மனைவி - 24

Advertisement

மனைவி - 24

ஸ்ரீராமின் தலை சுற்றியது. எதை நம்புவது, எதை மறுப்பது என்று தெரியாத ஒரு மிகப்பெரிய சூறாவளி அவன் மனதிற்குள் சுழன்றடித்தது.

உண்மையும் பொய்யும் கண்ணாமூச்சி ஆட, அவன் மூளை செயலிழந்து நின்றது.

"எல்லாரும் வாய மூடுங்க! கொஞ்ச நேரம் அமைதியா இருங்க!" என்று அவன் தன் ஆங்காரம் மொத்தத்தையும் திரட்டித் தொண்டைக் கிழியக் கத்தியபோது, அங்கிருந்த இரைச்சல் சட்டென அடங்கியது.

அந்த நிசப்தத்தில் அவனது மூச்சுக்காற்று சீறும் சத்தம் மட்டுமே கேட்டது. கையில் இருந்த கத்தியின் நுனி நடுங்க, அனைவரும் திகைத்து அவனையே பார்த்தனர்.

அவன் கண்கள் சிவக்க, பிரபாகரனை ஏறிட்டுப் பார்த்தான். "நாளையோட அவளுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லன்னு ஆகப்போகுது. மாப்பிள்ளை, நீங்களும் இனிமேல் அவளைப் பத்தி இந்த வீட்ல பேசக்கூடாது. அவகிட்ட உங்களுக்கு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு? தங்கச்சி புருஷனா இருக்கீங்கன்னு ஒரு லிமிட்டோட சொல்றேன், அவ்வளவுதான். எனக்கு என் தங்கச்சி வாழ்க்கை முக்கியம்," என்று கரகரத்த குரலில் எச்சரித்தான்.

பிரபாகரன் ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான். அவன் தாடை நரம்புகள் துடித்தன. தன் மனைவியையும், மைத்துணையையும் கேவலமாக ஒரு பார்வை பார்த்தவன்,

"உங்களைப் மாதிரி ஒரு கீழ்த்தரமான ஜென்மங்களை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லைடா. நாளையோட உனக்கு இல்லை, உன் தங்கச்சிக்கு ஒரு முடிவு கட்டுறேன். எப்ப என்னையும் சேர்த்து நீங்க கேவலப்படுத்திட்டீங்களோ, இனிமேல் உனக்கும் உன் குடும்பத்துக்கும் நான் எதுக்கு உண்மையா இருக்கணும்?" என்று எரிமலையாய் வெடித்து கேட்டுவிட்டு, அந்த வீட்டின் நிலை கதவு அதிரும் படி வெளியேறிச் சென்றான்.

கலை பதறிப்போய், "மாப்பிள்ளை... நில்லுங்க மாப்பிள்ளை!" என்று தடுக்கப் பின்னாடியே ஓடினார். ஆனால் பிரபாகரன் எதற்கும் கட்டுப்படுவதாய் இல்லை. தோல்வியுற்றுத் திரும்பிய கலை, தன் மகள் அலரை மற்றவர் பார்வையிலிருந்து மறைத்தபடி உள்ளே அழைத்து வந்தார்.

"ஸ்ரீராம், நீ உள்ள போய் ரெஸ்ட் எடுப்பா. அவளுக்கும் நமக்கும் இனி எந்தச் சம்பந்தமும் இல்லை. நாளைக்கு எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துடும். இனிமேல் அவளால நம்ம வீட்ல எந்தச் சண்டையும் நடக்கக்கூடாது. அவ பேரையோ, பேச்சையோ நாங்க இந்த வீட்டில் எடுக்க மாட்டோம். நீ போ..." என மகனைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

மகன் சென்றதும், மகளை இழுத்துக்கொண்டு தோட்டத்துப் பக்கம் சென்றவர், அடக்க முடியாமல் அவள் முதுகில் 'படார் படார்' என்று ஓங்கி அடித்தார்.

"அறிவு கெட்டவளே! கொஞ்சம் கூட உனக்கு மூளை இருக்கா? எந்தப் பிரச்சினையை எந்தப் பக்கம் திருப்பி விடுற? மாப்பிள்ளை போனா என்னாகும்னு எல்லாருக்கும் தெரியும். கட்டுன புருஷனுக்குத் தேவையில்லாத பட்டம் கட்டுறியே, அந்த மனுஷன் எப்படி இனி உன் கூட வாழ்வான்? அவர் பேசிட்டுப் போறதப் பார்த்தாலே பயமா இருக்கு, வயிறெல்லாம் கலங்குதுடி," என்று கலை அழுதுகொண்டே கத்தினார்.

