தனது காரை எடுத்துக் கொண்டு வெளியே வந்த ரஞ்சனுக்கு, நிலாவின் பெற்றோர் இருந்த நிலை இரக்கத்தைத் தோற்றுவிக்க, காரை நிறுத்திவிட்டு பல வருடங்களுக்குப் பின் அவர்கள் வீட்டில் காலடி எடுத்து வைத்தான்.
“அவரை ஒரு கை பிடிங்க!” என்று வேணியிடம் சொன்னவன், மெதுவாக அவரை எழுப்பி, தன் தோல் மீது சாய்த்து கைத்தாங்கலாக அழைத்து சென்று காரில் அமர வைத்தான்.
“நீங்களும் உட்காருங்க!” என்று கூறியவனை வியப்புடன் நோக்கியபடியே காரில் ஏறி அவர் கணவரின் பக்கத்தில் அமர்ந்தார் வேணி.
அவன் சற்று தூரம் சென்றவுடன், நிலா ஆட்டோ பிடிப்பதற்காக வேகமாக மெயின் ரோட்டிற்கு ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருப்பது தெரிந்தது.
காரை வேகமாகச் செலுத்தியவன், அவளை உரசிக்கொண்டு நிற்பது போல் காரை அவளுக்கு வெகு அருகில் சென்று நிறுத்தினான்.
கலங்கிய கண்களோடு திடுக்கிட்டுத் திரும்பி நின்றவளைப் பார்த்தவன் நெஞ்சில் ஒரு நொடி சிறு வயது நிலா தோன்றி மறைந்தாள்.
ஏனோ அவளின் அழுகை அவன் நெஞ்சில் வெறுப்பை ஏற்படுத்தியது. ‘இப்படி நீலிக் கண்ணீர் வடிச்சுதானே அன்னிக்கு எல்லார் முன்னாடியும் என்னை அவமானப் பட வைச்சா?!’ என்று மனதிற்குள் பொறுமியவன்,
“உங்க பொண்ணை கார்ல எறிக்கச் சொல்லுங்க?” என்றான் வேணியிடம். அவள் தயக்கத்துடன் ஏறி அமர, வண்டியை வேகமெடுத்தான்.
“எந்த ஹாஸ்பிட்டலுக்குப் போகணும்?” என்று அவன் கேட்க,
“ஜி. எச் க்கு! அங்கதான் அப்பா முதல்ல இருந்தே சிகிச்சை எடுக்கறார்” என்றாள் நிலா.
“ம்! காசு கொடுத்துப் பார்க்க வக்கில்ல…! ஜி. எச் சுக்கு போங்கன்னு சொல்றத விட்டுட்டு… அதுல கூட கவுரவம் வேண்டிக்கிடக்கு!” என்று நினைத்தவன், வண்டியை அரசு மருத்துவமனை முன் நிறுத்தினான்.
“த தாங்க்ஸ்…!” என்று தயக்கத்துடன் அவனுக்கு நன்றி தெரிவித்த நிலா, தந்தையை மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு சென்றாள்.
‘ஒரு கரிசனத்துகாகக் கூட உதவிக்கு வரட்டுமான்னு கேட்கறானா பாரு!’ என்று மனதுள் அவனைத் திட்டியவள்,
‘அவன் இவ்ளோ தூரம் உதவினதே பெரிய விஷயம்!’ என்று தேற்றிக் கொண்டாள்.
“உதவிக்கு கூட இருக்கியான்னு ஒரு வார்த்தைக் கேட்கலாம் இல்ல…! ஈகோ பிடிச்சவ!” என்று நினைத்தபடியே காரைக் கிளப்பிச் சென்றான் ரஞ்சனும்.
மருத்துவர், வெங்கடேசனைப் பரிசோதித்து விட்டு, மருந்துலயே ப்ளாக்கை கரைச்சிடலாம்னு பார்த்தா… முடியாது போல…! பைபாஸ் சர்ஜரி செய்துதான் ஆகணும்! இவரை அட்மிட் பண்ணிடுங்க!” என்று அட்மிஷன் போட்டுவிட, வேணி மிகவும் வருத்தம் கொண்டார்.
“கடவுளே அவருக்கு எந்த ஆபத்தும் நேராம நல்ல படியா குணமாகி வீடு திரும்பனும்!” என்று மனதார கண்மூடி வேண்டினார்.
