ரஞ்சன் முதலில் வேண்டா வெறுப்பாக தங்கள் கடைக்குச் சென்றாலும் நாட்கள் செல்லச் செல்ல அவனுக்கு அவ்வேளையில் ஓர் பிடிப்பு ஏற்பட்டது.
கொஞ்சம் கொஞ்சமாக தன் தாத்தாவிடம் இருந்து தொழில் யுக்தியையும் கற்றுக் கொள்ளத் துவங்கினான்.
ராமநாதனுக்கும், குடும்பத்தினருக்கும் அவனின் இம்மாற்றம் மிக்க மனமகிழ்ச்சியைத் தந்தது.
அவனும் வேளையில் முழு கவனத்தையும் செலுத்தி தன் வேதனையை மறக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.
காமாட்சி பாட்டி, நிவியின் திருமணம் நல்லபடியாக முடிந்ததும் தன் மனதில் உள்ளதை அனைவரிடமும் கூறலாம் என்று எண்ணியிருந்தார்.
நிவேதா – கார்த்திக்கின் திருமணம் மிக விமரிசையாக நடைபெற்றது. அவர்கள் திருமணம் முடிந்த மூன்றாம் நாள் நிவியை தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவள் புகுந்த வீட்டினர் வந்திருந்தனர்.
நிவி கண்ணீர் மல்க அவள் குடும்பத்தினர் அனைவரிடமும் விடைப்பெற்று விட்டு நிலாவிடம் சென்றாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டு கண்கலங்க நின்றனர்.
“நிலா… நான் கிளம்பறேன்..! அடிக்கடி போன் பண்ணுடி…!” என்றாள் நிவி.
“ம்ம்..!” என்று தலையசைத்து விடைபெற்றாள் அவளின் ஆருயிர்த் தோழி.
அன்று இரவு அனைவரும் இரவு உணவு அருந்தி விட்டு, கூடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, ரஞ்சன் மட்டும் தனது அறைக்குச் சென்று கடந்த கால நினைவுகளில் மூழ்கியிருந்தான்.
“புரியுதுங்க அத்தை… ஆனாலும் மனசு கஷ்டமா இருக்கு…!” என்று ராதா சொல்ல,
“இந்த சங்கடம் போக ஒரு வழி இருக்கு! அதைச் சொல்லட்டுமா?!” என்று கொக்கி போட்டார் காமாட்சி பாட்டி.
எல்லோரும் அவர் என்ன சொல்லப் போகிறார் என்று ஆர்வமுடன் அவரை நோக்க,
“நம்ம நிரஞ்சனுக்கு, நிலாவைக் கல்யாணம் பண்ணி வைச்சி, மருமகளா அவளை நம்ம வீட்டுக்கு அழைச்சிகிட்டு வர்றதுதான்!” என்றார் தன் கணவரின் முகம் பார்த்து.
அனைவர் முகமும் மலர்ச்சியைத் தழுவ, நிரஞ்சனின் முகம் மட்டும் மறுப்பைக் காட்டியது.
“இல்ல பாட்டி… நிச்சயமா இது நடக்காது…!” என்றவன்,
அவன் பாட்டியை நோக்கி, “அவ என்னோட உயிர்த்தோழி… தோழி மட்டும்தான். நட்புங்கிற அற்புதமான பந்தத்தில உருவான எங்க உறவை எங்களால எந்த நிலையிலயும், மாத்திக்க முடியாது..!” என்றான் நிரஞ்சன் உறுதியாக.
“நிரு…!?” என்று காமாட்சி பாட்டி அதிர்வுடன் அவனை நோக்கினார்.
“எங்களுக்குள்ள இருக்க உறவை எப்படி பாட்டி உங்களால இப்படி நினைக்க முடிஞ்சுது…?!” என்று அவன், அவரையே எதிர்கேள்வி கேட்க, அவரால் பதிலளிக்க முடியாமல் போனது.
