வரம் 31

Advertisement

Writer girl

Well-known member
Member
சிறிது நேரத்திற்குப் பிறகு அனைவரும் உணவுண்டு முடித்து விட்டிருக்கவும், அவர்கள் எல்லாரையும் ஒரு விலையுயர்ந்தப் பொருட்களை விற்பனை செய்யும் பேரங்காடிக்கு அழைத்துச் சென்று தன் செலவில் ஜோடிக் கடிகாரங்களை வாங்கி,

“இது உங்க நிச்சயத்தார்த்தத்துக்காக நான் கொடுக்கிற பரிசு”என்று சஹஸ்ரா மற்றும் மகிழம்பூவனிடம் பரிசாகக் கொடுத்து அவர்களுக்குத் தன் வாழ்த்தைத் தெரிவித்தார் கௌரவ்.

அவரது அந்த தூய்மையான அன்பில் அவர்கள் இருவரும் மட்டுமில்லாமல் அவர்கள் வீட்டாரும் நெகிழ்ந்து போயினர்.

“ரொம்ப தாங்க்ஸ் சார்”என்று தனக்கு நன்றி கூறிய சஹஸ்ரா மற்றும் மகிழம்பூவனிடம்,

“இட்ஸ் ஓகே! உங்க நிச்சயத்துக்கு நான் நேரில் வந்தும் வாழ்த்துச் சொல்லுவேன்”என்று கூறி விட்டுத் தன் நண்பர் ரமணனிடம், அவரது மற்றக் குடும்ப உறுப்பினர்களிடமும் விடைபெற்றுக் கொண்டுக் கிளம்பி விட்டார் கௌரவ்.

“நல்ல மனுஷனா இருக்காரு!”என்று அவரைப் புகழ்ந்தார் பால்ராஜ்.

அதேபோல் தங்களுக்குப் பரிசாக கிடைத்திருக்கும் அந்த இரண்டு கைக்கடிகாரங்களையும் பார்வையிட்டுக் கொண்டார்கள் சஹஸ்ரா மற்றும் மகிழம்பூவன்.

“இது இப்போ தான் சமீபத்தில் மார்க்கெட்டில் வந்திருக்கிற புது மாடல்”என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து இருந்தாள் சஹஸ்ரா.

“அப்படியா? எங்கே கொடுங்கப் பார்ப்போம்”என்று அவ்விரண்டையும் கேட்டு வாங்கிப் பார்த்து அதில் இருந்தவற்றை எல்லாம் பரிசோதித்துப் பார்த்து விட்டு அவற்றை அப்படியே அவர்கள் இருவரிடமும் திருப்பித் தந்து விட்டாள் வண்ணமதி.

“சரி! இப்போ நிச்சயத்தார்த்தத்துக்காக மோதிரங்களை வாங்கனும்ல? இப்படியே மசமசன்னு இருந்தால் எப்படி? பொழுது சாயுறதுக்குள்ளே அதையும் வாங்கிட்டு வீட்டுக்குப் போகலாம்”என்று அனைவருக்கும் அறிவுறுத்தினார் முல்லைக்கொடி.

அதில் அடுத்த சில நிமிடங்களில் அந்த நகரத்தில் இருந்த மிகவும் பிரபலமான நகைக் கடைக்குள் நுழைந்து நிச்சயத்தார்த்த மோதிரங்களைப் பார்வையிடத் தொடங்கி இருந்தனர்.

“நான் ஒரு யோசனை சொல்லவா? அழகிக்கும், மகிழுக்கும் தானே நிச்சயம்? அப்போ இவங்க ரெண்டு பேரும் மோதிரங்களைப் பார்த்து எடுக்கட்டும். நாம அங்கே போய் உட்காரலாமா?”என்று சற்றுத் தள்ளிப் போடப்பட்டிருந்த நாற்காலிகளைச் சுட்டிக் காட்டிக் கேட்டார் ஆறுமுகம்.

அதற்கு மற்றவர்களும் ஒப்புக் கொள்ள, காலையிலிருந்து இப்பொழுது வரை இந்த மாதிரியான குளிரூட்டப்பட்ட மற்றும் சுற்றிலும் அடைக்கப்பட்டிருந்த இடங்களில் அலைந்து கொண்டே இருப்பதால் குட்டிப் பையன் செந்திலின் நிலை மிகவும் மோசமாகி விட்டிருந்தது.

அவனுக்கு மூச்சு முட்டத் தொடங்கி விட்டது போலும்!

அதனால் தனது குட்டி இளஞ்சிவப்பு இதழ்களைப் பிதுக்கி,”போவோ…”என்று பெருங்குரலெடுத்து அழத் தொடங்கி விட்டான் செந்தில்.

