வரம் 34

Advertisement

Writer girl

Well-known member
Member
“எனக்கும் அவர் சொல்வது ஓகேன்னுத் தான் தோணுதுங்க” எனக் கூறித் தனது சம்மதத்தை உரைத்திருந்தார் கஸ்தூரி.

உடனே தங்களது மகளைப் பார்த்தார் ரமணன்.

அவளது முகத்தில் யோசனையின் ரேகைகள் தெரியவும், அவள் யோசித்து முடிக்கும் வரைக் காத்துக் கொண்டிருந்தனர் அவளது பெற்றோர்.

சில மணித்துளிகள் கடந்ததும் தனது செவ்விதழை அசைத்து,”எனக்கும் இதுக்குச் சம்மதம் தான்ப்பா”என்றுரைத்து விட்டிருந்தாள் சஹஸ்ரா.

அதைக் கேட்டதும் தான் மற்ற இருவருக்கும் நிம்மதியாக இருந்தது.

“அப்போ மாமாகிட்டே சொல்லிடலாம் தானே?”என்றத் தந்தையிடம்,

“சொல்லிடுங்கப்பா”என அவள் ஒப்புதல் அளித்து விடவும்,

உடனே தனது செல்பேசியில் அழைத்துப் பால்ராஜ்ஜிற்குத் தகவல் தெரிவித்தார் ரமணன்.

அவரும்,”ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை. அப்போ நீங்க சீக்கிரம் வந்துடுங்க”என்று அவர்களிடம் கூறி அழைப்பைத் துண்டித்து விட்டுத் தன் மகனிடம் விஷயத்தை உரைத்தார் பால்ராஜ்.

“சரிங்க ஐயா. அவங்க இங்கே வர்றதுக்குள்ளே நாமளும் நம்மளோட வேலைகளை முடிச்சிடலாம்”என்று கூறி விட்டு,

அதேபோல் அடுத்த நாளிலிருந்து தனது பால் பண்ணை மற்றும் மாட்டுப் பண்ணைகளின் வேலலகளின் முக்கியமான வேலைகளை எல்லாம் முன்கூட்டியே நடத்தி முடிக்க ஆரம்பித்தான் மகிழம்பூவன்.

அதேபோல், தாங்கள் பால்ராஜ்ஜிடம் சொன்னதைப் போல் தங்களது பணிகளைச் செவ்வனே செய்து முடித்து விட்டுத் தங்களது சொந்த ஊருக்குக் கிளம்புவதற்குத் தயாராகத் தொடங்கினர் ரமணன், கஸ்தூரி மற்றும் சஹஸ்ரா.

இந்தத் தகவல் வண்ணமதிக்கும் தெரிவிக்கப்பட்டு இருந்ததால் அவளுமே தங்களது குல தெய்வக் கோயிலுக்குக் குடும்பத்துடன் போவதை எண்ணிக் குதூகலமாக நடமாட ஆரம்பித்து விட்டாள்.

தாங்கள் இருவரும் மீண்டும் விரைவிலேயே சந்தித்துக் கொள்ளப் போகிறோம் என்ற மகிழ்ச்சிக் கூத்தாடினர் மகிழம்பூவன் மற்றும் சஹஸ்ரா.

ஏனெனில் அவர்கள் இருவரும் இத்துணை நாட்களாகத் தாங்கள் ஒருவரையொருவர் மிகவும் தேடிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான், நிச்சயத்தார்த்தத்திற்கு முன்னரே குல தெய்வக் கோயிலுக்குப் போக வேண்டும் என்றத் தங்கள் இருவரின் பெற்றோரின் கோரிக்கையைக் கேட்டதும் உடனே அதற்கு மகிழ்ச்சியாகச் சம்மதித்து விட்டிருந்தார்கள்.

அந்தளவிற்கு அவர்களை அந்தத் தற்காலிகப் பிரிவு வாட்டி எடுத்திருந்தது எனலாம்!

அதனாலேயே, இப்போது தங்களது பழையப் புத்துணர்ச்சியை மீட்டெடுத்துக் கொண்டனர்.