அவரின் நிலையை உணர்ந்த நிலா, தன் பயத்தைத் தன்னுள் மறைத்துக் கொண்டு, “அம்மா பயப்படாதம்மா…! இப்போல்லாம் இந்த சர்ஜரி சர்வ சாதரணமா ஆகிப் போச்சு!” என்று தாய்க்கு ஆறுதல் உரைத்தாள்.
பின் தன் தந்தையின் கைகளைப் பிடித்து, “அப்பா ஆபரேஷன் பண்ணதும் பூரணமா குணமாகிடுவீங்க பாருங்க! அப்புறம் இப்படி அடிக்கடி நெஞ்சு வலியெல்லாம் வராது!” என்றாள் அவருக்கு தைரியம் கொடுக்கும் விதமாக.
தந்தையை மருத்துவமைனையில் அட்மிட் செய்துவிட்டு, தனது அக்காவிற்கு போன் செய்து விவரம் கூறினாள்.
விவரம் அறிந்த கலை, பிள்ளையை தூக்கிக் கொண்டு, தன் கணவன் கோபியுடன் அரைமணி நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தாள்.
“அப்பா….?!” என்று கண்கலங்க அழைத்துக் கொண்டே தந்தையை நெருங்கிய கலையை, நிலா தலையைசைத்துத் தடுக்க, கலை தன்னைச் சுதாரித்துக் கொண்டு,
“அப்பா…. இப்போ வலி பரவாயில்லையா?!” என்றாள்.
“ஹான் பரவாயில்லை மா….!” என்றவர்,
“கண்ணா தாத்தாகிட்ட வாங்க!” என்று தன் பேரனை ஆசையோடு அழைக்க, பிள்ளைத் தாவிக் கொண்டு வந்தது.
குழந்தையோடு விளையாடுவதில் அவர் தன் உடல் வலியை மறந்திருக்க, நிலா கோபியிடம்,
“மாமா.. டாக்டர்ஸ் சில டெஸ்ட்டெல்லாம் எழுதிக் கொடுத்திருக்காங்க… நீங்க அப்பா கூட இருந்து பார்த்துக்கறீங்களா? நான் வீட்டுக்குப்போய் அப்பா, அம்மாக்கு மாத்து துணி எடுத்துகிட்டு எல்லோருக்கும் மதியத்துக்கு சமைச்சுக் கொண்டு வரேன்…” என்றாள்.
“நீ அவ்ளோ தூரம் பஸ் பிடிச்சு போய் சமைச்சிக் கொண்டு வரணுமாடி?! நான் வண்டியில அவரோட எங்க வீட்டுக்கு போய் சமைச்சிக் கொண்டு வரேனே!” என்றாள் கலை.
“இல்ல வேணாம் கலை.. உனக்கெதுக்கு அலைச்சல். எப்படியும் மாத்துத் துணி எடுக்கப் போகணும்ல…!” என்று சொல்லி, அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினாள்.
தனது வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய நிரஞ்சன், சாரதா மூலம் நிலாவின் தந்தை பற்றிய விவரம் அறிய, உடனே நிலாவின் எண்ணிற்கு அழைத்தான்.
“அப்பா எப்படி இருக்கார் நிலா….?!” என்று அவன் பதட்டத்துடன் வினவ,
“பயப்படாத நிரு… இப்போ அப்பா நார்மலாதான் இருக்கார். நான் வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன்! நேர்ல வந்து சொல்றேன்” என்று போனை வைத்தாள்.
சிறிது நேரத்தில் அவள் தங்கள் வீட்டை அடைய, நிரஞ்சன் பதட்டத்தோடு அங்கே காத்திருந்தான்.
“சர்ஜரி பண்ணனும்னு சொல்லியிருக்காங்க நிரு…!” என்று அவள் சற்றே கலங்கிய கண்களுடன் சொல்ல,
“பயப்படாத நிலா….! இப்போல்லாம் சர்ஜரி பெரிய விஷயமே இல்லை…!” என்று அவளுக்கு ஆறுதல் உரைக்க முயன்றான்.
“ம் இப்படிச் சொல்லித்தான் அவங்க எல்லோரையும் சமாதானப் படுத்தினேன் நிரு.. ஆனாலும் கொஞ்சம் பயமாயிருக்கு!” என்றாள் கவலையுடன்.
