Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Enaik Kollum Vanathevathai

Enaik Kollum Vanathevathai 10 2

அவர் சென்றதும் அவசரமாக ஜீப்பை நோக்கி ஓடி வந்தான் மாதவன். “என்ன ஆச்சு சார்? ஏதாவது பிரச்சனையா?”, என்று கேட்டான் வெற்றி,.

“வனமங்கையை பாக்க போகணும் வெற்றி. நீங்க வர முடிஞ்சா வாங்க. இல்லைன்னா பரவால்ல. என் பெர்சனல் விசயத்துக்கு உங்களை அலைய வைக்க கஷ்டமா இருக்கு”



Advertisement

“இதுக்கு கூட உதவலைன்னா எப்படி சார்? வாங்க போகலாம்”, என்று சொல்லி ஜீப்பை எடுத்தான்.

போகும் போது வெற்றி விவரம் கேட்க நடந்ததைச் சொன்னான் மாதவன்.

Advertisement

Advertisement

“சார் ஏதாவது பிரச்சனை வரதுக்குள்ள அந்த பொண்ணைக் கூட்டிட்டு இங்க இருந்து கிளம்பிருங்க சார். வேலையை என்ன செய்ய போறீங்கன்னு தெரியலை. பேசாம மெடிக்கல் லீவ் சொல்லிருங்க”

“டிரான்ஸ்பர்க்கு சொல்லிட்டேன் வெற்றி”

Advertisement

“உடனே கிடைக்குமா சார்?”

“நாம கேக்குற இடம் தான் கிடைக்காது. ஆனா நான் வடக்கு பக்கம் எந்த இடமா இருந்தாலும் பரவால்லன்னு அனுப்பிருக்கேன். கண்டிப்பா கிடைக்கும். அப்புறம் இங்க உள்ளவங்க எதுவும் செய்ய மாட்டாங்க நீங்க பயப்படாதீங்க. ஆனாலும் நீங்க சொன்ன மாதிரி மெடிக்கல் லீவ் அப்ளை பண்ணிக்கிறேன்”

“ரொம்ப நல்லது சார், எல்லாம் நல்லதா நடந்தா சரி தான்”, என்று சொன்ன வெற்றி ஒரு மலையடிவாரத்தில் வண்டியை நிறுத்தி விட்டு “இதுக்கு மேல ஜீப் போகாது சார். இது தான் மேல மலை. இங்க நடந்து தான் போகணும்”, என்றான்.

“நான் போய்க்கிறேன். நீங்க ஜீப்லே இருங்க”

“நானும் வரவா சார்?”

“வேண்டாம் வெற்றி, நாம ரெண்டு பேர் போறதை வேற யாராவது பாத்தா பிரச்சனை வரும். நீங்க இங்கயே இருங்க. அது கூட வேண்டாம். நீங்க கிளம்புங்க. நான் எப்ப வருவேன்னு தெரியாது. நீங்க கிளம்பிருங்க”, என்று சொல்லி விட்டு ஓடினான் மாதவன். ஆனால் அவனை விட்டுச் செல்ல மனதில்லாமல் ஜீப்பை ஒரு மர நிழலில் நிறுத்தினான் வெற்றி. மாதவன் ஓடும் வேகத்தைப் பார்த்த படியே இருந்த வெற்றிக்கு கடவுளை வேண்டுவதை தவிர வேறு வழி இருக்க வில்லை. மலை மேலே ஓடிக் கொண்டிருந்த மாதவனின் நெஞ்சமெல்லாம் எப்போது அவளைக் காண்போம் என பரிதவித்தது.

மேல மலைக்கு சென்ற போது ஆங்காங்கே அவர்களின் ஆட்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டு சற்று தேங்கினான். அங்கே சென்றால் கட்டாயம் அவர்கள் தன்னைக் கண்டு விடுவார்கள் என்று புரிந்தது. தூரத்தில் நின்ற மாதவனை குச்சி கண்டு கொண்டான். அவன் தான் மாதவன் எப்போது வருவான் என்று காத்திருந்தானே. அதனால் “அக்கா இங்கயே இரு. இப்ப வந்துறேன்”, என்று சொன்னவன் மாதவனை நோக்கி வேகமாக ஓடி வந்தான்.

