வரம் 8

Advertisement

Writer girl

Well-known member
Member
“அவன் ரூமில் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கான்ம்மா. நம்மக் கூட ஷாப்பிங் வராமல் இருந்துடுவானா என்ன?”என்று கூறிப் புன்னகைத்தார் பால்ராஜ்.

“அப்போ அவரைக் கூப்பிடுங்க மாமா”என்ற தனது மருமகளின் கூற்றிற்கு இணங்கித் தன் மகனின் அறைக் கதவைத் தட்டி,

“ஏம்ப்பா மகிழு!”என்று குரல் கொடுத்தார்.

அதைக் கேட்டவுடன்,”இதோ வர்றேனுங்க ஐயா”என்று அறையிலிருந்து வெளிப்பட்டான் மகிழம்பூவன்.

சஹஸ்ராவைத் தவிர்த்து அங்கேயிருந்த மற்றவர்கள் அவனது முகத்தை ஆராய்ச்சி செய்து பார்க்க, அதுவோ மிகவும் சாந்தமாக இருந்தது.

எனவே, அவன் இப்போது கொஞ்சம் தெளிவடைந்து விட்டிருக்கிறான் என்பதை அறிந்து கொண்டு நிம்மதியுற்றனர்.

“உங்களைத் தான் இவ்வளவு நேரமாக தேடிட்டு இருந்தேன். ஷாப்பிங் போகலாமா?”என்று அவனிடம் கேட்டுப் புன்னகைத்தாள் சஹஸ்ரா.

“ம்ஹ்ம். போகலாம்”என்றவனோ,

“அதுக்கு முதல்ல நான் போய் முகத்தைக் கழுவிட்டுத் துணியை மாத்திட்டு வர்றேன்”என்று அவளிடம் அறிவித்து விட்டுக் குளியலறைக்குப் போனான் மகிழம்பூவன்.

“நீங்க எல்லாரும் என்ன இப்படியே நிற்கிறீங்க? நீங்களும் போய்த் தயாராகிட்டு வாங்க. நானும் ரெஃப்ரஷ் ஆகிட்டு வர்றேன்”என்றுரைத்து விட்டுத் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள் சஹஸ்ரா.

உடனே தாங்களும் சிறிது நேரம் எடுத்துக் கொண்டுத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு வந்து விட்டனர்.

அதே சமயம், காரில் உட்காரும் போதும் கூட,”மிஸ்டர். மகிழ். இங்கே வந்து உட்காருங்க. அப்போ தான் நாம நம்ம தொழில் சம்பந்தப்பட்டப் பேச்சு வார்த்தையை நடத்த முடியும்”எனத் தன் அத்தைப் பையனை தனக்கு அருகில் இருந்த இருக்கையில் வந்து அமருமாறு அழைப்பு விடுத்தாள் சஹஸ்ரா.

அதை அவதானித்ததும் அவர்கள் இருவரின் குடும்பத்தாரோ மயக்கம் போட்டு விழாத குறையாகப் பிரம்மித்துப் போய் விட்டார்கள்.

“என்னது?”என்று கேட்ட வண்ணமதிக்கு இன்னும் வியப்பு அடங்கவே இல்லை.

“ஆமாம். அதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கா மிஸஸ். வண்ணமதி?”என்று தன்னைக் கேலியாக கேட்டவளை முறைத்து விட்டு,

“எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை மிஸ். சங்குப்பூவழகி”எனக் கூறி அவளது கோபத்தைத் தூண்டி விட்டத் திருப்தியில் கஸ்தூரியின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

“ப்ச்”என்றவளோ, தனது பெற்றோரை முறைத்துப் பார்த்து விட்டு அமைதியாகி விடவும்,

தனது தமக்கையைப் பார்த்துப் பொருமி விட்டு,”சஹா”என்று தன்னருகில் இருந்தவளை மென்மையாக அழைத்தான் மகிழம்பூவன்.

அவன் குரலில் இருந்த எதுவோ ஒன்று அவனது அழைப்பிற்கு அவளைப் பதிலளிக்கச் சொன்னதைப் போல்,

“சொல்லுங்க மகிழ்”என்றாள் சஹஸ்ரா.

“நாம நம்ம தொழில் சம்பந்தமான பேச்சு வார்த்தையை நடத்தலாமா?”என்று அவளிடம் தயங்கியவாறே கேட்க,

உடனே,“ஹாங் ஓகே”என்று அதற்கு ஒப்புக் கொண்டு, அவனுடன் தங்கள் இருவரின் தொழில் சம்பந்தமான விஷயங்களைத் தீவிரமாகப் பேச ஆரம்பித்து விட்டனர்.

