Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

En Nila Thozhikku

En Nila Thozhikku 7

                                      7

     “என்ன???!!!” என்று கேட்டபடி அதிர்ச்சியுடன் எழுந்து நின்றவளைப் பார்த்து,

     “எதுக்குடி இப்படி அதிர்ச்சியாகுற…?!” என்றார் வேணி.

     “அவனுக்கா?! என்னையா?! இந்த விஷயம் அவனுக்கு தெரியுமா?!” என்றாள் குழப்பத்துடன்.



Advertisement

     “இப்படி ஒரு சம்மந்தம் கிடைக்க நாம புண்ணியம் செஞ்சிருக்கணும்!” என்று வேணி சொல்ல, நிலா அவரை முறைத்தாள்.

     “என்னடி அப்படி முறைக்கிற?!”

     “அவனுக்கு கழுத்தை நீட்டுறதை விட நான் காலம் முழுக்க கல்யாணம் பண்ணிக்காமலேயே இருந்திடலாம்!” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு, நிலா தன் பாட்டிற்கு ஒரு புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.

Advertisement

     “ஏய் நிலா… சின்ன வயசில நடந்த விஷயத்தையே மனசில வைச்சிகிட்டு பேசாதடி…! இப்போ அந்த தம்பி ரொம்ப மாறிட்டாரு!” என்றார் வேணி.

Advertisement

     “ஏன் அன்னிக்கு நிவியோட நிச்சயதார்த்தத்துல அவன் நடந்துகிட்டது ஞாபகம் இல்லையா?!” என்று அவள் கேட்க,

     “அது…” என தயங்கிய வேணி,

     “ஆனா அதே தம்பிதான அன்னிக்கு உன் அப்பாவுக்கு உடம்பு முடியாம போனபோது ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போச்சு!” என்றார் அவனுக்குப் பரிந்து.

Advertisement

     “அது ரொம்ப பெரிய ஆச்சர்யம்தான்!” என்று நிலா ஒப்புக் கொள்ள,

     “டீ நிலா… இவ்ளோ பெரிய இடத்துச் சம்மந்தம் நாம கனவுல கூட நினைச்சுப் பார்க்க முடியாதுடி…!” என்று வேணி தன் மனதை வெளிப்படுத்தினார்.

     “என்னம்மா…?! இன்னிக்கு உனக்கு ரொம்ப பெரிய பெரிய ஆசையெல்லாம் வந்துடுச்சு போல!!??” என்று வார்த்தைகளில் கனலை வீசினாள் நிலா.

     “நிலா….?!” என்று அவர் வருத்ததுடன் அவள் முகம் பார்க்க,

     அவளோ தன் தாய் முகம் பார்ப்பதைத் தவிர்த்து, கண்களைத் புத்தகத்தில் தாழ்த்தி அதில் கவனம் செலுத்த முயன்றாள்.

     ஆனால் புத்தகத்தில் அன்று அவளுக்கு நடந்த அவமானமே காட்சியாக விரிந்தது.

     நான்கு பிள்ளைகளும் நிரஞ்சன் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து தங்களது, வீட்டுப் பாடத்தை செய்து கொண்டிருந்தனர்.

     “ஏய் நிரு இங்க பார்த்தியாடா… இன்னிக்கு என் பர்த்டேன்னு என்னோட பிரெண்ட் கிரிஷ் எனக்கு பார்கர் பென் கிப்ட் பண்ணான்…” என்று ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் ரஞ்சன் பெருமையுடன் தன் சகோதரனிடம் காண்பிக்க,

     நிரு அதனைக் கையில் வாங்கி, “நல்லாயிருக்குடா…” என்றான்.

     “அய்! ரொம்ப சூப்பராயிருக்குண்ணா…!” என்றாள் நிவி.

     “ஏய் ரஞ்சு…. ரொம்ப அழகாயிருக்குடா… எனக்கு ஒருநாள் எழுதத் தரியா?!” என்றாள் நிலாவும்.

     “இந்தா எழுதிப் பாரு…!” என்று நிரஞ்சன் பேனாவை அவளிடம் கொடுக்க, அவளும் ஆசையோடு அதனை வாங்கினாள்.

     ஆனால் நொடிகளுக்குள் ரஞ்சன் வெடுக்கென்று அவள் கையிலிருந்த பேனாவைப் பறித்துக் கொண்டு,

     “ஏய் உனக்கெல்லாம் தர முடியாது! இது எவ்ளோ காஸ்ட்லி பென் தெரியுமா?!” என்றான் ரஞ்சன்.

