வரம் 18

Advertisement

Writer girl

Well-known member
Member
அதே நேரத்தில் தனது பால் பண்ணையின் அலுவலக அறையில் உட்கார்ந்து கொண்டுக் கணக்கு, வழக்குகளை முனைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் மகிழம்பூவன்.

சற்று நேரத்திற்கு முன்பு தன் தந்தை தன்னிடம் தெரிவித்த விஷயத்தைப் பற்றிய யோசனை வந்து விடவும் உடனே தன் கையிலிருந்த நோட்டை மேசையில் வைத்து விட்டிருந்தான்.

அவனுக்குத் தன் மாமன் மகள் தன்னை எதற்காகத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தாள் என்பது நன்றாகவே தெரியும்.

ஆனால் அவள் ஏன் இந்த திருமணத்தை உடனே நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள் என்பதன் காரணத்தை தான் அவனால் அறிந்து கொள்ள முடியவில்லை.

ஒருவேளை தனது தொழிற்சாலையை வேகமாக நிறுவ வேண்டும் என்ற ஆசையின் உந்துதலால் இப்படி ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளாளோ? என்றெண்ணினான் மகிழம்பூவன்.

“ஓஹ்! அப்போ நீ எல்லாத்தையும் நல்லா பிளான் போட்டுட்டுத் தான் அதைச் செயல்படுத்திட்டு இருக்கிற!”என்று சஹஸ்ராவின் புத்திசாலித்தனத்தை எண்ணிப் பெருமிதம் அடைந்தவனோ, அவளது வழியிலேயே செல்ல முடிவெடுத்து விட்டான்.

அதேபோல், கறிக்கடையில் இருந்து வந்து பையைத் தனது மனைவியிடம் கொடுத்து விட்டு,”வாங்க சம்பந்தி. நல்லா இருக்கீயளா?”எனப் பால்ராஜ்ஜிடம் நலம் விசாரித்தார் ஆறுமுகம்.

“நல்லா இருக்கேன் சம்பந்தி. இப்படி வந்து உட்காருங்க”என்று தனக்குச் சற்றுத் தள்ளி இருந்த இடத்தைக் காட்டி அவரை அமரச் செய்து விட்டு,

“செந்திலு செல்லம்! தூக்கம் வருதா ப்பா”என்று தன் கண்களைக் கசக்கிக் கொண்டிருந்த பேரனிடம் வாஞ்சையாக கேட்டார் பால்ராஜ்.

அந்தக் குழந்தைக்கு என்னப் புரிந்ததோ,”மம்…மம்…”என்று அனத்த தொடங்கி விட்டான்.

உடனே,”மதிம்மா! புள்ளைக்குத் தூக்கம் வந்துடுச்சு. பால் ஆத்திக் கொடுத்து உறங்கப் போடு”என்று மகளை அழைக்க,

உடனே சமையலறையில் பால் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி விட்டு,”நான் அவனைத் தூங்க வச்சிட்டு வர்றேன்த்தை”எனத் தன் மாமியாரிடம் கூறினாள் வண்ணமதி.

“சரி. நான் குழம்பைக் கூட்டி வச்சுக்கிறேன். நீ அவனைப் பாரு”என்றுரைத்து விட்டார் முல்லைக்கொடி.

பாலைச் சூடு செய்ததும் அதில் நாட்டுச் சர்க்கரைப் போட்டு அதை மிதமான சூடு இருக்கும் வரை ஆற்றிப் பால் புட்டியில ஊற்றி எடுத்துக் கொண்டுத் தன் தந்தையிடம் சென்றாள் வண்ணமதி.

அவளது கரத்தில் இருந்த பால் புட்டியைக் கண்டதுமே,”ம்மா! ம்மா! ப்பால்”என்று அவளிடம் பாய முற்பட்டான் செந்தில்.

உடனே அவனைத் தனது மகளிடம் கொடுத்து விட்டார் பால்ராஜ்.

“இவனைத் தூங்க வச்சிட்டு வர்றேன்”என்று அவர்களிடம் பொதுவாக உரைத்து விட்டுத் தங்களது அறைக்குப் போய் விட்டாள் வண்ணமதி.

அதே சமயம் தனது வண்டியை வாசலில் நிறுத்தி விட்டு வீட்டினுள்ளே வந்த பூபாலனோ,

“வாங்க மாமா”எனத் தன் மாமனாரை வரவேற்றான்.

