வரம் 33

Advertisement

Writer girl

Well-known member
Member
தங்களது திருமண நிச்சயதார்த்தத்தை மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தார்கள் மகிழம்பூவனும், சஹஸ்ராவும்.

ஏனெனில் அவர்களுக்குத் தங்களது இணையின் மீதான நேசம் இப்பொழுது இன்னும் அதிகமாகத் தங்களுக்குள் ஊற்றெடுத்துக் கொண்டிருப்பதை அவர்கள் இருவருமே உணர்ந்து கொண்டிருந்ததாலேயே இந்த இடைக்காலப் பிரிவை எதிர்கொள்ள முடியாமல் தவித்தனர் மகிழம்பூவன் மற்றும் சஹஸ்ரா.

இதில் காதலில் திளைத்து இருந்தாலும் கூடத் தனது புதியத் தொழிற்சாலையைத் திறக்கும் கனவை மட்டும் மறக்கவே இல்லை பெண்ணவள்.

அதற்கான வேலைகளை ஆரம்பிப்பதற்குத் தயாராக இருந்தாள் எனலாம்.

ஆனால் அந்தக் கனவிற்கு இணையாக மகிழம்பூவனின் மீதும் அவளுக்குக் காதல் துளிர்த்து விட்டிருந்தது தான் விந்தையிலும் விந்தை!

ஏனெனில் தனது கனவுத் தொழிற்சாலையை முதன்மையாக வைத்து தான் இந்த திருமணத்திற்குச் சம்மதித்து இருந்தாள் சஹஸ்ரா.

அவள் தங்களது இருவரின் சிறு வயதிலிருந்தே அவனைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள்! அதுவும் தான் கோபத்தில் சிலிர்த்துப் பேசினாலும், தன்னிடம் மென்மையாகவும், இனிமையாகவும் பதில் பேசும் அவனிடம் யாருக்குத் தான் கோபம் வரும்?

அதேபோல் தன்னுடன் சரிக்குச், சரியாகச் சண்டையிடும் வண்ணமதியையும் அவன் திறமையாக கையாண்டு விடுவான்!

அதைக் கண்டுச் சில நேரங்களில் தன்னை அறியாமலேயே அவனை வியப்பாகப் பார்த்துக் கொள்வாள் சஹஸ்ரா.

அதற்குப் பிறகுத் தாங்கள் குடும்பத்துடன் தங்களது பூர்வீகத்திற்கு வரும் போதெல்லாம் தன்னைத் தூரத்தில் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் அவனது விழிகளில் கள்ளமோ, கஷ்மிஷமோ, காமமோ நிச்சயமாக இருந்ததில்லை என்பது அவளுக்குத் திண்ணம்!

அதுவுமே தன்னை அவனிடத்தில் ஈர்த்து விட்டிருந்ததை இப்போது உணர்ந்தாள் சஹஸ்ரா.

அத்தை மகள் என்ற உரிமையை எடுத்துக் கொண்டுத் தன்னிடம் நெருங்காமல் அவனது நெருக்கம் தனக்குப் பல நேரங்களில் பாதுகாப்பு உணர்வை அளித்துள்ளது என்பது தான், அவனுடனான திருமணத்திற்குத் தான் ஒப்புக் கொண்டதற்கு இரண்டாவது காரணமாக இருந்ததை இப்போது தான் பெண்ணவளுக்கே உறைத்தது.

‘ஓஹ்! அப்போ நான் உங்களை லவ் மட்டும் தான் பண்ணலை! ஆனால் நானும் நம்மச் சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும் உங்களைப் பத்தின எல்லாத்தையுமே தெரிஞ்சு வச்சிருக்கேன் பாருங்க பூவன்!’என்று அவனிடம் மானசீகமாக கூறிக் கொண்டவளோ,

அவள் வாழ்க்கையில் முதல் முறையாகத் தன்னுடைய அலுவலக நேரங்களில் தனது வருங்கால மணாளனைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி இருப்பதை உணர்ந்து வெட்கத்தில் சிவந்து போனவளோ,

தன்னைச் சமன்படுத்திக் கொண்டு அலுவலக வேலையில் கவனத்தைப் பதிக்கத் தொடங்கி விட்டாள் சஹஸ்ரா.

