Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

En Nila Thozhikku

En Nila Thozhikku 34 1

                  

                                      

                                    

                                     34



Advertisement

     பத்து வருடங்களுக்குப் பின். ‘அறிவாலயம்’ தனியார் மேல்நிலைப் பள்ளியின் முதல் வருட ஆண்டு விழா, தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதாக துவங்கப்பட்டது.

     விழாமேடைக்கு எதிரே போடப்பட்டிருந்த இருக்கைகளின் முதல் வரிசையில், அப்பள்ளியின் நிர்வாக இயக்குனர்களான நிரஞ்சன், யாஷினி, அவர்களின் செல்வங்கள் நிஷாந்தினி, காமராஜ், தலைமையாசிரியரான நிலா, அவளின் ஆருயிர்க் கணவன் ரஞ்சன், அவர்களின் வாரிசுகளான நிரஞ்சனி, ஸ்ரீநாத், அவர்கள் குடும்பத்தின் மூத்த தலைவர் இராமநாதன், அவரின் துணைவியார் காமாட்சி, அவ்விருவரும் பெற்றேடுத்த தங்களின் ஒரே புதல்வன், கிருஷ்ணன், அவர் இணையான ராதா, நிலா, மற்றும் யாஷினி குடும்பத்தினர், அவ்விழாவிற்கு வருகை தந்திருந்த விருந்தினர், முனைவர். பா. தாமோதரன் அவர்கள், மற்றும் அப்பள்ளி ஆசிரியைகள் அனைவரும் மனதில் மகிழ்ச்சி பொங்க வீற்றிருந்தனர்.

     பின் வந்த வரிசையில் போடப்பட்டிருந்த இருக்கைகளில், அப்பள்ளி மாணவ, மாணவியரும், தங்கள் பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகளையும், அவர்கள் பரிசு பெறும் தருணத்தையும் காண, பெற்றோர்களும் ஆவலுடன் வீற்றிருந்தனர்.

Advertisement

     தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்து, விருந்தினர் வரவேற்பு உரை முடிந்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாக, அனைவரும் மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர்.

Advertisement

     கலைநிகழ்ச்சிகள் முடிவடைந்தபின் சிறப்பு விருந்தினர் சிலநிமிடங்கள் உரையாற்றும்படி, கௌரவத்துடன் மேடைக்கு அழைக்கப் பட, முனைவர். பா. தாமோதரன் அவர்கள், தனது உரையைத் துவங்கினார்.

     “என் அன்பு மாணவச் செல்வங்களே… அம்முத்துக்களை இவ்வுலகிற்கு ஈன்ற பெற்றோர்களே.. அவர்களின் நல்லறிவை செழிப்பாக்க முயற்சிக்கும் ஆசிரியர்களே…

      உங்க எல்லோருக்கும் என்னோட அன்பு கலந்த வணக்கங்கள். பிள்ளைகளே.. உங்களுக்கெல்லாம் அறிவுரை சொல்லனும்னு நான் இங்க வரல.

Advertisement

      உங்ககிட்ட நிறைய பேசணும்னு ஆவலோடு வந்திருக்கிறேன். என்னுடன் பேசச் சம்மதமா?!” என்று அவர் கேள்வி எழுப்ப,

      “சம்மதம் சம்மதம்…!” என்று முழங்கினர் பிள்ளைகள்.

      “நீங்க எதுக்காக பாடங்களைப் படிக்கிறீங்கன்னு நினைக்கிறீங்க?!” என்று அவர் கேட்க,

     ‘இவர் என்ன இப்படிக் கேட்கிறார்?!’ என்று சில பெற்றோர்கள் நினைக்க, நிருவும், நிலாவும் புன்னகையுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

     அவரின் கேள்விக்கு, ஒரு மாணவன், தான் நன்றாகப் படித்து நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்றான். மற்றொரு மாணவி, மருத்துவராக வேண்டும் என்றாள். இன்னொருவன், நான் படிச்சு சம்பாதிச்சு எங்க அம்மா, அப்பாவுக்கு ஒரு பெரிய வீடு கட்டித் தரணும் என்றான். எக்ஸாம் எழுதனுமேன்னு படிக்கிறேன் சார் என்றான் இன்னொருவன். இப்படி பலர் பல விதமாக பதிலளிக்க, அவருக்கு எதிலும் திருப்தி ஏற்படவில்லை.

