மனைவி - 37
12 வயது பெண், 'தினமும் பாத்திரம் கழுவுவேன்' என்று சொல்கிறாள் என்றால், அந்த வீட்டில் அவள் எத்தனை கொடுமைகளை அனுபவித்திருப்பாள்? ஸ்ரீராமுக்கு உள்ளம் வெடித்தது.
"இனிமே நீ இந்த வேலை எல்லாம் செய்யக்கூடாதுடா. அப்பாவும் அம்மாவும் பார்த்துப்போம். நீங்க ரெண்டு பேரும் போய் விளையாடுங்க, அப்பா இதோ வந்துடுறேன். இதெல்லாம் நான் வெளிநாட்டுல இருக்கும் போது டெய்லி செஞ்ச வேலைதான்," என்று மகளைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தவன், பாத்திரங்களைக் கழுவி அடுக்கிவிட்டுப் பிள்ளைகளைத் தேடி வந்தான்.
அவர்கள் இருவரும் உடைந்த விளையாட்டுப் பொருட்களை வைத்து ஏதோ உருட்டி விளையாடுவதைக் கண்ட போது அவனுக்கு மீண்டும் வலித்தது.
'மாதம் இவ்வளவு சம்பாதித்தும் என்ன புண்ணியம்? என் பிள்ளைகளுக்கோ, மனைவிகளுக்கோ ஒரு சின்ன சந்தோஷத்தைக் கூட நான் கொடுக்கலையே.'
"சம்பாதிச்சது எல்லாத்தையும் உன் பொண்டாட்டி கிட்ட கொடுத்துட்டேன்டா" என்று அவன் தாய் சொன்ன வார்த்தை எவ்வளவு பெரிய பொய் என்பதை அவன் இப்போது உணர்ந்தான்.
"மகா... சீதா... வாங்க, நாம ஓடிப் பிடிச்சு விளையாடலாம்!" என்று பிள்ளைகளை வராண்டாவிற்கு அழைத்து வந்தான். அங்கே மகள்களுடன் தானும் ஒரு சிறுவனாக மாறி விளையாடத் தொடங்கினான்.
ராதை இதையெல்லாம் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். ஸ்ரீராம் எவ்வளவு வளர்ந்திருந்தாலும், அவனுக்குள் இருந்த அந்தச் சிறுபிள்ளைத்தனம் வெளியே வருவதையும், அவன் பிள்ளைகளுடன் செலவிடும் அந்த நிமிடங்களையும் பார்க்கும்போது, மெல்ல மெல்ல அவனைக் குறித்து இருந்த கோபம் அவளிடம் கரையத் தொடங்கியது.
ராதை தன் பையில் இருந்து ஒரு 1500 ரூபாயை எடுத்துச் சீதாவிடம் கொடுத்தாள்.
"வீட்ல பால் இல்லை... அப்பா கூடப் போய் பாக்கெட் பால், சர்க்கரை, நைட்டுக்கு இட்லி மாவு, அரை கிலோ தக்காளி வாங்கிட்டு வாங்க."
அப்படியே ஸ்ரீராமைப் பார்த்து, "அப்படியே அப்பாவையும் ரெண்டு செட் நல்லதா டிரஸ் எடுத்துக்கச் சொல்லு," என்றாள். ஸ்ரீராம் கண்கள் நன்றியுடன் அவளைப் பார்த்தன.
"ராதா... நீயும் கிளம்பி வாயேன். நீ வந்து எனக்குச் செலக்ட் பண்ணித் தாயேன்," என்றான் கெஞ்சலாக.
"இதுவரைக்கும் நானா செலக்ட் பண்ணிக் கொடுத்தேன்? இப்ப மட்டும் என்ன? உங்க அப்பாவை போய் எடுத்துக்கச் சொல்லு சீதா," பட்டென்று சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தாள். அவன் விடாமல் பின்னாடியே சென்றான்.
"நீ வந்து எடுத்துக் கொடுத்தா தான் நான் எடுப்பேன். இல்லைன்னா இந்த அழுக்குச் சட்டையவே துவைச்சுப் போட்டுப்பேன்," என்றான் பிடிவாதமாக.
வேறு வழியில்லாமல், ராதை சலித்துக் கொள்வது போலத் தலையை ஒதுக்கிவிட்டு, செருப்பை மாட்டிக் கொண்டு கீழே இறங்கினாள். ஸ்ரீராம் இரு மகள்களின் கைகளையும் கெட்டியாகப் பிடித்தபடி, ஒரு முழுமையான குடும்பத்தலைவனாக அவள் பின்னால் நடந்தான்.