     அதைக் கேட்டு நிலாவின் முகம் வாடிப் போக, நிரஞ்சன் அவளைப் பார்த்து,

     “நீ கவலைப் படாத நிலா… நான் உன் பர்த்டேக்கு இதைவிட சூப்பர் பென்னை உனக்கு கிப்ட் பண்றேன்!” என்றான்.

     “நானும் உங்க ரெண்டு பேருக்கும் ஒரு கிப்ட் வைச்சிருக்கேனே!” என்று நிலா ஆசையோடு தானே கைப்பட செய்து வைத்திருந்த இரு வாழ்த்து அட்டைகளை எடுத்து இருவருக்கும் கொடுத்தாள்.

     “ரொம்ப நல்லாயிருக்கு நிலா… தாங்க்ஸ்…” என்று நிரஞ்சன் மனதார நன்றி கூற,

     “தாங்க்ஸ்…!” என்றான் ரஞ்சனும்.

     “எங்க வாங்கின நிலா…? நல்லாயிருக்கு என் பிரெண்டுக்கும் நான் வாங்கணும்!” என்று நிவி கேட்க,

     “இது கடையில வாங்கினது இல்ல நிவி… நானே செய்தேன்…!” என்றாள் நிலா பெருமையுடன்.

     “ஓ இதக் கூட காசு கொடுத்து வாங்கலையா! சரியான கஞ்சூஸ்.. நீ!” என்றான் ரஞ்சன்.

     “இல்ல ரஞ்சு.. நான் உங்க பர்த்டேக்கு கிப்ட் வாங்குறதுக்காக காசு சேர்த்து வைச்சேன்…! ஆனா அம்மா… வீட்ல காசில்லாம ரொம்ப கஷ்டமாயிருக்குன்னு அப்பாகிட்ட சொல்லிட்டு இருந்தாங்களா? அதான் அவங்க கிட்ட கொடுத்திட்டேன்! அப்புறம்தான் நானே நேத்து நைட் ரெண்டு மணி வரைக்கும் கண்முழிச்சி இதை செஞ்சேன்” என்றாள் விளக்கமாக.

     நிரு அவள் அன்பை எண்ணி நெகிழ்ந்து போக, ரஞ்சன் “ஓ!’ என்ற வார்த்தையோடு நிறுத்திக் கொண்டான்.

     மறுநாள் மாலை பள்ளியிலிருந்து வந்ததும் வராததுமாக ரஞ்சன் தன் புத்தகப் பையை வைத்துவிட்டு, நிலாவின் வீட்டிற்குச் சென்று, 

     “ஆன்ட்டி ஆன்ட்டி..!” என்று வேணியை அழைத்தான்.

     “நிரு ஏன்டா வெளியவே நிக்குற…? உள்ள வாடா… ஏன் அம்மாவைக் கூப்பிடற?!” என்றபடி வந்தாள் நிலா.

     “சீ திருடி… என்கிட்டே பேசாத…!!” என்று கேவலமாக அவளைப் பார்த்துவிட்டு, வெளியே வந்த வேணியிடம் சென்று,

     “ஆன்ட்டி உங்க பொண்ணு நிலா என்னோட காஸ்ட்லி பென்னைத் திருடிட்டா….!” என்றான் ரஞ்சன்.

     “என்னப்பா சொல்ற?! அவ அப்படி எல்லாம் பண்ணமாட்டா…!” என்றார் வேணி.

     “இல்ல ஆன்ட்டி நிஜமாவே அவ திருடித்தான் இருக்கா… நேத்து என்கிட்டே அந்த பென்னை ஒரு நாள் எழுதத் தான்னு கேட்டா…. நான் தரமாட்டேன்னு சொல்லிட்டேன். அதான் இப்படித் திருடிட்டா…” என்றான்.

     வேணி அவளை முறைக்க, “இல்ல இல்லம்மா… நான் எடுக்கல…!” என்றாள் நிலா பயந்த விழிகளுடன்.

     “நீ பேனாவைக் கேட்டியா?!” என்றார் வேணி அதட்டலாக.

     “ம் வந்து ம்மா…!” என்று அவள் திணறும் போதே, பளாரென்று அவள் கன்னத்தில் அறைந்தார்.

     சுளீரென்று கன்னம் வலிக்க, அவள் கண்கள் குளமாகியது.