     அப்போது பின்புறம் அமர்ந்திருந்த ஒரு மாணவி எழுந்து, “அய்யா.. நான் படிக்கிற பாடப்புத்தகத்தில் அப்படி என்ன எழுதப் பட்டு இருக்குன்னு தெரிஞ்சிக்கணும்கிற ஆர்வத்தோட படிக்கிறேன்!” என்றாள்.

     “ம்ம்! இதுதான், நான் எதிர்பார்த்த பதில்!” என்று புன்னகையுடன் கூறியவர், “குழந்தைகளே.. இப்போதைக்கு உங்களுடைய எண்ணம் இதுவாக மட்டும்தான் இருக்கணும், மார்க் எடுக்கணும்னோ, கனவுகள் மெய்ப்படணும்னோ கல்வியைக் படிக்க நினைக்கிறதை விட, இந்த வகையான மனநிலையில் நீங்க எப்ப படிக்கத் துவங்கறீங்களோ, அப்ப கல்வியும் உங்கள் வசமாகும், கனவுகளும் உங்கள் வசமாகும்! கல்வி மட்டும் இல்ல… விளையாட்டு, கலைகள் எல்லாத்திலுமே இந்தவகையான எண்ணமே உங்களை மேன்மையடைச் செய்யும்!

     பல மாணவர்களோட பிரச்சனை எங்க ஆரம்பிக்குது தெரியுமா?! அய்யோ! இந்தப் பாடம் ரொம்ப கஷ்டம்! நம்மளால படிக்க முடியாதுப்பா! அப்படிங்கிற நினைப்பு தோன்ற இடத்துலதான். யார் சொன்னா உங்களால படிக்க முடியாதுன்னு! சொல்லப் போனால கற்ற பாடங்களைக் சொல்லிக் கொடுக்கிற எங்களைவிட, கற்றுக்கொண்டிருக்கும் உங்களுக்குத்தான் அறிவோட அளவுகோல் அதிகம்! ஏன்னா நாங்க படிச்சதை, இதுதான்னு சொல்லிக் கொடுக்கறோம்! ஆனால் நீங்க, இது இப்படியும் இருக்கலாமோன்னு நாலு விதத்தில் யோசிக்கக் கூடிய இடத்திலையும், வயசிலையும் இருக்கீங்க.

     ஒருத்தர் பிறக்கும் போதே புத்திசாலியா பிறக்கறதில்லை, அதேசமயம் முட்டாளாகவும் பிறக்கறதில்லை. அது நாம வளர்ற சூழ்நிலையையும், மனதோட யோசனையையும் பொறுத்துதான் இருக்கு. முக்கியமாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களை நடத்தும் விதத்தில்தான் இருக்கு. நீங்க உங்க பிள்ளை, குறைஞ்ச மதிப் பெண் எடுத்துட்டா, அவனை ‘முட்டாள், முட்டாள்.. பாரு அவங்க வீட்டுப்பையன் எவ்ளோ மார்க் எடுத்திருக்கான், நீயும் எடுத்திருக்கியே?!’ என்று வைவதைவிட,

     “அட என்ன இந்த முறை கம்மியாகிடுச்சா… சரி அடுத்த முறை கண்டிப்பா இதைவிட நீ அதிகமா எடுப்ப.. முயற்சி பண்ணு…!” என்று தட்டிக்கொடுத்துப் பாருங்கள், உங்கள் பிள்ளைக்கும் தன்னம்பிக்கைத் தளிர்விடும் உங்களுக்கும் மனஷாந்தி கிடைக்கும்.

