மனைவி 35

Advertisement

Nivi Ammu

Well-known member
Member
மனைவி - 35

"நம்ம வீடா? உங்க வீட்டுக்கு வந்தா உங்க அம்மா எங்களை வாசற்படியை கூட மிதிக்க விடமாட்டாங்க..." அவளது வார்த்தைகள் நிதர்சனத்தைச் சுட்டின.

"நான் 'நம்ம வீடு'ன்னு சொன்னது என் அம்மாவோட வீட்டை இல்லை ராதை. நீயும் பிள்ளைகளும் இப்போ எங்க தங்கி இருக்கீங்களோ, அது தான் இனிமேல் என் வீடு. நீங்க இருக்கிற இடம் தான் இனிமேல் என்னுடைய வாழ்வாதாரம். இந்த 13 வருஷம் நான் செஞ்ச பாவத்துக்குக் கொஞ்சம் கொஞ்சமா பரிகாரம் பண்ணி என் மனசைச் சுத்தப்படுத்திக்கணும்னு ஆசைப்படுறேன்."

அவனிடம் கத்திக் கூச்சலிட்டு தன் கோபத்தைக் கொட்ட கூட அவளுக்குத் தெம்பில்லை. அவளால் அவனை முழுமனதோடு ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. அவன் அவள் மீது சுமத்திய அந்த அபாண்டமான பழி அவளது ஆத்மாவை இன்னும் சுட்டு கொண்டிருந்தது.

'இப்படியே போடா' என்று விரட்டவும் முடியவில்லை. தந்தை என்ற அரவணைப்பு ஒரு பெண் குழந்தைக்கு எவ்வளவு பெரிய பாதுகாப்பு என்பதைத் தான் தனிமரமாக நின்ற இந்தச் சில வருடங்களில் அவள் உணர்ந்துவிட்டாள்.

'தனியாக இருக்கும் பெண்தானே' என்று வக்கிரப் பார்வையோடு தன்னைத் துரத்தும் சமூகத்தின் கண்களை அவள் ஒவ்வொரு நாளும் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறாள்.

மனதுக்குள் ஒரு பெரும் போரே நடந்து கொண்டிருந்தது. அவளது மௌனத்தைப் படித்தவன் போல ஸ்ரீராம் மீண்டும் பேசினான்,

"உன்னை நம்பாம சந்தேகப்பட்டது நான் செஞ்ச மிகப்பெரிய பாவம் ராதை. நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்குறேன். ஆனா தயவு செஞ்சு 'பிரிஞ்சு போ'ன்னு மட்டும் சொல்லிடாதே. என் உயிர் போனாலும் உங்களை விட்டுப் போக மாட்டேன்."

அவள் தன் அழுகையை உதட்டைக் கடித்து அடக்கிக்கொண்டு கற்சிலையாய் நின்றாள். அவளது அந்த அமைதியும், கண்களில் தேங்கியிருந்த கண்ணீரும் அவனைக் கூர்மையான கத்தி கொண்டு குத்திக் கிழிப்பது போல இருந்தது.

கணவன் மனைவியாக வாழ அன்பு எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் ஒருவருக்கொருவர் வைக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தான் அவன் சிதைத்துவிட்டு இப்போது பிச்சைக்காரனைப் போல அவள் முன் நின்று கொண்டிருக்கிறான்.

அவள் அவனைத் திட்டியிருந்தாலோ, அடித்திருந்தாலோ கூட அவனுக்கு இவ்வளவு வலித்திருக்காது. அவளின் இந்த நிசப்தமான மௌனம்தான் அவனைத் துகள்களாக உடைத்துக் கொண்டிருந்தது.


"என்னை மன்னிச்சிடு ராதை... என்ன மன்னிச்சிடு!"

தன் விதியைத் தானே நொந்துகொண்டவன் போல, கொஞ்சமும் யோசிக்காமல், ஆண் என்ற அந்தப் போலிக் கர்வம் சுக்குநூறாக உடைந்து சிதற, அவள் காலடியில் விழுந்து அப்படியே வணங்கினான் ஸ்ரீராம். அவனது கண்ணீர் அவளது பாதங்களை நனைத்தது.

"ஐயோ! என்ன பண்றீங்க? முதல்ல எழுந்திருங்க!" என்று பதறியபடி, மின்சாரம் தாக்கியது போல பின்வாங்கி விலகித் தள்ளி நின்றாள் ராதை. அவளது கண்களில் இன்னும் பழைய காயங்களின் வடுக்கள் மறைந்திருக்கவில்லை.

