி எடுத்துத் தர்றேன்... அப்புறம் என்ன? ஒழுங்கா உன் வாழ்க்கையைப் பாரு. ஊர்க்காரன் எல்லாம் என் மூஞ்சில காரித் துப்பணும்னு நினைக்கிறியா?"
ராதை அவன் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை. கனகவல்லி அவள் கையைப் பிடித்து இழுத்து, "அண்ணன் சொல்றதைக் கேளு ராதை... மகாவும் சீதாவும் இங்கேயே இருக்கட்டும். நீ போய் மாப்பிள்ளை கால்ல விழுந்தாவது சமாதானமாகி வீட்டுக்குள்ள போயிரு... வா" என்று வற்புறுத்தினாள்.
"ரொம்ப நல்லா இருக்கு உங்க எல்லாரோட நியாயமும்!" இந்தப் பேச்சை எல்லாம் கேட்டுக்கொண்டு உள்ளே வந்த பிரபாகரன், ஆத்திரத்துடன் வெடித்தான்.
ராதையை அணைத்துக் கொண்டு நின்ற அந்தப் பிள்ளைகள் பார்க்கும்போது அவன் நெஞ்சு கனத்தது.
"நீயெல்லாம் ஒரு மனுஷனா டா? அண்ணனா நீ? உன் தங்கச்சி பதிமூணு வருஷமா அந்த வீட்டுல நரக வேதனையை அனுபவிச்சப்ப, ஒரு நாளாவது அங்க போய் அவங்களை எட்டிப் பார்த்து, 'ஏன் என் தங்கச்சியை இப்படி நடத்துறீங்க?'ன்னு ஒரு வார்த்தை கேட்டு இருந்தா, அவ வாழ்க்கையும் அந்தப் பிள்ளைகளோட வாழ்க்கையும் இந்நேரம் நல்லா இருந்திருக்கும். நீங்க எல்லாம் மனுஷங்களே கிடையாதுடா!” என்று வார்த்தைகளால் சாடினான்.
“ஏதோ சோறு போட்ட... அதுக்காக இவ்வளவு திமிரா? இங்க பாரு, இங்க இருக்கிற சொத்துல ராதைக்கும் சமபங்கு இருக்கு. இது நீ கஷ்டப்பட்டு சம்பாதிச்சதோ இல்ல உங்க அப்பா தேடி வச்சதோ கிடையாது; இது உன் தாத்தா காலத்து சொத்து. பேத்திக்கும் இதுல சரிபாதி உரிமை இருக்கு. அந்த உரிமையை அவள் வந்து கேட்டுடக் கூடாதுன்னு தானே, அவளை அங்கே இருக்கச் சொல்லி நீ அதட்டுற?" பிரபாகரன் கேள்வியில் அனைவருக்கும் நெஞ்சை சுட்டது.
மருதுபாண்டி தன் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு பாய்ந்தான்.
"ஏய்! உன் வேலையை பார்த்துட்டு மரியாதையா வெளிய போ! உனக்கு இங்க என்ன வேலை? அதிகப்பிரசங்கித்தனம் பண்ணாதே!" என்று ஆவேசமாக கத்தினான்.
அவனது குரல் அந்த இடம் முழுவதும் பிரதிபலித்தது.
பிரபாகரன் மெல்லத் திரும்பி ராதையைப் பார்த்தான்.
அவனது கண்கள் கலங்கியிருந்தன. "ராதை, அங்க நடந்த எல்லாத்தையும் நான் கேள்விப்பட்டேன். உன் பெத்த குடும்பத்துல, உன் அம்மா கிட்டயாவது இதையெல்லாம் சொல்லலாம்னு தான் ஓடி வந்தேன். ஆனா இங்க வந்து பார்த்தா, உன் அம்மாவே சரியில்லையேம்மா... பெத்தவளே இப்படி இருக்கும்போது நீ இப்ப என்ன பண்றதா இருக்க?"
பிரபாகரன் ராதையிடம் பேசிக் கொண்டிருந்தாலும், அவனது பார்வை அங்கு திகைத்து நின்றிருந்த அந்த இரண்டு பெண் குழந்தைகள் மீதுதான் நிலைத்து நின்றது. அந்தக் குழந்தைகளின் மிரட்சியான கண்கள் அவனை ஏதோ செய்தது.
