வரம் 30

Advertisement

Writer girl

Well-known member
Member
இப்போது அவனிடம் மேலும் தர்க்கம் செய்தால் தனக்குத் தான் அது கெடுதலாக முடியும் என்பதைப் புரிந்து கொண்டு அவனது வழிக்கே செல்ல முடிவெடுத்து,

“இது அவ்வளவாக நல்லா இல்லை! நீங்க வேற கலர் டிரை பண்ணுங்க” என்று அவனுக்கு உடை தேர்வில் தன் பரிந்துரைகளைச் சொல்ல ஆரம்பித்தாள் சஹஸ்ரா.

அதே சமயத்தில், இங்கே தன்னுடைய நண்பரின் அலுவலக அறையில் உட்கார்ந்து கொண்டு,”என் பொண்ணுகக்கும், தங்கச்சிப் பையனுக்கும் கூடிய சீக்கிரம் கல்யாணம் நடக்கப் போகுது கௌரவ். நிச்சயத்துக்குத் தேதியைக் குறிச்சி வாங்கியாச்சு! அதுக்காகத் தான், உன் கடைக்கு டிரெஸ் எடுக்க வந்திருக்கோம்”என்று அவருக்குத் தகவல் தெரிவித்தார் ரமணன்.

உடனே,”ஓஹோ! அப்படியா விஷயம்? இதை முதல்லயே எங்கிட்ட சொல்லி இருக்கலாம்ல? நான் அவங்க ரெண்டு பேருக்கும் கிஃப்ட் வாங்கிட்டு வந்து கொடுத்து இருப்பேன்ல?”என்று அவரிடம் குறைபட்டுக் கொள்ள,

“ஹேய்! பரவாயில்லைப்பா. அவங்களோட நிச்சயத்துக்குக் கண்டிப்பாக குடும்பத்தோட வந்துரு”என்றதும்,

“கண்டிப்பாக வந்துட்றேன்ப்பா. நீ போய் உனக்கும், அவங்க எல்லாருக்கும் டிரெஸ் எடுத்துட்டு எனக்குக் கால் பண்ணு. நாம எல்லாரும் ஹோட்டலுக்குப் போய் லன்ச் சாப்பிடலாம். நான் தான் பில் பே பண்ணுவேன். சரியா?”என்ற நண்பரிடம்,

“அதெல்லாம் வேண்டாம்ப்பா”என்று மறுத்துப் பேசிய ரமணனைக் கையமர்த்தி விட்டு,

“நான் சொன்னால் சொன்னது தான்! நீயும், நானும் இன்னைக்குத் தான் நேரில் சந்திச்சுப் பேசி இருக்கோம். அதுக்கு என்னோட ட்ரீட்”என்று கூறி அவரைச் சம்மதிக்க வைத்து அவருக்கானத் துணியைத் தேர்தெடுக்கச் செல்லுமாறு அறிவுறுத்தினார் கௌரவ்.

அப்போது தனக்கு ஏற்ற உடையைத் தேர்வு செய்து முடித்திருந்த மகிழம்பூவனோ, சஹஸ்ராவைத் தன்னுடன் அழைத்துக் கொண்டுத் தங்களது மற்றக் குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றனர்.

அங்கே தங்களுக்கான உடைகளைத் தேர்வு செய்து முடித்திருக்கிறார்கள் கஸ்தூரியைத் தவிர மற்றப் பெண்கள் இருவரும்.

அதைக் கண்டு கொண்டு,“என்னம்மா நீங்க இன்னும் டிரெஸ் செலக்ட் பண்ணலையா? அப்பா இன்னுமா அவர் ஃப்ரண்ட் கிட்டே பேசிட்டு இருக்காரு?”என்று தன்னுடைய தாயிடம் அக்கறையுடன் விசாரித்தாள் சஹஸ்ரா.

“ஆமாம் டி. ஆனால் நான் டிரெஸ் செலக்ட் செய்யும் போது அவருக்குக் கால் பண்ணச் சொல்லி இருந்தார்”என்றுரைக்கவும்,

“அப்போ இருங்க. நான் அவருக்குக் கால் செய்றேன்”எனத் தன் செல்பேசியை எடுத்து அதில் தந்தைக்கு அழைப்பு விடுக்க,

மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டு,“ஹலோ! சஹாம்மா”என்றக் குரல் வந்ததும்,

“ஹலோ அப்பா! இங்கே அம்மா நீங்க வராமல் இன்னும் டிரெஸ் செலக்ட் பண்ணாமல் இருக்காங்க. நீங்க வந்து உங்களுக்கும், அம்மாவுக்கும் டிரெஸ் எடுத்ததுக்கு அப்பறமாக உங்க ஃப்ரண்ட் கூடப் பேச்சு வார்த்தையைத் தொடரலாமே?”என்றாள் ஆதங்கத்துடன்.