குச்சியைக் கண்ட மாதவன் ஜெர்க் ஆகி விட்டான். “குச்சி”, என்று அவன் இதழ்கள் அதிர்ச்சியாக உச்சரிக்க “இங்கயே நில்லுங்க சார். இதுக்கு மேல மலைக்கு போனீங்கன்னா எங்க ஆட்கள் எல்லாம் உங்களைப் பாத்துருவாங்க”, என்றான். அவன் அப்படிச் சொன்னதும் சோர்ந்து போனான் மாதவன். அவளைக் காண முடியாது என்ற ஏமாற்றத்தை அவனால் தாங்க முடியவில்லை.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையில் இருந்த மாதவனுக்கு அந்த நிமிடத்தை கடக்கவே கஸ்டமாக இருந்தது. “உங்க அக்காவைப் பாக்கணும்”, என்று அந்த சிறு பையனிடம் கேட்பது தவறாகவும் பட்டது. அதே நேரம் இவ்வளவு தூரம் வந்து விட்டு அவளைப் பார்க்காமல் செல்லவும் அவனால் முடியவில்லை.

அவன் என்ன செய்ய என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்க “அதோ அந்த இடத்துக்கு போங்க. அங்க ஒரு அருவி இருக்கும்”, என்றான் குச்சி.

அவன் சொல்வது புரியாமல் மாதவன் விழிக்க “நான் அங்க அக்காவை வரச் சொல்றேன்”, என்று குச்சி சொல்ல ஆனந்த திகைப்புடன் அவனைப் பார்த்தான் மாதவன்.

“குச்சி”

“அக்காக்கு உங்களை பிடிச்சிருக்கு சார். அதான் வைத்தியர் ஐயா கிட்ட உங்களை வரச் சொல்லுங்கன்னு சொல்லி விட்டேன். அங்க போங்க. நான் அக்காவை வரச் சொல்றேன்”, என்று சொல்லி விட்டு அவன் ஓட “கடவுளே இவனா வைத்தியர் ஐயா கிட்ட சொல்லி விட்டான்”, என்று எண்ணி அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. கூடவே மச்சினனை வாஞ்சையாக பார்த்தான். பின் குச்சி சொன்ன அருவியை நோக்கி நடந்தான்.

தன் முன் மூச்சு வாங்க நின்ற குச்சியை ஏற இறங்க பார்த்த வனமங்கை “இப்ப எதுக்கு டா அப்படிப் ஓடின? மலைல எந்த நேரம் எது எங்க இருக்கும்னு தெரியாது டா குச்சி. இப்படி எல்லாம் போகாத”, என்று உண்மையான அக்கறையில் சொன்னாள்.

“அக்கா எனக்கு ஒண்ணும் ஆகாது. நீ இப்ப அந்த அருவி கிட்ட போ”

“அருவி கிட்டயா? நான் எதுக்கு டா அங்க போகணும்?”

“அக்கா சொல்றதைக் கேளு. இப்ப அங்க போ”

“ப்ச்”, என்ற சலிப்போடு “பேசாம வேலையைப் பாரு டா”, என்றாள்.

“அக்கா அந்த சார் அங்க தான் இருக்கார். நீ தானே பேசணும்னு சொன்ன? அப்படின்னா போ. அவர் கிட்ட போய் பேசு. நான் கஷ்டப் பட்டு வர வச்சிருக்கேன் கா”, என்று சொன்னதும் அதிர்ச்சியடைந்தாள்.

“குச்சி என்ன டா சொல்ற?”

“ஆமா, அந்த சாரை அங்க தான் அனுப்பிருக்கேன். நீ வருவேன்னு சொல்லி விட்டுருக்கேன். அவர் உனக்காக தான் காத்துட்டு இருப்பார். யாரும் பாக்குறதுக்குள்ள போய் பேசிட்டு வா, போக்கா”

“நிஜமாவா டா?”, என்று கேட்டவளுக்கு இன்னும் நம்ப முடிய வில்லை.

