Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும்

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும் 14

அவர்களால் கடந்த காலத்திற்குச் செல்ல முடியவில்லை. இதுவரை இரண்டுமுறை இந்திர நீலத்தைப் பயன்படுத்தி அவர்கள் பயணித்திருக்கிறார்கள். ஆனால் இம்முறை அது பயனளிக்காதது ஏனென்று புரியவில்லை.

 

காரணம் என்னவென்று புரியாமல் மூவரும் கலங்கிப்போயினர்.

 



Advertisement

அனன்யா “ ஏற்கனவே எனக்கு வரும் கனவு ஒரு குழப்பம்ன்னா… இதுல இந்த கல்லும் உபயோகப்பட மாட்டேங்குது… என்னால முடியல… எவ்ளோதான் அடி வாங்க முடியும்…? இதுக்கு மேல தாங்க முடியுமான்னு தெரியல…!”என்று நொந்துகொண்டு ஒரு மூலையில் அமர்ந்தாள்.

 

“ தளர்ந்து போய்டாத அனு… இது நம்ம மன உறுதியை சோதிக்க ஒரு பரிச்சைன்னு வச்சுக்கோ…! அடுத்து என்னன்னு யோசிக்கணுமே தவிர, சோர்ந்து உட்காரக்கூடாது டா…!” என்று ஆதி அவளைத் தேற்றினான்.

Advertisement

 

Advertisement

“ஆதி… அந்த செய்யுளை இங்க குடு..!” என்று மித்ரன் ஆதி கையிலிருந்த காகிதத்தை வாங்கினான்.

 

“ கதைகள்ல வர மாதிரி இது ஏதேனும் புதிரா இருக்கலாம்… நாங்க அங்க போகணும்னு முடிவு செய்யும் பொழுது உனக்கு இந்த கனவு வருது… ஆக இது இரண்டுக்கும் தொடர்பு இருக்கு..!” என்று மித்ரன் சொல்ல, அனு தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள்.

Advertisement

 

“ விசும்பு அப்படின்னா வானம்… அதுவே இருள் விசும்பு அப்டின்னா.. இரவுநேர வானம்… வானத்தின் விழியா… ??” என்று நீண்ட சிந்தனைக்குப்பின் அனு கேட்டாள்.

 

“நட்சத்திரங்களை சொல்றாங்களா…??” என்றான் மித்ரன்.

 

“ அடுத்த வரி பாரு டா… இசையாழி… மொத்தமா படிச்சா தான் பொருள் புரியும்…” என்று சொன்ன ஆதி மறுபடி சத்தமாக அந்த பாடலை படித்தான்.

 

“எனக்கு கொஞ்சமா புரியுது… ஆதி…” அனன்யா விளக்கத் தொடங்கினாள்.

 

“வானத்தில் இருக்கும் பெரிய கண்…

 

என்னன்னு புரியலயா..?” அவள் கேட்பதற்கு இல்லையென்று இருவரும் தலையசைத்தனர்.

 

“நிலா தான்…

 

ஆழி ன்னா கடல்… இசையாழி… சத்தம் போடற கடல்…

 

அது விழுங்க துடிக்கும் பேரொளி…

 

அதாவது கடலுக்கு நிலவு மேல் காதல்ன்னு நிறைய கவிதைல லாம் சொல்லுவாங்கள்ல… அதனால இது…

 

பௌர்ணமி….

 

ம்ம்ம்ம்….

 

அதாவது பௌர்ணமில அலைகள் மிக அதிகமா இருக்கும்… கடல் சத்தம் போடும்..

 

இதுலயும் நிலவை பத்தி தான் சொல்றாங்க…”

 

“அடுத்த வரிகள பாருங்க… இந்திரநீலம் சரி… இருநீலம்ன்னா என்ன..?”என்று மித்ரன் கேட்டான்.

 

“ஆன்ன்… அதுதான் எனக்கும் புரியல…!!” அனன்யா தன் நெற்றியை நீவியபடி யோசித்துக்கொண்டிருந்தாள்.