சிறிது நேரத்திற்குப் பின் அவள் சமையலை முடித்து எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்குக் கிளம்ப, நிரஞ்சனும் உடன் சென்றான்.
கோவிலிலிருந்து வீடு திரும்பிய நிரஞ்சன் குடும்பத்தினர், நிலாவின் தந்தை பற்றிய விவரம் அறிந்து அவரை மருத்துவமனைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்தனர்.
காமாட்சி பாட்டி வேணியிடம், “உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் தயங்காம என்கிட்ட கேளுங்க…!” என்று சொல்லி வேணியின் கையில் ஐநூறு ரூபாய்க் கட்டை கொடுக்க,
“அய்யோ இதெல்லாம் வேண்டாங்க…! நீங்க எங்களுக்கு ஆதரவா இருக்கிறதே போதும்ங்க…!” என்று வேணி பணத்தை அவரிடமே கொடுத்துவிட்டார்.
“ம்ஹும் இதை நீங்க மறுக்கக் கூடாது!” என்று மறுபடியும் அவர் வேணியின் கைகளில் பணத்தைத் திணித்து,
“இன்னிக்கு நாங்க உங்கள வேற விஷயமா வந்து பார்த்துப் பேசனும்னு நினைச்சிக்கிட்டு இருந்தோம்! ஆனா இப்போ நிலைமை சரியில்லை…! உங்க கணவர் உடம்பு தேறி வரட்டும்! பிறகு பேசுவோம்” என்று சொல்லி விடைப் பெற்றுக் கிளம்பினார்.
சில வாரங்கள் கழித்து வெங்கடேசன் அறுவைசிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார்.
நிலா, காமாட்சி பாட்டியிடம் சென்று, “ரொம்ப நன்றிங்க பாட்டி… நீங்க நேரத்துக்கு பணம் கொடுத்து உதவினதுக்கு! இந்தாங்க… அரசு மருத்துவமனைங்கிறதுனால அதிகமா செலவாகல..! ஒரு இருபதாயிரம் ரூபாய்தான் செலவாச்சு! அதுவும் அப்பா வேலை செய்யிற இடத்தில கொடுத்துட்டாங்க… அதனால…” என்று அவர் கொடுத்த பணத்தைத் திரும்ப அவரிடம் கொடுக்க,
“ஏன்மா இதைத் திருப்பிக் கொடுத்தே ஆகணுமா?!” என்றார் காமாட்சி.
“நீங்க திரும்ப வாங்கிக்கிட்டா நான் ரொம்ப சந்தோஷப் படுவேன்!” என்றாள் அவள்.
“ம்ம் சரி..!” என்று அப்பணத்தை வாங்கிக் கொண்டார் காமாட்சி.
அன்று இரவு இராமநாதன், ரஞ்சனின் அறைக் கதவைத் தட்டி உள்ளே செல்ல அனுமதி கேட்க,
“வா.. வாங்க தாத்தா… சொல்லி அனுப்பி இருந்தா நானே வந்திருப்பேனே….!” என்றான் ரஞ்சன்.
“ஏன் நான் உன் ரூமுக்கு வரக் கூடாதா…?!” என்றபடியே அவன் அறையை நோட்டம் விட்டவர்,
“உனக்குன்னு ஒருத்தி வந்துட்டா… இந்த அறை இப்படி வெறிச்சோடி இருக்காதில்ல..?!” என்று அவர் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
“த தாத்தா….!” என்று திணறினான் ரஞ்சன்.
“நான் உனக்குன்னு ஒரு பொண்ணை பார்த்து வைச்சிருக்கேன்! அவ உன் வாழ்க்கையில வந்தா… நீ மட்டும் இல்ல… நம்ம குடும்பமே சந்தோஷமா இருக்கும்.!” என்றார்.
“அது வந்து தாத்தா….” என்று ரஞ்சன் தயங்க,
“என்ன ரஞ்சு… நீ யாரையாவது விரும்பறியா?! உன் பாட்டி இதைப் பத்தி உன்கிட்ட பேசின போதும் நீ எதுவுமே பிடி கொடுத்துப் பேசலைன்னு ரொம்ப வருத்தப் பட்டா…” என்றார் இராமநாதன்.
“ம் இ இல்ல.. தாத்தா…!” என்றான் மறுப்பாக.