     “ம்மா… நான் நான்….!” என்று அவள் தேம்பியபடி ஏதோ சொல்ல முயல,

     “என்னடி பெரிய பெரிய ஆசையெல்லாம் முளைக்குதோ? பத்து ரூபா பேனா வாங்கவே இங்க திண்டாட்டமா இருக்கு! இதுல உனக்கேன்டி விலை உயர்ந்த பேனாவெல்லாம்?!” என்று அவர் ஆக்ரோஷத்துடன் மேலும் அவள் கன்னத்தில் ஓர் அறைவிட,

     தாயை எதிர்த்துப் பேச திராணியில்லாமல், “ஏய் ஏன்டா என் அம்மாகிட்ட பொய் சொல்லி என்னை அடி வாங்க வைக்கிற…?! யார் எடுத்தாங்களோ அவங்ககிட்ட போய் கேளு!” என்று ரஞ்சனிடம் எகிறினாள் நிலா.

     “நீதான் பொய் சொல்ற… திருடி… என் பேனாவைக் கொடு!” என்று அவன் சொல்ல, நிலாவுக்கு தொண்டை அடைத்தது.

     “ஏய் வேணாம் வேணாம் என்னைத் திருடின்னு சொல்லாத….!” என்று ஒற்றை விரல் நீட்டி அவனை எச்சரித்தாள்.

     “அப்படிதான் சொல்லுவேன் திருடி… திருடி…!” என்று அவன் மேலும் அவளை உசுப்பேற்ற,

     அவள் கை ஓங்கிக் கொண்டு அவனை அடிக்க ஓடி வந்தாள்.

     அதைப் பார்த்ததும் வேணிக்கு கோபம் அதிகரிக்க, “எவ்ளோ திமிர் இருந்தா… தப்பையும் பண்ணிட்டு அந்த தம்பியைவே அடிக்கப் போவ?!” என்று அவளை அடி அடியென்று அடித்துவிட்டார்.

     இவையனைத்தும் அவர்கள் வீட்டு வெளிவாயிலில் நடந்தேறியதால், வீதியில் விளையாடிக் கொண்டிருந்த அக்கம் பக்கத்துக்கு வீட்டுச் சிறுவர்களின் கவனத்தை ஈர்த்தது.

     “ஏய் நிலா… திருடி போல டா… இனி அவளோட சேரக்கூடாது!” என்று ஒரு சிறுமி சொல்ல,

     “ஆமாம் ஆமாம்!” என்று மற்ற பிள்ளைகளும் அதனை ஆமோதித்தனர்.

     அடி தாளாமல் கீழே சுருண்டு அமர்ந்திருந்த நிலாவிற்கு இதையெல்லாம் கேட்டு, மனம் அவமானத்தில் குறுகி எரிமலையாத் தகித்தது.

     “ஏய் மரியாதையா அந்தப் பேனாவைக் கொடுடி..!” என்று அவர் கேட்க,

     “இல்லேன்னு சொல்றேன்ல ம்மா….!” என்றாள் நிலா ஆவேசமாக.

     “தம்பி மன்னிச்சிடுப்பா… அந்தப் பேனா எவ்ளோ விலைன்னு சொல்லு நாங்க காசு கொடுத்திடறோம்!” என்றார் வேணி.

     “2௦௦ ரூபீஸ் ஆன்ட்டி..!” என்று அவன் சொல்ல,

     “என்ன இருநூறு ரூபாயா?!” என்று வாய் பிளந்து நின்றார் வேணி. 

     “ஆமாம் ஆன்ட்டி…! நாளைக்கு நான் ஸ்கூல் போறதுக்குள்ள கொடுத்துடுங்க!” என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து அகல, ராதாவுடன் கடைக்குச் சென்றிருந்த நிருவும், நிவியும் தங்கள் வீட்டை அடைந்தனர்.

     நிரஞ்சன் கார் கதவைத் திறந்து கொண்டு இறங்கியதும் பார்த்த காட்சி, நிலா அவளின் வீட்டு வாயிலில் அமர்ந்து அழுது கொண்டிருந்ததுதான்.

     அதைக் கண்டு மனம் தாளாமல் நிரு, அவளருகே ஓட, நிவியும் அவள் நிலை கண்டு அவளருகே ஓடினாள்.

     “நிலா…. நிலா என்னாச்சு ஏன் அழுவற?!” என்று இருவரும் மாறி மாறி கேட்ட பின்னும் அவள் பதிலேதும் கூறாததால்,

     “ஆன்ட்டி நிலாக்கு என்னாச்சு ஏன் அழுவறா?!” என்று வேணியிடம் வினவினர்.