"அண்ணா..." ராதையின் குரல் கம்மியது.
"நான் இனிமே யாரையும் நம்பி வாழ போறது இல்ல அண்ணா. என் பொண்ணுங்களை இனி ஒரு நிமிஷம் கூட தனியா விடுறதா இல்ல. இத்தனை வருஷம் என் வாழ்க்கையையும் இந்தத் தாலியையும் காப்பாத்திக்கணும்னு, பிஞ்சுப் பசங்கன்னு கூடப் பார்க்காம இவங்க ரெண்டு பேரையும் பிரிந்து தனியா விட்டுட்டு போனேனே... அது நான் பண்ண பெரிய பாவம் அண்ணா. அந்தப் பாவத்தின் பலனை தான் இன்னைக்கு நான் இப்படி ஒரு பாடு பட்டு, நடுத்தெருவில் வந்து நிக்கிறேன்.” என்றாள் கண்ணீரோடு.
"அங்கேயே செத்து மடிஞ்சிருப்பேன் அண்ணா... ஆனா இந்த ரெண்டு பொண்ணுங்களுக்காகத்தான் நான் உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டு இங்க வந்தேன். இனிமேல் இந்த நரகத்துல என்னால வாழ முடியாது. என் பொண்ணுங்களையும் விட முடியாது. இவங்களை நம்புனா என்னோடு சேர்த்து என் பொண்ணுங்களும் நரகத்தில் வாழனும். ஒருவேளை கஞ்சி குடிச்சாலும் பரவாயில்லை, என் பொண்ணுங்க நிம்மதியா வாழனும். அது போதும் எனக்கு." சொல்லும்போதே அவளது கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக ஓடியது.
பிரபாகரனின் கண்களும் கசிந்தன. ஆணாதிக்க சமூகம் பெண்களை எப்படிக் கையாள்கிறது என்பதை அவன் உணர்ந்தான்.
கணவன் வீட்டில் ஒரு பிரச்சினை என்றால் ஓடி வந்து அழுவதற்கு தாய் வீடு வேண்டும்; தாய் வீட்டில் ஒரு பாரம் என்றால் சாய்ந்து கொள்வதற்கு ஒரு கணவன் வேண்டும்.
ஏதேனும் ஒரு இடமாவது ஒரு பெண்ணுக்குப் புகலிடமாக இருந்தால் மட்டுமே அவளால் நிமிர்ந்து வாழ முடிகிறது. ஆனால், பாவம் ராதை... அவளுக்கு இரண்டுமே வாய்க்கவில்லை.
"அண்ணா, நீங்களாவது எனக்காக பேசினீங்களே, அதுக்கே ரொம்ப நன்றி. நான் ஒன்னும் படிக்காதவ இல்ல... நான் படிச்சிருக்கேன். என் பொண்ணுங்களை என்னால கௌரவமா வளர்க்க முடியும். எனக்கு இனிமே யாருடைய உதவியும் பிச்சையும் வேண்டாம்." உறுதியான குரலில் சொல்லிவிட்டு, தன் இரு மகள்களின் கைகளையும் இறுக்கப் பற்றிக்கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினாள்.
அப்போது கனகவள்ளி வழிமறித்து நின்றார். "ராதை! உனக்குத் திமிர் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. ரெண்டு பொம்பளப் புள்ளைகளை வச்சுக்கிட்டு நீ எங்க போவ? அவங்களை எப்படிப் பாதுகாப்ப? என்ன வீம்பு பண்ணிட்டு இருக்க? மாப்பிள்ளை கால்ல விழுந்துட்டு அடங்கி ஒடுங்கிச் சேர்ந்து வாழறதை விட்டுட்டு, இதுங்களையும் கூட்டிட்டுப் போறயே... இங்க என்ன நடந்துச்சு? வேலை செய்யலைன்னு ராஜு நாலு அடி அடிச்சிட்டா. இனிமே அடிக்க மாட்டா, நான் பாத்துக்குறேன்."
ராதை தன் தாயை ஒரு தீர்க்கமான பார்வை பார்த்தாள். அந்தப் பார்வையில் அத்தனை காலத்து வலியும் கோபமும் கலந்திருந்தது.