அதேசமயம் சிறியவர்கள் செய்யும் கலாட்டாக்களை மௌனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த ரமணன், கஸ்தூரி மற்றும் பால்ராஜூம் அவர்களது சண்டை, சச்சரவுகளுக்கு இடையில் செல்ல வேண்டாம் என்ற முடிவுடன் பயணத்தை ரசிக்கத் தொடங்கினார்கள்.

ஆனால் இந்த முறை தனது தம்பியையும், சஹஸ்ராவையும் தொந்தரவு செய்யாமல் காரின் இடைப்பக்க கண்ணாடி வழியாக வெளியே தெரிந்த காட்சிகளை ரசிக்கலானாள் வண்ணமதி.

“எனக்கு இன்னும் ரெண்டு ஃபேக்ட்ரீஸைக் கட்டுறதுக்கு ஆசை. அதைக் கட்டி முடிச்சதும் நீங்க என்கூட சேர்ந்து பிஸினஸ் செய்வீங்களா?”என்று அவனிடம் ஆர்வத்துடன் வினவினாள் சஹஸ்ரா.

“கண்டிப்பாகம்மா!”என்றவனிடம்,

“அப்போ ஓகே. நாம எதிர்காலத்தில் பிஸினஸ் பார்ட்னர்ஸ் ஆகிடுவோம்! அதனால் நாம இப்போ இருந்தே அதைப் பத்தி டிஸ்கஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணிடுவோம். எனக்கு உங்க மொபைல் நம்பர் கொடுங்க”எனக் கேட்டதும்,

“ம்ம்”என்றவனோ, தனது செல்பேசி எண்ணை அவளுக்குத் தெரிவிக்க அதை அப்பொழுதே தனது செல்பேசியில் சேமித்துக் கொண்டாள் சஹஸ்ரா.

அதில் தனது மனம் வெகுவாக கனிந்தது அவளிடத்தில்.

தங்கள் பயணத்தின் இலக்கான ஒரு பெரிய உணவகம் ஒன்றின் வாயிலை அடைந்ததும் தங்களது காரிலிருந்து இறங்கினர் அனைவரும்.

இப்போது தனது தந்தையுடன் சென்று அவரது கரத்தைப் பிடித்துக் கொண்டாள் சஹஸ்ரா.

அதில் அவளைப் புன்னகையுடன் பார்த்து விட்டு,”இங்கே எல்லா நாட்டோட சாப்பாடும் கிடைக்கும்! உங்களுக்குப் பிடிச்சதைக் கூச்சப்படாமல் சாப்பிடனும். அப்படி ஏதாவது நல்லா இருந்ததுன்னா அதை நம்ம வீட்டில் இருக்கிற சமையல் ஆள் கிட்டே சொல்லுங்க. அவர் செஞ்சிக் கொடுப்பார்”என்று தனது தங்கை குடும்ப ஆட்களுக்கு அறிவுறுத்தினார் ரமணன்.

அவர் தனது குடும்பத்திற்கு மட்டும் பிரத்தியேகமான மேசையை வரவேற்பறையில் கேட்டுப் புக் செய்து விட்டு வந்ததும், அனைவரும் அமர்ந்து தங்களுக்குப் பிடித்தமான உணவுகளைக் கேட்டு வாங்கி உண்ணத் தொடங்கினர்.

அதற்கிடையிலேயே,”மகிழு! என்னை ஒரு ஃபோட்டோ எடு. அதை உங்க மாமாவுக்கு அனுப்பி வைக்கனும்”என்ற தமக்கையின் வேண்டுகோளுக்குச் செவிமடுத்து, அவளது செல்பேசியை வாங்கி அவளை ஓன்றிரண்டுப் புகைப்படங்கள் எடுத்தான் மகிழம்பூவன்.

உடனே தனது கணவனுக்கு அந்தப் புகைப்படங்களை அனுப்பி வைக்க முனைந்தவளிடம்,”நாம சாப்பிட்டு முடிச்சுப் பீச்சுக்குப் போகனும். அங்கேயும் ஃபோட்டோஸ் எடுத்துட்டு வீட்டுக்குப் போனதுக்கு அப்பறமாக எல்லாத்தையும் மொத்தமாக உன் புருஷனுக்கு அனுப்பி வைக்கலாம்ல மதி?”என்று அவளுக்குத் தன்மையாக எடுத்துரைத்தார் கஸ்தூரி.

உடனே அவரைத் தொடர்ந்து,”ஆமாம்மா. நீ முதல்ல சாப்பிடு”என்று மகளுக்கு வலியுறுத்தினார் பால்ராஜ்

“சரிப்பா”என்றுரைத்துச் செல்பேசியை மேசையில் வைத்து விட்டு உணவுண்பதில் கவனம் செலுத்த தொடங்கி விட்டாள் வண்ணமதி.

