Skip to content
Post Views: 3,999
8
அன்றிலிருந்து இன்று வரை இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர், எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள, அதுவே அவர்கள் மனதில் ஏற்பட்ட வடு மறையாமல் இருக்கக் காரணமானது.
“நிலா… நிலா… என்னடி நான் கூப்பிட கூப்பிட, காதுல வாங்காம ஏதோ சிந்தனையிலையே இருக்க?!” என்று வேணி அவளை உலுக்க,
“ஆங்! ஒண்ணுமில்லை ம்மா… அப்பா வந்துட்டாரா?!” என்றாள் நினைவுகள் கலைந்து.
Advertisement
“இன்னும் இல்லடி… நீ போய் ஒரு எட்டு பார்த்துட்டு வர்றியா?!” என்றார்.
“ம் சரிமா..” என்று அவள் எழவும், வெங்கடேசன் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
“என்னப்பா ஏன் இவ்ளோ நேரம்?!” என்றாள் நிலா.
Advertisement
“நிறைய கூட்டம் ம்மா…. மூர்த்தியும் கோவிலுக்கு வந்திருந்தானா.. அவனோட கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிட்டு வந்தேன்!” என்றபடி மகளிடம் பிரசாதத்தைக் கொடுத்துவிட்டு, சோர்வுடன் அங்கிருந்த ஈஸி சேரில் சாய்ந்தார் வெங்கடேசன்.
Advertisement
“என்னப்பா…. ரொம்ப சோர்வா இருக்கா?” என்று நிலா அவர் கால்களைப் பிடித்துவிட,
“எப்பவும் இருக்கறதானம்மா…” என்றவர் மகளின் தலை வருடி,
“அம்மா விஷயத்தை சொல்லி இருப்பாளே…!” என்றார்.
Advertisement
“ம் ப்பா…”
“நீ என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சந்தோஷம்தான் ம்மா…! உன் அக்காவை மாதிரியே உனக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சிக் கொடுத்திட்டேன்னா… நான் நிம்மதியா கண்மூடிடுவேன்!” என்றார்.
“அப்பா ஏன் ப்பா… இப்படி எல்லாம் பேசுறீங்க…?! என்று மகள் கவலை கொள்ள,
“எல்லாப் பெத்தவங்களுக்கும் இருக்க கவலைதானம்மா…!” என்றார் வெங்கடேசன்.
“நீங்க என்னப்பா நினைக்கிறீங்க… அவங்க வீட்ல வந்து பேசினதைப் பத்தி?!” என்று தந்தையின் கருத்தைக் கேட்டாள் மகள்.
“என்னைப் பொருத்தவரைக்கும் அந்த வீட்டைச் சேர்ந்த எல்லோரும் நல்ல மனுசங்க! அந்த வீட்ல நீ வாழ்ந்தா சந்தோஷமா இருப்பேன்னு எனக்குத் தோணுதுடா…! ஆனா உன் விருப்பத்துக்கு நான் என்னிக்குமே குறுக்க நிக்க மாட்டேன்!” என்றார்.
“அப்போ நான் ரஞ்சுவைக் கல்யாணம் செய்துக்கணும்னு நீங்க விரும்பறீங்களாப்பா…?” என்றாள் எந்த உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல்.
“நாந்தான் சொன்னேனே ம்மா.. உன் விருப்பம் எதுவாயிருந்தாலும் எனக்கு சம்மதம்னு!” என்று அவர் சொல்ல,
“எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கப்பா….! நான் யோசிச்சு சொல்றேன்!” என்றவள் எழுந்து தன்னறைக்குச் சென்றாள்.
‘நிருவுக்கு இந்த விஷயம் தெரியுமா?! ஏன் அவன் இதைப் பத்தி எதுவுமே என்கிட்டே சொல்லலை?!’ என்று நினைத்தவள், அவனின் கைப்பேசிக்கு அழைத்தாள்.