"உன்னைப் பொறுத்தவரைக்கும், உன் பொண்ணு புருஷன் வீட்டிலிருந்து 'வாழாவெட்டி'யா வந்துட்டான்னு ஊர்ல யாரும் பேசக்கூடாது... அதுதானே உன் கவலை? அதுக்காக என் பொண்ணுங்க இங்க கொத்தடிமையா சித்ரவதைப் படணுமா? இத்தனை வருஷம் அப்படித்தானே வச்சிருந்தீங்க? 'உன் பையன் நல்லாப் பாத்துக்குவான், நல்லாப் பாத்துக்குவான்'னு என்கிட்ட பொய் சொல்லிக்கிட்டே இருந்தியே... என் பொண்ணுங்க இங்க நரகத்தை அனுபவிக்கும்போது, நான் உயிரோட இருந்து என்ன பண்ணப் போற? இப்படிப்பட்ட கேவலமான வாழ்க்கை எனக்கு எதுக்கு?"
"உன்னை மாதிரி ஒரு தப்பான அம்மாவா வாழ நான் விரும்பல. என் பொண்ணுங்களுக்கு நான் ஒரு நல்ல அம்மாவா இருக்கணும்னு நினைக்கிறேன். இதுவரைக்கும் நான் இவங்களை விட்டுப் பிரிஞ்சு இருந்தது போதும். உன் வேலையைப் போய் பாரு. இதுக்கு மேல என்னைத் தடுத்தீங்க... ஊரைக் கூட்டி நடந்த எல்லாத்தையும் அக்குவேறா ஆணிவேறா சொல்லிடுவேன். இங்க யாருக்கும் எதுவும் தெரியாம இல்ல. இத்தனை வருஷமா என் பொண்ணுங்களை எப்படிக் கஷ்டப்படுத்துனீங்கன்னு இங்க இருக்கிற எல்லாருக்கும் தெரியும். இல்லைன்னா, இப்போவே நின்ன இடத்துல சொத்துல பங்கு கேப்பேன்!"
'சொத்தில் பங்கு' என்ற வார்த்தையைக் கேட்டதும், அதுவரை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராஜி பதறிப்போய் முன்னால் வந்தாள்.
"அவளை விடுங்க அத்தை! வெளியில போய் நாலு இடத்துல சோத்துக்குச் செருப்படி பட்டாதான் இவளுக்குப் புத்தி வரும். தனியா இருந்தா வர்றவன் போறவன் எல்லாம் இவளைக் கேவலமாகக் கேப்பான். அப்புறம் பாருங்க... அவளே தானா நம்ம வீட்டு வாசல்ல வந்து கிடப்பா, இல்லைன்னா அவள் புருஷன் காலைப் பிடிப்பா. விடுங்க அவளை, வாங்க எல்லாரும் உள்ளே போகலாம். இவளுக்குச் சொத்து ஒரு கேடு!" என்று நக்கலாக சொல்லி விட்டுத் தன் குடும்பத்தை இழுத்துக் கொண்டு உள்ளே போனாள்.
பிரபாகரன் அந்தத் சுயநலக் கூட்டத்தை மிக இழிவாக பார்த்தான். "இதுக்கு என் மாமியாரே எவ்வளவோ பரவாயில்லை போலிருக்கே" என்று நினைத்துக் கொண்டே ராதையின் பின்னால் ஓடினான்.
"ராதை! நில்லு... நீ இப்ப எங்க போகப் போற?"
ராதை அப்படியே நின்று, நிதானமாகப் பிரபாகரனைப் பார்த்தாள். அவள் பிறந்ததிலிருந்து இன்று வரை அவள் பின்னால் கெஞ்சிக்கொண்டு யாரும் வந்ததில்லை. யாரோ ஒருவரின் சொல்லுக்கு, யாரோ ஒருவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தே ஒரு இயந்திரத்தைப் போல வாழ்ந்து பழகிவிட்டாள். அது பெண்ணாய்ப் பிறந்த சாபமா என்று அவள் பலமுறை குமுறிய துண்டு.