“நான் இப்போ அங்கே தான் வந்துட்டு இருக்கேன்ம்மா. அதுக்குள்ளே நீயே கால் செஞ்சிட்டே”என்றுரைத்தவரோ,

தனது குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் இடத்தை வந்தடைந்து இருந்தார் ரமணன்.

“என்னப்பா, நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு நேரமாக அப்படி என்ன தான் பேசிட்டு இருந்தீங்க?”என அவரிடம் கேட்டாள் சஹஸ்ரா.

“அதுவா ம்மா?”என்றவரோ,

தனது நண்பருக்கும், தனக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலை அவளுக்கும் மட்டுமில்லாமல் அங்கேயிருந்த மற்றவர்களுக்கும் விவரித்து முடித்தார் ரமணன்.

“அப்போ சாப்பிட்டுட்டு அப்படியே நகைக் கடைக்குப் போய் நிச்சயத்துக்கு மோதிரங்களையும் வாங்கிட்டு வந்துடலாம்ங்க”என்று அவரிடம் தெரிவித்தார் கஸ்தூரி.

“சரிம்மா. இப்போ உனக்குச் சேலை செலக்ட் பண்ணலாம். வா”என்று தன்னுடைய மனைவிக்குத் துணியைத் தேர்வு செய்ய உதவி புரிந்தார் ரமணன்.

அதற்குப் பிறகு மகிழம்பூவனின் உடையின் நிறத்திலேயே விலையுயர்ந்தப் பட்டுப்புடவை ஒன்றைத் தேர்ந்தெடுத்து விட்டுத் தங்களுக்கான ஆடைகளைத் தெரிவு செய்து முடித்து விட்டிருந்தார்கள் ரமணன், ஆறுமுகம், பூபாலன் மற்றும் பால்ராஜ்.

அதேபோல், தாங்கள் உடைகளைத் தேர்வு செய்யும் வரைக்கும் அமைதியாக இருந்த குட்டிப் பையன் செந்திலுக்கு இரண்டு, மூன்று அழகழகான உடைகளைத் தேர்ந்தெடுத்து முடித்ததும்,

“நான் என் ஃப்ரண்ட் கால் செஞ்சி இங்கே வரச் சொல்றேன்”என்று தனது நண்பருக்கு அழைப்பு விடுத்து தங்களது இருப்பிடத்திற்கு வருமாறு அறிவித்தார் ரமணன்.

சில நிமிடங்கள் கழித்து அங்கே வந்த கௌரவ்,”என்ன எல்லாருக்கும் டிரெஸ் எடுத்தாச்சா?”என்றதும்,

“எடுத்தாச்சு சார்”என்றுரைத்தார் பால்ராஜ்.

“ஓகே சார். உங்க எல்லாருக்கும் இங்கே இருந்த கலெக்ஷன்ஸ் பிடிச்சு இருந்துச்சா?”என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கையில்,

“நான் பில் கொடுத்துட்டு வர்றேன்”என்று கூறிய ரமணனிடம்,

“நானும் உங்க கூட வர்றேன் மாமா”என்று அவருடன் சென்று அவர் சொல்ல, சொல்லக் கேட்காமல் அந்த உடைகளுக்கானப் பாதிப் பணத்தை தன் பங்காகச் செலுத்தி இருந்தான் மகிழம்பூவன்.

அதற்குப் பிறகு அவர்கள் அனைவரும் காரில் பயணித்து ஒரு உயர்தரமான உணவகத்தை அடைந்து உள்ளே சென்றதும்,

சஹஸ்ரா, மகிழம்பூவன் மற்றும் பூபாலன், வண்ணமதி, அவர்கள் மகன் செந்தில் ஒரு டேபிளையும், ஆறுமுகம், முல்லைக்கொடி மற்றும் பால்ராஜ் ஒரு டேபிளையும், கஸ்தூரி, ரமணன் மற்றும் அவரது நண்பர் கௌரவ் ஒரு டேபிளையும் ஆக்கிரமித்துக் கொள்ள, தங்களுக்கான விருப்ப உணவு வகைகளை ஆர்டர் கொடுத்து விட்டுத் தங்களுக்குள் பொதுவான விஷயங்களைப் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

“இவனுக்குப் பருப்பு சாதமா?”எனச் செந்திலைக் காட்டி வண்ணமதியிடம் கேட்டாள் சஹஸ்ரா.

“ஆமாம். காரம் இல்லாமல் ஏதாவது வெரைட்டி ரைஸ் இருந்தால் ஊட்டுவேன்”என்று அதைப் பற்றிய தகவலைச் சர்வரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு அதைக் கொண்டு வருமாறு அவரிடம் கூறி அனுப்பி வைத்தாள்.