“அப்புறம் என்ன?! நான் உனக்கு நல்ல பொண்ணைத்தான் பார்ப்பேன்னு நம்புறயில்லை?!”
“………………….”
“எனக்கும் வயசாகிட்டே போகுதுப்பா…! நம்ம நிரஞ்சனுக்குத்தான் எந்த சம்பந்தமும் கூடி வர மாட்டேங்குது! உன் கல்யாணத்தையாவது கண்குளிர பார்த்துட மாட்டோமான்னு மனசு ஏங்குது ப்பா…!” என்று அவர் உடைந்து போய் சொல்ல,
“தாத்தா…!” என்று அவர் கைகளைப் பற்றிக் கொண்டவன், “உங்க விருப்பம் தாத்தா…!” என்றான் அரைமனதோடு.
“பொண்ணு யாருன்னு உனக்கு இப்போ சொல்லமாட்டேன்! ஒரு சர்ப்ரைஸ் ஷாக் கொடுக்கப் போறேன்!” என்று பீடிகை போட்டவர், பேரன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்ட சந்தோஷத்தில் மனநிறைவோடு அங்கிருந்து வெளியேறினார்.
ரஞ்சனுக்கு பெண் யாரென்று தெரிந்தால் என்ன நடக்கும்?!
மறுநாள் மதியம் ஒரு காஃபி ஷாப்பில் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்தபடியே கூல் காஃபியை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்த நிரஞ்சனின் முன் வந்து அமர்ந்தவள்,
“ஹாய் பாப்பா… எப்படி இருக்கீங்க?!” என்று பெயருக்கு நலம் விசாரித்துவிட்டு அவனைப் பேசவிடாமல், அவன் கையிலிருந்த புத்தகத்தைப் பிடுங்கி,
“ஒண்ணு புக் படிக்கணும்! இல்ல காஃபி குடிக்கணும்! இப்படி ரெண்டையும் ஒரே நேரத்தில செஞ்சா… ரெண்டையுமே முழுசா ரசிக்க முடியாதே?!” என்றாள் தன் கன்னங்களில் கைவைத்தபடி.
“வேஸ்ட் பா… அடுத்த முறை கொஞ்சம் சீரியஸா மிரட்ட ட்ரை பண்ணுங்க?!” என்று அவன் கோபத்தைக் காற்றில் பறக்க விட்டவள்,
“ஆமாம் எங்க உங்க பிரெண்ட்? அவங்க உங்க கூட வரலையா?!” என்றாள்.
“சே சரியான அதிகப் பிரசங்கி…!” என்றவன், குடித்துக் கொண்டிருந்த காஃபியை பாதியில் வைத்துவிட்டு, அவள் கையிலிருந்த தன் புத்தகத்தைப் பிடுங்கிக் கொண்டு எழுந்தான்.
“அடேயப்பா… எவ்ளோ கோபம் வருது?! என்னால நீங்க ஒண்ணும் காபி சாப்பிடாம பாதியில எழுந்து போக வேண்டாம்! நான் கிளம்பறேன்!” என்றவள் சற்று நின்று,
“உங்க பிரெண்டையும் ரொம்ப கேட்டேன்னு சொல்லுங்க! பை…!” என்று சிட்டாகப் பறந்து சென்றாள்.
அவள் சென்றதும் அவள் குறும்புத்தனத்தை எண்ணிச் சிரித்தபடியே காபியைப் பருகி முடித்து அங்கிருந்து கிளம்பினான் நிரஞ்சன்.
அந்த வாரத்தின் வெள்ளிக்கிழமை மாலையன்று, இராமநாதனும், கிருஷ்ணனும், ரஞ்சனிடம் கடைப் பொறுப்பை கவனித்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு, வெகு சீக்கிரமாகவே வீட்டுக்குக் கிளம்பிச் சென்றனர்.
மாலை ஆறு மணியளவில், பூ, பழம் சகிதம், இராமநாதன், காமாட்சி, கிருஷ்ணன், ராதா அனைவரும் நிலாவின் வீட்டிற்குச் சென்றனர்.
வேணிக்கு அவர்களின் வருகை மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுக்க, தன்னைச் சமாளித்துக் கொண்டு அவர்களை வரவேற்று அமரச் செய்தார்.
யாரோ வந்திருப்பதை உணர்ந்து வெளியே எழுந்து வந்த வெங்கடேசனும், அவர்களை வரவேற்றார்.