அடி வாங்கிய மலர் துளி கூடக் கலங்காமல், "அம்மா, நீ எல்லாம் எதுக்கு அந்த ஆளுக்கு இவ்வளவு இம்பார்ட்டன்ஸ் கொடுக்குற? அந்த ஆளு எங்கேயும் போக மாட்டார். கடைசில 'மலர்'ன்னு என்கிட்ட தான் வந்து நிப்பான். என் மேல கை வச்சுட்டான்ல, அவனை எப்படி நான் சும்மா விடுறது? அவனை நான் பார்த்தே ஆகணும்.

எல்லார் முன்னாடியும் என்னை அடிச்சுட்டான். பொறுக்கிப் பையன்! எவளுக்காகப் பேசி என்னை அடிக்கிறான்? அவன் எல்லாம் இனிமேட்டு எனக்கு புருஷனா இருந்தா என்ன, இல்லன்னா என்ன? அவன் என்னை அடிச்சதுக்கு பதில் சொல்லியே ஆகணும்!" என்று கண்கள் பிதுங்க பைத்தியம் பிடித்தவள் போல் பேச, கலை தன் மகளை ஒரு அந்நியரைப் பார்ப்பது போல் அதிர்ச்சியாக பார்த்தார்.

இந்த விவகாரம் எங்கே போய் முடியுமோ என்ற பயம் அவர் மனதை அரித்தது. மாப்பிள்ளையிடம் எப்படியாவது பேசிச் சரி பண்ணிவிடலாம் என்று முடிவு செய்தவர், மேற்கொண்டு மகளிடம் எதையும் கேட்க விரும்பாமல் விலகிச் சென்றார்.

நாளை விவாகரத்து... ஸ்ரீராம் இருட்டில் விழித்தபடி விட்டத்தை வெறித்துப் படுத்துக் கிடந்தான். அவளுடன் அவன் சேர்ந்து வாழ்ந்தது வெறும் இரண்டு நாட்கள்தான். ஆனால் அந்த இரண்டு நாட்களின் நினைவுகளும் அவன் மனதின் ஆழத்தில் பசுமையான கல்வெட்டாய் பதிந்து போயிருந்தது.

அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
இத்தனை நாள் அவள் எனக்காகத்தான் காத்திருக்கிறாள் என்ற நம்பிக்கையில்தான் அவன் தன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தான். இப்போது 'இனி அவள் எனக்கு இல்லை' என்ற கசப்பான உண்மையை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை புரட்டிப் பார்த்தால் அங்கு ஒன்றுமே இல்லை, ஒரு பெரிய பூஜ்ஜியம் மட்டுமே எஞ்சியிருந்தது.
'உன்னைப் பற்றி இவனுக்கு எதாவது தெரியுமா?' என்று யாராவது கேட்டால், அவன் பதில் சொல்லத் தெரியாமல் விழிப்பான்.

ஆனால் அவளுக்கோ இவனைப் பற்றி அணு அணுவாக அத்துபடி. என்ன செய்வது என்று புரியாமல், நடக்கப் போவதை ஏற்கவும் முடியாமல், அதே சமயம் அவளுடன் வாழ்ந்த தருணங்களை மறக்கவும் முடியாமல் அவன் மனப் போராட்டத்தில் தவித்தான்.

பைத்தியம் பிடிப்பது போன்ற ஒரு உணர்வு அவனைச் சூழ்ந்தது. இதிலிருந்து அவனால் மட்டுமே மீண்டு வர முடியும்; நாளை நடக்கப்போகும் நிகழ்வுகள் அனைத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்.

காலையில் மொத்தக் குடும்பமும் நீதிமன்றத்திற்குக் கிளம்பியது. ஸ்ரீராம் தன் சட்டையை எடுப்பதற்காகப் பீரோவைத் திறந்தபோது, அங்கே அவளுடைய புடவைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தான். அதைக் கண்டதும் அவன் முகம் கசப்பால் சுருங்கியது. பொதுவாகப் பெண்களுக்கு என்று ஒரு தனிப்பகுதி பீரோவில் ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு அவளுக்கென்று பத்துப் புடவைகள் கூட இல்லை.
இத்தனை நாட்களாக அவன் அந்தப் பீரோவைத் திறக்கவே இல்லை. அவன் எடுத்து வந்த பையிலிருந்தே தனக்குத் தேவையான துணிகளை எடுத்து உபயோகித்து வந்தான்.

