Skip to content
Post Views: 3,740
15
அவன் வேதனையைக் கலைக்க நினைத்தவள், “ம்க்கும்!” என்று குரல் கொடுத்தாள்.
Advertisement
அப்போதும் அவன் நினைவுகள் கலையாமல் இருக்க, “ர ரஞ்சு…!” என்றாள் மெல்ல அவன் தோள் தொட்டு.
அவளின் திடீரென்ற தீண்டலில் திடுக்கிட்டவன், தலையைக் குனிந்தவாரே தன் கண்களின் தூசியை துடைப்பதைப் போல் பாவனைச் செய்து தன் கண்ணீரை கட்டுக்குள் கொண்டு வந்தான்.
பின் தன் குரலில் கடினத்தை வரவழைத்து, “என்ன?!” என்றான் அவள் புறம் திரும்பாமலேயே.
Advertisement
“நிரு விஷயமா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்!” என்றாள் அவன் முன்னே வந்து நின்று.
Advertisement
“நிருவை பத்தியா?! ஏன் என்ன ஆச்சு?! அவனுக்கு ஏதாவது பிரச்சனையா?!” என்றான் சற்றே பதட்டத்துடன்.
“இல்ல இல்ல…!” என்று மறுத்தவள்,
“யாஷினி, நிருவைக் காதலிக்கிறதைப் பத்தி நீ என்ன நினைக்கற?” என்றாள் அவன் முகம் பார்த்து.
Advertisement
சில நொடிகள் அமைதியாக இருந்தவன், “அந்தப் பொண்ணைப் பார்த்தா நல்லப் பொண்ணு மாதிரிதான் தெரியுது..! ஆனா அவ எந்த அளவுக்கு அவளோட முடிவுல உறுதியா இருக்கான்னு நம்புறது. இன்னிக்கு ஏதோ ஒரு வேகத்துல அவனைக் கல்யாணம் செய்துக்கறேன்னு சொல்லிட்டு, நாளைக்கு அவன் மனசு கஷ்டப் படும்படி நடந்திடக் கூடாதே..!” என்றான் தமையனின் அக்கறையோடு.
“நீ யோசிக்கிறதும் சரிதான் ரஞ்சு!” என்றவள் மேலும் தொடர்ந்து,
“நான் இன்னிக்கு அவளைப் பார்த்தேன்…! நீ கேட்ட இதே கேள்வியைத்தான் நானும் அவகிட்ட கேட்டேன். அதுக்கு அவ என சொன்ன தெரியுமா?!” என்றவள், நடந்த அனைத்தையும் சொல்லி,
“எனக்கு அவமேல முழு நம்பிக்கை வந்துடுச்சு ரஞ்சு… நிச்சயமா அவ நிருவுக்கு ஒரு நல்ல துணையா இருப்பான்னு என் மனசுக்குத் தோணுது…!” என்றாள் நம்பிக்கையோடு.
“அந்தப் பொண்ணு இந்த அளவு உறுதியா இருக்கறதை நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு நிலா… ?!” என்றான்.
பல வருடங்கள் கழித்து அவன் அவளை பெயர் சொல்லி அழைக்கிறான்! அதுவும் தனைமறந்து!
அவனின் அவ்வழைப்பு அவள் மனதுள் ஓர் இனம் புரியாத இதம் பரப்பியது.
“நிருவும் அவளை விரும்பறான் ரஞ்சு… ஆனா தன்னோட நிலைமையை முன்னிறுத்தி, அவன் மனசை வெளிப்படுத்த மறுக்கிறான். நாம ரெண்டு பேரும்தான் அவங்களை எப்படியாவது சேர்த்து வைக்கணும்!” என்றாள்.
“நிச்சயமா… நான் அவன்கிட்ட பேசவா?” என்றான்.
