மனைவி - 16
"அதையெல்லாம் பார்த்துட்டு இருக்காதே... அங்கே கடையில ஒரு நல்ல டிரஸ் வாங்கிப் பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம். வாங்கம்மா... புது இடத்துல தனியா இருந்தா பிள்ளைங்க பயந்துடப் போறாங்க" என்று பாசத்துடன் அவர்களை அழைத்துச் சென்றான்.
ராதை ஒவ்வொரு பொருளையும் பார்த்துப் பார்த்து வாங்கினாள்.
ஆடம்பரம் எதுவும் இல்லாமல், ஒரு குடும்பத்திற்கு மிகத் தேவையான அடுப்பு, சிலிண்டர், பாத்திரங்கள் மற்றும் ஒரு மிக்ஸி இவற்றை மட்டும் வாங்கிக் கொண்டாள்.
பிறகு பிரபாகரன் அவர்களை ஒரு துணிக் கடைக்கு அழைத்துச் சென்றான். பிள்ளைகளின் நிலையைக் கண்டு முதலில் இரண்டு நல்ல ஆடைகளை எடுத்து நீட்டினான்.
"இதைப் போய் முதல்ல மாத்திட்டு வந்துடுங்கம்மா" என்றான்.
அந்தப் பெரிய கடையில் அவர்கள் நின்றிருந்த கோலத்தைப் பார்த்து அங்கிருந்தவர்கள் முகம் சுளிக்கத் தொடங்கினர். ஆனால் சீதாவும் மகாவும் அதை எதையும் பொருட்படுத்தவில்லை. பிரபாகரன் உரிமையோடு வாங்கிக் கொடுத்தாலும், அவர்கள் கண்கள் தாயின் சம்மதத்திற்காகக் காத்திருந்தன.
"வாங்கிக்கோங்கம்மா" என்று ராதை மெல்லச் சொல்ல, அதன் பிறகே அவர்கள் உடை மாற்றும் அறைக்குள் சென்றனர். அவர்கள் புதிய ஆடைகளை அணிந்து மலர்ச்சியுடன் வெளியே வர, அங்கேயே அவர்களுக்கு இன்னும் சில ஆடைகளைத் தேர்ந்தெடுத்தான் பிரபாகரன்.
"அண்ணா... இதோட பில்லை என்கிட்ட கொடுத்துடுங்க. நான் சம்பளம் வாங்குனதும் எப்படியாவது உங்களுக்குத் திருப்பித் தந்துடுவேன்" என்றாள் ராதை உறுதியாக.
அவன் எதையும் விவாதிக்காமல், "சரிம்மா... பார்த்துக்கலாம்" என்று மட்டும் சொன்னான்.
பிறகு அங்கிருந்து மார்க்கெட்டிற்குச் சென்று காய்கறி, மளிகைச் சாமான்கள் என அனைத்தையும் வாங்கிக் கொண்டனர். இரவு உணவையும் வாங்கிக் கொண்டு, இரவு 8 மணி அளவில் வீடு வந்து சேர்ந்தனர்.
பிரபாகரன் ராதையைப் பார்த்து உருக்கமாகச் சொன்னான், "ராதை, நீ எடுத்த இந்த முடிவை நான் மனதார பாராட்டுறேன். எனக்கு ஒரு பக்கம் பயமா இருந்தது... எங்க ஸ்ரீராமைக் கட்டிப் பிடிச்சு செஞ்சிக்கிட்டு, அழுதுகிட்டு இருப்பியோன்னு நான் நினைச்சேன். ஆனா, நீ ரொம்ப தைரியமான பொண்ணுன்னு என் நம்பிக்கையைக் காப்பாத்திட்ட."
"உன்னுடைய இந்தப் புது வாழ்க்கைக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். உன்னைச் சுத்தி யார் என்ன பேசினாலும் அதைப் பத்திக் கவலைப்படாதே. உன் பொண்ணுங்களுக்காக நீ ஓடிக்கொண்டே இரு. இவங்க ரெண்டு பேரையும் நீ நல்லபடியா வளர்த்து ஆளாக்கு.
ஸ்ரீராம் ஒருநாள் உன்னைத் தேடி வருவான்... அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு" என்றான் பிரபாகரன்.