அதில் கடையில் இருந்த அனைவருமே அவர்களது குடும்பத்தைப் பார்ப்பதில் சங்கடம் அடைந்து,“நான் இவனைக் கொஞ்ச நேரம் வெளியே கூட்டிட்டுப் போய் வேடிக்கைக் காட்டிட்டு வர்றேன்”என்றப் பூபாலனிடம்,

“நானும் வர்றேன்ங்க”என்றுரைத்து தன் கணவன் மற்றும் மகனுடன் சேர்ந்து தானும் கடைக்கு வெளியே சென்று விட்டாள் வண்ணமதி.

அதற்குப் பிறகுப் பெரியவர்களும் தள்ளிப் போய் உட்கார்ந்து விடத் தாங்கள் இருவரும் மட்டும் தங்களுக்கான நிச்சயத்தார்த்த மோதிரங்களைப் பார்வையிட ஆரம்பித்து விட்டார்கள் சஹஸ்ரா மற்றும் மகிழம்பூவன்.

“நீங்க இந்த மாடல்ஸில் இருந்து ஏதாவது மோதிரங்களைச் செலக்ட் செய்றீங்களா? இல்லைன்னா, நான் இன்னும் நிறைய மாடல்ஸ் எடுத்துக் காட்டவா?”என்று இவர்களிடம் அனுமதி கேட்டார் அந்த நடுத்தர வயது ஆண் விற்பனையாளர்.

அதற்கு,”ம்ஹ்ம். காட்டுங்கண்ணா”என்று கூறி அவருக்கு அனுமதி அளித்திருந்தான் மகிழம்பூவன்.

உடனே தன் மலர்ந்த முகத்துடன் அங்கேயிருந்த மற்ற வித்தியாசமான வடிவமைப்புகளைக் கொண்ட ஜோடிகளுக்கானப் பிரத்தியேகமான மோதிரங்களை எடுத்து அவர்கள் முன்பு காட்சிப்படுத்தி விட்டிருந்தார்.

அவற்றைத் கண்களில் பிரம்மிப்புடன் பார்த்தார்கள் இளம் ஜோடிகள்.

அதில் மிகவும் நல்ல வேலைப்பாட்டுடன் இருந்த ஜோடி மோதிரங்களைத் தாங்கள் இருவரும் ஒருமித்த மனதுடன் தேர்ந்தெடுக்கத் தொடங்கினர் சஹஸ்ரா மற்றும் மகிழம்பூவன்.

இதே சமயம் கடைக்கு வெளியே தங்களது மகனுக்குக் வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்த நேரத்தில்,”எனக்கு நம்மளோட நிச்சயத்தார்த்த நாளில் நடந்தது எல்லாம் ஞாபகம் வந்துடுச்சுங்க”என்று தன் கணவனிடம் மலர்ந்து விகசித்த முகத்துடன் தெரிவித்தாள் வண்ணமதி.

“அப்படியா விஷயம்?”என்று காக்காவைக் காட்டிச் செந்திலின் கவனத்தை திசை திருப்பி விட்டு அவளின் வதனத்தைக் காதலுடன் நோக்கினான் பூபாலன்.

என்ன தான், தங்கள் இருவருக்கும் வீட்டில் பார்த்து நடத்தி வைத்த திருமணம் என்றாலும் கூட இப்போது வரையிலும் தாங்கள் இருவரும் அன்னியோன்யமாகத் தங்களது இல்லற வாழ்க்கையை நடத்தி வந்து கொண்டிருப்பதற்கு அடையாளமாக அவர்கள் இருவரும் கண்களிலேயே காதல் மொழிப் பேசிக் கொண்டார்கள் அந்தத் தம்பதி.

“நாயி!”என்று அங்கே தெருவில் சுற்றிக் கொண்டிருந்த நாயை அடையாளம் கண்டு கொண்டு அதன் பெயரைக் கூறியத் திருப்தியில் தன்னுடைய பெற்றோரிடம் கூறிப் பெருமை பொங்கச் சிரித்தான் செந்தில்.

அதில் தங்களது காதல் பரிமாற்றங்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு, மகனிடம் கவனத்தை திருப்பினர் பூபாலன் மற்றும் வண்ணமதி.

அதே நேரத்தில் கடைக்குள் தங்களது கவனத்தை மிகவும் ஈர்த்த அழகான வேலைப்பாடுகள் நிறைந்திருந்த இரண்டு மோதிரங்களைத் தேர்ந்தெடுத்து விட்டிருந்தார்கள் சஹஸ்ராவும், மகிழம்பூவனும்.