     அதைவிட்டுட்டு, ‘அய்யோ நம்ம பிள்ளை இப்படி மார்க் எடுத்துடுச்சே, சொந்தக்காரங்க என்ன சொல்லுவாங்களோ! மத்தவங்க என்ன சொல்லுவாங்களோ, அது வாழ்க்கை என்ன ஆகுமோன்னு?!’ புலம்பித் தள்ளி, உங்க மனசையும் வருத்திக்கிட்டு அவங்களையும் பயத்துக்கும், குற்ற உணர்ச்சிக்கு ஆளக்கிடாதீங்க!

     ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு பட்டாம்பூச்சி மாதிரி, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்! அதனதனால் எவ்வளவு உயரத்தில் பறக்க முடியுமோ அவ்வளுவு உயரத்தில் நிச்சயமாக பறக்கும், நீங்கள் அதைப் பற்றி கவலை கொள்ளவும் தேவையில்லை! கற்றுத் தரவும் தேவையில்லை!

     அதுக்கு உதாரணம், இதோ இன்னிக்கு உங்க முன்னாடி உட்கார்ந்திருக்கிற உங்க பள்ளி நிர்வாக இயக்குனர் திரு. நிரஞ்சன். முப்பத்தி இரண்டு வருஷத்திற்கு முன்னாடி, பிடிவாதமாக பள்ளிக்கே போக மறுத்த ஒரு சிறுவன், இன்று ஒரு பள்ளியை நிர்வகிக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கக் காரணம், அவன் மனசில எழுந்த மாற்றம்! அந்த மாற்றத்திற்குத் துணையாய் இருந்தது, அவரின் உற்ற தோழி உங்களின் தலைமையாசிரியர் நிலா, இருவரும் அன்னிக்கு என்னோட முதல் வகுப்பில் சொன்ன பதிலைத்தான் இன்று இந்தமாணவி கூறி இருக்கிறாள்.

     தமிழ் எனக்கு சோறு போடுமா என்று நினைத்து அவர்கள் தமிழைப் படிக்கவில்லை! தமிழ் பிடித்ததனால் படித்தார்கள். அதில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் படித்தார்கள்.

     நிரஞ்சனாவது வசதியான குடும்பத்தில் பிறந்தவர், ஆனால் நிலா… ஏழ்மையானக் குடும்பத்தில் பிறந்தாலும், தனக்கு என்ன பிடிக்குமோ அதைத்தான் தேர்ந்தெடுத்துப் படித்தார். அவர் பெற்றோர்களும் அதற்கு துணை நின்றார்கள். அதுபோல் நீங்களும் உங்கள் பிள்ளைக்கு துணை இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன், இருப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.

     ஒருவர் தனக்கு பிடித்ததைச் செய்யும் போது அதில் கிடக்கும் இன்பமும் அதிகம், பலனும் அதிகம் என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். அவர்கள் படித்த படிப்பு அவர்களை நல்ல ஆசிரியர்களாக மட்டுமல்ல, நல்ல மனிதர்களாகவும் மாற்றி இருக்கிறது. அதனால்தான் படிப்பை வியாபாரமாக்கிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், தனியார் பள்ளியாக இருந்தாலும் குறைந்த விலையில் நிறைந்த கல்வியைக் கொடுக்க வேண்டும் என்றும்,  பள்ளிக் கூடம் என்பது, படிப்பை மட்டும் கொடுக்கும் இடமாக அல்லாமல் நம்பிக்கை விதையையும், சூழ்நிலைகளை எதிர் கொள்ளும் துணிச்சலையும், அறிவோடு சேர்த்து அறவழியையையும் கற்றுக் கொடுத்து, நல்ல மாணவர்களாக மட்டுமல்லாது, நல்ல மனிதர்களாகவும் இவ்வுலகிற்குக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் இப்பள்ளியைத் துவங்கி வெற்றிப் பாதையில் நடத்தி வருகின்றனர்.