“ப்ச் ப்ச் அது சரி வராது… அவன்கிட்ட பேசினா நிச்சயமா சம்மதிக்க மாட்டான். அதனால முதல்ல நாம நம்ம வீட்ல இருக்க எல்லோர் கிட்டயும் பேசி அவங்களைச் சம்மதிக்க வைக்கணும்! அப்புறம் எல்லோருமா சேர்ந்து அவனை சம்மதிக்க வைக்கலாம்!” என்றாள் தன் நண்பனின் மனம் புரிந்தவளாய்.
“ம் சரி…! நாளைக்கே வீட்ல எல்லோர்கிட்டயும் பேசிடலாம்!” என்றான்.
“தாங்க்ஸ் ரஞ்சு… நான் கேட்டதும் உடனே சம்மதிச்சதுக்கு!” என்றாள் நிலா.
“நிரு உனக்கு நண்பன் ஆகறதுக்கு முன்னாடியே எனக்கு தம்பி! எனக்கும் அவன் வாழ்க்கையைப் பத்தின அக்கறை இருக்கு!” என்றான் ரஞ்சன்.
“ம்! தாங்க்ஸ்!” என்றாள் மறுபடியும்.
“இது எதுக்கு!?” என்றான் புரியாத பாவனையுடன்.
“பல வருஷம் கழிச்சு என்னை என் பேர் சொல்லி அழைச்சதுக்கு!” என்று ஓர் புன்னகையை வீசிச் சென்றாள்.
அவள் புன்னகையைக் கண்டவனது முகத்திலும் லேசான புன்முறுவல் தோன்றியது.
உள்ளே சென்று சோபாவில் படுத்துக் கண்மூடியவள், ‘என் அப்பாவுக்காக உன்னை கல்யாணம் செய்துகிட்டது முதல் காரணமாயிருந்தாலும், உன்னைப் பிடிக்காம நான் கல்யாணம் செய்துக்கலடா…! எனக்குத் தெரியும்! நீ உன் மனசுக்குள்ள எவ்ளோ வேதனையை அனுபவிக்கிறன்னு! உன் மனசுல இருக்க காயத்தை முழுசா என்னால போக்க முடியலைன்னாலும், நிச்சயமா அந்தக் காயத்துக்கு ஒரு நல்ல மருந்தா இருப்பேன் ரஞ்சு…! நீ என்னை முழு மனசோட ஏத்துக்கிற வரைக்கும் நான் பொறுமையா காத்திருப்பேன்!’ என்றாள் மனதுள்.
அவள் உறங்கிய சில நொடிகளுக்கு பின் தன் அறைக்குள் வந்தவன், உறங்கத்தில் ஆழ்ந்திருக்கும் தன் உயிருக்கு தூரமான, உறவுக்கு நெருங்கிய பெண்ணிலவைக் கண்டு,
‘விதி எப்படி எல்லாம் ஒருவர் வாழ்வைத் திசை திருப்பி விடுகிறது!? கனவில் கூட நினைத்திருப்பேனா? இவள் என் மனைவியாவாள் என்று?!’ என்று எண்ணியபடியே தன் படுக்கைக்குச் சென்றான்.
மறுநாள் நிரு வெகு சீக்கிரமே வெளியே கிளம்பி விட, ரஞ்சனிற்கும், நிலாவிற்கும் வசதியாய்ப் போய்விட்டது.
குடும்பத்தினர் அனைவரிடமும், கணவனும், மனைவியுமாகச் சேர்ந்து பேசி, யாஷினி, நிருவின் காதலை எடுத்துக் கூறினார்.
“தாத்தா… யாஷினி நிச்சயமா நிருவுக்கு நல்ல மனைவியா இருப்பா…!” என்றாள் நிலா உறுதியாக.
“நீ சொல்றதெல்லாம் சரிதான் ம்மா…. ஆனா அந்தப் பெண்ணோட அப்பாவுக்கு இதுல சுத்தமா விருப்பம் இல்லையே?!” என்றார் இராமநாதன்.