கடையில் குழந்தைகளுக்கு விதவிதமான ஆடைகள் மின்னின. ஆனால், அவர்களால் அதைப் பார்க்கத்தான் முடிந்தது, வாங்க முடியவில்லை. ஸ்ரீராம் ஒவ்வொன்றாக எடுத்துப் பிள்ளைகளுக்கு வைத்துப் பார்த்தான்.
"அப்பா வேலைக்கு போனதும் உங்களுக்கு நிறைய டிரஸ் வாங்கித் தர்றேன்டா... இப்ப அப்பா கையில காசு இல்லை. ஆனா சீக்கிரம் வேலை தேடிடுவேன். உங்களை எந்தக் குறையும் இல்லாம பாத்துப்பேன்," என்று அவன் சொல்லும் போது, அவனது இயலாமை அந்த வார்த்தைகளில் அப்பட்டமாகத் தெரிந்தது.
"இப்ப எதுக்கு பிள்ளைகளுக்கு டிரஸ்? அண்ணன் இப்பதான் எல்லாம் வாங்கிக் கொடுத்தாரு. உங்களுக்குத் தேவையானதை வந்து பாருங்க," என்று ராதை கறாராகச் சொல்லிவிட்டு ஆண்கள் பிரிவுக்கு அழைத்துச் சென்றாள்.
அந்த இரண்டு பிள்ளைகளும் எதையுமே கேட்கவில்லை. மற்ற பிள்ளைகளைப் போல 'அது வேணும், இது வேணும்' என்று அடம் பிடிக்கவில்லை. அவர்கள் அந்தப் புது ஆடைகளை அதிசயமான ஏதோ பொருளைப் பார்ப்பது போலப் பார்த்தார்களே தவிர, ஆசைப்படவில்லை. அந்தப் புரிதல் ஸ்ரீராமை இன்னும் ரணப்படுத்தியது.
ஸ்ரீராம் இறுதியில் தனக்காகக் குறைந்த விலையில் ஒரு டி-ஷர்ட்டும், ஒரு சட்டையும் எடுத்துக்கொண்டான். இரண்டும் சேர்த்து 700 ரூபாய் ஆனது. ஆனால், அந்த எளிய ஆடையில் அவன் கண்ட திருப்தி, அவன் சம்பாதித்த லட்சங்களில் அவனுக்குக் கிடைக்கவில்லை.
"கைல காசு இருக்கு... தயவுசெஞ்சு இன்னொரு பேண்ட் வாங்கிக்கோங்க." தன் கணவன் இப்படி ஒரு கிழிந்த கோலத்தில், அசிங்கமாக நாலு பேருக்கு முன்னாடி நிற்பதை அவள் மனது துளியும் விரும்பவில்லை.
அவன் மீது அவளுக்குக் கோபமும் ஆத்திரமும் எரிமலையாய் இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், அதற்காக அவன் தன் 'புருஷன்' இல்லை என்று ஆகிவிடுமா? ஊரே ஒதுக்கி வைத்தாலும், அவன் கட்டிய அந்த மஞ்சள் தாலி இன்னும் அவள் கழுத்தில் ஈரமும் ஈர்ப்புமாகத் தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அந்தத் தாலியின் பாரம் அவளுக்குத் தெரியும்.
அவன் பிள்ளைகள் இன்னும் அவளிடம் தான் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவன் கொடுத்த பிள்ளைகள் வேண்டும், அவன் கொடுத்த வாழ்வு வேண்டும் என்கிற போது, அவனை மட்டும் "வேண்டாம்" என்று எப்படி அவளால் உதறித் தள்ள முடியும்?
வேலைக்குச் செல்லும் பொழுது ஒரு கௌரவமான உடை வேண்டுமே என்பதற்காக, எவ்வளவோ ரகங்கள் இருந்தும், தன் கையிலிருந்த சுருங்கிய நோட்டுகளை எண்ணிப் பார்த்துவிட்டு, மிகக் குறைந்த விலையில் ஒரே ஒரு பேண்ட் மட்டும் எடுத்துக் கொண்டான்.
"இப்போதைக்கு இது போதும் ராதா... இதை வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். சீக்கிரம் நான் ஒரு நல்ல வேலையைத் தேடிட்டு, உனக்கும் பிள்ளைங்களுக்கும் எல்லாமே வாங்கிக்கிறேன்" என்றான் தாழ்ந்த குரலில். அந்தச் சொற்களில் ஒரு தோற்றுப்போனவனின் கையறு நிலை தெரிந்தது.