“நிரு நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்!” என்று நிலா சொன்னதுமே அவனுக்கு புரிந்து விட்டது.
“நானே உன்கிட்ட இதைப் பத்தி பேசணும்னு இருந்தேன் நிலா… ஆனா அதுக்குள்ள அப்பாவுக்கு உடம்பு முடியாம போனதுனால அதைப் பத்தி யோசிக்க முடியல! இப்ப வீட்டுக்கு வந்த பிறகுதான், அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி எல்லோரும் உங்க வீட்டுக்கு வந்து பேசிட்டு வந்த விஷயம் தெரிஞ்சது!” என்றான்.
“எனக்கு இப்போ இருக்க மனநிலையில இங்க வீட்ல எதுவும் பேச வேண்டாம்! பக்கத்துல இருக்க அம்மன் கோவிலுக்கு நான் போறேன் நீயும் அங்க வந்துடு!” என்று சொல்லி போனை அணைத்தாள் நிலா.
கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்துவிட்டு, ஓரிடத்தில் இருவரும் அமர்ந்தனர்.
“என்னடா நிரு இது?!” என்றாள் நிலா குழப்பத்துடன்.
“தாத்தாதான் ரஞ்சனுக்கு உன்னைக் கல்யாணம் செய்து வைக்கலாம்னு முதல்ல விருப்பம் தெரிவிச்சாங்க! எங்க வீட்லயும் எல்லோரும் இதுக்கு முழுமனசோட சம்மதம் தெரிவிச்சிட்டாங்க! நான் எடுத்துச் சொல்லியும் என் பேச்சை யாரும் கேட்கலை! எனக்கு என்ன செய்யிறதுன்னே புரியல நிலா….!” என்றான் நிரு.
“எப்படிடா நானும் அவனும்?! இந்த விஷயம் அவனுக்கு தெரியுமா?!” என்றாள் நிலா.
“தாத்தாதான் அவன்கிட்ட பேசினாரு. அவன் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டான்னு சொன்னாரு! எனக்கே அது ரொம்ப ஆச்சர்யமாதான் இருந்தது!” என்றான்.
“வீட்ல அம்மா, அப்பா எல்லோருக்கும் இதுல விருப்பம் இருக்கு நிரு… ஆனா என்னால…?! எங்க ரெண்டு பேருக்குமே எப்பவுமே ஆகாது! எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல…?!” என்றாள் நிலா.
“நிலா… நீ ரஞ்சனோட லைப் பார்ட்னரா வந்தா… உங்க வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கும்! அதுல எனக்கு சந்தேகமே இல்லை! ரஞ்சன் கொஞ்சம் முரண்பாடனவன் தான்னாலும், அவன்கிட்டயும் நல்ல மனசிருக்கு! அவன் நிச்சயமா தனக்கு மனைவியா வர்றவளை நல்லா வைச்சுப் பார்த்துப்பான்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு! அதுக்கு காரணம்….!” என்று நிறுத்தியவன்,
“நீ உன்னோட சம்மதத்தை தெரிவிக்கறதுக்கு முன்னாடி, அவனைப் பத்தி முழுசா தெரிஞ்சிக்கனும்னு நான் விரும்பறேன்! அவனோட வாழ்கையில நடந்த சில விஷயங்களை இப்போ உன்கிட்ட சொல்லியே ஆகணும்னு எனக்குத் தோணுது! நீ அன்னிக்கு கேட்டியே அவனோட இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்னு?! ஏன் அவன் மும்பைல இருந்து இங்க வந்தான்னு?!” என்று ஆரம்பித்தவன், ரஞ்சனின் வாழ்வில் நடந்தவற்றை சொல்லி முடித்தான்.
“அவன்கிட்ட கொஞ்சம் கர்வம் இருக்கு ஒத்துக்கறேன்! ஆனா அவனும் நல்லவன் தான் நிலா…” என்றவன் அவள் முகத்தை நோக்கி,
“உன்னால அவனை மனசார ஏத்துக்க முடிஞ்சா.. நீ இந்தக் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு! இல்லைன்னா….” என்று அவனும் அவளிடமே பொறுப்பை ஒப்படைக்,க அவள் குழப்பத்துடன் அவனை ஏறிட்டாள்.