“நிரு… அவ உன் வாழ்க்கைத் துணையா வந்தா உன் வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும்னு நினைச்சேன்! அதான் நான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன்!” என்று காமாட்சி பாட்டி சொல்ல,
“உண்மைதான் பாட்டி அவ என் வாழ்க்கையில துணையா வந்ததுனாலதான் நான் இன்னிக்கு இந்த அளவுக்கு முன்னேறி இருக்கேன்! என் ஆரம்ப கால பள்ளி நாட்கள்ல… நான் வித்தியாசமா இருக்கேன்னு நினைச்சு எல்லோரும் என்னை விசித்திரமா பார்த்து விலகிப் போனப்போ, நம்ம வீட்டினரைத் தவிர, என்னையும் சக மனுஷனா நினைச்சுப் பழகினது அவ மட்டும்தான்!”
“ஸ்கூலுக்கு போகவே விருப்பமில்லாம வீட்டில அடைஞ்சு இருந்த என்னை, “என்னோட என் ஸ்கூலுக்கு வரியா….?! நான் உன் பிரெண்ட்தானேன்னு?!” கேட்டு கல்விங்கிற அளப்பறியா செல்வத்தை கத்துக்க வைச்சதும் அவதான்!”
“மத்தவங்க என்னை கேலி செய்த போதெல்லாம் எனக்காக சண்டை போட்டு, எனக்குத் துணையா இருந்தவளும் அவதான்.”
“நான் இப்படிச் சொல்றேன்னு என்னைத் தப்பா நினைக்காதீங்க! நம்ம வீட்ல எல்லோரும் என் மேல எவ்வளவோ அன்பு வைச்சிருக்கீங்க! நீங்க எல்லோரும் நான் உங்க ரத்த சொந்தம் ங்கிறதுனால என்மேல அளவில்லாத அன்பைக் காட்டுறீங்க? என்னோட குறையை நினைச்சு நிவி, ரஞ்சன்கிட்ட காட்டுற அக்கறையை விட அதிகமான அக்கறையை என்கிட்ட காட்டுறீங்க!
ஆனா நிலா…?! எந்த உறவுமே இல்லாம, குறைஞ்ச பட்சம் என்கிட்டயிருந்து அன்பைக் கூட எதிர்ப் பார்க்காம, அன்பைக் கொடுக்கணும் கறதுக்காகவே என்னைத் தேடி வந்த உறவு. அவ என் மேல வைச்சிருக்க அன்பு… உங்க எல்லாருடைய அன்பை விடவும் ரொம்ப ஆழமானது! அன்னிலிருந்து இன்னிவரைக்கும் சின்ன சின்ன விஷயத்தில கூட அவ எனக்காக காட்டுற அக்கறை ஒரு தாயோட அன்பை வெளிப்படுத்தும்! நான் சோர்ந்து போற ஒவ்வொரு நேரத்திலயும் அவ கொடுக்கிற அறிவுரை, ஒரு தந்தைக்கு உரியதா இருக்கும்!”
“இதுவரைக்கும் என் வாழ்க்கையில நடந்த எல்லா நல்லது கெட்டதுலயும் நட்புங்கிற ஸ்தானத்துல இருந்து என் வாழ்க்கைக்கு அவ துணையாதான் இருந்திருக்கா…! என் உயிர் மூச்சு இருக்க வரைக்கும் துணையா இருப்பா….! தோழிங்கிற ஸ்தானத்துல…!” என்றான் உணர்வுகள் ததும்ப.
அவன் கூறியதைக் கேட்டு அனைவர் உள்ளத்திலும் அவள் மேல் ஓர் மரியாதை எழுந்தது. சிறு வயதிலிருந்தே அவர்களின் நட்பை அறிந்தவர்களாயினும், அந்நட்பின் ஆழத்தை இன்றுதான் அனைவரும் முழுதாக உணர்ந்தனர்.
ராதாவிற்கு மட்டும் கண்ணோரத்தில் நீர் துளிர்த்தது. அதைக் கண்ட நிரஞ்சன், அமர்ந்திருந்த அவன் தாயினருகே சென்று,
“அம்மா நான் அப்படிச் சொல்லிட்டேன்னு உங்களுக்கு என்மேல கோபமா?!” என்றான் வருத்தமாக.