“தாத்தா… யாஷினி எப்படியாவது அவளோட அப்பாவைக் கன்வின்ஸ் பண்ணிடுவா! முதல்ல நீங்க எல்லோரும் இதுக்கு சம்மதம் சொல்லுங்களேன் ப்ளீஸ்!” என்றாள் நிலா.
“எங்க பேரனுக்கு நல்ல வாழ்க்கை அமையணும்னு எங்களுக்கு மட்டும் ஆசை இருக்காதாம்மா… எங்க எல்லாருக்கும் அந்தப் பொண்ணை முதன் முதல்ல பார்த்தப்பவே பிடிச்சிடுச்சு! ஆனா அவங்க அப்பாவுக்கு இதுல விருப்பமில்லைன்னு தெரிஞ்சதும் எங்க விருப்பத்தை வெளிக் காட்டிக்கலை!” என்ற இராமநாதன், தன் மனைவியின் முகம் பார்க்க,
காமாட்சி, “எனக்கு இதுல பூரண சம்மதம்ங்க…” என்று சொல்லிவிட்டு,
“ராதா, கிருஷ்ணா உங்க ரெண்டு பேருக்கும் இதுல சம்மதமா? என்றார் அவர்கள் இருவரையும் பார்த்து.
“உங்களுக்கே பிடிச்சிருக்கும் போது எங்களுக்கு பிடிக்காதாம்மா…?!” என்றார் கிருஷ்ணன்.
“எனக்கும் சம்மதம் தான் அத்தை!” என்று ராதாவும் கூற, அனைவரின் சம்மதமும் கிடைத்த திருப்தியில் நிலா தன் கணவன் முகம் நோக்கினாள்.
அவன் முகத்திலுமே மகிழ்ச்சி தென் பட, அதைப் பார்த்து மனம் நிறைந்தாள் வெண்மதியாள்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு பஞ்சாட்சரம் யாஷினியைப் பார்க்க, அவள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றார்.
எப்போதும் போல் கதவைத் திறந்ததும் முகத்தைத் திருப்பிக் கொள்ளாமல், “வ வாங்கப்பா…!” என்றாள் யாஷினி.
எப்போதும் மிக ஆடம்பரமான உடைகளை உடுத்தியிருக்கும் தன் மகள், மிக மலிவான காட்டன் சேலை அணிந்திருப்பதைக் கண்டு தந்தையின் மனம் வேதனையுற்றுது.
“எப்படிம்மா இருக்க?!” என்றார் அவர் நெகிழ்ச்சியுடன்.
“ம் நல்லா இருக்கேன்.. நீங்க?!” என்றாள் யாஷினி.
கடந்த சில மாதமாக தன்னிடம் ஒரு வார்த்தைக் கூட பேசியிராத தன் மகள், பேசியதே அவருக்கு மன நிம்மதியைத் தந்தது என்றால், தன்னை நலம் விசாரித்தது அவருக்கு பெரும் சந்தோஷத்தையே கொடுத்தது எனலாம்.
“நீ வீட்ல இல்லாம நாங்கல்லாம் எப்படிம்மா நல்ல இருப்போம்?!” என்றார் பஞ்சாட்சரம்.
அதைக் கேட்டு அவள் மௌனமாய்த் தலை குனிய, “வீட்டுக்கு வந்திடும்மா…!” என்றார் வேண்டுகோளாக.
அப்போதும் அவள் அமைதியாகவே இருக்க, “அப்பா உன்னை அடிச்சது தப்புதான்! அதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்புக் கே..!” என்று அவர் சொல்வதற்கு முன்,
“அப்பா ப்ளீஸ்…!” என்று அவரைத் தடுத்தவள்,
“நீங்க என்னை அடிச்சதுனால நான் வீட்டை விட்டு வரல..!” என்றாள்.
