Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Rishiram's kaathal pookkum kaalam chapter 13

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 13

சட் என்று எழுந்த காப்ரியேலைப் பார்த்ததும் பக்கத்தில் நின்றிருந்த பெண் சம்யுக்தாவின் அருகே உட்கார விழைந்தாள். அந்த நிமிடம் கேட்ட 'பளார்' சத்தத்தில் உட்காராமல் திரும்பிப் பார்த்தாள். சம்யுக்தா எழுந்து விட்டாள்.
'காப்ரியேல்!' என்று சத்தமிட்டாள்.
அவன் ஆறடி உயரம் என்பதால் அந்த பெண்கள் கூட்டத்தில் தெளிவாகத் தெரிந்தான்.
கையில் ஒருவனின் சட்டையைப் பிடித்திருந்தான்.
பிடிபட்டவனின் கையில் ஒரு டாலர் செயின் அறுந்த நிலையில்.
இன்னொரு கையில் சிறிய சைஸ் கொறடு.
டாலர் செயினுக்கு சொந்தக்காரி 'லபோ திபோ' என்று புலம்ப ஆரம்பித்தாள்.
'கட்டைல போறவனே! ஒனக்கு கை கால் நல்லாத்தானே இருக்கு. ஒழச்சி சாப்ட வேண்டியது தான! இப்படி பொம்பளைங்க நக திருடி தான் வயிற வளக்கணுமா? என் வீட்டுக்காரர் மொத மொத வாங்கித் தந்த செயிண்டா?' என்று புலம்ப கண்டக்டர் வந்தார்.
பக்கத்தில் இருந்த பெண்கள் நடந்ததைச் சொல்ல, அவர் காப்ரியேலைப் பார்த்த பார்வையில் மரியாதையும், மதிப்பும் தெரிந்தது.
எனக்கென்ன என்று போகும் ஆண்கள் மத்தியில்-காட்டி குடுத்தால் கையில் உள்ள பிளேடால் கீசி விடுவோனோ- மடியில் வைத்திருக்கும் கத்தியால் குத்தி விடுவானோ- ஏன் வம்பு- போலீஸ் கீலீஸ் என்று ஏன் போக வேண்டும்- நம்ம சேஃபா இருக்கிறோம் அல்லவா- என்றெல்லாம் நினைத்து அமைதியாய் இருக்கும் ஆண்கள் மத்தியில்...
ஒரு விசில் அடித்தார்.
'பஸ்ஸ போலீஸ் ஸ்டேஷனுக்கு விடுப்பா.' என்றார்.
பஸ் போலீஸ் ஸ்டேசனுக்கு நகர்ந்தது.
பயணிகள் மத்தியில் இருந்து ஒரு குரல்.
'கண்டக்டர் சார்! நாங்க வேலைக்கு போக வேண்டாமா? காலேஜ் புள்ளைங்க இருக்கு. டயத்துக்கு காலேஜ் போக வேண்டாமா? நீங்க பாட்டுக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிட்டா அங்க எவ்ளோ நேரமாகுமோ? இவளுக நகையத் திருடுறது கூட தெரியாம பேசிகிட்டு வருவாக. அப்ப திருடத்தான செய்வான். அவன ரெண்டு போடு போட்டு கீழ இறக்கி விட்டுட்டு நீங்க வண்டிய கெளப்புங்க.'
கண்டக்டர் அதானெ என்பது போல் பார்க்க, ஒரு பெண் கத்தினாள்.
