Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் மண்ணில் விழுந்த நட்சத்திரம் அத்தியாயம் 3

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 3

ஆறுமுகம் திமிறினாள். ஆனால் அந்த உருவம் நல்ல தாட்டியான உடல் அமைப்பைக் கொண்டிருந்ததால் அவளால் அதை மீறி ஒன்றும் செய்ய முடிய வில்லை. கோழிக் குஞ்சை அமுக்கி விடுவது போல் அவள் வாயை ஒரு கையால் பொத்தி இன்னொரு கையால் இடுப்பை வளைத்து கால்களைத் தடுத்துக் கொண்டு தூக்கியது அந்த உருவம்.
அவள் உதைக்க முயன்றும் முடியவில்லை. அந்த உருவத்தின் கைகள் காப்பேறிப் போய் இருந்தன. மெல்ல படுத்திருந்த சிவாவைத் தாண்டி படலை காலால் உதைத்து குடிசையின் பின்புறமாய் நகர்ந்தது அந்த உருவம் ஆறுமுகத்தோடு.
குடிசைகளின் பின்புறம் ஒரு சாக்கடை ஓட அதன் மேல் ஒரு மண்பாலம் சிறியதாய் இருந்தது. அதைக் கடந்தால் ஒரே முள்ளுக்காடு. அங்கொன்றும் இங்கொன்றுமாய் டெல்லி முட்கள் நிறைந்த காடு. ஆறுமுகம் அங்கே கொண்டு செல்லப்பட்டாள். ஒரு அடர்த்தியான முள் மரத்தின் அடியில் கிடத்தப்பட்டாள். அந்த உருவம் அவளை உரிக்கத் துவங்கியது.
அப்போது தான் பக்கத்தில் ஒரு பெண்ணின் முனகல் சப்தம் கேட்டது. அந்த உருவம் கையில் கொண்டு வந்திருந்த தீப்பெட்டியின் ஒரு குச்சியை உரசி சப்தம் வந்த திசையை நோக்கி காட்ட அதன் மற்றும் ஒரு கை ஆறுமுகத்தின் வாயை இறுகப் பொத்தி இருந்தது.
தீக்குச்சியின் வெளிச்சத்தில் தெரிந்தது அந்த மல்லிகை வைத்த பெண்ணின் பவுடர் பூசிய முகமும், ஆறுமுகத்தின் அண்ணன் சேகரின் முகமும். சேகரைக் கண்டதும் அந்த உருவம் அவன் கண்ணில் படாதவாறு சட் என்று ஆறுமுகத்தை அங்கேயே போட்டு விட்டு சர சர என்று ஒலி எழுப்பியவாறு ஓடியது.
'யாரு தீ பொருத்துனது?'
'ப்ச். யாராவது கொல்லைக்கு வந்திருப்பாங்க. நீ பேசாம இரு' என்று கருமமே கண்ணாய் இருந்தான் சேகர்.
பத்து நிமிடம் கழிந்ததும், அவன் பீடியையும் தீப்பெட்டியையும் எடுத்துக் கொண்டு பற்ற வைத்துக் கொண்டான். அந்தப் பெண்ணிடம் நூறு ரூபாய்த் தாள் ஒன்றை நீட்டவே அது அவன் தலைமுடியை ஒரு சிலுப்பு சிலுப்பி விட்டு 'நான் வாரேன்' என்று நீட்டி முழக்கி விட்டு உடங்காடைக் கடந்து வெளியேறியது. நெஞ்சு முழுவதும் போன பீடி புகை நெஞ்சுக்கு ஒரு இதத்தையும், அனுபவித்த இன்பம் உடல் முழுவதும் நாடி நரம்பென ஓட, சேகர் தீர்ந்து போன பீடியை கங்கோடு தூக்கி வீசிவிட்டு சோம்பல் முறித்துக் கொண்டான். பின்னர் மெதுவாக எழுந்து லுங்கியை சரியாய் கட்டிக் கொண்டான். லுங்கியைத் தூக்கி முகத்தில் படிந்திருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்துக் கொண்டு இழுத்து மூச்சு விட்டுக் கொண்டான். பின்பு மெதுவாக இருளில் நடந்தான்.
சிறுநீர் வரும் உந்துதல் தோன்றவே, பாதையில் இருந்து விலகி ஒரு அடர்ந்திருந்த முள் செடி பக்கம் வந்தான். அதன் கீழ் லுங்கியை இடுப்பில் இறுகக் கட்டிக் கொண்டு உட்காரும்போது லேசாகத் தடுமாறவே சட் என்று கையை ஊன்றினான். அது ஒரு மனிதக் காலில் படும் உணர்வு தோன்றவே திடுக்கிட்டு தீப்பெட்டியை எடுத்து ஒரு குச்சியை உரசவே வெளிச்சத்தில் ஆறுமுகத்தின் முகம் தெரிந்தது.
சேகர் அதிர்ந்தான்.
பட் என்று அவள் முகத்தின் அருகில் சென்று தோள்பட்டையைப் பிடித்து உலுக்கினான்.
'ஆறுமுகம்.. ஏ ஆறு... '
அவள் மூடிய கண்களைத் திறக்காமல் இருக்கவே, பயந்து போனான்.
பாதை வழியே ஓடி, மண்பாலம் கடந்து ராக்காயி குடிசையை நெருங்கினான். படல் திறந்து கிடக்கவே உள்ளே சென்று கத்தினான்.