மூன்றையும் பில் போட்டுவிட்டு, பக்கத்திலிருந்த கடைக்கும் சென்று தேவையான மளிகைப் பொருட்களை வாங்கிக்கொண்டு பாரத்தோடு வீட்டிற்கு வந்தனர்.
அங்கே ரேணுகா மெல்லிய குரலில் கேட்டாள், "மாமா... இனிமேலாவது அண்ணாவும் அண்ணியும் ஒண்ணா இருப்பாங்க தானே? எந்தப் பிரச்சினையும் வராது தானே மாமா?"
பிரபாகரன் ஒரு பெருமூச்சை வெளிவிட்டான். "நான் என்ன பெரிய குறி சொல்றவனா ரேணுகா? எதிர்காலத்தை கணித்து சொல்றதுக்கு எனக்கு வராது. இனி எந்தப் பிரச்சினையும் வராதுன்னு நம்புவோம்... அப்படி ஒருவேளை வந்தா, அப்போ அதைப் 'பேஸ்' பண்ணிப் பண்ணிப்பாங்க. அப்படித்தான் வாழ்க்கை ஓடுது."
ரேணுகாவின் முகத்தில் ஒரு பயம் படர்ந்தது. "உங்க மாமியார் வந்து ஏதாவது புதுசா குடைச்சல் கொடுப்பாங்கன்னு பயமா இருக்கு மாமா."
"அவங்க ஒண்ணும் பண்ணலனா தான் பயப்படணும் ரேணுகா... ஏதாவது பண்ணுனா பயப்படத் தேவையில்லை. ஏன்னா, அவங்க அப்படித்தான்" என்று அவன் கசப்போடு சொன்ன அந்த விளையாட்டுத்தனமான பேச்சை ரசிக்கக்கூட அவளுக்கு விருப்பமில்லை.
"நீங்க முதல்ல போய் அக்காவை பார்த்துட்டு வாங்க. அவங்க உங்களைத் தேடுவாங்க. குழந்தைகளும் அவங்ககிட்ட போகல... அவங்க மனசுல என்ன நினைப்பாங்களோ?"
அவள் 'அலர்விழியைப்' பற்றித்தான் இவ்வளவு அக்கறையாகப் பேசுகிறாள் என்று தெரியாத அளவுக்கு அவன் முட்டாள் இல்லை.
"அவளாவாவது எங்களைத் தேடுறதாவது! நீ தேவையில்லாம கற்பனை பண்ணிட்டு இருக்காதே ரேணுகா. போ, போய் ஐஸ்வர்யாவைப் பாரு" என்று சட்டெனக் கோபமாகக் கத்தியவன், அந்த இடத்தை விட்டு விருட்டென எழுந்து சென்றான்.
தளர்ந்த நடையுடன், தோள்கள் தொங்கச் செல்லும் தன் மாமனைக் கண்டு ரேணுகாவின் விழிகள் கலங்கின.
எப்பொழுதும் கலகலவெனச் சிரித்த முகமாக, புத்துணர்வுடன் ஒரு சிங்கம் போல சுற்றும் மாமன் தொலைந்துவிட்டான் என்று அவளுக்குத் தோன்றியது.
'எப்படியாவது மாமா வாழ்க்கை திரும்பவும் பழையபடி சரியாகிடணும்' என்று மனமுருகி வேண்டிக்கொண்டாள்.
அரவிந்த் அவர்கள் இருவரையும் தூரத்திலிருந்து கண்காணித்துக் கொண்டிருந்தான். ஆனால், அவர்கள் இருவரிடமும் எந்தத் தப்பும் இருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. ஏதோ ஒரு ஆழமான பந்தம், சொல்ல முடியாத ஒரு புரிதல் அவர்கள் இருவருக்கும் இடையில் இருப்பதை அவன் உணர்ந்து கொண்டான்.
பிரபாகரன் மேலே வந்தபோது, மாடிப் படியில் அமர்ந்திருந்த மகனைக் கண்டு அப்படியே திகைத்து நின்றான்.
சட்டெனத் தன் முகபாவத்தை மாற்றிக் கொண்டவன், "அரவிந்த், ஐஸ்வர்யாவைத் தனியா விட்டுட்டு இங்க என்ன பண்ணிட்டு இருக்க?" என்று கேட்டான்.