“அப்போ அப்பாகிட்ட உனக்கு என்னம்மா கோபம்?! நான் உங்களைகூட இருந்து நல்லா கவனிச்சிக்கலைன்னு தானே…?! நான் செய்தது தப்புதான் உங்களை நல்ல படியா வளர்க்க பணம் மட்டும் இருந்தா போதும் நினைச்சேனே தவிர, உங்களைப் பார்த்துக்க நான் பக்கத்துல இருக்கணும்னு நினைக்காம போனது என் தப்புதான்! அதுக்காக இந்த வயசான காலத்துல என்னை நீ பிரிஞ்சி வந்து இப்படி தண்டிக்கிறது நியாமா ம்மா…! நீ இல்லாம உன் அண்ணன், அண்ணி, தர்ஷினி கூட ரொம்பவே வேதனைப் படறாங்கம்மா…! தயவு செய்து வீட்டுக்கு வந்திடும்மா…!” என்றார் கெஞ்சுதலாக.
“அப்பா… இதெல்லாம் சின்ன வயசில இருந்தே என் மனசில இருந்துகிட்டு இருக்க வேதனைதான்! அதுக்காக நான் வீட்டை விட்டு வரலைன்னு உங்க மனசுக்கு நல்லாவே தெரியும்!” என்றாள் யாஷினி விடாபிடியாய்.
அவள் சொல்வதைக் கேட்டு சற்று நேரம் அமைதியாக இருந்தவர், “இந்த ஒரு விஷயத்துல மட்டும் அப்பா பேச்சைக் கேளுமா! அந்தப் பையன் உனக்கு வேண்டாம்… அவனை விட எல்லா விதத்திலையும் சிறந்தவனா… நான் உனக்கு பார்த்துக் கல்யாணம் செய்து வைக்கிறேன்!” என்றார் அவரும் அவள் காதலை மட்டும் ஏற்றுக் கொள்ள மனமில்லாமல்.
“நீங்க பார்க்கிற பையன் எல்லா விதத்திலையும் சிறந்தவனா இருக்கலாம் ப்பா… ஆனா என் மனசுக்கு பிடிச்சவனா இருக்க முடியாதே!?” என்று வினா எழுப்ப, அவர் மௌனம் சாதித்தார்.
“என்னப்பா பதிலே சொல்ல மாட்டேங்கறீங்க?!” என்று அவள் கேட்க,
“இதைப் பத்தி அப்புறம் பேசலாம்! முதல்ல நீ வீட்டுக்கு வரேன்னு சொல்லும்மா…!” என்றார் அவர் எப்படியாவது அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு.
“நான் வீட்டுக்கு வரணும்னா ஒரு கண்டிஷன்! அதுக்கு நீங்க சம்மதம் சொன்னீங்கன்னா நான் வீட்டுக்கு வரேன்!” என்று அவள் பீடிகை போட,
“என்னம்மா.. சொல்லு?!” என்றார்.
“கொஞ்ச நாளைக்கு நீங்க என்னை கல்யாணம் செய்துக்கச் சொல்லி வற்புறுத்தக் கூடாது!” என்றாள்.
சிறிது நேரம் அமைதி காத்தவர், ‘ஒரு வார்த்தை கூட பேசாம இருந்தவ, இவ்ளோ தூரம் மனசு மாறினதே பெரிய விஷயம்! கொஞ்ச நாள் விட்டுப் பிடிப்போம்’ என்று நினைத்து,
“சரி வற்புறுத்த மாட்டேன்! கிளம்பும்மா…!” என்றார்.
“ம்! கொஞ்ச நேரம் பொறுங்க பா… நான் ஹாஸ்ட்டல் வார்டன் கிட்ட சொல்லிட்டு வந்துடறேன்…” என்று சொல்லிச் சென்றாள்.