     இவர்களின் பணி மென்மேலும் சிறக்க எனது நல்வாழ்த்துக்கள். ஒவ்வொரு மாணவரும் இன்று முதல் தங்கள் படிப்பை ஆர்வத்துடன் பயிலுவீர்கள் என்றும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் அதற்குத் துணையிருப்பீர்கள் என்றும் நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்” என்று அவர் தனது உரையை முடிக்க கரகோஷம் காதைப் பிளந்தது.

      அவர் பேசி முடித்த பின், பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், ஒவ்வொருவர் திறமையையும்,  குணநலன்களையும்  சுட்டிக் காட்டி பரிசுகள் வழங்கப் பட்டது.

     விழா முடிவடைந்து பிள்ளைகளும், பெற்றோர்களும், சிறப்பு விருந்தினரும், ஆசிரியர்களும் கிளம்பிய பின், தாங்களும் புறப்பட எண்ணி, தனது அறைக்குச் சென்று தனது கைப்பையை எடுத்துக் கொண்ட நிலா, அவள் மேஜையில் இருந்த பென் ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருந்த அந்த எழுதுகோலையும் தன் கையில் எடுத்தாள்.

     ஏனோ அது கொடுத்த நினைவுகள் அவளைப் பின்நோக்கி இழுத்துச் செல்ல, புன்முறுவலுடன் அதனை வருடிக் கொடுத்தாள்.

     ஒரு வருடத்திற்கு முன் இதே நாளில், அவள் தங்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் பதவியை ஏற்கவிருந்த சில மணிநேரங்களுக்கு முன், தன் அன்புக்குரிய கணவனால் தனக்கு பரிசளிக்கப் பட்ட தங்கப் பேனா அது.

     அன்று காலை, தங்கள் பள்ளியின் முதல் நாள் என்பதால், நேரத்திற்கு முன்பே பள்ளிக்கு கிளம்ப வேண்டும் என்று, ஆர்வத்துடன் அதிகாலையே எழுந்து கொண்டாள் நிலா. 

     தன் கணவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டு படுத்திருந்த தங்களின் செல்ல மகள் நிரஞ்சனாவையும், தந்தையின் வயிற்றின் மேல் தன் கால்களைப் போட்டபடி உறங்கிக் கொண்டிருந்த மூத்த மகன் ஸ்ரீநாத்தையும் பார்த்தவளுக்கு இதழோரம் புன்னகை விரிந்தது.

    “வாண்டுங்க!” என்று செல்லமாய் கொஞ்சியவள், தன் மூத்தபிள்ளையான கணவனுக்கும், அவனோடு உறங்கும் தன் பிள்ளைகளுக்கும் தனது இனிய காலை முத்தங்களைப் பதித்துவிட்டு, விலகிச் செல்ல முயல, எப்போதும் விளையாடும் அவளின் அன்புக் கணவன் அவளின் கரங்களை இழுத்து போகவிடாமல் சதிசெய்தான்.

     “ச்சோ விடுங்க ரஞ்சு… எப்பவும் இதே விளையாட்டுதான் உங்களுக்கு! பசங்க எழுந்திடப் போறாங்க!” என்று அவள் மெல்ல சிணுங்க,

     “எழுந்தா என்ன?! அப்பா அம்மாவைக் கொஞ்சுறார்னு நினைச்சுக்கப் போறாங்க!” என்று அவன் சொல்ல,

     “ச்சு வெட்கமே இல்லை உங்களுக்கு… பிள்ளைங்களை நீங்களே கெடுத்துடுவீங்க போல…!” என்று அவள் மிரட்ட,

     “அய்யோ டீச்சரம்மா… பயந்துட்டேன்! இல்ல இல்ல இன்னையிலிருந்து ப்ரின்சிபல் அம்மா… ப்ளீஸ் கொம்பெடுத்து அடிச்சிடாதீங்க!” என்றான் ரஞ்சன் பயந்தவன் போல்.