"அப்பா... ஐஸ் இப்ப சத்யன் கூட விளையாடிட்டு இருக்கா. உங்க கிட்ட இதைக் கேட்கலாமா வேண்டாமான்னு தெரியல... ஆனா நானே யோசிச்சு ஒரு முடிவுக்கு வர்றதுக்குள்ள, உங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டுடணும்னு தோணுச்சுப்பா."
மகன் எதைப் பற்றிக் கேட்கப் போகிறான் என்று பிரபாகரனுக்கு ஓரளவுக்குப் புரிந்துவிட்டது. மகன்கள் ஒன்றும் இப்போது விவரம் தெரியாத சிறு பிள்ளைகள் அல்லவே!
"சரி வா... மொட்டை மாடிக்குப் போய் உக்காந்து பேசுவோம்" என்று மகனை அழைத்துக் கொண்டு சென்றான்.
அரவிந்த் தரையில் கால் நீட்டி அமர்ந்து, ஒரு நிமிடம் மௌனமாகத் தந்தையைப் பார்த்தான். "அப்பா... இந்த ரேணுகா ஆன்ட்டி யாரு? அவங்க உங்க ரிலேட்டிவா? உங்களுக்கு முன்னாடியே பழக்கம் இருக்காப்பா?"
அவன் தயக்கமாக, வார்த்தைகளை மென்று விழுங்குவதைக் கண்ட பிரபாகரன், தன் மகன் தோளில் தட்டிக்கொடுத்தான். "அரவிந்த்... ரேணுகா வெறும் 'ஆன்ட்டி' கிடையாதுடா."
"ரேணுகா என்னுடைய அத்தை பொண்ணு. என்னோட அப்பாவோட சொந்தத் தங்கச்சி பொண்ணு. குழந்தையிலிருந்து நம்ம வீட்டுல அம்மா கிட்டதான் வளர்ந்தா. அம்மாவும் அவளும் உயிர்த் தோழிகள். ஆனா ரேணுகா மனசுல, என் மேல ஒரு ஆசையை வளர்த்தது எனக்குத் தெரியாது. அவ ஒருதலையா என்னைக் காதலிச்சிட்டு வந்துருக்கா. ஆனா நானோ... உங்க அம்மாவை லவ் பண்ண..."
"உங்க வாழ்க்கையில நீங்க பண்ண மிகப்பெரிய தப்பும் பாவமும் என் அம்மாவை லவ் பண்ணதுதான்னு நான் நினைக்கிறேன்ப்பா!" அரவிந்த் ஆவேசமாகவும் ஆத்திரமாகவும் குறுக்கிட்டுக் கூறினான்.
பிரபாகரன் கசப்பாகச் சிரித்தான். தன் சொந்த மகன் வாயிலிருந்து வரும் வார்த்தை எவ்வளவு கொடூரமானது, அதே சமயம் எவ்வளவு உண்மையானது என்று அவன் உள்ளம் ரணமானது.
"உண்மைதான் அரவிந்த். அவளைக் கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம், அதை நினைச்சு வருத்தப்படாத நாள் என் வாழ்க்கையில இல்ல. இத்தனை வருஷம் வண்டி ஓடிடுச்சு... மிச்ச காலத்தையும் ஓட்டிட மாட்டோமான்னு ஒவ்வொரு நாளும் செத்துச் செத்து வாழ்ந்தேன். ஆனா இனிமேல் அவ கூட வாழவே முடியாதுங்கிற நிலைமையில என் மனசே கல்லாகிப் போச்சுடா."
"நீங்க ஏன் ரேணுகா ஆன்ட்டியை கல்யாணம் பண்ணிக்கல? அவங்க இவ்ளோ நல்லவங்களா, இவ்ளோ கேரிங்கா இருக்காங்களே! அப்படி ஒரு அம்மாவை ஏன் எங்களுக்குக் கொடுக்கல?" அரவிந்த் ஆதங்கமாகக் கேட்டான்.
ஆதங்கத்தை விட, அவனுள்ளே ஒரு தாயன்புக்காக ஏங்கிய நீண்ட கால ஏக்கம் அந்த வார்த்தைகளில் கசிந்தது.
ஒவ்வொரு நாளும் ரேணுகா அவர்களைப் பார்த்துக் கொள்ளும் அழகும், அவள் பொழியும் அன்பும் அவர்கள் இதுவரை அனுபவித்திராத ஒரு சொர்க்கம்.
தொடரும்....