யாஷினி வீட்டிற்குள் நுழைவதைக் கண்டவுடன், “ஐ! அத்தை வந்துட்டாங்க…!” என்று ஓடிச் சென்று அவளைக் கட்டிக் கொண்டாள் தர்ஷினி.
காவ்யா, சந்தோஷ் இருவருமே மகிழ்ச்சியோடு சென்று யாஷினியை நலம் விசாரித்தனர்.
அவள் வீட்டிற்கு வந்த சந்தோஷத்தை கொண்டாட, அவர் தந்தை பஞ்சாட்சரம் தனது வேலையாட்களிடம் அவளுக்குப் பிடித்த அத்தனை வகை உணவுகளையும் சமைக்கச் சொல்லிக் கட்டளையிட்டார்.
சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு வந்த யாஷினி, உணவு மேஜையில் நிறைந்திருந்த உணவு வகைகளைப் பார்த்து திணறிப் போய், “இத்தனையும் ஒரே நேரத்துல எப்படிப்பா சாப்பிட முடியும்?!” என்றாள்.
“அதெல்லாம் தெரியாது நீ சாப்பிட்டுதான் ஆகணும்! எத்தனை நாள் எங்களை பிரிஞ்சிருந்து எங்களைத் தவிக்க விட்ட?!” என்றாள் காவ்யா.
“ஏய் நீங்க என்ன நல்லா கவனிசிக்கிறேங்கிற பேர்ல பழி வாங்கப் பார்க்கறீங்களா?!” என்று தன் அண்ணியை முறைத்தாள் யாஷினி.
“உனக்கு பிடிச்சவரைக்கும் சாப்பிடும்மா…!” என்றார் பஞ்சாட்சரம்.
விடுதியில் ருசியே இல்லாத உணவை அருந்தி வந்த யாஷினி, நீண்ட நாட்களுக்குப் பின் தன் வீட்டு ருசி நிறைந்த உணவை ரசித்துச் சாப்பிட, அதைப் பார்த்த தந்தையின் கண்கள் குளமாகியது.
அவர் சாப்பிடாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த யாஷினி, நிமிர்ந்து பார்க்க, அவர் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
என்னதான் தந்தையின் மீது கோபம் இருந்தாலும் அவர் கண்கலங்கி இருப்பதை பார்த்து யாஷினியின் மனம் தானாகக் கசிந்தது.
“அப்பா என்னாச்சு பா…?!” என்று அவள் பரிவோடு கேட்க,
“ஒண்ணுமில்லைமா…! நாங்க எல்லோரும் இருந்தும், நீ இத்தனை நாள் ஹாஸ்ட்டல தங்கி கஷ்டப்பட்டதுக்கு நான்தானே காரணம்! என்ன மன்னிச்சுடும்மா!” என்றார் மனதார.
“அப்பா….!” என்று முதன் முதலாக உருக்கத்தோடு தன் தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டவள்,
“நீங்கதான் ப்பா… என்னை மன்னிக்கணும்! உங்க பாசத்தை புரிஞ்சிக்காம எத்தனை நாள் உங்களை எடுத்தெறிஞ்சி பேசி இருக்கேன்?! ஸாரி பா…!” என்றாள் உணர்ந்து.
“அட என்ன ஒரு உலக அதிசயம்!? என் அப்பாவும், என் தங்கச்சியும் முதன்முதலா அன்பா பேசிக்கிறாங்க!” என்றான் சந்தோஷ் மன நிறைவான புன்னகையுடன்.
‘தாங்க்ஸ் நிலா… நீங்க மட்டும் இல்லைன்னா.. நான் இப்பவும் என் அப்பாவோட அன்பைப் புரிஞ்சிக்காமலே இருந்திருப்பேன்!” என்று மனதிற்குள் நன்றியுரைத்தாள் யாஷினி.
அன்று காலை குளித்துவிட்டு வெளியே வந்த ரஞ்சன் நிலா இன்னும் எழுந்திருக்காமல் படுத்திருப்பது கண்டு ஆச்சர்யம் கொண்டான்.