     அவன் நடிப்பைப் பார்த்து, அவள் கிளுக்கிச் சிரிக்க, அச்சிரிப்பில் கட்டுண்ட காதலன், அவளை ரசித்தபடியே, மெல்ல பிள்ளைகளை விலக்கிப் படுக்க வைத்துவிட்டு எழுந்து அவள் அருகில் வந்தான்.

    “ரஞ்சு… பேசாம படுத்துத் தூங்குங்க..! நான் போய்க் குளிக்கணும்…!” என்று அவள் கண்டிப்பாய் சொல்ல,

     “போடி போடி.. இந்த மிரட்டல் எல்லாம் உன் ஸ்கூல் பிள்ளைங்க கிட்ட வைச்சிக்க.. என்கிட்டே செல்லாது!” என்று அலட்சியமாய் சொல்லி, அவளை விடாப்பிடியாய் தன்னருகே இழுக்க அவள் தடுமாறி அவன்மேல் விழுந்தாள்.

     “வேணாம் வேணாம்னு சொல்லிட்டு இப்படி நீயே வம்படியா வந்து என்மேல விழறியேடி…!” என்றவன் அவள் இடையை வளைத்துப் பிடித்தபடி, கிறக்கத்துடன் இதழை நெருங்கினான்.

     “அய்யோ  பசங்க…!” என்று அவள் அலறப் போக, பட்டென தன் இதழ் கொண்டு அவள் பேச்சுக்குத் தடையிட்ட கள்வன்,

     “அவ்ளோதான் இதுக்குப் போய்…!” என்க,

     முறைப்புடன் அவனை நோக்கியவள், நறுக்கென்று அவன் இடுப்பில் கிள்ள, “ஷ்..!” என்று அவன் அலற, அவள் மறுபடியும் ஒரு கிள்ளு கிள்ளி,

    “இவ்ளோதான் இதுக்குப் போய்..!” என்று அவன் டையலாக்கையே ரீப்பீட் அடித்துவிட்டு ஓட முயல, அவளை வளைத்துப் பிடித்து நிறுத்தினான் ரஞ்சன்.

     “ம்! விடுங்க ரஞ்சு… நேரமாச்சு..!” என்று அவள் சிணுங்க,

     “ஒரு நிமிஷம் கண்ண மூடிட்டு நில்லு…!” என்றான்.

     “போங்க ரஞ்சு… மறுபடியும் நீங்க ஏதாவது பண்ணுவீங்க..!” என்று அவள் சொல்ல,

     “கண்ண மூடுன்னு சொல்றேன்ல..!” என்று அவன் மிரட்ட, 

     “GINGER EATING MONKEY!” என்று முனகியபடியே கண்களை மூடினாள் நிலா.

     அவன் அவளைவிட்டு விலகிச் சென்று, அவனது வார்ட்ரோப்பை ஓபன் செய்து எதையோ எடுக்க, “ம்! என்ன பண்றான்?!” என்று யோசித்தவள், தன் முகத்தைச் சுருக்கி ஓரக்கண்ணால் அவனைப் பார்க்க முயல,

     “ஏய் கேடி… கண்ணை மூடு…!”  என்று மிரட்டினான் ரஞ்சு.

     அவன் குரல் கேட்டதும் பட்டென்று கண்களைக் மூடிக் கொண்டவள், மறுபடியும் மெல்ல கண்திறக்க முயல,

     “கொஞ்ச நேரம் பொறுக்க முடியலை?!” என்று அவள் தலையில் செல்லமாய்க் குட்டியவன், அவள் கைகளில் தான் வாங்கிய பரிசுப்பொருளை வைத்து,

     “ம்! இப்ப கண்ணைத் திற..!” என்றான்.

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!