Skip to content
Post Views: 4,140
9
“லண்டன்ல இருந்து ராகேஷ் கால் பண்றான்!” என்று ரஞ்சன் சொல்ல,
“சரி நீ பேசு…! எனக்கும் வேலையிருக்கு. அப்புறமா இதைப் பத்தி பேசலாம்!” என்று நிரஞ்சன் கிளம்பிச் சென்றான்.
Advertisement
மறுநாள் மாலை நிலா பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும், “ஏய்…. நிலா…. வாட் ஏ ஸ்வீட் சர்ப்ரைஸ்…! உனக்கும் ரஞ்சு அண்ணாவுக்கும் கல்யாணம்!” என்று அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு சுற்றினாள் நிவி.
“எப்படி இருக்க நிவி? கார்த்திக் உன்னை நல்லப் பார்த்துக்கறாரா?” என்றாள் நிலா.
“ம் அவருக்கென்ன பொண்டாட்டியை தாங்கு தாங்குன்னு தாங்குறார்! எந்நேரமும் குட்டி போட்ட புனை மாதிரி என்னையே சுத்தி வந்துகிட்டு இருக்கார்…!” என்றாள் நிவி கன்னம் சிவக்க.
Advertisement
“ம்…!” என்று ஓர் அழகான புன்னகையின் மூலம் தன் சந்தோஷத்தை வெளிபடுத்திய நிலா,
Advertisement
“அதான் மேடம் ரெண்டே மாசத்துக்குள்ள இவ்ளோ வெயிட் போட்டுட்டீங்களா?” என்று கேலி செய்தாள்.
“ம்!” என்று கண்சுருக்கி அவளை முறைத்த நிவி,
“அது சரி… சொல்லு சொல்லு எப்படி இந்த அதிசயம் நடந்தது?! ம்!” என்றாள் நிலாவைப் பிடித்து உட்கார வைத்து.
Advertisement
“என்னோட இந்த முடிவு, நிறைய பேருக்கு சந்தோஷத்தை கொடுக்கும்னு தோணுச்சு! அதான்…!” என்றாள் நிலா.
“அப்போ உனக்கு இதுல விருப்பம் இல்லையா?!” என்றாள் நிவி சற்றே முகம் வாட.
“அப்படில்லாம் இல்ல நிவி…!” என்றாள் நிலா பட்டும் படாமல்.
“எங்க வீட்ல எல்லோரைவிடவும் ரஞ்சு அண்ணா கொஞ்சம் வித்தியாசமானவர்தான். ஆனாலும் ரொம்ப அன்பானவர்டி!” என்று அண்ணனுக்கு நற்சான்றிதழ் கொடுத்தாள் தங்கை.
“ம்…!” என்ற நிலா, “சரி நான் போய் உனக்கு காபி கொண்டு வரேன்!” என்று எழப்போக,
“இந்தாம்மா… ரெண்டு பேரும் காபியை எடுத்துகோங்க!” என்று காபியை நீட்டினார் வேணி.
மறுநாளே நல்ல நாள் என்பதால், சில நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து ஒப்புதாம்பூலம் மாற்றிக் கொள்ளலாம் என்று காமாட்சி பாட்டி, நிலா வீட்டினரிடம் பேசி எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்திருந்தார்.
நிலா வீட்டில் இடவசதி இல்லாததால் ரஞ்சன் வீட்டிலயே விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
ரஞ்சன் வேண்டா வெறுப்பாக அவன் வீட்டினர் வாங்கி வைத்திருந்த புது உடையை அணிந்து கொண்டு தயாரானான்.
நிரஞ்சன், ரஞ்சனை அழைத்து வந்து சபையில் அமர வைக்க, நிலாவின் தாய் தந்தையினர் அங்கு வந்திருப்பதைக் கண்ட ரஞ்சன்,
‘இவங்கல்லாம் எதுக்கு இங்க வந்திருக்காங்க?! இந்த சின்ன பஃங்ஷனுக்கு கூட இவங்களைப் கூப்பிடனுமா?!’ என்று சலித்துக் கொண்டான்.
