நிலா நேராக வரவேற்புப் பெண்ணிடம் சென்று தகவல் கூறிவிட்டு, ரஞ்சனின் அருகில் வந்து அமர,
“எனக்கு டைம் ஆகுது!” என்றான் ரஞ்சன்.
“ம்ம்!” என்று அவள் முறைக்க,
‘வர வர இவளுக்கு ரொம்ப திமிர் அதிகமாயிடுச்சு! எல்லாம் எங்க வீட்ல இருக்கிறவங்க கொடுக்கிற இடம்!’ என்று அவன் மனதுள் அவளைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்க,
வரவேற்புப் பெண், “நிலா… நீங்க டாக்டரைப் பார்க்கப் போகலாம்! சீஃப், இளமாறன் சார் ரூம்ல இருக்காரு. அங்கேயே உங்களை வரச் சொல்லிட்டாரு!” என்றாள்.
“ம் தாங்க் யூ” என்றவள், ரஞ்சனிடம் திரும்பி,
“நீயும் வாயேன் ப்ளீஸ்!” என்று கெஞ்சலாக அழைக்க,
“ப்ச்..!” என்று சலிப்போடு உடன் சென்றான்.
அவர்கள் இருவரும் டாக்டர். இளமாறன் அறைக்குச் செல்ல, அறைக் கதவில், Dr. இளமாறன், Phsychiatrist என்ற பெயர்பலகை இருக்க,
“ம்! நீ லூசுன்னு ஏற்கனவே தெரியும்! ஆனா சைக்கியாட்ரிஸ்ட்டை பார்க்கிற அளவுக்கு முத்திடுச்சுன்னு இப்பதான் தெரியுது!” என்று அவன் சிரிக்க,
‘உள்ள வா தெரியும், யாரு லூசுன்னு!’ என்று நினைத்து அவளும் சிரிக்க,
“கன்பார்ம்!” என்றவன், அவள் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்ததும், அவளைப் பின் தொடர்ந்து சென்றான்.
“வாம்மா நிலா…. இவர்தான் உன் ஹப்பியா.. லுக்கிங் வெரி ஹேன்ட்சம்!” என்ற சண்முகம்,
ரஞ்சனிடம், “வாங்க ரஞ்சன் எப்படி இருக்கீங்க?” என்றார்.
‘ஓ குடும்ப வரலாறையே சொல்லி வைச்சிருக்காளா?!’ என்று நினைத்தவன்,
“வி ஆர் ஃபைன்! உட்காருங்க மிஸ்டர். ரஞ்சன்..!” என்று இளமாறன் சொல்ல,
“ம்!” என்றபடி அமர்ந்தவன்,
“என்ன பிரச்சனை இவளுக்கு…?! ரொம்ப சீரியஸான கண்டிஷனா?!” என்றான் டாக்டர். சண்முகத்தைப் பார்த்து.
“வாட்?!” என்று அவர் விழிக்க,
“க்கும் க்கும்!” என்று லேசாக இருமுவதைப் போல், நிலா கண்களால் சைகை செய்ய, அதைப் புரிந்து கொண்ட இளமாறன்,
“ஒண்ணுமில்லை ரஞ்சன்… சின்ன பிரச்சனைதான், வாங்களேன் நம்ம ஹாஸ்பிட்டல் கார்டன்ல நடந்துகிட்டே பேசலாம்..!” என்று அழைக்க,
‘அய்யோ! ஏதோ பெரிய பிரச்சனை போல… அதான் என்னைத் தனியா கூட்டிட்டுப் போய் பேசணும்னு நினைக்கிறாங்க!’ என்று நினைத்தவன்,
“ஸுவர் டாக்டர்..!” என்று அவருடன் சென்றான்.
“ஸாரிங்க அங்கிள் எனக்கு அவரை எப்படி கூட்டிட்டு வர்றதுன்னு தெரியலை! அவருக்குன்னு கூப்பிட்டா வரமாட்டாரு..! அதான் இப்படி…!” என்று அவள் மன்னிப்புக் கோர,
“நோ ப்ராப் மா… சொல்லப் போனா இதுவும் ஒருவிதத்துல நல்லதுதான்! இளா இதை எப்படி ஹான்டில் பண்றான்னு நீயே கேளு…!” என்று அவர் சொல்ல, சரியாக இளமாறன் அவரின் மொபைலுக்கு அழைப்பு விடுத்தான்.