“இல்ல… இல்லடா… கண்ணா… நீ என் வயத்தில இருந்தப்போ… DWARFISMங்கிற நோயால பாதிக்கப் பட்டிருக்கன்னு டாக்டர்ஸ் எடுத்து சொன்னப்போ… துவண்டு போகாம, ரொம்ப தைரியமா உன்னை நல்ல முறையில வளர்ப்பேன்னு உறுதி எடுத்தேன்! ஆனா நீ முதல் முறை ஸ்கூல்க்குப் போயிட்டு வந்து அழுதப்போ நான் ரொம்பவே கலங்கிப் போயிட்டேன் ப்பா… என்னோட உறுதி எல்லாம் சுக்கு நூறா உடைஞ்ச மாதிரி இருந்தது! அந்த நேரத்தில நிலாவோட நட்பு மட்டும் உனக்கு கிடைக்காம போயிருந்தா… உன் மனசை மாத்த நான் ரொம்ப போராட வேண்டி இருந்திருக்கும்! உங்க நட்பை நினைச்சு எனக்குப் பெருமையா இருக்குடா கண்ணா….!” என்று தன் இடுப்புயரமே இருந்த தனது செல்ல மகனின் தலையை வாஞ்சையோடு நீவி விட்டார் ராதா.
அனைவரும் உணர்ச்சிப் போராட்டங்களிருந்து வெளிவர சிறிது நேரம் பிடித்தது.
“ம்ம்…! நிலா மாதிரி ஒரு பொண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளா வரணும்னு ரொம்ப ஆசைப் பட்டேன்! சரி… கடவுள் போட்ட முடிச்சை நம்மால மாத்த முடியுமா என்ன?!” என்று காமாட்சி பாட்டி பெருமூச்செரிய,
“நிலாவை ஏன் நம்ம ரஞ்சனுக்கு கட்டி வைக்கக் கூடாது?!” என்றார் இராமநாதன்.
அனைவரும் வியப்புடன் அவரை நோக்க,
“தாத்தா… அவங்களைப் பத்தி தெரிஞ்சுமா இப்படி யோசிக்கிறீங்க?!” என்றான் நிரஞ்சன்.
“அட போடா…! ஏதோ சின்ன வயசில நடந்த பிரச்சனை இன்னமுமா ரெண்டு பேரும் அதையே நினைச்சிகிட்டு இருப்பாங்க?!” என்றார் இராமநாதன்.
“உங்களுக்குத் தெரியாது தாத்தா.. அவங்களைப் பத்தி…!?” என்று நிரஞ்சன் சொல்ல,
“என்னடா நீ? உனக்காக பேசினப்போ நட்புன்னு சொல்லி மறுத்துட்ட…! இப்போ அவனுக்காக பேசும்போதும் தடுக்குற?!” என்று பொரிந்தார் காமாட்சி.
“அய்யோ பாட்டி…” என்று அவன் ஏதோ சொல்ல வர,
“எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு?! அவ உன்மேல வைச்சிருக்க அளவுக்கு, நீ அவ மேல அன்பு வைக்கலயோன்னு…!?” என்றார் காமாட்சி.
“என்ன பாட்டி நீங்க?!” என்று நிரு முகம் வாடிப் போக,
“பின்ன என்னடா?! அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் போது நீ ஏன் குறுக்க நிக்கிற?!” என்றார் சற்றே கோபமாய்.
“அய்யோ பாட்டி உங்களுக்கு ரஞ்சுவைப் பத்தி தெரியாது?! முதல்ல நான் அவங்க ரெண்டு பேர் கிட்டயும் பேசறேன்..!” என்றான் நிரஞ்சன்.
“அவங்க கிட்ட நீ என்னடா பேசுறது? எல்லாத்தையும் நாங்க பாத்துக்கறோம்! நீ பேசாம இரு!” என்று அவனை அடக்கினார் காமாட்சி.
“இப்போதைக்கு ரஞ்சன் போக்குல ஓரளவு நல்ல மாற்றம் தெரியுது…! ஆனாலும் அவனை நினைச்சு என் மனசில ஏதோ ஒரு நெருடல் இருந்துகிட்டே இருக்குப்பா…! நிலா மாதிரி ஒரு பெண்ணாலதான் அவனோட குணத்துக்கு ஈடு கொடுக்க முடியும்!” என்று தன் மனதில் உள்ளதைச் சொன்னார் இராமநாதன்.