‘என்ன இவ இன்னும் தூங்குறா?! கல்யாணமாகி வந்த முதல் நாள் இவ அசந்து தூங்கி பார்த்ததோடு சரி! அதுக்கப்புறம் நான் எழுந்திருக்கிறது முன்னாடியே எழுந்து தயாராகி அம்மாவுக்கு உதவி செய்யப் போயிடுவாளே?! ஒரு வேலை ஸ்கூல் லீவோ?! ப்ச்! ப்ச்! லீவ் டேஸ்ல கூட இப்படித் தூங்க மாட்டாளே…?!’ என்று நினைத்தவன் அவள் அருகே சென்றான்.
அருகிலிருந்த தலையணையை எடுத்து அதனைக் கொண்டு மெல்ல அவளைத் தட்டி எழுப்பினான்.
“ஏய் என்னாச்சு?! ஸ்கூலுக்குப் போகலையா?!” என்றான்.
அப்போதும் அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே,
“ஏய் எழுந்திரு! என்னாச்சு உனக்கு?! என்று வேகமாகத் தட்டினான்.
ம்ஹும் அவள் அசைவதாகவே தெரியவில்லை. ‘என்னாச்சு இவளுக்கு?! என்று நினைத்தவன், தண்ணீரைக் கொண்டு வந்து அவள் முகத்தில் தெளித்து எழுப்பினான்.
அவள் மெல்லிய முனகலுடன், “எனக்குத் தூக்கம் தூக்கமா வருது என்னை விடு!” என,
“எருமை எருமை…! நான் என்னமோ ஏதோன்னு பயந்தே போயிட்டேன்!” என்று சொல்லிவிட்டு அவன் நகர முயல, நகர முடியாமல், அவன் சட்டையைப் இறுகப் பிடித்துக் கொண்டிருந்தாள் பெண்பாவை.
“ஏய் காலையிலயே இம்சை பண்ணாத?! விட்றீ சட்டையை!” என்று அவன் அவள் கையை விடுவிக்க முயல,
அவள் மேலும் பிடியை இறுக்கி, “ம்! ம்! என்னடா மாத்திரை அது? தலைவலி போகும்னு நினைச்சிப் போட்டா இன்னும் அதிகமாகிடுச்சு!? தூக்கம் தூக்கமா வேற வருது!” என்றாள் கண்கள் செருக.
‘அய்யோ இவ என்ன மாத்திரை சாப்பிட்டா?!’ என்று மனம் பதறியவன், அவளருகே சென்று,
“ஏய் என்ன மாத்திரைடி சாப்பிட்டா?! எங்கிருந்து எடுத்த?!” என்றான் பதட்டத்துடன்.
“ஹான்?! தலை வலிக்குதான்! அதோ அங்கிருந்து…!” என்று அவள் தூக்கக் கலக்கத்தில், டிரெஸிங் டேபிளை சுட்டிக் காட்டினாள்.
“அய்யோ அங்கதானே என்னோட ஸ்லீப்பிங் பில்சையும் வைச்சிருந்தேன்?!” என்று அவன் வேகமாகச் சென்று மேஜை டிராயரைத் திறந்து பார்க்க, அவன் நினைத்தது போலவே அவள் அவனுக்காக வாங்கி வைத்திருந்த தூக்க மாத்திரைகளில் இரண்டைக் காலி செய்திருந்தாள்.
“அய்யோ!!” என்று அவன் தலையில் கைவைக்க, அவர்கள் அறைக்கதவு தட்டப் படும் சத்தம் கேட்டது.
“நிலா… என்னம்மா இன்னும் எழுந்திரிக்கலையா?! ஸ்கூலுக்கு நேரமாச்சே!? ரஞ்சன் நீயும் எழுந்திருக்கலையாடா?!” என்று குரல் கொடுத்தார் ராதா.