 

“மணிமேகலை சொன்னது ஞாபகம் இருக்கா…? அவங்கள்ட்ட ஒரு கல்லும் உதயகுமாரன் கிட்ட ஒரு கல்லும் இருக்கும்… ரெண்டும் சேர்ந்தா நன்மை நடக்கும்ன்னு..! அதுதான் அந்த இருநீலம்.. சரியா..?” ஆதி தன் நினைவு அடுக்கிலிருந்து விடைதேடிச் சொல்ல, இருவரும் ஆமென்று விழிகள் உயர்த்தினர்.

 

“அப்போ ஆரம்பத்துலேர்ந்தே நம்ம கிட்ட ஒன்னு தான் இருக்கு… எப்படி நம்மால காலப்பயணம் செய்ய முடிஞ்சுது…?” என மித்ரன் கேட்டதற்கு யாரிடமும் விடையில்லை.

 

“சரி…எது எப்படியோ… எனக்கென்னவோ நிலா இருக்கும் நேரத்துல தான் அந்தக்கல் வேலைசெய்யும்ன்னு தோணுது… இந்த செய்யுளும் அதைத்தான் சொல்லுது…” என்று சொல்லிவிட்டு நீண்ட மூச்சிழுத்தான் ஆதி.

 

“இன்னைக்கு ராத்திரி வரை காத்திருக்கணுமா… அதுக்குள்ள இங்க என்னலாம் நடக்குமோ…” அனன்யா தரையில் அமர்ந்து தன் கைகளை பிசைந்துகொண்டிருந்தாள்..

 

“அந்த குறிப்ப என்கிட்ட குடுங்க… நான் பாக்றேன்… நீங்க ரெண்டுபேரும் போய் சாப்பிடுங்க…நிச்சயம் இரவில் தான் போகப்போறோம்…நீங்க ஒழுங்கா சாப்பிட்டு எவ்ளோ நேரமாச்சு.. போங்க…”என மித்ரன், அனன்யா மற்றும் ஆதியை வற்புறுத்தினான்.

 

“கோதையும் இனியாவும் அங்க இருப்பாங்க… நான் வரசொன்னேன்னு சொல்லுங்க…” என்று மித்ரன் சொன்னதும், ஆதி அவர்களிடம் இதைப்பற்றி சொல்லவேண்டாமென்று கேட்டுக்கொண்டன்.

 

“இது வேற ஆதி… அவங்கள வர சொல்லுங்க… நான் இந்த கல் பத்தியோ, கடந்தகாலம் பத்தியோ எதுவும் சொல்லல” என உறுதியளித்தான்.

 

ஆதியும் அனுவும் சாப்பிட்டுவிட்டு வரும்போது கோதை மட்டும் தன் கைபேசியுடன் அமர்ந்திருந்தாள். இனியாவும் மித்ரனும் ஏதோ குறிப்பு போல் எழுதிக்கொண்டிருந்தனர்.

 

அனுவைப் பார்த்தவுடன் கோதை “பாத்தியா அனு.. எங்க தல ஏதோ பழங்கால பாட்டுலாம் கொடுத்து அர்த்தம் கேக்குறார்… திருவள்ளுவர் கூட இவ்ளோ பாட்டு தெரிஞ்சுவச்சிருக்க மாட்டார்…எனக்கு இதெல்லாம் வராது… பாவம் இவதான் மாட்டிக்கிட்டா.. “ என்று சொல்லிக்கொண்டே இனியா வை பரிதாபமாக பார்ப்பதுபோல் பாவனை செய்தாள்.

 

ஆதி இதைக்கேட்டு மித்ரனை வெளியில் வரும்படி கண்ணால் சைகை செய்தான். மித்ரன் உடனே “… இது ஒரு கதைல வர புதிர் மச்சா.. சரி இதுங்க வெட்டியா தானே இருக்குன்னு கொஞ்சம் வேல குடுத்தேன்…” என்று சொன்னான்.