“ம்ஹ்ம். மாப்பிள்ளை!”என்று அவனுக்குப் பதிலளித்தார் பால்ராஜ்.

“கொடிம்மா! பாலன் வந்துட்டான்”என்று மனைவிக்கு அறிவித்தார் ஆறுமுகம்.

உடனே அவனுக்குக் குடிக்கத் தண்ணீர் முகர்ந்து கொண்டு வந்து கொடுத்து விட்டு,”உன் பொண்டாட்டி செந்திலைத் தூங்க வச்சிட்டு இருக்கிறாள்”என்று அவனது மனைவியைப் பற்றிய தகவலை கூறினார் முல்லைக்கொடி.

“சரிம்மா. நான் போய் ஒரு எட்டுப் பார்த்துட்டு வர்றேன்”என்று தெரிவித்து விட்டுத் தன் மனைவியை நாடிச் சென்றான் பூபாலன்.

அங்கே கட்டிலில் அமர்ந்து கொண்டுத் தன் மடியில் உறங்கிக் கொண்டிருந்த மகனின் வாயிலிருந்த பால் புட்டியை மெல்ல எடுத்து விட்டு அவனை அலுங்காமல், குலுங்காமல் மெத்தையில் கிடத்தி அவனுக்கு இருபுறமும் தலையணைகளை வைத்து விட்டு நிமிர்ந்த வண்ணமதியோ அறையின் வாயிலில் நின்றிருந்த கணவனைக் கண்டதும் பூவாய்ச் சிரிக்க,

உடனே தானும் அறைக் கதவை மெல்ல சாற்றி விட்டு உள்ளே நுழைந்து, தன் மனைவிக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு,

“இப்போ தான் தூங்குறாரா?”என அவளிடம் முணுமுணுப்பாய்க் கேட்டான் பூபாலன்.

“ஆமாங்க. சமையல் செய்றப்போ அழுக ஆரம்பிச்சிட்டான். அதனால் தான் தூங்க வைக்க வேண்டியாதாகப் போச்சு”என அவனுக்குப் பதிலளித்தாள் வண்ணமதி.

“ம்ஹ்ம்”என்றவனோ அவளது விரல்களைப் பிடித்து அதில் மென்மையாகத் தனது அதரங்களை ஒற்றி எடுக்கவும்,

“ஐ மிஸ் யூ, ங்க!”என்றிருந்தாள் மனைவி.

“நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்ம்மா. நீ இல்லாமல் என்னால் நைட் சரியாகத் தூங்கக் கூட முடியலை தெரியுமா?”என்றவனின் கன்னம் கொஞ்சி அதில் இதழைப் பதிக்க, அதை தானும் ரசித்துப் பெற்றுக் கொண்டான் பூபாலன்.

“அச்சோ! அத்தை மட்டும் தனியாகச் சமையல் செய்துட்டு இருக்காங்க. நானும் போய் அவங்களுக்கு உதவி பண்றேன்ங்க”என்று அவனிடம் கூற,

“சரிம்மா. நீ போயிட்டு வா. செந்தில் எழுந்துட்டா நான் பார்த்துக்கிறேன்”என்றுரைத்து அவளை அனுப்பி வைத்தான் கணவன்.

உடனே சமையலறையை அடைந்து மாமியாருடன் சேர்ந்து சமைக்கத் தொடங்கி விட்டிருந்தாள் வண்ணமதி.

“அப்பறம் சம்பந்தி, மகிழுக்கும், சங்குப்பூவழகிக்கும் கல்யாணம் உறுதி ஆயிடுச்சுப் போலவே?”என்று பேச்சை ஆரம்பித்தார் ஆறுமுகம்.

“ஆமாம் சம்பந்தி. நான் அதைப் பத்தி உங்க எல்லார் கிட்டேயும் பேசத் தான் இங்கே வந்தேன்”எனக் கூறினார் பால்ராஜ்.

“அப்படியா விஷயம்? சரிங்க சம்பந்தி. நாம சாப்பிட்டு முடிச்சிட்டு அதைப் பத்திப் பொறுமையாக உட்கார்ந்து பேசலாம்”என்று அவரிடம் கூறி விட,

அதே சமயத்தில்,”ஏங்க! சாப்பாடுத் தயாராகிடுச்சு. வாழையிலை அறுத்துட்டு வாங்க”என்று கணவனிடம் அறிவித்தார் முல்லைக்கொடி.