அவளைப் போலவே தான், இங்கே தனது பால் பண்ணை அலுவலகத்தில் உட்கார்ந்திருந்த மகிழம்பூவனுக்கும் உணர்வுகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது!

அதை எவ்வளவு முயற்சி செய்தும் அவனால் கட்டுக்குள் கொண்டு வர முடியவே இல்லை!

“என்னை ரொம்பப் படுத்துற அழகி!”என்று தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டான் மகிழம்பூவன்.

நல்லவேளையாக அந்த அறையில் அவனைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை! அப்படி யாராவது இருந்திருந்தால் இவனது தவிப்பைக் கண்டு விட்டு இவனது உடலுக்கு ஏதாவது கோளாறு ஏற்பட்டு விட்டதோ என்றெணணி இருந்து இருப்பார்கள்!

சில நாட்களுக்கு முன்புத் தாங்கள் இருவரும் மட்டும் கார்ப் பயணத்தை மேற்கொண்டு இருந்த போது நடந்தவை எல்லாம் வேறு அவனது மூளையில் இப்போது சம்மனே இல்லாமல் ஆஜராகி விட்டிருந்தது.

அந்தக் குளுமையில், தன்னவளின் கரங்கள் கொடுத்த ஸ்பரிசத்தில் தன்னிலை இழந்து தனது உடல், பொருள், ஆவி அனைத்தையுமே அவளது காலுக்குக் கீழ் அர்ப்பணிக்கும் அளவிற்கு அவளுடனான அந்த நிமிடங்கள் ஆடவனுக்குப் பெரும் காதல் உணர்வைத் தருவித்து இருந்தது!

அதனால் தான் இப்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டுள்ளான் மகிழம்பூவன்.

சஹஸ்ராவிற்குச் செல்பேசி அழைப்புக் கூட விடுத்து அவளுடன் சிறிது நேரம் பேசினாலே தனது உணர்வுகளுக்குத் தீனிப் போட்டதைப் போல் இருக்கும் என்று நினைத்தாலும் கூடத் தன்னைப் போலவே அவள் இந்த நேரத்தில் அவளது அலுவலகத்தில் வேலையாக இருப்பாள் என்பது ஞாபகம் வந்து விடவும் அவளுக்குச் செல்பேசி அழைப்பு விடுக்கும் எண்ணத்தைக் கைவிட்டு, விட்டுப் அந்த அறையில் இருந்து எழுந்து வெளியே வந்து பண்ணையின் வாசலில் நின்று கொண்டு அப்போது வீசிய காற்றின் மூலம் தனது மனதையும், தனக்குள் இருந்து பொங்கி வரும் காதல் உணர்வையும் கட்டுக்குள் கொண்டு வர ஆரம்பித்தான்.

இதே நேரத்தில்,”செந்திலு! உங்க அத்தைப் பொம்மைங்களை வாங்கி அடுக்கினாலும் அடுக்கினால் நீ அதையெல்லாம் எனக்குக் கூட விளையாடத் தராமல் நீ மட்டும் அதை வச்சு விளையாண்டுக்கிட்டு இருக்கிற! இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிப்புட்டேன்! ஆமாம்!”என்று தன் மகனிடம் பொருமலுடன் கூறினாள் வண்ணமதி.

அதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு தான், தனது மதிய உணவை உண்பதற்காக வீட்டிற்குள் நுழைந்த அவளது கணவனோ தனது மனைவியின் குரலைக் கேட்டதும் அறைக்குள் நுழைய,

அவளோ அதைக் கவனிக்காமல் மீண்டும் தனது புத்திரனிடம்,”எனக்கும் இதிலிருந்து ஏதாவது ஒன்னு, ரெண்டைக் கொடுடா! இந்தக் குட்டிக் கை இரண்டிலும் இந்தப் பொம்மைங்க அடங்கக் கூட இல்லை! அப்படியும் தூக்கிட்டுச் சுத்துறியே!”என்று ஆதங்கத்துடன் பேசியவளைக் கண்டுச் சிரித்து விட்டான் பூபாலன்.

அவனின் சிரிப்பொலி கேட்டவுடன் அறைவாசைலைப் பார்க்கவும், அப்போது தான் தனது கணவனின் வருகையை அறிந்திருந்தாள் வண்ணமதி.