"உன்னைச் சந்தேகப்பட்டதுக்கு எனக்கு எப்படி மன்னிப்பு கேட்கிறதுன்னே தெரியல ராதை. இதைவிட நல்ல வழியும் எனக்குத் தெரியல. சத்தியமாச் சொல்றேன், சாகுற வரைக்கும் இந்தத் தப்பை நான் இனிமேல் செய்ய மாட்டேன். என் மேல நம்பிக்கை இல்லையா? என்ன மன்னிச்சிடு ராதை!" என்று கைகூப்பிக் கும்பிட்டு, பாவியாய் அமர்ந்திருந்தான். அவனது குரலில் இருந்த நடுக்கம் அவன் மனதின் பாரத்தைச் சொல்லியது.

அவனை அப்படி ஒரு நிலையில் பார்க்கவும் அவளுக்குப் பிடிக்கவில்லை; அப்படியே உடனே மன்னித்து ஏற்றுக் கொள்ளவும் அவளது கடந்த கால வலிகள் விடவில்லை. 'சரி, எப்படியும் இனிமேல் ஒன்றாகத்தான் இருக்கப் போகிறோம், காலப்போக்கில் பார்த்துக் கொள்ளலாம்' என்ற வைராக்கியத்தோடு, தன் உணர்ச்சிகளைக் கட்டப்படுத்திக் கொண்டு பேசினாள்.

"குழந்தைங்க வெயிட் பண்றாங்க, போகலாம்," என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு, அவனை அந்தத் தனிமையில் தவிக்க விட்டுவிட்டு அவள் வெளியேறினாள். ஸ்ரீராம் அப்படியே தரையில் அமர்ந்து, தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு கேவிக்கேவி அழுது கொண்டிருந்தான். அந்த அழுகையில் இத்தனை காலத் தவறுகளும் கரைந்து போய்க்கொண்டிருந்தது.

அப்போது, அவன் தோள்களில் பாரமாக ஒரு கரம் வந்து விழுந்தது. அந்தத் தொடுதலின் வாஞ்சையில் அது யார் என்று அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

"தேங்க்யூ... தேங்க்யூ! நீங்க பண்ணின இந்த உதவியை நான் சாகுற வரைக்கும் மறக்க மாட்டேன். என்னையும் என் குடும்பத்தையும் திரும்பவும் சேர்த்து வச்சிட்டீங்க," என்று நெகிழ்ச்சியோடு சொன்னான் ஸ்ரீராம்.

பிரபாகரனின் முகம் கடுகடுப்பாகவே இருந்தது. "இதப்பாரு ஸ்ரீராம், நான் இதை உனக்காகச் செய்யல. அந்த ரெண்டு பெண் குழந்தைகளுக்காகச் செஞ்சேன். ஒவ்வொரு நாளும் 'அப்பா வரமாட்டாரா? நாங்களும் மத்த புள்ளைங்க மாதிரி அப்பா கையப் புடிச்சு நடக்க மாட்டோமா? அப்பாவோட பாதுகாப்புல நிம்மதியாத் தூங்க மாட்டோமா?'ன்னு அந்தப் பச்சை மண்ணுங்க ஏங்கித் தவிச்ச தவிப்புக்குக் கிடைச்ச பலன் இது."

அவர் குரல் தழுதழுத்தது. "பதிமூணு வருஷம் உனக்காகப் பித்துப் பிடிச்சு, வனவாச வாழ்க்கை வாழ்ந்தாளே ராதை, அவளுக்காகச் செஞ்சேன். அவ வாழ்ந்த நரக வாழ்க்கை என்னன்னு அந்தச் சின்ன ரூமுக்குள்ள இருந்தப்போ உனக்கே புரிஞ்சிருக்கும். அவ அனுபவிச்ச வேதனை அவளுக்கு மட்டும்தான் தெரியும்."

பிரபாகரன் மேலும் தொடர்ந்தார், "இத்தனை வருஷம் வெளிநாட்டுல மாடா உழைச்சேன்னு சொல்றியே, கைல ஒரு பத்து ரூபா எடுத்துட்டு வந்தியா? 'பிள்ளைங்களையும் பொண்டாட்டியையும் நான் பாத்துப்பேன்'னு சொல்ற... எதை வச்சுப் பாத்துக்கப் போற ஸ்ரீராம்?"

ஸ்ரீராம் தன் கண்களைத் துடைத்துக் கொண்டான். வேதனையையும் தாண்டி ஒரு புதுத் தெளிவு அவன் முகத்தில் மின்னியது. சிரித்தபடியே நிமிர்ந்து நின்றான்.