     “திமிர் பிடிச்சக் கழுத… உன் அண்ணனோட பேனாவைத் திருடிடுச்சு! அதான் நல்லா நாலு அடி சாத்தினேன்!” என்றார் அவர்.

     “ம்மா இன்னொருமுறை திருடினேன்னு சொல்லாத….!” என்று நிலா முறைப்புடன் தாயையே மிரட்ட,

     “அகம்பாவம் பிடிச்சக் கழுத… எதிர்த்து எதிர்த்து பேசுறதப் பாரு!” என்று அவர் மறுபடியும் அவளை அடிக்கப் போனார்.

     “ஆன்ட்டி நிலா பேனாவை எடுத்திருக்கமாட்டா….!” என்றான் நிரஞ்சன். அவ்வார்த்தைகள் நிலாவிற்கு புதிய தெம்பைக் கொடுத்தது.

     “நிரு அண்ணா.. நான்தான் ரஞ்சு அண்ணாவோட பென்னை ஸ்கூலுக்கு எடுத்துகிட்டு போனேன்! காலையில அண்ணா குளிச்சிட்டு இருக்கும் போது, ‘பென் எடுத்துக்கறேன்னு’ சொல்லிட்டுதான் எடுத்துகிட்டு போனேன்! ஆனா அண்ணா பதில் ஏதும் சொல்லல..!” என்றாள் நிவி.

     அதைக் கேட்டு வேணியின் உள்ளம் குற்ற உணர்ச்சியில் தவிக்க, “அய்யோ உண்மை தெரியாம பிள்ளைய இப்படிப் போட்டு அடிச்சிட்டோமே!” என்று வருந்தியபடி,

     “நிலாம்மா… அம்மாவை மன்னிச்சிடுடா….!” என்று அவளைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டார்.

     “நான்தான் சொன்னேன் இல்ல…! நீ என்னை நம்பாம அவன் பேச்சை நம்புற இல்ல?!” என்றாள் மகள் கண்ணீருடன்.

     “நீ பேனாவைக் கேட்டேன்னு சொன்னே இல்ல… அதான் அம்மா தவறா நினைச்சிட்டேன்!” என்றார் அவர் வருத்தத்தோடு.

     “நான் கேட்டேன் தான்! அவன் தரமாட்டேன்னு சொன்னதும் விட்டுட்டேன்! அதுக்காக திருடுவேனா?” என்றாள் மகள்.

     அதற்கு என்ன பதில் கூறுவது என அவர் புரியாது தவிக்க, நிலா வேகமாக அங்கிருந்து எழுந்தாள்.

     “ஏய் நிலா எங்கடி போற..?!” என்று வேணி கேட்க,

     “நிவியோட பாட்டிக்கிட்ட சொல்லப் போறேன்!” என்று நிவியின் கைபிடித்து அவர்கள் வீட்டிற்குச் அழைத்துச் சென்று,

     “பாட்டி பாட்டி….” என்று கத்தினாள்.

     “என்னடா நிலா..? என்று கேட்டபடி தன் அறையிலிருந்து வெளியே வந்தார் காமாட்சி பாட்டி.

     மேலே தனது அறையில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த ரஞ்சனும், நிலாவின் குரல் கேட்டு வெளியே வந்து எட்டிப் பார்க்க,

     “பாட்டி… அந்த அந்த ரஞ்சன்… நான் அவனோட பேனாவைத் திருடிட்டேன்னு பொய் சொல்லி எங்கம்மாகிட்ட என்னை அடி வாங்க வச்சிட்டான்..! ஆனா நிவி அவன்கிட்ட சொல்லிட்டுதான் பேனாவை ஸ்கூலுக்கு எடுத்திட்டு போயிருக்கா…! இப்போ பக்கத்து வீட்டுப் பசங்க எல்லோரும் என்னைத் திருடின்னு சொல்றாங்க! எனக்கு எவ்ளோ அழுகையா வருது தெரியுமா?!” என்று நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் அவள் தேம்பலினூடே ஒப்பித்து முடித்தாள்.

     ‘அய்யோ காலையில நான் குளிச்சிட்டு இருக்கும் போது நிவி ஏதோ சொன்னாளே?! இதுதான் போல..!” என்று நினைத்த ரஞ்சன்,

     ‘பிசாசு ஏதோ தெரியாம சொல்லிட்டேன்! பாட்டி கிட்ட இப்படிக் மாட்டி விட்டுடுச்சே!?’ என்று அவளைத் திட்டினான்.