 

“நீங்க என்ன கலெக்டர் வேலையா பாக்குறீங்க… எல்லாரும் வெட்டிதான்.. எங்க கிட்டயேவா… ” என்று சொல்லிவிட்டு கோதை தன் வேலையைத் தொடர்ந்தாள்.

 

தன் கைபேசித் திரை மின்னியதும் ஆதி அதில் மித்ரனிடமிருந்து வந்த குறுஞ்செய்தியை படித்தான். “அவர்களுக்கு இதுபற்றிய உண்மை தெரியாது” என்று இருந்தது.

 

………

 

அனன்யா மணிமேகலையிடம் “அந்த கல்லுடன் வைக்கப்பட்ட குறிப்பில் என்ன இருந்ததுன்னு தெரியுமா..??” என்றாள்.

 

“நான் காணும் முன்பே மழையில் நனைந்துவிட்டது… உன்னைக் காணும் வரை அதனை மீண்டும் பார்க்கும் எண்ணமே எனக்கில்லை..!” என்று மணிமேகலை விடை தந்தாள்.

 

“அப்போ… திரும்ப அந்த கல்ல எடுத்து பாத்தீங்களா…?” வியப்பினை அடக்காமல் கேட்டாள் அனு……..

 

அதிகாலையில் புத்தர் பாதத்தின் முன் தியானித்துக் கொண்டிருந்த மணிமேகலை, மனக்கண்ணில் இதுபோன்ற காட்சியைக் கண்டு திடுக்கிட்டு விழித்தாள்.

 

 

 

ஏனெனில் முதல்நாள் அனு, ஆதி, மித்ரன் மூவரும் மணிமேகலை சொன்னதைக் கேட்காமல் மறைந்துவிட்டனர்.

 

அவர்கள் வந்தது ஏன்..

 

சென்றது ஏன் … என்று எதுவும் புரியவில்லை….

 

வந்து போன அந்த அரை நாளில் மணிமேகலையின் மனதில் அவர்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் மிகப் பெரியது.

 

வைகறையில் விழித்தவுடன் மணிமேகலைக்கு முதலில் இந்திரநீலத்தின் நினைவுவர, அவளிடமிருக்கும் பேழையைத் திறந்து பார்க்கிறாள்.

 

அதில் அந்த வெளிர்நீலக்கல், ஒரு பட்டுத்துணி போர்த்தப்பட்டு இருக்கிறது.

 

அதன் அழகையும், வசீகரத்தையும் அவள் முதல்முறையாக உணர்ந்தாள்.

 

அந்த பட்டுத்துணியில் எழுதியிருந்த எழுத்துக்கள் அழிந்து விட்டாலும் அவற்றின் அச்சு கலையாமல் இருந்தது. ஆனால் அதிலிருக்கும் வார்த்தைகள் என்னவென்பது எவ்வளவு முயன்றாலும் மணிமேகலைக்குப் புரியவில்லை.

 

அதனூடே இளவரசர் உதயகுமாரன் நினைவும் வர, மனதை ஒருநிலைப்படுத்த எண்ணிய அவள், பேழையை மூடிவைத்துவிட்டு புத்தரை தியானிக்கச் சென்றுவிட்டாள்.

 

இதுவரை அவளின் தியானம் இடையில் கலைந்ததில்லை..

 

ஆனால் இந்த அவஸ்தையில் கொஞ்சம் இன்பமும் தெரிந்துபோல் தோன்ற மனம் மதில்மேல் பூனைபோல் மருகியது.

 

இன்று நடப்பவை யாவும் அவள் குழப்பத்தை மேலும் அதிகரித்தன.

 

பொழுது புலரத் தொடங்கியது….

 

வெளியிலிருந்து “இளவரசர் வந்திருக்கிறார்..!!” என்னும் குரல்கள் ஆங்காங்கே ஒலிக்கத்தொடங்கின. .

 

மணிமேகலையின் மனக்கிளி அவளுக்கு முன்பே சிறகடித்து வெளியில் சென்றுவிட்டது.

 

 

…….