"எதுவுமே இல்லாமத்தான் என் வாழ்க்கையைத் திரும்பத் தொடங்குறேன். ஆனா இப்போ என் கூட ராதா இருக்கா. அவ ஒருத்தி போதும் எனக்கு. இத்தனை நாள் ஓடி ஓடிச் சம்பாதிச்சேன், ஆனா நிம்மதி இல்ல. வாழ்க்கையில எதையோ இழந்துட்டு நிக்கிற மாதிரி ஒரு சூன்யம் மனசுக்குள்ள இருந்துட்டே இருக்கும். எனக்காக யாரும் இல்லையோன்னு தோணும். ஆனா இன்னைக்கு அப்படித் தோணல. கொஞ்ச நேரம் ராதை என் பக்கத்துல வந்து நின்னப்பவே, என் வாழ்க்கையில இதுவரை அனுபவிக்காத ஒரு பெரிய நிம்மதியை நான் உணர்ந்தேன் அண்ணா."

அவன் குரலில் ஒரு வைராக்கியம் பிறந்தது. "இத்தனை வருஷம் நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் தானே போச்சு? போகட்டும். என்னைப் பெத்துப் படிக்க வச்சு ஆளாக்கின பெற்றோருக்குத்தானே செஞ்சேன்? ஒரு மகனா அவங்களுக்கு நான் நல்லது மட்டும்தான் செஞ்சிருக்கேன். என்னால முடிஞ்ச வரைக்கும் அவங்க வாழ்க்கையை ஒரு நல்ல நிலைமையில உட்கார வச்சுட்டேன். இனிமேல் எந்த மனவேதனையும், குற்ற உணர்ச்சியும் இல்லாம எனக்காக வாழப் போறேன்... என் மனைவிக்காக, என் குழந்தைகளுக்காக வாழப் போறேன். இனிமேல் நான் சம்பாதிக்கிறது முழுக்க என் குடும்பத்துக்காக மட்டும்தான். இவ்வளவு பெரிய ஊர்ல எனக்கு ஒரு வேலை கிடைக்காதா? மூட்டை தூக்கியாவது என் குடும்பத்தை நான் ராணி மாதிரி பாத்துப்பேன் அண்ணா!"

நம்பிக்கையோடு தைரியமாகப் பேசிய ஸ்ரீராமை ராதை வியப்போடு பார்த்தாள். அரை மணி நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் ஒரு குழந்தையை விட மோசமாகக் கதறி அழுத அதே மனிதனா இவன்? என்று அவளுக்குச் சந்தேகமாக இருந்தது.

ஸ்ரீராம் சொன்னது போலவே அவன் விழிகளில் ஒரு புதுமையான ஒளிவட்டம் தெரிந்தது. ஒரு புதிய மனிதனாக அவன் அவளுக்குத் தெரிந்தான்.

"ஆல் தி பெஸ்ட் ஸ்ரீராம்! திரும்பவும் எதையாவது சொதப்பி வச்சுட்டு, இந்த வீட்டு முன்னாடி வந்து நிக்காத... அப்புறம் நானே உன்னை அடிப்பேன்!" என்று பிரபாகரன் உரிமையோடு எச்சரித்தார்.

"இனிமேல் எதாவது சொதப்பினாலும் அதை நானே சரி பண்ணிப்பேன். நாங்க கிளம்புறோம். திரும்பவும் சொல்றேன்... ரொம்ப நன்றி!" என்று பிரபாகரன் கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு, தன் குடும்பத்தைத் தேடி வேகமாக வெளியேறினான் ஸ்ரீராம்.

வெளியே ராதையும் ரேணுகாவும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"சீதா, மகா! சீக்கிரம் கீழ வாங்க... வீட்டுக்குப் போகலாம்!" என்று மாடியில் விளையாடிக் கொண்டிருந்த தன் மகள்களைப் பார்த்துக் குரல் கொடுத்தான் ஸ்ரீராம். அந்த அழைப்பில் ஒரு தகப்பனின் அதிகாரம் கலந்த அன்பு இருந்தது.

முதலில் மகா 'அப்பா!' என்று கத்திக்கொண்டே ஓடிவந்து அவர் முன்னே நின்றாள். சீதா கொஞ்சம் தயங்கித் தயங்கி வந்தாலும், அவளும் தன் தந்தையைத் தேடித்தான் வந்தாள்.