‘ஆமாம் அந்தக் கொரங்கு எங்க போச்சு?! முதல்ல… அதுதானே வந்து வாலை ஆட்டிகிட்டு நிக்கும்?!’ என்று நினைத்தபடி அவன் தலை நிமிரவும், அழகிய வண்ணமலர்குவியலாய் இருந்த நிலாப் பெண்ணை அவர்கள் வீட்டுச் செல்லச் புதல்வி நிவி கைப்பற்றி அவர்கள் வீட்டினுள் அழைத்து வரவும் சரியாக இருந்தது.
“இ இவளா இவ எதுக்கு இந்த கோலத்துல?!” என்று நினைத்தவனுக்கு, அன்று அவன் தாத்தா சொன்ன இன்ப அதிர்ச்சியும், நிரஞ்சன் அவனுக்குப் பார்த்துள்ள பெண்ணைப் பற்றிக் கூறிய வார்த்தைகளும் நினைவுக்கு வர,
“இல்ல… இல்ல… இது இன்ப அதிர்ச்சியா?! மோசமான துன்ப அதிர்ச்சி…! இப்படி ஒரு சுனாமியில என்னைக் கொண்டு போய் தள்ளி விடப் பார்க்கிறாங்களே…!!!???” என்று அவன் மனம் அலறோ அலறு என்று அலறியது.
அதிர்ச்சி தாளாமல் அமர்ந்திருந்தவன் சடக்கென்று எழுந்துநிற்க, “என்ன பண்ற ரஞ்சு..?!” என்று அவன் கையைப் பிடித்து அமர வைத்த நிரஞ்சன்,
“நிலா எப்பவுமே அழகுதான்….! இப்போ கல்யாணப் பெண் அலங்காரத்துல இன்னும் பேரழகா இருக்காதான்..! ஒப்புக்கறேன்! ஆனா அதுக்காக இப்படியா வாயைப்பிளந்துக்கிட்டு எழுந்து நிப்ப?!” என்று கிண்டலடித்தான்.
‘என்ன என்ன…?! அழகா இவளா?! கொரங்குக்கு புடவை கட்டி அலங்காரம் பண்ண மாதிரி இருக்கா!? இவ பேரழகாம்?! எல்லாம் என் நேரம்!’ என்று தன் மனதிற்குள் புலம்பித் தள்ளியவன்,
“நிரு இது நடக்காதுடா… நடக்கவே நடக்காது!” என்றான்.
“என்ன நடக்காது…?!” என்றான் நிரஞ்சன் ஏதும் புரியாமல்.
“இ.. இவள என்னால கல்யாணம் செய்துக்க முடியாது!” என்றான் ரஞ்சன்.
“ரஞ்சு… இந்த நேரத்துல கூட விளையாடுறீயா? சும்மா பேசாம உட்காரு!” என்று மறுபடியும் அவன் கைப்பற்றி அமர வைத்தான் நிரு.
“டேய் நிஜமாவே இந்தக் கல்யாணம் நடக்காது!” என்று அவன் தீர்க்கமாகக் கூறி, விருட்டென்று அங்கிருந்து எழுந்து தன் அறைக்குச் சென்றான்.
அவன் வேகமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றதும், நிலாவின் முகமும், அவள் பெற்றோரின் முகமும் கறுத்துப் போனது.
வந்திருந்த உறவினர்களும் தங்களுக்குள் ஏதேதோ பேசத் துவங்க, நிரஞ்சன் அனைவரையும் பார்த்து, “ரஞ்சனுக்கு முக்கிமான கால் வந்திருக்கு.. அதான் எழுந்து போயிருக்கான். இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவான்!” என்று சமாளித்துவிட்டு, ரஞ்சனின் அறை நோக்கிச் சென்றான்.
இராமநாதனுக்கும் ஏதோ சரியில்லை என்று தோன்ற, அவரும் அவனைப் பின் தொடர்ந்து, ரஞ்சனின் அறைக்குச் சென்றார்.
கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த நிருவைப் பார்த்த ரஞ்சன்,
“என்ன நிரு இது…?! அவளைப் போய் எனக்கு?! சே! நான்தான் எனக்கு கல்யாணமே வேண்டாம்னு சொன்னேனே! அப்படியே விட்டுத் தொலைய வேண்டியதுதானே…! இப்போ அந்த ராட்சஸியை கொண்டு வந்து என் தலையில கட்டி வைக்கப் பார்க்கறீங்களா?” என்று ஏகத்திற்கும் பேசிக் கொண்டிருக்க,
“ஏன் இந்தப் பெண்ணுக்கு என்னக் குறைச்சல்?! இவளவிட ஒரு நல்லப் பொண்ணு உனக்கு நிச்சயமா கிடைக்க மாட்டா..!” என்றார் அவன் அறைக்குள் நுழைந்த இராமநாதன்.
“தாத்தா..!” என்றான் தன் கோபத்தைக் கட்டுப் படுத்தி.
“அந்தப் பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுங்கிறதுக்கு சரியான ஒரு காரணம் சொல்லு!” என்றார் இராமநாதன்.
“எனக்கு அவளைப் பிடிக்கல…!” என்றான் பட்டென்று.
“அதான் ஏன்னு கேட்கறேன்…!” என்றான்.
“பிடிக்கலைன்னா பிடிக்கலை… விடுங்க தாத்தா…!” என்றான்.
“ரஞ்சு நீ பேசுறது கொஞ்சம் கூட சரியில்லை… நியாயமா அவதான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாளோன்னு நான் நினைச்சேன்! ஆனா அவளே சம்மதிச்ச பிறகு உனக்கென்ன?!” என்றார்.
‘ஏன் சம்மதிக்க மாட்டா? நல்ல வசதியான இடமாச்சே…?!’ என்று மனதுள் பொருமினான் ரஞ்சன்.
“ரஞ்சன் விளையாடுற நேரமில்லை இது! உனக்கு விருப்பமில்லைன்னா அவதான் பொண்ணுன்னு தெரிஞ்சபோதே வேண்டாம்னு சொல்ல வேண்டியதுதானே..! இப்போ இவ்ளோ தூரம் வரவைச்சு, மறுபடியும் அவளை அவமானப் படுத்தப் பார்க்கறியா?!” என்றான் என்றுமே தன் அண்ணனிடம் கோபப் பட்டிறாத நிரஞ்சன்.
“நிரு…! அவதான் பொண்ணுன்னு எனக்குத் தெரியவே தெரியாது..!” என்று ரஞ்சன் சொல்ல,
“தாத்தா…! என்ன தாத்தா.. இதெல்லாம்?!” என்று நிரு அவரைப் பார்த்தான்.
“தப்புப் பண்ணிட்டேன் நிரு! சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு நினைச்சு இவன்கிட்ட நிலாதான் பொண்ணுங்கிறதை நான் மறைச்சது தப்பாகிடுச்சு! மறுபடியும் அந்தப் அப்பாவிப் பொண்ணு எந்த தப்புமே செய்யாம அவமானப்பட நானே காரணமாயிட்டேன்!” என்றபடியே தளர்ந்து போய் அங்கிருந்த சோபாவில் விழுந்தார் இராமநாதன்.
அவர் நிலை கண்டு இருவருமே பதறிப் போய், “தாத்தா….!” என்றழைத்தபடி அவர் அருகில் ஓடி வர,
“எ எனக்கு ஒண்ணும் ஆகல… லேசான படபடப்புதான்!” என்றவர், ரஞ்சனின் கைகளைப் பிடித்து,
“ரஞ்சு… நான் உன்கிட்ட சொல்லாம மறைச்சது என் தப்புதான்! ஆனா அதுக்காக இப்போ நடக்கப் போற விழாவை நிறுத்தி, எங்க எல்லோரையும் ஓரேயடியா தலை குனிய வைச்சிராத ரஞ்சு..! இதுல நம்ம வீட்டோட கெளரவம் மட்டும் இல்ல… ஒரு பெண்ணோட வாழ்க்கையும் அடங்கியிருக்கு!” என்றார்.
“தாத்தா….!?”