“நிலா இன்னும் ஸ்கூல்ல இருந்து வரலியா?” என்றார் ராதா.
“இல்லைங்க சரியா படிக்காத பசங்களுக்கு ஏதோ தனியா வகுப்பு எடுக்கறாளாம்” என்றார் வேணி.
“ஓ! டியூஷன் கிளாஸா?” என்று காமாட்சி கேட்க,
“இல்லைங்க… தமிழ் சரியா எழுதப் படிக்கத் தெரியாத பிள்ளைங்களுக்கு, செம்மையான முறையில பேசவும் எழுதவும் கத்துக் கொடுக்கிறா…!” என்றார் வெங்கடேசன் பெருமிதத்துடன்.
“ஓ நல்ல முயற்சி… இப்போவெல்லாம் தமிழும், ஆங்கிலமும் கலந்து பேசி நம்ம மொழியோட தனித்தன்மையையே மாத்திடறாங்க…!” என்றார் கிருஷ்ணன்.
“ஆமாம் இது ரொம்ப வருந்தக் கூடிய விஷயம்தான்! ஆங்கிலம் பேசத் தெரியலைன்னா கௌரவக் குறைச்சலா நினைக்கிற நம்ம நாட்டுப் பிள்ளைங்க தமிழ் சரியா பேசத் தெரியலையேன்னு கொஞ்சம் கூட வருத்தப் படறதில்லை!” என்றார் இராமநாதனும்.
“என்னங்க வந்த விஷயத்தையும் கொஞ்சம் பேசுங்க!” என்று காமட்சி பாட்டி சொல்ல,
“நாங்க உங்க பொண்ணு நிலாவை எங்க ரஞ்சனுக்கு பெண் கேட்டு வந்திருக்கோம். உங்க பொண்ணை எங்க வீட்டு மருமகளா அனுப்பச் சம்மதிப்பீங்களா??” என்றார் இராமநாதன்.
அவர்கள் கேட்டதை எண்ணி வேணி வாயடைத்துப் போய் நிற்க, வெங்கடேசன் சற்றுத் தயங்கிய படியே…
“அய்யா… அது வந்து… உங்களுக்கே ரஞ்சன் தம்பிக்கும், நிலாவுக்கும் இடையில நடந்த பிரச்சனைப் பத்தித் தெரியும்! அப்படி இருந்தும்.. இது சரியா வரும்னு நீங்க நினைக்கறீங்களா?” என்றார்.
“அட! அது ஒரு சாதாரண விஷயம் வெங்கடேசன்! அதைப் போய் இன்னுமா பசங்க மனசில வைச்சிட்டு இருப்பாங்க?!” என்றார் கிருஷ்ணன்.
“நிச்சயமா நிலா இதுக்கு சம்மதிப்பா…!” என்றார் ராதாவும் அவருக்கு கைகோர்த்து.
“சரிங்க அப்போ நாங்க கிளம்பறோம்! உங்ககிட்டயிருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கிறோம்!” என்று இராமநாதன் கைகூப்பி விடைபெற, வெங்கடேசனும், வேணியும் மரியாதையுடன் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.
மாலை வீடு திரும்பிய நிலா, “அம்மா ரொம்ப தலை வலியா இருக்கு, சூடா இஞ்சி டீ போட்டுத் தரியா? நான் போய் முகம் கை கால் கழுவிட்டு வரேன்!” என்று தங்கள் வீட்டின் கிணற்றடிக்குச் சென்றாள்.
சில நிமிடங்களில் முகம் கழுவி திரும்பி வந்தவள், “அப்பா எங்கம்மா காணோம்?!” என்று முகத்தைத் துண்டால் துடைத்தபடியே கேட்க,
“இன்னிக்கு சங்கடஹர சதுர்த்தி இல்ல.. பக்கத்துல இருக்க பிள்ளையார் கோவிலுக்கு போயிருக்காரு” என்றபடியே வேணி தேநீரை அவளிடம் நீட்டினார்.
“நிலா… இன்னிக்கு நிரஞ்சன் தம்பி வீட்ல இருந்து அவங்க தாத்தா, பாட்டி, அவங்க அம்மா, அப்பா எல்லோரும் உன்னை ரஞ்சன் தம்பிக்கு பெண் கேட்டு வந்திருந்தாங்க?” என்றார் மகிழ்ச்சி பொங்க.