உடனே தங்கள் வீட்டிற்குப் பின்புறம் இருந்த வாழைத் தோப்பிற்குச் சென்று அங்கேயிருந்த மரத்தில் இலைகளை அறுத்து எடுத்துக் கொண்டுப் பால்ராஜ்ஜையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு உணவருந்த சென்றார் ஆறுமுகம்.

அதேபோல் தங்களது அறைக்கு வந்து கணவனைக் கூட்டிக் கொண்டு உணவருந்த கூடத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள் வண்ணமதி.

உடனே அனைவருக்கும் இலை போட்டு உணவைப் பரிமாறித் தானும் அவர்களுடன் சேர்ந்து உணவருந்தினார் முல்லைக்கொடி.

“மகிழு வீட்டுக்குப் போய்ச் சாப்பிடுவானாப்பா?”என்று தன் தம்பியைப் பற்றித் தந்தையிடம் விசாரித்தாள் வண்ணமதி.

“இல்லம்மா. அவன் காலையிலேயே சமைச்சுப் பாத்திரத்தில் போட்டுப் பண்ணைக்கு எடுத்துட்டுப் போயிட்டான்”என அவளுக்குப் பதில் சொன்னார் பால்ராஜ்.

“ஓஹ்! சரிப்பா”என்றவளோ, உணவில் கவனம் செலுத்தி விரைவாக உண்டு விட்டு அறைக்குச் சென்று மகனை ஒருமுறை பார்த்து விட்டு வந்தாள்.

அதேபோல் அவர்கள் அனைவரும் மதிய உணவை அருந்தி முடித்து விட்டுக் கூடத்தைச் சுத்தம் செய்து அங்குப் பாயை விரித்து அதில் அமர்ந்து கொண்டு உரையாடத் தொடங்கி விட்டார்கள்.

“மகிழுக்கும், அழகிக்கும் நிச்சயம் பண்ண நாள் குறிக்கனும் சம்பந்தி”என்றார் பால்ராஜ்.

உடனே,”இவங்க கல்யாணத்துக்கு நாள் குறிச்சி வாங்கின ஜோசியர் கிட்டேயே இவங்க நிச்சயத்துக்கும் நாளைக் குறிச்சி வாங்கிட்டு வந்துடலாம் சம்பந்தி”என அவருக்கு யோசனை கூறினார் ஆறுமுகம்.

“சரிங்க சம்பந்தி. நான் மகிழோட ஜாதகத்தை எடுத்துட்டு வர்றேன். அதே மாதிரி அழகியோட ஜாதகமும் இருந்தால் தானே நாள் குறிக்க முடியும்?”என்று கேட்டிருக்க,

“ஆமாம் சம்பந்தி. அழகியோட ஜாதகத்தை வாங்கிட்டு வந்துட்டீங்களா?”என்றார் முல்லைக்கொடி.

“இல்லத்தை. அவங்களே கொஞ்ச நாள் கழிச்சுக் குடும்பத்தோட இங்கே வரப் போறாங்க. அப்போ கொண்டு வரச் சொல்லனும்”எனத் தன் மாமியாரிடம் உரைத்தாள் வண்ணமதி.

“ஓஹோ! கல்யாணத்துக்கு அப்பறம் அந்தப் பொண்ணு இங்கே வந்து செட்டில் ஆகுமா?”எனத் தன் ஐயத்தை அவளிடம் கேட்டான் பூபாலன்.

உடனே,”க்கும்! என்னோட கவலையே அதான்ங்க! அவளுக்கு இங்கே எல்லாம் வசதியாகவே இருக்காது! அப்படி இருக்கும் போது அவ எப்படி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாள்ன்னு எனக்குத் தெரியலை!”என்று சலித்துக் கொள்ள,

“அட! நீ ஏன் இப்படி நினைக்கிற மதி? அவ அதையெல்லாம் யோசிச்சுப் பார்க்காமலா கல்யாணத்துக்குச் சம்மதிச்சு இருப்பாள்? அதெல்லாம் இங்கே வந்து நம்ம மனுஷ, மக்களைப் பார்த்ததுக்கு அப்பறம் அவ சரியாகிடுவா!”என அவளுக்குப் புத்திமதி சொன்னார் முல்லைக்கொடி.