‘அய்யோ போச்சு! இப்போ கதவைத் திறந்தா.. இவ இருக்க நிலைமையை பார்த்து அம்மா என்ன எதுன்னு ஒரே கேள்வி கேட்டு துளைச்சிடுவாங்க! அப்புறம் நான் தூக்க மாத்திரை சாப்பிடற விஷயம் அவங்களைத் தெரிஞ்சிடும்! அப்புறம் அதுக்கு வேற ஒரு பஞ்சாயத்து நடக்கும்!’ என்று அவன் மனம் புலம்ப,
“நிலா… ரஞ்சன்…” என்று மறுபடியும் குரல் கொடுத்தார் ராதா.
“ஹான்! அம்மா…. அவ குளிச்சிகிட்டு இருக்காம்மா… நான் ரெடியாகிட்டு இருக்கேன். கொஞ்ச நேரத்துல வந்திடுவோம்!” என்று அவன் சமாளிக்க,
“ஓ! சரிடா… சீக்கிரம் வந்திடுங்க!” என்று சொல்லி நகர்ந்தார் ராதா.
‘இவள…’ என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவளை நெருங்கியவன்,
“ஏய்… ஏய் எழுந்திரு…. பிசாசு.. தலைவலிக்குதுன்னா தலை வலி மாத்திரையைப் போட வேண்டியதுதானே!? எதுக்கு தூக்க மாத்திரையை எடுத்துப் போட்டா?! அதுவும் ரெண்டு மாத்திரை!” என்று திட்டியபடியே அவளை தலையணைக் கொண்டு அடித்து எழுப்ப,
“என்னது தூக்க மாத்திரையா?! அது எப்படி அங்க வந்துது?!” என்றாள் உறக்கத்தின் கிறக்கத்திலேயே.
“எல்லாத்தையும் படுத்துகிட்டே கேளு?! முதல்ல எழுந்திருடி.. கும்பகர்னி…!” என்று அவன் ஒரு ஜாடி தண்ணீரை அவள் முகத்தில் கவிழ்க்க,
துள்ளித் துடித்து எழுந்தவள், “ஏய் கொரங்கு ஏன்டா… தண்ணீயைக் கொட்டினே?! ராட்சஸா நிம்மதியா தூங்கக் கூட விடமாட்டியா?” என்றாள் எரிச்சலுடன்.
“ஹான் உன் அத்தை உன்னைக் கூப்பிடறாங்க!” என்றான் கோபத்தை அடக்கிக் கொண்டு.
“அத்தை!? யாரு அத்தை?!” என்றாள்.
“சரியாப் போச்சு! என் அம்மாடி..!” என்று அவன் உச்சகட்ட கோபத்தில் சொல்ல,
“ஓ ஆன்ட்டியா?! எனக்கு தலைவலிக்குது, தூங்குறேன்னு சொல்லு!” என்றுவிட்டு, ஈரமாயிருந்த சோபாவை விட்டு எழுந்து, அவனது கட்டிலில் சென்று படுத்து கொண்டாள்.
“ஏய் எழுந்திரு எழுந்திரு!” என்று அவள் கைபிடித்து அவன் இழுக்க,
“ஏன்டா என்னை எழுப்பற?! நிம்மதியா தூங்க விடேன்!” என்று அவள் கெஞ்ச,
“ம் உன் கூட டூயட் பாடத்தான்! எழுந்திருடி….!” என்றான் கடுப்புடன்.
அப்போதும் அவள் உறக்கத்திலேயே குறியாக இருக்க,
“ம்ஹும் வேற வழியே இல்லை!” என்று புலம்பியவன்,
“ஏய் என்ன விடு விடு!” என்று அவள் கத்தக் கத்த, அவளை ஒரே மூச்சாய்த் தூக்கிக் கொண்டு குளியலறைக்குச் சென்றான்.
error: Content is protected !!