“உடனே இதுக்கு எந்த பதிலும் சொல்ல வேண்டாம்! பொறுமையா யோசிச்சு முடிவெடு நிலா….!” என்றவன்,
“நேரமாகுது நிலா… கிளம்பலாமா?” என்றான்.
“ம்!” என்று எழுந்து நடக்கத் துவங்கினாள் நிலாவும்.
இரவு நெடு நேரம் யோசித்தவள், இறுதியாக ஒரு முடிவெடுத்து, தனது முடிவை நிருவிற்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவித்துவிட்டு தூக்கத்தைத் தழுவினாள்.
மறுநாள் காலை எழுந்து குளித்து முடித்து, தங்கள் வீட்டுத் துளசி மாடத்தைச் சுற்றி வந்து வழிபட்டவள், கண் திறந்ததும், ஜாகிங் செல்ல தங்கள் வீட்டு வாயில் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்த ரஞ்சனைக் கண்டாள்.
நேற்று நிரஞ்சன் சொன்னது நினைவுக்கு வர, கிட்டத்தட்ட எட்டு வருடத்திற்குப் பின் அவனைப் பார்த்து மென் புன்னகை புரிந்தாள்.
இதைக் காண நேர்ந்த ரஞ்சன், ‘அவ என்னைப் பார்த்து சிரிச்சாளா?!’ என்று நினைத்தான்.
‘சே சே… அவளாவது என்னைப் பார்த்து சிரிக்கிறதாவது?! பிரம்மையா இருக்கும்’ என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்துக் கிளம்பிச் சென்றான்.
பூஜை முடித்து வீட்டினுள் சென்று தாய்க்கு சமையலில் உதவியவள், பள்ளிக்குக் கிளம்பிச் செல்ல ஆயத்தமானாள்.
“நிலா….!?” என்று வேணி ஆவலோடு அவளை அழைக்க,
தனது தந்தையை நோக்கி, “அப்பா அவங்ககிட்ட சம்மதம்னு சொல்லிடுங்க…!” என்றுவிட்டு,
“நான் கிளம்பறேன்” என்று இருவருக்கும் பொதுவாக விடைபெற்றுச் செல்ல, வேணியின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பாய்ப் பிரகாசித்தது.
அந்தப் பார்வையற்றோர் பள்ளியில் நடந்த விழாவில், அரங்கேறிய நிரஞ்சனின் தன்னம்பிக்கை பற்றிய உரை அங்கிருந்த அனைவர் உள்ளங்களிலும் புது ரத்தத்தைப் பாய்ச்சியது.
அப்பள்ளியை நிர்வகித்து வருபவர் அவனுடைய பேராசிரியர் தாமோதரன். அவர்தான் தன்னம்பிக்கை உரை நிகழ்த்தும்படி அவனை அங்கு அழைத்திருந்தார். அனைவரும் அவனது வரிகளை உணர்ந்து மனதார பாராட்டினர்.
“ஹாய் பாப்பா…! பின்னிட்டீங்க போங்க! ப்பா… என்னமா பேசுறீங்க?!? கைகொடுங்க…” என்று அவன் கைகளைப் பற்றிக் குலுக்கினாள் யாஷினி.
பிள்ளைகள் முன்னிலையில் அவள் இப்படி நடந்து கொண்டதும், அவனால் எதுவும் பேச முடியவில்லை.