இன்று சில முக்கியமான ஆவணங்களை எடுப்பதற்காகத் திறந்தவனுக்கு, அவளது எளிய உடைமைகளைக் கண்டதும் இதயம் ஒரு கணம் அதிர்ந்தது. சத்தமில்லாமல் அந்த பீரோவை மூடிவிட்டு, தேவையானதை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

அசோக் கார் ஏற்பாடு செய்திருக்க, அனைவரும் மௌனமாக நீதிமன்றம் நோக்கிப் பயணித்தனர்.

"ஸ்ரீராம், ஜட்ஜ் ஏதாவது கேள்வி கேட்டா நீயா எதையும் பேசி வைக்காத. அவ கூட வாழ விருப்பம் இல்லைன்னு மட்டும் சொல்லு. அவ பண்ண காரியத்தைச் சொல்லு. அப்புறம், ஜீவனாம்சம் ஏதாவது கேட்டா ஒரு பைசா கூடத் தர முடியாதுன்னு சொல்லிடு. உனக்கு என்ன புள்ளையா குட்டியா?" என்று அவர் தாய் சொன்ன வார்த்தைகள் அவன் உள்ளத்தைச் சுட்டெரித்தன.

"சரிம்மா, நான் அப்படியே சொல்லிடுறேன்," என்று ஒரு இயந்திரத்தைப் போலத் தன் தாய்க்குத் தலையாட்டினான்.
மலர், தன் கணவன் கோபித்துக் கொண்டு சென்றதையோ, அவன் வராததையோ பொருட்படுத்தவே இல்லை. தன்னை அடித்ததற்காக அவனை எப்படிப் பழிவாங்க வேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருந்தாள்.

அவர்கள் நீதிமன்றத்திற்குள் நுழைய, அங்கே பிரபாகரனும் ராதையும் ஏற்கனவே காத்திருந்தனர். இருவரையும் ஒன்றாகக் கண்டதும், ஸ்ரீராமின் குடும்பத்தினருக்கு முகம் கோபத்தில் சிவந்து போனது.

மனைவியைத் தமிழ்நாட்டிற்கு வந்தபோது பார்த்ததை விட, இப்போது அவள் முற்றிலும் மாறியிருந்ததை ஸ்ரீராம் கவனித்தான்.

நேர்த்தியான காட்டன் புடவை, தலை முடியை நன்றாக படிந்து வாரிப் பின்னலிட்டு, அதில் சிறிதளவு மல்லிகைப் பூச்சூடி, காதில் சிறு தோடும், கையில் கற்கள் பதித்த வளையல்களும் அணிந்திருந்தாள்.

நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டும், அதன் மேல் மெலிதாகச் சந்தனமும் இருந்தது. கழுத்தில் மஞ்சள் கயிறு தாலியுடன், கையில் ஹேண்ட் பேக் ஏந்தி, அமைதியின் சிகரமாக அமர்ந்திருந்த அவளைப் பார்த்தால், 'இவளா அந்தத் தவறைச் செய்தாள்?' என்று கேட்டால், ஸ்ரீராமே கூட நம்ப மறுத்திருப்பான்.

பிரபாகரன் இருவரையும் மாறி மாறிப் பார்த்தபடி நிற்க, ஸ்ரீராம் அங்கு நெருங்கினான்.

அலர் அவசரமாகத் தன் கணவனிடம் ஓடினாள். "ஓ... இவ கூடத்தான் இருக்கியா? இதுக்குத்தான் நேத்து அவசர அவசரமா ஓடுனியா?" என்று அவள் பச்சைத் தனமாகக் கேட்க, ராதை அந்த வார்த்தையின் வீச்சில் அதிர்ந்து எழுந்து நின்றாள்.

'என்ன ஒரு அசிங்கமான பேச்சு! அண்ணன்-தங்கையாக பழகிக்கொண்டு இருப்பவர்களைப் பார்த்து இப்படி ஒரு பட்டம் கட்டுறாளே!' என்று அவள் மனம் ஆதங்கத்தால் துடித்தது.