 

 

 

இளவரசர் வந்திருக்கிறார் எனும் குரல் கேட்டவுடன் மணிமேகலைக்கு கட்டுக்கடங்காத மகிழ்ச்சி கண்கள் வழியே மின்னியது.

 

 

 

எத்தனையோ முறை இளவரசர் இவளைத் தொடர்ந்து வந்திருந்தாலும், துறவறத்தை மனதில் கொண்டு மணிமேகலை இதுவரை அவர் முகம் பார்க்க விரும்பியதில்லை. இப்போது அவரைக் காணும் ஆவல் அவள் மனம் முழுதும் நிறைந்திருந்தது. அவர் எப்படி இருப்பார் என்று அவள் உருவாக்கியிருந்த மன பிம்பத்தை தன் கூடவே கூட்டிக்கொண்டு நடந்தாள்.

 

உலகறிந்தவள் என்பதால் அவளுக்கு நாணம் இல்லை. ஆர்வமும் கட்டுக்கடங்காத காதலும் ஒன்றோடொன்று போட்டி போட்டு அவளை வாசலுக்கு உந்தித் தள்ளின.

 

ஒரு நொடிக்குள் அதனை மாற்றி பழையபடி தன் முகத்தை உணர்ச்சி துடைத்தது போல் ஆக்கிக் கொண்டாள்.

 

நெஞ்சம் அலைபாய்ந்து கொண்டிருந்தாலும் வெளியில் தன் தவக்கோலமும் உறுதியும் குறையாமல் நடந்துவந்தாள்.

 

அங்கே உதயகுமாரன் வெண்புரவி மீது அமர்ந்திருந்தார். மணிமேகலை வருவாள் என்கிற நம்பிக்கை அவரிடம் துளியும் இல்லை.

 

ஆதி, அனு, மித்ரன் மூவரும் முதலில் வந்தபோது தங்கும் விடுதியில் இந்திரநீலத்தை மறந்து விட்டுச்சென்றதை இளவரசர் மணிமேகலை தான் அதை அங்கே வைத்ததாக நினைத்துவிட்டார்.

 

அதை புத்த விகாரத்திற்கு தன் காவலர்களிடம் கொடுத்து அனுப்பிவைத்தார். அதைப்பற்றி கேட்கவே அவர் இந்த அதிகாலையில் எவரும் அறியாமல் இவ்விடம் வந்தார்.

 

எத்தனையோ முறை தன் அன்பை அவளுக்குத் தெரிவிக்க முயன்றும் தோற்றமையால் அவர் மனம் சொல்லொணா துயருற்றது. முன்னெல்லாம் நடந்ததுபோல் இப்பொழுதும் ஏற்படப்போகும் ஏமாற்றத்திற்கு தன் மனதை ஆயத்தம் செய்துகொண்டு வந்திருந்தார்.

 

அவர் எதிர்பார்ப்பிற்கு மாறாக அங்கே மணிமேகலை புத்த விகாரத்தின் வாயிலில் வந்து நின்றாள். உடன் வந்த தோழிகளை விலக்கி, அவள் மட்டும் தனித்திருந்தாள்.

 

உதயகுமாரன் அவள் வந்ததும் செய்வதறியாது நின்றுவிட்டார். கால்கள் தானாக புரவி விட்டிறங்கி அவள் நின்ற இடம்நோக்கி நகர்ந்தது.

 

அந்த வருத்தம் நிறைந்த முகம் அவளை ஏதோ செய்தது. திடகாத்திரமான உடற்கட்டும், கம்பீர நடையுமாக அவள் இதுவரை எண்ணியிருந்த இளவரசர் இல்லை இது.

 

அரசி இவளை அழைத்துப்பேசியது திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல… இந்நகரை விட்டுச்சென்றுவிடு என்று சொல்வதற்காக. ஆனால் “எனக்கு இளவரசன் மேல் ஈர்ப்பில்லை. நான் துறவி..”என்று பதிலுரைத்து அவள் திரும்பிவிட்டாள்.