அது தந்த உற்சாகத்துடன் இரண்டு நாட்களில் தங்களது அனைத்து அலுவலகப் பணிகளையும் வெற்றிகரமாக முடித்திருந்தார்கள் மகிழம்பூவனும், சஹஸ்ராவும்.

உடனே தங்கள் ஊரிலிருந்து தங்களது பூர்வீகத்திற்கு மீண்டும் வந்து சேர்த்திருந்தார்கள் ரமணனும், அவரது மனைவி, மகளும்.

அவர்களுக்கு வழக்கம் போல ஏகபோகமான வரவேற்பு தான் கிடைத்திருந்தது.

அவர்கள் ஊருக்கு வந்த முதல் நாள்,”இன்னைக்கு ஓய்வு எடுங்க. நாளை மறுநாள் நம்மக் குல தெய்வக் கோயிலுக்குப் போகலாம்”என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார் பால்ராஜ்.

மகிழம்பூவனும், சஹஸ்ராவும் நிச்சயத்திற்குப் பிறகுத் திருமணம் வரைக்கும் ஒன்றாக ஒரே வீட்டில் தங்கி இருப்பது சரியல்ல என்று நினைத்தார் கஸ்தூரி.

அதை தனது கணவர், பாஷ்ராஜ் மற்றும் வண்ணமதியின் மாமனார், மாமியாரிடமும் பகிர்ந்து கொள்ள,

அவர்களுக்கும் அந்த யோசனை தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது போலும்!

அதனாலேயே அவர்கள் அனைவரும் சேர்ந்து அதற்கான மாற்று வழியைக் கண்டுபிடித்து விட்டிருந்தார்கள்.

வண்ணமதியின் புகுந்த வீட்டினரே அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக ஒருமனதாகச் சம்மதித்து,

“அதுக்கென்ன சம்பந்தி? அழகியும் எங்கப் பூபாலனுக்குத் தங்கச்சி முறை தானே? அவளுக்குன்னுத் தனி அறையும் இருக்கு! அதனால் இந்தக் கல்யாணம் முடிகிற வரைக்கும் அவ எங்க வீட்டிலேயே தங்கிக்கட்டும்”என்று பால்ராஜ் மற்றும் மற்றவர்களிடம் சொல்லி விட்டனர் ஆறுமுகம் மற்றும் முல்லைக்கொடி.

என்ன தான் அது வண்ணமதியின் புகுந்த வீடாக இருந்தாலும் கூட அங்குத் தங்களது மகள் தனித்து இருப்பதாக உணர்வாள் என்பதைப் புரிந்து கொண்டுத் தானும் அவளுடன் தங்கிக் கொள்ள முடிவெடுத்தார் கஸ்தூரி.

அதில் ஒரு பெரியக் குழப்பத்திற்கு ஒரு தீர்வு கிடைத்து விட்டது என்று மன நிம்மதி அடைந்தனர் அனைவரும்.

உடனே கஸ்தூரி மற்றும் சஹஸ்ராவையும் வண்ணமதியும், அவளது புகுந்த வீட்டாரும் தங்களுடன் தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்கள்.

அதில் தங்களுக்கு வருத்தமாகிப் போனாலும், தங்களது இருவரின் திருமணம் முடியும் வரைக்கும் தாங்கள் இருவரும் இப்படி பிரிந்து இருப்பது தான் சரி என்ற நிதர்சனத்தை உணர்ந்து கொண்டனர் சஹஸ்ரா மற்றும் மகிழம்பூவன்.

அதே நேரத்தில் தங்களது சொந்த ஊரில் இருந்து தங்களது குல தெய்வக் கோயிலுக்குச் செல்வதற்காகத் தயாராகத் தொடங்கினர் அனைவரும்.

“என்னடி நீ இன்னும் குளிக்கலையா?”என்ற தாயிடம்,

“இதோ இந்த டாக்யூமெண்ட்டை சேவ் பண்ணிட்டுப் போறேன்ம்மா”என்றுரைத்து விட்டுத் தனது மடிக்கணினியில் வேலையை முடித்து விட்டு எழுந்து குளிக்கச் சென்றாள் சஹஸ்ரா.