“ம்!” என்று அவன் வெறுமென தலையசைத்து அங்கிருந்து நகர முற்பட,
“ஹலோ என்னங்க நீங்க…? ஒரு மரியாதைக்காக கூட தாங்க்ஸ் சொல்லாம போறீங்க!?” என்று அவள் மீண்டும் அவனைக் கைநீட்டித் தடுத்து வழிமறிக்க,
“ஹலோ இது ஸ்கூல்.. சின்னப் பிள்ளைங்க படிக்கிற இடம்! கொஞ்சம் நாகரீகமா நடந்துக்கறீங்களா?!” என்றான் தன்னைக் கட்டுப் படுத்தி.
“ஹலோ நான் என்ன உங்ககிட்ட ப்ரோபோசா பண்ணேன்! நீங்க நல்லா பேசினீங்கன்னு வாழ்த்துக்கள்தானே சொன்னேன்!” என்றாள் அவள் மிடுக்குடன்.
“ஏய் உன்ன….! வேணாம்… பிள்ளைங்கல்லாம் இருக்காங்களேன்னு பார்க்கறேன்!” என்று அவன் ஒற்றை விரல் நீட்டி மிரட்ட,
“என்ன நிரஞ்சன்? யாஷினி உன்னையே கோபப்பட வைச்சிட்டாளா?!” என்றபடி அங்கு வந்து சேர்ந்தார் பேராசிரியர் தாமோதரன்.
“அ அதெல்லாம் இல்லீங்க சார்!” என்று அவன் சமாளிக்க முயல,
“பொய் சொல்றாரு அங்கிள்..! இப்போதான் என்னை மிரட்டினாரு!” என்றாள் பாவமாக.
“வாலு… நீ சும்மா இருந்திருக்க மாட்டியே?!” என்று அவர் அவள் தலையில் செல்லமாக குட்ட,
“பார்த்தீங்களா உங்க ஸ்டுடண்ட்காக சப்போர்ட் பண்ணி என்னைய கால வாரிட்டீங்களே…!” என்று இருவரும் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்க, நிரஞ்சன் பொறுமையுடன் அங்கே நின்று கொண்டிருந்தான்.
ஆனால் சில நிமிடங்களுக்குப் பின்னும் அவர்கள் உரையாடல் தொடர்ந்து கொண்டே போக, பொறுமை இழந்த நிரஞ்சன், “சார்… எனக்கு டைம் ஆகுது நான் கிளம்பட்டுமா?” என்றான்.
“நிரஞ்சன் பக்கத்துலதானே என் வீடு இருக்கு, வீட்டுக்கு வந்துட்டு போயேன்…!” என்று அவர் அன்போடு அழைக்க,
“ஓ! சூவர் அங்கிள் நிச்சயமா வரோம்!” என்றாள் யாஷினி அவனுக்கும் சேர்த்து.
“முந்திரிக்கொட்டை… முந்திரிக்கொட்டை! என் விஷயத்தில இவ ஏன் தலையிடுறா!” என்று அவளை மனதிற்குள் வைதவன்,
“இல்லீங்க சார்.. நான் இன்னொரு நாளைக்கு வரேன்…!” என்று விடை பெற முயல,
“அட இவ்ளோதான் நீங்க உங்க ப்ரொபசர் மேல வைச்சிருக்க மரியாதையா?!” என்று அவனை உசுப்பி விட்டாள்.
‘இவள…?!’ என்று பல்லைக் கடித்தவன், “அய்யோ சார்! அப்படி எல்லாம் இல்லை… நிஜமாகவே நேரமாகிடுச்சு!” என்றான்.
“பரவாயில்லை நிரஞ்சன் நான் எதுவும் தப்பா எடுத்துக்கலை!” என்று தாமோதரன் சொல்ல, நிரஞ்சன் விடைபெற்றுக் கிளம்பினான்.
“ஓகே அங்கிள்… நானும் கிளம்பறேன்..! பை!” என்று அவள் கையசைத்து விடைபெற்று சிட்டாகப் பறந்துவிட,
“சரியான வாலு…!” என்று சிரித்துக் கொண்டே சென்றார் தாமோதரன். யாஷினியின் தந்தை பஞ்சாட்சரத்தின் உற்ற தோழன்!