“ஆமாக்கா. நம்ம ஆட்கள் மத்தியானம் வரைக்கும் யாரும் அந்த பக்கம் வர மாட்டாங்க. நீ தைரியமா பேசிட்டு வா. ஆனா கொஞ்சம் சீக்கிரம் வந்துரு”, என்று அவன் சொன்னதும் அடுத்த நொடி புள்ளி மான் போல சிட்டாக பறந்து சென்றாள்.

“என்னல குச்சி, முதல்ல நீ ஒடுன. இப்ப உன் அக்கா ஒடுதா. என்ன சமாச்சாரம்”, என்று ஒரு பெண்மணி கேட்க “ஒண்ணுக்கு இருக்க எல்லாம் போக கூடாதா ஆத்தா?”, என்று கேட்டான்.

“போகக் கூடாதுன்னு சொல்லுவேனா டா? ஆனா எதுக்கு இந்த ஓட்டம்?”

“நீ என் ஆட்டை பிடிச்சு வச்சிக்கிட்டா என்ன பண்ணுறது? அதான் வெரசா போயிட்டு வெரசா வந்தேன்”

“ஆமா டா உன் ஆட்டைப் பிடிச்சு தான் நான் கோட்டை கட்ட போறேன். வாயாடி”, என்று சிரிக்க குச்சியும் நிம்மதியாக சிரித்தான்.

அருவி அருகில் வந்தவளின் கண்கள் அவனைத் தேடியது. அவள் தேகம் முழுவதும் ஒரு பரபரப்பு ஓடியது.

அருவிக்கருகே இருந்த பாறைக்கு பின்னே இருந்து வெளியே வந்தான் மாதவன். அவள் அவனையே ஆனந்த அதிர்வோடு பார்த்து சிலை என நிற்க அவன் கண்களும் அவளை ஆசையாக வருடியது. கலைந்த தலையும், நலுங்கிய உடையும் என வியர்வை பூத்த முகத்துடன் அவள் நிற்க அப்போது கூட அவள் பேரழகாக இருப்பது போல பட்டது அவனுக்கு.

அவளுடைய கண்களில் வழிந்த காதலில் அவன் பார்வை தயக்கமின்றி அவளை மொய்த்தது. அவன் பார்வையில் ஆர்வத்தையும் மீறி படபடப்பாக இருந்தது அவளுக்கு. கன்னங்களில் ரோஜா பூ பூத்தது.

அவள் கண்களும் திருட்டுத் தானமாக அவனை படம் பிடிக்க தான் செய்தது. ஏதேதோ பேச வேண்டும் என்று எண்ணி வந்தவர்களுக்கு வார்த்தை மறந்து தான் போனது.

இத்தனை நாள் பிரிவில் அவன் உடல் சற்று இளைத்திருக்க அது தன்னால் தான் என்று வருந்தினாள். அவள் கண்கள் கலங்கியது. அவள் கண்களில் இருந்து வழிந்த ஒற்றைக் கண்ணீர்த் துளியை பார்த்தவன் “மங்கை”, என அழைத்த படி அவளை நெருங்கினான். அடுத்த கண்ணீர்த் துளி அவள் கண்ணில் இருந்து வருவதற்குள் அவனுடைய இறுகிய அணைப்பில் இருந்தாள் வனமங்கை. அவளுமே அவனை இறுக அணைத்துக் கொண்டாள். இறுகிய அணைப்பில் இத்தனை நாள் பிரிவை இருவருமே விரட்ட முயன்றார்கள்.

அவளை தன்னுடைய கைக்குள் இருந்து பிரித்தவன் “எனக்கு நீ வேணும் வனமங்கை. நீ இல்லாம நான் செத்துட்டு இருக்கேன் டி. நாம கல்யாணம் பண்ணிக்கலாம் டி”, என்று சொன்னான்.

“எனக்கும் நீங்க தான் வேணும். என்னால வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது”, என்று அவள் சொல்ல அவள் இதழ்கள் அடுத்த நொடி அவனுக்கு சொந்தமாகி இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!