அவள் குளித்து விட்டு வருவதற்குள் புடவை அணிந்து தயாராகி விட்டிருந்தார் கஸ்தூரி.

அதேபோல் தானும் குளித்து விட்டு வந்த மகளிடம்,”நீயும் சேலை கட்டிட்டு வா சஹா. அதே மாதிரி தலையில் பூ கொஞ்சம் வச்சிட்டு வர்றியா?”என்று ஆசையாக வினவ,

அவரது கண்களில் தெரிந்த ஏக்கம் மற்றும் குரலில் இழைந்திருந்த ஆசையையும் உணர்ந்து,

“சரிம்மா”என்றுரைத்து விட்டுத் தனது பையிலிருந்த புதுப் புடவை ஒன்றை எடுத்துக் கட்ட ஆரம்பித்து விட்டாள் சஹஸ்ரா.

அவளுக்கு யாருடைய உதவியும் இல்லாமல் நன்றாகவே புடவை கட்டத் தெரியும்.

ஏனென்றால் தனக்கு எதுவும் தெரியாமல் இருக்கக் கூடாது என்று தனது கல்லூரிக் காலத்திலேயே ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்ளத் துவங்கி இருந்தாள் சஹஸ்ரா.

அப்பொழுதெல்லாம் தங்களது துறையில் அடிக்கடி விழாக்கள் நடைபெறும் போது அனைவருக்கும் பொதுவான உடையாகச் சேலை தான் இருக்கும்!

ஏனெனில் அன்றைக்கு ஒருநாள் தான் அனைத்து மாணவிகளும் சேலை அணிந்து வருவார்கள் என்பதாலேயே அவர்கள் கல்லூரியில் அப்படியானதொரு வழக்கம் இருந்தது!

அதனாலேயே அந்தச் சமயங்களிலேயே புடவை கட்டக் கற்றுக் கொண்டாள் சஹஸ்ரா.

அது இப்போது கை கொடுத்தது.

மஞ்சள் வர்ணப் புடவையில் மிகவும் நளினமாகத் தெரிந்த மகளைக் கண்டதும் ஆர்ப்பரித்துப் போய்,”ரொம்ப அழகாக இருக்கிற சஹா!”என்றவரோ,

தனது கைகளாலேயே அவளுக்குத் திருஷ்டி கழித்து,“நீ தினமும் சேலையைக் கட்டனும்னு சொல்ல மாட்டேன் டி! ஆனால் இப்படி எப்போதாவது சேலை கட்டு!”என்று அவளிடம் கேட்டுக் கொண்டார் கஸ்தூரி.

“சரிம்மா”என்றவளுக்குமே தன்னுடைய இந்தப் புடவைத் தோற்றம் மிகவும் பிடித்திருந்தது தான்!

“நம்மச் செந்தில் பிறந்தப்போ உங்கக் குல தெய்வக் கோயிலுக்குப் போனது. அதுக்கப்புறம் இப்போ தான் அங்கே போகப் போறோம்!”என்று மனைவியிடம் சொல்லிக் கொண்டே மகனுக்கு உடை உடுத்தி விட்டான் பூபாலன்.

“ஆமாங்க. அங்கே போக ஒன்றரை மணி நேரம் தான் நேரம் ஆகும்! ஆனாலும் நாம அங்கே போகிறதுக்கு நேரமே கிடைக்கலை! இப்போ தான் எல்லாத்துக்கும் நேரம் வந்திருக்கு!”என்றுரைத்து விட்டுத் தனது தலையில் மல்லிகைப் பூவைச் சூடிக் கொண்டாள் வண்ணமதி.

அதற்குப் பிறகுத் தங்களது மகனைத் தூக்கிக் கொண்டுக் கூடத்திற்கு வந்த இருவரும், தங்களது எதிரில் வந்து கொண்டிருந்த தாயையும், மகளையும் எதேச்சையாக காண நேர்ந்தது.

அதில் சஹஸ்ராவைப் பார்த்ததுமே அப்படியே மெய் மறந்து போய் விட்டார்கள்.