“ஹலோ ஹலோ நில்லுங்க…!” என்று மூச்சிரைக்க ஓடி வந்த யாஷினி, காரைக் கிளப்ப எத்தனித்த நிரஞ்சனிடம்,
“உங்க பிரெண்ட் நிலா எப்படி இருக்காங்க?! யாஷினி அவங்களை ரொம்ப கேட்டான்னு சொல்லுங்க?!” என்றாள்.
“யாஷினி…. யாரு யாஷினி?!” என்றான் புரியாமல் விழித்து.
“என்ன யாஷினி தெரியாதா?! சே! வாட் எ கிரேட் இன்சல்ட் யாஷினி..!” என்று தன் முகத்திற்கு நேரே விரல் நீட்டி அவள் சொல்லவும்,
“லூசு லூசு…!” என்று திட்டியபடியே அவன் காரைக் கிளப்பினான்.
“ஹலோ பாப்பா…. மறந்துடாதீங்க… நிலாவை ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்க?!” என்று கத்தினாள் யாஷினி.
“கடவுளே… இவளோட பெரிய இம்சையா போச்சு!” என்றபடியே காரை செலுத்தியவன், ‘ஆமாம் இவளுக்கு எப்படி நிலாவோட பேரு தெரியும்?!’ என்று நினைத்துக் குழம்பினான்.
‘எப்படியும் இன்னொரு முறை சந்திக்காமலா போயிடுவோம்! அப்போ கேட்டுக்கலாம்!” என்று அவன் மனம் நினைக்க,
‘அய்யய்யோ மறுபடியும் அவளை சந்திக்கறதா!?’ என்று அலறியது அவன் மூளை.
அவன் கார் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்ற யாஷினி, “ஸ்வீட் பாப்பா….!” என்று சொல்லி தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
காரை செலுத்திக் கொண்டிருந்த நிரஞ்சனுக்கு கைபேசியில் ஏதோ அழைப்பு வர, அதற்கு செவிமடுத்தவன், குறுஞ்செய்திகள் வந்திருப்பதைக் கண்டு அதனை ஓபன் செய்துப் படித்தான்.
நிலா அனுப்பியிருந்த குருஞ்செய்தியைப் படித்தவன் மனம் சந்தோஷத்தில் துள்ளிற்று.
அங்கு ராதா, நிலாவின் விருப்பத்தைத் தெரிந்து கொள்ள விரும்பி, அவள் வீட்டிற்குச் செல்ல, வேணி அவளது விருப்பத்தை தெரிவித்தார்.
அன்று இரவு டைனிங் ஹாலில் ரஞ்சனின் திருமண விஷயம் பற்றி பேச்சேடுத்தார் இராமநாதன்.
“பொண்ணு வீட்ல எல்லோரும் சம்மதம் தெரிவிச்சிட்டாங்க! எப்போ நிச்சயத்தை வைச்சிக்கலாம் ரஞ்சு..!” என்றார்.
அதைக் கேட்டதும் அவனுக்குப் புரை ஏற, “இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே தாத்தா…!” என்றான்.
“என்ன ரஞ்சு நீ…? அன்னிக்குதான் அவ்ளோ தூரம் எடுத்துச் சொல்லி உன்னை சம்மதிக்க வைச்சேன். மறுபடியும் வேதாளம் மரம் ஏறின கதையா பேசுற?!” என்று இராமநாதன் கேட்க,
“நான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லலை தாத்தா…. கொஞ்ச நாள் போகட்டும்னு தான் சொல்றேன்!” என்று அவன் சமாளிக்க,
“நீ சம்மதிச்சதை நம்பி நாங்க பொண்ணு வீட்ல போய் பேசிட்டோம் ரஞ்சு… இப்போ இப்படி சொல்றியே?!” என்றார் கிருஷ்ணன்.