 

உள்ளத்தில் ஊற்றாய் அன்பு இருப்பினும், அவள் உருவாக்கிய மனச்சிறையில் இருந்த காதல் வெளிவர முடியாமல் புழுங்கியது.

 

“நீங்கள் என்மேல் கொண்ட அன்பு உண்மையானதா என்று அறிய விழைகிறேன். அது என் எழில் கண்டு, வந்த ஈர்ப்பா… அல்லது இறுதிவரை கரம்பற்றி வாழ நினைக்கும் தூய்மையான அன்பா என்றறிந்தால் மட்டுமே என் நெஞ்சம் அமைதிபெறும்… விளக்கிச்சொல்வீரா…?” மணிமேகலை இவ்வாறு கேட்டாள்.

 

அவள் கேட்ட வார்த்தைகளில் தெரிந்த ஏக்கம் உதயகுமாரனை உவப்பின் உச்சியில் சேர்த்தன.

 

“என் அன்பு தூய்மையானது… நீ மட்டும் போதும் என் வாழ்வு முழுமை பெற…

 

அரச போகம் வேண்டாம்..! அரியணை வேண்டாம்…!

 

இது வெறும் உருவு கண்டு வந்த ஈர்ப்பல்ல…

 

என் உள்ளம் நீயாளும் நிலம்…. இந்நிலம் நமக்கு வேண்டாம் கடல் கடந்து எங்கேனும் சென்றிடுவோம்…

 

அங்கே நான் அரசனில்லை… நீ தலைக்கோலி இல்லை..! நமைப்பிரிக்க உன் தாயோ என் குலப்பெருமை பேசும் மக்களோ என எவரும் வர இயலாது..! நமக்கான சிறு உலகில் வாழ்வோம்.. வந்துவிடு..!” என்று சொல்லி தன் கலங்கிய கண்களை மறைக்க எண்ணி வேறுபக்கம் திரும்பிக்கொண்டார். அக்கண்கள் அவர் சொல்வது மெய்தான் என்பதை மணிமேகலைக்குப் புரியவைத்தன.

 

“நேற்றிலிருந்து எனக்கும் இதுபோல் தோன்றுகிறது… ஆயினும் பறந்து செல்ல முடியாமல் சிறகுகளில் பிணைக்கப்பட்ட சங்கிலியாய் சுற்றம் தடுக்கிறது…”

 

மனம் நினைத்ததை மணிமேகலை வெளிக்காட்டாமல் “தங்களின் மதிப்பு உண்மையெனில் எனக்கு ஒரு உபாயம் செய்ய வேண்டுகிறேன். நேற்றுமுதல் உங்களின் வரவை எதிர்நோக்கியிருந்தேன்” என்றாள்.

 

“உன்னைத் தடுப்பது நீயேயன்றி யாருமில்லை. சொல் மணிமேகலை. உனக்கு என்ன வேண்டும் ?” என்று கேட்டபடியே அங்கேயிருந்த கற்பலகையில் அமர்ந்தார்.

 

தான் மனதில் நினைத்தவற்றிற்கு அவர் பதிலளித்ததும் மணிமேகலை கண்கள் ஒளி பெற்றன. அவள் மனதில் முழு நம்பிக்கை வேரூன்றியது.

 

மணிமேகலையின் இந்த மாற்றம் அவரை கொஞ்சம் உற்சாகமாக்கியது.

 

அவள் வருங்காலத்திலிருந்து வந்தவர்கள் பற்றியும் அவர்கள் தான் தன் மனமாற்றத்திற்கு காரணமென்பதையும் அத்தோடு அவர்கள் வந்தவுடனேயே மறைந்ததையும் தெரிவித்தாள்.

 

விருந்தினர் விடுதியில் இருந்த கல் எவ்வாறு வந்தது என்பதை இதன்மூலம் இளவரசர் ஊகித்துக்கொண்டார். அதுபற்றி கேட்கவே அதிகாலையில் எவரும் அறியாமல் அவர் அங்கே வந்தார்.