“சரிங்கத்தை”என அதை மறு பேச்சுப் பேசாமல் கேட்டுக் கொண்டவளோ மகனின் அழுகுரலைக் கேட்டு அவனைத் தேடிப் போனாள் வண்ணமதி.

“என் பொஞ்சாதியோட ஆசையை நிறைவேத்தனும்னு தான் நானுமே இந்தக் கல்யாணத்தை நடத்த முடிவு பண்ணி இருக்கேன் சம்பந்தி. ஆனால் மதிக்கு இருக்கிற அதே பயமும், சந்தேகமும் எனக்குள்ளேயும் இருக்கு”என்று தன் மனதில் இருந்ததை அவர்களிடம் வெளிப்படுத்தினார் பால்ராஜ்.

“ஏன் சம்பந்தி அந்தப் பொண்ணு இன்னும் மாறவே இல்லையா? இன்னும் அப்படியே தான் இருக்காளா?”என வினவினார் முல்லைக்கொடி.

“ம்ஹ்ம். அங்கே போன முதல் ரெண்டு நாள் அப்படித் தான் இருந்தாள். அதுக்கப்புறம் இயல்பாகப் பேச ஆரம்பிச்சிட்டாள். ஆனால் அவ எனக்கு எப்பவும் கொடுக்க வேண்டிய மரியாதையைத் தரத் தயங்கவே இல்லை”என்றுரைக்கவும்,

“அப்பறம் என்ன சம்பந்தி? சரி, கல்யாணப் பேச்சு சுமூகமாக முடிஞ்சதுக்கு அப்பறம் மகிழுக் கிட்டே எப்படி நடத்துக்கிட்டாள்?”என்றிருந்தார் ஆறுமுகம்.

உடனே,”அதை நான் சொல்றேன்ப்பா”என்று தன்னிடம் மனைவிக் கூறியவற்றைத் தந்தையிடமும், தாயிடமும் பகிர்ந்து கொண்டான் பூபாலன்.

“அவங்க ரெண்டு பேருக்கும் புரிதல் இருந்தாலே போதும் சம்பந்தி. அதுவே அந்தப் பொண்ணை மாத்திடும்! அப்படி இல்லைன்னாலும் அவ பிறந்து, வளர்ந்த ஊர் இது! அதனால் அவ இங்கே வந்து கஷ்டப்படவும் மாட்டாள். நீங்க அவங்க ரெண்டு பேரோட ஜாதகத்தைக் கொண்டு வாங்க. நாம நாளைக் குறிச்சிடலாம்”என்று அவருக்குத் தைரியம் அளித்தார் முல்லைக்கொடி.

அதற்குப் பிறகு மாலையில் கண் விழித்திருந்தப் பேரனைக் கொஞ்சி விட்டு அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டுத் தங்களது வீட்டிற்கு வந்து விட்டிருந்தார் பால்ராஜ்.

அவர் வந்தடைந்த நேரத்திலேயே வீட்டை அடைந்து இருந்தான் மகிழம்பூவன்.

“அங்கே போய் உங்களோட சந்தேகத்தையும், பயத்தையும் அவங்க கிட்ட சொல்லி அறிவுரைக் கேட்டுட்டு வந்து இருப்பீங்களே ஐயா?”என அவரைச் சரியாக கணித்துக் கேட்க,

அதில் முறுவல் அளித்து,”ம்ஹ்ம். ஆமாம்ப்பா”எனப் பதிலளித்தார் தந்தை.

“நீங்க எல்லாரும் எங்களோட வாழ்க்கையைப் பத்திக் கவலைப்படாமல் கல்யாண வேலையில் மட்டும் கவனத்தை வைங்க ஐயா! நான் அழகியைப் பார்த்துக்கிறேன்”என்று அவருக்கு உறுதி அளித்தான் மகிழம்பூவன்.

“சரிப்பா. அழகிக்கு ஃபோனைப் போட்டு ஊருக்கு வரும் போது மறக்காமல் ஜாதகத்தைக் கொண்டு வரனும்னுத் தாக்கல் சொல்லிரு”என மகனுக்கு அறிவுறுத்தினார் பால்ராஜ்.

“சரிங்க ஐயா”என்றவனோ தனது அறைக்குள் நுழைந்து கொண்டுச் சஹஸ்ராவிற்குச் செல்பேசி அழைப்பு விடுத்துக் காத்திருக்கலானான்.

- தொடரும்
 

Advertisement

Advertisement

Back
Top