அவ்விரு மோதிரங்களிலும், குட்டிக் குட்டியாக இரண்டு இதய வடிவங்கள் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்து இருந்தது.

அவற்றைத் தங்களது குடும்பத்திடமும் காட்டி அவர்களது விருப்பத்தையும் கேட்டுக் கொண்டு விட்டுத் தன் செல்பேசியில் தமக்கைக்கு அழைத்து,”அக்கா! நாங்க மோதிரங்களைச் செலக்ட் பண்ணிட்டோம். நீங்க மூனு பேரும் வந்து பாருங்க”என்று அவளிடம் அறிவித்தான் மகிழம்பூவன்.

அதைக் கேட்டதும்,”சரிடா. இதோ வர்றோம்”என்று கூறி அழைப்பைத் துண்டித்து விட்டு அந்தச் செய்தியைத் தனி கணவனிடம் தெரிவித்தாள் வண்ணமதி.

“அப்போ உள்ளே போகலாம்மா”என்றான் பூபாலன்.

உடனே தங்களது மகனுடன் கடைக்குள் சென்று தங்கள் குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் இடத்தை அடைந்தனர்.

அவர்கள் வந்ததும்,”இங்கே பாருங்க. இதை தான் செலக்ட் செஞ்சி இருக்கோம்”என்று அவர்களிடம் மோதிரங்களைக் காட்டினார்கள் சஹஸ்ராவும், மகிழம்பூவனும்.

அவற்றை வாங்கிப் பார்த்து விட்டு,”சூப்பராக இருக்கு! நீங்கப் பொறுமையாகப் பார்த்து நல்லதாகச் செலக்ட் பண்ணி இருக்கீங்க!”என்று மனதாரப் பாராட்டினர் பூபாலன் மற்றும் வண்ணமதி.

அதற்குப் பிறகுத் துணிக்கடையில் நடந்து கொண்டதைப் போலவே இங்கும் தனது தாய்மாமன் சொல்லச், சொல்லக் கேட்காமல் நிச்சய மோதிரங்களுக்கானத் தன் பங்குப் பணத்தைச் செலுத்தி விட்டிருந்தான் மகிழம்பூவன்.

“ஹப்பாடா! நிச்சயத்தார்த்தத்துக்குத் தேவையான முக்கியமானதை எல்லாம் வாங்கியாச்சு. ரொம்பக் களைப்பாக இருக்கு! இப்போ வீட்டுக்குக் கிளம்பலாமா?”எனக் கேட்டார் கஸ்தூரி.

“ஆமாம். எனக்கும் முடியலை! காலெல்லாம் நோவுது! காப்பித் தண்ணீர்க் கூட வேணாம். அப்படியே தலையணையில் தலையைச் சாய்க்கனும் போல இருக்கு”என்று அவருடன் சேர்ந்து தானும் ஒத்து ஊதினார் முல்லைக்கொடி.

அவர்களைப் போலவே தாங்களும் மிகவும் சோர்வாக இருப்பதாக உரைத்தார்கள் பால்ராஜ் மற்றும் ரமணன்.

அதனாலேயே,”அப்போ நீங்க எல்லாரும் வீட்டுக்குப் போங்க. நாங்க ஒரு காரை எடுத்துட்டு இவங்களுக்குக் கிஃப்ட்ஸ் வாங்கிட்டு வர்றோம்”எனப் பூபாலன், வண்ணமதி மற்றும் செந்திலைக் காட்டிக் கூறினாள் சஹஸ்ரா.

“இப்போவே போய் வாங்கிட்டு வரனுமா அழகிம்மா? இன்னொரு நாள் கூடப் போகலாம்ல? உங்களுக்கும் சோர்வாகத் தானே இருக்கும்? அதான் கேட்டேன்”என்று அவளிடம் அக்கறையுடன் வினவினார் பால்ராஜ்.

“இன்னொரு நாள் எல்லாம் இப்படி வெளியே வர்றதுக்கு நேரம் இருக்குமான்னுத் தெரியலை மாமா! அதனால் நாங்க இப்போவே போய் வாங்கிட்டு வந்துட்றோமே?”என்று கெஞ்சலுடன் கேட்க,

“சரி. போயிட்டு வாங்க. ஆனால் சீக்கிரம் வந்துடனும். இதுக்கப்புறம் நீங்க ரெண்டு பேரும் அடிக்கடி வெளியே போக கூடாது!”என்று அவர்களுக்கு உத்தரவிட்டார் கஸ்தூரி.