“அதுமட்டும் இல்ல… நிரு…! அவ நம்ம வீட்டுக்கு மருமகளா வந்தா நாம எல்லோரும் அவளை ராணி மாதிரி வைச்சித் தாங்குவோம்!” என்று ராதா சொல்ல,
அப்போதும் நிரஞ்சன் யோசனையுடன் இருக்க, “ஏன் நிரு… உன் பிரெண்ட்டுக்கு நல்ல லைஃப் கிடைக்கறதுல உனக்கு விருப்பம் இல்லையா?!” என்றார் கிருஷ்ணனும்.
“என்னப்பா.. நீங்களுமா?! அவ நல்லா இருந்தாதானேப்பா எனக்கு சந்தோஷம்?!” என்றான் நிரஞ்சன்.
ஆனால் அவன் மனக்கண்ணில் ரஞ்சன் சொன்ன விஷயங்கள் தோன்றி, அவனை அச்சுறுத்தியது.
‘ரஞ்சு இதில இருந்து வெளிவர… நிச்சயமா அவனுக்கு இந்த மாற்றம் தேவைதான்… ஆனா நிலா இதுக்கு சம்மதிப்பாளா?!’ என்று நினைத்துக் குழம்பினான்.
“என்ன நிரு இவ்ளோ யோசிக்கற?! வேற ஏதேனும் பிரச்சனை இருக்கா?!” என்றார் இராமநாதன்.
“ஹான் அதெல்லாம் இல்லை தாத்தா…!” என்றான் அவன் ரஞ்சன் சொன்ன விஷயத்தை மறைத்து.
“அப்புறம் என்னப்பா… மத்த விஷயங்களை நாங்க பார்த்துக்கறோம்!” என்று இராமநாதன் முடித்துவிட, நிரஞ்சனால் மறுப்பேதும் கூற முடியவில்லை.
ஆனால் மறுநாள் அவர்கள் எதிர்பாரத ஓர் விபரீதம் நிகழ்ந்து அவர்களின் கனவை பொய்யாக்கக் காத்திருந்தது.
மறுநாள் நிரஞ்சன் தனது ஆய்வு விஷயமாக தன் பேராசியரைச் சந்திப்பதற்காக, காலையிலயே தரமணியில் இருக்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு கிளம்பிவிட்டான்.
ரஞ்சனைத் தவிர அவன் வீட்டைச் சேர்ந்த அனைவரும், நிவியின் மாமியார் வீட்டினரைச் சேர்ந்த அனைவரும், புதுமணத் தம்பதியாரான நிவி, கார்த்திக்கை அழைத்துக் கொண்டு, வேலூரில் இருக்கும் தங்கக் கோவிலுக்குச் சென்றிருந்தனர். திடீரென கார்த்திக் வீட்டினர் இரவு போன் செய்து கோவிலுக்குச் செல்லலாம் என்று விவரம் தெரிவித்திருந்ததால், அனைவரும் விடியற்காலையே கிளம்பிவிட்டிருந்தனர்.
அன்று விடுமுறை தினம் என்பதால் வெங்கடேசன் சரியாக தண்ணீர் வராமல் சதி செய்து கொண்டிருந்த தங்கள் வீட்டுப் பம்ப்பின் வாஷரை கழற்றி புதிய வாஷர் மாட்டிக் கொண்டிருந்தார்.
ஓய்வு நேரத்தில் கூட ஏதேனும் சிறு சிறு வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்யும் தன் தந்தையை மனதுள் மெச்சியபடியே, அவரிடம் தேநீரை நீட்டினாள் நிலா.
“அப்படி வைம்மா… இந்த வாஷரை மாட்டிட்டு எடுத்துக்கறேன்!” என்று அவர் சொல்ல,
“அப்பா முதல்ல இந்த டீயைக் குடிங்க பிறகு மாட்டிக்கலாம்!” என்று அவர் கையிலிருந்த பம்ப்பின் தலையை வாங்கிக் கீழே வைத்துவிட்டு தேநீரை அவர் கையில் கொடுத்தாள்.