‘ப்ச்! என்னால எந்த அளவுக்கு இந்தக் கல்யாண வாழ்க்கையை ஏத்துக்க முடியும்னு தெரியல?! என்னைக் கல்யாணம் செய்துக்கப் போறவ யாருன்னு தெரிஞ்சிக்கக் கூட என் மனம் விரும்பல! இப்படி இருக்கும் போது நான் எப்படி அவளோட சந்தோஷமா வாழ முடியும்!?’ என்று அவன் யோசனையில் மூழ்க,
“என்ன ரஞ்சு பதிலே சொல்ல மாட்டேங்கிற?!” என்றார் இராமநாதன்.
அவரது கேள்வியால் தன் யோசனையிலிருந்து விடுபட்ட ரஞ்சன், “ஹும்?!” என்று பெருமூச்சை இழுத்துவிட்டு,
“உங்க விருப்பம் தாத்தா….!” என்று அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டான்.
அவனது முகமாறுதல்களை கவனித்த நிரஞ்சன், தானும் உணவை முடித்துக் கொண்டு எழுந்து அவன் பின் சென்றான்.
“ரஞ்சு… ஒரு நிமிஷம்…!” என்று அவன் குரல் கொடுக்க,
“சொல்லு நிரு..!” என்றான்.
“கொஞ்ச நேரம் மொட்டை மாடிக்கு போய் பேசலாமா?!” என்றான் நிரஞ்சன்.
“ம்!” என்று ரஞ்சன் மாடிக்குச் செல்ல, நிரஞ்சனும் அவனைப் பின் தொடர்ந்தான்.
இருவரும் சிறிது நேரம் ஏதும் பேசாமல் காற்றின் குளுமையை அனுபவித்தபடி அமர்ந்திருந்தனர்.
முதலில் நிரஞ்சனே அவ்வமைதியைக் கலைத்தான்.
“ரஞ்சு… உனக்கு இந்தக் கல்யாணத்துல முழுசம்மதம்தானே..?!” என்றான் கேள்வியாக.
“நிரு எல்லாம் தெரிஞ்ச நீயும் இப்படி ஒரு கேள்வி கேட்குறீயே?!” என்றான் ரஞ்சன்.
“அப்போ தாத்தா… நீ சம்மதிச்சிட்டன்னு எங்ககிட்ட சொன்னது!?”
“எனக்கு சுத்தமா இந்தக் கல்யாணத்துல விருப்பமில்லை நிரு… அவருக்காக… அவருக்காக மட்டும்தான் சம்மதிசிருக்கேன்!” என்றான் ரஞ்சன் ஈடுபாடில்லாமல்.
“ரஞ்சு… அவருக்காக நீ இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சிருந்தாலும், உன்னோட சம்மதம் எங்களுக்கெல்லாம் எவ்ளோ சந்தோஷத்தைக் கொடுத்தது தெரியுமா?! எங்க நீ நடந்ததையே நினைச்சு கல்யாணம் வேணாம்னு மறுத்துடுவியோன்னு ரொம்ப பயந்தேன்! நல்லவேளை…” என்று நிறுத்தியவன் மேலும் தொடர்ந்து,
“அது மட்டுமில்ல ரஞ்சு.. தாத்தா… உனக்காகப் பார்த்திருக்க பொண்ணு நிச்சயமா உன் வாழ்க்கையை வசந்தமாக்குவா! நாங்க யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு தேவதையை, தாத்தா உன் வாழ்க்கையில கொண்டு வர நினைச்சிருக்கார்..!” என்று அவன் ஏகத்திற்கும் அவளைப் பற்றி புகழ்ந்து கொண்டே போக,
“ம்…!” என்றான் ரஞ்சன் சுவாரஸ்யமே இல்லாமல்.
“நீ அவளைக் கல்யாணம் செய்துக்கறேன்னு சொன்னது நிஜமாகவே எனக்கு ரொம்ப பெரிய இன்ப அதிர்ச்சிதான்!” என்று நிரஞ்சன் கூற,
ரஞ்சனின் கைப்பேசி அலறியது.
error: Content is protected !!