"அக்கா, உங்க குடும்பத்தைப் பார்க்கும்போது ரொம்பச் சந்தோஷமா இருக்கு. மாமா தினம் தினம் உங்களை நினைச்சு வேதனையோடு புலம்பிட்டே இருப்பார். இனிமேலாவது அவர் நிம்மதியா இருப்பார்னு நம்புறேன்," என்றாள் ரேணுகா.

"அண்ணாக்குத்தான் நாங்க நிறைய கஷ்டத்தைக் கொடுத்துட்டோம்," என்று ராதை நெகிழ்ந்தாள்.

"மாமா ஒருநாளும் அதைச் சுமையா நினைச்சதில்ல அக்கா. இனிமேல் நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்," என்று ரேணுகா மனப்பூர்வமாக வாழ்த்தினாள்.

"அம்மா... பசிக்குது!" என்று ஐஸ்வர்யா தன் சின்னஞ்சிறு உதட்டைப் பிதுக்கிக்கொண்டு வர,

"ஐஸ் ஐஸ்... அண்ணா ஊட்டி விடுறேன் வா. அம்மா, அத்தை கூட பேசிட்டு இருக்காங்க," என்று சத்யன் சிறுமியைத் தூக்கிக்கொண்டு உள்ளே சென்றான்.

"அரவிந்த், நல்லா இருக்கீங்களா? எத்தனை நாளாச்சு உங்க ரெண்டு பேரையும் பார்த்து!" என்று ராதை கேட்டாள்.

"அத்தை, நாங்க ரொம்ப நல்லா இருக்கோம். எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. நீங்க எப்படி இருக்கீங்க? மாமா கூடச் சேர்ந்துட்டீங்களா? குழந்தைகளை மாமா ஏத்துக்கிட்டாரா?" என்று அரவிந்த் கேட்க.

தன் தங்கை மகன்களை அப்பொழுதுதான் முழுமையாகப் பார்த்தான் ஸ்ரீராம். பெரிய மனிதர்களைப் போல வளர்ந்து நிற்கும் அந்தப் பிள்ளைகளிடம் என்ன பேசுவது என்று அவனுக்குத் தெரியவில்லை. ஒரு குற்ற உணர்வு அவனுக்குள் ஓடியது.

"இனிமேல் தான் எல்லாம் சரியாகணும் அரவிந்த். நல்லபடியா படிக்கணும், சரியா?"

"நிச்சயமா அத்தை. நல்லா படிச்சு பெரிய ஆளா வருவேன். உங்களை இனிமே அடிக்கடி வந்து பார்க்கிறோம்," என்று சொல்ல, ராதை அவன் கன்னத்தை வாஞ்சையோடு தடவி விட்டாள்.

ரேணுகாவிடம் பேசிக் கொண்டிருந்தாலும், 'யார் இந்த ரேணுகா?' என்கிற கேள்வி ராதையின் அடிமனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

"அக்கா, சாப்பிட்டுப் போங்க... உள்ள வாங்க," என்று ரேணுகா அழைக்க,

"இல்லம்மா, இன்னொரு நாளைக்கு வர்றோம். இப்போதைக்கு நாங்க கிளம்புறோம்," என்று ஸ்ரீராம் தடுத்தான்.

"ரேணுகா, இன்னைக்கு நீ அவங்களைத் தடுக்க முடியாது. இன்னொரு நாளைக்கு வருவாங்க, இப்போதைக்கு அவங்க கிளம்பட்டும்," என்று பிரபாகரன் சொன்னதும், ரேணுகா மறுபேச்சில்லாமல் அமைதியானாள்.

"போயிட்டு வாங்க அக்கா!" என்று சிரித்த முகமாக அவர்கள் விடைபெற்றார்கள்.

தொடரும்....
 
Very interesting episode 😍😍😍😍😍

ஆனா ஸ்ரீராம் ராதை காலில் வாழ்ந்தாலும் அவன் அவள் பெயருக்கு ஏற்படுத்தின கலங்கத்தை யார் முன்னாடி கலங்கப்படுத்தினானோ அவங்க முன்னாடி அந்த கலங்கத்தை துடைத்து அவளை கௌரவப்படுத்தனுமா இல்லையா?
 
காலில் விழுந்தா எல்லாம் சரியா போய்டுமா
ஸ்ரீராம் 🤗🤗🤗🤗 இனிமேலாவது கொஞ்சம் சுதரிப்பா இரு

ராதை 🤗🤗
 

Advertisement

Advertisement

Back
Top