அதே நேரம் சொக்கன் அங்கே வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்ததும் பிரபாகரனுக்குச் சற்று நிம்மதி ஏற்பட்டது.

"மாப்ள, வீட்ல ஆயிரம் சண்டை நடந்தாலும் நீங்க இப்படி வெளியில போயிருக்கக் கூடாது. அதுவும் இவ வீட்டுக்கு நீங்க போயிருக்கவே கூடாது," என்று கலை சொல்ல, பிரபாகரன் பொங்கி எழுந்தான்.

"மாசத்துல பாதி நாள் நான் வீட்டிலேயே தங்க மாட்டேன், அப்போல்லாம் நான் எங்க போனேன் என்று உங்களுக்குத் தெரியுமா? உன் பொண்ணு கூட எந்த மனுஷனாவது ஒழுங்கா வாழ்வானா?" என்று அவன் கேட்ட நேரடியான கேள்வியில் கலை மௌனமாகத் திகைத்து நின்றார்.

"கோர்ட்ல நின்னு தேவையில்லாத வாக்குவாதம் பண்ணாதீங்க. மீறி ஏதாவது பேசினீங்கன்னா, ஸ்ரீராம் டைவர்ஸ் கேஸ்க்கு அடுத்து எனக்கு உனக்கும் தான் நடக்கும்!" என்று பிரபாகரன் தன் மனைவியை எச்சரிக்க, கலை தன் மகளை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு தள்ளிச் சென்றார்.

"எதுக்குமா நீ இப்படிப் பயந்து சாகுற? அந்த ஆள் மிரட்டிப் பார்க்கிறான். வர வர அவருக்குத் திமிர் கூடிப்போச்சு. என்ன நினைச்சுட்டு இருக்காங்க? ஆம்பளைன்னா என்ன வேணாலும் செய்யலாமா? பொம்பளை அதைக் கேட்கக்கூடாதா?" என அலர் துள்ளிக் குதிக்க, மலர் அவளைச் சலிப்போடு பார்த்தாள்.

பிரபாகரனைப் பற்றித் தெரிந்திருந்தும் அலர் இப்படிப் பேசுவது அர்த்தமற்றது என அவளுக்குத் தோன்றியது. ராதையின் நற்குணம் அனைவருக்கும் தெரியும்; ஏதோ அண்ணனிடமிருந்து பிரிப்பதற்காகப் பட்டம் கட்டினார்கள், ஆனால் இவர்கள் அதுதான் உண்மை என்பது போல் பேசிக்கொண்டிருக்கிறார்களே என்று நினைத்து மலர் அங்கிருந்து ஒதுங்கினாள்.

ஸ்ரீராமின் பார்வை மட்டும் அடிக்கடி தன் மனைவி மேல் விழுந்து மீண்டது. 13 வருட திருமண வாழ்க்கை முடிந்துவிட்டது என்று சொன்னால் யாராலும் நம்ப முடியாத அளவுக்கு, ஒரு சின்னஞ்சிறு பெண் போல அழகுப் பதுமையாக அமர்ந்திருந்த தன் மனைவியை விட்டு அவனால் பார்வையை விலக்கவே முடியவில்லை. ஆரம்பத்தில் இருந்த ஆக்ரோஷமும் கோபமும் இப்போது அவனிடம் இல்லை.

"ஸ்ரீராம், ராதை... உள்ளே வாங்க!" என்று அழைப்பு வந்தது. இருவரும் மௌனமாக ஒருவரை ஒருவர் பார்க்காமல் உள்ளே நுழைந்தனர். நீதிமன்ற அறையில் இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் விலகி நிற்க, நீதிபதி அவர்கள் கோப்பைப் புரட்டினார்.

"மியூச்சுவல் டிவோர்ஸ் கேட்டு அப்ளை பண்ணியிருக்கீங்க போல?" என்று ஜட்ஜ் கேட்டார்.

இருவரும் எந்தப் பதிலும் சொல்லாமல் சிலையென அமைதியாக நின்றனர். அந்த மௌனம் பல அர்த்தங்களைச் சுமந்து நின்றது.

தொடரும்.....

இந்த ஸ்ரீராமருக்கு பிள்ளைங்க இருப்பது தெரியவே தெரியாதா, என்ன தான் பிளாஷ் பேக் இருக்குமோ
 

Advertisement

Advertisement

Back
Top