ஸ்பீக்கரை ஆன் செய்தவர், கண்களால் சைகை செய்து அவளை கவனிக்குமாறு சொல்ல,
“மிஸ்டர். ரஞ்சன்.. உங்க மனைவி நிலா… சில மாதங்களா அளவுக்கு அதிகமான ஸ்ட்ரெஸ்னால தொடர்ந்து தூக்க மாத்திரைகள் எடுத்துக்கிட்டு இருக்காங்க..! இது உங்களுக்குத் தெரியுமா?!” என்றான் இளமாறன்.
‘இதென்னடா.. கதை உல்டாவ போகுது?!’ என்று ரஞ்சன் நினைக்க,
“என்ன அங்கிள்..?!” என்று புரியாமல் சைகை செய்தாள் நிலாவும்.
“ஷ் பேசாமக் கேளு..!” என்று சண்முகம் சைகைக் காட்ட, அவள் அமைதியாக மறுபடியும் அவர்கள் பேசுவதை கவனிக்கலானாள்.
“என்ன மிஸ்டர். ரஞ்சன்.. உங்க மனைவி இப்படி ஒரு ஆபத்தான பழக்கத்தை ஏற்படுத்திக்கிட்டு இருக்காங்க. நீங்க தெரியாதுன்னு சொல்றீங்க?!” என்றான் இளமாறன் அவனைக் குற்றம் சாட்டும் வகையில்.
‘இதுல ஏதோ சதி இருக்கு! இவ ஏதோ தகிடுதத்தம் பண்ணியிருக்கா! இவளால யார் யார்கிட்ட வெல்லாமோ நான் பேச்சு வாங்க வேண்டியிருக்கு!’ என்று மனதுள் திட்டிய ரஞ்சன்,
“மிஸ்டர். ரஞ்சன்.. இனி இது தொடர்க் கூடாது..! அவங்க தொடர்ந்து இந்த மாதிரி மாத்திரைகள் எடுத்துக்கிட்டாங்கன்னா நிலைமை ரொம்ப விபரீதம போயிடும்! அவங்க ஒரு ட்ரக் அடிக் ரேஞ்சுக்கு மாறிடுவாங்க… அதன் பிறகு அவங்களைக் கண்ட்ரோல் பண்றது ரொம்ப கஷ்டம்! அதுமட்டும் இல்ல.. இதனால அவங்க உடம்புல ரொம்ப மோசமான பக்கவிளைவுகள் ஏற்படும்…! உயிருக்கே கூட ஆபத்தா முடியும்” என்று நிறுத்த, ரஞ்சன் மனதுள் பயம் கவ்வியது.
இளமாறன் மேலும் தொடர்ந்து, “மரணம் கூட மேல் மிஸ்டர். ரஞ்சன்… ஆனா அதுக்கு முன்னாடி ஏற்படுற நிலைமை அதைவிடவும் கொடுமை… தானும் நல்லா வாழ முடியாம, தன்னைச் சார்ந்திருக்கிற வங்களுக்கும் கஷ்டத்தைக் கொடுத்துக்கிட்டு வாழறது ரொம்ப ரொம்ப கொடுமை!” என்று சொல்ல ரஞ்சனின் மனம் சிந்திக்கத் துவங்கியது.
இன்னும் சில நிமிடங்கள் இளமாறன், ரஞ்சனிடம் தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்வதின் விளைவை எடுத்துக் கூறி,
“ப்ளீஸ் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த பழக்கத்திலிருந்து அவங்களை மீட்கணும்…!” என்றான்.
“சொல்லுங்க டாக்டர்… நான் என்ன செய்யனும்? எப்படி இந்தப் பழக்கத்திலிருந்து என்னால வெளி வர முடியும்?” என்றான் ரஞ்சன் உணர்ந்து.
அவன் அப்படிக் கேட்டதும் இளமாறன், நிலா, சண்முகம் உட்பட மூவரும் ஆச்சர்யத்தில் திளைக்க,
அவன் எங்கே கோபப்பட்டு விடுவானோ என்று பயந்திருந்த நிலாவிற்கு அவன் அப்படிச் சொன்னதும்தான் சீரான மூச்சு வந்தது.