“நான் இவனுக்குப் பொம்மை வாங்கித் தர்றேன்னுச் சொல்லி இருக்கேன் தானே? நகைக் கடைக்குப் போய் மோதிரம் வாங்குனதுக்கு அப்பறமாக நாம மட்டும் காரில் போய் இவனுக்குப் பிடிச்சதை எல்லாம் வாங்கலாம்”என்று தன்னிடமும், தன் மனைவியிடமும் அறிவுறுத்தியவளிடம்,

“நீங்க ரெண்டு பேரும் போய் வாங்கிட்டு வாங்களேன்!”எனச் சஹஸ்ரா மற்றும் மகிழம்பூவனிடம் வினவினாள் வண்ணமதி.

அதில் சட்டென்று முகம் வாடிப் போய்,”ஏன்? என் கூட வர மாட்டீங்களா?”என்று அவளிடம் கம்மிய குரலில் கேட்க,

உடனே,”அச்சோ! அப்படியில்லாம் இல்லை! காலையிலிருந்து அலைச்சல் அதிகம்! நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் இவனைச் சீக்கிரம் தூங்க வைக்கனும். அதான்”என அவளுக்கு விளக்கம் அளிக்க,

அதில் ஒருவாறு சமாதானம் அடைந்து,”சரி மதி”என்றவளோ,

தனக்கு அருகில் அமர்ந்திருந்த மகிழம்பூவனிடம்,”நீங்க என்னச் சொல்றீங்க?”என்று வினவி அவன் முகத்தைப் பார்த்தாள் சஹஸ்ரா.

அதற்கு,”நாம ரெண்டு பேரும் போயிட்டு வர்றதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை அழகி”எனத் தானும் சம்மதித்து விட்டான்.

“அப்போ சரி”என்றச் சமயத்தில், அவர்களுக்கான உணவு வந்து விடவும் உண்ணத் தொடங்கினர்.

தன் முன்னால் இருந்தது பல வண்ணப் பாத்திரங்களில் இருந்த கலவையான உணவுகளைக் கண்டதும் குஷியாகி விட்டான் செந்தில்.

அதனால் அவற்றைத் தன் பிஞ்சுக் கரங்களால் பிடித்து இழுக்க ஆரம்பித்து விட,”செந்திலு! அடி வாங்குவ! ஆ காட்டு”என அவனை வாயைத் திறக்கச் சொல்லி உணவை ஊட்டினாள் வண்ணமதி.

“இங்கே எல்லா சாப்பாடும் நல்லா இருக்கே! அதுவும் எண்ணெய் அதிகமாக இல்லாமல், சாப்பிட்ற மாதிரி இருக்கு!”என்று உணவைப் புகழ்ந்து கொண்டே உண்டார் ஆறுமுகம்.

“உங்க வீட்டில் இவ்வளவு பெரிய விசேஷம் நடக்கப் போகுது! எங்கிட்ட அந்தக் குறிப்பிட்ட நேரத்துக்குத் தான் சொல்லுவாரா உங்கப் புருஷன்? இதையெல்லாம் நீங்க கேட்க மாட்டீங்களா?”எனத் தனது கணவனைப் பற்றிப் புகார் வாசித்த கௌரவ்விடம்,

“சாரிண்ணா. நிச்சயம் எங்க சொந்த ஊரில் நடக்குது. அங்கே இங்கிருந்து நம்ம வட்டத்துக்குள்ளே இருக்கிறவங்க வருவாங்களான்னு எங்களுக்கே சந்தேகம் தான். அதனால் தான் இன்னும் இதை யாருக்கும் சொல்லலை”என்று மன்னிப்புக் கோரினார் கஸ்தூரி.

“அதெல்லாம் மனசு வச்சா எங்க நல்ல காரியம் நடந்தாலும் வருவோம்மா. அதே மாதிரி உங்களுக்குக் கொடுப்பினை இருக்கப் போய்த் தான் உங்கப் பொண்ணைச் சொந்தம் விட்டுப் போகக் கூடாதுன்னு அவளோட தாய்மாமா மகனுக்கே கட்டிக் கொடுக்கிறது மட்டுமில்லாமல் உங்கப் பூர்வீகத்திலேயே நிச்சயத்தார்த்தத்தையும் வைக்க முடிஞ்சது! எல்லாம் நல்லதாகவே நடக்கும்! அந்த விசேஷத்துக்கு நாங்க எல்லாரும் வருவோம்”என்று அவருக்கு உறுதி அளித்து விட, அவர்களும் உணவுண்பதில் கவனம் செலுத்தினர்.

- தொடரும்
 

Advertisement

Advertisement

Back
Top