“நிலா உன் அளவுக்கு அந்தஸ்த்துலயும், அழகுலயும் வேணா உயர்ந்தவளா இல்லாம இருக்கலாம்! ஆனா குணத்துல அவ மகாலட்சுமிடா…! அவ இந்த வீட்டுக்கு மருகளா வந்தா நம்ப குடும்பத்தை நல்லபடியா பார்த்துப்பாடா…! குடும்பம்னு நான் சொன்னது உன்னையும் சேர்த்துதான்!” என்றார் உணர்ந்து.
அவன் பதிலேதுமின்றி மௌனமாக இருக்க, “ரஞ்சு… தாத்தா பொண்ணு யாருன்னு சொல்லாம விட்டது தப்புதான்! எனக்குமே நீ பெண் யாருன்னே தெரியாம கல்யாணத்துக்கு சம்மதிச்சிருப்பன்னு தோணல! அன்னிக்கு மாடில நிலாவைப் பத்தி பேச வந்தபோதும் உனக்கு போன் வந்ததால பேச முடியாமல் போச்சு! நாங்க யாரும் இதை வேணும்னு செய்யல ரஞ்சு…” என்று நிறுத்திய நிரஞ்சன்,
ரஞ்சனின் கைகளைப் பிடித்து, “ஏது எப்படி இருந்தாலும், உன்னோட சந்தோஷத்தை மனசுல வைச்சிதான் தாத்தா இந்த முடிவை எடுத்தாங்க..! எங்களுக்காகவும், நிலாவுக்காகவும் இல்லைன்னாலும் தாத்தாவுக்காகவாவது இந்த கல்யாணத்துக்கு நீ சம்மதம் சொல்லேன்…!” என்றான் கெஞ்சுதலாக.
அப்போதும் அவன் அமைதியாகவே இருக்க, “வா நிரு… அவன் சம்மதிக்க மாட்டான்! நான்தானே தப்பு செய்தேன்! நானே போய் அவங்க எல்லோர் கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கறேன்!” என்று தளர்வுடன் எழுந்தார் இராமநாதன்.
நிரஞ்சனும் கவலை தோய்ந்த முகத்துடன் அவருடன் நடக்க, “தாத்தா…” என்றழைத்தான் ரஞ்சன்.
அவன் குரல் கேட்டு நின்ற இராமநாதனின் அருகில் சென்று, “நான் அவளைக் கல்யாணம் செய்துக்கறேன்…!” என்றான்.
“ரஞ்சு…?!” என்று அவர்கள் இருவரும் அவனை ஆச்சர்யமாகப் பார்க்க,
“உங்களுக்காக…!” என்றான் ரஞ்சன்.
“ரொம்ப சந்தோஷம்டா கண்ணா…!” என்று சந்தோஷ மிகுதியில் அவனைக் கட்டித் தழுவிக் கொண்டார் இராமநாதன்.
‘இப்போதைக்கு அவன் எனக்காக நிலாவைக் கல்யாணம் செய்துக்க சம்மதிச்சாலும், போக போக அவன் மனசு நிச்சயமா மாறிடும்!’ என்று தப்புக் கணக்குப் போட்டது இராமநாதனின் மனம்.
நிரஞ்சனுக்கும், மறுபடியும் நிலாவிற்கு அனைவர் முன்னிலையிலும் அவமானம் நேர்ந்துவிடக்கூடாது என்ற எண்ணமே மேலோங்கியிருந்ததால் வேறெதையும் பற்றி அந்நேரம் சிந்திக்க முடியாமல் போய்விட்டது.
முதலில் இராமநாதன் வெளியே வர, அவரைத் தொடர்ந்து ரஞ்சனும், நிரஞ்சனும் வெளியே வந்தனர்.
“என்ன எல்லாரும் அப்படிப் பார்க்கறீங்க? பிசினஸ் விஷயமா ஒரு முக்கியமான போன் கால் வந்தது. இப்போ நம்ம ரஞ்சனும் கடைப் பொறுப்பை ஏத்துக்கிட்டான் இல்ல…! அதான் அவங்களுக்கு பதில் சொல்லிட்டு வர கொஞ்சம் நேரமாகிடுச்சு!” என்று சமாளித்தார் இராமநாதன்.