“வெல் மிஸ்டர்… ரஞ்சன் கொஞ்சம் மனக் கட்டுப்பாடும், முயற்சியும் இருந்தா கூடிய சீக்கிரமே உங்களால இந்தப் பழக்கத்துல இருந்து மீள முடியும்..!” என்றான் இளமாறன் புன்னகையுடன்.
“நிச்சயமா முயற்சி பண்றேன் சார்…!” என்றவன், மேலும் இளமாறன் சொன்ன பல விஷயங்களைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டான்.
சிறிது நேரத்திற்குப் பின் இருவரும் அறைக்குத் திரும்ப, நிலா பயத்தில் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள்.
அதன்பின் ரஞ்சன், இளமாறனிடமும், சண்முகத்திடமும் சகஜமாகப் பேசி விடை பெற, நிலாவும் அவர்களுக்கு நன்றி கூறி விடை பெற்றாள்.
வெளியே வந்த இருவரும் வார்த்தை ஏதுமின்றி மௌனமாக நடந்து சென்று கொண்டிருக்க,
“நிலா ஒரு நிமிஷம்!” என்று இளமாறனின் குரல் தடுத்தது.
அவன் குரல் கேட்டு அவள் நிற்க, ரஞ்சன் நிற்காமல் தன் நடையைத் தொடர்ந்தான்.
இளமாறன் அவள் அருகே வந்து, “உங்க போன் நம்பர் கிடைக்குமா…?! ஏதாவது விசாரிக்கனும்னா?!” என்றான் தயக்கத்துடன்.
“இதுக்கு ஏன் டாக்டர் இவ்ளோ தயங்கறீங்க?!” என்றவள் தன் கைபேசி எண்ணை அவனுக்குச் சொன்னாள்.
அவன் அவள் எண்ணிற்கு அழைப்பு விடுத்து, “என்னோட நம்பரையும் சேவ் பண்ணிக்கோங்க..!” என்றான் புன்னகையுடன்.
“ம்!” என்று தலையசைத்தவள், “ரொம்ப நன்றிங்க டாக்டர்… அவர்கிட்ட ரொம்ப பொறுமையா பேசி புரிய வைச்சிருக்கீங்க!” என்று மனதார அவனுக்கு நன்றி கூறினாள்.
“ஓ! நோ பார்மாலிடிஸ் நிலா….!” என்று அவன் சொல்ல,
“சரிங்க டாக்டர்.. நான் கிளம்பறேன்!” என்று விடை பெற்றாள்.
“ப்ளீஸ் இப்பதானே சொன்னேன் நோ பார்மாலிட்டிஸ்னு… நோ டாக்டர்.. இளான்னு பேர் சொல்லியே கூப்பிடுங்க…!” என்றான் நட்புடன்.
“ஸுவர்… இளா….! பை..!” என்றவள், வேக வேகமாக, வெளியே வந்தாள்.
‘அய்யோ இந்த ரஞ்சு… வெளியே வரும்போதே முகத்தை கடுகடுன்னு வைச்சிருந்தான்… கோபத்துல கிளம்பிப் போயிருந்தாலும் ஆச்சர்யப் படறதுக்கில்லை…!’ என்று புலம்பியபடியே வந்தவள், அவன் பொறுமையாக காரில் காத்திருப்பதைக் கண்டு, மெதுவாக பின்பக்கக் கார்க் கதவைத் திறந்து ஏறப் போனாள்.
“நான் என்ன உனக்கு டிரைவரா…?! வந்து முன்னாடி உட்காரு…!” என்று அவன் சிடுசிடுக்க,
“மூஞ்சியைப் பாரு…! எப்பப் பாரு உர்ருன்னு வைச்சிகிட்டு…! நல்லாதான சிரிக்கிற எல்லோர் கிட்டயும்!? என்னைப் பார்த்த மட்டும்… ‘ஜி. ஈ. எம்’ மா மாறிடுறது!” என்று முனகியபடியே காரில் ஏறி அமர்ந்தாள்.
அவன் காரை வெகு வேகமாகக் கிளப்பி, சாலையில் சீறிப் பாய்ச்ச, அவளுக்கு உள்ளுக்குள் கிலி கிளம்பியது.