உடனே,”இனிமேல் நீங்க சொல்ற மாதிரியே நடந்துக்கிறோம்”என அவருக்கு உறுதி அளித்து விட்டுத் தாங்கள் மட்டும் காரில் ஏறிப் பேரங்காடிக்குப் பயணமானார்கள் சஹஸ்ரா மற்றும் மகிழம்பூவன்.

அவர்கள் கிளம்பிய சில நிமிடங்களிலேயே தாங்களும் மற்றக் கார்களில் ஏறிப் பயணம் செய்து வீட்டை அடைந்திருக்க,

அந்த நாள் முழுவதும் வெளியே சுற்றிய அலுப்பில் தத்தமது அறைகளில் புகுந்து ஓய்வெடுக்கத் தொடங்கினார்கள் மற்றவர்கள்.

தாங்கள் பயணித்துக் கொண்டிருந்தக் காரின் ஓட்டுநர் அறியாதபடிக்குத் தனது அருகிலிருந்த பெண்ணவளின் வெண்டைப் பிஞ்சு விரல்களை மிருதுவாகப் பற்றினான் மகிழம்பூவன்.

அதில் தனது உடலில் ஏற்பட்ட ரசாயன மாற்றத்தின் விளைவால் தானும் அவனை ஏறிட்டுப் பார்த்து,”என்னப் பண்றீங்க?”என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் வினவினாள் சஹஸ்ரா.

தனது செய்கையின் காரணத்தால் அவளிடம் தோன்றிய சிலிர்ப்பு, வெட்கம் மற்றும் அதிர்வுடன் சேர்த்து அவளது கண்களில் வழிந்த காதலையும், குறுகுறுப்பையும் கண்டுத் தானும் உணர்ச்சிப் பிரவாகத்தில் சுற்றியிருந்த அனைத்தையும் மறந்து விட்டிருந்தான் மகிழம்பூவன்.

“ஹலோ! மிஸ்டர். பூவன்! என்னப் பண்றீங்கன்னுக் கேட்டேன்”என்று சற்றே உயர்த்திய குரலில் கேட்டவளிடம்,

“நான் ஒன்னுமே பண்ணலையே அழகி!”எனக் காதல் மயக்கத்துடன் மொழிய,

“ஓஹோ! அப்போ இது என்ன?”என்று தங்கள் இருவரது கரங்களும் ஒன்றோடொன்றுப் பிண்ணிப் பிணைந்து கொண்டு இருப்பதை அவனிடம் காட்டி வினவினாள் சஹஸ்ரா.

“இது எனக்கு இப்போ தேவைப்படுது! அதான்! உனக்குப் பிடிக்கலைன்னா வேண்டாம்”என்றுரைத்து தன் கரத்தை அவளது கரத்தில் இருந்து பிரித்தெடுக்க முயன்ற போது,

“எனக்குப் பிடிக்கலைன்னு நான் சொல்லவே இல்லையே”என்றவளை வியப்புடன் பார்த்தான் மகிழம்பூவன்.

“இப்போ எதுக்கு என்னை இப்படி பார்க்கிறீங்க?”என்றாள் சஹஸ்ரா.

“அஃது… உனக்கு இதெல்லாம் பிடிக்குமான்னு எனக்குச் சந்தேகம் இருந்துச்சு. அதனால் தான் நீ இதில் உனக்குப் பிரச்சினை இல்லைன்னுச் சொன்னதும் எனக்கு ஆச்சரியம் ஆயிடுச்சு!”என அவளுக்கு விளக்கம் அளிக்க,

“அப்படியா? ஓஹ்! கமான்! நமக்கு இன்னும் கொஞ்ச மாசத்துல கல்யாணம் ஆகப் போகுது! அதே மாதிரி எனக்கும் உங்களைப் பிடிக்கும்னு நான் உங்ககிட்ட முன்னாடியே சொல்லி இருக்கேன்னு நினைக்கிறேன்! அதனால் நீங்க எங்கிட்ட எதுக்காகவும் பயந்து, சங்கடப்படனும்னு அவசியம் இல்லை!”என்றுரைத்து விட்டுத்

தனது கரத்தால் அவனது கரத்தை இறுக்கிக் கொண்டாள் சஹஸ்ரா.

அதில் தனது சர்வாங்கம் முழுவதும் அவளிடம் அடிமையாகி விட்டதை உணர்ந்து அவளைத் தனது தோளில் சாய்த்துக் கொண்டு அந்தப் பயணத்தை ரசிக்கலானான் மகிழம்பூவன்.

- தொடரும்
 

Advertisement

Advertisement

Back
Top