     “ரஞ்சன்…!” என்று பாட்டி பெருங்குரலெடுத்து அழைக்க, ரஞ்சன் முகத்தைச் சுளித்தபடியே வேண்டா வெறுப்பாக கீழிறங்கி வந்தான்.

     “ஏன்டா இப்படி செஞ்ச?!” என்றார் பாட்டி கோபத்துடன்.

     “நிவி சொன்னது எனக்குக் கேட்கல…!” என்றான் ரஞ்சன் அலட்சியமாக.

     “அதுக்காக நிலா மேல பழி போட்டுடுவியா?!” என்று அவர் கேட்க, அவன் பதில் பேசாமல் அமைதியாக நின்றான்.

     “அவகிட்ட மன்னிப்பு கேளு…” என்று ஆணையிட்டார் காமாட்சி பாட்டி.

     அவன் அமைதியாகவே இருக்க, “மன்னிப்பு கேளுன்னு சொல்றேன் இல்ல…!” என்று அதட்டினார்.

    “முடியாது…!” என்றான் ரஞ்சன் சட்டமாக.

    நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ராதாவும், ‘ரஞ்சு… பாட்டி சொல்றாங்க இல்ல… நீ செய்தது தப்புதான? மன்னிப்புக் கேளு…!” என்றார்.

     “இல்ல இவகிட்ட எல்லாம் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்!” என்று அவன் பிடிவாதமாக மறுக்க,

     “அஞ்சு வருஷமா பிள்ளையில்லாம தவமிருந்து பிறந்ததாச்சேன்னு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா போயிடுச்சு! எவ்ளோ நெஞ்சழுத்தம் பாரு… இந்த வயசிலயே…?!” என்றார் காமாட்சி தன் மருமகளிடம்.

     “ரஞ்சு மன்னிப்புக் கேளு…!” என்றார் ராதாவும் சற்றுக் கோபம் ஏற.

     “…..” அப்போதும் அவன் அழுத்தமாகவே இருக்க,

     “ரஞ்சன் இப்போ மன்னிப்புக் கேட்க போறியா இல்லையா?!” என்றார் காமாட்சி பாட்டி உச்சக்கட்ட கோபத்துடன்.

     “முடியாது முடியாது முடியாது!” என்று ரஞ்சன் கோபத்துடன் கத்த, அவன் கன்னத்தில் பளாரென்று ஒரு அறைவிட்ட காமாட்சி பாட்டி, அவனைத் தர தரவென்று வெளியே இழுத்து வந்து வீட்டின் வெளியே தள்ளினார்.

     “ராத்திரி வரைக்கும் இவன் இங்கேயே நிக்கட்டும் ராதா…! சாப்பிடக் கூட எதுவும் கொடுக்காத…!” என்று மருமகளிடம் கூறிவிட்டு,  வேதனையும் கோபமும் ஒருசேர ஆயாசத்தோடு சோபாவில் விழுந்தார்.

     அவர்களை எதிர்த்து ஏதும் செய்ய முடியாத ரஞ்சன், கோபத்தில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நிலாவையே வெறித்தபடி நின்றான்.

     “நிலா இங்க வாடா…!” என்று அவளை அழைத்த காமாட்சி, அவளின் சிவந்திருந்த கன்னங்களை மென்மையாக வருடி, “மன்னிச்சிடுடா கண்ணு!” என்றார்.

     “அய்யோ பாட்டி… நீங்க எதுக்கு ஸாரி கேட்கறீங்க! நீங்கதான் எந்த தப்புமே செய்யலியே…!” என்று நிலா சொல்ல, அவளின் தலை வருடி முத்தமிட்டார் காமாட்சி.

     நிலா தனக்கு நியாயம் கிடைத்த திருப்தியில் அங்கிருந்து கிளம்பி வெளியே வந்தாள்.

     அவளை முறைத்தபடி நின்றிருந்த ரஞ்சனைப் பார்த்து, “என்னைத் திருடின்னு சொன்ன இல்ல… நல்லா வேணும் உனக்கு!” என்று அவனை வெறுப்பேற்றிவிட்டுச் செல்ல, அவன் மனதில் அவள் மேல் சொல்லொணா வெறுப்பு குடி புகுந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!