"தெரியல அண்ணா... எனக்காக இல்லனாலும் என் பொண்ணுங்களுக்காக இனிமேல் நான் வாழ்ந்துதான் ஆகணும். ஆனா ஒன்னு மட்டும் சத்தியமாச் சொல்றேன், இனிமேல் அவரைத் தேடி நான் போக மாட்டேன். அதுக்காகத் தப்பான முடிவையும் நான் எடுக்க மாட்டேன். இதுவரைக்கும் நான் தப்பா மட்டும்தான் முடிவு பண்ணியிருக்கேன். ஆனா, இன்னைக்குத்தான் வாழ்க்கையிலேயே முதல்முறையா ஒரு சரியான முடிவை எடுத்திருக்கேன்னு என் மனசு சொல்லுது அண்ணா."
"அம்மா பேச்சை கேட்டு அவரை விருப்பம் இல்லாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டது முதல் தப்பு; என் அண்ணன் மிரட்டலுக்குப் பயந்து என் ரெண்டு பொண்ணுங்களையும் இந்த வீட்ல விட்டுட்டுப் போனது ரெண்டாவது தப்பு; என் புருஷன் என்னைக்காவது என்னை ஏத்துப்பான்னு என் பொண்ணுங்களைக் கூடப் பார்க்காம 13 வருஷம் காத்திருந்தது மூணாவது தப்பு; படிச்ச படிப்பும் அனுபவமும் இருந்தும் வேலைக்குப் போகாம அந்த வீட்ல கொத்தடிமையா கிடந்தது பெரிய தப்பு அண்ணா.
இதெல்லாம் யாரோ ஒருத்தங்க வார்த்தையைக் கேட்டு நான் எடுத்த தப்பான முடிவுகள். ஸ்ரீராம் தெரிஞ்சு செஞ்சாரோ தெரியாம செஞ்சாரோ, இன்னைக்கு எனக்கு ஒரு நல்லதுதான் பண்ணியிருக்காரு. இனிமேல் நான் என் ரெண்டு பொண்ணுங்களுக்காக மட்டும் வாழப் போறேன். ஸ்ரீராமோட அம்மா மாதிரியோ, இல்ல என்னைப் பெத்த அம்மா மாதிரியோ நான் ஒரு தப்பான உதாரணமா இருக்க விரும்பல.
எனக்கு என் பொண்ணுங்க ரெண்டு பேரும் போதும். அவங்களை நல்லபடியா வளர்த்தாலே போதும். நான் படிச்சிருக்கேன்... நல்ல காலம், என்னுடைய சர்டிபிகேட், என் நகை எல்லாத்தையும் நான் உங்ககிட்டதானே கொடுத்து வச்சிருக்கேன்? எனக்கு அதை மட்டும் இப்போ கொண்டு வந்து கொடுத்துடுங்க அண்ணா. நான் ஏதாவது ஒரு சின்ன வாடகை வீடு எடுத்து என் பொண்ணுங்களைப் பார்த்துக்கிறேன்."
"ராதை, நீ என்கூட வா. நான் உன்னை ஒரு பாதுகாப்பான இடத்துல தங்க வைக்கிறேன். எனக்கே சொந்தமா வீடு இருக்கும்போது நீ எதுக்கு வாடகை வீட்டுக்குப் போகணும்?" என்றான் பிரபாகரன் ஆதங்கத்துடன்.
"வேணாம் அண்ணா. ஸ்ரீராம் என் மேல போட்ட பழியை நான் உண்மையாக்க விரும்பல. அவர் இப்போ முழுக்க முழுக்க 'அம்மா பிள்ளை'யா இருக்காரு. அவர் கண்ணுக்கு நான் செய்றது எல்லாமே தப்பாதான் தெரியும். நீங்க எனக்கு உதவி பண்றது கூட அவருக்கு வேற மாதிரிதான் தெரியும். இதனால உங்க குடும்பத்துக்குள்ள தேவையற்ற பிரச்சினைகள் வரும். எனக்கு அது வேணாம். இன்னைக்கு எனக்கு என் நகையையும் சர்டிபிகேட்டையும் மட்டும் எப்படியாவது கொண்டு வந்து கொடுத்துடுங்க." என்றாள் கை கூப்பி.
தொடரும்......
ராதை உன்ன பெத்தவளும் சரியில்ல கூடப் பொறந்தவனும் சரியில்ல கட்டிக்கிட்டவனும் விளங்காதவன் அந்த குடும்பம் நரகம்,
பிரபாகரன் மட்டும் தான் உனக்கு நல்ல அண்ணன்