“அழகி! நாங்க உன்னைச் சேலையில் பார்த்ததே இல்லை! எப்போதாவது உன்னோட வாட்சப் ஸ்டேட்டஸில் தான் பார்த்து இருக்கோம்! அதுவும் அன்னைக்கு உன்னோட ஆஃபீஸில் ஏதாவது ஃபங்க்ஷன் நடந்து இருக்கலாம். அதனால் தான் அன்னைக்குப் புடவை கட்டி இருப்ப! இப்போ நீ என் முன்னாடி இப்படி வருவன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை! ஆனந்த அதிர்ச்சியாக இருக்கே!”என்று அவளைப் புகழத் தொடங்கி விட்டாள் வண்ணமதி.

அதைக் கேட்டதும் வெட்கத்தில் நெளிந்து,”தாங்க்ஸ் மதி!”என்று அவளுக்கு நன்றி தெரிவித்தாள் சஹஸ்ரா.

அதேபோல்,”ஆமாம்மா. நீ அழகாக இருக்கே!”என்றுரைத்தான் பூபாலன்.

“தாங்க்ஸ்ண்ணா”என்றவளின் தோற்றத்தை அங்கே வந்த ஆறுமுகமும், முல்லைக்கொடியும் அவதானித்து தாங்களும் அவளுக்குப் புகழாரம் சூட்டினர்.

“அச்சோ! போதுமே! எனக்கு வெட்கமாக வருது!”எனத் தன் தாயின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டாள் சஹஸ்ரா.

“அடடா! எவ்வளவு அழகாக வெட்கப்பட்றே நீ!”என்று அவளைச் சீண்டினாள் வண்ணமதி.

அவளைத் தடுக்காமல் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் கஸ்தூரி.

ஆனால்,”அந்தப் பொண்ணு ரொம்ப கூச்சப்படுது பாரு! கிண்டல் பண்ணாதே மதிம்மா!”என்று மனைவிக்கு அறிவுறுத்தினான் பூபாலன்.

அவளும்,“சரிங்க”என்று தானும் சஹஸ்ராவைக் கிண்டல் செய்வதை நிறுத்திக் கொண்டாள்.

“சரி. நமக்காக அவங்க மூனு பேரும் காத்திருப்பாங்க!”என்ற முல்லைக்கொடியோ,

“ஏங்க! அவங்களை ஊர் எல்லையில் வரச் சொல்லுங்க. நாம அங்கே இருந்து ஒன்னாகப் போகலாம்”என்று கணவனுக்கு அறிவுறுத்த,

உடனே தனது செல்பேசியில் தனது சம்பந்திக்கு அழைப்பு விடுத்தார் ஆறுமுகம்.

அதை உடனே எடுத்துக் காதில் வைத்து,”சரிங்க சம்பந்தி. நாங்களும் கிளம்பிட்டோம்!”என்று கூறி வைத்தார் பால்ராஜ்.

அவரும், மகிழம்பூவன் மற்றும் ரமணனும் ஒரே நிறமான வெள்ளை வேட்டிக் கட்டிக் கொண்டு, வெவ்வேறு நிறங்களில் மேற்சட்டைகளை அணிந்து இருந்தார்கள்.

அதில் தனது மஞ்சள் நிறச் சட்டையின் சுருக்கங்களை எடுத்து விட்டுக் கொண்டே அன்றைய தினம் மட்டுமே பிரத்தியேகமாகத் தனது கையில் அணிந்திருந்த காப்பை ஏற்றி விட்டுக் கொண்டான் மகிழம்பூவன்.

அதற்குப் பிறகுத் தன் தந்தை மற்றும் தாய் மாமாவுடன் சேர்ந்து வாடகைக் காரில் ஏறிக் கொள்ள, அது ஊரின் எல்லையை நோக்கிப் புறப்பட்டது.

அதேபோல், கஸ்தூரி, சஹஸ்ரா மற்றும் வண்ணமதியும், அவளது புகுந்த வீட்டாரும் தங்களுக்காக வரவழைக்கப்பட்டக் காரில் ஏறித் தாங்களும் ஊரின் எல்லைக்குப் பயணமானார்கள்.

- தொடரும்
 

Advertisement

Advertisement

Back
Top