அதற்கு ராதை தீர்க்கமாகச் சொன்னாள், "எனக்கு அந்த நம்பிக்கை இல்லை அண்ணா. அவர் இன்னொரு கல்யாணம் வேணாலும் பண்ணிக்கட்டும், அதைப் பத்தி எனக்குக் கவலையே இல்லை. இனி எனக்கு என் பொண்ணுங்க மட்டும் போதும்!”
“உனக்கு உன்னுடைய பொண்ணுங்க மட்டும் போதும்னு நினைக்கலாம் ராதை...
ஆனா அந்தப் பொண்ணுங்களுக்கு ஒரு அப்பா வேணும்ல? அம்மாவையே இப்பதான் அவங்க ஒரு நாள் முழுசா கண்ணுல பார்க்குறாங்க. பெத்த தாய் கூடவே இருக்கிற சந்தோஷம் அவங்களுக்கு இப்பதான் கிடைச்சிருக்கு. எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு ராதை, நீங்க எல்லாரும் ஒரு குடும்பமா சீக்கிரமே ஒண்ணு சேருவீங்க. அவன் இத்தனை வருஷம் உன்னை விட்டுத் தூரமா இருந்தவன், அதனால அவனுக்கு எதைப்பத்தியும் நிஜம் தெரியல. இப்போ பக்கத்துல வந்துட்டான்ல... கண்டிப்பா எல்லா உண்மையும் அவனுக்குப் புரியும், சீக்கிரம் புரிஞ்சுக்குவான்!" என்று சொல்லும் பொழுது அவன் குரலில் ஒரு நடுக்கம் இருந்தது.
அந்தப் பழைய கசப்பான விஷயங்களை மீண்டும் மீண்டும் தோண்டி விவாதம் செய்ய அவளுக்கு விருப்பமில்லை. ஒரு பெருமூச்சோடு பேச்சை நிறுத்திக்கொண்டாள்.
ராதை கலங்கிய கண்களுடன் அவரைப் பார்த்து, "நீங்க பண்ண இந்த உதவிக்கு ரொம்ப நன்றி அண்ணா..." என தழுதழுத்தாள்.
"இதெல்லாம் ஒரு உதவியா ராதை? உனக்கு ஒரு நல்ல வேலைக்கு நான் சீக்கிரம் ஏற்பாடு பண்றேன். அதுவரைக்கும் வேற எங்கயும் வேலை தேடிட்டு அலையாத. உன் பிள்ளைங்க கூடவே பத்திரமா இரு. ஏதாவது ஒரு சின்னப் பிரச்சனைனாலும் யோசிக்காம எனக்கு உடனே போன் பண்ணு. அப்புறம் முக்கியமா... நைட்டுல யாரு வந்து கதவைத் தட்டினாலும் நீ கதவைத் திறக்கக் கூடாது. இந்த வராண்டாவில ஒரு இரும்பு கேட் போடச் சொல்லியிருக்கேன். அது வர்ற வரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. அந்த கேட் போட்டுட்டா அப்புறம் எந்தப் பயமும் இருக்காது, சரியா?" என அக்கறையுடன் கூறினான்.
"சரி அண்ணா..." எனத் தலையசைத்தாள் ராதை.
பின்பு அங்கிருந்த சிறுமிகளைப் பார்த்து, "மகா... சீதா... நீங்க ரெண்டு பேரும் இனிமே அம்மாவுக்குத் துணையா, ஒரு நிழல் போல இருக்கணும். உங்க அம்மா இத்தனை வருஷம் வாழ்ந்ததே உங்களுக்காக மட்டும்தான். இதுவரைக்கும் நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டு வாழ்ந்தீங்களோ, அந்த வலியெல்லாம் மறந்துடுங்க. இனிமேல் நீங்க மூணு பேரும் ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க, என்ன புரியுதா?" என்றான்.
அந்த இரு பிஞ்சுகளும் பதில் ஏதும் சொல்லாமல் ஒரு மெல்லிய புன்னகையை மட்டும் சிந்தினர். அந்தப் புன்னகையில் ஆயிரம் துயரங்கள் புதைந்திருந்தன.
பிரபாகரன் அவர்களுக்கு எவ்வளவோ நல்லது செய்திருந்தாலும், அவன் அவர்களுக்கு ஒரு 'பொது மனிதனாகவே' தெரிந்தான்.
அவனிடம் அந்தப் பெண் குழந்தைகளால் அம்மாவிடம் பேசுவது போலச் சகஜமாகப் பேச முடியவில்லை. உள்ளுக்குள் ஒரு தயக்கம்... ஒரு பயம்.