'என்னய்யா இப்படி பேசற? இதே இது ஒன் பொண்டாட்டிக்கோ பொண்ணுக்கோ வந்ததுன்னா சும்மா இருப்பியா? இன்னைக்கு ஒரு நாள் வேலைக்கு லேட்டாத் தான் போயேன்! என்ன ஆயிரப் போவுது? போன் பண்ணி நடந்தத சொல்லு. காலேஜ் புள்ளைங்க தான் இத புடிச்சே குடுத்தது. வெளி நாட்டு பையனுக்கு இருக்குற புத்தி உங்களுக்கு எங்கயா போச்சு? அவனும் காலேஜுக்கு சீக்கிரமே போகணும்னு நெனச்சு இத கண்டும் காணாம விட்டிருந்தா... அஞ்சு பவுனுயா.. இன்னைக்கு தங்கம் விக்கிற ரேட்டுக்கு..'
பயணிகள் நெறய பேர் அவளது கருத்துக்கு ஆமாம் போட, 'அப்பொ வீட்ல வச்சுட்டு வந்துருக்கணும். இப்படி போட்டுட்டு வந்தா திருடாம என்ன பண்ணுவான்?' என்று முணுமுணுத்தார் அவர்.
'இவன் திருடுனது தப்பில்ல. நாங்க நக போட்டுட்டு வரது தப்பாக்கும். கொஞ்சம் வயசுக்கு ஏத்த மாதிரி பேசுங்க. கண்டக்டர் சார். அவர வேணா எறக்கி விட்டிருங்க. மத்தவங்கள்லாம் சாட்சிக்கு இருக்குறாங்கள்ல. ஐயா கரெக்ட் டயத்துக்கு வேலைக்கு போகட்டும்.'
அந்தப் பெண் ஆத்திரமாய் சொல்ல, அந்த ஆள் எழுந்து மெதுவாய் பின் பக்கம் வழியாக இறங்கலாம் என்று நகர, கண்டக்டர் கத்தினார்.
'அப்படில்லாம் முடியாது. யாரும் இறங்கக் கூடாது. இந்தா வந்துரும் ஸ்டேஷன்.'
பஸ் ஸ்டேஷன் நகர இன்ஸ்பெக்டர் விசாரணை என்று ஒரு அரை மணி நேரம் ஓடியது. பின்பு தான் தெரிந்தது குரல் கொடுத்த ஆளும், நகை அடித்தவனும் கூட்டு என்பது. கூட்டமே 'ஆத்தாடி' என்று மூக்கில் விரல் வைக்க, ஃபார்மாலிட்டீஸ் முடிந்து பஸ் எடுக்கப்பட்டது. நகை இழந்த பெண் புகார் கொடுக்க அந்த இருவரும் லாக் அப்பில் போக கூட்டமே காப்ரியேலைப் பாராட்டி செல்பி எடுத்து வாட்ஸ் அப் போன்ற வலை தளங்களில் பரப்ப ஆரம்பித்தது.
காப்ரியேல் 'தாங்க் யூ' என்று வெள்ளைப் பற்களைக் காட்டி தலையை அசைத்து சம்யுக்தாவைத் தேடினான். சம்யுக்தா அவன் தேடுவதை உணர்ந்து அவன் அருகில் வந்து அவன் கைகளைப் பற்றி குலுக்கினாள்.
'ஸோ குட் ஆஃப் யூ' என்றாள்.
அவன் மெலிதாக கைகளைக் குலுக்கி விட்டு 'வா போகலாம்' என்றான்.
பஸ் நகர சம்யுக்தாவின் மனதில் காப்ரியேலின் துணிச்சல் திரும்பத் திரும்ப நியாபகம் வந்தது. தான் வெளி நாட்டில் பாஷை தெரியாத இடத்தில் இருக்கிறோமே. ஏதேனும் ஆகி விட்டால் என்னாகும் என்று எதுவும் நினைக்காது அந்த அபலையின் ஐந்து பவுன் செயினைக் காப்பாற்றிய அவனது நல்ல மனசு அவளுக்கு புரிய ஆரம்பித்தது.
காலேஜ் வந்ததும் சம்பதாவிடமும் கோபிகாவிடமும் சொல்லி சொல்லி மகிழ்ந்தாள்.
காலேஜில் வகுப்பில் உள்ள மாணவ மாணவிகளுக்கு வலை தளங்கள் மூலமாக அதற்குள் செய்தி தெரிந்திருந்தது. வகுப்பில் உள்ள மாணவ, மாணவிகள் காப்ரியேலை சூழ்ந்து வாழ்த்துக்கள் தெரிவிக்க அவன் ஒரு கூச்சத்துடன் அதை எதிர்கொண்டான்.