ஆனால் எதையோ தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்த சஹஸ்ராவோ உணவைக் கையால் அளைந்து கொண்டிருக்க, அதைக் கவனித்து விட்டு,

“நீ ஏன் சாப்பிடாமல் இருக்கிற? இது பிடிக்கலையா? வேற ஏதாவது கொண்டு வரச் சொல்லவா?”என்று தனது மாமன் மகளிடம் அக்கறையுடன் வினவினான் மகிழம்பூவன்.

அதில் சட்டென்று தனது இதழ்களில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு,”அதெல்லாம் வேண்டாம் மிஸ்டர். மகிழ். நான் வேற யோசனையில் இருந்தேன்”என்றதும்,

“இப்படியே சாப்பிட்றதுக்கு லேட் பண்ணா அப்பறம் பீச்சுக்குப் போக லேட் ஆகிடும். நீ சாப்பாட்டைக் கிளறாமல் சாப்பிட்டு முடி”என்று மகளைக் கண்டித்தார் கஸ்தூரி.

“ஓகேம்மா”என்று தனது உணவை விழுங்கத் தொடங்கினாள் சஹஸ்ரா.

ஓரு வழியாகத் தாங்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்ததும், காரில் ஏறிக் கடற்கரையை நோக்கிப் பயணம் செய்தார்கள்.

“இங்கே அடிக்கடி வந்து போனாலும் கூட ஒவ்வொரு தடவை வரும் போதும் முதல் முறையாக வர்ற மாதிரியான உணர்வை இந்த ஊர் எங்களுக்கு கொடுக்குது மாப்பிள்ளை”என்று ரமணனிடம் மலர்ந்த முகத்துடன் கூறினார் பால்ராஜ்.

அவரோ,“நாங்களும் இங்கே செட்டில் ஆனப் புதுசில் இந்த மக்களோட எப்படி பழகப் போறோம்ன்னு ஒரு பயமும், தயக்கமும் இருந்துச்சு! ஆனால் போகப், போக எங்களுக்கு இந்த ஊர் பழகிடுச்சு”என்றுரைத்தார்.

“ஹேய் பீச்சுக்கு வந்தாச்சு!”என்று சிறு குழந்தையைப் போல் குதூகலமாக கூச்சலிட்டாள் வண்ணமதி.

உடனே வண்டியில் இருந்து இறங்கி கடற்கரை மணலில் நடக்க ஆரம்பித்தனர்.

மகிழம்பூவனின் கரங்களைப் பிடித்து அவனையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு அலையில் கால்களை நனைத்து மகிழ்ந்தாள் வண்ணமதி.

அதேபோல்,”நீங்களும் வாங்க”என்று மற்றவர்களையும் அழைக்க,

“நாங்க வரலைம்மா. நாங்க இப்படிக் காத்தாட உட்கார்ந்துக்கிறோம்”என்ற கஸ்தூரியோ,

“நீ அவங்க கூடப் போ சஹா”என்று மகளிடம் கூறி அனுப்பி வைத்தார் கஸ்தூரி.

உடனே தனது குழந்தைத்தனம் கொப்பளிக்க வண்ணமதிக்கும், மகிழம்பூவனுக்கும் நடுவில் நின்று கொண்டு அவர்களது கரங்களைத் தனது இருக் கரங்களுடன் கோர்த்துக் கொண்டு அலைகளில் கால் நனைத்து துள்ளி விளையாடினாள் சஹஸ்ரா.

என்ன தான், அவளுக்குத் தங்கள் மீது கோபம் இருந்தாலும் கூட, இப்போது தங்களுடன் சேர்ந்து விளையாடுவதை எண்ணி மனம் கனிந்து போனது வண்ணமதிக்கு.

மகிழம்பூவனைச் சொல்லவே தேவை இல்லாததைப் போல் அவன் வேறொரு உலகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வில் மிதந்து கொண்டிருந்தான்.

அவள் தனது விரல்களை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டதை,’என்னை இப்படியே உங்கள் கைகளுக்குள் பொத்திப் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்!’என்று அவள் தன்னிடம் கூறுவதைப் போன்று அவனுக்குத் தோன்றியது.

அதனாலேயே தன் கரங்களை அவளிடத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள முடியவில்லை மகிழம்பூவனால்.

அவர்கள் மூவரின் ஆனந்தக் கூச்சலை மணலில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தார்கள் பெரியவர்கள்.

அவர்களைத் தனது செல்பேசியில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ரமணனிடம்,”நம்ம பாடிகார்ட்ஸ் எங்கே இருக்காங்கன்னுப் பார்த்தீங்களா? என் கண்ணுக்கு யாரும் தெரியலை”எனக் கேட்டார் கஸ்தூரி.