“என்ன உங்கப் பையன் எனக்கு எதுவுமே தராமல் என்னை அலைக்கழிக்கிறான்னா, நீங்க நான் அவன்கிட்டே பட்றப் பாட்டைப் பார்த்துச் சிரிக்கிறீங்களா? ம்ஹூம்! நான் உங்க ரெண்டு பேர் கூடவும் பேசப் போவதில்லை”என்று சொல்லி முறுக்கிக் கொண்டவளிடம்,

“ஓஹ்! அப்போ நீ எங்க ரெண்டு பேர் கூடவும் பேசவே மாட்ட! அப்படித் தானே?”என்றிருந்தான் பூபாலன்.

அதற்குக் கூட வாயைத் திறந்து பதிலளிக்காமல் ஆமாம் என்பதற்குச் சாட்சியாகத் தனது தலையை மேலும், கீழுமாக ஆட்டினாள் வண்ணமதி.

“ஆமாம்ன்னுக் கூட உங்கம்மா வாயைத் திறந்து சொல்ல மாட்டாங்களாம்”என்று தங்களது மகனிடம் கூறிச் சிரித்த கணவனைக் கண்டு முறைத்தவளைக் குறும்புடன் நோக்கி விட்டு,

அவள் எதிர்பாராத நேரம் பார்த்து அவளது கன்னத்தைப் பற்றி அவளின் இரண்டு கன்னங்களிலும் தனது இதழ்களை அழுத்தமாகப் பதித்து விடுவித்தான் பூபாலன்.

அதில் தனது கோபம் எல்லாம் வடிந்து,”ப்ச்! போங்க”என்றுரைத்து விட்டுத் தலையணையைக் கொண்டு அவனது முதுகில் செல்லமாக ஒரு அடி போட்டாள் வண்ணமதி.

தனது தந்தையின் செயலைக் கண்டு விட்டுத் தனது அன்னையின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சித் தன் செவ்விதழ் கொண்டு எச்சில் ஒழுக முத்தம் தந்திருந்தான் செந்தில்.

அதில் அவன் இன்னும் மனம் குளிர்ந்து போய் விட்டது அவனது அன்னைக்கு.

அதேபோல் தன்னிடம் இருந்தப் பொம்மைகளில் யானைப் பொம்மையை எடுத்து,”ம்மா! நானை(யானை)”என்று அவளிடம் நீட்டினான் அவர்களது அருந்தவப் புதல்வன்.

அவனது அந்தச் செயலில் நெகிழ்ந்து போனவளோ,”அம்மா! உங்கிட்ட சும்மா கேட்டேன்டா பட்டுக் குட்டி! நீயே வச்சுக்கோ”என்றுரைத்து அவனது கன்னத்தில் அழுந்த முத்தமிட, அதைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டான் செந்தில்.

“பாலா! மதி! சாப்பாடு தயாராகிடுச்சு வாங்க”என்று கூடத்தில் இருந்து கொண்டு இவர்களை அழைத்தார் முல்லைக்கொடி.

“ஆமாம். நான் சாப்பிடத் தான் வீட்டுக்கே வந்தேன்! எதுக்கு வந்தோம்ன்றதையே மறந்துட்டேன் பாரு!”எனக் கூறிப் புன்னகைத்து விட்டுத் தனது மனைவி மற்றும் மகனை அழைத்துக் கொண்டுக் கூடத்திற்குப் போனான் பூபாலன்.

“அப்பா சாப்பிட்டாச்சாம்மா?”என்று தாயிடம் விசாரிக்க,

“இப்போ தான் சமையலே முடிஞ்சது. இன்னும் யாருமே சாப்பிடலை”என்று கூறிக் கொண்டே அனைவருக்கும் இலை போட்டார் முல்லைக்கொடி.

அந்த நேரத்தில் அங்கே வந்து சேர்ந்து,”வாடா! உம்மயன் அந்தப் பொம்மைங்களைக் கீழேயே விடாமல் கையிலேயே வச்சிட்டுத் திரியிறியான்! நல்லவேளையாக இதெல்லாம் தரமானப் பொம்மைங்கன்றதாலே அதனால் இவனுக்கு எதுவும் அழற்சி வரலை!”என்று மகனிடம் உரைத்து விட்டு அவனுக்கு அருகில் அமர்ந்தார் ஆறுமுகம்.