ஆனால், இதுவரை அவன் செய்த உதவிகளை அவர்கள் நன்றியோடு பார்த்தனர். தள்ளி வைக்கவும் முடியவில்லை, கட்டி அணைத்து உறவாடவும் முடியவில்லை. அந்தத் தர்மசங்கடமான நிலையில், ஒரு மெல்லிய புன்னகையோடு அவனை வழி அனுப்பி வைத்தனர்.
தன் மகள்களை ராதை பரிவோடு பார்த்தாள். ஸ்ரீராமைப் பிரிந்து இவ்வளவு தூரம் வந்திருந்தாலும், ஏனோ அந்தப் பிரிவின் வலி அவளுடைய மனதைத் தாண்டி வெளியே வந்து அவளை அழுத்தவில்லை. ஏன் இந்த வலி இல்லை? அவனுடன் வாழ்ந்த திருமண வாழ்க்கை கசந்து போனதாலா? இல்லை, இப்போது தன் உயிரான மகள்களுடன் மீண்டும் இணைந்து விட்டோம் என்கிற அந்த மட்டற்ற மகிழ்ச்சியாலா? அவளால் எதையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் நிஜம்... தன் மகள்களின் வாடிய முகத்தைப் பார்க்கும் பொழுது, 'இவர்களை நான் கண்ணின் இமை போலப் பாதுகாப்பேன்' என்று அவளுக்குள் ஒரு உறுதி பிறந்தது.
அந்தத் தருணத்தில் அவள் ஒரு புதுப் பரிணாமத்தில், ஒரு வீராங்கனையாகவே மாறிக் கொண்டிருந்தாள்.
பிரபாகரனை அனுப்பி வைத்துவிட்டு, சீதா மற்றும் மகா இருவரையும் உள்ளே அழைத்து வந்தாள். "அம்மா இந்தச் சாமான்களை எல்லாம் அடுக்கி வைக்கப் போறேன். நீங்க ரெண்டு பேரும் அதுவரைக்கும் விளையாடிட்டு இருக்கீங்களா?" எனக் கேட்டாள்.
"வேண்டாம் அம்மா... நாங்க ரெண்டு பேரும் உங்களுக்கு ஹெல்ப் பண்றோம்," என அந்தப் பிஞ்சுக் கரங்கள் நீட்டின.
"இல்லடா செல்லம்... நீங்க போய் விளையாடுங்க. அம்மா எல்லாத்தையும் சீக்கிரம் பார்த்துப்பேன், சரியா?" எனச் சொல்லி, அவர்களுக்கு விளையாட ஒரு மூலையில் இடம் ஒதுக்கித் தந்தாள்.
அவள் கைகள் இயந்திரம் போல வேகமாக வேலை செய்யத் தொடங்கின.
ஸ்ரீராம் வீட்டில் பதிமூன்று ஆண்டுகள் ஒரு கூலியற்ற வேலைக்காரியாகத்தானே வாழ்ந்தாள்? அங்குக் கிடைத்த அடிமட்டத்து வலிகளை விட, தன் சொந்தக் கூட்டில் செய்யும் இந்த வேலை அவளுக்கு ஒரு பாரமாகவே தெரியவில்லை.
அதே சமயம், அந்த அறையின் ஒரு மூலைக்குள் அடைந்து கிடந்த ஸ்ரீராம் வெளியே வரவே இல்லை. அவன் மனதுக்குள் என்ன ஓடுகிறது என்பது அவனுக்கே புரியவில்லை.
பிரபாகரன் நேராக வீட்டிற்குச் செல்லாமல் தன் மகன்களைத் தேடிச் சென்றான்.
"அப்பா...!" எனச் சத்தமிட்டுக்கொண்டே அந்த இரு சிறுவர்களும் தந்தையைக் கண்டதும் துள்ளிக் குதித்து ஓடி வந்தனர்.
"அரவிந்த்... வீடு எல்லாம் செட் ஆயிடுச்சா? உங்களுக்கு இங்க இருக்கிறது பிடிச்சிருக்கா? ஓகேவா?" என வாஞ்சையோடு கேட்டார் பிரபாகரன்.