“அவங்க எல்லாரும் மக்களோட, மக்களாக கலந்து இருக்காங்கம்மா. அவங்க நம்மளோட பாதுகாப்புக்காக வந்தாலும் அவங்களைப் பார்த்து மத்தவங்கப் பயப்படுவாங்கள்ல? அதான்”என்று மனைவிக்கு விளக்கம் அளிக்க,

அவரோ,“ஓஹோ சரிங்க”என்று கூறி விட்டுத் தங்களது பிள்ளைகளின் மேல் கவனம் செலுத்தினார்.

சிறிது நேரம் கழித்து,”சுண்டல், மாங்காய்ன்னு ஏதாவது சாப்பிட்றீங்களா மாமா?”எனப் பால்ராஜிடம் வினவினார் ரமணன்.

“அதெல்லாம் வேண்டாம் மாப்பிள்ளை. தண்ணீர் மட்டும் கொடுங்க”என்றவரிடம்,

தன்னிடம் இருந்த பையிலிருந்து தண்ணீர்ப் பாட்டிலை எடுத்துக் கொடுத்தார் கஸ்தூரி.

அதை வாங்கிப் பருகி விட்டு அவரிடமே தண்ணீர்ப் போத்தலைக் கொடுத்து விட்டுச் சிறியவர்களைப் பார்க்க ஆரம்பித்தார் பால்ராஜ்.

இருள் கவிழத் தொடங்கியதும்,”சஹா! மகிழ்! மதி! மூனு பேரும் வாங்க. இன்னொரு நாள் வரலாம்”என்று அவர்களை அழைத்தார் ரமணன்.

உடனே அவரது சொல்லை மதித்து மணலில் தங்களது கால்கள் புதைய நடந்து வந்து தங்களது பெற்றோரிடம் வந்தனர் சிறியவர்கள் மூவரும்.

“செம்ம ஹேப்பியா இருந்துச்சு! எங்களை யாராவது வீடியோ எடுத்தீங்களா?”என்று கேட்ட வண்ணமதியிடம்,

“நான் எடுத்தேன்ம்மா. வீட்டுக்குப் போய் உனக்கு அனுப்புறேன்”என்று தெரிவித்தார் ரமணன்.

அதைக் கேட்டு மனம் குளிர்ந்து போய்,“தாங்க்ஸ் மாமா”என்று அவருக்கு மகிழ்ச்சியாக நன்றி கூறினாள்.

அதை தானுமே சிரிப்புடன் பார்த்து விட்டு,”நான் இங்கே தான் அப்பப்போ வந்துட்டுப் போவேன். எனக்குப் பழகிடுச்சு. ஆனால் உன்னோட எக்ஸைட்மெண்ட்டைப் பார்த்து எனக்கும் இனிமேல் நாம் எல்லாரும் சேர்ந்து இங்கே அடிக்கடி வரனும்னுத் தோணுச்சு!”என அவளிடம் மொழிந்தாள் சஹஸ்ரா.

“அதுக்கென்ன அடுத்த தடவை என் புருஷன், புள்ளையைக் கூட்டிட்டு வர்றேன். இன்னும் ஜாலியாக இருக்கும்”என்றாள் வண்ணமதி.

“ம்ஹ்ம்”என்றுரைத்து விட,
அனைவரும் காரிலேறிப் பயணித்து வீட்டை அடைந்தார்கள்.

“இன்னைக்கு ரொம்ப நல்லா என்ஜாய் பண்ணேன்! எனக்குத் தூக்கம் வருது”என்று கொட்டாவி விட்ட சஹஸ்ராவை வம்படியாகத் தங்களுடன் உணவருந்த வைத்த பின்னர் தான் உறங்க அனுப்பி வைத்து விட்டுத்,

தான் சொன்னதைப் போல், கடற்கரையில் எடுத்த வீடியோக்களை வண்ணமதிக்கு அனுப்பி வைத்தார் கஸ்தூரி.

அவளோ தன் தம்பியிடமும் புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டுப் பெற்றுக் கொண்டுத் தனது கணவனுடன் வீடியோ கால் பேச அறைக்குச் சென்று விட்டாள்.

இளையவர்கள் உறங்கச் சென்றதை உறுதி செய்து விட்டு,

“மாப்பிள்ளை! நான் உங்க ரெண்டு பேர் கிட்டேயும் ஒரு முக்கியமான விஷயம் பேசனும்”என்றப் பால்ராஜிடம்,

“சரி. வாங்க”என அவர்களைத் தங்களது அறைக்கு அழைத்துச் சென்றனர் ரமணன் மற்றும் கஸ்தூரி.

- தொடரும்
 

Advertisement

Advertisement

Back
Top