வகுப்பு நடக்கும்போது ப்ரின்சிபலே வகுப்பிற்கு வந்து காப்ரியேலைப் பாராட்டி விட்டு 'நீ இங்கு படிப்பது நம் காலேஜுக்கு பெருமை. கீப் இட் அப்'என்று சொல்லி விட்டு அமித்தின் ஷிவா ட்ரையாலஜி புக்கை பரிசளித்து விட்டுச் சென்றார்.
எச் ஓ டி அவர் பங்கிற்கு ஷேக்ஸ்பியரின் கம்ப்ளீட்டட் வர்க்ஸ் தர அடுத்தடுத்த டிபார்ட்மென்ட் என்று காப்ரியேலுக்கு வாழ்த்து மழையும், பரிசு மழையும் குவிய ஆரம்பித்தது. சீனியர்கள் சேர்ந்து ஒரு பேனரே ரெடி பண்ணி விட்டனர். தங்கம் மீட்ட நைஜீரியா பாண்டியன் என்று.
சம்யுக்தாவால் அன்று முழுவதும் அவனுடன் பேச முடிய வில்லை. கூடவே இருந்தும் யார் யாரோ வந்து அவனது செயலைப் பாராட்டி கை குலுக்க அன்றைய ஹீரோ ஆனான் காப்ரியேல்.
கிடைத்த டைமில் சம்யுக்தாவிடம் கேட்டான்.
'நான் அப்படி ஒரு பெரிய கொலைகாரனயோ, குற்றவாளியையோ பிடிக்கலயே. ஏன் இப்படி ஒரு ஆரவாரம்?'
சம்யுக்தா சொன்னாள்.
'இந்தியர்கள் உணர்ச்சிமயமானவர்கள். நன்றிப் பெருக்கு உடையவர்கள். அப்புறம் இந்த காலத்தில் இப்படி இருப்பவர்கள் குறைவு. எனவே தான் இந்த பாராட்டு. அப்புறம் குற்றத்தில் என்ன சின்ன குற்றம் பெரிய குற்றம்? குற்றமே குற்றம் தானே?'
'யா.யா.' என்று ஆமோதித்தான் காப்ரியேல்.
காலேஜே காப்ரியேலை மரியாதையாய் பார்த்தனர். சம்யுக்தாவையும் சேர்த்து. சேதி தெரிந்து வந்த சம்பதாவும் காப்ரியேலை புகழ்ந்து தள்ளி விட்டாள். அன்று இரவு வீட்டிற்கு வந்ததும் காப்ரியேல் புராணம் தான்.
நேரில் பார்த்த நிகழ்ச்சியை சம்யுக்தா விலாவாரியாய் விவரிக்க, அம்மா ஆழ்ந்து கேட்டாள். விவரித்த சம்யுக்தாவின் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளும், கண்களில் தெரிந்த பளபளப்பும் அவளுக்கு எதையோ உணர்த்த, அவள் சொன்னாள்.
'அவன் நல்லதே செய்யட்டும் சம்யுக்தா. சட்னு அவன் கூட வந்த ஒன்ன பிளெடால கீறி இருந்தா என்ன ஆயிருக்கும்? இனி அவன் கூட ப்ரெண்ட்ஷிப் வச்சுக்காத. ஹாய் ஹலோவோட விட்டுடு.'
சம்யுக்தாவின் முகம் இருண்டது.

(தொடரும்)

 
Nice epi.
Nagaya meetu kodutha Nigeria pandiyanukku theriyathu expressive Indians ku post poda maathram than theriyum munukku vantha help panna ellam theriyathu nu.
Samuktha nee pora route seriyilla molae. Veetukku oru Devi (vasanthi) pothum nee friendship odu niruthikko
 
Top