"அப்பா... எங்களுக்கு எல்லாம் செட் ஆகிடுச்சுப்பா. கீழே இருக்கிற அந்த ஆன்ட்டி எங்களை ரொம்ப நல்லாப் பார்த்துக்கிறாங்க. எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லைப்பா," என அவர்கள் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கும் போதே, கீழே இருந்த அந்தப் பெண் கையில் இரண்டு உணவுத் தட்டுக்களுடன் மேலே வந்தாள்.
பிரபாகரன் அங்கே இருப்பான் என்பதை அவள் துளிகூட எதிர்பார்க்கவில்லை. உள்ளே நுழைந்தவள் அவனைப் பார்த்ததும் அப்படியே சிலையாக உறைந்து நின்றாள். கைகள் நடுங்கின.
அவனும் அவளைக் கண்டதும் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியில் தலைகுனிந்து கொண்டான். அந்த இடத்தில் ஒரு கனத்த மௌனம் நிலவியது.
"ஆன்ட்டி வாங்க..." என அரவிந்த் ஓடிச் சென்று அவள் கையில் இருந்த தட்டுக்களை வாங்கிக் கொண்டான். பின் அவளையும் அன்போடு அழைத்து வந்து, அவர்கள் அமர்ந்திருந்த அந்தச் சிறிய வட்டத்தில் அமர வைத்தான். அந்த அறையில் இப்போது ஒரு புதிய பந்தம் துளிர்க்கத் தொடங்கியது
“பாப்பா எங்க இருக்கு?"
"பாப்பா கீழே தூங்கிட்டு இருக்கா. உங்களுக்கு ஸ்னாக்ஸ் கொடுக்கலாம் தான் மேலே வந்தேன், சாப்பிடுங்க. நைட்டுக்கு நான் பிரியாணி செய்கிறேன்," என்றாள் பிரபாகரனை ஓரக்கண்ணால் பார்த்தபடி.
"வாவ்! பிரியாணியா?" அரவிந்த் கண்கள் மலரச் சந்தோஷப்பட்டான்.
"அத்தை ரொம்ப சூப்பரா பிரியாணி செய்வாங்க. அவங்களை ரொம்ப மிஸ் பண்றோம், அவங்க சமையலையும் மிஸ் பண்றோம்," என்று சத்தியன் சோகமாகக் கூறினான்.
"உங்க அத்தை அளவுக்கு எனக்கு சமைக்க வருமானு தெரியல. என்னால முடிஞ்ச வரைக்கும் நான் நல்லா சமைச்சு எடுத்துட்டு வர்றேன். உங்க அப்பாவையும் இங்கே இருக்கச் சொல்லுங்க, சாப்பிட்டுட்டுப் போகச் சொல்லுங்க," என்று இருவரிடமும் பொதுவாகக் கூறிவிட்டு அவள் வேகமாக கீழே இறங்கி வந்தாள்.
பிரபாகரனுக்கு மட்டன் பிரியாணி என்றால் உயிர். அதனால் தான் அவள் பிரியாணி செய்வதாக கூறினாள். அவள் வேகமாகச் சமைக்கத் தொடங்கினாள்.
"அப்பா, அந்த ஆன்ட்டி பாவம், ரொம்ப பயப்படுவாங்க. சத்தமாக கூட பேச மாட்டேங்கிறாங்க. எங்களை ரொம்ப ரொம்ப நல்லாப் பார்த்துக்கிறாங்க. சோ ஸ்வீட்!" என்று சத்தியன் மனப்பூர்வமாக அவளைப் பாராட்டி கூறினான்.
"அவங்க ஸ்வீட் தான்..." பிரபாகரன் தன்னை மறந்து அந்த வார்த்தைகளை உதிர்த்தான்.
"அப்பா, இன்னைக்கு எங்க கூடவே தங்கிடுங்க, வீட்டுக்கு போக வேண்டாம்," என்று அரவிந்த் ஏக்கமாக கேட்க, பிரபாகரனுக்கும் வீட்டிற்குச் செல்ல விருப்பமில்லை.
ஸ்ரீராமை பார்த்தால் அவனை அடித்து விடுவோம் என்ற கோபத்தில்தான் அவன் நேராக வீட்டிற்குச் செல்லாமல் மகன்களைத் தேடி வந்திருந்தான்.
இருவரிடமும் அங்கே நடந்த பிரச்சனைகளைச் சொல்ல அவன் விரும்பவில்லை. இப்பொழுது சொல்ல வேண்டாம் என்று அதைத் தள்ளி வைத்தான்.
தொடரும்......