தேநீரைக் குடித்துவிட்டு அவள் கையில் க்ளாசை நீட்டியவர் மறுபடியும் தனது வேளையில் மூழ்கினார்.
அவள் எழுந்து உள்ளே செல்ல, தீடிரென்று… “அம்மாடி நிலா….!!!!” என்று தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அழைத்தார் வெங்கடேசன்.
அவர் குரல் கேட்டு திரும்பியவள் அவரின் நிலை கண்டு, “அப்பா…!!!??” என்று பதறி ஓடி வர, அவளின் பதட்டமான குரல் கேட்டு வேணியும் உள்ளே இருந்து ஓடி வந்தார்.
அதற்குள் வெங்கடேசன் நெஞ்சைப் பிடித்து கொண்டு வலியில் துடிக்க, வேணி கதற ஆரம்பித்தார்.
“அம்மா…! அம்மா! அழாதேம்மா….!” நான் போய் யாரையாவது உதவிக்கு அழைச்சிட்டு வரேன்! ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போகலாம்!” என்றவள் நொடியும் தாமதிக்காமல், தனது எதிர் வீட்டில் இருக்கும் நிருவின் வீட்டை நோக்கி ஓடினாள்.
“நிரு வேற வீட்ல இருக்க மாட்டான்…! நேத்தே தரமணிக்குப் போறேன்னு சொல்லி இருந்தான். ஆன்ட்டி இருந்தா… அவங்க ஏதேனும் உதவி செய்வாங்க…!” என்று எண்ணி பதட்டத்துடன்,
“ஆன்ட்டி…! ஆன்ட்டி…!” என்று குரல்கொடுத்தபடியே அவர்கள் வீட்டிற்குச் சென்றாள். வீட்டில் யாரும் இல்லாமல் வீடு வெறிச்சோடிக் கிடக்க,
‘எல்லோரும் எங்க போனாங்க?! அய்யோ… அப்பாவுக்கு வேற இப்படி ஆகிடுச்சே…!?’ என்று அவள் மனம் பரிதவித்தது.
“அவங்க எல்லோரும் விடியற் காலையிலையே கோவிலுக்கு கிளம்பிப் போயிட்டாங்களே நிலாம்மா…?!” என்றார் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் சாரதா.
“கடவுளே இப்போ என்ன பண்றது?!” என்றாள் கண்கள் கலங்க.
அவள் நிலை கண்டு, “என்னம்மா… என்னாச்சு?!” என்று சாரதா அக்கறையோடு வினவ, அந்நேரம் பார்த்து ரஞ்சன் மாடியிலிருந்து கீழிறங்கி வந்தான்.
அவனைப் பார்த்ததும் ஒரு நொடி அவனிடம் உதவி கேட்கலாமா என்று நினைத்த நிலா, மறுநொடியே அவன் உதவமாட்டான் என்று தானே முடிவுகட்டிக் கொண்டு, சாரதாவிடம் திரும்பி, “அப்பா…. அப்பாவுக்கு திடீர்னு நெஞ்சு வலி வந்திடுச்சு?! நீங்க கொஞ்சம் என் அம்மா, அப்பாவோட துணைக்கு இருக்கீங்களா? நான் மெயின் ரோட்டுக்குப் போய் ஆட்டோ கூட்டிட்டு வரேன்” என்றாள் நெஞ்சம் விம்ம.
“அட என்னம்மா நீ… கேட்டுகிட்டு நிக்கிற…!? ஓடி போயி ஆட்டோ கூட்டிட்டு வா?! நான் உங்க அம்மா, அப்பா கூட இருக்கேன்!” என்று சாரதா கூற, நிலா ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து வெளியேறினாள்.
‘திமிரு திமிரு…. இந்த நேரத்துல கூட அவ ஆணவம் உதவி கேட்க விடாம அவளைத் தடுக்குதோ…?!’
‘அவளுக்கே இவ்ளோ திமிர் இருக்கும் போது எனக்கென்ன…?!” என்று மனதுள் அவளை வசைபாடிய படியே தன் பாட்டிற்கு தனது வேலைக்குக் கிளம்பத் தயாரானான் ரஞ்சன்.