 

சித்தர் கோட்டத்தில் இருந்து சோழதேசம் வரமாய்ப்பெற்ற இந்திரநீலம் தமக்கு நன்மை செய்யத்தொடங்கியதை உணர்ந்து கண்கள்மூடி சித்தருக்கு வணக்கம் சொன்னார்.

 

மணிமேகலை “அந்த ரத்தினக்கல்லில் ஏதோ சக்தியிருக்கிறது.. அதையறிந்து கொள்ள நீங்கள் உதவவேண்டும்.. அவர்கள் மீண்டும் வருவார்கள், இந்த குழப்பம் தீர்ந்தால் மட்டுமே அவர்கள் நிலை இயல்பாகும் என உள்ளுணர்வு சொல்கிறது…” அவள் பார்வை அடிவானத்தில் நிலைகுத்தி நின்றது.

 

அன்றைய பணிசெய்ய வந்துவிட்ட ஆதவன் மஞ்சள் ஒளி தெளிக்க, பறவைகள் இரைதேடிப் புறப்பட்டன.

 

“பொழுது விடிந்தபடியால் நீங்கள் இங்கே நடமாடுவது இன்னல்களுக்கு வழிவகுக்கும். அந்தியில் சந்திப்போம் இளவரசே…” மக்கள் நடமாட்டத்தைக் கண்ட மணிமேகலை பரபரத்தாள்.

 

“உத்தரவு தேவி… இதுகாறும் நீங்கள் என்னுடன் செலவிட்ட நேரமே ஆயுளின் வரம். அந்தியை எதிர்நோக்கியே இருப்பேன்… வருகிறேன்” காற்றில் மிதப்பதுபோல் ஓடிச்சென்று குதிரையேறி மின்னலாய் மறைந்தார் இளவரசர் உதயகுமாரன்.

 

அவர்மீது பட்ட கடற்காற்று தன்னைதீண்டவும், சிறையிலிருந்து மீண்டது மணிமேகலையின் காதல்.

 

கதிரவன் உதித்ததிலிருந்தே அது மறையும் நேரத்தை அவள் எதிர்நோக்கிக்கொண்டிருந்தாள்.

 

நிகழ்காலத்தில்…..

 

இங்கே இன்னும் மூவரும் சூரியனின் மறைவிற்காகக் காத்திருந்தனர். அவர்கள் நம் பழைய நண்பர்களான ஆதி, அனு மற்றும் மித்ரன்.

 

“இதோட முழு அர்த்தம் நான் கண்டுபிடிச்ருக்கேன்… எந்த கதையில் வருது மித்ரன்… இத பிரிச்சு படிச்சு புரிஞ்சுக்க எனக்கு ரொம்ப நேரம் எடுத்துச்சு..” என்று கேட்டுக்கொண்டே இனியா கையில் ஒரு குறிப்புடன் அந்த அறைக்குள் நுழைந்தாள்.

 

மணி ஐந்தைத் தொட்டிருந்தது. அவளைப்பார்த்ததும் மித்ரன் முகத்தில் தானாக புன்னகை தோன்றியது.

 

“வந்து உக்காரு இனியா….” என்று அனு தன் பக்கத்து இருக்கையை காட்டினாள்.

 

“ஒரு புத்தகத்துல வர்ற கவிதைக்கு இவ்ளோ முக்கியத்துவமா… ரொம்ப தான் பண்றீங்க..” அவன் கையில் அந்த குறிப்பைத் திணித்துவிட்டு அமர்ந்தாள்.

 

“இது உண்மையாவே முக்கியமான விஷயம்…. உன்னோட உதவி எங்களுக்கு தேவப்படுது…” மித்ரன் தன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தபடி பேசத்தொடங்கினான்.

 

ஆதி இருமல் வந்தது போல் எழுந்து வெளியில் சென்றான். என்னவோ ஏதோ என்று பதறி, அனு அவன் எழுந்து சென்றதும் வேகமாகப் பின்தொடர்ந்தாள்.

 

◆◆◆

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!