'ராக்காயி அக்கா, ராக்காயி அக்கா'
அமைதியான அந்த இரவில் அவனது ஓலம் பெரிதாய் கேட்கவே,
'யா...ரு..' என்று சொன்னவாறு மெல்ல எழுந்தாள் ராக்காயி.
'அக்கா நான் தான் சேகர்.'
ஒரு நிமிடம் தூக்க கலக்கத்தில் இருந்த ராக்காயி உணர்வு வந்தவுடன்,
'என்ன சேகர் இந்த நேரத்துல..?' என்று தலைமுடியை சுருட்டி கொண்டை போட்டுக் கொண்டாள்.
'ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்' என்று கொட்டாவி விட்டாள்.
'அக்கா, ஆறு.. அந்த முள் காட்ல...'
'ஆறா... ஏ ஆறு..' என்று சிவாவின் பக்கம் இல்லாத ஆறுவை அவள் எழுப்ப விழைய நிலைமை உணர்ந்து 'ஙீ' என்று விழித்தாள்.
'ஆறு... ஆறு எங்க போச்சு? என்ன சேகர் இது?' என கேட்க,
'அக்கா! அது முள்காட்ல இருக்குது. எனக்கு பயமா இருக்கு.' என்று சேகர் சத்தமிட்டான்.
'முள்ளு காடா?' சட் என்று திரும்பிய ராக்காயி பக்கத்தில் படுத்திருந்த கணவனை எழுப்பினாள்.
'யோவ் எழுந்திருயா! யோவ்...'
'ஏம்புள்ள... நிம்மதியா தூங்க வுட மாட்டியா.. சர்தான் படு..' என்ற அவன் மறுபடியும் திரும்பிப் படுத்தான்.
கோபம் அடைந்த ராக்காயி, 'அக்காங்க்.. அதுக்கு கூப்டலயா.. எந்திரிய்யா...நம்ம ஆறுமுகத்த காணோமாம்.. என்று எரிந்து விழுந்தாள்.
விருட் என்று எழுந்த செல்லமுத்து 'என்ன சொன்ன' என்றான்.
'எந்திரிய்யானா' என்ற ராக்காயி மூலையில் இருந்த பெட்ரோமாக்ஸ் லைட்டை பற்ற வைத்து எடுத்துக் கொண்டாள்.
செல்லமுத்து எழுந்து லுங்கியை சரி செய்து கொண்டு நிற்கவே 'முள்காட்டு பக்கம் போயிருக்குதாம்.' என்றவாறு லைட்டைத் தூக்கிக் கொண்டாள். 'இப்படி சொல்லாம கொள்ளாமயா போவும். என்ன எழுப்ப வேண்டியது தான.' என முனகினாள்.
அவள் முனகல் கேட்டதும் சேகர் அலறினான்.
'அக்கா! அவ அங்க படுத்திருக்கற கோலத்த பாத்தா எனக்கு பயமா இருக்குகா. உலுக்கி எழுப்புனாலும் எந்திருக்க மாட்டெங்குறா.'
'என்னடா இப்படி சொல்ற.. காத்து கருப்பு ஏதாச்சும் பட்ருச்சா. இந்த புள்ள போம்போது கூப்டுப் போகக் கூடாதா. நல்ல பொறுப்பான புள்ளன்னு நெனச்சேன்.. இப்டி பண்ணிட்டுதெ.'
சொல்லிக் கொண்டே ராக்காயி லாந்தரோடு முன்னே செல்ல செல்லமுத்துவும், சேகரும் தொடர்ந்தார்கள்.
மண்பாலம் தாண்டி முள்ளுகாட்டை நெருங்கியபோது சேகர் வழிகாட்டினான்.
'அக்கா! அந்த முள் மரத்துக்குக் கீழக்கா'
ராக்காயி அங்கு திரும்பி மரத்தை நோக்கி நடக்க, ஒரு துணிக்குவியலாய் ஆறுமுகம் தெரிந்தாள்.
'ஐயயோ.. என்ன ஆச்சு இவளுக்கு..ஏ ஆறு.. ஆறுமுவம்..' லாந்தரைக் கீழே வைத்து அவளை உலுக்கிய ராக்காயியின் கையில் அந்த வழவழப்பு படவே லாந்தரைக் கீழே இறக்கினாள்.
சட் என்று சேகரையும், செல்லமுத்துவையும் பாத்து 'நீங்க ரெண்டு பேரும் போய் செம்பகத்த எழுப்பி கூட்டிவாங்க..' என, சேகர் 'என்னக்கா... என்ன ஆச்சு..? என்றான்.
'மொதல்ல கூட்டிட்டு வா.'
அவர்கள் இருவரும் போய் செண்பகத்தை அழைத்து வர, அவள் என்னவோ ஏதோ என பயந்து விரு விரு என்று வந்தாள்.
'ஆறு.. ஆறு... என்னடி ஆச்சு ஒனக்கு.? மாரியாத்தா இப்ப தான் அழுது அழுது கண்ணீரு வத்திப் போச்சு.. இன்னும் எங்கிட்ட ஒனக்கு என்ன வேணும்?..'
புலம்பிகிட்டே வந்த செண்பகத்தைப் பார்த்து அதட்டினாள் ராக்காயி.
'ஏ சும்மா கூவாத..ஒம் புள்ளைக்கு ஒண்ணுமில்ல.. எல்லாம் நல்ல சமாச்சாரந்தான். புள்ள வயசுக்கு வந்துருக்கு..'
'என்னது...' என்று மடங்கி ஆறுமுகத்தின் அருகில் உட்கார்ந்தாள் செண்பகம்.
(தொடரும்)




 
என்ன கண்றாவி அண்ணன்
அவன்
ஆறுவ தூக்கிட்டு வந்தது
யார்
 
Top