என்னவோ ஏதோ என்று பயத்தில் வெளிறிப் போயிருந்த நிலாவின் தாய், தந்தையரின் முகம் அப்போதுதான் சற்று தெளிவுக்கு வந்தது. ஆனால் நிலாவிற்கு மட்டும் ஏதோ உறுத்தியது.
அவள் கேள்வியுடன் நிருவின் முகம் பார்க்க, அவன் கண்ணசைவின் மூலம் அவளுக்கு, ‘ஒன்றுமில்லை கவலைப் படாதே!’ என்றான்.
ஆனாலும் அவள் மனம் சமாதானம் அடையாததால், மெல்ல ரஞ்சனை நோக்கி தன் பார்வையைச் செலுத்தினாள்.
ஆனால் அவன் முகத்தில் இருந்த உணர்ச்சிகளைக் கொண்டு அவளால் எதையும் பகுத்தறிய முடியவில்லை.
இணையப் போகும் இருமனங்களும் குழப்பங்களின் இடையே தத்தளித்துக் கொண்டிருக்க, அவர்களின் அன்பிற்குரிய உறவுகள் அவர்களின் திருமணத்திற்கு அச்சாரமாக தாம்பூலத் தட்டை மாற்றிக் கொண்டனர்.
இவள் அவனைப் பார்க்கையில், அவன் கோபத்தில் கண்களைத் திசைத் திருப்பிக் கொள்ள, அவன் இவளை முறைக்கையில், இதுவரை அவனைக் கண்டபோது அவளிடம் தோன்றியிறாத வெட்கம் வந்து அவளை ஆட்கொண்டு, அவள் பார்வையை நிலம் நோக்கச் செய்தது. இது போதாதென்று நிவி வேறு நிலாவின் அருகில் நின்று கொண்டு, அவளைக் அடிக்கடி கேலி செய்து, அவள் முகத்தை செம்பருத்தியாய்ச் சிவக்கச் செய்து கொண்டிருந்தாள்.
ஒருவழியாக விழாமுடிந்து உறவினர்கள் அனைவரும் தத்தம் வீட்டிற்குக் கிளம்ப, நிலாவின் குடும்பத்தாரும் விடைப் பெற்று அவர்கள் வீட்டிற்குத் திரும்பினர்.
“என்னங்க ரொம்ப நல்லா ஏற்பாடுகள் செய்திருந்தாங்க இல்ல…!” என்று வேணி பெருமை பொங்கக் கேட்க,
“இதெல்லாம் நாம செய்திருக்க வேண்டியது வேணி…! ஆனா அவங்க வீட்ல எல்லோருமே ரொம்ப நல்ல மனுஷங்க நம்ம கிட்டயிருந்து எதையுமே எதிர்பார்க்கல..! அவங்க தகுதிக்கு ஏற்ற மாதிரி நம்மால் சீர் செய்ய முடியலைன்னாலும் ஓரளவாவது நம்ம மகளை கௌரவமா அவங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கணும்!” என்றார் வெங்கடேசன்.
“ம் அதுவும் சரிதாங்க..! ஆனா நம்ம கலை கல்யாணத்துக்கு வாங்கின கடனே இன்னும் மீதமிருக்கேங்க?!” என்றார் வேணி கவலையுடன்.
“பேசாம நாம இந்த வீட்டை வித்துடலாமா?!” என்றார் வெங்கடேசன்.
உள்ளே சென்று உடை மாற்றி வந்த நிலா இதைக் கேட்டு, “அப்பா… என்ன பேசறீங்க நீங்க?! வாழ்ந்துக்கிட்டு இருக்க வீட்டை விக்கணும்னு சொல்றீங்க! அதெல்லாம் எதுவும் வேண்டாம்! எனக்கு நிருவோட குடும்பத்தைப் பத்தி நல்லா தெரியும். அவங்க வீட்டைச் சேர்ந்தவங்க யாருமே நீங்க வரதட்சனை எல்லாம் கொடுக்கணும்னு எதிர்பார்க்க மாட்டாங்க!” என்றாள் அவரருகே வந்து அமர்ந்து.