“ஆமாம்ப்பா”எனத் தானும் அவருக்கு ஒத்து ஊதினான் பூபாலன்.

“அவங்க மூனு பேரும் நிச்சயத்தார்த்தத்துக்கு எப்போ கிளம்பி வர்றாகளாம்?”என்று பொதுவாக விசாரித்தார் முல்லைக்கொடி.

“அதுக்கு இன்னும் பதிமூனு நாள் இருக்குல்லத்தை? அவங்கப் பத்து நாள் இருக்கும் போது தான் இங்கே வருவாக”என அவருக்குப் பதிலளித்தாள் வண்ணமதி.

“ம்ஹ்ம். அம்புட்டு நாளுக் கெடக்குதா? நாளையும், கிழமையையும் நெட்டித் தள்ளவே முடியலை! வீட்டில் விசேஷத்தை வச்சிக்கிட்டுச் சும்மா உட்கார முடியலை! அப்படியே எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுச் செய்யனும்னு விறுவிறுன்னு வருது!”என்று புலம்பினார் முல்லைக்கொடி.

என்றைக்கு,’இது உங்கள் குடும்பம், உங்கள் வீடு! உங்களது இஷ்டம் போல் இருங்கள்!’என்று அவரிடம் கஸ்தூரி கூறி இருந்தாரோ, அன்றிலிருந்து அவரைக் கையில் பிடிக்க முடியவில்லை!

மகிழம்பூவன் மற்றும் சஹஸ்ராவின் திருமண வேலைகளில் தனது பங்கும் இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் அலைகிறார்!

அதை அனைவரும் அறிந்திருந்ததால் தான் மற்ற மூவரும் அவரைப் புன்னகையுடன் பார்த்தார்கள்.

அதற்குப் பின்னர் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்று விட்டனர்.

இதே சமயம்,“நிச்சயத்தார்த்தத்துக்குப் பத்து நாள் இருக்கிறப்போ தான் வருவீகளா மாப்பிள்ளை?”என்று ரமணனிடம் செல்பேசி அழைப்பின் வாயிலாகப் பேசிக் கொண்டிருந்தார் பால்ராஜ்.

“ஆமாம் மாமா. இங்கே எல்லா வேலையையும் ஓரளவுக்கு முடிச்சு வச்சிட்டு மேற்பார்வைப் பார்க்கவும் நல்ல ஆட்களாகப் போட்டால் தான் எங்களால் இங்கிருந்து நகரவே முடியும்! உங்களுக்குத் தெரியாததா என்ன?”என்றார் தயக்கமாக.

“இதுக்கு எதுக்குத் தயங்குறீங்க மாப்பிள்ளை! நான் ஒரு உத்தேசமாகத் தான் கேட்டேன்! ஏன்னா, நம்மக் குல தெய்வக் கோயிலுக்கு வேறப் போகனும்! அதான்”என அவருக்குக் காரணத்தைக் கூறவும்,

அதைக் கேட்டதும்,”ஆமால்ல மாமா! இப்போ என்னப் பண்றது? நாங்க வேணும்னா இங்கே முடிஞ்சளவுக்கு எல்லாத்தையும் பார்த்து வச்சிட்டு உடனே கிளம்பி வந்துடவா?”என்று அவரிடம் யோசனை கேட்டார் ரமணன்.

“அது தான் சரியாக இருக்கும்னு எனக்குத் தோணுது மாப்பிள்ளை. ஆனால் அது உங்களுக்கும் தோதுப்படனும்ல? அதை நினைச்சா தான் சங்கடமாக இருக்கு!”என்றுரைத்தார் பால்ராஜ்.

“சரிங்க மாமா. நான் கஸ்தூரி கிட்டேயும், சஹா கிட்டேயும் இதைச் சொல்லிக் கலந்து பேசிட்டு உங்களுக்கு முடிவைச் சொல்றேன்”என்று கூறி அழைப்பை வைத்து விட்டு அன்றிரவே தனது மனைவி மற்றும் மகளிடம் இந்த விஷயத்தைத் தெரிவித்து அவர்களது ஆலோசனையைக் கேட்டுக் காத்திருந்தார் ரமணன்.

- தொடரும்
 

Advertisement

Advertisement

Back
Top