“அட நீ என்னம்மா வரதட்சனை அது இதுன்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு?! அவங்களுக்காக இல்லைன்னாலும் என் பொண்ணுக்கு கண்ணுக்கு நிறைவா கொஞ்சம் நகைகளாவது வாங்கிப் போட்டுப் பார்க்கணும்னு எங்களுக்கு ஆசையிருக்காதா?!” என்றார்.
“அதுக்காக வீட்டை எல்லாம் விக்கணும்னு நினைக்காதீங்க பா… இருக்கிற சேமிப்புக்குள்ள செலவழிச்சா போதும்!” என்றாள் மகள் பொறுப்பானவளாய்.
“ம்…!” என்று மகளின் தலையை வருடியவர்,
‘பெத்தவங்க எவ்ளோ செய்தாலும், இதை செய்யல அதை செய்யலன்னு குறை பட்டுக்கிற இந்தக் காலத்துப் பசங்களுக்கு இடையில எனக்குக் கிடைச்ச ரெண்டு பொண்ணுகளுமே வைரங்க…!’ என்று மகள்களை எண்ணிப் பெருமிதம் கொண்டார் வெங்கடேசன்.
நால்வரைத் தவிர, இரு வீட்டினரும் நிறைவான மனதோடு உறக்கத்திற்குச் செல்ல, ரஞ்சன், நிரஞ்சன், நிலா, இராமநாதன் அனைவரும் பல்வேறு குழப்பமான எண்ணங்களுடன் உறக்கத்தைத் தழுவினர்.
மறுநாள் காலை தன் வீட்டிற்கு வந்த யாஷினியைப் பார்த்து, “ஏய் யாஷு… என்னடி இவ்ளோ காலையிலயே வீட்டுக்கு வந்திருக்க?!” என்றாள் பேராசிரியர் தாமோதரனின் அருமைப் புதல்வி சோனியா.
“ஏன் நீ மட்டும்தான் காலையில சீக்கிரம் எழுந்திருப்பியா?! நாங்களும் எழுந்திருப்போம்ல…!” என்றாள் யாஷினி.
“இந்த அதிசயமெல்லாம் எப்போதிலிருந்து நடக்க ஆரம்பிச்சதுன்னு நானும் கவனிச்சிக்கிட்டுதான்டி இருக்கேன்!” என்றாள் சோனியா.
“ஹப்பா… கவனிச்சிட்ட இல்ல… அப்படியே என் அப்பாகிட்டயும் கொஞ்சம் போட்டுக் கொடுத்துடேன்!” என்றாள் யாஷினி.
“கொஞ்சமாவது பயமிருக்கா உடம்புல?!” என்று சோனி அவளை முறைக்க,
“ஏன் ஏன் நான் ஏன் பயப்படனும்?!” என்றாள் யாஷினி மிடுக்காக.
“என்ன… காலையிலயே ரெண்டு பேரும் ஆரம்பிச்சுட்டீங்களா?!” என்று கையிலிருந்த கேழ்வரகுக் கஞ்சியைப் பருகியபடியே வந்தார் தாமோதரன்.
“ஒண்ணுமில்லை அங்கிள்.. எனக்கும் நிரஞ்சனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதப் பத்தி எப்போ அப்பாகிட்ட சொல்றதுன்னு ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தோம்!” என்றாள் யாஷினி சாதாரணம் போல்.
“என்ன எந்த நிரஞ்சன்?!” என்றார் தாமோதரன்.
“அதான் அங்கிள்… உங்க ஸ்டுடென்ட் நிரஞ்சன்!” என்றாள் யாஷினி பட்டென்று.
கஞ்சியைக் குடித்துக் கொண்டிருந்தவருக்கு சட்டென்று புரையேற,
“என்ன அங்கிள் இதுக்கே இப்படியா?! நீங்கதானே முன் நின்னு எங்க கல்யாணத்தை நடத்தி வைக்கப் போறதே!” என்றாள் யாஷினி.
error: Content is protected !!